சுயமாக ஏற்படுத்திக் கொண்ட தேசியப் பேரழிவு

 டி.ஜே.எஸ்.ஜார்ஜ்

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்


தலைமையின் தரம் குறித்த விசாரணைகள் எதுவும் நேரம் மிகச் சாதாரணமாக இயல்பாக இருக்கும் போது நடப்பதில்லை. ஒரு நாட்டின் கற்பனைத் திறனற்ற தலைவரோ, அமைப்போ அல்லது ஒரு குடும்பமோகூட அதுபோன்ற காலங்களில் எந்தவிதப் பிரச்சனைகளுமின்றி நிலைமையை எளிதில் கடந்து விடும். ஆனால் அச்சுறுத்தல் பலமாக இருக்கும் போது நிலைமை முழுவதுமாக மாறி விடுகிறது. அதுபோன்றதொரு சூழ்நிலையையே கோவிட் தொற்றுநோய் இந்தியாவில் இப்போது உருவாக்கியுள்ளது. எவரொருவரும் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாத வகையிலேயே நிலைமை கையாளப்பட்டிருப்பதாக பதிவுகள் காட்டுகின்றன.   

இந்த மோசமான நிலைமை பொதுமக்கள் நன்மை குறித்த நோக்கில் இல்லாமல் பெரும்பாலும் பொதுமக்கள் தொடர்பு என்ற நிலைப்பாட்டில் இருந்தே கையாளப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக மக்களுக்கு என்ன நடக்கிறது, நடந்திருப்பவற்றின் விளைவுகள் என்னவாக இருக்கின்றன என்பது அதிகம் தெரிவதில்லை. ஆளுகின்ற அமைப்பு மறைக்க முயற்சிக்கும் உண்மைகளை எதிர்க்கட்சிகள் அறிந்து கொள்ள நமது பாராளுமன்ற அமைப்பு நிச்சயம் உதவிடாது. நமது ஊடகங்களும் மிகவும்  ‘எச்சரிக்கையாக’ இருக்கின்றன.


ஆனால் நம்மால் காண முடியாததை நமது எல்லைகளுக்கு அப்பால் இருப்பவர்களால் இப்போது காண முடிந்திருக்கிறது. அவர்களுக்குத் தெரிந்திருப்பது நம்மை அச்சுறுத்துவதாக இருக்கிறது. அவை உண்மையிலேயே மிகவும் பயங்கரமாக இருக்கின்றன. ‘இந்தியாவில் நிலவி வருகின்ற துயரக் காட்சிகளைப் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக உள்ளது’ என்ற கருத்தை சகமதிப்பாய்வு செய்யப்படுவதாக, அனைவராலும் மதிக்கப்படுவதாக இருக்கின்ற மருத்துவ வார இதழான லான்செட் தெரிவித்துள்ளது. இரண்டாவது அலையின் ஆபத்துகள் குறித்து பலமுறை விடப்பட்ட எச்சரிக்கைகளை அதிகாரிகள் புறக்கணித்ததைப் பற்றி குறிப்பிடும் போது ‘தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதைக் காட்டிலும் ட்விட்டரில் வெளி வருகின்ற விமர்சனங்களை அகற்றுவதிலேயே இந்திய அரசாங்கத்தின் கவனம் இருந்தது. திடீரென்று எந்தவொரு விளக்கமும் தராமல் மாற்றப்பட்ட அரசின் கொள்கைகள் அதிக குழப்பத்தையே உருவாக்கின’ என்றும் கூறியுள்ளது.  


தன்னுடைய முடிவுகளை எட்டுவதற்கு முன்பாக லான்செட் மருத்துவ இதழ் அதற்கான முயற்சிகளை நேர்த்தியாகச் செய்திருந்தது. இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி கட்டுப்பாட்டை மீறிச் சென்றதற்கு அரசாங்கத்தின் புறக்கணிப்பே  முக்கிய காரணம் என்று கூறிய அந்தப் பத்திரிகை இப்போது இந்தியாவில் இருக்கின்ற நெருக்கடியை ‘சுயமாக ஏற்படுத்திக் கொண்ட தேசியப் பேரழிவு’ என்றே குறிப்பிட்டிருந்தது. ‘கோவிட்டைக் கட்டுப்படுத்துவதில் அரசு ஆரம்பத்தில் வெற்றி பெற்றிருந்தது என்றாலும் அதனால் அமைக்கப்பட்ட பணிக்குழு பல மாதங்களாகச் சந்திக்கவே இல்லை’ என்று விளக்கிய அந்தப் பத்திரிகை அரசாங்கத்தின் மீதே ‘பொறுப்பான தலைமையையோ அல்லது வெளிப்படைத்தன்மையையோ அரசு கொண்டிருக்கவில்லை’ என்று குற்றம் சாட்டியிருந்தது.    

இவையனைத்துமே உண்மை சரிபார்ப்பின் அடிப்படையில் வைக்கப்பட்ட மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளாகும். இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொள்வதற்கு இந்திய ஊடகங்கள் பழக்கப்பட்டிருக்கவில்லை என்பதோடு அவை இதுபோன்ற ஆய்வுகளுக்குப் பொருத்தமற்றவையாகவும் இருக்கின்றன. ஒருவேளை அவற்றில் ஏதாவதொரு ஊடகம் அவ்வாறு செய்ய முயன்றால் நிச்சயம் அது சிக்கலிலே மாட்டிக் கொள்ள வேண்டியிருக்கும். பொதுமக்களின் கருத்துகள் மீது தன்னுடைய கவனத்தைச் செலுத்தாத அரசாங்கம் தனிநபர்களின் தற்பெருமை என்ற ஒரு நோக்கத்திற்காகவே புதுதில்லியின் சென்ட்ரல் விஸ்டாவை விரைந்து அழித்தது. அரசாங்கத்தின் இதுபோன்ற அணுகுமுறையே வெளிநாட்டுப் பார்வையாளர்களிடமிருந்து மோசமான கணிப்புகள் வெளிவருவதற்கான காரணியாக இருக்கிறது.   

சில வாரங்களுக்கு முன்பு ‘கோவிட் காரணமாக இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்திற்குள் பத்து லட்சம் மக்கள் இறந்து போகக்கூடும்’ என்று வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய சுகாதார ஆராய்ச்சி மையமான இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் மெட்ரிக்ஸ் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்தியர் ஒருவரிடம் கூட அதை நம்புவதற்கான விருப்பம் இருக்கவில்லை. உண்மையாகச் சொல்வதென்றால் அப்படி ஏதாவது நடக்கக்கூடும் என்பது நமக்குத் தெரியாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வாஷிங்டன் அல்லது லண்டனில் உள்ள ஆய்வு மையங்கள் நமக்குத் தெரிவிக்கும் வரை அதுபோன்ற விளைவுகள் பற்றி நமக்கு எதுவும் தெரிந்திருக்காது.

கிடைத்திருக்கும் தகவல்கள் நம்மை அச்சுறுத்துகின்றன.  கோவிட் -2 மரபணு வரிசை கூட்டமைப்பு (ஜீனோம் சீக்வென்சிங் கன்சோர்சியம்) என்ற அமைப்பைச் சார்ந்த ராகேஷ் மிஸ்ரா இரண்டாவது அலைக்கான ஆபத்து உள்ளது என்று மார்ச் மாத தொடக்கத்திலேயே வல்லுநர்கள் எச்சரித்ததாகக் கூறுகிறார். ஆனால் அரசாங்கம் அந்த எச்சரிக்கையைத் தவற விட்டது மட்டுமல்லாது, அனைத்தும் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வெளிப்படையாக கூறவும் செய்தார். நிலைமை மோசமாக இருந்த போதிலும் வங்காளத்தில் தேர்தல் அரசியலில் அரசாங்கம் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பிரதமரது உரைகளைப் பார்த்தால் அவர் தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தது நன்கு தெரிய வரும். இன்றைக்கு உலகில் தொற்றுநோயால் புதிதாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் பாதிப் பேருக்கு இந்தியாவே காரணம் என்று வெளியாகியிருக்கின்ற அறிக்கைகள் கூறுகின்றன.    


உண்மையில் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டுமா? மத்திய அரசு அவ்வாறு நினைப்பதாகத் தெரியவில்லை. தில்லியில் இருந்து வருகின்ற புகைப்படங்களை மேலோட்டமாகப் பார்த்தாலே இவற்றிற்கான முன்னுரிமை தேவை என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரை செல்கின்ற கம்பீரமான ராஜ்பாத் மற்றும் தேசிய விளையாட்டரங்கத்தில் உள்ள பக்க புல்வெளிகள் அனைத்தும் மண்வாரி இயந்திரங்களைக் கொண்டு தோண்டி எடுக்கப்பட்டு விட்டன. புதிய மோடி விஸ்டாவிற்கான தோற்றம் இப்போது சென்ட்ரல் விஸ்டாவுக்கு வழங்கப்படுகிறது. கோவிட் இருக்கிறதா, இல்லையா, மருத்துவமனைகளில் போதுமான ஆக்சிஜன் இருக்கிறதா, இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பிரதமருக்கான புதிய குடியிருப்பு போன்ற திட்டங்களுக்கே அதிக முன்னுரிமை தந்து வேலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன (பிரதமரின் குடியிருப்பு பத்து நான்கு மாடி கட்டிடங்களைக் கொண்டிருக்கும் என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்).


செய்தி நிறுவனங்கள் தில்லி முழுமையான பொதுமுடக்கத்தில் இருப்பதாகக் கூறுகின்றன. ஆனால் மோடியின் சென்ட்ரல் விஸ்டா திட்டம் அத்தியாவசிய சேவை என அறிவிக்கப்பட்டு வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ‘மோடியின் தொற்றுநோய்த் தேர்வு: தனது பிம்பத்தைப் பாதுகாப்பது அல்லது இந்தியாவைப் பாதுகாப்பது என்ற இரண்டு தேர்வுகளில் அவர் தன்னையே தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார்’ என்ற தலைப்பில் வாஷிங்டன் செய்தித்தாள் கட்டுரை எழுதியதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அமெரிக்க ஆய்வு அறிக்கைகள் மோடியின் தலைமையை ஏற்றுக் கொள்வது குறித்த தரமதிப்பீடுகள் மிகக் குறைந்த அளவிற்கு எவ்வாறு வீழ்ச்சியடைந்தன என்பதை விளக்குவதாக இருக்கின்றன.  


நிகழ்வுகள் நிறைந்த கடந்த காலத்தைக் கொண்ட நாடாக நாம் இருந்து வந்திருக்கிறோம். அசோகர் முதல் அலாவுதீன் கில்ஜி வரை, அவுரங்கசீப் முதல் அக்பர் வரை நம்மை ஆட்சி செய்துள்ளார்கள் - அவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளோம்? அவர்கள் அனைவருக்கும் பிறகு இந்தியா நீடித்து இருந்து வருகிறது. இவ்வாறு சொல்வதற்கு யார் ஆட்சி செய்தாலும் இந்தியா தப்பிப் பிழைத்து விடும் என்று சொல்வதாக அர்த்தமில்லை.  அவுரங்கசீப்பிடம் அப்போது வீடியோ அழைப்பு வசதிகள் இருந்திருக்கவில்லை. ஜன்-கி-பாத் திட்டத்தை அக்பர் நடத்திடவில்லை. ஆனால் இன்றைக்கு நடக்கின்ற விளையாட்டுகள் வேறு மாதிரி இருக்கின்றன. இன்றைய விளையாட்டு வீரர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். இன்றைய நாட்கள் ‘வெற்றி பெறுபவருக்கே அனைத்தும்’ என்ற வாசகத்திற்கான பொருள் தருபவையாகவே இருக்கின்றன.     

https://www.newindianexpress.com/opinions/columns/t-j-s-george/2021/may/23/indias-covid-19-crisis-a-self-inflicted-national-catastrophe-2306177.html

 

Comments