பிரேம் சங்கர் ஜா
தி வயர் இணைய இதழ்
2021 ஆகஸ்ட் 24, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்றதொரு நீண்ட சுதந்திர தின உரையை பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்தியிருப்பார் என்றால், அவரைக் கடுமையாக விமர்சிப்பவர்கள்கூட பாரதிய ஜனதா கட்சியின் 2024ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கான தொடக்கம் என்றே அதனைப் பார்த்திருப்பார்கள். ஆனால் தற்போதைய பதவிக் காலத்தின் பாதிவழியைக் கூட தாண்டியிராத நிலையில் அவ்வாறான நீண்ட உரையை மோடி தேர்ந்தெடுத்தது அவர் தன்னுடைய பொறுமையின் விளிம்பிற்குச் சென்றிருப்பதையே காட்டுகிறது. அதுமட்டுமல்லாது அதை அவர் உணர்ந்திருப்பதையும் காட்டுவதாக உள்ளது.
66இலிருந்து 24 ஆக...
தோல்வியடைந்து போன
பொருளாதார வாக்குறுதிகள், தவறான பொருளாதார சீர்திருத்தங்கள், இடைவிடாத வகுப்புவாத
துருவமுனைப்பு, மாற்றுக் கருத்துகளை நசுக்குவது, சுதந்திரத்திற்கான குடிமக்களின்
அடிப்படை உரிமையை அழிப்பது ஆகியவற்றிற்கு மத்தியில் கடந்தஏழு ஆண்டுகளாக எவ்விதச்
சோர்வுமின்றி தன்னைப் பற்றி சூப்பர்மேன் என்ற பிம்பத்தை உருவாக்கிடவே அவர் முயன்று
வந்திருக்கிறார். ஆனால் இந்தியா டுடே வெளியிட்டுள்ள ‘தேசிய மனநிலை - 2021’ (மூட்
ஆஃப் தி நேஷன் 2021) என்ற கருத்துக்கணிப்பு பிரதமராக அவரை ஏற்றுக்கொள்பவர்களின்
எண்ணிக்கை ஒரே ஆண்டில் அறுபத்திஆறு சதவிகிதத்திலிருந்து இருபத்திநான்கு
சதவிகிதமாகக் குறைந்திருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
ஆகஸ்ட் பதினான்காம் நாளை
‘தேசப் பிரிவினையின் கொடூரங்களை நினைவுகூரும் தினம்’ என்று அனுசரிக்கும் முடிவை
மோடி அறிவித்திருக்கும் செயல் அவர் எதையும்
விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்பதையே காட்டுகின்றது. உண்மையில் அவருடைய அந்த
அறிவிப்பு ஆச்சரியம் அளிப்பதாகவே இருக்கிறது. லட்சக்கணக்கானவர்களின் படுகொலை
மற்றும் இடம்பெயர்வைத்
தூண்டிய, நம் வாழ்நாளில் மறக்கவே முடியாதநிகழ்வாக இருந்திருக்க வேண்டிய தேசப்பிரிவினை
குறித்த நினைவை என்னுடைய வாழ்நாள் முழுவதும் நினைத்துப் பார்த்திடாமல் தவிர்த்தே
வந்திருக்கிறேன். மோடி இப்போது அதை ஏன் நம்மிடம் நினைவுபடுத்துகிறார்?
‘பிரிவினை ஏற்படுத்திய வலியையும், வன்முறையையும் நாடு நினைவில் கொள்ள வேண்டும்’ என்று அரசாங்கத்தின் அறிவிப்பு கூறுகின்ற அதே வேளையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா மிகவும் வெளிப்படையாக ‘தேசப்பிரிவினை நமது அரசியலில் சிலரைத் திருப்திப்படுத்துவது மற்றும் எதிர்மறை அரசியலுக்கான சூழ்நிலைகள் (வாய்ப்புகள்) ஆதிக்கம் செலுத்துவதற்கான நிலைமையை மட்டுமே உருவாக்கியது’ என்கிறார்.
இருண்ட மனதின் பார்வை
நட்டா தெரிவித்துள்ள கருத்து மோடியின் நோக்கத்தைவிளக்குவதைக் காட்டிலும் வேறுவிதமாகவே இருக்கிறது. பேச்சுவார்த்தையை கோழைத்தனம் என்றும், சமரசம்செய்து கொள்வதை சரணடைவது என்றும் கருதுகின்ற இருண்ட மனதின் பார்வையையே நட்டாவின் கருத்து கொண்டிருக்கிறது. இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் தேவையானவற்றை முழுமையாகத் தவிர்ப்பதில் மோடியின் உறுதிப்பாடு அடுத்த மூன்றாண்டுகளில் நம்மை எங்கு இட்டுச் செல்லப் போகிறது என்பது குறித்த எண்ணம் திகிலூட்டுவதாகவே இருக்கிறது. தேசப்பிரிவினையானது இந்திய சுதந்திரம் என்பதை வலிமிகுந்த நினைவுகளை - பயங்கரத்தை – மட்டுமே நம்மிடம் தூண்டிய நிகழ்வாக மாற்றியது. ஆனாலும் அது மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பலவீனத்தை உள்ளடக்கியதாக அல்லது மற்றவர்களைத் திருப்திப்படுத்தியதால் உருவானதாக இருக்கவில்லை. மாறாக அந்தக் காலகட்டத்தில் அரசமைப்பு குறித்த முன்அனுபவம் எதுவுமில்லாத காங்கிரஸ், முஸ்லீம் லீக் தலைவர்கள் முடிவெடுப்பதில் மிகமந்தமாகவே இருந்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் பழிபாவத்திற்கு அஞ்சாது தங்களைக் காட்டிலும் அதிகாரப் பசி அதிகம் கொண்டவர்கள் பலனை அளிக்கின்ற சமரசத்திற்கான வாய்ப்பைத் தங்கள் வசம் எடுத்துக் கொள்ளும் வரை தங்களுக்கிடையே சிறு சண்டைகளிலும் அவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
வாஜ்பாய், மன்மோகன்சிங்
இதை நன்கு புரிந்து
கொண்டிருந்த அடல் பிஹாரிவாஜ்பாய், டாக்டர் மன்மோகன் சிங் என்று இந்தியாவின் கடைசி
இரண்டு பிரதமர்கள் ஒட்டுமொத்த துணைக்கண்டத்திற்கும் தேசப்பிரிவினை ஏற்படுத்திய
சேதத்தைச் சரிசெய்வது என்ற நிலைமைக்கு மிகவும் நெருக்கமாக வந்து சேர்ந்தனர்.
ஆயினும் கடந்த ஏழு ஆண்டுகளில், அவர்கள் சாதித்த அனைத்தையும் இல்லை என்றாக்கி
விடுவதில் இன்றைக்கு மோடி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். ஆப்கானிஸ்தானில்
இன்றைக்கு தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளனர். சீனா, பாகிஸ்தான் ஆகிய இரு
நாடுகளுடனான உறவு மிகவும் பலவீனமாக இருக்கின்றது. இந்த நிலைமையில் தேசப்பிரிவினை
நம்மிடம் விட்டுச் சென்ற துண்டிக்கப்பட்ட இந்தியாவானது முன்பு எப்போதும் இருந்ததை
விட மிகப் பெரிய ஆபத்திலே உள்ளது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
ஆக தேசப்பிரிவினையின்
கொடூரங்களை நினைவுபடுத்திக் கொள்ள விரும்பவில்லை என்றாலும், அது நம்மை அந்தக்
கொடூரங்களுக்குள் மூழ்கடித்திட நாம் எவ்வாறு அனுமதித்தோம் என்பதை அறிந்து
கொள்வதற்கும், மீண்டுமொரு முறை நாம் அவற்றுள் மூழ்கி விடாதிருப்பதற்கும் இப்போது
நாம் ‘தேசப்பிரிவினையின்
கொடூரங்கள்’ குறித்து மறுபரிசீலனை செய்து கொள்வது அவசியம் என்றே நான் கருதுகிறேன்.
இந்திய முஸ்லீம்கள் தங்களுக்கென்று தனியாக ஓர் அரசை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர் என்பது பொதுவாக இருந்து வருகின்ற தவறான கருத்தாகும். முஸ்லீம்லீக்கின் அடிப்படை நோக்கம் பிரிவினை நோக்கியதாக இருக்கவில்லை. 1916ஆம் ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்ட முஸ்லீம்லீக்கின் தலைவரான நாள் முதலாகவே ஜின்னாவின் குறிக்கோள் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான உத்தரவாதத்தைப் பெறும் வகையிலே தனியாக ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில் அனைத்து சட்டமன்றங்களிலும் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்களுக்கான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதாகவே இருந்து வந்தது. அதனாலேயே அவர் முஸ்லீம்லீக்கின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் காங்கிரஸ் உறுப்பினராகத் தொடர்ந்து இருந்து வந்தார். முஸ்லீம்லீக் துவக்கப்பட்டு இருபத்தி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 1940 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட கட்சியின் லாகூர் தீர்மானம் (உலகளவில் அது ‘பிரிவினைத் தீர்மானம்’ என்றே கருதப்படுகிறது) ‘மிகப்பெரிய இந்திய கூட்டமைப்பிற்குள் தன்னாட்சி கொண்ட அல்லது பகுதியளவில் சுதந்திரமான முஸ்லீம் பெரும்பான்மை பகுதியை உருவாக்குவது’ என்று மட்டுமே இருந்தது. உண்மையில் அந்த தீர்மானம் ஜின்னாவின் விருப்பமாக மட்டும் இருக்கவில்லை. அது பஞ்சாப் (அப்போது தில்லியில் இருந்து கைபர் கணவாய் வரை) மற்றும் வங்காளம் என்று அப்போது நாட்டில் இருந்த இரண்டு பெரிய முஸ்லீம் பெரும்பான்மை மாகாணங்களின் விருப்பமாகவும் இருந்தது.
ஹயாத் கான், சுரவர்த்தி
பஞ்சாபில் அகாலிகள்
மற்றும் காங்கிரஸுடன் இணைந்து யூனியனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வந்தது.சர்
சிக்கந்தர் ஹயாத் கான் இறந்து போகும் வரை யூனியனிஸ்ட் கட்சி அவராலேயே
வழிநடத்தப்பட்டு வந்தது. தேசப்பிரிவினையை அவர் கடுமையாக எதிர்த்து வந்தார். பஞ்சாப்
மற்றும் யூனியனிஸ்ட் கட்சியில் பிளவை ஏற்படுத்தும் என்பதால் அவர் பிரிவினையை
ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை. முஸ்லீம்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த
தொகுதிகளில் முஸ்லீம்லீக் கட்சி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்தியிருந்த
போதிலும், அந்த மாகாணத்தில் யூனியனிஸ்ட் கட்சிதான் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக
இருந்து வந்தது.
வங்காளத்திலும்
தேசப்பிரிவினைக்கு கூடுதலான எதிர்ப்பு இருந்து வந்தது. அங்கே பிரதம அமைச்சராக
இருந்த ஹெச்.எஸ்.சுரவர்த்தி முஸ்லிம்லீக்கின் உறுதியான தலைவர். முஸ்லீம்களால்
ஆளப்படும் பகுதிகளில்பஞ்சாப், வங்காளம் ஆகியவை முக்கிய பகுதிகளாக இருக்கின்ற
வகையில் உருவாக்கப்படும் இந்திய
கூட்டமைப்பு என்ற ஜின்னாவின் பார்வையையே சுரவர்த்தியும் கொண்டிருந்தார்.
மவுண்ட்பேட்டன் பிரபு
1947 ஏப்ரலில் வெளியிட்ட இடைக்காலப் பிரிவினைத் திட்டம் பஞ்சாப், வங்காளம் ஆகிய
இரண்டு பகுதிகளையும் பிரிப்பதாக இருந்தது. அந்த திட்டத்தைக் கடுமையாக எதிர்த்த
சுரவர்த்தி சுதந்திரமான ஐக்கிய வங்காளம் உருவாக்கப்பட வேண்டும் என்று
முன்மொழிந்தார். தில்லியில் ஏப்ரல் 27 அன்று ஆற்றிய பரபரப்பான உரையில் ‘பிளவுபடாமல்
ஒன்றாக இருந்தால் வங்காளம் எப்படி இருக்கும் என்பதை
நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மிகச் சிறந்ததொரு நாடாக இருக்கும் இந்தியாவில்
உள்ள பணக்காரர்கள் மற்றும் மிகவும் வளமானவர்களால் இந்திய மக்களுக்கு
உயர்ந்தவாழ்க்கைத் தரத்தை வழங்க முடியும். அதன் மூலம் பெரும்பான்மையான மக்கள்
தங்கள் அந்தஸ்தில் முழுமையாக உயர முடியும்...’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
அவரது உரையில் இருந்த ‘இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் மற்றும் மிகவும் வளமானவர்கள்’
என்ற சொற்றொடர்குறிப்பிடத்தக்கதொரு சொற்றொடராகவே அமைந்திருந்தது. அந்தச் சொற்றொடர்
சுரவர்த்தி வாய்தவறிச் சொன்னதாக இல்லாவிடில், வங்காளம் தனி அரசாக உருவாக்கப்படுவதை
அவர் முன்மொழியவில்லை என்றே பொருள்படும். அதுவரையிலும் வரையறுக்கப்படாததாக இருந்த
இந்திய கூட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் ஐக்கிய வங்காளத்தையே அவர்
விரும்பினார். அவரது முன்மொழிவிற்கு எதிராக காங்கிரஸிலிருந்து எந்தவிதக் கலகக்
குரலும் எழவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
வங்காளத்தில்
இருந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சரத் சந்திர போஸ், கிரண் சங்கர் ராய் போன்ற பலரும்
சுரவர்த்தியின் முன்மொழிவு ஆதரிக்கப்படுவதற்கான தகுதியுடன் இருப்பதாகவே
உணர்ந்தனர். வங்காள ஆளுநராக இருந்த சர் ஃப்ரெட்ரிக் பர்ரோஸ் இந்தியாவின் மூன்று
ஆட்சிப் பகுதிகளில் ஒன்றாக வங்காளத்தை தனித்த தன்னாட்சிப் பகுதியாக உருவாக்குவதை
முன்மொழியத் தொடங்கிய பின்னரே காங்கிரஸ் அதை எதிர்த்தது. அப்படியானால் எது அடுத்தடுத்து
நடந்த படுகொலைகளைத் தூண்டியது? ‘பாகிஸ்தான்’ உருவாக்கப்பட வேண்டும் என்பதை
வலியுறுத்தி முஸ்லீம்லீக் தொடங்கிய தீவிரப்படுத்தப்பட்ட ‘நேரடி நடவடிக்கை’ அதாவது
இனசுத்திகரிப்பு பிரச்சாரம் என்பதே அந்தக் கேள்விக்கான உடனடியான பதிலாக இருக்கும்.
அந்த நடவடிக்கைக்கான கருவியாக 1931ஆம் ஆண்டில் முஸ்லீம்லீக்கின் இளைஞர் பிரிவாக
ஆரம்பிக்கப்பட்ட முஸ்லீம்லீக் தேசிய காவலர்படை என்ற அமைப்பு
தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த அமைப்பிற்கு 1946ஆம் ஆண்டு லாகூரில் நடந்த லீக்
‘கமிட்டி ஆஃப் ஆக்சன்’ கூட்டத்தில் வேறுவிதமான கொலைகார நோக்கத்துடன் புத்துயிர்
தரப்பட்டது.
கல்கத்தா ஹிந்துக்கள் 1946 ஆகஸ்ட் 16இல் திட்டமிட்டு
கொல்லப்படத் தொடங்கிய போது அந்த முஸ்லீம் காவலர் படையில் இருபத்தியிரண்டாயிரம் உறுப்பினர்கள்
இருந்தனர். வன்முறைத் தாக்குதலால் கோபமடைந்த ஹிந்துக்கள் பதிலடி கொடுத்ததன் மூலம்
தீவிரவாதிகளின் நோக்கத்தை கல்கத்தாவில் ‘நேரடி நடவடிக்கை’ நிறைவேற்றித் தந்தது.
நான்காயிரத்திற்கும் அதிகமான உயிர்கள் பலியான போது ஓராண்டு கழித்துஎன்ன நடக்கப்
போகிறதோ என்ற பயத்தில் ஹிந்துக்களும், முஸ்லீம்களும் நகரின் பாதுகாப்பான
பகுதிகளுக்குச் செல்லத் தொடங்கினர். அடுத்து
வந்த மாதங்களில் ‘நேரடி நடவடிக்கை’ வடமேற்கு எல்லை மாகாணம், பஞ்சாப் என்று
அடுத்தடுத்து பரவியது. அது ராவல்பிண்டியில் சீக்கியர்கள் மீது ஒழுங்கமைக்கப்பட்டு
நடத்தப்பட்ட படுகொலையில் முடிந்தது. டிசம்பர் மாதத்திற்குள் அந்த வன்முறை ஹிந்து
மற்றும்சீக்கிய வர்த்தகர்கள், வடமேற்கு எல்லை மாகாணம்மற்றும் வடக்கு பஞ்சாபில்
இருந்த நில உரிமையாளர்களை கிழக்கு பஞ்சாப், தில்லி, காஷ்மீரின் முசாபராபாத்திற்கு
தப்பி ஓட வேண்டிய கட்டாயத்திற்குள்ளாக்கியது. ‘நேரடி நடவடிக்கை’ 1946
அக்டோபரில் வங்காளத்தில் உள்ள நவகாளிக்கும், டிசம்பர் மாதத்தில் பஞ்சாபின் மற்ற
பகுதிகளுக்கும் பரவியது.
கலவரங்களின் விளைவாக காவல்துறை மற்றும் கீழ்மட்ட
அதிகாரிகளிடம் ஏற்பட்ட வகுப்புவாத சிந்தனையால் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு
உருவானது. அதனைத்தொடர்ந்து 1947 மார்ச் மாதத்தில் சர் சிக்கந்தர் ஹயாத்தின் மகனான
கிஸ்ர் ஹயாத் கான் தலைமையில் இருந்த யூனியனிஸ்ட்-அகாலி-காங்கிரஸ் கூட்டணி அரசு
பதவிவிலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சில வாரங்களுக்குள்ளாகவே ‘நாட்டின் பிற
பகுதிகளுக்கும் வகுப்புவாத விஷம் பரவி சமூகக் கட்டமைப்பைத் துண்டாடுவதைத்
தடுப்பதற்காக மட்டுமே பிரிவினையை ஏற்றுக் கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டு
காங்கிரஸ் இந்தியப் பிரிவினையை தயக்கத்துடன் ஏற்றுக் கொண்டபோது, தன்னுடைய
நோக்கத்தில் ‘நேரடி நடவடிக்கை’ வெற்றியைக் கண்டது.
தோற்றவர் தூண்டிவிட்ட வன்முறை
அடுத்த பன்னிரண்டு மாதங்களில் இந்தியாவைக்
கிழித்தெறிந்த வகுப்புவாத வன்முறைகள் தொடங்கியதற்கு முஸ்லீம்லீக்கே காரணம்
என்பதற்குப் போதுமானநியாயங்கள் உள்ள போதிலும் மிகச்சாதாரண முஸ்லீம்கள் மீது
அத்தகைய குற்றத்தைச் சுமத்துவதற்கான நியாயம் எதுவுமில்லை. இந்திய முஸ்லீம்கள்
காங்கிரஸிற்கு கொடுத்து வந்த பாரம்பரிய ஆதரவை முறியடிப்பதாகவே அந்த ‘நேரடி
நடவடிக்கை’யின் வெளிப்படையான நோக்கம் இருந்தது. அதற்காக பேராசை, காமம்
என்றுஅடிப்படை மனித இயல்பில் இருந்த இரண்டு எண்ணங்களை லீக்கில் இருந்த
தீவிரவாதிகள் நன்கு அறிந்தே தூண்டிவிட்டனர்.
பஞ்சாபில் நடந்ததைப் போன்று ஹிந்துக்கள் மீது
ஒழுங்கமைக்கப்பட்ட படுகொலையை வங்காளத்தில் நவகாளி என்ற ஒரே மாவட்டம் மட்டும் அனுபவித்தது.
தேர்தலில் தோற்றுப் போன சட்டமன்ற உறுப்பினரான கோலம்சர்வார் ஹுசைனியால்
வங்காளத்தில் அந்த வன்முறை தொடங்கி வைக்கப்பட்டது, ஹுசைனியின் பக்தி
மிகுந்தகுடும்பம் அந்தப் பகுதியிலிருந்த ஹிந்துக்கள், முஸ்லீம்கள் இருவரும்
சேர்ந்து வழிபட்டு வந்த கோவிலுக்குத் தலைமை தாங்கி வந்தது. ஹுசைனி 1946 ஜனவரியில்
நடைபெற்ற தேர்தலில் லீக் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். மக்கள் மீதான தனது
பிடிப்பை மீட்டெடுப்பதற்காக தீவிரவாதத்தில் அவர் லீக் வேட்பாளரைத் தோற்கடிக்க
முடிவு செய்தார். எனவே கல்கத்தாவில் ‘நேரடி நடவடிக்கை தினத்தில்’ நடைபெற்ற
முஸ்லீம்களின் மரணத்திற்குப் பழிவாங்க வேண்டும் என்று அவர் கூக்குரல் எழுப்பினார்.
பெரும்பாலும் ஹிந்துக்களுக்குச் சொந்தமான நிலம், கடைகள் மற்றும் பெண்களைக்
கையகப்படுத்திக் கொள்ளும் பேராசை மற்றும் காமத்தையே உண்மையில் அந்த வன்முறையின்
போது அவர் தூண்டி விட்டார். பஞ்சாபிலும் அதுபோன்ற பேராசையே தேசப்பிரிவினையால்
தூண்டி விடப்பட்ட வன்முறைக்கான முக்கியத் தூண்டுதலாக இருந்தது. பல நூற்றாண்டுகளாக
அமைதியாக இணைந்து வாழ்ந்து வந்த அண்டை வீட்டாரின் துரோகத்தால் சீக்கியர்களிடம்
ஏற்பட்ட கோபத்தின் விளைவாகவே அங்கே வன்முறை அதிகரித்தது. அதற்கு
பிரிட்டிஷ் அரசாங்கமே பெரும்பாலும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. பிரிவினை
என்பதுதவிர்க்க முடியாத ஒன்று என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் லண்டனில்
ரகசியமாக எடுக்கப்பட்ட முடிவால் அவர்கள் ரவி ஆற்றின் எல்லையைச் சீரமைத்ததே அதற்கான
காரணமாக இருந்தது.
பஞ்சாப் ஆளுநரின் கடிதம்
எல்லையைச் சீரமைக்கும் அந்த முடிவு பஞ்சாப் ஆளுநர்
சர் இவான் ஜென்கின்ஸுக்கு தெரிவிக்கப்பட்ட போது அவர் வேதனை நிரம்பிய கடிதம் ஒன்றை
வைஸ்ராய்க்கு எழுதினார். வைஸ்ராயின் மனதை மாற்ற தான் லண்டனுக்கு
வருவதற்கும், எல்லையை செனாப் வழியாக மாற்றியமைப்பதற்கும் அவர் அந்தக் கடிதத்தில்
கேட்டுக் கொண்டிருந்தார். அகாலிகள் தாங்கள் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்க
விரும்புவதாக தெளிவுபடுத்தியிருந்த நிலையில் எல்லையை ரவி ஆற்றுடன் சேர்த்து
வைப்பது பஞ்சாப் சீக்கியர்களில் ஐம்பது சதவிகிதத்தினரை பாகிஸ்தானிற்குள் இருக்க
வைப்பதாகி விடும் என்றும் அவர் தன்னுடைய கடிதத்தில் சுட்டிக் காட்டியிருந்தார்.
‘அந்த முடிவு பணம் எதுவுமின்றி தங்களுடைய நிலங்களை
விட்டு வெளியேறுகின்ற லட்சக்கணக்கான சீக்கியர்களை கிழக்கு பஞ்சாபிற்கு அகதிகளாக
இடம் பெயர வைத்து விடும். ஒரு நூற்றாண்டுக்கும் குறையாமல் தங்களுடைய சாம்ராஜ்யத்தை
தில்லியில் இருந்து கைபர் கணவாய் வரைவைத்திருந்த தற்காப்பு கலை அறிந்த இனமான
சீக்கியர்கள் இந்த முடிவிற்கு எதிராக கிளர்ச்சியில் இறங்குவார்கள். அதன் விளைவாக
உருவாகும் வன்முறை நிச்சயம் புதிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு
அப்பாற்பட்டதாகவே இருக்கும்’ என்றும் அவர் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
செனாப் மீது எல்லையை வைப்பது தொன்னூறு சதவிகித
சீக்கியர்களை இந்தியாவிற்குள்ளேயே இருக்க வைத்து அவர்கள் இடம் பெயர்வதைக்
கணிசமாகக் குறைத்து விடும். மேலும் அதனால் ஏற்படுகின்ற இடையூறுகளைக் கட்டுப்படுத்த
காவல்துறை, ராணுவத்திற்கு வாய்ப்பும் கிடைக்கும். ஆனாலும் சமீபத்தில்
தேர்ந்தெடுக்கப்பட்டு காமன்வெல்த் உறவுகள் அலுவலகத்தால் வழிநடத்தப்பட்ட அட்லியின்
அரசு பஞ்சாப் முழுமையாக பாகிஸ்தானிலேயே இருக்க வேண்டும் என்று விரும்பியது, எனவே
முடிந்தவரை சிறிய அளவில் இந்தியாவிற்கு விட்டுக் கொடுப்பது என்பதில் அது உறுதியாக
இருந்தது, ரவி ஆற்றையொட்டியே பிரிவினை எல்லை அமைய வேண்டும் என்பதிலும் அந்த அரசு
உறுதியுடன் இருந்தது.
ஆளுநர் ஜென்கின்ஸின் எச்சரிக்கை மிகவும்
தீர்க்கதரிசனமானது. 1947ஆம் ஆண்டில் பிரிக்கப்படாத பஞ்சாபில் மக்கள்தொகையில்
பதினெட்டு சதவிகிதம் இருந்த சீக்கியர்களிடம் முப்பது சதவிகித நிலம் இருந்தது.
மொத்தநில வருவாயில் ஐம்பது சதவிகித வருவாயை செலுத்துபவர்களாக சீக்கியர்களே
இருந்தனர். 1857ஆம் ஆண்டு தில்லியை மீண்டும் கைப்பற்ற உதவியதன் மூலம் சீக்கியர்கள்
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றியிருந்தனர். 1914 மற்றும் 1940இல்
ஜெர்மனிக்கு எதிராக பிரிட்டனுக்காகப்
போராடுவதற்கு தங்கள் குடும்பத்தினரை அவர்கள் அனுப்பி வைத்தனர். ஆக பிரிவினைத்
திட்டம் குறித்து அறிய வந்த வேளையில் தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து அவர்களிடமிருந்த
உணர்வை எவராலும் உணர்ந்து கொள்ள முடியும்.
அகாலிகள் ஜின்னாவைக் கொலை செய்வதற்கான
சதித்திட்டத்தைத் தீட்டினார்கள். காவல்துறையினரால் அந்த திட்டம் விரைவாகக்
கண்டுபிடிக்கப்பட்டு முறியடிக்கப்பட்டது. மாஸ்டர் தாரா சிங், கியானி கர்தார்
சிங்மற்றும் பிற அகாலி தலைவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர். அது கிட்டத்தட்ட
அனைவரும் விவசாயிகளாக இருந்த சீக்கியர்களுக்கான தலைவர்களை இல்லாமல் செய்ததுடன்
அவர்களை ஆத்திரமடையவும் வைத்தது.அங்கிருந்து தாங்கள் வெளியேறுவதை அல்லது இறப்பதை
தங்களுடைய முஸ்லீம் அண்டைவீட்டார் எதிர்பார்த்தது மட்டுமல்லாது, தங்களுடைய நிலத்தை
அவர்களுக்கிடையே ரகசியமாக பங்கு போட்டுக் கொள்வதாகச் செய்திகள் அவர்களுக்கு எட்டிய
போது சீக்கியர்களின் கோபம் அனைத்து எல்லைகளையும் தாண்டி கொலைச் செயல் தொடங்கியது.
விருப்பமின்றி நடந்த வெளியேற்றம்
இரண்டு அடுத்தடுத்த அரசாங்கங்கள் பஞ்சாபில்
வன்முறையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஒட்டுமொத்த மக்கள் இடமாற்றத்திற்கான
ஏற்பாடுகளைச் செய்வது என்று எடுத்த முடிவால் சீக்கியர்கள் மட்டுமல்லாது
கிழக்குபஞ்சாபில் இருந்த கணிசமான முஸ்லீம் மக்களும் தங்கள் சொத்துகளை இழக்க
நேர்ந்தது. அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் விருப்பத்திற்கு மாறாகவே அங்கிருந்து
வெளியேறினர். எடுத்துக்காட்டாக 1980 மற்றும்1990களில் பாகிஸ்தானின் புகழ்பெற்ற
பாடகர்களில் ஒருவரான துஃபைல் நியாசியின் குடும்பத்தினர் அமிர்தசரஸில் உள்ள
ஹர்மந்திர் சாஹிப்பில் தலைமுறை தலைமுறையாக கீர்த்தனைப் பாடகர்களாக இருந்து
வந்தனர். அங்கிருந்து வெளியேறிச் செல்வதற்கு அவர்களுக்குவிருப்பமில்லை. ஆனால்
அப்போது நடைபெற்ற ஒட்டுமொத்த மக்கள் இடமாற்றம் சீக்கியர்கள் அல்லது ஹிந்துக்களாக
மாறி அங்கே இருந்து கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி எதுவுமில்லாமல்
செய்துவிட்டது. அவர்கள் அவ்வாறு மாறுவதற்குத் தயாராக இல்லை என்பதால் அங்கிருந்து
அவர்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அவர்கள் மட்டுமே அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களாக
இருக்கவில்லை. முஸ்லீம் ராஜபுத்திரர்களின் ஏராளமான மசூதிகள்,
மதரஸாக்கள் மற்றும் இஸ்லாமிய புலமைமிக்க பாரம்பரியத்துடன் அதிக அளவிலான மக்கள்தொகை
கொண்டதாக கர்னால் பகுதி இருந்து வந்தது. மசூதியைப் போலத் தோற்றமளிக்கும் ஒரு சில
இடிபாடுகள் மட்டுமே இன்று அங்கே எஞ்சியிருக்கின்றன. மசூதிகளுக்கான
நோக்கம் கிட்டத்தட்ட முற்றிலும் மறந்து போய்விட்ட நிலையில் அவை குறித்த மங்கலான நினைவு
யாரிடமும் காணப்படவில்லை.
பாகிஸ்தான் சுதந்திர தினத்தை ‘பிரிவினையின்
கொடூரங்கள்’ தினமாக நினைவுகூரும் எண்ணத்திலிருந்து பின்வாங்குகின்ற அதே நேரத்தில்
ஒருபோதும் நாம் கடந்தகாலத் தவறுகளை மீண்டும் செய்து விடக் கூடாது. மூன்றாயிரம்
ஆண்டுகாலமாக ஏற்கனவே இங்கே இருந்தவர்கள் மற்றும் புதிதாக வந்தவர்களின் கருத்துகள்,
நம்பிக்கைகளுக்கு இடையிலான சகவாழ்வை உருவாக்கி வைத்திருக்கும் இந்தியாவில்
இருக்கின்ற மதங்களின் தனித்துவமான சகிப்புத்தன்மையை, ஒத்திசைவான இணைவை
வேண்டுமென்றே அழிப்பதை ஒருபோதும் நாம் அனுமதித்து விடக் கூடாது, எவ்விதத்திலும்
நாம் அதில் பங்கேற்று விடக் கூடாது என்பதற்காக பிரிவினையின் கொடூரங்களை நாம்
நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். ஏற்கனவே
சேதப்படுத்தப்பட்டுள்ள அனைவரையும் அரவணைத்துச் செல்லும் நாகரிகத்தை முழுமையாக
அழித்திடும் முயற்சிகளை மோடி ஒருபோதும் கைவிடப்போவதில்லை. அவர் வெற்றி பெறுவதற்கு
ஒருபோதும் நாம் அனுமதித்து விடக் கூடாது.












Comments