இன்றைக்கு குடியரசுத் தலைவரின் வேலை பிரதமரைப் பேணுவது, பாதுகாப்பது, காத்து நிற்பது மட்டுமே

டிஜேஎஸ் ஜார்ஜ்

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்




நாட்டின் மிக உயர்ந்த பதவியை அடைந்திருப்பதால் மட்டுமே ஒருவரால் அனைவராலும் பாராட்டப்படுகின்ற ஆளுமையாக ஆகி விட முடியாது. ஆனால் குடியரசுத் தலைவர் என்ற நாட்டின் மிகவும் உயரிய பதவியை அடைந்த ராஜேந்திரபிரசாத், கே.ஆர்.நாராயணன் போன்றவர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டவர்களாகவே இருந்தார்கள். வெறுமனே அந்த நாற்காலியில் அமர்ந்ததால் மட்டுமல்லாது அந்தப் பதவிக்கான கண்ணியம், தகுதி, பொருத்தம் கொண்டவர்களாக இருந்ததாலேயே மக்களின் பாராட்டை அவர்களால் பெற முடிந்தது. ஆனால் அவர்களுடைய நடவடிக்கைகளைப் போன்று தன்னை உயர்த்திக் கொண்டவராக அந்தப் பதவியில் தற்போது இருப்பவர் இருக்கவில்லை.      


‘மாதம் ஒன்றிற்கு என்னுடைய சம்பளம் ஐந்து லட்சம் ரூபாய். ஆனால் அதில் இரண்டே முக்கால் லட்சம் ரூபாய் வரை வரியாகச் செலுத்துகிறேன். வரிகளைச் செலுத்திய பிறகு சில அதிகாரிகள் பெறுவதைக் காட்டிலும் மிகவும் குறைவாகவே நான் சம்பளம் பெறுகின்றேன்’ என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் வெளியிட்ட பொதுத் தகவல் இந்திய குடியரசுத் தலைவராக இருக்கின்ற ஒருவர் ஒருபோதும் செய்யக்கூடாத செயலாகவே இருந்தது. இந்த நாட்டு குடிமக்கள் தான் கூறாமல் விட்டதை நிச்சயம் அறிந்து கொள்வார்கள் என்பதை அவர் புரிந்து கொண்டிருக்க வேண்டும். இரண்டே முக்கால் லட்சம் ரூபாய் வரி செலுத்துகின்ற அவர் முந்நூற்றி நாற்பது அறைகள் கொண்ட மாளிகையில் இலவசமாக வாடகையின்றி வாழ்ந்து வருகிறார். அவர் வசித்து வருகின்ற அந்த வளாகத்தைக் கவனித்துக் கொள்வதற்காகப் பணியில் இருக்கும்  இருபத்தைந்து சமையல்காரர்கள், நூற்றி எண்பத்தி நான்கு தோட்டக்காரர்கள், ஐம்பத்தியேழு துப்புரவாளர்களுக்கு அவர் ஊதியம் எதையும் (மாதம் ரூ.1.34 கோடி) தர வேண்டியதில்லை.          

தனக்கென்று இருக்கின்ற நாற்பத்தியெட்டு மெய்க்காப்பாளர்கள், ஒன்பது தனிச்செயலாளர்கள், எட்டு தொலைபேசி ஆபரேட்டர்கள், இருபத்தியேழு ஓட்டுநர்களுக்கென்று எதையும் தான் செலவழிக்கவில்லை என்பதையும், ஐந்து லட்சம் ரூபாய்க்கும் அதிகமான அவருடைய மாதாந்திர தொலைபேசிக் கட்டணம் குடிமக்களாலேயே செலுத்தப்படுகிறது என்பதையும், தன்னுடைய ஊழியர்களின் ஊதியம் மற்றும் வீட்டு படிகளுக்கான ஆண்டு வரவு செலவுத் திட்டம் அறுபத்தியாறு கோடி ரூபாய் என்பதையும் கோவிந்த் அறிந்து வைத்திருக்கிறாரா என்பது தெரியவில்லை.  

இவ்வாறான சூழலில் வசதியாக வாழ்ந்து வருகின்ற ஒருவர் தன்னை மிகவும் சாதாரண குடிமக்களில் ஒருவராகக் கருதி நடிப்பது மன்னிக்கவே முடியாதது. தான் செலுத்தும் வரிகளைப் பற்றி தேவையற்ற கூற்றுகளைத் தெரிவிக்கின்ற அவரது எந்தவொரு முயற்சியும் அப்படித்தான் எடுத்துக் கொள்ளப்படும். இந்திய குடியரசுத் தலைவர் ஒருவர் அனுபவிக்கின்ற அனைத்து பலன்களும் குடிமக்களுக்கு நன்றாகவே தெரியும்; எதிர்பாராது தற்செயலாக குடியரசுத் தலைவர்களான பிரதிபா பாட்டீல், கியானி ஜைல் சிங் போன்றவர்கள் அவற்றைத் தவறாகப் பயன்படுத்தியது பற்றி அவர்களுக்கு இன்னும் நன்றாகவே தெரியும்.

தலித் ஒருவர் உச்சத்தை அடைவது மிகப் பெரிய சாதனை என்ற அனுமானத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்ற நேரம் வந்துவிட்டது. தான் வகித்த பதவிகளுக்குத் தேவையான தகுதிகளைப் பெற்றிருந்ததன் மூலம் மட்டுமே கே.ஆர்.​​நாராயணன் பல உயர் பதவிகளை அடைந்தாரே தவிர தன்னுடைய தலித் அந்தஸ்தைக் காட்டி அல்ல. அந்த தகுதிகளை அவர் பெற்றிருந்தது அவரது தனித்துவத்திற்கான அடையாளமாகும்.  


கே.ஆர்.​​நாராயணனின் இந்தியாவிற்கும் ராம்நாத் கோவிந்தின் இந்தியாவிற்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்பது இங்கே மிகவும் முக்கியமாகும். கே.ஆர்.​​நாராயணனின் இந்தியா ஜனநாயகக் கொள்கைகளால் வழிநடத்தப்பட்டதாக இருக்கின்ற போது, ராம்நாத் கோவிந்தின் இந்தியா ஆதிக்க ஆளுமையின் கட்டளைகளால் நிறைவேற்றப்பட்டதாக இருக்கிறது. ஒன்று ஜவஹர்லால் நேருவின் இந்தியாவையும், மற்றொன்று நரேந்திர மோடியின் இந்தியாவையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக உள்ளது. இந்த முன்னோக்கைப் புறக்கணிப்பது அரசியல் நோக்கங்களுக்காக யதார்த்தத்தைச் சிதைப்பதாகவே இருக்கும். கே.ஆர்.நாராயணன் தலித்துகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் என்று கூறுவதைப் போலவே கோவிந்த்தையும் அவ்வாறு கூறுவது தலித்துகளுக்கு எந்த விதத்திலும் நியாயம் செய்வதாக இருக்காது. கே.ஆர்.நாராயணன் தலித்துகளுக்கு மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால் தலித்துகளுக்கு என்றிருக்கின்ற மதிப்பின் தயவிலே கோவிந்த் வாழ்ந்து வருகிறார். இது இந்தியாவில் தற்போது இருக்கின்ற தலைகீழ் யதார்த்தத்தையே குறிக்கின்றது.   


தன்னை விசுவாசியாக கோவிந்த் காட்டிக் கொண்டதே நரேந்திர மோடி அவரை உயர்பதவிக்குத் தேர்வு செய்யுமாறு பார்த்துக் கொண்டது. ஆர்எஸ்எஸ் பிரச்சாரக், ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் என்றிருந்த கோவிந்த் 1998 முதல் நான்கு ஆண்டுகளுக்கு பாஜகவின் பட்டியல் சாதி மோர்ச்சா அமைப்பின் தலைவராகப் பணியாற்றினார். பி.ஜே.அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் பதவிக்கு அடல் பிஹாரி வாஜ்பாயி தேர்வு செய்து கொண்ட கருத்திலிருந்து இது முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. ‘வாக்காளர்கள் என்ன முடிவுகளை எடுப்பார்கள் என்பது குறித்த எந்தவொரு தெளிவான கணிப்பும் இல்லாத நிலைமையில் 2019இல் ஏற்படப் போகின்ற எந்தவொரு அரசியல் நிச்சயமற்ற தன்மையையும் தனக்கு விசுவாசமாக இருக்கின்ற குடியரசுத் தலைவரே தன்னுடைய விருப்பத்திற்கேற்றவாறு கையாள்வார் என்ற நம்பிக்கையில் 2019 மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டே குடியரசுத் தலைவராக கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்’ என்று வழக்கறிஞரும், செயற்பாட்டாளருமான இந்திரா ஜெய்சிங் கூறுகிறார். வாஜ்பாயிடம் இருந்த தன்னம்பிக்கையை தன்னிடம் கொண்டிராத மோடி வெளிப்படையாக எந்தவொரு வாய்ப்பையும் எதிர்கொள்ள  விரும்பியவரில்லை. ஃபக்ருதீன் அலி அகமதுவின் பாரம்பரியத்தில் ரப்பர் ஸ்டாம்ப் குடியரசுத் தலைவராக ஒருவர் இருப்பது மட்டுமே பாதுகாப்பு என்பதாகவே அவர் உணர்ந்தார். அவ்வாறு ஒருவர் அவருக்கு கிடைத்தார்.      


நாடு மோசமான இரட்டை விளைவுகளுக்குள்ளானது. குடியரசுத் தலைவர் பதவிக்குத் தன்னுடைய விசுவாசி ஒருவரைத்  தேர்ந்தெடுத்ததன் மூலம் தனது முன்னுரிமையை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். அவர் தேர்ந்தெடுத்த அந்தக் குடியரசுத் தலைவர் தனது முதன்மைக் கடமை பிரதமரை - இந்திய அரசியலமைப்பை அல்ல - பேணுவது, பாதுகாப்பது, காத்து நிற்பது மட்டுமே என்பதாகக் கண்டு கொண்டிருந்தார். அந்தச் செயல்பாடு ஒருசிலரின் தனிப்பட்ட நலன்கள் தேசிய நலன்களை மிஞ்சியவையாக இருக்கின்றன என்ற இந்தியாவின் மேலோட்டமான யதார்த்தத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது. மற்ற எவற்றையும்விட பிரதமரின் மேலாதிக்கமே புதிய இந்தியாவின் முன்னேற்றத்திற்கு முக்கியமாகிப் போனது.     


ஜனநாயகத்திற்கான விளக்கத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த அடிப்படை மாற்றம் யாரையும் ஆச்சரியப்படுத்த வேண்டிய தேவையில்லை. இந்தியாவில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்களையே - நாட்டின் நிர்வாக ஒழுக்கம் எட்டியிருக்கின்ற தாழ்ந்த நிலையை - அது பிரதிபலிப்பதாக இருக்கிறது. இந்தியா அமெரிக்காவைப் போல இருக்கவில்லை. அமெரிக்க அதிபரால் மீற முடியாத வரம்புகள் அமெரிக்காவில் இருக்கின்றன. அந்த வரம்புகளைப் புறக்கணிக்க முயற்சிப்பவர்களின் நிலைமை ரிச்சர்ட் நிக்சனைப் போலவே முடிவடையும். இந்தியா விளாடிமிர் புதினின் ரஷ்யாவை மிகவும் ஒத்ததாக இருக்கிறது. அங்கே இருக்கின்ற ‘ஒப்பனை அரசியலமைப்புவாதம்’ தொடர்பான அதிபரின் முயற்சிகளுக்கு ஒரேயொரு நோக்கம் மட்டுமே - அதாவது தன்னுடைய ஆட்சியை காலவரையின்றி நீட்டித்துக் கொள்ளும் நோக்கம் மட்டுமே - உள்ளது. ஜி ஜிங்பிங்கின் ‘சோசலிச ஜனநாயகமும்’ அதைப் போன்றே இருக்கிறது. புதினின் நற்பண்புகளை ஜியின் திறமைகளுடன் இணைத்து வைத்துக் கொண்டிருக்கின்ற இந்தியா மட்டும் வித்தியாசமாக ஏன் இருக்க வேண்டும் - எப்படி அதனால் வித்தியாசமாக இருக்க முடியும்? நாம் அனைவரும் ஜனநாயக நாடுகள்தானே?       

https://www.newindianexpress.com/opinions/columns/t-j-s-george/2021/jul/18/how-to-preserve-protect-and-defend-pm-2331682.html

Comments