தேவஷிஷ் ராய் சௌத்ரி
டைம் இதழ்
ஜி
7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் போது 2021 மே 3 அன்று லண்டனில் நடந்த
இருதரப்பு சந்திப்பைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்திய
வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவுத்துறைச்
செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கலந்து கொண்டார்
இந்திய
வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மிகவும் கடுமையான பணியில் ஈடுபட்டிருந்தார். அமெரிக்காவிற்கான அவரது அதிகாரப்பூர்வப்
பயணம் ஜோ பிடன் அதிபராகப் பதவியேற்ற பிறகு மூத்த இந்திய
அமைச்சர் ஒருவர் மேற்கொண்டிருக்கும் முதல் பயணமாக இருந்தது. இந்திய அரசாங்கம், அமெரிக்க
சமூக ஊடக தளங்களான ட்விட்டர், வாட்ஸ்ஆப் ஆகியவற்றிற்கு இடையில் ஏற்பட்டுள்ள
நெருக்கடிக்கு மத்தியில் மிகவும் மோசமான
நேரத்தில் அவரது இந்தப் பயணம் நிகழ்ந்திருக்கிறது. அந்தப் பயணத்தில் இந்தியாவிற்காக கோவிட்-19
தடுப்பூசிகளை வாங்குவது என்ற முக்கியமான பணி பெரிய சவாலாக இருக்கவில்லை.
இரண்டு
லட்சத்திற்கும் அதிகமான நோய்த் தொற்று பாதிப்புகள், நான்காயிரம் இறப்புகள் என்று ஒவ்வொரு நாளும் பதிவாகி வருகின்ற
நிலையில் கடுமையான கொரோனா வைரஸ் பரவலால் இந்தியா
தொடர்ந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது. கடுமையான தடுப்பூசி பற்றாக்குறை
இந்த சோகத்தை மேலும் மோசமான நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது. தடுப்பூசி விநியோக ஒப்பந்தங்களைப்
பெறுவதற்காக அமெரிக்க உயர் அதிகாரிகள், தடுப்பூசி உற்பத்தியாளர்களை சந்திக்கின்ற
பணியில் ஜெய்சங்கர் இறங்கியிருக்கிறார். அமெரிக்க அதிபர் பிடென் தடுப்பூசி தேவைப்படுகின்ற
நாடுகளுக்கு எட்டு கோடி டோஸ் தடுப்பூசியை அனுப்ப ஒப்புக் கொண்டிருக்கிறார். அதில்
முடிந்தவரை தனக்காகப் பெற்றுக் கொள்ள முடியும் என்று இந்தியா நம்புகிறது. இப்போது இந்தியாவிற்கு
தடுப்பூசி மிகமிக அவசியமாகத் தேவைப்படுகிறது. ஏப்ரலில் இருந்ததைவிட மே மாதம்
போடப்பட்டுள்ள தடுப்பூசி எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது. இந்த
தொற்றுநோயால் பத்து லட்சத்திற்கும்
அதிகமான இந்தியர்கள் இறந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது (அதிகாரப்பூர்வ இறப்பு
எண்ணிக்கை 315,000 ஆக இருக்கிறது என்றாலும் பெரும்பாலான வல்லுநர்கள் இந்த
எண்ணிக்கை மிகவும் குறைவான பதிவாக இருப்பதாகக் கூறி வருகின்றனர்).
உலகையே
காப்பாற்றுகின்ற ‘தடுப்பூசி குரு’ என்று தன்னைப் பற்றி பெருமை பேசியது துவங்கி இன்றைக்கு
தடுப்பூசிகளுக்காக உலகம் முழுக்கத் தேடி அலைவது வரை இந்தியா மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே வெகுதூரத்தை கடந்து விட்டிருக்கிறது. உலகின் மிகப் பெரிய
தடுப்பூசி உற்பத்தியாளருக்கு தடுப்பூசிகளை
அடுத்தவரிடம் கேட்பது எளிதான காரியம் அல்ல என்றாலும் கனிவாக, நன்கு பேசுபவராக இருக்கும் இந்திய வெளியுறவுத்துறை
அமைச்சர் புத்திசாலித்தனத்துடன்
அந்தப் பேச்சு வார்த்தைகளை நடத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஹூவர் நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் மிகுந்த பணிவுடன் பேசிய அமைச்சர் உலகளாவிய நன்மைக்காக தங்கள் தேசிய நலன்களைத் தாண்டியும் உலக நாடுகள் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எதிர்பார்த்திராத தடுப்பூசி பற்றாக்குறைக்குள் இந்தியாவை மூழ்கடித்தது மட்டுமல்லாமல், இந்தியாவிலிருந்து வருவதாக இருந்த தடுப்பூசிகளை நம்பியிருந்த நாடுகளையும் பெரும் ஆபத்தில் ஆழ்த்தியிருக்கின்ற பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றுத்தனமான இந்திய தடுப்பூசி தேசியவாதம் குறித்தும் அவர் பேசியிருந்தால் வேடிக்கையாக இருந்திருக்கும்.
தனது
சொந்த குடிமக்களுக்குத் தேவையான தடுப்பூசிகளுக்கு முன்னுரிமை அளித்து இப்போது தடுப்பூசி
ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ள இந்தியா மற்றவர்களுக்கு அனுப்புவதற்காக வைத்திருந்த
தடுப்பூசிகளையும் இப்போது அந்த நாடுகளிடமிருந்து பறித்துக் கொண்டு விட்டது. இந்த
நடவடிக்கை சமமான தடுப்பூசி விநியோகத்தை உறுதி செய்வதற்காக ஏழை நாடுகளுக்கு உதவும்
வகையில் உருவாக்கப்பட்டுள்ள உலகளாவிய கோவாக்ஸ் திட்டத்தைச்
சீர்குலைக்கும் வகையில் அச்சுறுத்துகிறது. மோடி அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை ஒட்டுமொத்த
உலகிலும் நீண்டகாலத் தொற்றுநோயை
உருவாக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இன்றைக்கு தொற்றுநோய் கடுமையாகத் தாக்கி உலகிலேயே மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஏற்பட்டுள்ள தடுப்பூசி நெருக்கடிக்கு சரியான நேரத்தில் போதுமான அளவில் தடுப்பூசிகளை வாங்காத மோடியின் தயக்கமே காரணமாகி இருக்கிறது. இந்தியா ஏற்கனவே தடுப்பூசி விநியோகத் திட்டத்தை வகுத்திருப்பதாக 2020 ஆகஸ்ட் ஆரம்பத்தில் மிகவும் பெருமையுடன் மோடி அறிவித்தார். ஆனாலும் தடுப்பூசிக்கான முதல் ஆர்டரை மிகவும் தாமதமாக 2021 ஜனவரி பிற்பகுதியிலேயே அவர் கொடுத்தார். அப்போதும்கூட அவர் சிறிய அளவில் தடுப்பூசிகளை வாங்குவதற்கான ஆர்டரையே வழங்கினார். அதன் விளைவாக ஏப்ரல் மாதத்தில் இந்தியாவை இரண்டாவது அலை முழுத் தீவிரத்துடன் தாக்கிய நேரத்தில் 0.5% இந்தியர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டிருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 3.1% ஆக உள்ளது. உலகில் வேறு எந்தவொரு தேசியத் தலைவரும் தடுப்பூசிகளைப் பற்றி இதுபோன்று மிக அதிகமாகப் பேசி, மிகக் குறைவான காரியங்களைச் செய்தவராக இருக்கவில்லை. இப்போது மோடியின் அந்தச் செயலுக்கான மோசமான பலனை அனுபவிப்பவர்களாக இந்தியர்கள் மட்டுமே இருக்கவில்லை.
ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியின் தயாரிப்பாளராக உள்ள இந்திய சீரம் நிறுவனம்
(சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா) இந்தியாவில் போடப்பட்டுள்ள கோவிட்-19 தடுப்பூசி டோஸ்களில் தொன்னூறு சதவீதப் பங்கைத் தன்வசம் கொண்டதாக இருந்து வருகிறது. கோவாக்ஸ் திட்டத்திற்கு இந்த
ஆண்டு தேவையான இருநூறு கோடி டோஸ்களில் பாதியை வழங்கிட அந்த நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
ஆனால் மார்ச் மாதத்திலிருந்து அந்த நிறுவனம் ஏற்றுமதிகளை நிறுத்தி வைக்க வேண்டியதாயிற்று.
மேலும் இந்த ஆண்டு இறுதி வரையிலும் தடுப்பூசி விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்கப் போவதில்லை என்றும் அது கூறியிருக்கிறது.
தடுப்பூசிகளுக்கான
அழுத்தத்தை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் எதிர்கொண்ட அந்த நிறுவனத்தின்
உரிமையாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான அதார் பூனாவாலா லண்டனுக்குத் தப்பிச்
சென்றுள்ளார். சீரம் நிறுவனத்தின் உலகளாவிய விநியோகங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள
நிலையில் கோவாக்ஸ் திட்டத்தைப் பொறுத்தவரை 92 குறைந்த வருமானம் மற்றும் குறைவான-நடுத்தர
வருமான நாடுகளில் தடுப்பூசி குறித்த நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது. அந்த நாடுகளால்
ஒருவேளை தடுப்பூசிகளை வழங்குகின்ற புதியவர்களைக் கண்டு பிடிக்க முடிந்தாலும் தடுப்பூசி
கிடைப்பதற்கு சில மாதங்கள் கூடுதலாக ஆகலாம். ஆப்பிரிக்காவில் ஏறக்குறைய பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசியைக் கூட பெற்றிராத நிலையில்,
சீரம் நிறுவனத்தின் இவ்வாறான பின்வாங்கல் ஜூன் இறுதிக்குள் கோவாக்ஸ்
திட்டத்திற்கு கிடைக்க வேண்டிய பத்தொன்பது கோடி டோஸ் அளவை
நிச்சயம் குறைக்கவே செய்யும்.
வங்கதேசம், நேபாளம், இலங்கை போன்ற இந்தியாவின் அண்டை நாடுகளில் தடுப்பூசிகளின் அளவு குறைந்து மிகவும் ஆபத்தான
அளவில் இருக்கின்றது. பேரழிவு தரக்கூடிய அளவில் நோய்த்தொற்று பாதிப்பு, தடுப்பூசி
இருப்பு குறைந்து வருவது என்று இரட்டை அபாயங்களை நேபாளம் எதிர்கொண்டிருக்கிறது.
அந்த நாட்டின் பலவீனமான சுகாதார உள்கட்டமைப்பு ஏப்ரல் 1 அன்று வெறுமனே 152 என்றிருந்த பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை இப்போது ஒரு நாளைக்கு எட்டாயிரத்திற்கும் அதிகமான பாதிப்புகளை எட்டியிருப்பதன் மூலம் மேலும்
சிரமத்திற்குள்ளாகி இருக்கிறது. நேபாளம் இருபது லட்சம் டோஸ் தடுப்பூசியை சீரம்
நிறுவனத்திடமிருந்து வாங்கியது. ஆனால் முதலாவது பத்து லட்சம் டோஸை வழங்கிய பின்னர்
இந்தியாவில் தடுப்பூசிக்கான தேவை அதிகரித்ததால் சீரம் நிறுவனம் நேபாளத்திற்கான
விநியோகத்தை நிறுத்தி வைத்து விட்டது. இதே கதையே வேறு பல நாடுகளுக்கும்
நிகழ்ந்திருக்கிறது.
முதன்முதலாக
இந்தியாவில் இருந்து கொடுக்கப்பட்ட மிகக் குறைவான ஆர்டர்களே சீரம் நிறுவனம் மட்டுமல்லாது
இன்றைக்கு இந்த உலகம் முழுவதற்குமான சிக்கலுக்கு காரணமாகி உள்ளன. மார்ச் பிற்பகுதி வரை தனது சொந்த
மக்களுக்கு தடுப்பூசி போட்டதை விட உலகளவில் பல நாடுகளுக்கும் அதிகமான தடுப்பூசிகளை இந்தியா வழங்கியிருந்தது
என்பதை யாராலும் மறந்து விட முடியாது. தடுப்பூசி
ஏற்றுமதியானது தேசிய மகத்துவம் கொண்ட செயலாக வடிவமைக்கப்பட்ட உலகின் ஆறாவது பெரிய
பொருளாதார நாடு இன்றைக்கு உண்மையில் இந்த மோசமான துயரத்தின் ஒரு பகுதியாக இருந்து
வருகின்றது.
இந்த தொற்றுநோய்க்கு முன்பாகவே மிகவும்
வளமான தடுப்பூசி தயாரிப்பாளராக சீரம் நிறுவனம் இருந்து வந்திருக்கிறது. சர்வதேச
நன்கொடையாளர்கள் அளித்த நிதியுடன் தனது சொந்த நிதியையும் நம்பியிருந்த பூனாவாலா தொற்றுநோய்
விடுத்திருக்கும் சவாலை எதிர்கொள்வதற்காக மற்ற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார்.
இந்த நிறுவனத்தின் உற்பத்தித் திறனை
அதிகரிப்பதற்காக ஆரம்பத்தில் இந்திய அரசாங்கம் நிதி எதுவும் வழங்கிடவில்லை. அதுமட்டுமல்லாது
தனக்குத் தேவையான தடுப்பூசிகளுக்கான மொத்த ஆர்டர்களையும் இந்தியா முதலிலேயே இந்த
நிறுவனத்திடம் வழங்கவில்லை. இந்தியாவின் முதல் கட்ட தடுப்பூசி இயக்கம் ஜனவரி 16
அன்று துவக்கி வைக்கப்பட்ட போது சீரம் நிறுவனத்திடமிருந்து 1.1 கோடி டோஸ், பாரத் பயோடெக்
நிறுவனத்திடமிருந்து இந்தியாவிலேயே சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட ஐம்பத்தி ஐந்து லட்சம்
டோஸ் மட்டுமே இந்திய அரசாங்கம் வாங்கியிருந்தது. பிப்ரவரி மாத இறுதியில் அரசாங்கம்
மேலும் அதிகமாக வாங்குவதற்கான அறிகுறிகள் எதுவுமில்லாமல் 2.1 கோடி டோஸிற்கான மற்றொரு ஆர்டரை சீரம் நிறுவனத்திடம்
வழங்கியது மார்ச் மாதத்தில் தொற்றுநோய் கடுமையாக
அதிகரிக்கத் தொடங்கிய போது மேலும் 11 கோடி டோஸ்களுக்கு ஆர்டர் வழங்கப்பட்டது.
இந்தியாவின் மக்கள் தொகையான 140 கோடியில் இவ்வாறு கொடுக்கப்பட்ட மொத்த ஆர்டரின் அளவு
மிகமிகக் குறைந்த அளவிலேயே இருந்தது.
இதையே மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப்
பார்த்தால், 2020 நவம்பர் மாதத்திற்குள் அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு நாடுகள் ஒவ்வொன்றும்
எழுபது கோடி டோஸ் அளவில் பல்வேறு தடுப்பூசிகளை முன்கூட்டியே ஆர்டர் செய்து
வைத்திருந்ததைக் காண முடியும். அவ்வாறு ஆர்டர் செய்யப்பட்டிருந்த தடுப்பூசியின் அளவு
அந்த நாடுகளுக்குத் தேவைப்பட்டதை விட மிக அதிகமான அளவில் இருந்தது. மற்றவர்களுக்கு
தடுப்பூசி கிடைக்காத வகையில் உலகளாவிய தடுப்பூசி உற்பத்தியின் பெரும்பகுதியை
தங்களுக்காகப் பெற்றுக் கொண்டதன் மூலம் தடுப்பூசி ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியுள்ளன
என்று அந்தப் பணக்கார நாடுகள் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. தனது
மக்கள்தொகையைக் காட்டிலும் ஐந்து மடங்கு கூடுதல் எண்ணிக்கையில் தடுப்பூசி
டோஸ்களுக்கு கனடா ஆர்டர் கொடுத்தது. தங்கள் மக்கள் தொகையைக் காட்டிலும் ஐக்கியப்
பேரரசு 3.6 மடங்கு; ஐரோப்பிய ஒன்றியம் 2.7 மடங்கு; அமெரிக்கா இரண்டு மடங்கு ஆர்டர்
கொடுத்தன. வயது வந்தோரில் பாதிப் பேருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடுகின்ற இலக்கை
அமெரிக்கா ஏற்கனவே எட்டியுள்ளது. அதே நேரத்தில் வடமத்திய ஆப்பிரிக்காவில் உள்ள
சாட் நாட்டில் ஒரு டோஸ் தடுப்பூசிகூட இன்னும் போட முடியவில்லை.
உலகளாவிய தடுப்பூசி ஏற்றத்தாழ்வைத்
தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கோவாக்ஸ் திட்டத்தின் மையமாக சீரம் நிறுவனம் இருந்து
வந்தது. ஏழை நாடுகளுக்கு ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி வழங்கப்படும் என்ற
நிபந்தனையின் பேரிலேயே தடுப்பூசியைத் தயாரிப்பதற்கான உரிமம் அந்த நிறுவனத்திற்கு
வழங்கப்பட்டது. இந்திய அரசாங்கம் வேண்டுமென்றே மெதுவாக தடுப்பூசி கொள்முதலை மேற்கொண்டதன்
விளைவாக இரண்டாவது அலையின் தாக்கம் மிகப்
பெருமளவில் இந்தியாவில் அதிகரித்தது. இறுதியில் அது மற்ற நாடுகளுக்கு தடுப்பூசி
வழங்குவதற்கான நம்பிக்கையைக் குறைத்து விட்டது.
இந்த தடுப்பூசி சமத்துவமின்மை இந்தியாவையும்
விட்டுவைக்கவில்லை. மத்திய கொள்முதல், அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்றிருக்கின்ற
உலகளாவிய விதிமுறையைப் புறந்தள்ளிவிட்டு,
தடுப்பூசிகளைப் பெறுவதற்கான பொறுப்பை
மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதான குழப்பமான கொள்கையை மோடி அரசாங்கம் தேர்வு
செய்து கொண்டதே அதற்கான காரணமாகிப் போனது. வெளிநாட்டு தடுப்பூசி
தயாரிப்பாளர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்த தடுப்பூசி சந்தை இப்போது தங்கள்
பொருட்களை அனைத்து வகையான விலையிலும் மாநில அரசுகள், நிறுவனங்கள் மற்றும்
தனிநபர்களுக்கு அவர்கள் விற்றுக் கொள்ளலாம் என்கிற வகையிலே திறந்து விடப்பட்டது.
ஒன்றிய அரசும், சில மாநிலங்களும் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி
வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளில்
தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் இந்தியர்களின் செலவு அதிகரித்துள்ளது.
இவ்வாறு உயிர்காக்கும் தடுப்பூசிகள் விற்பனை செய்யப்படும் நாடாக இந்தியா மட்டுமே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், திறந்த சந்தையில் மாறுபட்ட விலையிலே தடுப்பூசியை விற்கும் நாடாகவும் அது இருக்கிறது. தடுப்பூசிகளை வாங்கிக் கொள்ள மாநிலங்கள் கடுமையாகப் போராடி வருகின்றன. தடுப்பூசி வாங்குவதற்காக விரக்தியுடன் பலரும் சந்தையில் போட்டியிட வேண்டியுள்ளது. விற்பனையாளருக்கானதாக மாறியுள்ள இந்த சந்தையை இப்போது தடுப்பூசி தயாரிப்பாளர்கள் முழுமையாகக் கைப்பற்றியுள்ளனர். இன்றைய இந்திய அரசாங்கம் அனைத்து இந்தியர்களும் கல்வியறிவுள்ளவர்கள், தொழில்நுட்ப ஆர்வலர்கள், ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்கள் என்று தனக்குள்ளாக நம்பிக் கொண்டிருக்கிறது. அது தடுப்பூசி சமத்துவமின்மையை மேலும் அதிகரிக்கும் வகையில் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதை செயலியின் மூலம் நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் விளைவாக இந்த டிஜிட்டல் பிளவின் சரியான பக்கத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே சலுகை கிடைக்கிறது.
https://time.com/6052370/modi-didnt-buy-enough-covid-19-vaccine/









Comments