வங்கதேச திரைப்படத் தயாரிப்பாளர் தன்வீர் மொகம்மெல் உடன் ஓர் உரையாடல் (2019)

 நியூ ஏஜ்

2019 டிசம்பர் 13

நியூ ஏஜ் இதழின் சார்பில் மைனுல் ஹாசன் வங்கதேசத் திரைப்படத் தயாரிப்பாளரும், ஆய்வாளருமான தன்வீர் மொகம்மெலுடன் சமீபத்தில் உரையாடினார். அந்த உரையாடலில் தன்னுடைய குழந்தைப் பருவம், திரைப்படத் தயாரிப்பில் தன்னுடைய பயணம், பெற்ற அனுபவங்கள் மற்றும் பல விஷயங்களைப் பற்றி மொகம்மெல் பேசினார். உரையாடலின் பகுதிகள் பின்வருமாறு:

நீங்கள் வளர்ந்த விதம் பற்றி கூறுங்களேன்... உங்களுடைய அப்பா மாஜிஸ்திரேட், அம்மா கல்லூரி ஆசிரியர். அவர்கள் இருவரும் கலாச்சாரரீதியான எண்ணம் கொண்டவர்களா? வளரும் பருவத்தில் உங்களுடைய பெரும்பாலான காலத்தை நீங்கள் எங்கே கழித்தீர்கள்? உங்களுடன் பிறந்தவர்கள் எத்தனை பேர்?

என் தந்தை ஏஎஃப்எம்.மொகம்மெல் பிரிட்டிஷ் ஆட்சியில் மாஜிஸ்திரேட்டாக இருந்தவர். என் அம்மா பேகம் சாயிதா மொகம்மெல் கல்லூரி ஆசிரியை. அவர்கள் பெரும்பாலும் கொல்கத்தா பார்க் சர்க்கஸ் பகுதியில் வசித்து வந்தனர். என் அம்மா பேகம் ரொக்கேயாவின் மாணவி. சரியாகச் சொல்வதானால்  பேகம் ரொக்கயா என் தாய்வழி பாட்டியின் நெருங்கிய நண்பர். பார்க் சர்க்கஸில் இருந்த என்னுடைய பாட்டியின் வீட்டுக்கு அவர் வருவார். அந்தக் காலத்து வங்காள முஸ்லீம்களின் சமூகரீதியான பின்தங்கிய தன்மையைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது என்னுடைய பெற்றோர்கள் இருவரும் வழக்கத்திற்கு மாறாக தங்களுடைய காலத்தையும் மீறி நவீனமான, பண்பட்ட நபர்களாகவே இருந்ததாகவே நான் அனுமானிக்கிறேன். என்னைப் பொறுத்தவரை குல்னா நகரத்தில் ‘மொகம்மெல் மஞ்சில்’ என்ற எங்கள் குடும்பத்து வீட்டிலே பிறந்து வளர்ந்தவன். நாங்கள் மொத்தம் எட்டு சகோதர சகோதரிகள்.

உங்களுடைய குழந்தைப் பருவத்தில் திரைப்படங்களைப் பார்க்கும் வழக்கம் இருந்ததா?

என்னுடைய அப்பா ஹாலிவுட் திரைப்படங்களைப் பார்ப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். என் அம்மாவுக்கு வங்காளப் படங்கள் பிடிக்கும். உத்தம்-சுசித்ரா இணை சேர்ந்து நடித்த சமூகத் திரைப்படங்களே அவருக்கு மிகவும் பிடிக்கும். குழந்தையாக இருந்த போது அவர்களுடன் திரைப்படங்களுக்குச் சென்றிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை அம்மாவுடன் பார்த்த வங்காளப் படங்கள் மெதுவாகவும், மிகவும் செயற்கையாகவும் இருந்ததாக எனக்குத் தோன்றின. சிறுவயதில் என்னுடைய அப்பா அழைத்துச் செல்லும் ஆங்கில மொழித் திரைப்படங்களையே நான் மிகவும் விரும்பினேன்.

உங்களுடைய பள்ளி வாழ்க்கையைப் பற்றி சொல்லுங்களேன். பள்ளியில் படித்த போது மேடை நாடகம், கதை எழுதுதல், பிற கலாச்சார நடவடிக்கைகளில் பங்கேற்கும் வழக்கம் உங்களுக்கு இருந்ததா? கல்லூரிப் படிப்பை நீங்கள் எங்கே பயின்றீர்கள்?

எனது பள்ளி நாட்களில் நான் விளையாட்டுகளில் குறிப்பாக கிரிக்கெட்டில் அதிக ஈடுபாடு கொண்டவனாக இருந்து வந்தேன். பள்ளியில் படிக்கும் போதே முதலாம் பிரிவு கிரிக்கெட் லீக்கில் விளையாடி இருக்கிறேன். சாரணர் இயக்கத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவனாக இருந்தேன். பள்ளி நாட்களில் அறிவிப்பு பலகைகளில் வெளியாகும் இதழில் எனக்கிருந்த ஈடுபாடு மட்டுமே எனது நினைவில் உள்ளது. அந்த இதழின் ஆசிரியராக நான் இருக்கவும் நேர்ந்தது! 

டாக்கா கல்லூரியில் படித்த பின்னர் நான் டாக்கா பல்கலைக்கழக ஆங்கிலத் துறையில் பிஏ (ஹானர்ஸ்), முதுகலைப் பட்டங்களைப் பெற்றேன்.

நீங்கள் பத்திரிகையாளராகவும் இருந்திருக்கிறீர்கள். பத்திரிகையாளராக வேலை செய்ய ஏன் முடிவு செய்தீர்கள்?

என்னுடைய இளமைக்காலத்தில் இடதுசாரி ஆர்வலராக இருந்தேன். கம்யூனிஸ்ட் கட்சியின் ஏகோட்டா என்ற வார இதழில் பத்திரிகையாளராகப் பணியாற்றினேன். என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய வேலை பத்திரிகையாளர் என்பதைக் காட்டிலும் கட்சி செயல்பாடுகள் குறித்தே இருந்து வந்தது. அந்த வேலையை நான் மிகவும் ரசித்தே செய்து வந்தேன்.   

திரைப்படத் தயாரிப்பாளராவது என்று எப்போது முடிவு செய்தீர்கள்? சினிமா துறையில் ஈடுபடுமாறு உங்கள் குடும்பத்தில் இருந்து யாராவது தூண்டினார்களா? சினிமா உலகிற்குள்  எவ்வாறு நுழைந்தீர்கள்?  

பல்கலைக்கழக நாட்களில் திரைப்படச் சங்க இயக்கத்தில் ஈடுபட்டு வந்தேன். சில நண்பர்கள் ஒன்றிணைந்து டாக்கா பல்கலைக்கழக சினி வட்டம் என்ற பெயரில் திரைப்படக் கழகம் ஒன்றை டாக்கா பல்கலைக்கழகத்தில் உருவாக்கினோம். தரமான திரைப்படங்களைப் பார்ப்பது, கருத்தரங்குகள், பட்டறைகளை ஏற்பாடு செய்வது, சினிமா பற்றி எழுதுவது போன்ற செயல்பாடுகளை வழக்கமாகக் கொண்டிருந்தோம். ஒருகட்டத்தில் மற்றவர்களுக்குத் திரைப்படங்களைத் திரையிட்டு காட்டுவதற்குப் பதிலாக திரைப்படத்தை நானே தயாரிப்பது மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். எனவே நிர்மலேந்து கூன் எழுதிய அரசியல் கவிதையை அடிப்படையாகக் கொண்டு ‘ஹூலியா’ என்ற தலைப்பில் ஒரு குறும்படத்தை எனது முதல் திரைப்படமாகத் தயாரித்தேன்.   

திரைப்பட உலகில் சேருமாறு என்னுடைய குடும்பத்தைச் சார்ந்த யாரும் என்னைத் தூண்டவில்லை என்ற போதிலும் என்னுடைய முடிவை அவர்கள் யாரும் எதிர்க்கவுமில்லை. ஆரம்பத்தில் ‘ஹூலியா’ படத்தை உருவாக்க என் அம்மா கொஞ்சம் பணம் - பத்தாயிரம் ரூபாய் எனக்கு கொடுத்தார். அதுதான் படப்பிடிப்பைத் துவங்குவதற்காக எனக்குக் கிடைத்த முதல் பணம்.  

ஆவணப்படங்கள் மற்றும் திரைப்படங்கள் இரண்டையும் நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள். அவற்றில் எந்த வகையிலான படம் உங்களை மிகவும் சௌகரியமாக உணர வைத்தது?     

இரண்டு வகைப் படங்களுமே சௌகரியமாக இருப்பதாகவே நான் உணர்கிறேன். எடுத்துக் கொண்ட பொருளின் மையத்தை ஆய்வு மற்றும் புறநிலை அடிப்படையில் அடைய வேண்டும் என்ற ஆவல் என்னிடம் உண்டு. ‘லாலோன்,  ‘ஜிபோந்துலி’ போன்ற எனது புனைகதைத் திரைப்படங்கள் ஆவணப்படத் தோற்றத்துடன் இருக்கின்றன என்று மக்கள் சொல்வதற்கு அதுவே காரணமாக இருக்கலாம். அதேபோன்று சில சமயங்களில் என்னுடைய சில ஆவணப்படங்கள் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வை பார்வையாளர்களுக்கு அளிக்கின்றன என்ற கருத்துகளையும் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை ஒரு பாராட்டாகவே நான் ஏற்றுக் கொள்கிறேன்.   

பொதுவாக ஒரு புனைகதைக்குப் பிறகு ஆவணப்படம் ஒன்றைத் தயாரிக்க நான் முயற்சி செய்கிறேன். அது ஏன் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். என்னுடைய புனைகதைத் திரைப்படங்கள் மிகவும் யதார்த்தமாக இருக்கின்றன என்று மக்கள் சொல்லி வந்தாலும், ஒரு கதையை எழுதி, அதற்கான கதைக்களத்தை உருவாக்கி, தேவையான பொருட்களை, ஆடைகளைச் சேகரித்து, அதற்குப் பிறகு சில நடிகர்கள் அந்த கதாபாத்திரங்களில் நடிக்கின்ற போது அந்த திரைப்படத்தில் செயற்கையான சில கூறுகள் ஏதேனும் இருக்கவே செய்யும். மேலும் ஒன்றன்பின் ஒன்றாக புனைகதைகளை உருவாக்குவதன் மூலம் மேம்போக்கான, யதார்த்தமற்ற கலை உலகிற்குள் ஒருவர் தொலைந்து போவதும் நிகழக்கூடும்.

ஆனால் திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் ஆவணப்படத்தை எடுக்கும்போது​​சமகாலத்து வங்கதேசத்தில் இருக்கின்ற வறுமை, சேரிகள், காவல்துறை மற்றும் ஊழல் அதிகாரிகள், போக்குவரத்து நெரிசல் போன்ற நமது அன்றாட இருப்பிற்கு, அன்றாட வங்கதேசத்தின் மிகவும் சாதாரண உண்மை நிலைக்கு நான் மீண்டும் திரும்பி வர வேண்டியிருக்கிறது. அவ்வாறு திரும்புகின்ற வேளையில் மீண்டும் வேரூன்றி நிற்க முடிகிறது. ஒரு கலைஞர் தனக்கான காலம், இடத்தில் முக்கியமாக தன்னுடைய மண்ணில் வேரூன்றி நிற்பது மிகவும் முக்கியம் என்றே நான் நம்புகின்றேன். அவ்வாறு நிற்கவில்லையெனில் அவரது படைப்பில் யதார்த்தம் என்பது நிச்சயம் தொலைந்து போகும்.    

1971ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்க ஆண்டாக இருப்பது குறித்து பேசலாம். அந்த நேரத்தில் நீங்கள் எங்கே இருந்தீர்கள்? உங்கள் நினைவிலிருந்து சொல்லுங்கள். விடுதலைப் போரால் ஈர்க்கப்பட்டு பல படங்களை நீங்கள் இயக்கியுள்ளீர்கள்.

1971இல் எனது பள்ளி இறுதி ஆண்டைக் கடந்திருந்தேன். வாலிபனாக இருந்த போது டாக்கா, குல்னா என்று இரண்டு இடங்களுக்கிடையில் என்னுடைய நேரத்தைப் பிரித்து வைத்துக் கொண்டிருந்தேன். அந்தக் காலகட்டத்தில் எனக்கு ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் வயது கூடுதலாக இருந்திருந்தால் நிச்சயமாக நான் முக்திபாஹினியில் சேர்ந்திருப்பேன். சுற்றி நடந்து கொண்டிருக்கின்ற பயங்கரமான விஷயங்களை உணர்ந்து கொள்ளும்  அளவிற்கே நான் வளர்ந்து வந்தேன். உணர்வுகள் மிகவும் கூர்மையாகவும் துடிப்பாகவும் இருக்கின்ற வாலிப காலத்தில் நான் இனப்படுகொலைகள், மிகப் பெரிய அளவிலே நடந்த கொலைகள், பெண்கள் மீதான சித்திரவதைகள், ஹிந்து சிறுபான்மையினர் மீதான கொடுமைகள், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ரசாகார்கள்-அல் பதர்கள் போன்ற உள்ளூரில் ராணுவத்திற்கு உடந்தையாக இருந்தவர்களால் இழைக்கப்பட்ட மிகவும் மோசமான கொடுமைகள், அகதிகளுக்கு ஏற்பட்ட மனிதாபிமானமற்ற துயரங்கள், அதே நேரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தைரியம், நெகிழ்ச்சி, தியாகங்கள் என்று அனைத்தையும் கண்டேன். அவையனைத்தும் என் மீது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. இன்றைக்கும் கூட ஒரு திரைப்படத்தை உருவாக்க அல்லது கதையை  எழுத  என்னை நான் தயார்படுத்திக் கொள்ளும்போதெல்லாம், 1971இல் நடந்த சில நிகழ்வுகள் சில நேரங்களில் நனவாக, பெரும்பாலும் என்னையும் அறியாமலேயே என் மனதில் ஊர்ந்து செல்கின்றன. எனது கடைசிப் படமான ‘அமைதியாகப் பாயும் ருப்சா நதி’ கூட விடுதலைப் போருடன் நெருங்கிய தொடர்புடையதாகவே இருந்தது. எதிர்காலத்திலும் என்னுடைய படைப்புகளில் அது மீண்டும் மீண்டும் மையக்கருத்தாக வரும் என்ற உணர்வு எனக்குள் ஏராளமாக இருக்கிறது.

உங்களுடைய ஏதாவதொரு படத்தைப் பற்றி நீங்கள் பகிர விரும்புகின்ற  சுவாரஸ்யமான நினைவுகள் ஏதேனும் உங்களிடம் இருக்கின்றனவா?

ஒவ்வொரு படம் குறித்துமே சில நீண்ட நினைவுகள் என்னுடைய மனதில் பதிந்திருப்பதாகவே நினைக்கிறேன். அதில் ஒன்றை மட்டும் சொல்கிறேன். அது ‘அமைதியாகப் பாயும் சித்ரா நதி’ (சித்ரா நொதிர் பாரே) படப்பிடிப்பின் போது ஏற்பட்டது. அந்தப் படம் 1947ஆம் ஆண்டு வங்காளத்தைப் பிரித்ததன் பின்னணியுடன் எடுக்கப்பட்டது. அந்தப் படத்தில் சிறுநகரம் ஒன்றைச் சேர்ந்த ஹிந்து வழக்கறிஞர் ஒருவர் கிழக்கு பாகிஸ்தானை விட்டு இந்தியாவுக்கு குடிபெயர மறுத்து விடுகிறார். நான் அப்போது அந்த வழக்கறிஞரின் வசிப்பிடமாக படப்பிடிப்புக்குத் தேவையான பொருத்தமான இடத்தை தேடிக் கொண்டிருந்தேன். இறுதியாக சித்ரா ஆற்றின் கரையில் உள்ள நராயில் என்ற நகரில் அந்த வீட்டை நான் கண்டுபிடித்தேன்.

அப்போது அந்த வீட்டில் முஸ்லீம் குடும்பம் வசித்து வந்தது. சில நாட்கள் படப்பிடிப்பிற்குப் பிறகு உள்ளூர் மக்களிடம் அந்த வீட்டின் உரிமையாளர் யார் என்று கேட்டேன். அவர்கள் அந்த வீடு ஹிந்து வழக்கறிஞர் ஒருவருடையது என்றார்கள். அந்த வழக்கறிஞர் எப்படிப்பட்டவர் என்று அவர்களிடம் விசாரித்தேன். அவர்கள் சொன்னது எனக்கு மிகவும் விசித்திரமாக இருந்தது. பிரிவினைக்குப் பிறகு அனைத்து ஹிந்துக்களும் வெளியேறி விட்ட போதிலும்  அமைதியாக இருந்த அந்த வழக்கறிஞர் பிடிவாதமாக நாட்டை விட்டு வெளியேற மறுத்து விட்டார் என்றும் அதற்குப் பின்னர் அவர் அங்கேயே இறந்து விட்டதாகவும் கூறினர். அதுவே என்னுடைய படத்தின் கதையாகவும் இருந்தது! அவர்கள் கூறியதைக் கேட்ட போது என் உடலில் வித்தியாசமான நடுக்கம் உருவானது. சரியான வீட்டைக் கண்டறிவதற்காக ஏறக்குறைய நாடு முழுவதும் தேடியலைந்த எனக்கு என்னுடைய கதாநாயகனைப் போன்றதொரு பாத்திரம் உண்மையாக வாழ்ந்த வீடே இறுதியில் நான் தற்செயலாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட வீடாக அமைந்தது! என்னைப் பொறுத்தவரை அது மிகவும் உணர்வுப்பூர்வமான அனுபவமாகும்.

உங்கள் படங்களை நீங்களே எழுதி, இயக்கி வருகிறீர்கள். உங்களால் எழுதப்படாத, மற்றவர்களின் கதையை நீங்கள் எப்போதாவது இயக்கியிருக்கிறீர்களா?

என்னுடைய படங்களை அதாவது, கதை மற்றும் வசனம் ஆகியவற்றை நானே எப்போதும் எழுதி வருகிறேன். மதுமதி என்று பெயரிடப்பட்ட நதி, சித்ரா நதி அமைதியாகப் பாய்கிறது, லாலோன், தி டிரம்மர் (ஜிபோந்துலி) ஆகிய படங்களுக்கான கதைகளை நானே எழுதியுள்ளேன். வேர்கள் இல்லாத ஒரு மரம் (லாசல்லு) என்ற படம் மட்டுமே சையத் வலியுல்லாவின் நன்கு அறியப்பட்ட நாவலில் இருந்து எடுக்கப்பட்டது. தவிர எனது திரைப்படமான ‘சகோதரி’ (ரபேயா) கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோஃபோக்கிளஸ் எழுதிய ‘ஆன்டிகோன்’ நாடகத்தைக் கட்டவிழ்த்து எழுதப்பட்டதாகும்.

இப்போது ஏதேனும் படத்திற்கான வேலையில் இருக்கிறீர்களா? உங்கள் படத்திற்கான நடிகர்களைத் தேர்ந்தெடுக்கும்போது எதை நினைவில் வைத்துக் கொள்கிறீர்கள்?

நான் இப்போது ‘அமைதியாகப் பாயும் ருப்சா நதி’ (ருப்சா நொதிர் பாங்கே) என்ற படத்தில் பணிபுரிந்து வருகிறேன். அது 1971இல் ரசாகார்களால் கொல்லப்பட்ட அர்ப்பணிப்பு உணர்வுள்ள இடதுசாரித் தலைவரின் வாழ்க்கை,  போராட்டங்கள் பற்றிய படம். ஒரு வகையில் கிரேக்க சோகக் கதாபாத்திரம்! படத்திற்கான படப்பிடிப்பு, டப்பிங்கை முடித்து விட்டோம். படம் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்னைப் பொறுத்தவரை உடலமைப்பும், நடிகரின் சரியான தோற்றமும் நடிப்பதற்கு மிகவும் முக்கியம். அந்தக் கதாபாத்திரம் உரையாடல்களுடன் கூடிய முக்கிய கதாபாத்திரமாக இருந்தால், நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக அவர்களுடைய பேச்சுத் திறனையும் நாங்கள் கவனித்துப் பார்க்கிறோம்.

திரைப்படத் தயாரிப்பைத் தவிர எழுத்தாளராகவும் இருக்கிறீர்கள். திரைப்படத் தயாரிப்பாளர், எழுத்தாளர் இதில் எந்த அடையாளத்தை நீங்கள் அதிகம் விரும்புகிறீர்கள்?

இரண்டையும் நான் விரும்புவதாகவே நினைக்கிறேன். திரைப்படத் தயாரிப்பாளராக எப்போதும்  நான் பிஸியாக இருக்க வேண்டியுள்ளது. எப்போதும் கடினமான பணிகளுக்கிடையே இருந்து வருகிறேன் என்றாலும் அவ்வப்போது இடையில் கவிதை, சிறுகதை, நாவல் எழுதுவதற்கான நேரத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்கின்றேன். பிரிவினை குறித்த என்னுடைய மூன்று நாவல்களின் முத்தொகுப்பு அடுத்த மாதம் வெளியிடப்பட இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை கேமராவிற்கும் பேனாவிற்கும் இடையில் எனது நேரத்தைப் பிரித்துக் கொள்வது ஓரளவிற்கு பருவகாலத்தைச் சார்ந்தே இருக்கிறது. குளிர் மற்றும் வறண்ட காலங்களில் பெரும்பாலும் படப்பிடிப்புக்காக நான் எனது திரைப்படக் குழுவுடன் வெளியிலேயே இருப்பேன். ஆனால் மழைக்காலம் வந்து மழை தொடங்கும் போது எழுத்துப்பணிக்காக வீட்டிற்குத் திரும்பி விடுவேன். குறிப்பிட்ட சில படைப்புகள் சவால்களை அளிப்பதாக இருப்பதால் என்னுடைய  இரண்டு விதப் படைப்புகளையுமே நான் ரசித்து வருகிறேன்.

திரைப்படத் தயாரிப்பாளராகி இருக்காவிட்டால் என்னவாக இருந்திருப்பீர்கள்?

முழுநேர எழுத்தாளராக இருந்திருப்பேன் என்றே நினைக்கிறேன்.

ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்?

உண்மையாகச் சொல்வதானால் எனக்கு ஓய்வு நேரமே கிடைப்பதில்லை. படப்பிடிப்பு, டப்பிங், இசை கோர்ப்பு வேலை, அடுத்த படத்திற்கான இடம் குறித்த ஆய்வு அல்லது தேடுதல் இவையனைத்தும் என்னை எப்போதும் பிஸியாகவே வைத்திருக்கின்றன. திரைப்பட நிறுவனம் ஒன்றையும் நான் நடத்தி வருகிறேன். அது ஒரு சிறிய நிறுவனம் என்றாலும், அதை நடத்துவதற்கு சிறிதளவிலாவது எனது நேரத்தை நான் செலவிட வேண்டியுள்ளது. எனவே என்னுடைய ஓய்வு நேரம் மிகவும் குறைவாகவே உள்ளது. எனக்கென்று நேரம் கிடைக்கும் போதெல்லாம், இசையைக் கேட்பது, புத்தகங்களைப் படிப்பது அல்லது தாலேஸ்வரி ஆற்றில் எனது படகில் பயணம் மேற்கொள்வது என்று அந்த நேரத்தைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்கிறேன்.

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிக் கூறுங்கள். நீங்கள் எப்போது திருமணம் செய்தீர்கள்? உங்கள் மனைவியின் பெயர் என்ன, உங்களுக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள்?

இந்தக் கேள்வியை நீங்கள் தவிர்த்து விடலாம்! இதுவரையிலும் நான் திருமணம் செய்து கொள்ளவே இல்லை, திருமணம் செய்து கொள்ளாத உறுதியான பிரம்மச்சாரியாகவே இன்னும் இருந்து வருகிறேன். 

இளம் திரைப்படத் தயாரிப்பாளர்கள் அல்லது திரைப்படத் தயாரிப்பாளராக விரும்புகின்றவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் ஆலோசனை ஏதேனும் இருக்கிறதா?

முதலில் தொழில்திறனைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆலோசனையாகும். திரைப்படத் தயாரிப்பு உயர் தொழில்நுட்பக் கலையாக இருப்பதால், தொழில்நுட்பத்தை முதலில் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும், அப்போதுதான் அவர்களால் அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எந்தக் கலையையும் உருவாக்க முடியும். அது ஒன்றும் எளிதான காரியம் அல்ல. ஆனாலும் இந்த தொழிலில் குறுக்குவழி என்று எதுவுமில்லை. மிகவும் கஷ்டப்பட்டே நீங்கள் தொழில்திறனைக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். தொழில்முறை திரைப்பட நிறுவனத்தில் சேர்ந்து முழுநேரப் படிப்பில் ஐந்து அல்லது மூன்று வருடங்கள் திரைப்படத் தயாரிப்பை அவர்கள் கற்றுக் கொள்ளலாம். இல்லாவிடில் மூத்த திரைப்படத் தயாரிப்பாளரிடம் உதவியாளராகி, சில ஆண்டுகள் அவருடன் பணிபுரிந்து படத் தயாரிப்பு குறித்த தொழில்திறனைக் கற்றுக் கொள்ள முடியும்.  

விருதுகளைப் பற்றி குறைவாகவே கவலைப்படுங்கள். உங்களுக்கு வழங்கப்படுகின்ற விருது உங்கள் தற்பெருமையைத் தற்காலிகமாகத் திருப்திப்படுத்தி தரலாம். ஏதேனும் ஒரு கலைப்படைப்பை உருவாக்கி வெற்றி பெற்றீர்கள் என்றால். காலத்தின் சோதனையில் வெற்றி பெற்று அந்தப் படம் தன்னைத் தக்க வைத்துக் கொள்ளும். உங்கள் திரைப்படத்திற்கான நீண்ட ஆயுளுக்கு உத்தரவாதத்தை எந்தவொரு விருதும் அளிக்கப் போவதில்லை. விருதுகள் ஒருபோதும் அவ்வாறு செய்திருக்கவில்லை.

இதைத் தவிர விலையுயர்ந்த கேமராக்கள், கருவிகளுக்குப் பின்னால் ஓடுவதற்குப் பதிலாக சொந்த நாடு,  கலாச்சாரம் பற்றி மேலும் அறிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். கலை, சினிமா ஆகியவை மனிதகுலத்தை வெவ்வேறு நிலைகளில் சித்தரிப்பதைத் தவிர வேறாக இல்லை என்பதால் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வது மிகமிக முக்கியமானது. நிஜ வாழ்க்கை அனுபவங்கள் என்றாலும் முதலில் புத்தகங்கள் மூலம், ஆய்வுகள் மூலம் மனித நிலையைப் பற்றி நன்கு அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

வங்கதேசத் திரைப்படத் துறையின் தற்போதைய நிலையை எவ்வாறு வரையறுப்பீர்கள்?

மோசமான நிலைமைதான் இருக்கிறது. வங்கதேச திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தை மையப்படுத்தி இருந்து வருகின்ற பிரதான வணிக சினிமா  சிந்தனைகள் எதுவுமற்றுப் போய் விட்டது. மேலும் அது தற்போதைய உலக சினிமாவை விட முப்பது ஆண்டுகள் பின்தங்கியதாக - கருப்பொருள் ரீதியாக, தொழில்திறன் ரீதியாக துணைக்கண்டத்தின் திரைப்படத் துறையின் தரத்திலிருந்து பின்தங்கியதாகவே இருக்கிறது, நாடு முழுவதிலும் சினிமா அரங்குகள் மூடப்பட்டு வருகின்றன. வணிகத் திரைப்படங்களுக்கான பழைய பாரம்பரியம் தன்னுடைய இயல்பான அழிவை நோக்கிச் செல்கிறது என்றே நினைக்கிறேன்.   

வங்கதேசத்தில் இருக்கின்ற மாற்றுத் திரைப்படச் சூழலில் சில இளைஞர்களிடையே நல்ல அர்த்தமுள்ள முயற்சிகள் சிலவற்றைக் காண முடிகிறது. அத்தகைய முயற்சிகள் மட்டுமே சமகாலத்து வங்கதேச சினிமாவின் இருண்ட சூழலில் நம்பிக்கைக்கான ஒரே கலங்கரை விளக்கமாக இருந்து வருகின்றன. 

உங்கள் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி….

எங்கள் தற்போதைய படத்தை, முழு நீள புனைகதையான ‘அமைதியாகப் பாயும் ருப்சா நதி’ படத்தை முடிப்பதுதான் எனது உடனடித் திட்டமாக இருக்கிறது. அதை முடித்து 2020 மார்ச் மாதம் வெளியிட வேண்டும். வங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வாழ்க்கை குறித்து சிறிய ஆவணப்படத்தை எடுத்து தருமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.  இப்போது அது குறித்து ஆய்வுகளை நான் மேற்கொண்டிருக்கிறேன். அதுவே எனது அடுத்த ஆவணப்படமாக இருக்கும்.  

பல மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றிருக்கிறீர்கள். அதை எவ்வாறு உணருகிறீர்கள்?

சிறு வயதில் விருதுகளைப் பெறுவது குறித்து நான் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பேன். ஆனால் இப்போது உண்மையைச் சொல்வதானால் விருதுகள் பற்றி எனக்கு சிறிதும் கவலையில்லை. எந்தவொரு போட்டி விழாக்களுக்கும் எனது படங்களை அனுப்பி வைப்பதைக்கூட நான் நிறுத்தி விட்டேன். அதுபோன்ற போட்டிகளில் இனிமேலும் கலந்து கொள்ளும் விருப்பம் என்னிடம் இல்லை. என் படங்களை நிலைநிறுத்துவதற்கு எந்தவொரு விருதும் உதவிடாது என்பது எனக்குத் தெரியும். உண்மையான கலையை உருவாக்க முடிந்தால் மட்டுமே என்னுடைய படங்கள் நிலைத்திருக்கும். எனவே நானும் என்னுடைய படக் குழுவினரும் அர்த்தமுள்ள கலையை திரையில் உருவாக்குவதற்கான தீவிரமான முயற்சிகளைச் செய்து வருகிறோம். அதைத் தவிர மற்றவையனைத்தும் எனக்குத் தேவையற்றவையே ஆகும். குருசேத்ரா போரின் போது ‘உங்கள் கடமையைச் செய்யுங்கள், கிடைக்கப் போகின்ற பலன்களுக்காக கவலைப்படாதீர்கள், ஏனென்றால் உங்களால் அவற்றை அனுபவிக்க முடியாது’ என்று அர்ஜுனனிடம் பகவான் கிருஷ்ணர் கூறியதை உறுதியாக நம்புகிறேன்.   

https://www.newagebd.net/article/93439/in-conversation-with-tanvir-mokammel


Comments