தினேஷ் சி சர்மா
ட்ரிப்யூன் இந்தியா
கோவிட் தொற்றுநோய்க்குள் இந்தியா ஓராண்டிற்கும் மேலாக இருந்து
வருகிறது. தற்போது நோய்த்தொற்று பரவலின் மிகக்கடுமையான அலைகளில் ஒன்றை நாடு எதிர்கொண்டிருக்கிறது.
வைரஸிற்கு எதிராக நிற்பது குறித்து பேசும் போது நமது தலைவர்களும் அரசு சார்ந்த வல்லுநர்களும்
மீண்டும் மீண்டும் போர்
குறித்த சித்திரம் ஒன்றையே நம்மிடையே உருவாக்கி வருகின்றனர்.
கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தப் போரில் மக்கள் அனைவரும் ஒன்று
சேருமாறு பிரதமர் மோடி தொடர்ந்து மக்களிடம் அறிவுறுத்தி வருகிறார். 2021 ஏப்ரல் 11
அன்று தடுப்பூசி திருவிழா (டிக்கா உத்சவ்) என்றழைக்கப்பட்ட நிகழ்வைத் தொடங்கி
வைத்த போது ‘கொரோனாவுக்கு எதிரான இரண்டாவது பெரும் போர்’ பற்றி அவர் பேசியிருந்தார்.
2020ஆம் ஆண்டு ஆற்றிய உரையில் கோவிட்-19க்கு எதிரான போரை
இரண்டு உலகப் போர்களுடன் ஒப்பிட்ட அவர் இப்போதைய சவாலை எதிர்கொள்ள அந்த இரண்டு
போர்களுக்கான அளவிலான ஆயத்தம் நம்மிடம் இருக்க வேண்டும் என்ற அழைப்பை விடுத்திருந்தார்.
உண்மையில் நாம் போர்ச் சூழலில் இருக்கிறோம் என்று பிரதமர்
நினைத்தால், அவரிடம் நிச்சயம் போர்க்காலத்திற்கான அமைச்சரவையும், தேசிய அளவிலான போருக்கான
பாசறையும் இருந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட முனைகளில் எடுத்துக்காட்டாக அதிகச்
சுமைகளைக் கொண்ட மாநிலங்களில் நிலைமையைச் சமாளிக்கவென்று பிராந்திய அளவிலான போர்
பாசறைகளும் அவரிடம் இயல்பாகவே இருந்திருக்க வேண்டும்.
தொற்றுநோய்க்கு எதிரான எதிர்வினைக்கான கருவிகள் என்று
நம்மிடம் எதுவுமில்லாமல் மிகப் பெரிய சுகாதார நெருக்கடிநிலை என்ற போரில் நாம் நின்று
கொண்டிருக்கின்றோம். தொற்றுநோய் கட்டுப்பாடு குறித்து இந்தியாவை பிரதமர் தனிப்பட்ட
முறையில் வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்றும், சில நாட்களுக்கு ஒருமுறை அவர் மறுஆய்வுக்
கூட்டங்களை நடத்தி வருகிறார் என்றும் குறிப்பிடுகின்ற வரிகள் இல்லாது சுகாதார அமைச்சரான
ஹர்ஷ்வர்தனின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு அல்லது ட்வீட் முழுமையடைவதில்லை. அதுபோன்ற
உயர்மட்ட மறுஆய்வுக் கூட்டங்களில் எடுக்கப்படுகின்ற முடிவுகளுக்கு அப்பாற்பட்டு ஆக்சிஜன்
பற்றாக்குறை, தடுப்பூசி குழப்பம் என்று தற்போது ஏற்பட்டிருக்கிறது. களத்தில் நிலைமை
மிகவும் மோசமடைந்து வருகின்ற நிலையிலும் அதுபோன்ற ஆய்வுக் கூட்டங்களில் எடுக்கப்படுகின்ற
முடிவுகளை மக்களிடையே சொல்வதற்கு பொறுப்பேற்றுக் கொண்டவர்களாக இந்த அரசாங்கத்திடம்
யாரும் இல்லை.
கோவிட் தொற்றுக்கான எதிர்வினையை ‘தனிப்பட்ட முறையில்’
மேற்பார்வையிடுபவராக இருக்கின்ற பெருமைக்குரிய நமது பிரதமரைத் தவிர, தொலைக்காட்சி
விவாதங்களில் அதுகுறித்து மக்களிடம் பேசுபவர்களாக வேறு சிலரும் இருக்கின்றனர். அவர்களில் பிரதமரின் தலைமையில் இயங்குகின்ற நிதி
ஆயோக் அமைப்பின் உறுப்பினராக இருக்கின்ற டாக்டர்.வி.கே.பால் மிக முக்கியமானவராக
இருக்கிறார். இவருக்கு புதுதில்லியில் அமைந்துள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல்
நிறுவனத்தின் (எய்ம்ஸ்) இயக்குனரான டாக்டர் ரன்தீப் குலேரியா, இந்திய மருத்துவ
ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) இயக்குநர் ஜெனரலான டாக்டர் பல்ராம் பார்கவா
ஆகியோர் அடிக்கடி உதவி வருகின்றனர். மற்றொரு அதிகாரப்பூர்வ குரலாக அரசாங்கத்தின்
முதன்மை அறிவியல் ஆலோசகரான (பிஎஸ்ஏ) டாக்டர் கே.விஜயராகவன் இருந்து வருகிறார்.
நிதி ஆயோக் அமைப்பு கொள்கைகளுக்கான சிந்தனைக் குழுவாகவும், எய்ம்ஸ் கற்பித்தல்
மற்றும் ஆய்வு மருத்துவமனையாகவும், ஐசிஎம்ஆர் ஆராய்ச்சி நிதி நிறுவனமாகவும், பிஎஸ்ஏ
ஆலோசனை அமைப்பாகவும் இருந்து வருகின்றன. சுகாதார அமைச்சகமும் - சில நேரங்களில்
பத்திரிகையாளர் சந்திப்புகளில் இணைச் செயலாளர் கலந்து கொள்கிறார் - மற்றும் அதன்
நோய்களுக்கான தேசிய மையம் (என்சிடிசி) போன்ற ஏஜென்சிகளும் பொதுமக்களின் பார்வையில்
இருக்கத் தவறி விட்டன.
கூடுதலாக, இந்த தொற்றுநோயை நிர்வகிப்பதில் தேசிய மற்றும்
மாநில பேரிடர் மேலாண்மை ஏஜென்சிகளுக்கு மிகமுக்கியமான பங்கு இருக்கிறது. இதுபோன்ற ஏஜென்சிகள்
மற்றும் நபர்கள் அனைவருக்கும் மத்தியில், பணிக்குழுக்கள், நிபுணர் குழுக்கள்,
அதிகாரம் பெற்ற குழுக்கள் என்று பல குழுக்கள் இருந்து வருகின்றன. ஆயினும்கூட இவர்களில்
யார் யாரிடம் எந்த விளைவை ஏற்படுத்தும் வகையில் எதைத் தெரிவித்து வருகிறார்கள் என்பது
மர்மம் நிறைந்ததாகவே இருக்கின்றது.
2020 ஆகஸ்ட் 15க்குள் தடுப்பூசிகளுக்கான சோதனைகளை
முடிக்க வேண்டும் என்று மருத்துவ பரிசோதனை மையங்களைக் கேட்டுக் கொள்ளுமாறு அல்லது சீரம்
வழியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்த தரவுகளைத் தணிக்கை செய்யுமாறு ஐ.சி.எம்.ஆர்
இயக்குநர் ஜெனரலுக்கு யார் உத்தரவிட்டது? உள்ளூர்த் தேவைகளை கணக்கில் கொள்ளாமல்
உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு லட்சக்கணக்கான தடுப்பூசிகளை அனுப்புமாறு வெளிவிவகார
அமைச்சகத்திடம் யார் கேட்டுக் கொண்டது?
விரிவான தேர்தல் அட்டவணையில் இருக்கின்ற ஆபத்துகள், மெகா
பேரணிகளை அனுமதிப்பது போன்ற செயல்பாடுகள் குறித்து நிபுணர் குழுக்களால் அல்லது
அறிவியல் ஆலோசகர்களால் இந்திய தேர்தல் ஆணையம் ஏன் எச்சரிக்கப்படவில்லை? கும்பமேளாவை
நடத்த ஊக்குவிக்கும் வகையிலே உத்தரகண்ட் அரசிற்கு யார் உத்தரவிட்டது? ஆய்வு அல்லது
செயல்படுத்தும் நிறுவனமாக இல்லை என்றாலும் பிஎஸ்ஏவிற்கு தடுப்பூசி தொடர்பான
பணிகளுக்காக ரூ.100 கோடி ஒதுக்க யார் முடிவு செய்தது? தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களின்
உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக 2020ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட ரூ.900 கோடி பணத்தை
உயிரிதொழில்நுட்பத்துறை (டிபிடி) ஏன் பயன்படுத்திக் கொள்ளவே இல்லை? கடந்த வாரம் அறிவியலாளர்களில்
பலரும் வெளிப்படையான கடிதத்தின் மூலம் கேட்டுக் கொண்டதைப் போல கடந்த ஆண்டின்
தொற்றுநோயியல் குறித்த தரவுகள் அவர்களுடன் ஏன் பகிர்ந்து கொள்ளப்படவில்லை?
தடுப்பூசி கிடைப்பது போன்ற எந்தவொரு சிறப்பான நடவடிக்கையும்
உடனடியாக பிரதமரின் கணக்கில் வரவு வைக்கப்படுகின்ற அதே வேளையில் மிகக்கொடிய இந்த
இரண்டாவது அலைக்கு காரணமாகியுள்ள ஏராளமான தவறான செயல்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்ள
இன்று யாரும் இல்லை. கிடைத்துள்ள பெருமைகளுக்கு பிரதமரின் அலுவலகமோ அல்லது பிரதமரோ
(சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் பல அமைச்சர்களின் ட்வீட்டுகள், பாஜகவின் முறையான
தீர்மானம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு) காரணமாக இருப்பார்கள் என்றால், பிரதமர்
அலுவலகத்தில் உள்ள சுகாதார வல்லுநர்கள், தொற்றுநோயியல் நிபுணர்கள், பொருளாதார
வல்லுநர்கள், சமூக அறிவியலாளர்கள் என்று இந்த தொற்றுநோய்க்கான எதிர்வினைக்குப்
பொறுப்பானவர்கள் அல்லது பிரதமருக்கு ஆலோசனை வழங்கி வருபவர்கள் யார் என்று அவசியம்
தெரிவிக்கப்பட வேண்டும். தேசிய தொற்றுநோய் போர்த் திட்டம் அல்லது தேசிய தடுப்பூசி
உத்தி என்று ஏதாவதொரு ஆவணம் இந்த விஷயத்தில் இருக்கிறதா என்பதை நாடு உடனடியாக அறிந்து
கொள்ள வேண்டியுள்ளது.
நம்மிடம் குழப்பமான வழிகாட்டுதல்கள், தரப்படுத்தப்பட்ட செயல்பாட்டு
நடைமுறைகள், தெளிவில்லாத பத்திரிகைச் செய்திக்குறிப்புகள், உள்துறை அமைச்சகத்தால்
வழங்கப்படுகின்ற உத்தரவுகள் மட்டுமே இருக்கின்றன. தேசிய எதிர்வினைத் திட்டம்
அல்லது தடுப்பூசி உத்தி ஆகியவற்றை உள்ளடக்கியதாக இவற்றில் எதுவும் இருக்கவில்லை. நாடு
முழுவதும் உள்ள பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நடைபெறுகின்ற தொற்று மேலாண்மை
தொடர்பான பொதுநலன் மனுக்களின் மீதான விசாரணைகளின் போது மத்திய அரசு நிறுவனங்கள்
சார்பில் அளிக்கப்படுகின்ற மிகமோசமான பதில்களிலிருந்து நிலைமை நன்கு தெளிவாகிறது.
இந்திய மற்றும் வெளிநாட்டு வல்லுநர்கள் தங்களுடைய
கருத்துக்களை அறிவியல் பத்திரிகைகள் மற்றும் பிற மன்றங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
அதிகச் சுமை கொண்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள் மற்றும்
அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கிய தேசிய அளவிலான போர் பாசறையை பிரதமர்
அன்றாடம் நிலைமையைச் சீராய்வு செய்யும் வகையிலும், அவர்களிடம் இருக்கின்ற எதிர்வினையை
ஒருங்கிணைக்கும் வகையிலும் கூட்டிட வேண்டும் என்று லான்செட் கோவிட்-19 குழுவின் இந்திய
பணிக்குழு உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதுபோன்றதொரு போர் பாசறைக்கு சிறந்த
பொது சுகாதார நிபுணர்கள், பொருளாதார வல்லுநர்கள், சமூக அறிவியலாளர்கள் அடங்கிய சுதந்திரமாக
இயங்கக்கூடிய தொழில்நுட்பக் குழு உதவிட வேண்டும்.
வெறுமனே சம்பிரதாயமாக அல்லாமல் முடிவெடுக்கும் போது அவர்களுடைய
உள்ளீடுகளையும் எடுத்துக் கொள்ளும் வகையில் சிவில் சமூகம், தொழிற்துறை மற்றும்
மதத் தலைவர்கள் கருத்துகளையும் அரசாங்கம் இவற்றோடு கவனித்துக் கேட்டுக் கொள்ள
வேண்டும். அமெரிக்காவில் தொற்றுநோய்களுக்கான எதிர்வினை குறித்து மிகவும் முக்கியமான
நபராக இருந்து வருகின்ற தொற்று நோய் நிபுணரான அந்தோனி ஃபாசி, இந்தியாவில் இருக்கின்ற
சவாலை எதிர்கொள்வதற்கு தேசிய அளவிலான போர் பாசறையையே பரிந்துரைக்கிறார். கேரளா
போன்ற சில மாநிலங்கள் நிலைமையைக் கண்காணிப்பதற்காகவும், முடிவுகளை எடுக்கவும், அன்றாட
நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் மாநில அளவிலான போர் பாசறைகளை ஏற்கனவே நிறுவியுள்ளன.
இரண்டாவது அலையை எதிர்த்துப் போராடுவதற்கும், அடுத்த
அலைக்குத் தயாராக இருப்பதற்கும் நம்பகமான, வெளிப்படையான, பொறுப்புணர்வு மிக்க
செயல்முறையே இந்தியாவிற்கு உடனடியாகத் தேவைப்படுகிறது.
https://www.tribuneindia.com/news/comment/waging-a-war-against-covid-sans-war-room-248747








Comments