வங்கதேச திரைப்படத் தயாரிப்பாளர் தன்வீர் மொகம்மெல் உடன் ஓர் உரையாடல் ( 2017)

   டெய்லி ஸ்டார்

2017 ஆகஸ்ட் 25

தன்வீர் மொகம்மெல்

வங்கதேசத்தைச் சார்ந்த தன்வீர் மொகம்மெல், விருது பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். நொதிர் நாம் மதுமதி (1995), லால்சாலு (2001), ஜிபோந்துலி (2014) போன்ற படங்களில் இடம் பெற்றிருந்த வரலாற்று, அரசியல் வர்ணனைகள்  விமர்சனரீதியாக அவருக்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தன. பிரிவினை மீது மிகவும் விரிவான முறையில் கவனம் செலுத்திய வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரே திரைப்படத் தயாரிப்பாளராக மொகம்மெல் இருந்து வருகிறார். ஏழு தேசிய விருதுகளை வென்றுள்ள அவரது திரைப்படமான சித்ரா நொதிர் பாரே (1999) அப்போதைய கிழக்கு பாகிஸ்தானில் இருந்த ஹிந்து குடும்பம் ஒன்றின் வாழ்க்கையைச் சொல்கிறது. மொகம்மெலின் சமீபத்திய தயாரிப்பான சீமந்தோரேகா வங்காளப் பிரிவினை, தன்னிச்சையாகப் பிரிக்கப்பட்ட எல்லைகள்,   இடம்பெயர்ந்த மக்கள் மீது அவை ஏற்படுத்திய விளைவுகள் குறித்த ஆவணப்படமாகும். அந்த ஆவணப்படம் தயாரிப்புக்குப் பிந்தைய கட்டத்தில் இருந்து வருகின்றது.

தனது படங்களில் 1947ஆம் ஆண்டிற்கான முக்கியத்துவம் மற்றும் வரலாற்றை ஆவணப்படுத்துவதில் கலைஞர்களின் பங்கு குறித்து ஸ்டார் வீக் எண்ட் பத்திரிகையுடனான உரையாடலின் போது குறிப்பிட்ட மொகம்மெல் பிரிவினையைச் சுற்றி எழுந்த பிரச்சனைகள் குறித்தும், வங்கதேச திரைப்படத் தயாரிப்பாளர்களிடையே இருக்கின்ற மறதிநோய் பற்றியும் பேசினார்.   

பிரிவினை உங்கள் வாழ்க்கையிலும், தயாரிப்புகளிலும் ஏன் மிகவும் முக்கியமான இடத்தைப் பெறுகிறது?    

அதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக நினைக்கிறேன். முதலாவதாக நான் தற்போதைய சமூகத்தில் நாம் அனுபவித்து வருகின்ற அனைத்து முரண்பாடுகளுக்கும் 1947 பிரிவினையே மூலகாரணமாக இருப்பதாக எனது நனவு மனதில், சமூக-அரசியல்-அறிவுசார் தளத்தில் நம்பிக்கை கொண்டவனாக இருக்கிறேன். 

மற்றொரு காரணம் என் ஆழ்மனதிற்குள் ஊடுருவியிருப்பதாக நினைக்கிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான கலாச்சார நிறுவனமாக வங்காளம் இருந்து வருகிறது. அதைப் பிளவுபடுத்தியதன் மூலம் வங்காள அடையாளத்தின் இருப்பு, உணர்வுகள் மற்றும் எங்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ள கலாச்சாரப் பண்புகள் என்று அனைத்தும் சிதைக்கப்பட்டுள்ளன. வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில் சோமோடாட், ரார், ஹரிகல், பரேந்திரா என்று வெவ்வேறு மாநிலங்களாக வங்காளம் பிளவுபட்டது என்பது உண்மைதான். ஆனாலும் 1947 பிரிவினைக்கு முன்பாக ஏற்பட்ட பிரிவினைகள் எவையும் ஒருபோதும் 1947ஆம் ஆண்டு பிரிவினை அளவிற்குத் தீர்க்கமானவையாக, முழுமையானவையாக இருந்ததில்லை. 1947க்கு முன்பாக ஒருபோதும் வங்காள மக்களிடையே முள்வேலி அமைக்கப்படவில்லை. ஆக அந்த 1947ஆம் ஆண்டு பிரிவினை பெரும் இழப்பு உணர்வுடன் என்னைத் தாக்கி வேட்டையாடி இருப்பதாலேயே அது மீண்டும் மீண்டும் எனது திரைப்படங்கள், எழுத்துக்களில் மையக்கருத்தாக தோன்றிக் கொண்டே இருக்கிறது.     

சித்ரா நொதிர் பாரே திரைப்படத்திலிருந்து

அதிகம் பேசப்படாத 1964 கலவரம், ஹிந்து மக்கள் இந்தியாவிற்கு இடம்பெயர்வது குறித்து உங்களுடைய சித்ரா நொதிர் பாரே என்ற திரைப்படம் பேசுகிறது. அந்த நிகழ்வுகளை ஒரு களமாக ஏன் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்கள்?     

கலைஞர் ஒருவர் பொதுவாக தான் பார்த்ததை அல்லது அனுபவித்ததையே தனது படைப்புகளில் சித்தரிக்கின்றார். நான் 1964 கலவரத்தைப் பார்த்தவன். அந்த நேரத்தில் சிறுவனாக இருந்த போதிலும் அது இன்னும் எனக்குத் தெளிவாக நினைவில் இருக்கிறது. நான் குல்னாவில் வளர்ந்தவன். 1964 கலவரத்திற்கு முன்பாக குல்னா பெருமளவிலான ஹிந்து மக்கள்தொகையுடன் இருந்து வந்தது. அப்போது குல்னா மாவட்டத்தில் ஹிந்து மக்கள் 51 சதவீதம் என்ற அளவில் பெரும்பான்மையுடன் வாழ்ந்து வந்ததால் பள்ளியில் படிக்கும் காலத்தில் எனது சிறுவயது நண்பர்களும், எங்கள் பகுதியைச் சேர்ந்த என்னுடன் விளையாடிய சிறுவர்களும் பெரும்பாலும் ஹிந்துக்களாகவே இருந்தனர். 1964 கலவரத்திற்குப் பிறகு அவர்கள் குல்னாவை விட்டு (அப்போதைய கிழக்கு பாகிஸ்தானிலிருந்து) வெளியேறினர். என்னைப் பொறுத்தவரை மிகப் பெரிய அதிர்ச்சியை அளிப்பதாகவே அது இருந்தது. இன்றைக்கும்கூட என்னுடைய குழந்தைப் பருவ நண்பர்களை நான் இழந்தே நிற்கிறேன்!       

தவிர என்னுடைய அம்மா மிகவும் தைரியமான பெண்மணி. உள்ளூர் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் இருந்து வந்தார். கலவரத்தால் பாதிக்கப்பட்ட நாட்களில் ரிக்சாவில் குல்னா நகரைச் சுற்றி வரும் என்னுடைய அம்மா தன்னுடைய ஹிந்து சகாக்கள் அல்லது மாணவர்களை - பெரும்பாலும் மாணவிகளை - அவருக்குத் தெரிந்த குடும்பத்தினரை எங்கள் வீட்டிற்கு தன்னுடனே அழைத்துக் கொண்டு வருவார். அந்தக் குடும்பங்கள் கலவரத்தின் போதும் அதற்குப் பிறகும் பல வாரங்கள் ‘மொகம்மெல் மஞ்சில்’ என்றழைக்கப்பட்டு வந்த எங்கள் வீட்டின் தரைத்தளத்திலே தங்கியிருப்பார்கள். கவலை தோய்ந்த அவர்களுடைய முகங்கள் என்னுடைய மென்மையான இளம் மனதில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. ஆறாம் வகுப்பு படிக்கும் போது - அதாவது என்னுடைய பதினோராவது வயதிலேயே - கிழக்கு வங்கத்தில் ஹிந்துக்கள் அடைந்த துயரங்களைப் படமாக்க முடிவு செய்து அந்தப் படத்திற்கு சித்ரா நொதிர் பாரே என்று தலைப்பு வைக்க வேண்டும் என்று நான் முடிவு செய்ததை அறிந்தால் நீங்கள் உண்மையில் ஆச்சரியப்படுவீர்கள்!  

சித்ரா நொதிர் பாரே திரைப்படத்திலிருந்து

‘சித்ரா நொதிர் பாரே’ என்ற அந்தப் பெயர் ஏனென்றால், 1960களில் என் தந்தை சித்ரா நதிக்கரையில் இருந்த நராயில் என்ற சிறுநகரத்தில் மாஜிஸ்திரேட்டாகப் பணிபுரிந்து வந்தார். அங்கிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்து சென்ற பல குடும்பங்கள், இடம் பெயரத் தயாராகிக் கொண்டிருந்த குடும்பங்கள் அல்லது வெளியேறி விடுவதா, வேண்டாமா என்பதை முடிவெடுக்க முடியாதிருந்த குடும்பங்கள் இன்னும் என்னுடைய நினைவில் இருக்கின்றன. நராயிலில் எங்கள் வீட்டிற்கு அருகில் ஹிந்து வழக்கறிஞர் ஒருவரின் குடும்பம் வசித்து வந்தது. அந்த குடும்பத்துப் பெண்கள் என் சகோதரிகளுடைய தோழிகளாக இருந்தனர். ஒருநாள் அந்த வழக்கறிஞர் 'மொகம்மெல் சாஹேப், இந்த நராயிலை விட்டு ஒருபோதும் நான் பிரிந்து செல்ல மாட்டேன். சித்ரா நதிக்கரையைத் தவிர சொர்க்கத்தில் கூட என்னால் மகிழ்ச்சியுடன் இருக்க முடியாது’ என்று என் தந்தையிடம் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். அவ்வாறு அவர் கூறியதும் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். சித்ரா நொதிர் பாரே படத்தின் முக்கிய கதாநாயகனான வழக்கறிஞர் சசிகாந்த சென்குப்தா ஓரளவிற்கு கிழக்கு வங்காளத்தை விட்டு வெளியேற மறுத்த அந்த ஹிந்து வழக்கறிஞரை மாதிரியாகக் கொண்டவராகவே இருந்தார்.          

ஒருமுறை மேகே தகா தாரா, சுபர்ணரேகா, கோமோல் கந்தர் என்ற தனது மூன்று படங்களுக்கிடையில் உள்ள தொடர்பு இரண்டு வங்காளப் பகுதிகளை ஒன்றிணைப்பதாக இருக்கிறது என்று ஒரு நேர்காணலின் போது ரித்விக் கட்டக் கூறியிருந்தார். சித்ரா நொதிர் பாரேவில் வருகின்ற சசிகாந்தாவின் மகன் 1947க்குப் பிறகு கொல்கத்தாவிற்குச் சென்று விட்டிருந்த போதிலும், சசிகாந்த சென்குப்தாவும், அவரது மகளாக அந்தப் படத்தின் முன்னணி பெண் கதாபாத்திரமாக வருகின்ற மினோதியும் கொல்கத்தாவுக்கு குடிபெயர்ந்து செல்வதை வெறுப்பதாகவே தோன்றுகிறது. பிரிவினை குறித்த உங்களுடைய சித்தரிப்பிற்கும், ரித்விக் கட்டக்கின் சித்தரிப்பிற்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை நீங்கள் எவ்வாறு வரையறுப்பீர்கள்?

ரித்விக் கட்டக் மிகச் சிறந்த திரைப்படத் தயாரிப்பாளர். எனது சுமாரான திரைப்பட முயற்சிகளுடன் அவரது படைப்புகளை நீங்கள் ஒப்பிடக் கூடாது. நீங்கள் குறிப்பிட்ட கட்டக்கின் அந்த மூன்று திரைப்படங்களும் 1947 பிரிவினை குறித்த முத்தொகுப்பு ஒன்றை உருவாக்கியுள்ளான. தாய்-தெய்வத்தின் குறியீடுகள், உருவகங்களால் நிரம்பியுள்ள ரித்விக்கின் திரைப்படங்கள் பிரிவினையால் கிழக்கு வங்கத்தில் இருந்து பிடுங்கியெறியப்பட்ட அகதிகளின் குடும்பங்களில் ஏற்பட்ட துயர விளைவுகளைக் காட்டுவதாகவே அமைந்திருந்தன.    

கட்டக்கின் படங்களில் பிளவுபட்ட வங்காளத்தின் வேதனைகளும், துயரங்களும் சோகமான, தொன்மையான பரிமாணத்தில் காணப்பட்டன. மறுபுறத்தில் என்னுடைய சித்ரா நொதிர் பாரே படம் பெரும்பாலும் இழப்பு உணர்வை - அந்த நிலத்தில் கலாச்சார ரீதியாக வளமாக இருந்த ஹிந்து மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்ததால் கிழக்கு வங்காளம் அடைந்த இழப்பைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. சித்ரா நொதிர் பாரே மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவான மிக எளிய முயற்சியாகும். அது 16 மிமீ ஃபிலிமில் எடுக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். என்னுடைய படத்தை ரித்விக் கட்டக்கின் தலைசிறந்த படைப்புகளுடன் ஒப்பிட முடியாது. வங்காளப் பிரிவினை குறித்து இருந்த ஆழ்ந்த இழப்பு உணர்வு மட்டுமே திரைப்படத் தயாரிப்பாளர்களாகிய எங்கள் இருவரிடையே இருக்கக்கூடிய பொதுவான ஒப்பீடாக இருக்கிறது. பிரிவினையால் ஏற்பட்ட துயர விளைவுகளை எல்லையின் அந்தப் பக்கத்திலிருந்து அவர் காட்டியுள்ளார். அதையே எல்லையின் இந்தப் பக்கத்திலிருந்து காட்ட நான் முயன்றிருக்கிறேன்.      

சீமந்தோரேகாதிரைப்படத்திலிருந்து

உங்கள் புதிய படைப்பான சீமந்தோரேகா (எல்லைக்கோடு) குறித்து கொஞ்சம் சொல்லுங்களேன். அந்தப் படத்திற்கான படப்பிடிப்புக்கு நீங்கள் எந்த எல்லைப் பகுதிகளைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

வங்காளப் பிரிவினை பற்றிய இரண்டரை மணி நேர ஆவணப்படமாக சீமந்தோரேகா உள்ளது. இந்த 2017ஆம் ஆண்டு 1947 பிரிவினையின் எழுபதாண்டு நிறைவு ஆண்டாக அமைந்துள்ளது. எழுபது நீண்ட ஆண்டுகள் நம்மைக் கடந்து சென்றிருக்கின்றன. பிரிவினையின் மூலம் யார் லாபம் அடைந்தார்கள், யாருக்கு நட்டம் ஏற்பட்டது என்று அந்த வரலாற்று நிகழ்வைத் திரும்பிப் பார்க்க வேண்டிய நேரம் இது. இந்த ஆவணப்படம் மனிதர்களின் கதைகள் மூலம் வரலாற்றைப் பகுப்பாய்வு செய்து பார்த்திருக்கிறது. மேலும் அது பிரிவினையுடன் தொடர்புடைய மனித இழப்புகளையும் சித்தரித்திருக்கிறது. மூன்று ஆண்டுகள் சீமந்தோரேகா ஆவணப்படத்திற்கான ஆய்வுகளை நாங்கள் மேற்கொண்டிருந்தோம். இப்போது அதன் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. தற்போது படத்தின் ஒலிப்பதிவு மற்றும் தயாரிப்புக்கு பிந்தைய பிற கூறுகளை உருவாக்கி வருகின்றோம். அடுத்த மாதத்தில்  படம் வெளியாகும்.         

சீமந்தோரேகா திரைப்படத்திலிருந்து

இரண்டு வங்காளங்களுக்கிடையில் அமைந்திருக்கும் எல்லைக் கோடு  உண்மையில் என்ன பொருளில் உள்ளது என்பதைக் கண்டறிவதே இந்த ஆவணப்படத்தின் ஒரே நோக்கமாக இருந்தது. அந்த எல்லைக்கோடு எவ்வாறாக அமைந்துள்ளது? வங்கதேசம், இந்தியா ஆகிய இரண்டு இறையாண்மை அரசுகளுக்கிடையேயான எல்லையில் அமைக்கப்பட்ட முள்வேலியாகவா? அல்லது ஹிந்துக்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு இடையில் வரையப்பட்டுள்ள எல்லைக் கோடாகவா? கிழக்கு வங்காளம் மற்றும் மேற்கு வங்காள மக்களிடையே இருக்கும் கலாச்சாரம், நடத்தை வேறுபாடுகள் குறித்த பண்புகளை முன்னிலைப்படுத்தும் வகையில் வரையப்பட்டுள்ள கோடாகவா? அல்லது நாம் ஒன்றிணைந்து விடாதவாறு நம்முடைய இதயங்களுக்குள் கண்ணுக்குத் தெரியாதவாறு அந்தக் கோடு வரையப்பட்டிருக்கின்றதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை ஆய்ந்தறிந்து கண்டறியும் முயற்சியாகவே அந்த ஆவணப் படம் அமைந்துள்ளது.  

அந்தப் படத்தை முக்கியமாக வங்கதேசம், இந்திய எல்லைப் பகுதிகளில் உள்ள பல இடங்களில் நாங்கள் படமாக்கியிருக்கிறோம். கிழக்கு வங்காளத்தில் இருந்து சென்ற அகதிகள் மேற்கு வங்கத்தில் தஞ்சம் அடைந்த கூப்பர் முகாம், துபுலியா முகாம், பத்ரகாளி முகாம் போன்ற அகதி முகாம்களில் நாங்கள் படப்பிடிப்பை நடத்தினோம். கிழக்கு வங்காளத்தில் இருந்து அகதிகள் அனுப்பி வைக்கப்பட்ட மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் உள்ள தண்டகாரண்யாவிலும், உத்தரகாண்டில் உள்ள நைனிடாலிலும் நடந்த படப்பிடிப்பு கிழக்கு வங்காள அகதிகள் சிலர் மீள்குடியேற்றப்பட்டிருந்த அந்தமானிலும் தொடர்ந்தது.  

கிழக்கு, மேற்கு வங்காளத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட படப்பிடிப்புகள் தவிர அசாம், திரிபுராவிலும் நாங்கள் படப்பிடிப்பை நடத்தியிருக்கின்றோம். கிழக்கு வங்காளம் பிரிவினையால் இந்த இரண்டு அண்டை நாடுகளுக்கிடையே இருந்து வந்த தன்னுடைய வரலாற்றுத் தொடர்புகளை (இப்போது வங்கதேசம்) இழந்திருக்கிறது. நாங்கள் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்த மக்களின் துயரம் போன்ற 1947ஆம் ஆண்டின் வெவ்வேறு வெளிப்பாடுகளை, குறிப்பாக அதனால் உருவான  மனித இழப்புகளை ஆவணப்படத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று விரும்பினோம். ஒரு கலைஞனாக என்னிடம் மனிதம் குறித்த முக்கியமான கவலையே மேலோங்கி இருந்தது.    

வாய்வழி வரலாறுகளைச் சேகரிக்கும் செயல்முறை எவ்வாறு இருந்தது? நீங்கள் கேட்ட அந்தக் கதைகளில் உங்களை மிகவும் கவர்ந்தது எது?   

முடிந்தவரையிலும் பிரிவினையின் அதிர்ச்சிகரமான நாட்களை தனிப்பட்ட முறையில் அனுபவித்திருந்த பலரையும் படம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் மேலோங்கி இருந்தது. எல்லையின் இருபுறமும் நாங்கள் வேலை செய்தோம். தாய்நாட்டிலிருந்து இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஒவ்வொருவரின் கதையும் அவலம் நிறைந்ததாக, சோகத்தை எற்படுத்துவதாகவே இருந்தது. மேற்கு வங்கத்தின் மிகப் பழைய, வெறிச்சோடிய அகதி முகாம்களில் இன்றைக்கும் வாழ்ந்து வருகின்ற, அதிகாரிகளால் 'பிஎல்' அல்லது 'நிரந்தரக் கடன்கள்' என்று அழைக்கப்படுகின்ற வயதான பெண்கள் சிலரின் கதைகளே எங்களை மிகவும் கவர்ந்தன. அவர்கள் நமது மனசாட்சியில் நிரந்தரக் கடன்களாக ஆகியுள்ளனர்! துரதிர்ஷ்டவசமான அந்த வயதான பெண்மணிகளே என்னைப் பொறுத்தவரை 1947 பிரிவினை ஏற்படுத்திய துயரத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.        

சீமந்தோரேகாதிரைப்படத்திலிருந்து

பெருநிறுவனங்கள், லாபம் போன்றவற்றால் திரைப்படங்கள் இயங்கி வருகின்ற இந்தக் காலகட்டத்தில் அரசியல், வரலாற்றுத் தன்மை கொண்ட சீமந்தோரேகா போன்ற திரைப்படங்களை எடுப்பதில் உங்களுக்கு இருந்த சவால்கள் எவை?

இந்த வகையான ஆவணப்படங்களுக்கான ஆதரவு என்றில்லாது அவை குறித்த புரிதலே வங்கதேசத்தில் இல்லாதிருக்கின்ற நிலைமையில் எந்தவொரு தீவிர ஆவணப்படத்தையும் இங்கே உருவாக்குவது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கின்றது. இரண்டு வங்காளம், அசாம், திரிபுரா, அந்தமான் என்று இந்த ஆவணப்படத்தின் எல்லை மிகப்பெரியதாக இருந்ததால் அது குறித்த ஆய்வுகளும் எங்களுக்கு மிகப் பெரிய சவால்களாகவே இருந்தன. ஆய்வுகளுக்கென்று நாங்கள் மூன்று ஆண்டுகளைச் செலவிட்டிருந்தோம். அந்த ஆய்வுகள் மிகவும் கடினமாவையாக, எங்களுடைய பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொள்வதாக இருந்ததைக் குறிப்பிட்டுச் சொல்லத் தேவையில்லை. நாங்கள் பலமுறை எல்லையைக் கடக்க வேண்டியிருந்ததால் சில நேரங்களில் படப்பிடிப்பு வேலைகள் எங்களுக்குப் பிரச்சனைகளையே ஏற்படுத்திக் கொடுத்தன. வங்கதேச, இந்திய எல்லைப் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்துவது ஒன்றும் எளிதான காரியமாக இருக்கவில்லை.       

சீமந்தோரேகா (எல்லைக்கோடு)

நிதிப் பிரச்சனையும் எங்களுக்கு கடுமையான சிக்கலை ஏற்படுத்தியது. வங்கதேசத்தில் சினிமா லாப நோக்கத்தை மட்டுமே கொண்டதாக இருப்பதால் இதுபோன்றதொரு லாப நோக்கற்ற படத்தயாரிப்பிற்கு எந்தவொரு தயாரிப்பாளரும் தயாராக இருக்கவில்லை. இந்த வகையான சினிமாக்களுக்கு உதவுவதற்கென்று சில நாடுகளில் கலை ஆதார அமைப்புகள், ஆய்வு நிறுவனங்கள் உள்ள போதிலும் வங்கதேசத்தில் அவ்வாறு எதுவும் இருக்கவில்லை. அதனால் என்னிடமிருந்த மிகச் சிறிய அளவிலான பணத்துடன் எனது நண்பர்கள், நலம் விரும்பிகளிடமிருந்து உதவிகள், கடன்களைப் பெற்றுக் கொள்வது என்று முடிவெடுத்து படத்திற்கான வேலைகளை ஆரம்பித்தேன். அதனாலேயே சீமந்தரேகாவின் படப்பிடிப்பு வேலைகள் மெதுவாக நடந்தன - பெரும்பாலும் மிகுந்த வலியுடன் மிகமிக மெதுவாக! எனக்கு கிடைத்த உதவிகள் அனைத்தும் ஒரு கட்டத்தில் இல்லாமல் போய் விட்ட நிலையில் கூட்டு நிதிநல்கை மூலம் படத்தை முடிப்பதற்கான வேண்டுகோளை முன்வைத்தோம். அது நன்றாகவே வேலை செய்தது. படத்திற்குத் தேவையான நிதியை அளிக்க பலரும் முன் வந்தனர். படத்திற்கான பெரும்பகுதி பணத்தை நன்கொடையாக அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் தேவஷிஷ் மிருதா, அவரது  மனைவி திருமதி சினு மிருதா எங்களுக்கு அளித்தனர். எனது படக்குழுவினரும், நானும் அவர்களுக்கு நன்றியுடையவர்களாக இருக்கின்றோம். கூட்டு நிதிநல்கை மூலம் வங்கதேசத்தில் எடுக்கப்பட்ட முதல் ஆவணப்படமாக சீமந்தோரேகா இருக்கிறது.      

பிரிவினை போன்றதொரு சோகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் கலைஞர்களின் பங்கு என்னவாக இருக்கிறது? பிரிவினையின் போது மனிதர்களுக்கு ஏற்பட்ட துயரங்களைச் சித்தரிப்பது வரலாற்றாசிரியர்களைக் காட்டிலும் கலைஞர்களுக்கு எளிதாக இருக்குமா?  

வரலாற்றைச் சித்தரிக்கும் போது உண்மைகளைத் தேடுவது, கண்டறிவது என்று கலைஞர்கள், வரலாற்றாசிரியர்களின் வேலைகள் ஓரளவிற்கு ஒன்றாகவே இருக்கின்றன. கலைஞர் என்பதாலேயே ஒருவர் உண்மைகளற்று இருப்பாரேயானால் அவரை மன்னிக்கவே முடியாது! முடிந்தவரை வரலாற்றை உண்மையாக முன்வைப்பதில் ஒருவர் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதால் ஆய்வுப் பணிகள் மிகவும் கடினமானகவே இருக்கும். 1947ஆம் ஆண்டு நடந்த வங்காளப் பிரிவினை தவறுகள் எதுவுமில்லாத ஆய்வுகள் உங்களிடம் இருக்க வேண்டிய உணர்வுப்பூர்வமான விஷயமாகும்.    

வரலாற்றாய்வாளருக்கு வரலாற்று நிகழ்வுகளை பரந்த தூரிகை மூலமாகச் சித்தரிக்கின்ற சுதந்திரம்  இருக்கலாம். ஆனால் கலைஞர்களாகிய எங்களால்  அவ்வாறிருக்க முடியாது. நாங்கள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நிஜமனிதர்கள், அவர்களுடைய தனிப்பட்ட கதைகள், அனுபவங்கள், உணர்வுகள் அனைத்தையும் படம் பிடித்துக் காட்ட வேண்டும். அவர்களுடைய கண்ணோட்டங்களிலிருந்து வரலாற்று நிகழ்வுகளையும், அவர்களின் வாழ்க்கை மீதான அந்த நிகழ்வுகளின் தாக்கங்களையும் முன்வைப்பதில் நாங்கள் மிகுந்த கவனத்துடனே இருந்தாக  வேண்டும்.

இறுதியாக படம் சத்யம்-சிவம்-சுந்தரம் என்று அழகியல் முறையில் வழங்கப்பட வேண்டும். ஒரு கலைஞனாக எனது படைப்பை உண்மையுடன் அதே நேரத்தில் முடிந்தவரை அழகியல் ரீதியாக நான் முன்வைத்திட வேண்டும் என்பதால் வரலாற்றை - குறிப்பாக 1947 வங்கப் பிரிவினை போன்றதொரு மாபெரும் வரலாற்றுச் சோகத்தை - முன்வைப்பதில் கலைஞர்கள் முன்பாக சில சவால்கள் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.   

1947 பிரிவினை குறித்து மற்ற வங்கதேச திரைப்படத் தயாரிப்பாளர்கள் எடுத்துள்ள படங்களில் மறதி நோய் இருப்பதாகக் கூறலாமா? அது ஏன் அவ்வாறாக உள்ளது?

இந்தக் கேள்விக்கான பதில் ஆம் என்றிருப்பதாகவே நான் கருதுகிறேன். வங்கதேசத் திரைப்படத் தயாரிப்பாளர்களிடையே 1947 பிரிவினை குறித்த மறதி நோய் இருக்கத்தான் செய்கிறது. வங்கதேச இலக்கியத்தில் பிரிவினை குறித்த சில நல்ல அர்த்தமுள்ள படைப்புகள் இருக்கின்ற போதிலும் அது துரதிருஷ்டவசமாக சினிமாவில் காணப்படவில்லை.  

வரலாறு குறித்த பொதுவான போதாமையே அதற்கான காரணம் என்று நான் நினைக்கிறேன். வரலாறு குறித்த உணர்வு வணிக சினிமாவில் மிகக் குறைவாக இருப்பதை அல்லது இல்லாமலே இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இங்கே 1971 விடுதலைப் போர் போன்ற அண்மைக்கால, வீரம் செறிந்த நிகழ்வுகள் கூட ஏறக்குறைய தவற விடப்பட்டுள்ளன. 1947 என்பது மிகவும் பழைய, கடந்த காலத்து நிகழ்வாகவே இங்கே இருந்து வருகிறது!     

மாற்றுத் திரைப்பட சூழலில் சில படங்கள் வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் உருவாக்கப்பட்டிருப்பதையும் நம்மால் காண முடிகிறது. ஆனாலும் துரதிருஷ்டவசமாக 1947 பிரிவினையின் துயரத்தை வெளிப்படுத்துகின்ற ஒரே படமாக என்னுடைய சித்ரா நொதிர் பாரே மட்டுமே இருக்கின்றது.

பிரிவினை வங்கதேச திரைத்துறையை எந்த அளவிற்குப் பாதித்துள்ளது?

திரைத்துறையின் மீது பிரிவினையின் நேரடித் தாக்கம் அல்லது தொடர்பு இருக்கவில்லை என்றாலும் மறைமுகமான தாக்கம் இருந்திருக்கிறது. வங்காள சினிமா முழுக்க கொல்கத்தாவையே மையமாகக் கொண்டிருந்தது. கிழக்கு வங்காளத்தில் திரைப்படத் தொழில் அமைந்திருக்கவில்லை. ஆனால் 1947 பிரிவினையால் கிழக்கு வங்காளம் பாகிஸ்தானின் தனி மாநிலமாக மாறிய போது திரைப்படத் துறைக்கான அவசியம் டாக்காவில் உணரப்பட்டது. ஐக்கிய முன்னணி (ஜுக்டோ முன்னணி) அரசாங்கத்தில், 1956இல் அப்போது இளம் அமைச்சராக இருந்த வங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் முயற்சியால் திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (FDC) உருவாக்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக அந்தக் கழகம் உருவாவதற்குப் பின்னணியில் இருந்து வேலை செய்த நல்லெண்ணங்கள் அனைத்தும் தோல்வியடைந்தன - மிக மோசமாகத் தோல்வியடைந்து போயின.     

https://www.thedailystar.net/star-weekend/rendering-the-great-sense-loss-1947-through-film-1452523


சீமந்தோரேகா https://www.youtube.com/watch?v=d0BD_hpmppo

சித்ரா நொதிர் பாரே https://www.youtube.com/watch?v=AmYt8y7yuiY&t=1573s

Comments