தேவிந்தர் சர்மா
உணவு மற்றும் விவசாய நிபுணர்
ட்ரிப்யூன் இந்தியா
1995இல் உலக வர்த்தக அமைப்பு (WTO) தோன்றி சில ஆண்டுகளுக்குப்
பிறகு இந்திய விவசாயியை ஐரோப்பிய விவசாயியோடு ஒப்பிட்டு கட்டுரை ஒன்றை எழுத வேண்டுமென்று
என்னை லண்டன் தி ஈக்காலஜிஸ்ட் பத்திரிகை அணுகியது. ஒப்பீட்டளவில் இந்தியாவில்
இருக்கின்ற குறைந்த உற்பத்திச் செலவைக் கருத்தில் கொண்டு சர்வதேச வர்த்தகம்
தொடங்கிய பிறகு இந்திய விவசாயி எந்த அளவிற்குப் பொருளாதார ரீதியாக ஆதாயமடைந்துள்ளார்
என்பதைக் கண்டறிவதே அதன் நோக்கமாக இருந்தது.
உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தம் விவசாயிகளுக்கு
அளிக்கும் மகத்தான வாய்ப்புகளைச் சொல்லி அதில் சேர வேண்டியதன் அவசியத்தை
நியாயப்படுத்துவதற்காக விவசாயிகளின் எதிர்ப்புகளையும் மீறி முக்கிய பொருளாதார
வல்லுநர்களால் உருவாக்கப்பட்ட பொதுவான கருத்தாக அது இருந்தது. அந்த ஒப்பந்தத்தால்
உருவாகப் போகின்ற மிகப் பெரிய மாற்றத்தால் விவசாய ஏற்றுமதி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
என்றும், விவசாயிகளின் வருமானம் அதனால் அதிகரிக்கும் என்றும், அதன் மூலம் இந்திய
விவசாயத்தின் எதிர்காலத்தை முற்றிலுமாக மாற்றி விட முடியும் என்று சொல்லும்
அளவிற்கு பொருளாதார வல்லுநர்களில் ஒருவர் சென்றிருந்தார். அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பது
மட்டுமல்லாது அவ்வாறான தொடர்பிற்கு எந்தவொரு வாய்ப்பும் இருக்கவில்லை என்பதால் இந்திய
விவசாயியை ஐரோப்பிய மாட்டுடன் ஒப்பிட்டே நான் அந்தக் கட்டுரையை முடிக்க
வேண்டியதாயிற்று.
உலக வர்த்தக அமைப்பு தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட இருபத்தாறு
ஆண்டுகளுக்குப் பிறகு 2021 செப்டம்பரில் வெளியாகியுள்ள கிராமப்புற இந்தியாவில்
விவசாயக் குடும்பங்களின் வருமானங்கள் குறித்த தேசிய புள்ளிவிவர அமைப்பின் (NSO)
அறிக்கை விவசாயிகளின் இருண்ட பக்கத்தை நமக்கு காட்டியிருக்கிறது. அந்த அறிக்கையைத்
தயாரிப்பதற்கான நிலை மதிப்பீட்டு ஆய்வு (எஸ்ஏஎஸ் - SAS) 2018-19இல் மேற்கொள்ளப்பட்டது.
அந்தக் கணக்கெடுப்பு அறிக்கையில் விவசாயிக்கும் ஒருவருக்கும் பசுவுக்கும் இடையில்
எந்தவொரு தொடர்பும் இருக்கவில்லை என்றாலும், சராசரி இந்திய விவசாயி ஒருவர் ஒரு தொழிலாளியைக்
காட்டிலும் மோசமான நிலையிலேயே இருக்கிறார் என்பதாக அது சொல்லும் சேதி நம்மை
அச்சுறுத்துவதாகவே இருக்கிறது. சுதந்திரம் பெற்று எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப்
பிறகும் விவசாயிகள் பயிர் சாகுபடியைக் காட்டிலும் தங்களுடைய கூலிகளிலிருந்தே அதிகமாகச்
சம்பாதித்து வருகிறார்கள். மலிவான உழைப்பு நகரங்களுக்குத் தேவைப்படுவதால்,
கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு இடப்பெயர்வைத் துரிதப்படுத்துவதற்காக
விவசாய வருமானத்தை வேண்டுமென்றே குறைவாக வைத்திருக்கும் பொருளாதார வடிவமைப்பை மட்டுமே
நாடு பெற்றிருக்கிறது.
2012-13இல் நிலை மதிப்பீட்டு ஆய்வு நடத்தப்பட்டபோது ஒரு விவசாயக் குடும்பம் தன்னுடைய 48% வருமானத்தை பயிர்
சாகுபடியிலிருந்து ஈட்டுவதாகத் தெரிய வந்தது. அதுவே 2018-19 கணக்கெடுப்பின் கீழ்
38% என்று குறைந்து விட்டது. அதே காலகட்டத்தில் கூலியின் மூலம் மட்டும் விவசாயிகளுக்கு
கிடைக்கின்ற விவசாய வருமானத்தின் பங்கு 32% என்பதிலிருந்து 40% என்பதாக
அதிகரித்திருக்கிறது. விவசாயிகளின் சராசரி வீட்டு வருமானத்தில் கூலி என்பது பெரும்பகுதி
என்றாகியுள்ளது. அது வரப்போகும் ஆண்டுகளிலும் நம்பிக்கையுடன் தொடரவே போகிறது. ஒரு
விவசாயக் குடும்பத்திற்கான மொத்த மாத வருமானம் ரூ.10,218 என்பதாக 'செலுத்தப்பட்ட
செலவுகள்' என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. 2012-13ஆம் ஆண்டு மாதத்திற்கு
ரூ.6,426 என்றிருந்த மாத வருமானத்துடன் ஒப்பிடுகையில், பணவீக்கத்திற்கு ஏற்றவாறு இந்த
வருமானம் பெயரளவில் 16% மட்டுமே அதிகரித்திருக்கிறது. 2018-19இல் 'செலுத்தப்பட்ட
செலவுகள் மற்றும் கணக்கிடப்பட்ட செலவுகள்' அணுகுமுறையைப் பயன்படுத்தி, ஒரு விவசாயக்
குடும்பத்தின் சராசரி வருமானம் ரூ.8,337 என்று கணக்கிடப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து வருகின்ற உள்ளீடுகள், ஊதியம் பெறாத உழைப்பு, சொந்த இயந்திரங்கள்,
சொந்த விதைகள் போன்றவை ‘கணக்கிடப்பட்ட செலவுகள்’ என்பதைக் குறிக்கின்றன.
பயிர் சாகுபடியைப் பொறுத்தவரை ஒரு சராசரி விவசாயக்
குடும்பம் 2018-19ஆம் ஆண்டில் ரூ.3,798 சம்பாதித்தது. உண்மையில் இந்தப் பணத்தை பணவீக்கத்திற்காக
சரிசெய்யும் போது, சாகுபடியின்
வருவாய் 2012-13 மற்றும் 2018-19க்கு இடையில் 8.9% அளவிற்கு குறைந்துள்ளது. ஒரு
நாளின் அடிப்படையில் அந்த வருவாயைப் பிரித்து பயிர் சாகுபடியின் மூலம் கிடைக்கும் வருமானம்
ஒரு நாளைக்கு 27 ரூபாய் என்றிருப்பதாக செய்தித்தாள் ஒன்றில் சுவாரஸ்யமான பகுப்பாய்வு
வெளியிடப்பட்டது. அந்த விவசாயியைக் காட்டிலும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத்
திட்டத்தில் வேலை பார்க்கின்ற தொழிலாளி ஒருவர் கூட கூடுதலாகவே சம்பாதிக்கிறார். விவசாயிகள்
உண்மையில் விவசாயம் செய்வதற்காகத் தண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று நீண்ட
காலமாக நான் சொல்லிக் கொண்டிருப்பதையே இந்தச் செய்தி நிறுவியிருக்கிறது. பண்ணையில்
பாலின் விலை லிட்டருக்கு சுமார் முப்பது ரூபாய் என்றிருக்கும் நிலையில் சாகுபடியின்
மூலம் கிடைக்கும் வருமானம் சராசரியாக ஒரு நாளைக்கு சராசரியாக பாலைத் தருகின்ற பசுவிடமிருந்து
கிடைக்கின்ற வருவாயை விட மிகக் குறைவாகவே உள்ளது.
விவசாய வருமானம் குறைவாக இருப்பதால் கடன் பெறுவதற்கான
முயற்சிகள் அதிகமாகின்றன. பல ஆதாரங்களில் இருந்து விவசாயிகள் பெற்றுள்ள சராசரி
விவசாயக் கடன் 2012-13ல் ரூ.47,000 என்றிருந்த நிலை மாறி 2018-19இல் அந்தக் கடன் ரூ.74,100
என்று அதிகரித்துள்ளது. பாதி விவசாயக் குடும்பங்களில், துல்லியமாகச் சொல்வதென்றால்
50.2% குடும்பங்கள் நிலுவையில் உள்ள கடன்களுடனே வாழ்ந்து வருகின்றன. நிலுவையில்
உள்ள விவசாயக் கடன்கள் மிசோரம் மாநிலத்தில் 709% அதிகரித்துள்ளது. அதைத் தொடர்வதாக
வடகிழக்கில் அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்கள் உள்ளன.
மிக அண்மையில் 2021 மார்ச் மாத இறுதி வரையில் நிலுவையில்
உள்ள மொத்த விவசாயக் கடன்கள் ரூ.16.8 லட்சம் கோடி என்ற அளவில் இருப்பதாக
பாராளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதில் தமிழ்நாடு முதலிடத்தில் (1.89 லட்சம்
கோடி ரூபாய்) உள்ளது.
ஏறக்குறைய 77% விவசாயக் குடும்பங்கள் சுயதொழில்
செய்பவர்களாக இருப்பதைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, 70.8% பேரிடம் ஒரு
ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் உள்ளது என்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாகவே
இருக்கிறது. ஒன்று முதல் இரண்டு ஹெக்டேர் வரை நிலம் 9.9% பேரிடம் மட்டுமே இருக்கிறது.
ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் ஒரு உறுப்பினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற ஒரு
குடும்பத்தில் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் இருந்து 4000
ரூபாய்க்கு மேல் பெறுகின்ற குடும்பமே ஒரு விவசாயக் குடும்பம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறக் குடும்பங்களில் பத்து ஹெக்டேருக்கு மேல்
நிலம் வைத்திருப்பவர்கள் 0.2% மட்டுமே இருப்பதால், விவசாயிகள் நடத்தி வருகின்ற போராட்டங்கள்
பெரும் விவசாயிகளின் வேலை என்பதாகக் குற்றம் சாட்டி பறை சாற்றப்பட்டு வருகிறது. கடந்த
சில பத்தாண்டுகளில் அடுத்தடுத்த அரசாங்கங்களால் விவசாயத்தை விட்டு மக்களை
வெளியேற்றுவதற்காகச் செயல்படுத்தப்பட்டுள்ள கொள்கை உந்துதலால், பெரும் அல்லது
சிறிய விவசாயிகளுக்கு உரிய சரியான வருமானத்தை மறுப்பது நிகழ்ந்து வருகிறது.
கிராமப்புறங்களில் இருந்து மக்களை வெளியேற்றுவதை உலக வங்கி/ஐஎம்எஃப் வலியுறுத்தி
வருவதைத் தொடர்ந்து நகரமயமாக்கலின் வேகத்தை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சி
அதிகரிக்கும், விவசாயத்தை வேண்டுமென்றே மோசமான நிலையில் வைத்திருப்பதால் விவசாயிகள்
விவசாயத்தைக் கைவிட்டு வெளியேறும் சூழ்நிலைகள் உருவாகும் என்ற எண்ணமும் இருந்து
வருகிறது. 2018-19ஆம் ஆண்டின் நிலை மதிப்பீட்டு ஆய்வு முடிவுகளை நகர்ப்புற இடப்பெயர்வு
செயல்முறையை விரைவுபடுத்துவதற்கான கொள்கை மாற்றங்களுக்காக முக்கிய பொருளாதார
வல்லுனர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றால் அதுகுறித்து நான் ஆச்சரியப்பட
மாட்டேன்.
இதை தலைகீழாக மாற்றிட வேண்டும். இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 2020-21ஆம் ஆண்டில் 308.65 மில்லியன் டன் என்று மிக அதிகமாகப் பதிவாகியுள்ளது. தானிய உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், வேளாண் வருமானம் கீழ்நோக்கிச் சென்று கொண்டே இருக்கிறது. 2000-02 துவங்கி இருபது ஆண்டு காலத்திற்கு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு (OECD) தயாரித்துள்ள தயாரிப்பாளர் மானிய மதிப்பீடு, வியட்நாம், அர்ஜென்டினாவுடன் இந்தியாவும் சேர்ந்து மூன்று நாடுகள் விவசாயிகளுக்கு எதிர்மறையாக வரி விதிப்பதாக நமக்குச் சொல்கிறது. இந்தியா மொத்த வேளாண் வரவுகளில் ஏறக்குறைய -5% (மைனஸ் ஐந்து சதவீதம்) வரையிலும் தனது விவசாயிகளிடம் வரியாக வசூலித்து வருகிறது.
அரசாங்கம் உறுதியளித்துள்ள மத்திய சட்டங்கள் விவசாய
நெருக்கடியை மேலும் மோசமாக்கும் என்பதை விவசாயிகள் நன்கு அறிந்தே இருக்கிறார்கள். வேளாண்
வருமானக் கொள்கைகள் மறுபரிசீலனை செய்யப்படுவதன் மூலம் மட்டுமே விவசாய வருவாயை
ஈடுசெய்யக் கூடிய வகையில் இருந்து வருகின்ற விவசாயம் அல்லாத கூலி இல்லாமல்
பொருளாதார ரீதியாக சாத்தியமான நிறுவனமாக விவசாயமானது மாறும் என்பதால் கொள்கைகள் மறுபரிசீலனை
செய்யப்படுவதையே விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றார்கள்.
https://www.tribuneindia.com/news/comment/all-pain-no-gain-for-farmers-311197
Comments