பெகாசஸ் உளவுமென்பொருள் விவகாரம் இன்னும் அதிகம் பேசப்பட்டிருக்க வேண்டும்

 ராகமாலிகா கார்த்திகேயன்

ஆனந்துடன் நேர்காணல் நடத்தியவர்

 

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் தனிநபரின் உரையாடல்களைக் கேட்பதற்காக என்எஸ்ஓ என்ற இஸ்ரேலிய நிறுவனத்திடமிருந்து பெற்ற ராணுவ தரத்திலான உளவு மென்பொருள்களைப் பயன்படுத்தியுள்ளன என்று வெளியான செய்திகள் உலகையே உலுக்கின. முக்கியமான செய்தித்தாள்கள் அனைத்திலும் அது தலைப்புச் செய்தியாக இடம் பெற்றிருந்தது. பெகாசஸின் உளவு மென்பொருள் பயனர்களில் ஒருவராக இந்திய அரசும் இருப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.        

அந்த உளவு மென்பொருளைக் கொண்டு குறிவைக்கப்பட்ட இலக்குகளாக ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மட்டுமல்லாது ஆளும் கட்சியான பாஜகவைச் சார்ந்த பொறுப்பாளர்களும்கூட இருந்துள்ளனர். பெகாசஸ் குறித்த அந்தச் செய்தி பல நாட்களுக்குப் பேசப்பட்டிருக்க வேண்டிய அளவிலே மிகப் பெரிய செய்தியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் வெளியான ஒரு சில கட்டுரைகளைத் தவிர யாரும் பெரிய அளவில் அந்த விவகாரம் குறித்து கவலைப்பட்டிருக்கவில்லை என்றே தோன்றுகின்றது.     

மத்திய அரசும் தன்னுடைய பங்கிற்கு பெகாசஸை தான் பயன்படுத்தியது குறித்த எந்தவொரு தகவலையும் உச்சநீதிமன்றத்திடம் அளிக்க மறுத்து விட்டது. பலராலும் பெரும்பாலும் இந்தப் பிரச்சனை 'மற்றவர்களையே' பாதிக்கப் போகிறது, 'நம்மை அல்ல' என்றே பார்க்கப்படுகிறது. நாம் ஏன் இந்த பெகாசஸ் உளவு மென்பொருள் குறித்து கவலைப்பட வேண்டும் என்பது குறித்து சைபர் பாதுகாப்பு ஆய்வாளரும், ‘மாற்று யதார்த்தங்களைக் கையாளும் கலை’ என்ற நூலின் இணையாசிரியருமான வி.ஆனந்திடம் பேசினோம்.          

நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:

பெகாசஸ் விவகாரம் குறித்து குடிமக்கள் ஏன் கவலைப்பட வேண்டும், பெகாசஸின் இலக்காக நான் இல்லாத போது அது குறித்து நான் ஏன் கவலைப்பட வேண்டும், மறைத்து வைத்துக் கொள்வதற்கான எதுவும் என்னிடம் இல்லாத போது இந்த உளவு மென்பொருள்கள் பற்றி கவலைப்பட என்னிடம் என்ன இருக்கிறது என்பது போன்ற கேள்விகளே பெகாசஸ் மற்றும் பிற உளவு மென்பொருள்களைப் பற்றி பேசுகின்ற போது பொது​​மக்கள் எழுப்புகின்ற பொதுவான கேள்விகளாக உள்ளன.      

அதைப் போன்ற கேள்விகளுக்கு நான் வழக்கமாகத் தருகின்ற பதில் இவ்வாறாக இருக்கும். ‘வங்கியில் வைத்திருக்கும் உங்களுடைய பயனர்பெயர், கடவுச்சொல்லை எனக்குத் தாருங்கள், உங்களுடைய புகைப்படத்தை மேலும் நீங்கள் என்னிடம் நெருக்கமாக இருக்கின்ற அனைத்து படங்களையும் என்னிடம் கொடுங்கள்’ என்று நான் கேட்கும் போது அவ்வாறு அனைத்தையும் தருவது உங்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும் என்றால், பெகாசஸ் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டிய ஏதோவொன்று நிச்சயமாக இருக்கின்றது என்றே பொருள்படும். இங்கே உங்கள் மீது குறிவைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது முக்கியமல்ல. பொதுவாக அந்த மென்பொருள் சாதனங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதே நாம் கவலை கொள்ள வேண்டிய விஷயமாக இருக்கின்றது. அதுவே பெரும்பாலான மக்களால் புரிந்து கொள்ளப்படாத விஷயமாகவும் இருக்கிறது என்றும் கூறலாம்.       

பெரும்பாலான நவீன தேசிய அரசுகள் பொதுவாக வெளிநாட்டவர், உள்நாட்டவர், உள்ளூர்வாசிகள் என்று அனைவரைக் குறித்தும் ஒருவித நுண்ணறிவு சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதை தங்களுடைய இயல்பாகக் கொண்டுள்ளன. உள்நாட்டை இலக்காகக் கொண்டு அதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றால் அதற்கென்று பின்பற்றப்பட வேண்டிய அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகள், செயல்முறைகள் ஏராளம். பெகாசஸ் போன்ற மென்பொருள் சாதனத்தைப் பயன்படுத்துவதில் ஏராளமான சிக்கல்கள் இருப்பதால் பொதுவாக அது உள்நாட்டு இலக்குகளுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை.   

பொதுவாக தேசிய பாதுகாப்பு என்று வருகின்ற போது நிலைத் திட்டம் குறித்து அதிகப்படியான விசாரணைகள் விரும்பப்படுவதில்லை என்பதாலேயே நீதிமன்ற விசாரணைகளில் அமைச்சரவைச் செயலாளரின் பெயர் வந்தது என்றே நான் கருதுகிறேன். ஆனால் உள்நாட்டு விவகாரம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறது. அரசிற்கு அச்சுறுத்தலாக இல்லாதவர்கள் மீதும் அவர்கள் அதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அது நம்மில் பலருக்கும் பொருந்துவதாகவே உள்ளது.   

முதலில் உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் வருகிறது, அதனால் நீங்கள் உளவு வேலையை மேற்கொள்கின்றீர்கள், ஏதோவொன்று அவரிடம் சரியாக இல்லை என்று நீங்கள் நினைக்கின்ற ஒருவரை தொலைபேசி கண்காணிப்பில் வைத்துக் கொள்கிறீர்கள் - பொதுவாக இதுபோன்ற நடைமுறையிலேயே இலக்கு வைக்கப்படுகின்றது. சிக்னல் அல்லது வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துகின்ற போது அவற்றின் மறைகுறியாக்கப்பட்ட தகவல்தொடர்புகளின் தன்மையால் அவர்களைக் கண்காணிப்பது உங்களுக்கு மிகவும் கடினமான வேலையாகிப் போகிறது. இவர் உண்மையில் அச்சுறுத்தலாக இருக்கிறார் என்று கூறி கண்காணிப்பில் ஒருவரை வைத்திருக்கப் போவதாகச் சொல்லலாம் என்றாலும் அவ்வாறு செய்வதற்கென்று நிலையான ஒப்புதல் செயல்முறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அந்த நிலையான ஒப்புதல் செயல்முறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முதலில் நீங்கள் அவரைப் பற்றி மதிப்பீடு செய்ய வேண்டும். அந்த நபர் அரசிற்கு ஏன் பாதுகாப்பு பிரச்சனையாக இருக்கிறார் என்பதை நீங்கள் விளக்க வேண்டும் என்பதால் யாராவது ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அரசின் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தலாக அவர் இருக்கிறார் என்று வெறுமனே உங்களால் எளிதில் சொல்லி விட முடியாது. அவரை பெகாசஸ் பட்டியலில் சேர்ப்பதற்கு வரையறுக்கப்பட்டுள்ள காரணங்கள் அவசியம் இருந்தாக வேண்டும்.  

அந்த பெகாசஸ் பட்டியலில் எனது தொடர்பு பட்டியலில் உள்ள பெரும்பாலான பத்திரிகையாளர்களை உங்களால் காண முடியும். நாம் இப்போது பத்திரிகையாளர்கள் நாட்டின் இறையாண்மை பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகப் பார்க்கின்ற இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோமா? உண்மையில் இங்கே நம்பகமான அச்சுறுத்தல் என்பது இருக்கவே இல்லாத போது அவ்வாறு அச்சுறுத்தல் இருப்பதாகச் சொல்வது அனைவரும் கேட்டு சிரிக்கும் வகையில் வினோதமானதாகவே இருக்கிறது.       

மக்கள் பலரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் எடுத்துக்காட்டைத் தருகிறேன். பெகாசஸ் என்பது மிகவும் சாதாரணமான உளவு மென்பொருள் சாதனம் அல்ல. அது கேங்க்ஸ் ஆஃப் வாசேபூர் போன்ற திரைப்படங்களில் மக்கள் தங்களுடைய வீடுகளில் துப்பாக்கிகளை விற்பதைப் போன்றது. அவர்கள் ஏன் துப்பாக்கி விற்பனையை அவ்வாறு செய்கிறார்கள்? ஏனெனில் சாதாரண நபர் ஒருவர் தனக்கென்று உரிமம் பெற்ற துப்பாக்கியைப் பெறுவது மிகவும் கடினமான காரியமாகும். அதைப் பெறுவதற்கென்று விரிவான செயல்முறைகள் உள்ளன. துப்பாக்கியைப் பெறுகின்ற செயல்முறைகளை மிகவும் ஒத்ததாகவே பெகாசஸ் போன்ற உளவு மென்பொருள் உங்களிடம் இருப்பதற்கான செயல்முறைகளும் உள்ளன. சந்தையில் உங்களுக்குக் கிடைக்கின்ற மிகச் சாதாரண உளவு சாதனத்தின் விலை வெறுமனே ஐம்பது அமெரிக்க டாலர்கள் மட்டுமே. ஆனால் பெகாசஸ் பத்து லட்சம் டாலர் மதிப்பிலான உளவு மென்பொருள் சாதனம்.

கணினி பாதுகாப்பைப் பொறுத்தவரை பெகாசஸின் பயன்பாடு பொதுமக்கள் மீது குறிவைத்து வீசப்படுகின்ற ஐநூறு பவுண்டு எடை கொண்ட வெடிகுண்டைப் பயன்படுத்துவதற்குச் சமமானதாக இருக்கிறது. பெகாசஸைக் கொண்டு  உங்களுக்கான தனிப்பட்ட இடத்தில் துஷ்பிரயோகம் செய்வது, தவறாகப் பயன்படுத்துவது போன்ற செயல்கள் ஆயுதங்கள் எதுவுமில்லாத சாதாரண குடிமக்களுக்கிடையே குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கின்ற கால வெடிகுண்டை வைப்பதைப் போன்ற மோசமான செயல்களாகவே இருக்கின்றன. அதை அரசுகள் செய்யக்கூடாது என்பதால் அடிப்படையிலேயே அது மிகவும் கவலையளிப்பதாக இருக்கிறது.         

​​‘ஆனாலும் நான் குறிவைக்கப்படவில்லை’ என்று மக்கள் சொல்கின்ற போது, நாடாளுமன்றத்தில் எங்களுக்கு மிகச்சிறந்தவர்களே தேவை என்று தொடர்ந்து சொல்லி வருகின்ற ‘ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்’ என்ற அமைப்பை நடத்தி வருகின்ற பேராசிரியர் ஜகதீப் எஸ்.சோகர் நினைவில் வருகிறார். அவருக்காக உச்ச நீதிமன்றத்தில் நான் வாக்குமூலம் அளித்திருக்கிறேன். அந்த அமைப்பினர் ஏராளமான அறிக்கைகளைத் தயார் செய்து வருகிறார்கள். எந்தவிதத்திலும் கேடு விளைவிக்காத அவர்களைப் பொறுத்தவரை அரசியல் கட்சி பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரமாணப் பத்திரங்களைச் சேகரித்து அறிக்கை தயார் செய்வது மட்டுமே வேலையாக இருக்கிறது. அரசு தயாரிக்கின்ற பாதுகாப்பு கண்காணிப்பு பட்டியலில் அவ்வாறான வேலைகளைச் செய்து வருகின்ற ஒருவர் ஏன் வைக்கப்பட வேண்டும், பெகாசஸ் அவரது கணினிக்குள் ஏன் திணிக்கப்பட வேண்டும்?

தற்சமயம் அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்பேற்பிற்காகப் போராடுகின்ற பத்திரிகையாளர்கள், மக்கள் மீது டிஎன்பி வெடிகுண்டுகள் வீசப்படுவது குறித்து எந்தவொரு கவலையும் இல்லை என்று பலரும் சொல்கின்ற சூழலே பொதுவாக இருந்து வருகிறது. நம்மைப் போன்றதொரு நாட்டில் வாழ்வது குறித்த கவலை ஏதாவது உங்களிடம் இருக்கிறதா என்ற கேள்வியை அவ்வாறு சொல்பவர்களிடம் எழுப்ப வேண்டியுள்ளது.          

இன்றைய பயங்கரவாத காலத்தில் தன்னுடைய குடிமக்கள் என்ன செய்து வருகிறார்கள் என்பதை ஓர் அரசாங்கம் அறிந்து கொள்வது சரிதானே - அது மிகவும் இன்றியமையாதது அல்லவா, பின்னர் வருந்துவதைக் காட்டிலும் முதலிலேயே பாதுகாப்பாக இருந்து கொள்வது நல்லதுதானே என்றும் அவர்கள் கேட்கின்றார்கள்…   

நீங்கள் திரும்பவும் பேராசிரியர் ஜகதீப் சோகர், பிரசாந்த் கிஷோர், ராகுல் காந்தி மற்றும் சில அமைச்சர்கள் மீது உங்கள் பார்வையைச் செலுத்த வேண்டும் - இவர்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் என்று நாம் சொல்லப் போகின்றோமா? பயங்கரவாதிகளுக்காகப் பயன்படுத்துவதற்கு சில சாதனங்கள் தேவை என்பது அந்த சாதனங்களை சொந்த மக்கள் மீதே பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதாகப் பொருள்படாது. சகோதரர்களை, தந்தையைப் படுகொலை செய்வது போன்ற அனைத்தும் தடைசெய்யப்பட்டதற்கான காரணங்கள் இருக்கின்றன!     

உங்கள் மனைவியிடம் பேசியவை, காலை உணவு, இரவு உணவில் என்ன சாப்பிட்டீர்கள் என்ற விவரங்கள், காதலி அல்லது வாழ்க்கைத் துணையுடன் படுக்கையில் பேசிய பேச்சுகள் என்று உங்களுடன் தொடர்பு கொண்டிருந்த ஒருவரிடம் நீங்கள் தெரிவித்த அனைத்து தகவல்களும் பொதுவெளியில் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் இருக்கின்ற சூழ்நிலையை   எப்போதாவது நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா? பெகாசஸ் உங்களுடைய கணினியுடன் இணைக்கப்பட்டிருப்பதை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா - தங்களுக்குப் பிரச்சனை இல்லை என்று சொல்கின்ற மக்களில் யாராவது அதைப் பார்த்திருக்கிறார்களா? உளவுத்துறை பக்கத்தில் உள்ள நம்மில் மிகச் சிலரே அதைக் கண்டிருக்கின்றோம். அதைப் பார்த்த யாரும் இதுபோன்ற கேள்விகளைக் கேட்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.  

    

தேசிய நலன் கொண்டதாக இருக்கவில்லை என்று கூறி நீதிமன்றத்தில் பெகாசஸ் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொள்ள அரசு மறுத்து விட்டது. குடிமக்களின் இணைய பாதுகாப்பு தேசிய நலன் சார்ந்த விஷயம் என்றாகாதா? அது குறித்து இருக்கின்ற சட்ட அமைப்பு என்ன சொல்கிறது?  

பொதுவாக புலனாய்வு அமைப்புகளில் பணிபுரியும் எவரொருவரும் மூன்று பரந்த கொள்கைகளை ஏற்றுக் கொள்வார்கள். ஒன்று, இந்தியாவில் கண்காணிப்பு கட்டமைப்பைத் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று புட்டசுவாமி வழக்கில் (தனியுரிமைக்கான உரிமை) வழங்கப்பட்ட தீர்ப்பு. பெரும்பாலான கண்காணிப்பு விதிகள், நடைமுறைகள், செயல்முறைகள் என்று அனைத்தும் இணையத்திற்கு முந்தைய காலத்தில்  எழுதப்பட்டவையாகவே இருக்கின்றன.

தற்போது உள்துறைச் செயலாளரே ​​எல்லாவற்றையும் அங்கீகரிக்க வேண்டும். அது நீதித்துறையின் மேற்பார்வையின்கீழ் இல்லை. நிர்வாக மேற்பார்வை மட்டுமே இருக்கிறது. மற்ற நாடுகளில் ஓரளவிற்கு நீதித்துறை, பாராளுமன்ற மேற்பார்வை இருந்து வருகின்ற நிலையில் தன்னை ஜனநாயக நாடாகப் பறைசாற்றிக் கொள்ளும் இந்த நாட்டில் பாராளுமன்றத்தின் மேற்பார்வைகூட இருக்கவில்லை. அமெரிக்காவில் தெரிவுக்குழு அனைத்து உளவுத்துறை வேலைகளையும் பார்க்கிறதா என்று கேள்வி எழுப்பப்படலாம். அதைப் பொதுவில் பேச வேண்டாம் என்று அவர்கள் முடிவு செய்திருந்தாலும், கண்காணிப்பிற்கான செயல்முறைகள் அங்கே இருக்கவே செய்கின்றன. ஆனால் இந்தியாவில் அதுபோன்ற மேற்பார்வைக்கான நெறிமுறைகள் எதுவும் இருக்கவில்லை.        

அது செயல்முனைப்பற்ற கண்காணிப்பு என்பதால் பொதுமக்களுக்கு எதிராக பெகாசஸைப் பயன்படுத்துவதில் உண்மையில் எந்தவொரு சட்டப் பிரச்சனையும் இருக்கவில்லை என்று கூறலாம். ஆனாலும் பெகாசஸ் மென்பொருள் கணினியில் எழுதக்கூடிய திறன்களையும் கொண்டுள்ளது என்ற வகையில் தனித்துவம் கொண்டிருப்பது கவனிக்கத் தக்கது. குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம், ஆபாசப் படங்கள் என்று எந்த வகையான ஆவணத்தையும் குறிவைக்கப்படுகின்ற கணினியில் பெகாசஸால் பதிவேற்ற முடியும் என்பது அந்த வகையான திறன் ஏற்படுத்துகின்ற முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது.      

‘உங்கள் வீடு - உங்கள் கோட்டை’ என்பதே நீதித்துறையின் கருத்தாக உள்ள நிலைமையில், உங்கள் வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு காலை முதல் மாலை வரை நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று வேவு பார்க்கும் காவல்துறை அதிகாரியைப் போலவே பெகாசஸ் இருக்கிறது. உங்கள் வீட்டில் தாங்கள் விரும்புகின்ற எந்தவொரு பொருளையும் உங்களுக்குத் தெரியாமல் பெகாசஸைப் பயன்படுத்துபவர்களால் வைக்க முடியும். அதைத் தடுக்கும் வகையில் நமது அரசியலமைப்பின் கீழ் உள்ள எந்தவொரு சட்டரீதியான கட்டமைப்போ அல்லது சட்டமோ இருக்கவில்லை.    

பெருமளவிற்கு சட்டவிரோதமாக, அரசியலமைப்புக்கு எதிராக இருப்பதாலேயே இந்திய அரசு இது குறித்து மிகவும் மெத்தனமாக உள்ளது என்று என் மனதில் படுகிறது. இதில் உள்ள வேறுபாட்டை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் அதை வெளிநாட்டு இலக்குகளில் பயன்படுத்துகிறார்களா? ஆம். அதற்கு முறையான பலன்கள் கிடைத்துள்ளனவா? ஆம். ஆனால் சந்தேகத்திற்கு இடமில்லாத மக்கள் மீது இலக்கை வைக்க ஆரம்பித்தால் அது வேறுவகையில் மாறுகிறது. ஆக இலக்கைத் தேர்வு செய்வது அதாவது யாரை நீங்கள் குறிவைக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியமானது. உங்களுடைய இலக்கு பொருத்தமற்று இருக்கும் போது, ​​அது மிகப்பெரிய பிரச்சனையாகி விடுகிறது.     

என்எஸ்ஓ குழுமம் அரசாங்கங்களுக்கு மட்டுமே பெகாசஸ் உளவு மென்பொருளை தாங்கள் விற்பதாகக் கூறியுள்ளது. அதை எவ்வாறு சரிபார்ப்பது? அதை உண்மை என்று கருதினால், இந்தியா எப்படி அதை வாங்கியது என்ற கேள்வி எழுகிறது. அதை வாங்குவதற்கான பட்ஜெட் எங்கிருந்து வந்தது? யார் அதை அங்கீகரித்தது? என்ற கேள்விகளும் எழுகின்றன. இதுபோன்ற செயல்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை  இல்லையா? 

இந்திய ஒருங்கிணைந்த நிதியில் இதுபோன்ற பட்ஜெட் பொருட்களுக்கு இடம் இருக்காது. அதற்கான நிதி பொதுவாக கருப்பு நடைமுறை (பிளாக் ஆப்ஸ்) என்று அழைக்கப்படும் உளவுத்துறை நடைமுறைகளுக்கான நிதியிலிருந்தே கிடைக்கிறது. அங்கிருந்து தான் நிதி வருகிறது. சில நேரங்களில் வேறு சில பொருட்களை வாங்குவதன் ஒரு பகுதியாக இதுபோன்ற பொருட்கள் கிடைக்கக் கூடும். மொத்தமாக ஆயுதங்களை வாங்குவதாகச் சொல்லி அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலவசமாக யாருக்கும் தெரியாமல் உங்களால் அந்த மென்பொருளைத் தர முடியுமா என்று கேட்டுப் பெற்றிருக்க முடியும். அவ்வாறு நடந்திருந்தால் அதற்கான டெண்டர் ஆவணம் அல்லது ஏலம் என்று எதுவும் இருக்காது. யாராலும் எப்போதும் அவற்றைப் பார்க்கவே முடியாது.    

அப்படியானால் அரசாங்கம் இதை வாங்கியிருப்பதை எப்படி சரிபார்ப்பது? ஆதாரங்கள் மூலமாக மட்டுமே சரிபார்க்க முடியும். பயன்படுத்தப்பட்ட அனைத்து ஐபி முகவரிகளையும் சிட்டிசன் லேப் வெளியிட்டதற்கான ஏராளமான தொழில்நுட்பச் சான்றுகள் எங்களிடம் உள்ளன. ஓர் இலக்கை நீங்கள் தேர்ந்தெடுக்கும் போது, அடிப்படையில் இவையனைத்தையும் கண்காணிக்கின்ற ஒரு சர்வரில் அதைப் பயன்படுத்த வேண்டும். அவை தடயங்களை, பொதுவாக அரசாங்க நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்ற ஐபி முகவரிகளின் தடயங்களை விட்டுச் செல்லும். அதைத் தேடுபவர்களிடம் - எங்கே அதைக் கண்டுபிடிப்பது என்று தெரிந்தவர்களிடம் ஏராளமான தொழில்நுட்பச் சான்றுகள் இருக்கின்றன. அதை இந்திய அரசு ஒருபோதும் மறுக்கவில்லை என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.   

இதுகுறித்து இந்தியாவில், குறிப்பாக இணையவெளியில் நிலவி வருகின்ற  கருத்து வேறுபாடுகளுக்கான பொருள் என்ன? அரசாங்கத்தை விமர்சிக்கின்ற ஆர்வலர்களும், மற்றவர்களும் இப்போது எவ்வாறு தங்களுக்குள் ஒத்துழைத்து வேலை செய்வது?

இந்த பெகாசஸ் காலத்தில் தனியுரிமை என்பதற்கான பொருள் என்ன? இதுகுறித்து பத்திரிகையாளரின் அருமையான வரையறையை உங்களால் பெற முடியும். சட்டத்தின்படி அரசாங்கம் இதைச் செய்யலாம் அல்லது அதைச் செய்யக்கூடாது என்று உங்களால் வாதிட முடியும். அதை நான் தேவையில்லை என்று சொல்லவில்லை. யதார்த்தத்தை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் என்று நடைமுறைச் செயல்பாட்டாளர் என்ற முறையிலேயே நான் இதைக் கேட்கிறேன்.    

பெகாசஸ் காலத்தில் நீங்கள் உளவுத்துறை முகவரைப் போன்றே சிந்திக்க வேண்டும். அதுதான் அதைப் பற்றி சிந்திப்பதற்கான ஒரே வழி. அதற்கு என்ன அர்த்தம்? இப்போது தனியுரிமை என்பது உங்களைத் தவறாக சித்தரிக்கும் திறன் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அது செயல்பாட்டு பாதுகாப்பு நடைமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்காக நீங்கள் பெற்றுக் கொண்ட ஒன்றாக இருக்கிறது.  

இந்த நடைமுறைகளை நாங்கள் பயன்படுத்துகிறோம் என்பதை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தினாலோ அல்லது மறுத்தாலோ, மக்கள் தங்கள் நடத்தைகளை மாற்றியமைத்துக் கொள்வார்கள் என்று அரசாங்கம் கூறியிருக்கிறது. உண்மையில் பெரும்பாலான மக்கள் தங்கள் நடத்தைகளை மாற்றியமைத்துக் கொள்ளவே செய்கிறார்கள். நாங்கள் செயல்பாட்டு பாதுகாப்பு குறித்த பரிந்துரைகளின் முழுத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறோம். சாதாரண பத்திரிகையாளர்கள் அந்தப் பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை பின்பற்றுவது மிகவும் கடினம். ஆனால் முடிவில் உங்களிடமுள்ள முக்கியமான சொத்து குறித்த கேள்வி உங்களிடம் எழுப்பப்படும் என்பதால் உங்களுக்கு அந்தப் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பது துரதிருஷ்டவசமானதுதான். உங்களுடன் தொடர்பில் இருப்பவர்களின் பட்டியல்தான் அந்தச் சொத்து - இல்லையா? எனவே பத்திரிக்கையாளர் ஒருவர் தகவல் பாதுகாப்பைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால், அவருடன் சட்டவிரோதமாகச் செயல்படுபவர்களுக்கு எதிராகப் போராடுகின்ற ஒருவர் பேசப் போவதே இல்லை.     

இதை நாம் இரண்டு பக்கங்களிலிருந்தும் போராட வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்கவில்லை. அரசியலமைப்பு நெறிமுறையைச் செயல்படுத்துவதற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் அதே நேரத்தில் செயல்பாட்டு பாதுகாப்பையும் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் தொலைபேசி எண்ணைச் சொல்லுங்கள் என்பதே பத்திரிகையாளர்கள் பலரும் என்னை சந்தித்த உடன் கேட்கின்ற முதல் கேள்வியாகும். இந்த காலகட்டத்தில் அவை மிகவும் ஆபத்தான கேள்விகளாகவே இருக்கின்றன! நன்கு அறியப்பட்ட செயல்பாட்டு பாதுகாப்பு செயல்முறைகள் குறித்து மக்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். உங்கள் ஆதாரங்களுடன் இணைந்து வேலை செய்வதே நீங்கள் தொடர்ந்து செயல்படுவதற்கான சிறந்த தேர்வாக இருக்க முடியும். அது உண்மையில் விரும்பத்தக்கதுதானா? நிச்சயமாக இல்லை. ஆனால் எதுவும் வேலை செய்யாதபோது, ​​நீங்கள் செய்யக்கூடிய ஒரே விஷயம் - நடைமுறைப் பாதுகாப்பைக் கடைப்பிடிப்பதுதானே தவிர அரசியலமைப்பு சட்டப்படி வரையறுக்கப்பட்ட பாதுகாப்பை அல்ல.   

குறிவைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பத்திரிகையாளர்களாக இருக்கின்ற அதே வேளையில் அந்த பெகாசஸ் பட்டியலில் பாஜக தலைவர்களையும், அவர்களின் கூட்டாளிகள் பலரையும் நம்மால் காண முடிகிறது. அப்படியென்றால் இந்தக் காலகட்டம் அரசு சார்பு ஊடகங்கள் கவலைப்பட வேண்டிய நேரமா?

அதைப் பற்றி சிந்திக்க மற்றொரு வழி இருக்கிறது. ‘உங்கள் நண்பர்களை நெருக்கமாக வைத்திருங்கள், அதே நேரத்தில் உங்கள் எதிரிகளை இன்னும்  நெருக்கமாக வைத்திருங்கள்’ என்று சொல்வதுண்டு. அது இப்போது ‘உங்கள் எதிரிகளை நெருக்கமாக வைத்திருங்கள், உங்கள் நண்பர்களை இன்னும் நெருக்கமாக வைத்திருங்கள்’ என்று மாறியுள்ளது. உங்கள் நண்பர்கள் விரும்புவதைக் காட்டிலும் அவர்களை அதிகமாகக் கண்காணிப்பதற்கு உங்கள் எதிரிகளைக் காட்டிலும் உங்கள் நண்பர்களையே நீங்கள் மிகவும் நெருக்கமாக வைத்திருக்க வேண்டும்.

பெரும்பாலான அரசாங்கங்கள் இதுபோன்ற உரையாடல்களைப் பற்றி மிகவும் கவலைப்படுகின்றன. வாட்ஸ்ஆப்பில் கண்டறியக்கூடிய வசதி வேண்டும் என்று அரசு ஏன் கேட்கிறது என்பதையே நான் இங்கே குறிப்பிடுகிறேன். அவர்கள் அதை ஏன் கேட்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? நான் அது குறித்து ஒரு புத்தகம் கூட எழுதியுள்ளேன் - யதார்த்தம் குறித்து வித்தியாசமான விளக்கத்தை உருவாக்கியுள்ள அவர்கள் அரசாங்கத்தைப் பற்றி சரியான வழியில் பேச அல்லது சிந்திக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். தற்போதுள்ள அரசாங்கம் அதுகுறித்து மிகவும் கவலை கொண்டதாக இருக்கிறது. இதுபோன்ற இலக்குகளை அவர்கள் ஏன் தேர்வு செய்கிறார்கள் என்பது குறித்து சிந்தித்துப் பார்க்கும் போது, இலக்கு வைக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்களே களத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அதிகம் அறிந்திருப்பவர்களாக இருப்பது தெரிய வருகிறது.   

என்னைப் பொறுத்தவரை எதேச்சதிகாரமாக, சர்வாதிகாரமாகச் செல்கின்ற, களத்தில் இருப்பதைச் செவி மடுத்துக் கேட்காத அரசாங்கம் உண்மையில் யதார்த்தத்தின் பாதையைத் தொலைத்து விடுகின்றது என்றே பொருள்படுவதாக இருக்கிறது. பத்திரிகையாளர்கள் தகவல் ஆதாரங்களில் மிகவும் ஆர்வமாக உள்ளனர் என்பதாலேயே அவர்கள் பெகாசஸ் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். என்ன நடக்கிறது என்பது பற்றிய தகவல் ஆதாரங்கள் அவர்களிடம் இருக்கவில்லை என்ற அணுகுமுறையே உண்மையில் தங்கள் சொந்த மக்களையே அந்தப் பட்டியலில் அவர்கள் காண்பதற்கான காரணமாகிறது. அதன் நோக்கம் தகவல் சேகரிப்பு மற்றும் ‘நாம் கவலைப்பட வேண்டிய அளவிற்கு புதிய போக்கு தோன்றுகிறதா?’ என்பதைக் கண்டறிவதாகவே உள்ளது.    

பட்டியல் வெளியாகி விடும் என்று அரசாங்கம் கற்பனையிலும் எதிர்பார்த்திருக்காது என்றே நான் நினைக்கிறேன். அப்படியானால் அதனுடைய உள்நோக்கம் என்னவாக இருந்திருக்கும்? அது நிச்சயம் துன்புறுத்துவதாக அல்லது மிரட்டுவதாக இருந்திருக்காது.  தகவல் சேகரித்தல் மற்றும் களத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிவதே அதன் நோக்கமாக இருந்திருக்கலாம். நான் அந்த விதத்திலேயே பெகாசஸ் பட்டியல் இருப்பதைக் காண்கிறேன்.     

https://mailchi.mp/thenewsminute.com/not-worried-about-pegasus-give-me-your-bank-account?e=ea3713a5ad#Lead

 


Comments