காந்தியின் ஆலோசனையின் பேரில்தான் சாவர்க்கர் கருணை மனுக்களை எழுதினார் என்று ராஜ்நாத் சிங் கூறுவது சரிதானா?
பூஜா சௌத்ரி
ஆல்ட் நியூஸ்
கடந்த புதன்கிழமை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்
சிங் ஹிந்து மகாசபாவின் தலைவரான விநாயக் தாமோதர் சாவர்க்கர் மகாத்மா காந்தியின்
ஆலோசனையைப் பின்பற்றியே பிரிட்டிஷ் அரசுக்கு கருணை மனுவைத் தாக்கல் செய்தார் என்று
கூறியிருந்தார். உதய் மஹூர்கர், சிராயு பண்டிட் ஆகியோர் எழுதிய ‘வீர சாவர்க்கர்:
பிரிவினையைத் தடுத்திருக்கக்கூடிய மனிதர்’ என்ற சாவர்க்கர் பற்றிய புத்தகத்தின்
வெளியீட்டு விழாவில் பேசுகையில் ராஜ்நாத்சிங் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
‘பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மீண்டும் மீண்டும் கருணை
மனுக்களைத் தாக்கல் செய்தார் என்று சாவர்க்கரைப் பற்றி பொய்கள் பரப்பப்பட்டு
வருகின்றன. உண்மை என்னவென்றால், சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவதற்காக கருணை
மனுக்களை அவர் தாக்கல் செய்யவில்லை. எந்தவொரு கைதிக்கும் கருணை மனு தாக்கல்
செய்வதற்கான உரிமை உண்டு. மகாத்மா காந்திதான் கருணை மனுவைத் தாக்கல் செய்யுமாறு
சாவர்க்கரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். காந்தி தந்த ஆலோசனைக்குப் பிறகே
சாவர்க்கர் கருணை மனுவைத் தாக்கல் செய்தார். சாவர்க்கரை விடுதலை செய்ய வேண்டும்
என்று மகாத்மா காந்தி வேண்டுகோளும் விடுத்திருந்தார்’ என்று அந்த விழாவில் பேசிய
ராஜ்நாத் சிங், சுதந்திரம் பெறுவதற்காக
அமைதியாக நாங்கள் நடத்திய போராட்டத்தையே சாவர்க்கரும் முன்னெடுத்தார் என்று காந்தி
கூறியதாகவும் சாவர்க்கர் கருணை மனு தாக்கல் செய்து மன்னிப்பு கேட்டார் என்பது
பொய்யானது, ஆதாரமற்றது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ராஜ்நாத் சிங் கூறியது உண்மைதான் என்று ஸ்வராஜ்யா என்ற
பாஜக சார்பு இணையதளம் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அந்தக் கட்டுரையில் ‘சாவர்க்கரின்
கருணை மனுவைக் கொண்டு அவரது மாண்பை மட்டுப்படுத்தும் வகையிலும், சுதந்திரப்
போராட்ட வீரர் என்று வரலாற்றில் சரியான இடத்தை அவருக்கு மறுக்கும் வகையிலும் பல்லாண்டுகளாக காங்கிரஸ் தலைவர்கள், இடதுசாரி
ஆர்வலர்கள், மார்க்சிஸ்ட் வரலாற்றாசிரியர்கள் உட்பட பலரும் கூறி வருவது தவறு என்று
பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தன்னுடைய கருத்திற்கு ஆதரவாக சாவர்க்கர் குறித்து விக்ரம்
சம்பத் எழுதியுள்ள புத்தகத்தை ஸ்வராஜ்யா மேற்கோள் காட்டியுள்ளது. ‘கருணை மனுவைத்
தாக்கல் செய்யுமாறு சாவர்க்கர் சகோதரர்களுக்கு 1920இல் காந்திஜி அறிவுறுத்தினார்.
1920 மே 26 அன்று வெளியானதொரு கட்டுரை மூலம் சாவர்க்கரை விடுவிப்பதற்கான வேண்டுகோளையும் காந்தி விடுத்தார்’ என்று சம்பத்
வெளியிட்டுள்ள ட்வீட் கூறுகிறது. சம்பத் வி.டி.சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றை
எழுதியவர் ஆவார்.
உண்மையில் காந்தியின் ஆலோசனையைப்
பின்பற்றியே சாவர்க்கர் கருணை மனுக்களைத் தாக்கல் செய்தாரா?
பிரிட்டிஷ் அரசாங்கத்தால் 1910 மார்ச் 13 அன்று கைது
செய்யப்பட்ட சாவர்க்கர் 1911 ஜூலை 4 அன்று அந்தமானில் உள்ள செல்லுலார் சிறைக்கு
(காலா பானி) கொண்டு செல்லப்பட்டார். நாசிக்
மாவட்ட ஆட்சியராக இருந்த ஏஎம்டி ஜாக்சன் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்தே
சாவர்க்கர் கைது செய்யப்பட்டிருந்தார். சாவர்க்கர் அந்தப் படுகொலை நடந்தபோது லண்டனில்
இருந்தார். ஜாக்சனைக் கொல்ல பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கியை அவர் லண்டனில்
இருந்து வழங்கியதாக சாவர்க்கர்
மீது குற்றம் சாட்டப்பட்டது. நாசிக் நகரில் சாவர்க்கரும் அவரது மூத்த சகோதரர்
கணேஷ் தாமோதர் சாவர்க்கரும் அந்தப் படுகொலையுடன் தொடர்புடைய ரகசிய புரட்சிகர இயக்கமான
மித்ர மேளாவை (இப்போது 'அபினவ் பாரத்' என்று அழைக்கப்படுகிறது) நிறுவியிருந்தனர். மற்றுமொரு
பிரிட்டிஷ் அதிகாரியின் படுகொலை வழக்கிலும் ஓராண்டிற்கு முன்பாக கணேஷ் சாவர்க்கர் கைது
செய்யப்பட்டிருந்தார்.
முதலாவது கருணை மனுவை 1911ஆம் ஆண்டு சாவர்க்கர்
தாக்கல் செய்தார்
விக்ரம் சம்பத் எழுதிய ‘மறக்கப்பட்ட கடந்த காலத்தின்
எதிரொலிகள்: 1883-1924’ என்ற புத்தகத்திலிருந்து ஒரு பகுதி.: ‘தில்லி தர்பாரின்
நல்லெண்ண சமிக்ஞையின் ஒரு பகுதியாக அனைத்து அரசியல் கைதிகளும் தங்கள் விடுதலைக்காக
மன்னிப்பு கோரி அரசாங்கத்திற்கு கருணை மனுக்களைச் சமர்ப்பிக்கலாம் என்று
அதிகாரப்பூர்வ நெறிமுறை கோரியது. அதன்படி விநாயக் உட்பட அனைவரும் தங்களுடைய கருணை
மனுக்களைச் சிறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். விநாயக்கின் மனு 1911 ஆகஸ்ட் 30
அன்று சமர்ப்பிக்கப்பட்டது. இப்போது அந்த மனுவின் நகல் எதுவும் இல்லை என்றாலும்
அவருடைய ‘சிறை வரலாறு பதிவில்’ அதைப் பற்றிய குறிப்பு உள்ளது.
அந்த முதலாவது கருணை மனு சமர்ப்பிக்கப்பட்ட போது மகாத்மா காந்தி
தென்னாப்பிரிக்காவிலே இருந்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 1915ஆம் ஆண்டில்தான்
அவர் இந்தியாவிற்குத் திரும்பியிருந்தார்.
சாவர்க்கர் 1913 நவம்பர் 14 அன்று இரண்டாவது கருணை
மனுவைத் தாக்கல் செய்தார். அதுவும் காந்தி இந்தியா திரும்புவதற்கு முன்பாகவே
நடந்திருந்தது. வி.டி.சாவர்க்கரின்
குற்றம் முற்றிலும் அரசியல்தன்மை கொண்டது என்று கூறிய காந்தி கருணை மனுவைத்
தாக்கல் செய்யுமாறு 1920ஆம் ஆண்டில்தான் சாவர்க்கரின் இளைய சகோதரர் நாராயண்
தாமோதர் சாவர்க்கருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அதுவும் காந்தியிடம் உதவி கோரி
நாராயண் சாவர்க்கர் கடிதம் எழுதிய பிறகுதான் நடந்தது.
ராஜ்நாத் சிங்கின் கூற்று உண்மை என்று தவறுதலாக கூறுவதற்காக
ஸ்வராஜ்யாவால் மேற்கோள் காட்டப்பட்டிருந்த புத்தகத்தை எழுதிய விக்ரம் சம்பத்
பின்வருமாறு எழுதியுள்ளார்: ‘பம்பாய் கிர்காம் பகுதியில் உள்ள தன்னுடைய மருத்துவமனையில்
இருந்த நாராயணராவ் யாராலும் சிந்திக்க முடியாத செயலைச் செய்வது என்று முடிவு
செய்தார். தனது பேனாவை எடுத்த அவர் சித்தாந்த ரீதியாக தனது சகோதரருக்கு எதிராக
இருந்து வருகின்ற ஒருவருக்கு, நாட்டின் முக்கிய அரசியல் குரலாக வேகமாக வளர்ந்து
வந்தவருக்கு - மோகன்தாஸ் கரம்சந்த் காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதினார். காந்திக்கு
தான் எழுதிய ஆறு கடிதங்களில் முதலாவதாக எழுதப்பட்ட 1920 ஜனவரி 18 நாளிட்ட கடிதத்தில்
நாராயணராவ் அரசின் அறிவிப்பின் பேரில் தனது மூத்த சகோதரர்களை விடுவிப்பதில்
காந்தியின் உதவியையும், ஆலோசனையையும் நாடியிருந்தார்.
நாராயணராவ் சாவர்க்கர் 1920ஆம் ஆண்டு காந்திக்கு எழுதிய
கடிதத்தில் ‘இந்திய அரசாங்கத்தால் விடுதலை செய்யப்படவிருப்பவர்களில் சாவர்க்கர்
சகோதரர்கள் சேர்க்கப்படவில்லை என்று நேற்று [ஜனவரி 17] எனக்குத் தெரிவிக்கப்பட்டது...
இப்போது அவர்களை விடுதலை செய்யப் போவதில்லை என்று இந்திய அரசு முடிவு செய்துள்ளது
என்பது தெளிவாகியுள்ளது. தயவுசெய்து இதுபோன்ற சூழல்களில் அடுத்து எவ்வாறு நடந்து கொள்வது
என்று உங்களிடமிருந்து கேட்டு அறிந்து கொள்ள விரும்புகிறேன்...’ என்று
குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதம் மகாத்மா காந்தி எழுதி சேகரிக்கப்பட்ட
படைப்புகளின் தொகுதி 19இல் பக்கம்
348இல் இடம் பெற்றுள்ளது.
நாராயண் சாவர்க்கருக்கு 1920 ஜனவரி 25 அன்று எழுதிய பதில்
கடிதத்தில் ‘நிவாரணம் கிடைக்கும் வகையில் உங்கள் சகோதரர் செய்த குற்றம் முற்றிலும்
அரசியல்தன்மை கொண்டது என்ற உண்மையைத் தெளிவுபடுத்தி, வழக்கின் உண்மைகளை முன்வைத்து
மனுவைத் தயாரிக்குமாறு’ காந்தி அறிவுறுத்தியிருந்தார். மேலும் அந்த விஷயத்தில்
தனக்கென்றுள்ள சொந்த வழியில் தான் செல்லப் போவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிலும் மகாத்மா காந்தி எழுதி
சேகரிக்கப்பட்ட படைப்புகளின் தொகுதி 19இல் காந்தியின் காணக்
கிடைக்கிறது.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு சாவர்க்கர் மன்னிப்பு கோரி
மீண்டும் ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனு 1920 மார்ச் 30 நாளிடப்பட்டதாகும். நூற்றுக்கணக்கான கைதிகளை விடுவித்ததற்காக
பிரிட்டிஷ் அரசுக்கு நன்றி தெரிவித்ததுடன் அரசு தனக்கும், தன்னுடைய சகோதரர் உட்பட
மீதமுள்ள கைதிகளுக்கும் கருணை காட்ட வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டிருந்தார்.
தனது சகோதரருக்கு 1920 ஜூலை 6 நாளிட்டு எழுதிய
கடிதத்தில் சாவர்க்கர் அந்த மனு பற்றி குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதில் அவர் காந்தியின்
பெயரைக் குறிப்பிடவில்லை.
1920 மே 26 அன்று காந்தி தனது வார இதழான 'யங்
இந்தியா'வில் ‘... எனவே என் பெயராலும், என் சார்பாகவும் பொதுமக்களின்
பாதுகாப்பிற்கு இணக்கமானதாக இருக்கும் என்று தான் கருதுகின்ற அரசியல்
குற்றவாளிகளுக்கு அரச மன்னிப்பை அளிக்க வேண்டுமென்று வைஸ்ராயிடம் கேட்டுக்
கொள்கிறேன். இந்த நிபந்தனையின் கீழ் அரசுக்கு எதிரான குற்றங்களுக்காக அல்லது
ஏதேனும் சிறப்பு அல்லது அவசரச் சட்டத்தின் கீழ், சிறைவாசம் அல்லது அவர்களின்
சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகளை அனுபவித்து வருகின்றவர்களுக்கு மன்னிப்பை அவர்
வழங்கிட வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று எழுதினார்,
மேலும் அவர் ‘இந்திய அரசு மற்றும் மாகாண அரசுகளின்
நடவடிக்கைக்கு நன்றி, அந்த நேரத்தில் சிறைவாசம் அனுபவித்த பலரும் அரசின் கருணையின்
பலனைப் பெற்றுள்ளனர். ஆனால் குறிப்பிடத்தக்க அரசியல் குற்றவாளிகள் சிலர் இன்னும்
விடுவிக்கப்படவில்லை. அவர்களில் சாவர்க்கர் சகோதரர்கள் இருப்பதாக நான்
நினைக்கிறேன்... சகோதரர்கள் இருவரும் தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டை அறிவித்துள்ளனர்.
எந்தவொரு புரட்சிகரக் கருத்துகளும் தங்களிடம் இல்லை என்றும் இந்தியாவிற்கான
அரசியல் பொறுப்பை அடைவதற்காக வேலை செய்ய ஒருவருக்கு சீர்திருத்தங்கள் உதவுகின்றன
என்பதால் தாங்கள் விடுதலை செய்யப்பட்டால்
சீர்திருத்த சட்டம் 4இன் கீழ் வேலை செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளனர். அவர்கள்
இருவரும் பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற விரும்பவில்லை என்று எவ்விதச்
சந்தேகத்திற்கும் இடமின்றி கூறுகின்ற அவர்கள் அதற்கு மாறாக ஆங்கிலேயர்களுடன்
இணைந்து இந்தியாவின் தலைவிதியை சிறப்பானதாக்க முடியும் என்று கருதுகிறார்கள்...
ஆகையால், ஏற்கெனவே நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து, கணிசமாக தங்கள் உடல்
எடையை இழந்து நிற்கின்ற, தங்களுடைய அரசியல் கருத்துக்களை அறிவித்துள்ள அந்த இரண்டு
சகோதரர்களின் விடுதலை அரசுக்கு ஆபத்து விளைவிக்கும் என்பதை நிரூபிப்பதற்கான
முழுமையான ஆதாரம் எதுவும் இல்லையென்றால் அவர்கள் இருவருக்கும் வைஸ்ராய் விடுதலை
அளித்திட வேண்டும் என்றே நான் கருதுகிறேன்’ என்று எழுதினார், மேற்கண்ட பகுதிகளை
மகாத்மா காந்தி எழுதி சேகரிக்கப்பட்ட படைப்புகளின் தொகுதி 20இல் (பக்கம் 368) காணலாம்.
அந்தமான் செல்லுலார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட
சாவர்க்கர் 1921 மே மாதம் ரத்னகிரி
மாவட்டத்தில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டார். சாவர்க்கர் சகோதரர்கள் சிறையில்
இருந்தபோது காந்தி அவர்கள் மீது மதிப்பு
கொண்டிருந்தது அவரது
எழுத்துக்களில் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.
‘சாவர்க்கர்
சகோதரர்களின் திறமை பொது நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். சரியான நேரத்தில் இந்தியா
விழித்தெழாவிட்டால், உண்மையான தனது இரண்டு மகன்களை இழக்கும் அபாயத்தில் அது உள்ளது.
அந்த சகோதரர்களில் ஒருவர் நான் நன்கு அறிந்தவர். அவரை லண்டனில் சந்திக்கும்
வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் தைரியமானவர். புத்திசாலி. தேசபக்தர்.
வெளிப்படையாக அவர் ஒரு புரட்சியாளர். தற்போதைய அரசாங்கத்தின் கொடூரத்தை அவர் என்னை
விட முன்பாகவே பார்த்திருந்தார். இந்தியாவை நேசித்ததற்காக அவர் அந்தமானில்
இருக்கிறார்’ என்று காந்தி யங் இந்தியாவின் 1921 மே 18 பதிப்பில் எழுதியுள்ளார்.
ஆனால் அவர்களுடைய வன்முறையிலான வழிமுறைகளை காந்தி ஏற்கவில்லை. ஹிந்துத்துவா சித்தாந்தவாதியாக
சாவர்க்கர் முக்கியத்துவம் பெற்ற பிறகு முன்வைக்கப்பட்ட விமர்சனத்தில் காந்தி
மிகவும் தெளிவாகவே இருந்தார். ‘ஓர் உயிரினத்தின் கூறாய்வைக் கோருவது அதன் உயிரையே
கேட்பதாகவே இருக்கும். ஒருபோதும் அத்தகைய சகோதரப் போரில் உடந்தையாக காங்கிரஸால் இருக்க
முடியாது. வாளின் கோட்பாட்டை நம்புகின்ற ஹிந்துக்களான டாக்டர் மூஞ்சே, சாவர்க்கர்
போன்றவர்கள் முஸ்லீம்களை ஹிந்துக்களின் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கவே
முயல்கிறார்கள். அந்தப் பிரிவை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் நான் இல்லை. நான்
காங்கிரஸையே பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறேன்’ என்று 1942இல் பம்பாயில் நடந்த
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் காந்தி உரையாற்றினார்.
அவர்களுடைய சித்தாந்தத்தில் கருத்து வேறுபாடுகளுடன்
இருந்தபோதிலும், சிறையில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை காந்தி
வலியுறுத்தியே வந்தார். சிறையில் இருந்து சாவர்க்கரை விடுவிக்க வேண்டும்
என்பதற்கான மனுவில் காந்தி கையெழுத்திடவில்லை என்று 1925இல் தத்யாசாகேப் கேல்கர்
குற்றம்சாட்டியது குறித்து காந்தியிடம் 1937ஆம் ஆண்டில் சங்கர்ராவ் தேவ் கேட்டபோது
‘புதிய சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு - அமைச்சர்கள் யாராக இருந்தாலும் சாவர்க்கர்
விடுதலை செய்யப்படுவது என்பது உறுதியாகி விட்ட நிலையில் அந்த மனு முற்றிலும்
தேவையற்றதாகவே இருந்தது.. அதுதான் நடக்கவும் செய்தது. சில அடிப்படைகளில் எங்களுக்கு
இடையே உள்ள வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், என்னால் ஒருபோதும் அவர்கள் சிறையில்
அடைக்கப்பட்டிருப்பதை சமநிலையுடன் சிந்திக்க முடியாது என்பது குறைந்தபட்சம்
சாவர்க்கர் சகோதரர்களுக்குத் தெரியும்’ என்று காந்தி பதிலளித்தார்,
‘அரசாங்கத்தின் அனுமதியின்றி மாவட்ட எல்லைக்கு அப்பால்
செல்லக் கூடாது; பொதுவெளியில் அல்லது தனிப்பட்ட முறையில் அரசியல் நடவடிக்கைகளில்
ஈடுபடக் கூடாது. காலாவதியாகும் போது புதுப்பிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் இந்தக்
கட்டுப்பாடுகள் ஐந்து வருடங்களுக்கு இருக்கும்’ என்ற நிபந்தனைகளுடன் ரத்னகிரி சிறையில் இருந்து சாவர்க்கர் 1924ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.
மகாத்மா காந்தியின்
வற்புறுத்தலின் பேரிலேயே விநாயக் தாமோதர் சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம்
கருணை மனுக்களைத் தாக்கல் செய்தார் என்று பொதுவில் கிடைக்கக்கூடிய ஆவணங்கள்
எவற்றிலும் இருக்கவில்லை. முதல் இரண்டு கருணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டபோது
காந்தி தென்னாப்பிரிக்காவிலே இருந்தார். சாவர்க்கரின் இளைய சகோதரர் உதவி வேண்டி
காந்திக்கு கடிதம் எழுதியபோது கருணை மனுவைத் தாக்கல் செய்யுமாறு அவர் அறிவுறுத்தினார்.
அந்தக் கடிதப் பரிமாற்றத்திற்குப் பிறகு சாவர்க்கர் ஒரு கருணை மனுவை
எழுதியிருந்தார் என்றாலும் அது காந்தியின் ஆலோசனையின் பேரிலேயே
சமர்ப்பிக்கப்பட்டது என்பதற்கோ அல்லது காந்தியின் ஆலோசனை
இருந்திருக்கவில்லையென்றால் 1920இல் சாவர்க்கர் அந்தக் கருணை மனுவைத் தாக்கல்
செய்திருக்க மாட்டார் என்பதற்கோ எந்தவித ஆதாரமும் இல்லை. எனவே பாதுகாப்பு அமைச்சர்
ராஜ்நாத் சிங்கின் கூற்று மிகவும் தவறானதாகும்.









Comments