சிந்துவெளி - வைகை பண்பாடுகளை சங்க இலக்கியம் என்ற ‘பாலம்’ இணைக்கிறது

 ஆர். பாலகிருஷ்ணன்

சிந்துவெளி ஆய்வு மைய கௌரவ ஆலோசகர்

ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகர்

ஃப்ரண்ட்லைன்


எழுத்தாளர், கவிஞர் மற்றும் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுமான ஆர்.பாலகிருஷ்ணனுடன் அவருடைய சமீபத்திய ஆங்கில நூலான ‘ஒரு நாகரிகத்தின் பயணம்: சிந்துவெளி முதல் வைகை வரை’ (Journey of a Civilization: Indus to Vaigai) குறித்து நடத்தப்பட்ட நேர்காணல்.


2018ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக ஓய்வு பெற்ற ஆர்.பாலகிருஷ்ணன் சிறகுக்குள் வானம், சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம், நாட்டுக்குறள், பன்மாயக் கள்வன், இரண்டாம் சுற்று என்று தமிழில் பல புத்தகங்களை எழுதியுள்ளார். இடப்பெயர் ஆய்வுகள், ஒடிசாவின் வரலாறு மற்றும் அதன் பன்மைப் பண்பாடு குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்திய கல்வெட்டியலாளரும், முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுமான ஐராவதம் மகாதேவன், சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் என்ற பாலகிருஷ்ணனின் நூல்தான் அந்தப் பொருண்மையில் தமிழில் எழுதப்பட்ட சிறந்த புத்தகம் என்ற பாராட்டியுள்ளார். ஒடிசா மாநில அரசு மற்றும் இந்திய அரசில் முப்பத்தி நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், 2018ஆம் ஆண்டு பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்றார்.  தற்போது அவர் சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் (ஆர்எம்ஆர்எல்) சிந்துவெளி ஆய்வு மையத்தில் கௌரவ ஆலோசகராக உள்ளார்.  ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

‘ஒரு நாகரிகத்தின் பயணம்: சிந்துவெளி முதல் வைகை வரை’ என்ற அவரது சமீபத்திய புத்தகம் சிந்துவெளி நாகரிகத்தின் மொழி, திராவிட மொழி பேசும் மக்களின் தோற்றம், குறிப்பாக பழைய தமிழ்த் தொன்ம மரபுகள் குறித்து நிலவும் புதிர்களுக்கிடையிலான இழைகளை இணைத்து ஒர் பொதுவான தளத்தை நிறுவ முயல்கிறது. அந்தப் புத்தகம் சிந்துவெளி மக்களின் மொழியின் திராவிட மொழிக்குடும்ப உறவு குறித்து புதிய ஆதாரங்களை வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் தமிழர்களின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தைப் புரிந்து கொள்வதற்குப் பொருத்தமான மிகப் பழமையான ஆவணமாக உள்ள பண்டைய சங்கத் தமிழ் இலக்கியங்களில் அறியலாகும் மீள்நினைவுகள் சிந்துவெளி நாகரிகத்துடன் சாத்தியமான தொடர்புகளைக் கொண்டுள்ளதாகவும் அந்தப் புத்தகம் நிலைநிறுத்துகிறது. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வெளியிட்டுள்ள அந்தப் புத்தகத்தை 2019 டிசம்பரில் நீதியரசர் திரு.மகாதேவன் வெளியிட்டார். ஃப்ரண்ட்லைனுக்கு அளித்த இந்த நேர்காணலில் பாலகிருஷ்ணன் தனது புத்தகத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து பேசியுள்ளார்.

நேர்காணலின் சில பகுதிகள்:

உங்களுடைய ‘ஒரு நாகரிகத்தின் பயணம்: சிந்துவெளி முதல் வைகை வரை’ என்ற புத்தகம் எது குறித்து?

இந்தியாவின் வடமேற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் செழித்து வளர்ந்த சிந்துவெளி நாகரிகத்திற்கும் கடைத்தெற்குப் பகுதியில் இருந்த பண்டைய தமிழ் நாகரிகத்திற்கும் இடையில்  இடம், காலம் சார்ந்து இருக்கின்ற இடைவெளிகளுக்கிடையே பாலத்தை ஏற்படுத்தித் தருவதாகவே இந்தப் புத்தகம் அமைகிறது. இதில் சிந்துவெளி நாகரிகத்தின் திராவிடக் கருதுகோளை வலுப்படுத்துவதற்கான புதிய ஆதாரங்களையும், நிகழ்வாய்வுகளையும் முன்வைத்திருக்கிறேன். சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கியவர்களின் மொழியியல் தொடர்பு, தமிழ் வரலாற்றுக்கு முந்தைய வரையறைகள் மற்றும் தமிழ் நாகரிகத்தின் வளர்ச்சி என்று இந்திய வரலாற்றுக்கு முந்தைய இரட்டைப் புதிர்களைக் குறிப்பதாகவே இந்த புத்தகம் அமைந்துள்ளது. அந்த இரண்டு புதிர்களும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருக்கின்றன என்று வாதத்தை இதில் முன்வைத்திருக்கிறேன். இதில் ஒரு புதிருக்கான பதில் மற்றொன்றுக்கான பதிலுக்கு வழிவகுப்பதாகவே இருக்கும்.

‘ஒரு நாகரிகத்தின் பயணம்’ என்று அதை நீங்கள் ஏன் குறிப்பிடுகிறீர்கள்?   

உலகின் பெரும்பாலான பகுதிகளின் வரலாறு மற்றும் பழங்காலம், இடப்பெயர்வுகள் குறித்த அடுக்குகளுடனே இணைக்கப்பட்டுள்ளது. இந்த உலகில் உள்ள அனைவரும் ஒரு வகையில் குடியேறியவர்களாகவே இருக்கின்றனர். மொழி மாற்றங்கள், தொழில்நுட்பங்களைப் பரிமாறிக் கொள்வது, சித்தாந்தங்களின் பரவல், ஒரு நிலப்பகுதியின் தனித்துவமான மரபுகளை மற்றொரு நிலப்பகுதிக்கு கடத்தத் தூண்டுவதாகவே மக்களின் இடப்பெயர்வு இருக்கிறது. ஒரு வகையில் பார்த்தால் கடந்த காலம் என்பதே இதுபோன்ற பயணங்களின் தொகுப்பாக, கூட்டுத்தொகையாகவே உள்ளது. தனிநபர்கள், சிறு சமூகங்கள் மற்றும் ஆக்கிரமிப்புக் குழுக்களுடைய பயணங்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு என்று தொடர்ச்சியான செயல்முறையாகவே நடைபெற்று வருகின்றன. அவை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். சில சமயங்களில் இதுபோன்ற இடப்பெயர்வுகள் புதிய புவியியல் பகுதியில் இருந்த அதன் முந்தைய கூறுகளில் பண்பாடு நகர்வுகள் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் வாழ்க்கை முறைகள், சித்தாந்தங்கள், பழக்கவழக்கங்கள், மரபுகள், மொழி, பண்பாட்டு முன்னுரிமைகள் ஆகியவற்றின் ஒட்டுமொத்தப் பரிமாற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுத்து அவற்றை தொடர்ந்து செழித்து வளரச் செய்கின்றன. இந்தப் பயணத்தில், புலம் பெயர்ந்த சமூகங்களுடன் அவர்களுடைய  தெய்வங்களும் மிக முக்கியமாக அவர்களுடைய இடப் பெயர்களும் சேர்ந்தே இடம் பெயர்கின்றன. இந்த பயணங்களின் அளவும், ஆழமுமே இதை ஒரு  ‘நாகரிகத்தின் பயணம்’ என்று அழைக்கத் தூண்டுகின்றன. அடுக்கடுக்கான இடப்பெயர்வுகளுடன் சிந்துவெளி நாகரிகம், பழைய தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றுக்கு இடையே இருந்த  தொடர்பையும், தொடர்ச்சியையும் எடுத்து வைத்துள்ளேன். பல்துறை சான்றுகள் மூலம் இதை சரிபார்த்துக்கொள்ளவும், உறுதிப்படுத்திக் கொள்ளவும் முடியும்.

சிந்துவெளி நாகரிகத்தில் முக்கியமான திராவிட எச்சமாக ‘கொற்கை-வஞ்சி-தொண்டி (கே.வி.டி) வளாகத்தை’ நிலைநிறுத்துகிறீர்கள். அதுகுறித்து மேலும் விளக்க முடியுமா? 

‘கே.வி.டி வளாகம்’ என்பது பொதுவாக வடமேற்கு புவியியல் மற்றும் சங்கத் தமிழ் நூல்களில் ஒரே மாதிரியான இடங்களின் பெயர்களுக்கு நான் கொடுத்த ஒரு குறிச்சொல்லாகும். இடைப்பட்ட பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தப் பெயர்கள் தொடர்ந்து பிழைத்து வந்திருக்கின்றன. இப்போதும்கூட அவை துணைக் கண்டத்தின் வடமேற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ளன. இந்த பெயர்களில் பலவும் நவீன தமிழ்நாட்டின் இடப்பெயர் குறித்த தொகுப்புகளில் வெளிப்படையாகக் காணப்படுகின்றன. அதுவே இடப்பெயர்களுக்கான தனித்துவமாகும். நாகரிகங்களின் பிறப்பு, வளர்ச்சி, வீழ்ச்சியைக் கடந்து, புவியியல் மற்றும் மொழியியல் மாற்றங்களுக்கிடையே இடப்பெயர்கள் தங்களைத் தக்க வைத்துக் கொள்கின்றன. பெரும்பாலும் பெயர்களை மாற்றுகின்ற அடையாளப் பிரச்சனை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சம்பந்தப்பட்டதே. சிறிய வாழ்விடங்கள், முக்கியமற்ற இடங்களின் இடப்பெயர்கள் கடந்த காலத்தின் புதைபடிவப் பிரதிநிதித்துவங்களாக யாராலும் கவனிக்கப்படாமல் போகின்றன. ஒரு வகையில் ‘நாட்டுப்புற சொற்பிறப்பியல்’ என்பது ஏற்கனவே உள்ள இடங்களின் பெயர்களை தாம் அறிந்த மொழிகளின் மூலம் விளக்கும் நோக்கம்  கொண்டதாக உள்ளது. பழைய இடப்பெயர்கள் புதிய ‘அர்த்தங்களைப்’ பெறுவதற்கு அது உதவுகிறது. உலகெங்கிலும் நடந்துள்ள ஆய்வுகள் மூலம் கடந்த கால இடப்பெயர்வுகளுக்கான குறிப்பான்களாக இடப்பெயர்களின் நம்பகத்தன்மை நன்கு நிறுவப்பட்டுள்ளது. ஒரே மாதிரியான இடப்பெயர்கள் சரிபார்க்கக்கூடிய பல சான்றுகளில் ஒன்றாக இருப்பதையும், இந்தப் பயணத்தை மறுகட்டமைப்பதற்கான நியாயமான வார்ப்புருவை அவை வழங்குவதையும் இந்தப் புத்தகத்தில் நான் தெளிவுபடுத்தியுள்ளேன். இந்தப் புத்தகத்தில் வைக்கப்பட்டுள்ள என்னுடைய வாதங்கள் பலதுறை சார்ந்தவை ஆகும்.

தற்போதைய சூழலில் இந்த ஆய்வு எந்த அளவிற்குப் பொருத்தமாக உள்ளது?

இந்தியாவின் அடித்தளம் அதன் பன்மியம் ஆகும். இந்தியப் பழங்குடியினரின் வாழ்வியல், ‘தரமான செங்கற்களால்’ உருவாக்கப்பட்ட ஹரப்பன் அடித்தளங்கள், துணைக் கண்டத்தில் வேரூன்றிய எண்ணற்ற உள்ளூர் சமூக மரபுகள், தொலைதூரக் கரைகளை அடைந்த ஒப்பிடமுடியாத வணிக நாட்டம், இந்திய பண்பாடு என்ற பெயரில் தற்போது அறியப்படும் பல்வேறு கூட்டுச்சிந்தனைகள், சித்தாந்தங்கள், வாழ்க்கை முறைகளின் கலவை என்று அதன் பன்முக அடித்தளங்களை விவாதிக்காமல் இந்தியா என்ற கருத்தியலை அர்த்தமுள்ளதாக எவராலும் விவாதிக்க முடியாது. 1924இல் சிந்துவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பானது அளவிட முடியாத விளைவுகளைக் கொண்டதாக அதுவரையிலும் இல்லாத நிகழ்வாக இருந்தது. ஆனாலும் இதுவரையிலும் சிந்துவெளி தொல்லியல் மற்றும் பிற ஆதரங்களைக் கொண்டு இந்திய பழங்கால வரலாறு குறித்த மதிப்பீடு, குறிப்பாக பண்பாட்டு வரலாறு மறுமதிப்பீடு செய்யப்படவில்லை. அது நீண்ட காலத் தேவையாக இன்னும் இருக்கிறது. எடுத்துக்காட்டாக தெற்கு, கிழக்கு இந்தியாவின் முழு மட்பாண்ட வகைகளையும், வரிசைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலேயே இந்தியவியல் அறிஞர் ஒருவர் மட்பாண்ட சமூகங்களின் ஊடாக இந்தியப் பண்பாடு என்ற கருத்தியலை மதிப்பிட முற்படுகிறார். தென்னிந்திய மற்றும் கிழக்கிந்திய மட்பாண்ட தொழில் நுட்பங்களுக்கும், இவ்விரு பகுதிகளின் குயவர் சமூகவியலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று காரணமும் சொல்கிறார். இத்தகைய அணுகுமுறைகளை கருத்தில் கொண்டு  சிந்துவெளி நாகரிகத்தை திராவிடக் கருதுகோள் என்ற நிலைப்பாட்டில், கண்ணோட்டத்தில் இந்தப் புத்தகம் அணுகுகிறது. அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்களால் நியாயமான, சாத்தியமான கருத்தாக திராவிடக் கருதுகோள் கருதப்படுகிறது. இந்தியா என்ற கருத்தின் உள்ளடக்கிய தன்மை அதன் அடித்தளங்களில் ஆராயப்பட வேண்டிய  அடிமட்ட நிலையிலானதாக இருக்கிறது என்பதை மீண்டும் வலியுறுத்துவதற்கு இந்த மறு மதிப்பீடானது காலத்தின் தேவையாக உள்ளது. இந்தியப் பன்மைத்துவம் என்பது ‘பண்பாடுகளின் சங்கமமான’ உருகும் பானையாகவோ (Melting pot) ‘தனித்துவத்துடன் உள்ள பல பண்பாடுகளின் தொகுப்பான சாலட் கிண்ணமாகவோ (Salad Bowl)’ இல்லை. ஏனென்றால் உருகும் பானையில்  கூட்டுப்பண்பாட்டை உருவாக்கும் கூறுகள் ஒவ்வொன்றும் தங்கள் தனித்தன்மையை இழந்து விடுகின்றன. சாலட் கிண்ணத்தில் கூட்டுப்பண்பாட்டை கட்டமைக்கும் எல்லா கூறுகளுக்கும் இடம் கிடைப்பதில்லை. எனவே இந்திய பன்மியம் என்பது  பல நிலைகளிலான சகவாழ்வு, மோதல்கள் மற்றும் ஏற்றுக் கொள்ளலைக்  கொண்டதொரு ‘வெப்பமண்டல மழைக்காட்டைப்’ (Tropical Rainforest) போலவே உள்ளது.

தற்போதுள்ள ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது இந்த விஷயத்தில் உங்களுடைய ‘ஒரு நாகரிகத்தின் பயணம்’ எவ்வாறு வித்தியாசமானது? ஆட்சிப்பணி அதிகாரியாக உங்கள் பணியின் தன்மை காரணமாக இந்தப் புத்தகத்தை எழுத நீங்கள் எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டீர்கள்? 

அது ஒரு நீண்ட பயணம். 1984ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்து ஒடிசா பணித்தொகுதிக்கு நியமிக்கப்பட்டேன். எனது ஆய்வுப் பயணத்திற்கு அதுவே தொடக்கப் புள்ளியாக அமைந்தது. எனக்கு பழங்குடி மக்களால் நிரம்பிய ஒடிசா புதிய உலகமாக இருந்தது. தமிழ் இலக்கிய மாணவனாக கோராபுட்டில் இருந்த திராவிட பழங்குடி கிராமங்களில் நான் கவனித்த வாழ்க்கை, குறிஞ்சி நிலப்பரப்பின் [மலைப்பாங்கான பகுதிகள்] பின்னணியில் அமைக்கப்பட்ட சங்கத் தமிழ்க் கவிதைகளில் சித்தரிக்கப்பட்ட வாழ்க்கையின் நெருக்கமான பிரதிபலிப்பாக இருப்பதைக் கண்டேன். கோராபுட் மற்றும் பஸ்தர் [இப்போது சத்தீஸ்கரில்] பழங்குடியினரால் நான் ஈர்க்கப்பட்டேன். அந்தப் பகுதிகளின் இடப்பெயர்களுக்கு தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் காணப்படும் பெயர்களுடன் இருந்த ஒற்றுமையையும் நான் கவனிக்க ஆரம்பித்தேன். என்னுடைய ஒரு கண்டுபிடிப்பு மற்றொன்றுக்கு வழிவகுப்பதாக இருந்தது. ஒடிசா பண்பாட்டின் பல அம்சங்களை, அதன் பல அடுக்கு கொண்ட பன்முகத்தன்மையை கற்றுக் கொண்டேன். ஒடிசாவில் உள்ள இடங்களின் பெயரை அடிப்படையாகக் கொண்ட தொகுப்பைக் கொண்டு  பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதினேன். உள்ளூர் பழங்குடியினரின் தோற்றம் மற்றும் அவர்களுடைய வெளிப்புறத் தாக்கங்களை மதிப்பிடும் நோக்கில் இந்தியாவில் சூரிய வழிபாட்டின் தோற்றம் மற்றும் பரவலை தொடர்ந்து ஆய்வு செய்த போது, ​​எனது ஆய்வுகள் வடமேற்கு நிலப்பரப்புகளுக்கு என்னை அழைத்துச் சென்றன. அந்த சூழலிலேயே அந்த நிலப்பகுதிகளின் இடப்பெயர்களை ஆய்வு செய்தேன். சிந்துவெளிக்குப் பிந்தைய மரபுகளைக் கண்காணிக்க இடப்பெயர்களைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். சிந்துவெளி ஆய்வின் பின்னணியில் இடத்தின் பெயர் சான்றுகளைப் பயன்படுத்துவது என்பது முற்றிலும் புதிதான அணுகுமுறை அல்ல. சங்காலியா, அஸ்கோ பர்போலா, சவுத் வொர்த், ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் ஹரப்பன் பண்பாட்டின் பின்னணியில் தங்கள் கருத்துக்களை விவாதிப்பதற்கு இடத்தின் பெயர்கள் குறித்த ஆதாரங்களை பயன்படுத்திக் கொண்டிருந்தனர். அந்தச் செயல்பாட்டின்வழி ‘கே.வி.டி வளாகம்’ என்று நான் அழைப்பதை அந்த வடமேற்கு நிலப்பகுதிகளில் கண்டறிந்தேன். ஆனால் ஒரே மாதிரியான இடத்திரள்களை மட்டுமே ‘முழுமையான சான்று’ என்பதாக முன்மொழியக் கூடாது என்பதையும், பலதுறை சார்ந்த  அணுகுமுறையைப் பயன்படுத்தி எனது வாதங்களை உருவாக்க வேண்டும் என்பதையும் விரைவிலேயே நான் உணர்ந்து கொண்டேன்.

சிந்துவெளிக்கும் வைகைக்கும் இடையிலான இடம், காலம் சார்ந்து இருந்த இடைவெளியை எவ்வாறு இணைத்தீர்கள்?

சங்க நூல்களில் வரையறுக்கப்பட்டுள்ள தமிழ் பேசும் பகுதிகளின் புவியியலில் மட்டுமல்லாது அந்தப் பகுதிகளின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளிலும் தமிழர்களின் பழங்காலத்தைக் கண்டுபிடிப்பதன் மூலம் இடம்சார்ந்து அவற்றை இணைத்தேன். அவ்வாறான ‘சங்க நூல்களின் நீட்டிக்கப்பட்ட நிலப்பரப்புகள்’ தொல்பொருள்ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட சிந்துவெளி நாகரிகத்தின் இடங்களுக்கு அருகில் அழைத்துச் சென்றன. காலம் சார்ந்து சங்க நூல்களில் பொதிந்துள்ள நிகழ்வுகள் மற்றும் முன்னோக்கிய நினைவுகளைக் கண்டறிவதன் மூலம் அவற்றை இணைத்தேன். அந்தச் செயல்பாட்டில், சிந்துவெளி புவியியலில் ‘தனித்து விடப்பட்ட’ பழைய தமிழ் குறிப்பான்களும், சங்க நூல்களில் ‘முன்னோக்கி கொண்டு செல்லப்பட்ட’ சிந்துவெளி குறிப்பான்களும் சிக்கிக் கொண்டிருப்பதை நான் கண்டேன். தமிழ்நாட்டில் [கீழடியில்] கண்டறியப்பட்ட புதிய தொல்பொருள் கண்டுபிடிப்புகள் இந்த இடைவெளியைக் குறைக்க உதவுவது  மட்டுமல்லாமல் குறிப்பிடத்தக்க தொடர்ச்சி இருப்பதையும் சுட்டிக் காட்டுகின்றன.


சங்க இலக்கியங்கள்

இருமொழி நூல்கள் எதுவுமில்லாத நிலையில், சிந்துவெளி நாகரிக மக்களின் மொழி பற்றி நமக்குத் தெரியாது. இந்தச் சூழலில் சங்கத் தமிழ் நூல்களை எந்த அளவிற்கு சிந்துவெளி ஆய்வுகளுக்குப் பொருத்தமானவை என்று கருதுகிறீர்கள்? 

நகர திட்டமிடல், உலோகம், சிறந்த ஆபரணங்கள், கைவினைப் பொருட்கள் என்று பல துறைகளில் சிந்துவெளி மக்கள் சிறந்து விளங்கினர். அழியாத பொருட்களில் அவர்கள் எழுதியவை கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் அவற்றைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அழிந்து போகக் கூடிய பொருட்களின் மீது அவர்கள் எழுதிய அனைத்தும் காணாமல் போயின. சிந்துவெளி காலத்தில் இருந்த கலை, கைவினை, சிற்பம், கட்டிடக்கலை குறித்து நமக்குத் தெரியும்; ஆனால் சிந்துவெளி இலக்கியம் பற்றி நமக்கு என்ன தெரியும்? எழுதப்பட்ட வடிவமைப்பிற்கு என்று வரம்புகள் இருந்தாலும்கூட, ஓய்வு நேர நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு பார்த்தால், மிகச்சிறந்த வாய்வழி மரபுகளை நியாயமான முறையில் நாம் எதிர்பார்க்கலாம். சிந்துவெளி நாகரிகம் குறித்த பல கற்பனைகளும், வாய்வழிக் கதை  குறிப்பான்களும் பிற்கால கலை, கைவினை மரபுகளில் உயிர்ப்புடன் இருக்க முடிந்தால், வாய்வழி மரபுகளில் அதற்கான தொடர்ச்சியையும், பிற்கால இந்திய இலக்கியங்களில் - சமஸ்கிருதம் அல்லது பழந்தமிழ் என்று அவை எதில் இருந்தாலும் - அவற்றின் அடுத்தடுத்த பிரதிபலிப்புகளையும் எதிர்பார்ப்பது நிச்சயம் நியாயமற்ற செயலாக இருக்காது.

பண்டைய இலக்கியங்களைப் பொறுத்தவரை, சமஸ்கிருதம், தமிழ் ஆகியவற்றுடன் போட்டியிடக்கூடிய  வகையில் பழமையான மூன்றாவது மொழி என்று கோருவதற்கு வேறு  எந்தவொரு மொழியும் இல்லை. இந்த சூழலில் இந்தியாவில் உள்ள இந்தோ-ஆரிய குடும்பத்தைச் சேராத எந்தவொரு மொழியிலும் உள்ள இலக்கியங்களைக் காட்டிலும் சங்க இலக்கியங்களே இந்தியாவின் பழங்கால இலக்கியத் தொகுப்பாக உள்ளன. அப்படியிருப்பதனால் பண்டைய இந்திய இலக்கியங்களில் சிந்துவெளி மரபுகளுக்கான திராவிடக் கண்ணோட்டத்திலான எந்தவொரு தேடலும் சங்க இலக்கியங்களைத் தவற விடவே முடியாது. விவரங்களுக்குள் அதிகம் செல்லாமலேயே, தமிழர்கள் மட்டுமல்லாது இந்திய மக்களைப் பற்றிய சிந்துவெளியின் கடந்த காலத்தின் ஆரம்பகட்ட இலக்கிய பிரதிபலிப்புகளாக சங்க நூல்களே இருக்கின்றன என்று என்னால் மிகுந்த நம்பிக்கையுடன் கூற முடியும். ஆரம்பகட்ட சமஸ்கிருத நூல்கள் மதம் சார்ந்த இயல்புடனே இருந்தன. மதச்சார்பற்ற உரைகளின் சில கூறுகள் காளிதாசர் மற்றும் பிறரின் படைப்புகள் மூலமாக மட்டுமே சமஸ்கிருதத்திற்குள் வந்து சேர்ந்தன. அதே சமயம் சங்கத் தமிழ்த் தொகுப்புகளில் மிகவும் பழமையானவையாகவோ அல்லது மையக் கருப்பொருளாகவோ மத உள்ளடக்கங்கள் இருக்கவில்லை. சங்க நூல்களில் சித்தரிக்கப்பட்டுள்ள நம்பிக்கைகளும், நம்பிக்கை முறைகளும் வேத நூல்கள் சார்ந்த மதத்திலிருந்து பெரிதும் வேறுபட்டே இருக்கின்றன.

வெண்கல யுக இந்திய நகர்ப்புற நாகரிகத்தின் புனரமைப்பிற்கு சங்க நூல்களே முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன என்று கூறுகிறீர்களா?

ஆம். ஆரம்பகாலத் தமிழ் நூல்கள் பெரும்பாலும் தமிழ் பேசும் பகுதிகளின் மொழியியல் எல்லைகளை வடவேங்கடம் [ஆந்திராவில் நவீன திருமலையுடன் அடையாளம் காணப்படுகிறது] தென்குமரி என்றே வரையறுக்கின்றன. அதேசமயம் சங்கக் கவிதைகளில் குறிப்பிடப்பட்டுள்ள சில ‘இருப்பிடங்களும் நிகழ்வுகளும்’ ‘மிகவும் ஆழமான காலவரிசை, மிகவும் பரந்த புவியியல்’ இருந்திருப்பதைக் குறிக்கின்றன. முன்னெடுக்கப்பட்ட நினைவுகள் மற்றும் பழங்காலப் பின்னோட்டங்களின் இழைகளைப் பின்பற்றிச் சென்றால், அவை நம்மை சிந்துவெளி-ஹரப்பன் பண்பாட்டு புவியியலுக்கே அழைத்துச் செல்லும். எடுத்துக்காட்டாக சங்க இலக்கியங்களில் சுமை தூக்கும் விலங்கு (draught animal), அதன் உணவுப் பழக்கம் என்று ஒட்டகம் குறித்த விரிவான குறிப்புகளும்; பழங்காலத் தமிழ் தலைமகனான நன்னனின் புவியியல் உள்ளிட்ட பல குறிப்புகளும் இருக்கின்றன. பழந்தமிழ் மரபுகளின் ஐந்து வகையிலான நிலப்பரப்பு அடிப்படையிலான திணைப்பிரிவுகள் குறிப்பாக பரந்த நகரக் காட்சிகள், கடல் வணிகம், பாலைவனத் தரிசு நிலங்கள் ஆகியவற்றைப் பொறுத்த வரையில் சிந்துவெளிச் சூழலுடன் சரியாகப் பொருந்திப் போகின்றன. சங்க நூல்களில் உள்ள இந்த கூறுகளின் தொடர்ச்சி, இப்போது சங்க காலம் என்றழைக்கப்படுகின்ற காலத்தின் அரசியல் மற்றும் மொழியியல் எல்லைகளுக்குள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வதைக் காட்டிலும், ஒட்டுமொத்த சிந்துவெளி மரபின் வாரிசாக, துணைக்கண்டத்தின் அனுபவமாக சங்கத் தொகுப்பை உயர்த்திக் காட்டுகிறது.

கவிதைகள், கற்பனைகள் என்பதால் சங்க இலக்கியங்களை வரலாற்று ஆதாரமாகப் பயன்படுத்துவது குறித்து வரலாற்றாசிரியர்களிடம் தயக்கம் இருக்கிறது. அதுபோன்ற  சிக்கலை உங்கள் புத்தகத்தில் எவ்வாறு கையாண்டிருக்கிறீர்கள்?  

ஆம். ஆனால் சங்க இலக்கியம் ஒரு வரலாற்றுப் புத்தகம் அல்ல என்பதால் சங்க நூல்களில் ‘வரலாற்று’ பொருள் இல்லை என்று அர்த்தமல்ல. சங்க நூல்களின் மையக் கருப்பொருளாக மதம் இருக்கவில்லை. நிலத்தோற்றம் குறித்த சார்நிலை, விவரிப்புகளில் உள்ள உண்மைகளின் அடர்த்தி, நடைமுறைவாதம் ஆகியவை சங்க நூல்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்கின்றன. தவிர பழங்கால மற்றும் வரலாற்று நிகழ்வுகளுக்கு எந்தவொரு குறிப்பிட்ட காலவரிசையையும் சங்க நூல்கள் தருவதாகவும் நான் பரிந்துரைக்கவில்லை. ஆனால் உரையாடல்களின் போக்கில் நினைவுபடுத்தப்படுகின்ற கடந்த கால நிகழ்வுகளுக்கு எந்தவொரு நோக்கமும் காரணமாக இருக்க முடியாது. பிற்கால மன்னர்களின் செப்புத் தகடுகள், கல்வெட்டுகள் போன்றவை வரலாறு குறித்த வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தாலும், அவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது; தங்களுடைய சாதனைகளை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் நோக்கம் எப்போதும் அவற்றில் அடங்கியிருக்கும். ஆனால் தலைவன் மற்றும் தலைவியின் பெயர்கள் எதுவுமில்லாமல் சங்க இலக்கியத்தில் காதல் கவிதைகள் உள்ளன. அவை அறியப்படாத கடந்த கால நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுவதோடு, தெளிவற்ற இடங்களை சிறந்த விவரணைகளுடன் தருகின்றன. ‘முறையான வரலாறு’ என்று அழைக்கப்படுவதற்கு அவை வழிவகுக்காது என்றாலும் நிச்சயமாக சங்க நூல்கள் தொகுக்கப்பட்ட காலத்தைப் பற்றிய மதிப்பு மிக்க தடயங்களை அவை நமக்கு வழங்குகின்றன. அந்தக் காலத்திற்கு முந்தைய காலவரிசைகள் குறித்த செய்திகளையும் சேர்த்து  வழங்குகின்றன.

சிந்துவெளி நாகரிகத்தைப் புரிந்து கொள்வதற்கு நம்பக்கூடியதாக இருக்கின்ற தொல்பொருள் அல்லாத ஆதாரங்கள் எவை?

இடங்களுக்கான வரலாற்றுரீதியான பெயர்கள், தற்போதைய பெயர்கள் என்று இரண்டு பெயர்களையும் நான் முக்கிய ஆதாரமாகக் கருதுகிறேன். தவிர சிந்துவெளி தொல்பொருளிலிருந்து கண்டறிந்து கொள்ளக்கூடிய சில தனித்துவமான சித்தாந்தங்களை இந்தியாவின் சில பிராந்தியங்களுக்கும், மொழியியல் குழுக்களுக்குமான  தனித்துவமான பண்பாட்டு கூறுகளின் மீது பொருத்திக் காட்ட முடியும். இப்போது இந்தியக் கலாச்சாரம் என்று அழைக்கப்படுவதை நிலைநிறுத்துவதில் ஹரப்பன் நாகரிகம் மிகவும் முக்கியமானதொரு அடித்தளத்தை வகித்திருப்பதால், அதன் தாக்கம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கின்றது. தாய்த் தெய்வ வழிபாட்டைப் போல அது இந்தியாவில் அனைத்து இடங்களிலும் இருக்கிறது. இருந்தபோதிலும் இந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டுமே முக்கிய இடத்தைப் பெற்றுள்ள ஏறு தழுவுதல் போன்ற சில தனித்துவமான பண்புகளும் இருக்கின்றன.

பண்டைய மற்றும் நவீன டிஎன்ஏ இரண்டையும் ஆய்வு செய்வது என்று மரபணுவியல் துறையில் உள்ள புதிய கண்டுபிடிப்புகள் ஹரப்பன் நாகரிகத்தின் மக்கள் குறித்து கூடுதலான புத்தொளித் தெளிவை விரைவாக உருவாக்கித் தருபவையாக உள்ளன.

சிந்துவெளி நாகரிகத்தில் ஒருவித ஒற்றைப் பண்பாட்டு நடைமுறையில் இருந்தது என்று  நினைக்கிறீர்களா? சிந்துவெளி நாகரிகம் என்ன மாதிரியான பண்பாடு?

நான் அவ்வாறு நினைக்கவில்லை. பன்மை சமுதாயத்தின் அனைத்து உள்ளடக்கத்தையும் சிந்துவெளி நாகரிகம் கொண்டிருந்தது என்றே நான் கருதுகிறேன். மலைகள், பள்ளத்தாக்குகள், விவசாயப் பகுதிகள், துடிப்பான நகரங்கள், கடலோரத்து வாழ்க்கை போன்று பல்வேறு வகையான நிலப்பரப்புகளுடன் அது மிகப்பெரிய புவியியல் பகுதிகளில் பரவியிருந்தது. மேலும் அது கடல் வழி வணிகத்தின் மூலம் பல வெளிப்புற தொடர்புகளையும் கொண்டிருந்தது. சிந்துவெளி முத்திரைகள், சுடுமண் சிற்பங்கள் பிற கலைப்பொருட்கள் இந்த உள்ளார்ந்த பன்முகத்தன்மைக்கு உறுதி அளிக்கின்றன. ஆனாலும் சிந்துவெளி நாகரிகத்தின் ஒட்டுமொத்த பரப்பும் குறிப்பிட்ட அளவில் சீரான தன்மை, தரநிலைகள், நெறிமுறைகளைக் கொண்டிருந்தது. அதிகாரப்பூர்வமான மற்றும் வணிகரீதியான தொடர்புகளுக்காக பொதுவான மொழி அதற்குத் தேவைப்பட்டிருக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் உட்பகுதிகளில் பேசப்பட்ட மொழிகளைக் காட்டிலும் அந்த குறிப்பிட்ட மொழி நிச்சயமாக மிகவும் வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். எனவே அந்த குறிப்பிட்ட ஹரப்பன் மொழியின் மரபுகள் குறித்து பிற்கால இலக்கியத் தொகுப்புகளுக்குள் அடையாளம் காணப்பட வேண்டும். முன்னெடுக்கப்பட்ட நினைவுகள் மற்றும் மரபுகளிலிருந்து நிறுவன முயற்சிகள் மூலமாகத் தொகுக்கப்பட்ட, தொன்மையை போற்றிப் பாடுகின்ற கவிதைகளில் அதற்கான வெளிப்பாட்டை எதிர்பார்க்கலாம் என்று கருதுவது நியாயமானதே. சிந்துவெளி நாகரிகத்தின் மொழியியல் கட்டமைப்பில் ‘செந்தமிழ்’ (Standard Tamil) மற்றும் பன்னிரு நிலம் என்று குறிக்கப்பட்ட ‘பன்னிரண்டு வட்டார வழக்குப் பகுதிகள்’ (Twelve Dialect Areas) என்ற கருத்துகளுக்கு இடையில் குறிப்பிடத்தக்க இணை இருப்பதை நான் காண்கிறேன்.

தாமிரபரணியை விட வைகையை நீங்கள் விரும்புவதாகத் தெரிகிறது. ஆனாலும் கிமு 905ஆம் ஆண்டு காலத்தையொட்டியதாக ஆதிச்சநல்லூர் (தமிழ்நாட்டில் துத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொல்பொருள் தளம்) இருக்கிறது. அதுகுறித்து கொஞ்சம் விளக்க முடியுமா? 

வைகை, தாமிரபரணி ஆகியவற்றின் தொல்பொருள் முக்கியத்துவத்திற்கு இடையில் நான் வேறுபாடு காண்பதில்லை என்றாலும் என்னுடைய புத்தகத்தின் தலைப்பு காரணமாக உங்களுக்கு இதுபோன்றதொரு எண்ணம் வருமானால் அதுகுறித்து நான் விளக்குகிறேன். சிந்துவெளி நாகரிகம் ஹரப்பன், சிந்து-ஹரப்பன், சிந்து-சரஸ்வதி என்று பலவகைகளில் அழைக்கப்படுகிறது. ஒட்டுமொத்த நாகரிகத்தையும் அது சார்ந்த பரந்த நிலப்பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்த சிந்துவெளி நாகரிகம் என்று பொதுவான ஒன்றை எடுத்துக் கொள்ளவே நான் விரும்புகிறேன். அது ஒரு நதியின் பெயர் என்பதால் சிந்து என்ற ஒன்றை நான் விரும்பினேன். மேலும் ஹரப்பன் என்பதைவிட சிந்துவெளி என்ற வெளிப்பாடு தமிழர்களிடையே மிகவும் பிரபலமானது. அதேபோலவே சங்க நூல்களிலேயே சான்றளிக்கப்பட்ட பழங்கால நதியாக வைகை உள்ளது. தவிர, பாண்டிய நாட்டுத் தலைநகரான மதுரையுடன் கொண்டுள்ள தொடர்பு காரணமாக அந்த நதி தமிழ் மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுடன் பிரிக்க முடியாதவாறு பிணைக்கப்பட்டுள்ளது. வைகை சங்க நூல்களில் தமிழ் வைகை என்றே அழைக்கப்படுகிறது. (தமிழ் வைகை தண்ணம் புனல் - பரிபாடல்) இன்றும் மதுரை தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தலைநகர் என்றே கருதப்பட்டு வருகிறது.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் நடந்த ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி ஹரப்பா, மொகஞ்சோ-தாரோவில் நடந்த அகழ்வாராய்ச்சிக்கு முன்பே நடைபெற்றிருந்தது. ஆனாலும் அது தொடர்ந்து நடத்தப்படவில்லை. கீழடியில் நடந்துள்ள சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் பரந்து கவனத்தை ஈர்த்துள்ளன. தொலைதூரத்தில் உள்ள சிந்து பள்ளத்தாக்குடன் தொடர்புடைய சில கலைப்பொருட்கள், வாழ்க்கை முறைகளுடனான அதன் ஒற்றுமைகள் பலரது புருவங்களை உயர்த்தியுள்ளன. எனவே புத்தகத் தலைப்பின் ஒரு பகுதியாக சிந்துவெளி முதல் வைகை என்பதை நான் தேர்வு செய்து கொண்டேன். இல்லையெனில் அது ஒரு குறியீட்டு பிரதிநிதித்துவமாக மட்டுமே இருந்திருக்கும். கடைத்தெற்கில் நடத்தப்படும் எந்தவொரு தொல்பொருள் அகழ்வாராய்ச்சியும் என்னிடம் ஒரே அளவிலான ஆர்வத்தையே ஏற்படுத்தித் தருகிறது. எடுத்துக்காட்டாக கேரளாவின் பட்டணத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். உண்மையில், ஆதிச்சநல்லூர், பொருந்தல், கொடுமணல், பட்டணம் மற்றும் கீழடி ஆகிய இடங்களிலிருந்து கிடைக்கின்ற தொல்பொருள் தடங்களுக்கான கூட்டு மதிப்பீடு தேவைப்படுகிறது. மேலும் அந்த கண்டுபிடிப்புகளின் தாக்கங்கள் குறித்து தனித்தனியாகப் பகுப்பாய்வு செய்திடாமல் மிகப் பெரிய உண்மைகளை அறியும் வகையிலே முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

‘சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே’  என்று உங்கள் சொற்பொழிவுகளில் கூறி வருகிறீர்கள். 

சிந்துவெளிக் காலத்தில் எழுதுவதற்குத் தேவையான எழுத்துகள், அவற்றின் நீளம் மற்றும் தேவையான கருவிகள், நுட்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வரம்புகள் இருந்திருக்க வேண்டும். துணி அல்லது அழிந்து போகின்ற வேறு எந்தப் பொருளில் எழுதப்பட்டிருந்த எதுவும் நிச்சயம் பிழைத்திருக்க முடியாது. திராவிடக் கருதுகோளின் கண்ணோட்டத்தில் சிந்துவெளி குறித்த புதிரை அணுகினால், கிடைக்கக்கூடிய ஆரம்ப ஆவணமாக தொல்காப்பியம் மற்றும் பிற சங்க இலக்கிய நூல்கள் இருக்கின்றன. நிச்சயமாக, தமிழ்நாட்டில் சிந்துவெளி வகை குறியீடுகளுடன் மட்பாண்ட ஓடுகள் ஏராளமாக கிடைத்துள்ளன. மேலும் கிடைத்து வருகிறது. ஆனாலும் இலக்கியத் தொகுப்புகளால் மட்டுமே வாழ்க்கை, சித்தாந்தங்கள், சமூக அமைப்புகள் குறித்த நியாயமான பிம்பத்தைக் கொடுக்க முடியும். சங்க நூல்களை மதிப்பிடும் போது, சங்க காலத்து  அன்றாட நிகழ்வுகளின் ‘செய்தி அறிக்கை’ என்பதாக ​​அவற்றை நாம் கருதி விடக் கூடாது. அவற்றில் கடந்த கால நிகழ்வுகள் குறித்த ஏராளமான குறிப்புகள் இருக்கின்றன. தொல்காப்பியத்திற்கு முந்தைய இலக்கணப் படைப்புகள் குறித்து தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த முந்தைய படைப்புகள் முற்றிலுமாக மறைந்து போயிருக்கலாம். மூன்று தமிழ்ச் சங்கங்களின் மரபுகள் வெவ்வேறு புவியியல் இடங்களில் செயல்பட்டன; மீண்டும் மீண்டும் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகள் காரணமாக பாண்டியப் பேரரசின் தலைநகர இடமாற்றங்கள், அதம் விளைவாக தமிழ்ச்சங்கங்களுக்கு நேர்ந்த இடமாற்றங்கள் எல்லாம் ஒரு தோராயமான பொது நினைவுகளுக்குள் இருக்கின்றன. ஆவணப்படுத்தப்பட்ட அந்த பொது நினைவுகள், மரபுகள் புலன்விசாரிக்கத் தக்க துப்புகளைத் தருகின்ற போது மேலும் துல்லியமாக அதை உங்களால் நிறுவ முடியும்.

தமிழ் வரலாற்றுக்கு முந்தைய காலத்தையும் சிந்துவெளி நாகரிகத்தையும் நேரம், இடம் கொண்டு  ஆராய்வதற்கு சங்க நூல்கள் மிக முக்கியமான புதையலாக இருக்கின்றன. ஆக அது ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் ஆய்வு செய்வதற்கு ஒப்பானதாகும்.


மனித இடப்பெயர்வு

இந்த இடப்பெயர்வு எப்போது நடந்தது? அதை எவ்வாறு உறுதிப்படுத்துகிறீர்கள்? இடப்பெயர்வு நடந்த திசையை எவ்வாறு நிறுவுகிறீர்கள்?

மனித இடப்பெயர்வு என்பது தொடர்ச்சியான செயல்முறையாகும். மனித வரலாற்றின் ஒரு கட்டத்தில் விரைவான இடப்பெயர்வு, அதிக அளவில் இடப்பெயர்வு போன்றவை நிகழ்ந்திருப்பினும், மக்களின் மெதுவான படிப்படியான நகர்வுகள் எப்போதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வாகும். ‘சிறந்த மேய்ச்சல் இடத்தை நாடுவது’ என்பது அடிப்படையான உயிரியல் உள்ளுணர்வாகும். இயற்கைப் பேரழிவுகள், புதியவர்களின் வருகை, அவர்களுடைய ஆதிக்கம், இன்னும் பல காரணங்களால் மக்களின் இடப்பெயர்வு தூண்டப்படுகிறது. தொல்லியல் மற்றும் பிற அறிவியல் காலக் கணிப்பு முறைகளின் உதவியுடன் இடப்பெயர்வு குறித்த காலவரிசைகளைப் புனரமைக்க வேண்டும். தொல்பொருள் சான்றுகள் ஏற்கனவே அவற்றிற்கு இடையே உள்ள ஒற்றுமையை நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. சிந்துவெளிக்குப் பிந்தைய இடப்பெயர்வுகளின் திசை நிச்சயமாக வடமேற்கில் இருந்து தெற்கு நோக்கியதாகவே இருந்தன. இந்தக் கருத்தை ஆதரிப்பதற்கு தொல்பொருள் அல்லாத முறைகளும் என்னிடம் உள்ளன; சங்கத் தொகுப்பு போதுமான தடயங்களை வழங்குகிறது. வலியுடன் பயணித்த மக்களின் மனதில் கடந்த கால இடப்பெயர்வுகளின் நினைவுகள் எப்பொழுதும் பாதுகாக்கப்படுகின்றன. புறப்பட்ட இடத்திலேயே தங்கியிருந்தவர்களிடம் அந்த நினைவுகள் இருப்பதில்லை. இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக இன்றைய  புலம்பெயர்ந்த தமிழர்கள் இருக்கின்றனர்.

முதல் தமிழ் காப்பியத்தின் கருப்பொருளாக உள்ள கண்ணகி, அவளது கால் சிலம்பு குறித்த கதை மூன்று தமிழ்ப் பேரரசுகளைச் சுற்றி பிணைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு தெய்வமாக கண்ணகியும். அவளது சிலம்பும் இலங்கையில் வாழுகின்ற மிகவும் துடிப்பான மரபுகளின் பகுதியாக இருக்கின்றன. அது ஆய்விற்கானதாக இருக்கிறது. அதேபோல் தமிழ் புலம்பெயர்ந்தோர் தொலைதூரத்திற்குப் பயணம் செய்து சென்றுள்ளதால், தமிழர் தொடர்பான பிரச்சனைகள் இன்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.

சிந்துவெளிக்குக்குப் பிந்தைய சிந்துவெளி முதல் வைகை வரையிலான இடப்பெயர்வின் திசை குறித்து அறிவியல்ரீதியான அடிப்படையைக் கொண்ட பார்வையைப் பெறுவதற்கு தொல்பொருள் மற்றும் தொல்பொருள் அல்லாத சான்றுகளை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, கறுப்பு சிவப்பு [பிஆர்டபிள்யூ] மட்பாண்டங்களின் காலவரிசை மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. அனைத்து இந்திய அளவில் உள்ள மட்பாண்ட வகை ஒரு கருத்தை உருவாக்கித் தரும் என்பதே என்னுடைய கருத்தாக உள்ளது. ஆரம்ப வரலாற்று காலங்கள், வரலாற்றுத் தொடக்க காலம் அல்லது வரலாற்றுக்கு முந்தைய பழங்காலத்துடன் தொடர்புடைய தொல்பொருள் கண்டுபிடிப்புகளுடன் தமிழ்நாட்டில் காணப்படும் கற்காலச் சான்றுகள் குறித்து மக்கள் குழப்பமடைகிறார்கள். நிரந்தரமாகக் குடியேறிய வாழ்க்கை மற்றும் நகரமயமாக்கல் காலத்திற்கு முன்பே இருந்த மனித இருப்பை யாராலும் மறுக்க முடியாது. சிந்து-வைகை தொடர்புகள் மற்றும் அவற்றின் தொடர்ச்சியின் மீது கவனத்தைக் கொண்டு வருவதன் மூலம், காலத்திலும் இடத்திலும் வரலாற்றுக்கு முந்தைய ஒரு குறிப்பிட்ட சாளரத்தை, ஒரு குறிப்பிட்ட வாய்ப்பை மட்டுமே நாம் பயன்படுத்திக் கொள்கிறோம்.

இடப்பெயர் குறித்த ஆய்வுகளில் வல்லுநராக இருக்கிறீர்கள். இந்த விஷயத்தில் அது உங்களுக்கு எந்த அளவிற்கு உதவியாக இருக்கிறது?

மக்கள்தொகை மற்றும் மொழி மாற்றங்களை எல்லாம் தாண்டி தனது இருப்பை தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றல் இடப்பெயர்களுக்கு உண்டு. அவை ஒருவகையில் ’சாகாவரம்’ பெற்றவை, ஒரு பண்பாட்டின் தோற்றம், எழுச்சி, நலிவு, வீழ்ச்சி ஆகிய அனைத்து நிகழ்வுகளுக்கும் சாட்சியமாய் நிற்கும் இடப்பெயர்கள் உறைந்து கிடக்கும் தொல்மொழியியல் எச்சங்களாகும். ‘கிளம்பிச் சென்றவர்களின்’ நிழல்கள் இடப்பெயர்களாய் உறைந்து கிடக்கின்றன. அதே நேரத்தில் புலம்பெயர்ந்தவர்களுடன் கைகோர்த்து நடந்து புதிய இடங்களுக்கு செல்கின்றன அதே இடப்பெயர்கள். இது இடப்பெயர்களின் ‘கிடத்தல்’ ‘நடத்தல்’ நடைமுறை எதார்த்தம்.

ஓரிடத்தின் பெயருக்கு வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு அர்த்தங்களைக் கொடுக்கலாம், ஆனாலும் அதன் பொருள் என்னவாக இருந்த போதிலும், அந்த இடத்தின் பெயரை யாரோ ஒருவர் தன்னுணர்வுடன் மாற்றுகின்ற வரையிலும் அது அந்தப் புவியியல் பகுதியில் அவ்வாறாகவே நீடித்திருக்கும். மக்கள் ஓரிடத்திலிருந்து நகர்ந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும்போது, ​​கடந்த காலத்துடன் இணைப்பாக தங்கள் இடப் பெயர்களையும் அவர்கள் மற்ற பொருட்களுடன் சேர்த்து எடுத்துச் செல்கிறார்கள். இதைச் சரிபார்க்க பல ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறேன். அதுபோன்ற ஆய்வு உலகளவில் நிறுவப்பட்ட நடைமுறையாகும். இடத்தின் பெயர்கள் ஒரு மரபுரிமைப் பொருளாக இருக்கின்றன. அடையாளங்களின் முக்கியமான வெளிப்பாடாக அவை இருக்கின்றன. மேலும் நிலத்தின் மீது பெயர்கள் பதிக்கப்படும் போது மட்டுமே புவியியல் என்பது மனிதப் புவியியலாக மாறுகிறது. என்னுடைய ஆய்வுகளில் இந்த தர்க்கத்தையே நான் பின்பற்றியிருக்கிறேன்.

கே.வி.டி வளாகத்தை நான் அடைந்தது குறுகிய பயணமாக இருக்கவில்லை. அது படிப்படியான புரிதலாகவே இருந்தது. மத்திய இந்திய பழங்குடிப் பகுதிகள் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றிற்கிடையே பொதுவான இடப் பெயர்களை நான் முதலில் அடையாளம் கண்டு கொண்டேன். பின்னர் சிந்துவெளி நாகரிகத்தின் மீது கவனம் செலுத்தத் தொடங்கினேன். இறுதியாக கே.வி.டி வளாகத்தை வந்தடைந்தேன்.

சேகரிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களும் மிகவும் முக்கியமானவை, ஏனெனில் அந்தப் பெயர்கள் மற்றொரு பெயர்களின் தொகுப்பாக மட்டுமே இருக்கவில்லை. கொற்கை-வஞ்சி-தொண்டி போன்ற இடப்பெயர்களைப் பயன்படுத்தாமல் உங்களால் தமிழ்த் தொன்ம அடையாளம் குறித்து பேச முடியாது; சங்க நூல்களில் இடம் பெற்றிருக்கும் பல குறிப்புகளின் அடிப்படையில் இந்தப் பெயர்கள் பழங்காலத்தை உறுதிப்படுத்தியுள்ளன. பழைய தமிழ் நூல்கள் இந்தப் பெயர்களைக் கொண்டாடுகையில், ஆரம்பகால சமஸ்கிருத நூல்களில் இந்த இடங்களைப் பற்றி எந்தவிதமான உரிமை கோரலோ ஏன் விழிப்புணர்வோ கூட இருந்திருக்கவில்லை. தமிழ் முன்வரலாறு மற்றும் வரலாற்றின் தனித்துவமான களத்தில் அது இந்தப் பெயர்களை வைக்கிறது, அந்த பெயர்கள் இப்போதும் கூட தமிழர்களுக்குப் பொருத்தமானவையாகவே இருக்கின்றன. இவ்வாறு மனிதர்கள் குறித்த கதைக்கு மிகவும் முக்கியமான ஆரம்பத்தை ஒரே மாதிரியாக இருக்கின்ற இடப்பெயர்களே வழங்குகின்றன.

நமது வரலாற்றுக்கு முந்தைய காலத்தையும் வரலாற்றையும் புரிந்து கொள்ள மட்பாண்டங்களின் முக்கியத்துவம் பற்றி கொஞ்சம் கூறுவீர்களா?

தொல்பொருள் தளத்திலிருந்து கிடைக்கின்ற பீங்கான் பொருட்களின் தொகுப்பு (Ceramic assemblage) மிக முக்கியமான ஆதாரங்களாக இருக்கின்றன. தொல்பொருளியல் சூழலில், பானைகள் மக்களுக்கு சமமானவை அல்ல என்றாலும் அவை மக்களைக் குறிப்பவையாகவே இருக்கின்றன. மனிதகுலத்தின் பண்பாட்டு வரலாறானது பெரும்பாலும் மட்பாண்டங்களை உருவாக்கும் பண்பாடுகளின் வரலாறு என்றே கூறப்படுகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மட்பாண்டங்களின் சமூக பண்பாட்டுப் பரிமாணங்கள் மற்றும் குறிப்பாக குயவர்களின் சமூகவியல் மிகவும் அரிதாகவே விரிவாக ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன. ஹரப்பன் மட்பாண்ட பாணிகளும், மரபுகளும் இன்றும் ராஜஸ்தான், குஜராத், பாகிஸ்தானின் சில பகுதிகளில் பிழைத்திருக்கின்றன. அவற்றை இணைக்கும் இழையாக களிமண் உள்ளது என்ற கருத்து இன்றும் பொருத்தமானதாகும். இந்தியாவின் பண்டைய மட்பாண்ட வகைகள் குறித்து இடம், காலம் சார்ந்த விவரணையாக்கம் மற்றும் வரிசைப்படுத்துதலுக்கு முழுமையான அணுகுமுறை தேவைப்படுகிறது. தீபகற்ப இந்தியாவின் கருப்பு சிவப்பு பாண்டங்களை (பிஆர்டபிள்யூ) பெருங்கற்காலம் (மெகாலிதிக்) சார்ந்தவை என்று  முத்திரை குத்தியதன் மூலம் ஆய்வுலகின் கவனம் திசை திரும்பிவிட்டது. கருப்பு சிவப்பு பாண்டங்களோடு தொடர்புடைய  காலவரிசைகள்,  மற்றும் புவியியல் பரவலைப் புரிந்து கொள்வது முக்கியமானதாகும், ஆனால் அது பெருமளவு புறக்கணிக்கப்பட்டுள்ளது அல்லது ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஒரு வகையில் சிந்துவெளி நாகரிகம் குறித்த புதிரானது, திராவிடர்களின் தோற்றம், தமிழ்ப் பண்பாட்டின் தோற்றம், கருப்பு சிவப்பு பாண்டங்களின் நிகழ்விடங்கள் மற்றும் பரவல் தொடர்பான புதிர்கள்  ஒன்றோடொன்று இணைந்ததாகவே உள்ளது. முழுமையான, திறந்த மனம் கொண்ட தரவு சார்ந்த ஆய்வு காலத்தின் தேவை.

முதல் இந்தியர்கள்

வடமேற்கிலிருந்து சிந்துவெளியுடன் தொடர்புடைய இடப்பெயர்விற்கு முன்னர் நிரந்தரமாகக் குடியேறிய, ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்க்கை என்பது கடைத்தெற்கில் இருந்திருக்கவில்லை என்று கருதுகிறீர்களா?

ஒருபோதும் நான் அவ்வாறு சொல்ல மாட்டேன். மாறாக, நான் அதற்கு நேர்மாறாகச் சொல்வேன். இந்த கேள்வியை நீங்கள் கேட்டதில் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன். பழங்காலத்திலிருந்தே தென்னிந்தியா இந்தியாவில் இருந்த பண்டைய மனித குடியேற்றப் பகுதிகளில் ஒன்றாக இருந்து வருவதாகும். அதனால்தான் ‘முதல் இந்தியர்கள்’ என்றழைக்கப்படுபவர்களை ‘பண்டைய மூதாதைய தென்னிந்தியர்கள்’ [Ancient Ancestral South Indians – AASI] என்று குறிப்பிடுகிறார்கள். அவர்கள் இந்திய துணைக் கண்டத்திற்கு ஆரம்பத்தில் வந்தவர்கள். அவர்களுடைய தற்போதைய இடத்தைப் பொருட்படுத்தாமல் இந்த குறிப்பிட்ட மரபணு வகையினர் AASI என்றே அழைக்கப்படுகின்றனர். உறுதியாக அவர்கள் தெற்கில் அதிகமாக உள்ளனர். அதற்கு உறுதியளிப்பதாக தமிழ்நாட்டில் காணப்படும் பழங்கற்கால வாழ்விடங்கள், கருவி வகைகள் குறித்த தொல்பொருள் சான்றுகள் இருக்கின்றன. வேட்டை, உணவு சேகரிப்பு, பழமையான வேளாண்மை, வேளாண்-மேய்ச்சல் மற்றும் நிரந்தரமாகத் தங்கி விவசாயம் போன்ற பல்வேறு வகையான பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இந்த மக்கள்தொகையின் நகர்வு தொடர்ச்சியான செயல்முறையாகவே இருந்திருக்கிறது. அவர்கள் பேசிய மொழி குறித்து நமக்கு எந்தவொரு துப்பும் கிடைக்கவில்லை. அதுகுறித்து நாம் சில அனுமானங்களை மட்டுமே மேற்கொள்ள முடியும்.

ஆனால் துணைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதிகளில் ஒரு சில ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வந்த வேளாண்-மேய்ச்சல் இறுதியாக சிந்துவெளி நாகரிகத்திற்கு வழிவகுத்த போது, ​​அது ஒரு மிகமிகப் பெரிய முன்னேற்றமாக இருந்தது. அவ்வாறான செம்மையாக்கத்திற்கு என்று எந்தவொரு முன்னிகழ்வும் இருக்கவில்லை. இங்கே எனது வாதம் சிந்துவெளிக்கும் வைகைக்கும் இடையிலான இடப்பெயர்வு குறித்த குறிப்பிட்ட வழி பற்றியதாகவே உள்ளது. எதிர்காலத் தொல்லியல் அதுகுறித்து தெளிவான படத்தை நமக்கு வழங்கலாம். சிந்துவெளி நாகரிகமும், பண்டைய தமிழ்ப் பண்பாடும் வாழ்க்கை முறை மற்றும் வாழ்க்கை குறித்த  அணுகுமுறை ஆகியவற்றின் அடிப்படையில் தங்களுக்கிடையில் கருத்தியல் தொடர்பையும், தொடர்ச்சியையும் கொண்டிருந்தன என்று இப்போதைக்கு என்னால் நம்பிக்கையுடன் உறுதியாகக் கூற முடியும். அவை இரண்டையும் இணைக்கும் ஒரு பாலமாகவே சங்க இலக்கியம் இருக்கிறது.

விவசாயத்தின் பரவல், திராவிட மொழிகளின் பரவல், சிந்துவெளி நாகரிக உருவாக்கம் ஆகியவற்றை இணைக்கப்பட்ட நிகழ்வுகளாக உருவாக்குகின்ற வகையில் அவற்றிற்கிடையிலான  தொடர்பை பண்டைய மற்றும் தற்போதைய டிஎன்ஏ குறித்த ஆய்வுகள் ஏற்படுத்தித் தருகின்றன. தெற்கில் திராவிட மொழிகள் அல்லது தற்போதைய தமிழ்நாட்டில் தமிழின் வருகை போன்றவை ஹரப்பனுக்கு பிந்தைய காலவரிசையில் இருக்க வேண்டும் என்று இதற்கு அர்த்தமல்ல.  எதிர்கால ஆய்வுகள் இது குறித்து அதிக தெளிவை ஏற்படுத்தக் கூடும். இப்போதைக்கு மக்களின் நகர்வு மற்றும் சங்க இலக்கியத்தின் சமூகவியலை உருவாக்கிய சிந்தனை செயல்முறைகள் குறித்து மட்டுமே நான் பேசுகிறேன். இதன் காலவரிசை சிந்துவெளி நாகரிகத்திற்கு ஒத்ததாகவோ அல்லது அதற்கு சிறிது காலத்திற்குப் பிந்தையதாகவோ இருக்கலாம். அது குறித்து என்னிடம்  எந்தவொரு குழப்பமும் இல்லை. சான்றுகள் மட்டுமே நம்மை வழிநடத்தும். இது ஒரு தொடர் பயணம்.

இந்த புத்தகம் தரும் படிப்பினை என்ன?

இந்தியாவின் பன்மியம் என்பது இந்தியப் பண்பாட்டின் மேற்கட்டமைப்பாக இருக்கவில்லை. மாறாக அது அதன் அடித்தளமாக உள்ளது. அடுத்தடுத்த இந்தியப் பண்பாட்டின் உருவாக்கத்தில் சிந்துவெளி நாகரிகத்திற்கான தனித்துவமான பங்களிப்பை புதிய தொல்பொருள் மற்றும் மரபியல் தொடர்பான  ஆதாரங்களைக் கொண்டு முறையாக அங்கீகரிக்க வேண்டும்.

பழங்காலத்தின் காலவரிசைகளைப் பொறுத்தவரை அவற்றிற்கிடையிலான தொடர்ச்சியின் உண்மை மிகவும் முக்கியமானது.

சிந்துவெளி நாகரிகத்திற்கும், பண்டைய தமிழ் பண்பாட்டிற்கும் இடையிலான உறவும், தொடர்ச்சியும் மறு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அதன் விளைவாக, இந்தியாவின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தைப் புரிந்து கொள்வதில் பழைய தமிழ் இலக்கிய நூல்கள் பாய்ச்சக்கூடிய புதுவெளிச்சம் பற்றிய புதிய புரிதல்களும் மதிப்பீடுகளும் தேவைப்படும். .

வரலாறு என்பது மக்களின் உள்ளார்ந்த உரிமை. எனவே, தமிழ்நாட்டில் தீவிரமான தொல்லியல் ஆய்வுகளுக்கான தேவை எழுந்துள்ளது.


https://frontline.thehindu.com/arts-and-culture/heritage/article30535972.ece/amp/

Comments