பிரியங்கா ராய்
டெலிகிராப் இந்தியா
அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு எந்தவொரு
அறிமுகமும் தேவைப்படப் போவதில்லை. இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில்
ஒருவராக, நம்முடைய திரைப்படங்களை உலக அளவில் மிகப் பெரிய தளங்களுக்கு எடுத்துச்
சென்ற மனிதர். திரைப்படத் தயாரிப்பாளராக 1970களில் மலையாள சினிமாவின் புதிய
அலைகளைத் தொடங்கி வைத்த அவர் ஐம்பதாண்டுகளாக நீடித்த தனது சினிமா வாழ்க்கையில்
ஏறத்தாழ ஒரு டஜன் திரைப்படங்களை உருவாக்கியுள்ளார். ஒரு மனிதனை மட்டுமே முன்னிறுத்திய மம்முட்டி நடித்த
மதிலுகள், கோபாலகிருஷ்ணனின் நாற்பத்தைந்து ஆண்டு காலப் பயணத்தை உருவகப்படுத்திய கதாபுருஷன்,
மனித உணர்வுகளின் இடைவெளிகளை ஆராய்ந்த நிழல்குத்து, தனித்துவமான தனிநபர் குறித்த படமான
அனந்தரம் என்று அவரது ஒவ்வொரு படமும் உலகம் முழுக்க விவாதிக்கப்பட்டு
பாராட்டப்பட்டுள்ளது. வெனிஸ், கேன்ஸ், டொராண்டோ போன்ற சர்வதேச
திரைப்பட விழாக்களில் அவரின் அனைத்து திரைப்படங்களும் திரையிடப்பட்டுள்ளன. தேசிய
விருதை பதினாறு முறையும், கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகளை பதினேழு முறையும் அவர்
பெற்றிருக்கிறார்.
பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் விருதுகளைப் பெற்ற கோபாலகிருஷ்ணன்
2004ஆம் ஆண்டு தாதாசாகேப் பால்கே விருதையும் பெற்றார். பல சர்வதேச திரைப்பட விழாக்களில்
நடுவராக இருந்து உலகெங்கிலும் தன்னுடைய வெற்றியை நாட்டியுள்ள அவர் இந்திய திரைப்பட
மேம்பாட்டுக் கழகம், புனேவில் உள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி
நிறுவனம் போன்ற நிறுவனங்களிலும் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். ‘அடூர்
கோபாலகிருஷ்ணன் திரைப்பட காப்பகம் மற்றும் ஆராய்ச்சி மையம்’ என்ற பெயரில்
காப்பகத்துடன் இணைந்த ஆய்வு மையத்தை விஸ்கான்சின்-மில்வாக்கி பல்கலைக்கழகம் நிறுவியுள்ளது.
கோபாலகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட
திரைப்படங்கள், ஆவணப்படங்களின் 35மிமீ பிரிண்டுகளை ஆய்வு மாணவர்கள் அங்கே காண
முடியும்.
கடைசியாக 2016ஆம் ஆண்டு திரைப்படம் ஒன்றை எடுத்துள்ள
கோபாலகிருஷ்ணனுக்கு தற்போது 2021 ஜூலை 03 அன்று எண்பது வயதாகியுள்ளது. அவர் இன்னும்
தன்னுடைய நகைச்சுவை உணர்வையோ அல்லது கலை ஆர்வத்தையோ இழந்து விடாமலேயே இருந்து
வருகிறார். அந்த பண்பே அவரை நம்மிடையே வாழ்ந்து வருகின்ற சிறந்த திரைப்படத் தயாரிப்பாளர்களில்
ஒருவராக ஆக்கியுள்ளது. சிரிப்பு, உண்மைகளால் நிரம்பி வழிந்த அவருடனான சுதந்திரமான
உரையாடலின் போது எங்களால் அதைக் கண்டறிந்து கொள்ள முடிந்தது.
கல்கத்தாவைப் பற்றி முதலில்
பேசலாம். கல்கத்தா மீது உங்களுக்கு இருக்கின்ற ஆர்வம் குறித்து நீங்கள் தொடர்ந்து
பேசி வந்திருக்கிறீர்கள். திரைப்படத் தயாரிப்பாளர்களான சத்யஜித்ரே, மிருணாள் சென்
ஆகியோருடன் உங்களுக்கு எப்போதும் உறுதியான நட்பு இருந்து வந்திருக்கிறது..
ஆரம்ப காலகட்டத்தில் கல்கத்தாவுக்குச்
செல்லும்போதெல்லாம், நேரில் சென்று ரேயைப் பார்க்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக
இருந்து வந்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை அவர் உங்கள் நகரத்துடனான முக்கிய
இணைப்பாக இருந்து வந்தார். நிறைய நேரத்தை நான் அவருடன் செலவிடுவேன். என்னுடைய
படத்திற்கான திரையிடலுக்கு அவரை அழைப்பேன். திரையிடலுக்கு அடுத்த நாள்
அவர் என்னை அந்த திரைப்படம் பற்றிப் பேசுவதற்காக தன்னுடைய வீட்டிற்கு வருமாறு
அழைப்பார். எங்களுக்கிடையே அது வழக்கமான விஷயமாக இருந்து வந்தது.
ரே போய் விட்ட பிறகு அது மிருணாள் சென்
என்றானது... மிருணாள்தா... ரேயுடன் இருந்ததைப் போன்ற உறவு எனக்கு மிருணாள்தாவுடனும்
இருந்து வந்தது. மிருணாள்தா மிக நீண்ட காலம் வாழ்ந்தார் என்பதால் உண்மையில் அந்த
உறவு நீண்ட காலத்திற்கு இருந்தது. அவரும் ரேவும் கிட்டத்தட்ட ஒரே வயதில்
இருந்தனர். அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு நான் கல்கத்தாவில் இருந்தேன்.
எனது படங்கள் குறித்த பின்னோக்கு ஆய்வு இருந்ததால் நான் அவரைப் பார்க்கச்
சென்றிருந்தேன். இப்போது அவரும் இல்லை என்பதால் கல்கத்தாவில் எனக்கு இருந்து வந்த
ஈர்ப்பு குறைந்து விட்டது.
கல்கத்தாவில் மிருணாள் சென் உடன் அடூர் கோபாலகிருஷ்ணன்
என்னைப் பொறுத்தவரையிலும் கல்கத்தா மிக முக்கியமான
நகரமாகவே இருந்து வந்திருக்கிறது. கல்கத்தாவில் என்னுடைய வீட்டில் உள்ளதைப் போன்றே
நான் உணர்கிறேன். அது பம்பாய் அல்லது தில்லி போன்று இருக்கவில்லை... நாட்டின் வேறு
எந்த இடமும் எனக்கு அது போல இருக்கவில்லை. கல்கத்தா மிகவும் இந்திய தன்மையுடன்
வேரூன்றி இருக்கிறது. இங்கே எனக்கு இன்னும் சில நண்பர்கள் இருக்கிறார்கள்...
திரைப்படத் தயாரிப்பாளராக என் வாழ்க்கையில் மிக முக்கியமான நகரமாக கல்கத்தா இருந்துள்ளது.
சிறந்த திரைப்பட ஆர்வலர்களுக்கான நகரமான கல்கத்தா சிறந்த திரைப்படத்
தயாரிப்பாளர்களை வளர்த்த இடம். கல்கத்தா அவர்களுடைய படங்களில் எல்லாம் மிக
முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. ரே, சென் இருவருமே இந்த நகரத்தில் பல படங்களை
தயாரித்துள்ளனர். அவர்கள் இருவரும் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையைக்
கொண்டிருந்தனர். சாதாரண மனிதனைப் பற்றி பேசும்போது கூட அவர்களின் அணுகுமுறை மிகவும்
வித்தியாசமாகவே இருந்தது. யதார்த்தம் அதே வழியில் அவர்களால் திரையில் காட்டப்பட்டது.
அவர்களுடைய அணுகுமுறை தனிப்பட்டதாக, அகநிலை சார்ந்ததாக இருந்தது. அதுதான் சினிமாவை
கலை வடிவமாக மாற்றுகிறது.
பெங்காலியில் எழுதப்பட்டு மலையாளத்தில்
மொழிபெயர்க்கப்பட்ட மிகச் சிறந்த இலக்கியத்துடனே நான் வளர்க்கப்பட்டேன். என்னுடைய பள்ளி
நாட்களில் பங்கிம் சந்திர சட்டர்ஜியின் துர்கேஷ் நந்தினியை மொழிபெயர்ப்பில் நான் படித்திருக்கிறேன்.
சுனில் கங்கோபாத்யாயாவின் படைப்புகள் எனக்கு மிகவும் பிடித்தவை. நான் அவரை நன்கு
அறிந்திருக்கிறேன்.
வங்க சினிமா எந்த
அளவிற்கு உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது? அது திரைப்படத் தயாரிப்பாளராக உங்களை
எவ்வாறு வடிவமைத்தது?
எனது இளம்பருவத்தில் வங்கத்தைச் சேர்ந்த மிக
முக்கியமான திரைப்படத் தயாரிப்பாளர்களாக ரே, ரித்விக் கட்டக் ஆகியோர் இருந்தனர். மிருணாள்தா
பின்னர் பிரபலமடைந்தார். பதேர் பாஞ்சாலியிலிருந்து எல்லா இடங்களிலும் ரே உடனடி
அங்கீகாரம் பெற்று வந்தார். புவன் ஷோமை உருவாக்கியவுடன் மிருணாள்தா புகழ்
வெளிச்சத்திற்கு வந்தார். மிருணாள்தா உண்மையான பொருளில் ஒரு கலகக்காரராகவே
இருந்தார். அவர் எந்தவொரு பரிசோதனையை மேற்கொள்வதற்கும் பயந்தவர் இல்லை.
பெரும்பாலும் தனது பிரபலத்தைப் பணயம் வைத்தே அவ்வாறான பரிசோதனைகளை அவர்
மேற்கொண்டார். அவருடைய நேர்மையை, குணத்தை, வேலையைப் பார்த்து வியந்தவனாகவே நான்
இருந்திருக்கிறேன்.
இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில்
நான் படித்து முடித்து பல காலங்களுக்குப் பிறகு அங்கே அவர் விரிவுரையாற்றினார். ‘நல்ல
திரைப்படத் தயாரிப்பாளர் ஆவதற்கு ஒருவர் சினிமா பற்றி கனவு காண வேண்டும். சினிமாவை
தன்னுடைய வாழ்க்கையாக அவர் வாழ வேண்டும்’ என்று அங்கிருந்த மாணவர்களிடம் அவர் சொல்வார்....
அது மிகவும் உண்மை.
சினிமா என்பது மிகச் சாதாரண விஷயமாக இருக்க
முடியாது. அது நீங்கள் செய்கின்ற பல்வேறு விஷயங்களைப் போன்ற ஒன்றல்ல. ஒற்றை எண்ணம்
கொண்ட ஆர்வத்துடன் அது இருக்க வேண்டும். கலை மற்றும் தொழில்நுட்பத்தின் மிக
வித்தியாசமான கலவையாக, கலையின் மிக சிக்கலான வடிவமாக முன்பு இருந்த சினிமா இப்போது
அவ்வாறு இருக்கவில்லை. உங்களிடமுள்ள கலையை வெளிப்படுத்த தொழில்நுட்பத்தில் நீங்கள்
தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். தொழில்நுட்பம் குறித்த உங்கள் அறிவு மோசமாக
இருக்குமென்றால், உங்களுடைய கலை நிச்சயம் முழுமையாக
வெளிப்படாது.
ரே, கட்டக், சென் ஆகியோர் நமது சினிமாவின்
மூன்று தளபதிகளாக இருந்தனர்... அவர்கள் மிகச் சிறந்த மாஸ்டர்களாக இருந்தனர். இன்று
அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் நமது டிஜிட்டல் மாஸ்டர்களை நாம் இன்னும்
கண்டுபிடிக்கவில்லை.
என்னுடைய அடுத்த கேள்வி
இதுதான்… 2016ஆம் ஆண்டு வெளியான பின்னேயும் என்ற திரைப்படம் உங்களுடைய முதல்
டிஜிட்டல் படம். உங்களைப் பொறுத்தவரை அது மிகவும் கடினமான மாற்றமாக இருந்ததா?
இல்லவே இல்லை. அதில் மிகவும் மோசமாக இருப்பதாக
நான் நினைப்பது என்னவென்றால், தொழில்நுட்பத்தைச் சமாளிக்க முடியாது தொழில்நுட்ப
வல்லுநர்கள் பலரும் வேலை இழந்துள்ளனர். நன்கு வடிவமைக்கப்பட்ட, கல்வி முறையில் நான்
சினிமாவைப் படித்திருந்ததால் புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப என்னை மாற்றிக்
கொள்வது என்னைப் பொறுத்தவரை அவ்வளவு கடினமான பணியாக இருக்கவில்லை. உண்மையாகச்
சொல்வதென்றால் தொழில்நுட்பம் சாதாரண மக்களால் மிகவும் அணுகக்கூடியதாக ஆகிவிட்டது.
இப்போது அனைவருமே திரைப்படத் தயாரிப்பாளர்களாக இருக்கிறார்கள் (சிரிக்கிறார்).
எழுத்தறிவு பரவலாகிவிட்டது என்றாலும் எழுதத் தெரிந்தவர்கள் அனைவரும் எழுத்தாளர்கள்
என்று அர்த்தமாகி விடுமா? (சிரிக்கிறார்) அது உங்களிடம் உள்ள அறிவைக் கொண்டு
நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்ததாகவே இருக்கும். கடந்த காலங்களில்
திரைப்படம் தயாரிப்பதற்கு முழுமையான தயாரிப்பு வேலை தேவைப்பட்டது. ஆனால் இன்றைக்கு
அது உங்கள் மொபைல் போனிலேயே இருக்கிறது. அனைத்தும் போனில் தயாராக கிடைக்கின்றன.
நீங்கள் பொத்தானை மட்டுமே அழுத்த வேண்டும். இப்போது தொழில்நுட்பம் ஒரே கிளிக்கில் கிடைப்பதால்,
அது திரைப்படம் எடுப்பது மிகவும் எளிதான வேலை என்ற எண்ணத்தை மக்களிடம்
ஏற்படுத்தியுள்ளது.
பழைய அமைப்பில் தான் தேர்ந்தெடுத்த
விஷயத்தைப் பற்றி ஒருவர் மிகவும் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். பிறகுஅதை கருப்பொருள்,
சுருக்கம், செயல்முறை, ஸ்கிரிப்ட், பிரித்தல்....என்று எப்படி வெவ்வேறு நிலைகளாக
உருவாக்குவது என்பது பற்றி அவர் சிந்திக்க வேண்டும். தயாரிப்பு வேலைகள் சில
மாதங்களுக்கு நீடிக்கும். சில நேரங்களில் பல ஆண்டுகள்கூட ஆகும். மேலும் இதுபோன்ற
திட்டமிடல் படத்தை எடுக்கும் போதும் ஒருவருக்குத் தேவைப்பட்டது. அந்தக் காலத்தில்
நாங்கள் திரைப்படத்தை எடுத்த போது, புராசஸ் செய்து நெகட்டிவ் செய்யப்படும் வரை
எங்களால் படத்தைப் பார்க்க முடியாது. நெகடிவ்விலிருந்து பாசிட்டிவ் எடுக்க வேண்டும். அதற்கு நீண்ட காலம் பிடித்தது. அதன்
பிறகு மிகவும் பொறுமையாக உட்கார்ந்து அதை நாங்கள் எடிட் செய்யத் துவங்க வேண்டும்.
இன்றைக்கு இவையனைத்துமே மிகவும்
எளிதாக்கப்பட்டுள்ளன. இதுவரை என்ன எடுத்துள்ளீர்கள் என்பதை உங்களால் இப்போது உடனடியாகக்
காண முடிகிறது. எடுக்கப்பட்டது குறித்து திருப்தி இல்லையென்றால் உங்களால் அந்தக் காட்சிகளை
மீண்டும் நூறு முறைகூட எடுக்க முடியும். தொழில்நுட்பம் திரைப்படத் தயாரிப்பை
எளிதாக்கியுள்ளது என்றாலும் அது மிகவும் தவறானது என்றே நான் கருதுகிறேன்.
தொழில்நுட்பம் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், இறுதியில் நீங்கள் நல்ல
திரைப்படம் ஒன்றை உருவாக்கி அதற்கான சிறந்த பார்வையாளர்களையும் உறுதி செய்திட
வேண்டும். நல்ல கதை உங்களுக்குப் பெற்றுத் தருவதை தொழில்நுட்பம் ஒருபோதும் பெற்றுத்
தரப் போவதில்லை... அதுதான் உண்மையான சோதனை. உங்களைப் போலவே சிந்திக்கின்ற ஒரு
சிலரிடமாவது நீங்கள் தொடர்பில் இருக்க வேண்டும். கடந்த காலங்களில் கூட, சூப்பர் 8
என்ற தொழில்நுட்பம் இருந்தது என்றாலும் அது இப்போது இல்லாமல் மறைந்து விட்டது.
உங்கள் திரைப்படத்
தயாரிப்பு பாணி நடிகர்கள் மற்றும் குழுவினரிடம் உங்கள் ஸ்கிரிப்டை முழுமையாக
வெளிப்படுத்தாத வகையிலேயே எப்போதும் இருந்து வந்திருக்கிறது. திரைப்படத்
தயாரிப்பாளராக அது உங்களுக்கு எந்த வகையில் உதவியது?
நடிகர்களுக்கான பாத்திரங்களைப் பற்றி மிகச்
சுருக்கமாக அவர்களிடம் சொல்கிறேன் என்றாலும் அது படம் எடுப்பதற்கு முன்பாக இல்லை. அவர்களுடைய
பாத்திரங்களின் அடிப்படை குணங்கள் குறித்து நான் அவர்களிடம் ‘இதுதான் உங்கள்
கதாபாத்திரம், இப்போது படமெடுக்கப் போகும் காட்சியில் நீங்கள் இதைத்தான் செய்யப்
போகிறீர்கள்’ என்று படப்பிடிப்புக்கு வரும்போது மட்டுமே அவர்களிடம் சொல்கிறேன். அவர்களிடம்
அதற்கு மேல் எதையும் நான் சொல்ல மாட்டேன். அது உதவாது...
நடிகர்கள் பைண்டிங்
செய்யப்பட்ட ஸ்கிரிப்டுகள், விரிவான தயாரிப்பு பணிகளை வலியுறுத்தி வருகின்ற இந்தக்
காலத்தில் உங்களுடைய பாணி இன்னும் சாத்தியப்படுமா?
இயக்குனராக ஒருவர் தன்னுடைய படம் எவ்வாறு இருக்க
வேண்டும் என்பது குறித்த ஒட்டுமொத்தப் பார்வையைக் கொண்டிருக்க வேண்டும். அந்தப்
பார்வைக்குத் தேவையான அனைத்தையும் அவர் கொடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் அந்தப்
பார்வையை உணர்ந்து ஒற்றைச் சிந்தனையுடன் செயல்பட வேண்டும் என்பதாலேயே என்னுடைய
நடிகர்கள் தங்கள் சொந்த வழியில் படத்தை தாங்களாக விளங்கிக் கொள்வதை நான்
விரும்புவதில்லை. அது மோசமானதாக இருக்கலாம்! (சிரிக்கிறார்) தாங்கள் என்ன செய்ய
வேண்டும் என்று குறிப்பாக சொல்லப்படாத போது பெரும்பாலான நடிகர்களுக்கு ஒரே ஒரு
வழிதான் இருக்கிறது. அதுதான் அவர்களுக்குப் பழக்கமானது. இயக்குனராக நடிகர்கள் என்ன
செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதற்கேற்றவாறு நீங்கள் அவர்களை வடிவமைக்க
வேண்டும்.
நான் ஒத்திகைகளை பலமுறை மேற்கொள்கிறேன். ஒத்திகை
இல்லாமல் எதையும் நான் செய்வதில்லை. தங்களை நன்கு நிறுவிக் கொண்டிருக்கும்
நடிகர்கள் கூட ‘சார் என்னால் இதைச் செய்ய முடியவில்லை. தயவுசெய்து நீங்கள் செய்து
காட்ட முடியுமா?’ என்று என்னிடம் கேட்கிறார்கள். எனவே நான் அவர்களுக்குச் செய்து
காட்ட வேண்டும். அவர்கள் பயனற்ற நடிகர்கள் என்று நான் சொல்ல முயற்சிக்கவில்லை
என்பதை அவர்களிடமே கூறி விடுகிறேன் (சிரிக்கிறார்) உண்மையில் நான் அவர்களிடமிருந்து
மிகச் சிறந்ததைப் பெறவே விரும்புகிறேன். எனது நடிகர்களில் ஆறு பேர் தேசிய
விருதுகளை வென்றதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆக என்னுடைய பாணி வேலை
செய்கிறது என்பதை உங்களால் காண முடியும்!
திரைப்படங்கள்,
திரைப்படத் தயாரிப்புகளுக்கென்று வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்த போது அது உங்களுக்கு
அற்புதமான தருணமாக இருந்ததா?
உண்மையில் எனக்கு சினிமா மற்றும் அதன்
சாத்தியக்கூறுகள் பற்றி நீண்ட காலமாக எதுவுமே தெரியாது. நான் முற்றிலும் ஒரு நாடக
நபராகவே இருந்திருக்கிறேன். நாடகங்களை எழுதிய நான் அவற்றில் நடிக்கவும் செய்தேன்.
இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் (FTII) சேர்ந்த பிறகும் நான் ஒரு
நாடகத்தைத் தயாரித்தேன்... கோடோட்டுக்காகக் காத்திருந்த நான் அதை மலையாளத்தில்
மொழி பெயர்த்தேன். இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் சேர்ந்து படித்துக்
கொண்டிருந்த நான் நாடகத் தயாரிப்பிலும் மூழ்கியிருந்தேன்.
இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில்
எனது இரண்டாம் ஆண்டில் நான் மெதுவாகத் திரைப்படங்களை நோக்கித் திரும்பினேன்.
ஏராளமான படங்களைப் பார்க்க ஆரம்பித்த நான் பின்னர் படிப்படியாக சினிமாவை நோக்கி
ஈர்க்கப்பட்டேன்.
அதற்குப் பின்னர் திரைப்படம் தவிர வேறு எதையும்
செய்வதில்லை என்று முடிவு செய்தேன். திரைப்படம் எடுக்காதபோது கூட வேறு எதையும்
செய்ததில்லை. எனது படங்களுக்கு இடையில் நீண்ட இடைவெளிகள் இருந்ததால் நான் வேறு
எதையோ கொண்டிருந்தேன் என்று அர்த்தமல்ல (சிரிக்கிறார்). வாசிப்பை நான் மிகவும் ரசிக்கிறேன்.
மிகச் சாதாரணமான குடிமகனாகவே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...
எனது படங்களுக்கு இடையில் நான் மேற்கொள்ளும்
வாழ்க்கையிலிருந்து என்னுடைய கதைகள் வெளிவருவதையே நான் விரும்புகின்றேன்.
படங்களுக்கு இடையில் அதிக நேரம் எடுத்துக் கொள்வது எனது முந்தைய படத்திலிருந்து
என்னை வெளியேற அனுமதிக்கிறது. முந்தைய படம் என்னிடமிருந்து வெளியேறுவதற்கு முன்பாக
புதிதாக ஒரு படத்தை உருவாக்க நான் விரும்புவதில்லை. இந்த செயல்முறையையே நான்
பெரிதும் விரும்புகிறேன். திரைப்படம் ஒன்றை எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில்
இருக்கும் போது மட்டுமே எனது அடுத்த படத்தை நான் தொடங்குகிறேன். ‘உங்கள் அடுத்த
படம் என்ன?' என்று மக்கள் என்னிடம் கேட்கும் போது ‘அதுகுறித்து எனக்கு எந்தவொரு
சிந்தனையும் இல்லை!’ என்றே அவர்களிடம் சொல்கிறேன்’ (சிரிக்கிறார்)
சத்யஜித் ரே (இடது) மற்றும் கிரிஷ் கர்னாட் உடன் இளைஞர் அடூர் (மையம்)
ஆனாலும் இன்னும் பல
படங்களை நாங்கள் உங்களிடமிருந்து பெற்றிருக்க வேண்டும்...
ரே என்னிடம் ஒருமுறை ‘இப்போது
உங்களுக்கென்று அங்கீகாரம் கிடைத்திருப்பதால், வருடத்திற்கு ஒரு படத்தையாவது ஏன் நீங்கள்
தயாரிக்கக் கூடாது?’ என்று கேட்டார். மாணிக்தாவிடம் (ரேயிடம்) நான் அவ்வாறு செய்ய
விரும்புவதாகக் கூறினாலும் அது ஏனோ அவ்வாறு நடக்கவில்லை. ஆரம்பத்தில் எனது படங்களை
உருவாக்குவதற்கான நிதியைப் பெறுவது மிகவும் கடினமாக இருந்தது. படத்தை எடுக்க அதிக
நேரத்தை எடுத்துக்கொள்வது பின்னர் எனக்கு ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. எதையும்
அவசரப்படுத்த நான் விரும்புவதில்லை. அதன் விளைவாக நான் உருவாக்கிய எந்தவொரு
படத்துக்கும் வேறு எந்தவொரு காரணமும் தேவையில்லாது போயிற்று. அனைத்து படங்கள்
குறித்தும் நான் மகிழ்ச்சியடையவே செய்கிறேன். என் வாழ்க்கையின் அந்த நேரத்தில்
என்னால் ஒரு சிறந்த படத்தை எடுக்க முடியாது என்று நானே சொல்லியிருக்கிறேன்.
ஆக உங்கள் படங்களை
நீங்கள் மறுபரிசீலனை செய்ய விரும்பவில்லையா?
இல்லை. எனது எந்தப் படத்தையும் நான்
மீண்டும் செய்ய விரும்பவில்லை. அவற்றில் எதனுடைய
தொடரையும் செய்ய விரும்பவில்லை. எனக்கு தொடர்களில் நம்பிக்கை இல்லை.
நீங்கள் அவற்றைப்
பார்ப்பதே இல்லையா?
அவ்வாறு பார்க்குமாறு சில நேரங்களில் கட்டாயத்திற்குள்ளாகிறேன்!
பிற நாடுகளில் எனது படங்கள் பின்னோக்கி அலசப்படும்போது, திரையிடல் நடைபெறும் இடம் எனது ஹோட்டலில்
இருந்து வெகு தொலைவில் இருக்கும்போது மற்றும் திரையிடலுக்குப் பிறகு கேள்வி பதில்
அமர்வு வாய்ப்பு எனக்கு கிடைக்கும் போது நான் மீண்டும் என் படங்களைப் பார்த்து
அனுபவிக்கத்தான் வேண்டும்! (சிரிக்கிறார்) அதைச் செய்வதன் மூலம் ஏதாவது
கற்றுக்கொண்டும் இருக்கிறேன். ஒவ்வொரு படமும் வெவ்வேறு பார்வையாளர்களிடையே வெவ்வேறு
எதிர்வினைகளைப் பெற்றுத் தருகிறது. சில படங்கள் பிரான்சில் மிகச் சிறப்பாகப்
பாராட்டப்பட்டன, ஜெர்மனியில் நன்றாக இருப்பதாகப் பாராட்டப்பட்ட சில படங்கள்
பிரான்சில் அவ்வாறாக இருக்கவில்லை. நான் இதுபோன்ற எதிர்வினைகளால் தவறாக
வழிநடத்தப்படுவதில்லை. ஏனென்றால் நான் விரும்புவதையே நான் செய்கிறேனே தவிர...
மற்றவர்கள் விரும்புவதைச் செய்வதில்லை.
இன்றைய திரைப்படங்களை
நீங்கள் பார்க்கிறீர்களா?
அர்த்தமுள்ள படங்களை முயற்சி செய்து
பார்க்கிறேன்... மோசமான படங்களைப் பார்ப்பதற்கான பொறுமை என்னிடம் இல்லை,
முற்றிலுமாக அந்த எண்ணம் என்னிடம் இருக்கவில்லை! சமரசம் செய்து கொள்ளாத திரைப்படத்
தயாரிப்பாளர்களை நான் மிகவும் மதிக்கிறேன்... அவர்கள் சிறந்த படங்களை எடுக்காமல்
இருக்கலாம் என்றாலும் தாங்கள் நம்புவதை ஒருபோதும் அவர்கள் சமரசம் செய்து கொள்ள
மாட்டார்கள்... அதுவே மதிப்பிற்குரியதாக
இருக்கிறது. சில நேரங்களில் திரைப்பட முன்னோட்டங்கள், திரையிடல்களுக்கு நான் அழைக்கப்படுகிறேன்.
சிலவற்றிற்கு நான் செல்லவும் செய்கிறேன். ஆனால் ‘படத்தை நீங்கள் ரசித்தீர்களா?’
என்று என்னிடம் திரையிடலுக்குப் பிறகு கேட்கப்படும் என்பதால் படம் முடிவதற்குள்
வேலை இருப்பதாகக் கூறி அங்கிருந்து ஓடி வந்து விடுகிறேன்! ஒருமுறை அவ்வாறு நான்
ஓடி வந்த போது படத்தின் தயாரிப்பாளரும் என் பின்னால் ஓடி வந்தார்! (சிரிக்கிறார்)
சமீப காலத்தில் எனக்குப் பிடித்த சில
படங்கள் வந்துள்ளன. இளம் திரைப்படத் தயாரிப்பாளர்கள் இவ்வளவு நல்ல படங்களை எப்படி
உருவாக்குகிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியம் தருவதாகவே இருக்கிறது. மலையாளத்தில்
சனல் சசிதரனின் இயக்கம் எனக்குப் பிடித்திருக்கிறது. எனக்குப் பிடித்த இன்னொரு
இயக்குனர் விபின் விஜய்.
பொதுவாக நான் ஹிந்திப் படங்களைப்
பார்ப்பதில்லை. ஆயினும் பிராந்திய திரைப்படங்களை நான் பார்க்கிறேன். கோர்ட் என்ற திரைப்படம்
(சைதன்யா தாம்ஹானே) எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மராத்தி திரைப்படத் துறை சில
நல்ல படங்களை உருவாக்கி வருகிறது. ஹிந்தியில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான
உடான் (விக்ரமாதித்யா மோட்வானே) எனக்குப் பிடித்திருந்தது.
திரைப்படம் எடுக்காத போது
நீங்கள் என்ன செய்து கொண்டிருப்பீர்கள்?
ஏராளமாகப் படிக்கிறேன். படிப்பதற்காக ஏதாவது
நான் எப்போதும் வைத்திருப்பேன். ஐந்து செய்தித்தாள்களுக்கு சந்தா செலுத்தி
வருகிறேன்.
ஸ்ட்ரீமிங் தளங்களில்
எதையாவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
இல்லை. உண்மையில் என்னிடம் இப்போது
தொலைக்காட்சிப் பெட்டி கூட இல்லை. என்னிடம் இருந்ததை நான் ஆயிரம் ரூபாய்க்கு
விற்று விட்டேன்!
எங்களுக்கு பிடித்த அடூர் கோபாலகிருஷ்ணனின் சில படங்களைத் தேர்வு செய்து தந்திருக்கிறோம்
தொகுப்பு : சந்தன் தாஸ்
எலிப்பத்தாயம் (1981)
எலிப்பத்தாயம் கோபாலகிருஷ்ணனின் முதல்
வண்ணத் திரைப்படமாகும். அந்த திரைப்படத்தில் 1940களில் கேரளாவின் ஆணாதிக்க
குடும்பத்திற்குள் நிகழும் நிகழ்வுகளை அவர் உருவாக்கி காட்டியிருந்தார்.
நிலப்பிரபுத்துவத்தின் இறுதியாக எஞ்சியுள்ள பகுதிகள் குறித்து நுணுக்கமாக
வரையப்பட்ட காட்சி உருவகங்கள், தொடர்ச்சியான மையக்கருத்துகள் மூலம் உன்னி (கரமனை
ஜனார்தனன் நாயர்) மற்றும் அவரது மூன்று சகோதரிகளின் மூதாதையர் வீட்டுக்குள்
நடப்பதாக எலிப்பத்தாயம் திரைப்படம் இருக்கிறது. நிலப்பிரபுத்துவக் கண்ணோட்டத்தில் சிறைப்பட்டுள்ள உன்னியின் மெதுவான ஆனாலும் தவிர்க்க முடியாத சிதைவு பொறியில்
சிக்கிய எலிக்கு இணையான கதைச்சுருக்கத்தை உருவாக்குகிறது. புதிரான, கவிநயம் மிக்க
தனித்துவம் கொண்ட எலிபத்தாயம் திரைப்படம் கோபாலகிருஷ்ணனின் தலைசிறந்த படைப்பாக
இருக்கிறது. அப்போதிருந்ததைப் போலவே இப்போதும் இருந்து வருகின்ற தனித்துவமான
தலைமுறைகளுக்கு இடையிலான குறுக்குவெட்டைக் காட்டுவதாக அந்த திரைப்படம் அமைந்துள்ளது.
மதிலுகள் (1989)
மம்முட்டியின் மிகச்சிறந்த திரை நடிப்பு
என்று பரவலாகக் கருதப்பட்டு வரும் மதிலுகள் என்ற இந்த திரைப்படத்தில் மம்முட்டி உப்புச்
சட்டங்களை மீறியதாக திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட புகழ்பெற்ற
எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீராக நடித்துள்ளார். பஷீரின் அன்றாட வழக்கத்தை
மென்மையாக மிகவும் கவனத்துடன் விவரிக்கின்ற கோபாலகிருஷ்ணன், கதையின் இறுதிப்
பகுதியில் சிறையின் சுவர்களுக்குள் பெண் கைதி (K.P.A.C.லலிதா) ஒருவரை பஷீர் காதலிக்கும்
போது படத்தை வேகப்படுத்துகிறார். அந்தப் படத்தில் நாம் அந்தப் பெண்ணைச் சந்திப்பதே
இல்லை. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வதில்லை. இந்த
எல்லைகளுக்கு அப்பாலும் அவர்களுக்குள் காதல் மலர்கிறது. முதல் சட்டகத்திலிருந்து
நம்மை படத்திற்குள் இருத்தி வைக்கிற மதிலுகள் திரைப்படம் முழுக்க முழுக்க
கோபாலகிருஷ்ணனின் கைவண்ணமாகவே இருக்கிறது. மாற்றுக் கருத்துகளுக்கான குரல்கள் சிறைக்
கம்பிகளுக்குப் பின்னால் தங்களைக் கொண்டு வைப்பதைத் தவிர்க்கமுடியாத ஒரு
தலைமுறைக்கு இது மிகவும் உடனடித் தேவையாக இருப்பதை உணர முடிகிறது.
கதாபுருஷன் (1995)
சுயசரிதையாக இருக்கும் கதாபுருஷன் என்ற இந்த
திரைப்படத்தை சுதந்திரம், கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி, காந்தி கொலை உள்ளிட்ட
இந்திய சமூக அரசியல் வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளுக்கு சாட்சியாக நின்று
குஞ்சுண்ணி (விஸ்வநாதன்) என்ற
கதாபாத்திரத்தின் மூலம் தனது சொந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு
கோபாலகிருஷ்ணன் தயாரித்துள்ளார். மார்க்சிய தத்துவத்திலிருந்து நக்சலிசம் நோக்கி
குஞ்சுண்ணியின் பயணம் இருக்கிறது. அடுத்தடுத்த சிறைவாசம் என்று தொடர்ந்து பல
ஆண்டுகளுக்கு நீடித்த அந்த பயணத்தை கோபாலகிருஷ்ணன் மிகத் தெளிவுடன் பின்பற்றிச்
செல்கிறார். கதாபுருஷன் இந்திய சினிமாவில் ஒரு தீர்க்கமான படைப்பாகத் திகழ்கிறது.
விதேயன் (1994)
மம்முட்டி, எம்.ஆர்.கோபகுமார் ஆகியோரது
நடிப்பில், பாஸ்கர பட்டேலரும் என்டெ ஜீவிதமும் என்ற பால் ஜக்கரியாவின் நாவலின்
தழுவலாக இருக்கும் விதேயன் திரைப்படம் பெரும்பாலும் க்ளோஸ்-அப் காட்சிகள் மூலம்
உருவாகியிருக்கிறது. நிலையான கேமரா கோணங்கள், காட்சி உருவகங்கள் மூலம் எஜமான்-அடிமை
ஆகியோருக்கிடையிலான இயக்கத்தைக் காட்டுகிறது. அதிகாரம் உள்ளவர்கள் மற்றும்
அதிகாரமற்றவர்களுக்கு இடையே பிளவு குறித்த சிந்தனையை வெளிப்படுத்தும் விதேயன்
திரைப்படத்தின் கதாநாயகனான பட்டேலர் (மம்முட்டி) அந்தக் கிராமம் முழுவதையும்,
குறிப்பாக மிகவும் சாந்தமான புலம்பெயர் தொழிலாளியை (எம்.ஆர்.கோபகுமார்) பயமுறுத்தி
ஒடுக்கி மகிழ்கிறார். தன்னுடைய முந்தைய படங்களைப் போலல்லாமல், பயங்கரவாதம்,
வன்முறை மூலம் அதிகாரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விதேயனில் கோபாலகிருஷ்ணன்
சித்தரித்துள்ளார். உண்மையான யதார்த்தவாதத்தில் விதேயன் திரைப்படம் மத
அடிப்படைவாதம், வகுப்புவாத வன்முறை கொண்ட தற்போதைய அதிகார சக்திகளுக்கு முன்பு
கண்ணாடியை வைத்திருக்கும் வகையிலான படமாக சிறந்து விளங்குகிறது.
முகாமுகம் (1984)
1984இல் வெளியான நேரத்தில் கம்யூனிஸ்ட் சார்பு
திரைப்படமாகப் பார்க்கப்பட்ட முகாமுகம் தன்னுடைய பார்வையாளர்களை புரட்சிகர
ஹீரோவின் மனதிற்குள் கொண்டு செல்கிறது. இருபத்தைந்து ஆண்டு காலத்தில் கேரளாவில்
ஏற்பட்ட மார்க்சியத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியின் பின்னணியில் முகாமுகம்
திரைப்படம் உண்மைகள் மற்றும் கற்பனைகளைக் கலந்து இடதுசாரி அரசியலையும் அதன்
சரிவையும் ஸ்ரீதர் (கங்காதரன் நாயர்) என்ற கதாபாத்திரத்தின் மூலம் முன்வைக்கிறது.
அரசியல் சித்தாந்தத்தின் யதார்த்தங்களை உயிர்ப்பிக்கும் சக்திவாய்ந்த ஊடகமாக
சினிமாவைப் பயன்படுத்துகிற கோபாலகிருஷ்ணனின் கூர்மையான விமர்சனம் படத்தில் உள்ளது.
அரசியல் செயல்பாட்டின் வரலாற்றை விவரிக்கிற வேறெந்த இந்தியப் படமும் முகாமுகம்
சென்ற வழியில் செல்லத் துணிந்திருக்கவில்லை.
அனந்தரம் (1987)
விவரிப்பு பரிசோதனையின் அடிப்படையில்
மிகவும் முக்கியமான படமாக இருக்கின்ற அனந்தரம் கோபாலகிருஷ்ணன் இயக்கிய புதிர்
நிறைந்த படமாக இருக்கிறது. அவர் படத்தில் உள்ள ஒரே கதாநாயகன் ஒன்றிணைக்கும்
பாத்திரம், அமைப்பு மூலமாக இரண்டு கதைகளை எவ்விதத் தடையுமின்றி வெளிக்
கொணர்ந்திருக்கிறார். படத்தின் மையக் கதாபாத்திரமான அஜயன் (அசோகன்) இரண்டு
தனிப்பட்ட கதைகளை தன்னுடைய கூற்றாகக் கூறுகிறார். தொடர்ந்து வரும் நிகழ்வுச்
சங்கிலியின் நம்பமுடியாத இழையாக மாறி, அவற்றை ஒழுங்குடன் ஒருங்கிணைக்கின்ற வேலையை
பார்வையாளர்களிடம் விட்டு விடும் கோபாலகிருஷ்ணன் அனுபவ நிலையில் ஏதேனும் ஒழுங்கு
இருக்கிறதா என்று கேள்வியெழுப்புகிறார்.
சுயம்வரம் (1972)
தனது தனித்துவமான திரைப்படமான
சுயம்வரம் மூலம் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை கோபாலகிருஷ்ணன் பெற்றார். சாரதா,
மது ஆகியோரின் நடிப்பில் அவர்கள் இருவரின் திருமணத்தை விவரிப்பதாக அந்த திரைப்படம்
இருந்தது. மலையாள சினிமாவில் புதிய அலை சினிமா இயக்கத்தை அறிமுகப்படுத்தியதில் முன்னோடியாக
விளங்கிய சுயம்வரம், எண்ணங்களின் வெளிப்பாடாக ஒலியைப் பயன்படுத்திய முதல் இந்தியப்
படமாகும். சமரசமற்ற வகையில் இருந்த புதிய யதார்த்தமான அணுகுமுறை, மறக்க முடியாதவாறு
பார்வையாளர்களின் முடிவிற்கு விடப்பட்ட இறுதிக் காட்சியுடன் அந்தப் படம் இருந்தது.
நவீன யுகத்தில் தனித்துவத்தைப் பாதுகாக்கும் உந்துதல் கொண்ட சுயம்வரம் திரைப்படம் உடனடித்
தேவையாக இருந்தது.
நிழல்குத்து (2002)
1940களின் முற்பகுதியில் நடப்பதாக
அமைக்கப்பட்டுள்ள நிழல்குத்து, அரசின் கட்டளைகளைப் பின்பற்றி மரணதண்டனையை
நிறைவேற்றுகின்ற காளியப்பன் (ஒடுவில் உன்னிகிருஷ்ணன்) என்பவரின் கதையைக்
கூறுகிறது. அந்தச் செயலுக்குப் பின்னால் உள்ள தன்னுடைய இருப்பையும், அதற்குப்
பின்னால் உள்ள குற்ற உணர்ச்சியையும் – அந்தக் குற்றத்திலிருந்து அவரை அரசு
விடுவித்து விடும் போதிலும் - அவர் கேள்விக்குள்ளாக்குகிறார்.
யதார்த்தவாதம் நிரம்பிய கோபாலகிருஷ்ணனின் முத்திரைப் பாடல்களால் நிரம்பிய சமரசம்
எதுவுமற்ற நிழல்குத்து திரைப்படம் தனிநபர் ஒருவர் அரசு இயந்திரத்துடன் சங்கிலியால்
பிணைக்கப்பட்டிரும் வழிகளைக் குறிப்பிட்டுக் காட்டுவதாக இருக்கிறது.
நாலு பெண்ணுங்கள் (2007)
நேரடியாக இணைக்கின்ற இழையின்றி நான்கு
பெண்களைச் சுற்றி நடக்கின்ற நான்கு கதைகளின் தொடராக உள்ள நாலு பெண்ணுங்கள்
திரைப்படம் தகழி சிவசங்கர பிள்ளையின் சிறுகதைகளைத் தழுவி எடுக்கப்பட்டது.
தற்போதும் அவ்வளவாக மாறாதிருக்கின்ற பெண்களின் கடந்த கால நிலைமைகளை இயல்பாக அப்போது
சித்தரித்துள்ள கோபாலகிருஷ்ணன் பாலியல் தொழிலாளி, கன்னி, இல்லத்தரசி, திருமணமாகாத
முதுகன்னி ஆகியோரின் கதைகள் மூலம் எங்கும் நிறைந்துள்ள கலாச்சாரக் கட்டமைப்பை
உருவாக்கியிருக்கிறார். நாகரிகத்தின் புறநிலை யதார்த்தத்திற்குள் மனிதர்கள்
வைக்கப்பட்டிருக்கும் வழிகளைத் தொடர்ந்து தகர்க்கின்ற இயக்குனரின் உற்சாகத்தால் மிகவும்
அசாதாரணமான படமாக நாலு பெண்ணுங்கள் திரைப்படம் இருக்கிறது.
கொடியேத்தம் (1978)
விவேகமுள்ளவனாக தன்னை மாற்றிக் கொள்ளும்
சங்கரன்குட்டி என்ற பொறுப்பற்ற, கவனக்குறைவு மிக்க மனிதனின் குணாதிசயத்தை
கொடியேத்தம் படத்தில் கோபாலகிருஷ்ணன் ஆராய்ந்துள்ளார். சிறந்த நடிகருக்கான தேசிய
விருதை வென்ற பரத் கோபியின் சிறந்த நடிப்பிற்காக அந்த திரைப்படம் மறக்க முடியாததாக
உள்ளது. தனிநபர்களை அவர்களுடைய தகுதியின் அடிப்படையிலே ஏற்றுக் கொள்ளும் சமுதாயம்
குறித்த கூர்மையான பார்வையை திரைப்படத்தில் முன்வைக்கும் கோபாலகிருஷ்ணன்
சங்கரன்குட்டியின் நிலை அல்லது ஒழுக்கத்தின் அடிப்படையில் அவரை ஏற்றுக் கொள்ளுமாறு
தனது பார்வையாளர்களிடம் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்.
Comments