கோவிட்-19 தடுப்பூசி பயனாளிகளுக்குத் தெரியாமலேயே தனித்துவ சுகாதார அடையாள எண்கள் வழங்கப்பட்டுள்ளன

 சஹத் ரானா

கேரவான் இதழ்

இருபத்தி ஒன்பது வயதான சுவேதா சுந்தர் 2021 மே ஆரம்பத்தில் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் மூவருடன் தெற்கு தில்லியில் உள்ள அரசுப் பள்ளிக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் தவணையைப் பெற்றுக் கொள்வதற்காகச் சென்றிருந்தார். தடுப்பூசி பெற்றுக் கொள்ளும் பயனாளிகள் தங்களுடைய அடையாளங்களுக்காக ஆறு வகையான அரசு ஆவணங்களை அளிக்கலாம் என்று அரசு வழங்கிய வழிகாட்டுதல்கள் இருந்து வருகின்றது. ஆனாலும் அந்த  தடுப்பூசி மையத்தில் இருந்த ஊழியர்கள் அவர்களுடைய அடையாளங்களைச் சரிபார்ப்பதற்காக ஆதார் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அந்த நேரத்தில் அவர்கள்  சொன்னபடியே தான் செய்ததாகக் கூறிய சுவேதா சுந்தர் ஆதார் தகவல்களைக் கேட்பது பற்றி அப்போது தான் அதிகம் யோசிக்கவில்லை என்றார்.

நொய்டாவில் உள்ள அரசு சுகாதார மையம் ஒன்றில் 2021 ஆகஸ்ட் 3 அன்று கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக மக்கள் வரிசையில் காத்திருந்த போது பெண் ஒருவர் தனது மொபைல் போனில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவலை அதிகாரியிடம் காட்டுகிறார்

வீடு திரும்பிய அவர் ​​தன்னுடைய தடுப்பூசி சான்றிதழில் பயனாளி குறித்த எண்ணுக்கு மேலே இன்னுமொரு தனித்துவ சுகாதார அடையாள (UHID) எண் அச்சிடப்பட்டிருப்பதைப் பார்த்தார். முதலில் அந்த அடையாள எண் என்னவென்றே அவருக்குத் தெரியவில்லை. ஆதார் தகவல்களை வழங்கி தடுப்பூசி போட்டுக் கொண்ட அவரது குடும்பத்தினர் மூவருக்கும் அதுபோன்று சுகாதார அடையாள எண்கள் வழங்கப்பட்டிருந்தன. அந்த சுகாதார அடையாள எண் பற்றியோ அல்லது அவ்வாறான ஒன்றை தங்களுக்கு வழங்கியிருப்பது பற்றியோ அங்கிருந்தவர்கள் எதுவுமே சொல்லவில்லை என்று கூறிய சுவேதா ‘எங்களுக்கிடையே அந்த எண் குறித்து எந்தவொரு உரையாடலும் இருக்கவில்லை. அந்த அடையாள எண் வழங்குவதற்கான ஒப்புதலைக் கேட்கும் செயல்முறை எதுவும் அங்கே இல்லை. ஒருவேளை அப்படியே என்னிடம் ஒப்புதல் கேட்கப்பட்டிருந்தாலும் சுகாதார அடையாள எண் என்றால் என்னவென்றே தெரியாத போது அதற்கு எப்படி என்னால் ஒப்புதல் வழங்கியிருக்க முடியும்?’ என்ற கேள்வியை எழுப்பினார். 

சுவேதாவும், அவரது குடும்பத்தினரும் தங்களுடைய தடுப்பூசி சான்றிதழ்களில் பார்த்த அந்த தனித்துவ சுகாதார அடையாள எண்ணானது தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தின் (NDHM) கீழ் உருவாக்கப்பட்ட தனித்துவ அடையாளக் குறியீடாகும். சிறந்த சுகாதார நலன்களை வழங்குவதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துகின்ற குறிக்கோளுடன் 2020 ஆகஸ்டில் அரசாங்கம் அந்தப் பணியைத் துவங்கியிருந்தது. தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம் உள்ளிட்ட பல்வேறு மத்திய சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்ற அரசு அமைப்பான தேசிய சுகாதார ஆணையம் தன்னுடைய இணையதளத்தில் அந்தப் பணி குறித்து ‘நாட்டின் ஒருங்கிணைந்த டிஜிட்டல் சுகாதார உள்கட்டமைப்பிற்குத் தேவையான முக்கிய ஆதாரத்தைப் பலப்படுத்திக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது’ என்று விவரிக்கப்பட்டுள்ளது.  

தனிப்பட்டவர்களின் சுகாதாரப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவது, இணையவெளி மருந்தகங்கள், தொலை மருத்துவம் வழங்குநர்களின் சேவைகள் உள்ளிட்ட சுகாதார சேவைகளை அவர்களுக்கு கிடைக்கச் செய்வது போன்ற டிஜிட்டல் சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பின் பல கூறுகளுடன் தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து பயனாளிகளையும் இணைத்து வைக்க இந்த தனித்துவ சுகாதார அடையாள எண் பயன்படும் என நம்பப்படுகின்றது.

இந்த தனித்துவ சுகாதார அடையாள எண்கள் பயனாளிகளின் ஆய்வக அறிக்கைகள், மருந்துகள், மருத்துவமனை விடுவிப்பு சுருக்க அறிக்கைகள், பிற தனிப்பட்ட சுகாதாரத் தகவல்கள் என்று தங்களின்  சுகாதாரம் குறித்த பதிவுகள் அனைத்தையும் பயனாளிகள் பெற்றுக் கொள்வவதற்கு உதவும். தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தின் கீழ் இவ்வாறு பகிர்ந்து கொள்ளப்படுகின்ற மிகவும் முக்கியமான சுகாதாரத் தரவுகளைப் பாதுகாத்து வைப்பதற்கென்று தேசிய சுகாதார ஆணையத்தின் உத்தரவாதங்கள் இருந்தபோதிலும், இந்தியாவுக்கென்று இன்னும் தரவுப் பாதுகாப்புச் சட்டம் எதுவும் இல்லாத நிலையில் இத்தகைய தரவுகள் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது பற்றி பலத்த சந்தேகங்கள் இருந்து வருகின்றன. தனித்துவ சுகாதார அடையாள எண்ணை  உருவாக்கி அதன் மூலம் தேர்வு செய்து உள்ளே செல்வது, தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்திலிருந்து தனிப்பட்ட தரவுகள் அனைத்தையும் நீக்கி விடக் கோரி அதிலிருந்து வெளியேறுவது போன்ற செயல்பாடுகள் அனைத்துமே பயனாளிகளின் விருப்பத்திற்குட்பட்டவையாகவே இருக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இருப்பினும் சுவேதா சுந்தர் போன்ற பலருக்கும் ஏற்கெனவே அவர்களுடைய அனுமதியைப் பெறாமலேயே தனித்துவ சுகாதார அடையாள எண்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.  

செப்டம்பர் 27 அன்று பிரதமர் நரேந்திர மோடி தேசிய அளவில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் என்றழைக்கப்படும் தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தை காணொலி கூட்டம் மூலமாக அறிவித்தார். அதற்கு முன்பாக தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம் சண்டிகர், லடாக், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவு ஆகிய ஆறு யூனியன் பிரதேசங்களில் முன்னோடித் திட்டம் என்ற அளவிலே செயல்படுத்தப்பட்டிருந்தது. சுகாதார ஊழியர்களை தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு சண்டிகர் நிர்வாகம் கட்டாயப்படுத்தியது பற்றி 2020 செப்டம்பரிலும், மற்றவர்கள் பதிவு செய்து கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்ட தீவிரமான முயற்சிகள் பற்றி 2020 டிசம்பரிலும் கேரவன் இதழ் செய்திகளை வெளியிட்டிருந்தது.    

2020 ஆகஸ்ட் மாதம் தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்திற்கான முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 2021 செப்டம்பர் இறுதியில் நாடு முழுவதும் அந்தப் பணி தொடங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட வரையிலும் தேசிய டிஜிட்டல் சுகாதார திட்ட இணையதளத்தில் யூனியன் பிரதேசங்களுக்கு வெளியே வசித்து வந்தவர்களால் சுகாதார அடையாள எண்களை உருவாக்க முடியாத நிலைமையே இருந்து வந்தது. இருப்பினும் யூனியன் பிரதேசங்களுக்கு அப்பாற்பட்டு வசித்து வந்த ஆறு பேரிடம் அந்த திட்டம் குறித்து கேரவன் இதழ் பேசியது. தேசிய அளவில் திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பாகவே கோவிட்-19 தடுப்பூசிகளுக்கான அடையாள சரிபார்ப்பின் போது அந்த ஆறு பேருக்கும் தனித்துவ சுகாதார அடையாள எண்கள் வழங்கப்பட்டிருந்தன. அந்த ஆறு பேரும் செப்டம்பர் மாதத்திற்கு முன்பாக தங்கள் ஆதார் அட்டையை தங்களுடைய அடையாளத்திற்கான சான்றாகப் பயன்படுத்தியிருந்தனர். அந்த ஆறு பேரில் இருவர் ஆதார் அட்டையை அடையாள ஆதாரமாகத் தரச் சொல்லி தடுப்பூசி மையங்கள் வலியுறுத்தியதாகக் கூறினர். மற்ற ஆவணங்களை ஆதாரமாக வழங்கலாம் என்று தனக்குத் தெரியாது என்று ஒருவரும், தங்கள் ஆதார் விவரங்களை தாங்களாகவே தர முன்வந்ததாக மற்ற மூவரும் கூறினர்.

தன்னுடைய அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத பெங்களூருவைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவிற்கு தன்னையும் தனது பங்குதாரரையும் தங்களுடைய நிரந்தர கணக்கு எண்கள் (பான் அட்டை) மூலம் மே மாதம் இணையவழியில் பதிவு செய்து கொண்டிருந்தார். ஆயினும் தனியார் மருத்துவமனையில் கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற அவரது பங்குதாரர் சென்ற போது அங்கிருந்த ஊழியர்கள் அவரது பான் கார்டை சரியான அடையாளம் என்று ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த ஊழியர்களிடம் தன்னுடைய ஆதார் விவரங்களைக் கொடுக்க விரும்பாத பங்குதாரர் மணிக்கணக்கில் அங்கிருந்த ஊழியர்களால் காத்திருக்க வைக்கப்பட்டார். தாங்கள் இருவரும் ஆதார் விவரங்கள் மிகவும் முக்கியமான தகவல்கள் என்பதை அறிந்தவர்கள் என்பதால், அதைப் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்று கூறிய அந்தப் பொறியாளர் ‘ஆனால் இறுதியில் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள விரும்பியதால் என்னுடைய பங்குதாரர் தன்னுடைய ஆதார் விவரங்களைக் கொடுக்க வேண்டியதாயிற்று. அவருக்கு தடுப்பூசி சான்றிதழுடன் சுகாதார அடையாள எண்ணும் சேர்த்தே வழங்கப்பட்டது. அந்த ஊழியர்கள் அவ்வாறு வழங்கப்பட்டது பற்றி அவரிடம் எதுவுமே சொல்லவில்லை!’ என்றார்.      

ஆதார் சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை குறித்து 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஆதார் அட்டை அல்லது எண்ணைச் சமர்ப்பிக்க முடியவில்லை என்ற காரணத்திற்காக மட்டுமே எந்தவொரு நபருக்கும் மக்கள் நலத்திட்டத்தின் பலன்களை மறுக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பாக 2020 டிசம்பரில் தடுப்பூசி பெற்றுக் கொள்ள ஆதார் விவரங்கள் கட்டாயமில்லை என்று தடுப்பூசிக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசாங்கம் வெளியிட்டது. தேசிய சுகாதார ஆணையமும் தனித்துவ சுகாதார அடையாள எண்களை உருவாக்க ஆதார் விவரங்கள் தேவையில்லை என்றே தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.  யூனியன் பிரதேசங்களில் உள்ள சுகாதார அடையாள எண்களைப் பெற்றுக் கொள்ள விரும்புகின்றவர்கள் தங்களுடைய தொலைபேசி எண்களைப் பயன்படுத்திப் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கோவின் இணையதளத்தில் தானாக அல்லது வேறு விதத்தில் தங்களுடைய அடையாளத்திற்கு ஆதாரமாக ஆதார் தகவல்களைக் கொடுத்திருந்த பலரும் தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தில் தன்னிச்சையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தனித்துவ சுகாதார அடையாள எண்கள் வழங்கப்பட்டுள்ளன.     

கோவின் இணையவழி தளம் கோவிட்-19 தடுப்பூசி பெறுவதற்கான முன்பதிவைப் பதிவு செய்து கொள்வதைத் திட்டமிட்டுக் கொள்ள பயனாளிகளை அனுமதிக்கிறது. பயனாளிகளின் விவரங்களை நிரப்பவும், தடுப்பூசி மையங்களில் பயனாளிகளின் அடையாளங்களை அங்கீகரிக்கவும் அந்த தளம் சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவுகிறது. ஆதார் விவரங்களைச் சமர்ப்பித்தவர்கள் எவ்வாறு கோவின் தளத்தில் தனித்துவ சுகாதார அடையாள எண்ணிற்காக பதிவு செய்யப்பட்டார்கள் என்பதை தடுப்பூசி செலுத்துகின்ற பணியில் இருந்த சுகாதாரப் பணியாளர்கள் விளக்கினார்கள்.

தெற்கு தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கோவிட்-19 தடுப்பூசிக்கு பொறுப்பான முக்கிய அதிகாரியாக இருக்கின்ற மருத்துவர் ஒருவர் ‘முதலில் கோவின் தளத்தில் தன்னுடைய அடையாள சரிபார்ப்புக்காக ஆதார் அல்லது வேறு ஏதேனும் புகைப்பட அடையாளம் இவற்றில் பயனாளர் எதைப் பயன்படுத்த விரும்புகிறார் என்பதை நாங்கள் தேர்வு செய்கிறோம்’ என்று கூறினார். ‘பயனாளிகள் ஆதார் விவரங்களைக் கொடுத்தால் அவர் தனித்துவ சுகாதார அடையாள எண்ணிற்காகப் பதிவு செய்ய ஒப்புதல் அளித்துள்ளார் என்றிருக்கின்ற மற்றொரு தேர்விற்குச் செல்கின்றோம். ஆனால் பெரும்பாலான ஊழியர்கள் பயனாளிகளுடைய ஒப்புதலைப் பெறாமல் தாங்களாகவே அந்த முடிவைத் தேர்வு செய்து விடுகிறார்கள்’ என்றார்.

அந்த சுகாதார அடையாள எண் குறித்து தடுப்பூசி போட வருகின்ற மக்களுக்கும், சுகாதாரப் பணியாளகளுக்கும் இடையே எந்தவொரு உரையாடலும் இருப்பதில்லை என்று பெயர் சொல்ல விரும்பாத மருத்துவர் ஒருவர் கூறுகிறார். பெரும்பாலான ஊழியர்களும் சுகாதார அடையாள எண் என்றால் என்னவென்றே தெரியாமலேயே இருக்கிறார்கள். ‘அந்த முடிவை நாங்கள் தேர்வு செய்யும் போது, ​​தொழில்நுட்ப ரீதியாக பயனாளிகளின் ஒப்புதல் வழங்கப்பட்டது என்றிருப்பதால் அதற்காக அரசாங்கமோ அல்லது சுகாதாரப் பணியாளர்களோ தொழில்நுட்ப ரீதியாக ஒருபோதும் சிக்கலில் மாட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் உண்மையில் களத்தில் பயனாளிகளின் ஒப்புதலைப் பெறுவதற்கான செயல்முறை என்பது இருக்கவே இல்லை’ என்று அவர் கூறினார்.

தடுப்பூசி போடுவதற்காகச் சென்று தங்களுடைய ஆதார் தகவல்களைச் சமர்ப்பித்த அனைவருக்குமே இதுபோன்று தனித்துவ சுகாதார அடையாள எண் வழங்கப்படவில்லை. சுகாதாரப் பணியாளர்கள் கோவின் தளத்தில் பயனாளியின் ஒப்புதலை உறுதிப்படுத்துகின்ற தேர்வை பதிவு செய்தே சுகாதார அடையாள எண்ணை உருவாக்கிட வேண்டும் என்று கூறுகின்ற தில்லி தனியார் மருத்துவமனை மருத்துவ அதிகாரி அடையாள எண்ணுக்கான ஒப்புதலை வழங்குவதற்கான தேர்வை மேற்கொள்வதற்குத் தேவையான குறிப்பிட்ட வழிமுறைகளை தான் பணி புரிகின்ற மருத்துவமனை போன்ற சில தடுப்பூசி மையங்கள் கொண்டிருந்தன என்கிறார். ‘ஆரம்பத்தில் கோவின் தளத்தில் பயனாளிகளை எவ்வாறு அங்கீகரிப்பது, பதிவு செய்வது என்று எங்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கு நோய்த்தடுப்பு அதிகாரிகளே பயிற்சி அளித்தனர்’ என்று கூறிய அந்த மருத்துவர் ‘சுகாதார அடையாள எண்ணுக்காக தங்கள் ஆதார் விவரங்களைத் தருவதற்கு பயனாளிகள் ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கும் முடிவைத் தேர்வு செய்யுமாறு பணியாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். தங்களுக்கு முன்பாக அந்தப் பணியில் இருந்தவர்களிடமிருந்து அதை எப்படி செய்வது என்பதை இப்போது சுகாதாரப் பணியாளர்கள் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்’ என்று தெரிவித்தார்.  

அடையாள சரிபார்ப்புக்காக மற்ற புகைப்பட அடையாளச் சான்றுகளைக் காட்டிலும் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி ஊக்கமளிக்கும் வகையிலேயே கோவின் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அதிகாரி கூறினார். ‘ஆதார் அட்டைகளை பயனாளிகள் பயன்படுத்தும் போது நாங்கள் ஆதார் எண்ணை மட்டும் உள்ளிட்டால் போதும்’ என்று கூறிய மருத்துவர் ‘ஆனால் அது வேறு ஏதேனும் அடையாள அட்டையாக இருந்தால் பயனாளியின் படத்தையும் அவர்களுடைய வேறு புகைப்பட அடையாள அட்டையின் படத்தையும் எடுத்து கோவின் தளத்தில் பதிவேற்றிட வேண்டும். அது மிகவும் கடினமான செயல்’ என்றார்.

தடுப்பூசி பணியில் ஒரு மாதம் கழித்த தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர் நவநீத் சிந்து தங்களுடைய மருத்துவமனை தடுப்பூசி அடையாள சரிபார்ப்பு செயல்முறைக்கு ஆதார் அட்டைகளை மட்டுமே ஏற்றுக் கொண்டதாகக் கூறினார். சிந்து, அவரது சகாக்களிடம் ஆதாரை மட்டுமே ஏற்குமாறு மருத்துவமனை நிர்வாக ஊழியர்கள் கூறியிருந்தனர். ‘அது எங்களுக்குத் தரப்பட்ட அறிவுறுத்தலாக மட்டுமே இருந்தது என்றாலும் நாங்கள் பயனாளிகள் ஆதாரைக் கொண்டு வர வேண்டும் என்றே வலியுறுத்தி வருகிறோம். வேறெந்த புகைப்பட அடையாள அட்டையையும் நாங்கள்  பயன்படுத்துவதில்லை’ என்று கூறினார். மேலும் ‘பயனாளிகளும் ஆதார் விவரங்களைத் தரவே விரும்புகிறார்கள். எனக்குத் தெரிந்தவரை மற்ற தடுப்பூசி மையங்களிலும் சுகாதாரப் பணியாளர்கள் இதையே செய்து வருகிறார்கள்’ என்றும் அவர் தெரிவித்தார்.     

ஜனவரி முதல் பிப்ரவரி வரையிலான தடுப்பூசி இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் சுகாதார அடையாள எண்களை உருவாக்கித் தர வேண்டும் என்று  உத்தரவுகள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதாக தெற்கு தில்லி மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பொறுப்பில் இருந்த அந்த முக்கிய அதிகாரி கூறினார். ஜனவரி தொடக்கத்தில், அவரும் மற்ற தனியார் மருத்துவமனைகளின் தடுப்பூசி அதிகாரிகளும் தென்கிழக்கு தில்லி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்ததாக கூறிய அவர், அந்த மாவட்ட ஆட்சியர் முடிந்தவரை தடுப்பூசி பயனாளிகள் பலரை தனித்துவ சுகாதார அடையாள எண்களுக்காகப் பதிவு செய்யுமாறு தங்களிடம் கூறியதாகத் தெரிவித்தார். ‘தென்கிழக்கு தில்லியின் மாவட்ட ஆட்சியரிடமிருந்து அந்த உத்தரவு வந்தது. நாங்கள் உருவாக்க வேண்டிய சுகாதார அடையாள எண்களுக்கான இலக்கு எங்களுக்குத் தரப்பட்டிருந்தது. அதனாலேயே தடுப்பூசி போட்டுக் கொள்ளும் சுகாதாரப் பணியாளர்கள் தங்களுடைய ஆதார் அட்டையைக் கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம்’ என்று அவர் கூறினார். தனித்துவ சுகாதார அடையாள எண்களைக் கட்டாயம்  உருவாக்க வேண்டும் என்று வெளிப்படையான உத்தரவு இல்லை என்றாலும் பெரும்பாலான ஊழியர்கள் அவ்வாறே செய்து வந்துள்ளனர். அது சொல்லப்படாது செய்கின்ற விஷயமாகி விட்டது. தங்களுடைய ஆதார் விவரங்களை யாராவது தருவார்கள் என்றால் அவர்களுக்கு சுகதார அடையாள எண்ணை உருவாக்குவதற்கான முடிவை நாங்களாகவே தேர்வு செய்து கொள்கிறோம்’ என்று அந்த மருத்துவ அதிகாரி கூறினார். கேரவன் இதழ் மருத்துவர்களுடன் நடந்த அந்த கூட்டம், தடுப்பூசி பொறுப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட வழிமுறைகள் குறித்த தகவல்களைக் கேட்டு தென்கிழக்கு தில்லியின் மாவட்ட ஆட்சியர் விஸ்வேந்திராவுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைத்தது. ஆனால் அவரிடமிருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை.  

உலகெங்கிலும் உள்ள மக்களின் டிஜிட்டல் உரிமைகளைப் பாதுகாக்கும் லாப நோக்கற்ற அமைப்பான அக்ஸஸ் நவ் என்ற நிறுவனத்தின் ஆசிய கொள்கை இயக்குநரும், மூத்த ஆலோசகருமான ராமன் ஜித் சிங் சிமா ‘சுகாதார அடையாள எண்களைப் பற்றி மக்களுக்குத் தெரிவிக்காமலேயே எப்படி அவற்றை உருவாக்கித் தரலாம்?’ என்று கேள்வியெழுப்புகிறார். தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்திற்கான சுகாதார தரவு மேலாண்மைக் கொள்கையை 2020 ஆகஸ்ட் மாதத்தில் தேசிய சுகாதார ஆணையம் உருவாக்கியது. அந்தக் கொள்கை தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தில் இணையும் குடிமக்கள் வழங்குகின்ற ஒப்புதலை நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

ராமன் ஜித் சிங் சிமா

பொதுமக்களின் ஆலோசனைக்காக 2020 டிசம்பர் வரை வைக்கப்பட்டிருந்த அந்த வரைவுக் கொள்கை அதற்குப் பிறகு ஒன்றிய அரசாங்கத்தால் இறுதி செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. அந்த ஆவணத்தில் தரவு முன்னுரிமையாளர் (டேட்டா பிரின்சிபால்) என்று குறிப்பிடப்படுகிற பயனாளியால் வழங்கப்படுகின்ற ஒப்புதலானது, அவருக்கு ஏற்கனவே தகவல் மற்றும் தனியுரிமை அறிவிப்பு வழங்கப்பட்டால் மட்டுமே செல்லுபடியாகும் என்றும், அந்த தனியுரிமை அறிவிப்பில் ஒப்புதல் மேலாண்மை குறித்த விரிவான தகவல்களும், தங்களுடைய தனிப்பட்ட சுகாதாரத் தரவைப் பகிர்வது குறித்த தரவு முன்னுரிமையாளரின் உரிமைகளும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.        

தரவு பாதுகாப்பு சட்டம் எதுவுமில்லாமல் டிஜிட்டல் சுகாதார அடையாள எண்ணிற்காக மக்களை அரசாங்கம் பதிவு செய்யத் தொடங்கியிருப்பது குறித்து சிமா வருத்தமடைந்துள்ளார். அவர் ‘எவ்விதமான மேற்பார்வையோ அல்லது குடிமக்களின் தரவு மற்றும் தனியுரிமை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகளோ இருக்கவில்லை. சாத்தியமான புகார்களைக் களைவதற்கான எந்தவொரு தன்னாட்சி அமைப்பும் இருக்கவில்லை’ என்று கூறுகிறார். குடிமக்களின் தனியுரிமை, தரவு உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட தரவு பாதுகாப்பு மசோதா 2019 டிசம்பரில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது என்றாலும் இன்று வரையிலும் அது சட்டமாக அங்கீகரிக்கப்படவே இல்லை.

சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன்

குடிமக்களின் தரவு உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்குப் போதுமானதாக சுகாதார தரவு மேலாண்மைக் கொள்கை ஆவணம் இருக்கவில்லை என்றும் சிமா கூறுகின்றார். ஒன்றிய சுகாதாரத்துறையின் செயலாளர் ராஜேஷ் பூஷனுக்கு 2020 செப்டம்பரில் அக்சஸ் நவ் சமர்ப்பித்த கடிதத்தில் ‘இந்த ஆவணம் பயனாளிகளின் ஒப்புதலை நிர்வகிப்பது குறித்து அரசாங்கத்திற்கு பொதுவான வழியை வழங்கும் என்றாலும், பயனாளிகளின் உரிமைகளுக்கான வலுவான தீர்வுகளைக் கொண்ட தேவையான சட்டங்களும் வழங்கப்பட வேண்டும்’ என்று அந்த கடிதத்தில் கோரப்பட்டிருந்தது. மேலும் அந்தக் கடிதத்தில் பயனாளிகளின் முக்கிய சுகாதார தரவுகளைப் பாதுகாக்கும், நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கும் தேசிய சுகாதார ஆணையம் ஒரு நிர்வாக உத்தரவின் மூலமாகவே அமைக்கப்பட்டுள்ளது என்றும், நாட்டின் அரசியலமைப்பு விதிகளைப் பொறுத்தவரையில் முன்மொழியப்பட்டுள்ள திட்டத்தை இயக்குதல் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வசிப்பவர்களின் சுகாதாரம் குறித்த தகவல்களைச் சேகரிப்பது, பயன்படுத்துவது, ஒழுங்குமுறைப்படுத்துவது போன்றவற்றை நிர்வகிப்பதில் உள்ள சட்ட அதிகாரம் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் கவனிக்கத்தக்கதாகவே கருதப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.   

தொற்றுநோய் காரணமாக மோசமான சூழ்நிலைகள் இருந்து வருகின்ற நேரத்தில் சுகாதார அடையாள எண்களை உருவாக்கி தேசிய டிஜிட்டல் சுகாதார திட்ட சுற்றுச்சூழல் அமைப்புடன் குடிமக்களை இணைப்பதற்கு அரசாங்கம் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறது என்று வழக்கறிஞர்களும், தரவு உரிமை ஆர்வலர்களும் கேள்விகளை எழுப்புகின்றனர். தரவு, நிர்வாகம் மற்றும் இணையம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்ற தனிப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீனிவாஸ் கோடாலி அரசின் இந்த அவசரம் பொது நலன்களை விட தனியார் நலன்களால் தூண்டப்பட்டிருப்பதாகக் கூறுகின்றார். அவர் ‘இந்த திட்டம் உண்மையிலேயே குடிமக்களுக்கு நன்மை பயக்கும் என்றால், பயனாளிகளுக்கு அதன் விதிகளை விளக்குவதற்கான நேரத்தை அரசு ஒதுக்கி இருக்கலாம். சுகாதார அடையாள எண்களை உருவாக்கிடுவதற்காக, பயனாளிகளின் ஒப்புதலை நெறிமுறையற்ற வழிமுறைகள் மூலமாகப் பெறுவதற்காக அரசு இந்த அளவிற்கு குடிமக்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டியதில்லை’ என்கிறார். இந்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு குடிமக்களின் சுகாதாரத் தரவுகள் முக்கிய ஆதாரமாக மாறிவிட்டன என்று கூறும் கோடாலி ‘டிஜிட்டல் சுகாதார அமைப்பை உருவாக்குவது தனியார் நிறுவனங்களும், இவ்வளவு பெரிய தரவுத்தளங்களிலிருந்து பயனடையக்கூடிய காப்பீட்டாளர்களும் அந்தத் தரவுகளைப் பகிர்ந்து கொள்வதையே அனுமதிக்கும்’ என்கிறார்.   

தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தின் கீழ் சுகாதாரம் தொடர்பான தரவுகளின் ‘இயங்குதிறன்’ பற்றி பல சந்தர்ப்பங்களில் தேசிய சுகாதார ஆணையம் குறிப்பிட்டுள்ளதால், தனியார் நிறுவனங்களிடம் இந்தத் தரவுகள் பகிர்ந்து கொள்ளப்படும் என்ற கவலைகள் எழுகின்றன. இயங்குதிறன் என்பது பல்வேறு சாதனங்கள், மென்பொருள்கள், தகவல் அமைப்புகள் போன்றவை தரவுகளை பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கான திறன் ஆகும். தேசிய சுகாதார ஆணையம் தனித்துவ சுகாதார அடையாள எண்ணை வைத்திருப்பவர்கள் சிறந்த சுகாதாரப் பாதுகாப்பிற்கான வெவ்வேறு சேவைகளைப் பெறுவதற்கு அந்த இயங்குதிறன் உதவும் என்று கூறியுள்ளது. ஒருங்கிணைந்த சுகாதார இடைத்தளம் குறித்த தன்னுடைய கலந்தாய்வுக் கட்டுரையில் ‘தற்போதைய தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தின் கூறுகள் சுகாதாரம் தொடர்பான தரவுகளின் தடையற்ற இயங்குதிறனை உறுதி செய்கின்ற முதன்மை குறிக்கோளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளன. தேசிய டிஜிட்டல் சுகாதார திட்ட செயலி நிரலாக்க இடைத்தளத்தை சுகாதாரப் பதிவுகள், சுகாதாரப் பணியாளர்கள், சுகாதார வசதிகளைப் பெற்றுக் கொள்ள, பகிர, சரிபார்க்க என்று இந்த சூழல் அமைப்பில் உள்ள பங்குதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். சுகாதார அடையாளம் குறித்த கலந்தாய்வில் தனது கருத்துகளை சமர்ப்பித்த அக்சஸ் நவ் பயனாளிகளின் உரிமைகளை உறுதிப்படுத்தும் கட்டமைப்பு இல்லாமல் அவர்களின் நலன்களை அமைப்பின் மையத்தில் வைப்பதால் இயங்குதிறன் என்பது பேரழிவிற்கான செய்முறையாகிறது என்று குறிப்பிட்டிருந்தது.    

தன்னுடைய டிஜிட்டல் சுகாதார திட்டத்தை அரசு தீவிரமாக முன்னெடுத்துச் செல்லும் நிலையில் தடுப்பூசிகளைப் பெற வந்த மக்களுக்கே தெரியாமலும், அவர்களுடைய சம்மதம் இல்லாமலும் தனித்துவ சுகாதார அடையாள எண்களை வழங்கியுள்ள நிகழ்வுகள் ஒருவரின் தனியுரிமை குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளன.  

‘தொற்றுநோயின் பெயரால் தடுப்பூசி போன்ற அத்தியாவசியப் பொருளை முன்னிறுத்திக் கொண்டு தன்னுடைய திட்டத்தை மிகவும் தீவிரமாக அரசாங்கம் இவ்வாறு அமல்படுத்துவது முற்றிலும் ஒழுக்கக்கேடான, நெறிமுறையற்ற செயலாகும்’ என்று சிமா குற்றம் சாட்டுகிறார்.  

இந்தக் கட்டுரை தாக்கூர் குடும்ப அறக்கட்டளையின் மானிய உதவியால் தயாரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் உள்ளடக்கம் மீது தாக்கூர் குடும்ப அறக்கட்டளை எந்தவொரு கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை.

 

https://caravanmagazine.in/health/covid-19-vaccine-beneficiaries-were-assigned-unique-health-ids-without-their-consent

 

Comments