1986 முதல் 2007 வரை ஸ்ரீமதி நதிபாய் தாமோதர் தாக்கர்சே (SNDT) மகளிர் பல்கலைக்கழகத்தின்
கல்வி தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய வசுதா காமத், 2011ஆம் ஆண்டு அதே பல்கலைக்கழகத்தின்
துணைவேந்தராவதற்கு முன்பாக, 2007 முதல் 2011 வரை தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி
நிறுவனத்தின் துணை அமைப்பான மத்திய கல்வி தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை இயக்குநராகப்
பணியாற்றி இருந்தார். துணைவேந்தராக ஓய்வு பெற்ற பிறகு, 2015 முதல் 2018 வரை குடியரசுத் தலைவரால்
இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும், மனிதவள
மேம்பாட்டு அமைச்சகத்தால் 2015ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்து பணியாற்றும்
வகையில் அமைக்கப்பட்ட இந்திய தேசிய ஆணைய உறுப்பினராகவும், 2015 முதல் 2017 வரை திருச்சி
தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் வசுதா காமத் நியமிக்கப்பட்டார். தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கை தயாரிக்கும் குழுவில் உறுப்பினராகப்
பணியாற்றிய காலத்தில் தன்னுடன் அந்த வரைவறிக்கை குழுவில் சக உறுப்பினராகப் பணியாற்றிய உத்தரப்பிரதேச மாநிலக் கல்வித்துறை முன்னாள் செயலாளர்
மற்றும் உத்தரப்பிரதேச மாநில உயர்நிலை & இடைநிலை வாரியத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர்
கிருஷ்ண மோகன் திரிபாதியுடன் இணைந்து, இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படுகின்ற
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் கசிந்து
விடாமல் கண்காணிப்பதற்காக மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்
அமைக்கப்பட்ட ஏழு பேர் கொண்ட குழுவில் உறுப்பினராக இருந்து வசுமிதா காமத் செயல்பட்டுள்ளார்.
வசுதா காமத்
SNDT மகளிர் பல்கலைக்கழக
முன்னாள் துணைவேந்தர்
தலைகீழ் வகுப்பறை
2017 ஜூன் 26 அன்று தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கை குழுவின் உறுப்பினராக நியமனம்
ஆன இரண்டு நாட்கள் கழித்து ‘நான் தலைகீழ் வகுப்பறை கற்றல் முறை குறித்து பயிற்சிப்
பட்டறைகளை நடத்தி வருகிறேன். பல்கலைக்கழக ஆசிரியர்கள் பாடவரைவு குறித்த விழிப்புணர்வின்றி
இருப்பது வருத்தமளிப்பதாக இருக்கிறது’ என்று ட்விட்டரில் வசுதாகாமத் பதிவிடுகிறார்.
ஒட்டு மொத்தமாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் மீது குற்றம் சுமத்துகிற வசுமிதாவிற்கு கல்விக்
கொள்கை வரைவறிக்கை தயாரிப்புக் குழுவில் இடம் கிடைத்ததில் ஆச்சரியமடைவதற்கு எதுவுமில்லை.
இந்த ’தலைகீழ் வகுப்பறைக் கற்றல் முறை’ என்பது அண்மைக் காலங்களில் மாற்றுக் கல்வி
முறை குறித்து உரையாடுபவர்களின் பேச்சுக்களின் ஊடாக அடிக்கடி கேள்விப்படுகின்ற கல்விமுறையாக
இருக்கிறது. இந்தக் கல்விமுறை மாணவர்கள் தங்களுடைய வீடுகளில் தாங்களாகவே கற்றுக் கொண்டு,
பின்னர் கல்வி நிலையங்களில் அதனை நடைமுறைப்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கல்விமுறை நேருக்கு நேராக ஆசிரியர்களிடம் கற்றுக் கொள்ளும் முறையை மாற்றி, மாணவர்கள்
தாங்களாகவே தொழில்நுட்பத்தின் உதவியுடன் கற்றுக் கொள்ளும் வகையில் இருக்கிறது. மாணவர்களுக்குத்
தேவையான பாடங்கள் காணொளியாகவோ அல்லது யூடியூப் போன்ற வசதிகளைப் பயன்படுத்தியோ ஆசிரியர்களால்
தயாரிக்கப்பட்டு வழங்கப்படும். தங்களுடைய வீடுகளில் மாணவர்கள் அவற்றைப் பயன்படுத்தி
பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். அவற்றில் உள்ள சந்தேகங்கள் குறித்து, கல்வி நிலையங்களுக்கு
வரும் போது ஆசியர்களிடம் விவாதித்து புரிந்து கொள்ளலாம் என்பதுதான் இந்தக் கல்விமுறையின்
அடிப்படை. வீட்டில், கல்வி நிலையத்தில் என்று ஆசிரியருடன் இரண்டு வெவ்வேறு முறையான
அணுகலை இந்தக் கல்விமுறையின் மூலமாக மாணவர்கள் ஏற்படுத்திக் கொள்ள முடியும், தாங்களாகவே
பாடத்தைக் கற்றுக் கொள்ளும் மாணவர்கள் ஆசிரியர்களின் உதவியுடன் அதனை நடைமுறைப்படுத்திக்
கொள்ளவும் முடியும், ஒரே பாடத்தை எத்தனை முறை வேண்டுமென்றாலும் நிறுத்தியோ அல்லது திரும்பத்
திரும்ப பார்த்தோ மாணவர்களால் கற்றுக் கொள்ள இயலும் என்று இந்த கல்விமுறையின் சாதகமான
அம்சங்கள் அடுக்கப்படுகின்றன.
கற்பிக்கும் பொறுப்பு பெற்றோரிடம்
இருந்தாலும் கல்விக்கூடங்களை ஒட்டுமொத்தமாக தொழிற்சாலைகளாக மாற்றும் தன்மை கொண்டதாகவே
இந்தக் கல்விமுறையை நம்மால் காண முடியும். அனைவருக்கும் சமமான, தரமான கல்வி என்பதற்கான
வாய்ப்புகள் நிச்சயமாக இத்தகைய கல்விமுறையின் மூலமாக அழித்தொழிக்கப்படும். தொடர்ந்து
மேம்படுத்தப்படும் பாடங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் மாணவர்களுக்கு அற்றுப் போகும்.
மொத்தத்தில் இந்த கல்விமுறை தற்போது நடைமுறையில் உள்ள வகுப்பறைப் பாடங்களை வீட்டுப்
பாடங்களாகவும், வீட்டுப் பாடங்களை வகுப்பறைப் பாடங்களாகவும் மாற்றி விடும். மாணவர்களுக்கு
கற்றுத் தரும் பொறுப்பு முற்றும் முழுவதுமாக பெற்றோர்களிடம் தள்ளி விடப்படும். ஆசிரியர்களின்
காணொளிப் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டிய தேவை பெற்றோர்கள் மீது சுமத்தப்படும். கல்வி
வணிகமயமாவது குறித்து பேசுகின்ற போது, தனியார் பள்ளி நிர்வாகிகள் ‘உங்கள் பிள்ளையை
வீட்டில் நீங்கள் நன்றாகச் சொல்லிக் கொடுத்து படிக்க வையுங்கள். பள்ளியில் நாங்கள்
உங்கள் பிள்ளையை எங்கள் குழந்தைகளைப் போல பார்த்துக் கொள்வோம்’ என்று சொல்வதாகக் கூறப்படுவதுண்டு.
இதனை முற்றிலும் உண்மையாக்குகின்ற விதத்திலேயே இந்த தலைகீழ் வகுப்பறைக் கற்றல் முறை
இருக்கிறது. தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மூலமாக கற்றல் முறையை வகுப்பறைக்குள் புகுத்திட
துடிக்கும் இன்றைய அரைகுறை நிலைமை, இந்த தலைகீழ் மாற்றத்திற்கு இட்டுச் செல்வதாகவே
இருக்கிறது. இம்மாதிரியான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அள்ளி வீசப்படுகின்ற
ஆலோசனைகள் ஆசிரியர்களே இல்லாத கற்பித்தலுக்கே வழிவகுக்கும்.
பொதுப்புத்தி தருகின்ற வசதி
தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கை குழுவின் உறுப்பினராக சேவையாற்றிய வசுதா காமத்.
இத்தகைய கல்விமுறைகள், கற்பித்தல் முறைகளைப் பற்றி பேசுகின்ற, அவற்றைப் பரிந்துரை செய்கின்ற
துறை சார்ந்து பணிபுரிந்து வருபவராகவே இருக்கிறார். ஆசிரியர் பணியில் இருப்பவர்களுக்கு
எதுவுமே தெரிவதில்லை, மாணவர்களுக்கு என்ன தேவை என்பதை உணராதவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்,
இன்றைய ஆசிரியர்கள் பாடத்திட்டம் குறித்து சற்றும் அறிவில்லாதவர்களாக இருக்கிறார்கள்
என்று அலுத்துக் கொண்டால், அல்லது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது அக்கறை கொள்வதில்லை
என்று பெற்றோர்களுக்காக நடத்தப்படுகின்ற கூட்டங்களில் கடிந்து கொள்வது, குழந்தைகள்
மீது எதனையும் திணித்து அவர்களின் சுதந்திரத்தில் பெற்றோர்கள் தலையிடக் கூடாது என்று
அறிவுரைகளை எழுதிக் குவிப்பது என்றிருந்தால் மட்டுமே பிரபல கல்வியாளர் என்று மதிக்கப்படுகின்ற
பொதுப் புத்தியினால் பலனடைந்திருப்பவராகவே இவரும் இருக்கிறார்.
பல கலைகளையும் கற்றுத் தேர்ந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றவர்களாக மாணவர்கள் இருக்க
வேண்டும் என்று இந்தக் கல்விக் கொள்கை வரையறுத்திருக்கின்ற வகையிலே, இளநிலை, முதுநிலை,
பிஎச்.டி படிப்புகளில் வேதியியல், சமூகவியல், கல்வியியல் என்று ஞானம் பெற்றவராக இருக்கிறார்.
கலை, அறிவியல் என்ற பாகுபாடுகளின்றி பலதரப்பட்ட பாடங்களை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்
என்று நமக்குப் பரிந்துரைக்கின்ற இந்த தேசிய கல்விக் கொள்கை இல்லாத காலத்திலேயே அதனை
அவரால் எவ்வாறு சாதிக்க முடிந்தது என்பதை முதலில் இவர் நமக்கு விளக்கட்டும்.
நாளந்தா 2.0
‘உலகின் தலைசிறந்த நாடுகள், மாநிலங்கள், நகரங்கள் அனைத்துமே உலகத் தரத்திலான
உயர்கல்வி அமைப்பைப் பெற்றவையாகவே இருக்கின்றன. அமெரிக்காவில் 135, சீனாவில் 45, தென்
கொரியாவில் 12, கலிபோர்னியாவில் 12, சிலிகான் பள்ளத்தாக்கில் 3, சிங்கப்பூரில் 2 என்று
உலகத் தரத்தில் முதலாவதாக இருக்கின்ற 500 பல்கலைக்கழகங்கள் பரவியிருக்கின்றன. இதுபோன்ற
100 தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் இந்தியாவிற்குத் தேவைப்படுகின்ற நிலைமையில், இந்தப்
பட்டியலுக்குள் இடம் பிடிக்கும் வகையிலான தரத்துடன் எந்தவொரு பல்கலைக்கழகமும் இந்தியாவில்
இல்லை. எனவே பண்டைய இந்தியாவில் இருந்த நாளந்தா பல்கலைக்கழகத்தைப் போன்று, இருபத்தொன்றாம்
நூற்றாண்டின் தலைசிறந்த ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைப் போன்று குறைந்தபட்சம் ஒரேயொரு
பல்கலைக்கழகத்தையாவது இந்தியாவில் உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது’ என்று குறிப்பிட்டு,
’நாளந்தா 2.0விற்கான முன்முனைவு’ என்ற அடைமொழியுடன், இந்த கருத்தை மையமாகக் கொண்டு
உருவாக்கப்பட்ட ’இந்தியாவின் எதிர்காலத்திற்கான பல்கலைக்கழகத்தைக் கட்டமைப்பதற்கான
அமைப்பின்’ உலகளாவிய ஆலோசனைக் குழுவில் வசுமிதா உறுப்பினராக இருக்கின்றார். இந்த தேசிய
கல்விக் கொள்கை வரைவறிக்கையில் நாளந்தா, தக்சசீலா திட்டங்கள் இருப்பதில் நமக்கு வியப்பேதும்
ஏற்படவில்லை.
ஆதாரங்கள்
1. Brief Biography- 2019 Dr. Vasudha Kamat https://www.licindia.in/getattachment/Bottom-Links/Golden-Jubilee-Foundation/About-Us/Profile-of-Prof-Vasudha-Kamat,-2019.pdf.aspx
2. New Trends in Education for 21st Century http://aview.in/allevents/new-trends-in-education-for-21-century.php
3. Building the University of the Future in India – a Nalanda 2.0 initiative https://www.universityofthefutureinindia.org/global-advisory-board
தா. சந்திரகுரு தொகுப்பாக்கத்தில் 2019ஆம் ஆண்டு பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள ‘தேசிய கல்விக் கொள்கை - பின்னணி மர்மங்கள்’ என்ற நூலின் எட்டாவது அத்தியாயம்
கலப்பு கற்பித்தல், கற்றல் குறித்து பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டிருக்கும் கருத்து குறிப்பின் முதல் அத்தியாயத்தில்
வசுதா காமத் குறிப்பிடும் தலைகீழ் வகுப்பறை
Comments