ஜே.வசந்தன்
தி
ஹிந்து ஆங்கில நாளிதழ்
நீதிமன்ற அறைக்குள் நடப்பதாக இருக்கின்ற நாடகங்கள் என்னை எப்போதும் கவர்ந்திருக்கின்றன. ஜான் கிரிஷாமின் நாவல்களை நான் மிகுந்த ஆர்வத்துடன் விரும்பிப் படிப்பவன். `தி பிராக்டிஸ்' என்ற தொலைக்காட்சித் தொடரைத் தொடர்ந்து தவறாமல் பார்ப்பதை என்னுடைய வழக்கமாக நான் கொண்டிருந்தேன். என்னுடைய கல்லூரிப் பருவ காலத்திலிருந்தே நிஜமான அல்லது கற்பனையான நீதிமன்ற வழக்குகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவையாக இருந்து வந்திருக்கின்றன.
நாடகங்களை
அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் பார்வையாளரைத் தம்வசம் இழுத்து வைத்துக்
கொள்ளும் வகையில் திடீர் திருப்பங்களைக் கொண்டிருக்கின்றன. அகதா கிறிஸ்டியின்
`விட்னெஸ் ஃபார் பிராசிக்யூசன்', இரண்டாம் உலகப் போர் குறித்த `ஜட்ஜ்மெண்ட் அட்
நியூரம்பெர்க்' ஆகியவை உடனடியாக என்னுடைய நினைவிற்கு வருகின்றன. ஆனாலும் `இன்ஹெரிட் தி விண்ட்' என்ற திரைப்படமே
எனக்கு மிகவும் பிடித்த நீதிமன்ற விசாரணை நாடகமாக இருக்கிறது. அந்த திரைப்படத்தை ஸ்டான்லி
கிராமர் தயாரித்து இயக்கியுள்ளார்.
சிற்றூரில் பெரும்புள்ளிகள்
`இன்ஹெரிட் தி விண்ட்' என்ற அந்த திரைப்படம் ஓஹியோவின் தெற்கில் உள்ள டேட்டன் நகரில் 1925ஆம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை தன்னுடைய மாணவர்களுக்கு கற்பித்த பள்ளி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். தெற்கே இருந்த அடிப்படைவாதிகளின் பார்வையில் பரிணாமக் கோட்பாட்டைக் கற்பித்தல் என்பது மிகவும் கடுமையான குற்றமாகும். அமெரிக்காவில் இருந்த பெரும் புள்ளிகள் அந்த விசாரணையில் பங்கேற்பதற்காக அந்த நகரத்திற்கு வந்திறங்கியதால், அந்த விசாரணை அதிக முக்கியத்துவத்தைப் பெற்றது. ஏற்கனவே அதிபர் தேர்தலில் இரண்டு முறை போட்டியிட்டிருந்த வில்லியம் ஜென்னிங்ஸ் பிரையன் அந்தச் சூழலை அடுத்த அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினார். அவர் அந்த விசாரணையில் அரசு சார்பு வழக்கறிஞராக இருப்பதற்கு ஒப்புக் கொண்டிருந்தார்.
பாதிக்கப்பட்டவர் சார்பில் அந்த விசாரணையில் ஆஜராக இதனைக் கேள்விப்பட்ட கிளாரன்ஸ் டாரோ என்ற புகழ்பெற்ற வழக்கறிஞர் முன்வந்தார். அந்த விசாரணை தொடர்பான கட்டுரையை எழுதுவதற்காக அமெரிக்கா முழுவதிலும் நன்கு அறியப்பட்டிருந்த பத்திரிகையாளரான எச்.எல்.மென்க்கென் டேட்டனுக்கு வந்து சேர்ந்தார். வி.ஐ.பிக்களின் வருகை அவர்களுடைய ஏராளமான ஆதரவாளர்களையும், ரசிகர்களையும் கவர்ந்ததன் விளைவாக பள்ளி ஆசிரியரான ஸ்கோப்ஸின் மீது நடத்தப்பட்ட அந்த விசாரணை மிக விரைவிலேயே தேசிய அளவிலே கவனத்தை ஈர்க்கின்ற நிகழ்வாக மாறிப் போனது. அந்த விசாரணையை `மங்கி ட்ரையல்' என்று பெயரிட்டு செய்தித்தாள்கள் எழுத ஆரம்பித்தன. குரங்கு விசாரணை என்ற அந்தப் பெயரே பின்னர் அந்த விசாரணைக்கு நிலைத்து நின்று விட்டது.
ஸ்டான்லி கிராமரின் `இன்ஹெரிட் தி விண்ட்' திரைப்படம் (1960) ஜெரோம் லாரன்ஸ், ராபர்ட் ஈ.லீ ஆகியோர் எழுதிய நாடகத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அதன் திரைக்கதையாக்கம், மென்மையான இயக்கம், வியக்கத்தக்க நடிகர்களின் அற்புதமான நடிப்பு போன்றவை அந்தப் படத்தைப் பார்த்தவர்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தின. முதன்முதலாக நான் அந்த திரைப்படத்தைப் பார்த்த போது அதில் அப்படியே மூழ்கி விட்டேன். அதற்குப் பின்னர் மீண்டும் மீண்டும் அந்த தியேட்டருக்குச் சென்று அதைப் பலமுறை பார்த்தேன். அதில் வருகின்ற அனைத்து முக்கிய கதாபாத்திரங்களுக்கும், நகரத்திற்கும் கற்பனையான பெயர்களே பயன்படுத்தப்பட்டிருந்தன. அந்த திரைப்படத்தில் உண்மையில் நடந்த நிகழ்வுகளுடன் சில கற்பனைக் கதைகளும் சேர்க்கப்பட்டிருந்தன. பள்ளி ஆசிரியர் ஸ்கோப்பை உள்ளூர் மதகுருவின் மகள் காதலிக்கிறாள். அதற்காக அவளைத் திட்டுகின்ற மதகுருவிடம் ‘தன்னுடைய குழந்தைகளைத் திட்டுகிறவர் காற்றை மட்டுமே தன்னுடைய மரபுரிமையாகப் பெறுவார்’ என்று பைபிளில் இருந்து பிரையன் மேற்கோள் காட்டிக் கூறுகிறார். அதுவே அந்தப் படத்திற்கான இன்ஹெரிட் தி விண்ட் என்ற தலைப்பைக் கொடுத்தது.
புத்திசாலித்தனமான நடிகர்கள் பலரும் மிகுந்த ஈடுபாட்டுடன் மாறுபட்ட பாணிகளில் அந்த திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுக் கொண்டிருந்தனர். கிளாரன்ஸ் டாரோவாக நடித்த ஸ்பென்சர் ட்ரேசி அமைதியாகவும், கண்ணியமாகவும், தேவையான போது தகாத கருத்துக்களைக் கூறுபவராகவும் நடித்திருந்தார். ஆடம்பரமான நடத்தைகள், ஏற்ற இறக்கமான உணர்ச்சிகளை வில்லியம் ஜென்னிங்ஸ் பிரையன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஃபிரடெரிக் மார்ச் பிரையன் மிகஆழமாகக் காட்டியிருந்தார். டேப் நடனக் கலைஞராக, நடன இயக்குனராக இருந்த, இசை தொடர்பான நிகழ்ச்சிகளில் பொதுவாகத் தோன்றி வந்தவருமான ஜீன் கெல்லி அனல் தெறிக்க கடுமையாகப் பேசுகின்ற எச்.எல்.மென்க்கென் பாத்திரத்தை ஏற்றிருந்தார்.
ட்ரேசி (டாரோ) அந்த சிறிய நகரத்திற்கு வந்து சேரும்போது, ரயில் நிலையத்தில் அவரை வரவேற்கின்ற கெல்லி (மென்கென்) ’ஹலோ சாத்தான், நரகத்திற்கு வருக’ என்கிறார். தங்களுடைய புத்திசாலித்தனம், அறிவாற்றல் மற்றும் சட்ட நிபுணத்துவம் கொண்டு டாரோவும் பிரையனும் பரபரப்பான வாதங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். பிரையனை சாட்சியாக வைத்து டாரோ நடத்துகின்ற இறையியல் விவாதம் அந்த திரைப்படத்திற்கான வியக்கத்தகு உள்ளடக்கத்தைக் கொண்டு வந்து சேர்க்கிறது. டார்வின் கோட்பாட்டை ‘அமெரிக்க குரங்குகளிடமிருந்து கூட அல்ல, பழைய உலகக் குரங்குகளிலிருந்து’ மனிதன் தோன்றியதாகக் கூறி பிரையன் கேலி செய்கிறார். நீதிமன்ற அறையில் இருந்த வெப்பம் தாங்க முடியாத அளவிற்கு இருந்ததால் வழக்கறிஞர்களும், மற்றவர்களும் தாங்கள் அணிந்திருந்த மேலங்கியை அகற்றிக் கொள்ளவும், அவர்களுடைய கழுத்துப் பட்டைகளைத் தளர்த்திக் கொள்ளவும் நீதிபதி அனுமதி தருகிறார். நீதிமன்றத்தில் இருந்த அனைவருக்கும் அட்டையால் செய்யப்பட்ட சிறிய கை விசிறிகள் வழங்கப்படுகின்றன.
இறுதியாக
அந்த விசாரணை டென்னசி உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது. சில நாட்களுக்குப்
பிறகு பிரையன் மாரடைப்பால் இறந்து விடுகிறார். இறுதி மரியாதை செலுத்துவதற்காக
பிரையனின் வீட்டிற்கு டாரோ செல்கிறார். டாரோவைப்
பார்த்ததும் பிரையனின் மரணம் குறித்து பொறுப்பற்ற வகையில் அங்கே
இருக்கிற மென்க்கம் ஒரு கருத்தைக் கூறுகிறார். அவரை உற்று நோக்கும் டாரோ ‘கடவுளை நம்ப வேண்டிய தேவையில்லை
என்றாலும் ஒருவருக்கு நம்பிக்கை என்பது கட்டாயம் இருக்க வேண்டும். எதன் மீதும் நம்பிக்கை இல்லாதவர் குழப்பவாதியாக
மட்டுமே இருப்பார். நீங்கள் ஒரு குழப்பவாதி’ என்கிறார். திகைப்படைந்து போன மென்க்கனின்
முகத்தில் ஈயாடாத நிலையில் டாரோ அவரைக் கடந்து செல்கிறார். அந்த திரைப்படம் இந்தக்
குறிப்புடன் முடிவடைகிறது. `இன்ஹெரிட் தி விண்ட்' நடிப்பு, இயக்கம் என்று மிகத் திறமையுடன்
உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். பார்வையாளர்களிடம் நீடித்த தாக்கத்தை
ஏற்படுத்தக் கூடியதாக அது இருக்கிறது.
2010 நவம்பர் 18 அன்று
வெளியான கட்டுரை
Comments