இந்த அரசு தோல்வியுற்றிருக்கிறது என்று மட்டும் சொல்வது போதாது…

இந்த அரசு உண்மையில் மனிதகுலத்திற்கு எதிராக இழைக்கப்பட்டிருக்கும் குற்றத்திற்கு சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது

அருந்ததி ராய்

வயர் இணைய இதழ்

 


உத்தரபிரதேச மாநிலத்தில் மக்களைத் துருவமுனைப்படுத்துகின்ற வகையில் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற பிரச்சாரத்தின் போது, அதுபோன்ற விஷயங்களை மேலும் தூண்டிவிடும் வகையிலே ​​இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் களத்தில் இறங்கியிருந்தார். அந்தப் பிரச்சாரத்தின் போது பொது மேடையில் ஒன்றில் இருந்து கொண்டு ‘எதிர்க்கட்சியின் தலைமையில் இருக்கின்ற மாநில அரசு ஹிந்துக்களுக்கான தகன மைதானங்களை (ஷம்ஷான்கள்) விட முஸ்லீம்களின் மயானங்களுக்கே (கப்ரிஸ்தான்கள்) அதிகமாகச் செலவு செய்து வருவதன் மூலம் முஸ்லீம் சமூகத்திற்குத் துணை நிற்கிறது’ என்று மோடி குற்றம் சாட்டினார். ‘ஒரு கிராமத்தில் கப்ரிஸ்தான் ஒன்றைக் கட்டினால், அவசியம் அங்கே ஒரு ஷம்ஷானும் கட்டப்பட வேண்டும்’ என்று உச்சஸ்தாயியில் தன்னுடைய வழக்கமான உரத்த குரலில் அவர் அங்கே கூடியிருந்த கூட்டத்தைத் தூண்டிவிட்டார். அவரது பேச்சில் மயங்கிய அவரை ஆராதிக்கின்ற கூட்டம் ‘ஷம்ஷான்! ஷம்ஷான்!’ என்று மீண்டும் மீண்டும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.        

சர்வதேச செய்தித்தாள்களின் முதல் பக்கங்களை இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் நடைபெற்று வருகின்ற இறுதிச் சடங்குகளால் தகன மைதானங்களில் இருந்து எழுகின்ற தீப்பிழம்புகளின் அச்சுறுத்துகின்ற படங்கள் நிரப்பிக் கொண்டிருக்கின்றன. நாட்டில் உள்ள அனைத்து கப்ரிஸ்தான்களும், ஷம்ஷான்களும் தாங்கள் சேவை அளிக்க வேண்டிய மக்களுக்கு தங்களுடைய திறன்களுக்கு அப்பாற்பட்டு இப்போது ஒழுங்காகச் செயல்பட்டுக் கொண்டு வருவதைக் கண்டு நிச்சயம் மோடி மகிழ்ச்சியடைந்திருப்பார்.     


அதிகரித்து வரும் பேரழிவு, வேகமாகப் பரவி வருகின்ற புதிய கோவிட்-19 வகைகளை தன்னுடைய தேசிய எல்லைகளுக்குள்ளேயே வைத்துக் கொள்வதில் இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்கும் சிரமம் குறித்து வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை அண்மையில் தலையங்கம் ஒன்றை வெளியிட்டிருந்தது. ‘130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவைத் தனிமைப்படுத்தி விட முடியுமா?’ என்ற கேள்வியை எழுப்பி ‘அது அவ்வளவு எளிதாக இருக்காது’ என்று அந்தப் பத்திரிகை பதிலளித்திருந்தது. அதே கேள்வி இங்கிலாந்து, ஐரோப்பா முழுவதும் கொரோனா வைரஸ் சில மாதங்களுக்கு முன்பு அதிகரித்த போது இதைப் போன்று எழுப்பப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் நமது பிரதமர் பேசிய வார்த்தைகளைக் கருத்தில் கொண்டால் இந்திய நிலைமை குறித்து கோபம் கொள்வதற்கான எந்தவொரு உரிமையும் நம்மிடம் இருக்காது. 

தொற்றுநோயின் இரண்டாவது அலையின் உச்சத்தில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மக்கள் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் அந்த கூட்டத்தில் மோடி உரையாற்றியிருந்தார். அவரது உரையில் அந்த நாடுகளில் அதிகரித்திருந்த தொற்றுநோய் குறித்து அனுதாப வார்த்தைகள் எதுவும் இடம் பெற்றிருக்கவில்லை. மாறாக இந்தியாவின் உள்கட்டமைப்பு, கோவிட்-19 குறித்து இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட தயாரிப்பு ஆகியவை பற்றிய அதிகப் பெருமை மட்டுமே அவரது உரையில் இருந்தது. வரலாறை மோடி ஆட்சி மீண்டும் திருத்தி எழுதுகின்ற போது - அது விரைவிலேயே நடக்கலாம் -  அவருடைய இந்த உரை காணாமல் போய் விடக் கூடும் அல்லது அந்த உரையைக் கண்டுபிடிப்பது கடினமாகி விடும் என்று அச்சம் என்னுள் எழுந்ததால் அந்த உரையை நான் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டிருக்கிறேன். அந்த உரையில் உள்ள பெருமதிப்பிற்குரிய துணுக்குகள் சிலவற்றை இங்கே தருகிறேன்.   

‘நண்பர்களே, அச்சம் நிரம்பிய இந்த காலகட்டத்தில் 130 கோடி இந்தியர்களிடமிருந்து துணிவு, நேர்மறையான எண்ணம், நம்பிக்கையை நான் கொண்டு வந்திருக்கிறேன்… உலகெங்கிலும் உள்ள நாடுகளில் இந்தியாவே கொரோனாவால் மிகவும் பாதிக்கப்படப் போகின்ற நாடாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. கொரோனா நோய்த்தொற்றின் சுனாமி இந்தியாவில் இருக்கும் என்று கூறப்பட்டது. தொற்றுநோயால் எழுபது முதல் எண்பது கோடி இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சிலர் கூறினார்கள். மற்றும் சிலர் இருபது லட்சம் இந்தியர்கள் இறந்து போவார்கள் என்று சொன்னார்கள்’.    

‘நண்பர்களே, இந்தியா அடைந்திருக்கும் வெற்றியை வேறொரு நாட்டின் வெற்றியைக் கொண்டு தீர்மானிப்பது நல்லதல்ல. கொரோனாவைத் திறம்படக் கையாண்டிருப்பதன் மூலம் உலக மக்கள்தொகையில் 18% பேர் வசித்து வருகின்ற நாடான இந்தியா மனிதகுலத்தையே பெரும் பேரழிவிலிருந்து காப்பாற்றியுள்ளது’.

கொரோனா வைரஸை தான் திறம்படக் கையாண்டு மனிதகுலத்தையே காப்பாற்றி விட்டதாகக் கூறி மோடி எனும் மந்திரவாதி அங்கே தலைவணங்கி பாராட்டைப் பெற்றுக் கொண்டார். ஆனால் வைரஸை அவர் கட்டுப்படுத்தியிருக்கவில்லை என்று இப்போது நிலைமை மாறியுள்ள வேளையில்  இந்தியாவில் கொரோனா தொற்று மிகவும் தீவிரமாக இருக்கும் என்று அப்போது கணிக்கப்பட்டது குறித்து நாம் இப்போது குறை கூற முடியுமா? மற்ற நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டு நம்முடைய விமானங்கள் ரத்து செய்யப்படுவது குறித்து நாம் இப்போது குறை கூற முடியுமா? அனைத்து வகை நோய்கள், மோடியும் அவருடைய கட்சியும் பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்ற அரசியல் முத்திரையான அறிவியல் எதிர்ப்புணர்வு, வெறுப்பு, முட்டாள்தனம் ஆகியவற்றுடன் இந்த வைரஸ் மற்றும் பிரதமருடன் சேர்த்து நம்மை அடைத்து வைத்திருப்பது குறித்து நாம் இப்போது குறை கூற முடியுமா?    

§

கோவிட்-19இன் முதல் அலை இந்தியாவிற்கு வந்து பின்னர் கடந்த ஆண்டில் அது தணிந்தபோது அரசாங்கமும், அதற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வருபவர்களும் மிகுந்த வெற்றிக் களிப்புடன் இருந்தனர். ‘இந்தியாவில் நிலைமை சரியில்லை’ என்று ட்வீட் செய்திருந்த தி பிரிண்ட் இணைய செய்திதளத்தின் தலைமை ஆசிரியரான சேகர் குப்தா ‘மனித உடல்களால் நிரம்பி நம்முடைய வடிகால்கள் திணறவில்லை; மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை; தகனம் செய்யும் மயானங்கள் மற்றும் கல்லறைகளுக்குத் தேவையான விறகுகளுக்கு அல்லது இடத்திற்கு பஞ்சம் இருக்கவில்லை என்ற தகவல்கள் உண்மையாக இருப்பது அவசியமில்லையா? இவற்றை ஏற்கவில்லை என்றால் அதற்கான தரவைக் கொண்டு வாருங்கள். நீங்கள் கடவுளாக இல்லையென்றால் அது நிச்சயம் முடியாது’ என்று குறிப்பிட்டிருந்தார். இதுபோன்ற மோசமான, கடுமையான நிலைமையைத் தள்ளி வைத்து விடுங்கள் - பெரும்பாலான தொற்றுநோய்களுக்கு இரண்டாவது அலை இருக்கும் என்று கூறுவதற்கு கடவுள் ஒருவர் நமக்குத் தேவைப்படுவாரா என்ன?     

இந்த வைரஸின் வீரியத்தன்மை அறிவியலாளர்களையும், வைரஸ் நிபுணர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள போதிலும் உண்மையில் இவ்வாறு நடக்கும் என்பது ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்தது. தனது உரையில் மோடி பெருமை பேசியிருந்த கோவிட்-19 சார்ந்த உள்கட்டமைப்பு, வைரஸுக்கு எதிரான ‘மக்கள் இயக்கம்’ ஆகியவை இப்போது எங்கே போய் விட்டன? நோயாளிகளுக்கு மருத்துவமனையில் படுக்கைகள் கிடைக்கவில்லை. மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் கையறு நிலையிலே உள்ளனர். மருத்துவமனை ஊழியர்கள் இல்லாத வார்டுகள், உயிருடன் இருக்கின்ற நோயாளிகளை விட இறந்து போன நோயாளிகள் மருத்துவமனைகளில் அதிகம் இருக்கின்ற செய்திகளை நண்பர்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். மக்கள் மருத்துவமனையின் தாழ்வாரங்களில், சாலைகளில், வீடுகளில் இறந்து கொண்டிருக்கிறார்கள். டெல்லியில் உள்ள தகன மைதானங்களில் விறகு தீர்ந்து விட்டது. நகரில் உள்ள மரங்களை வெட்டுவதற்கான சிறப்பு அனுமதியை வனத்துறை வழங்க வேண்டியிருக்கிறது. அவநம்பிக்கையுடன் இருக்கின்ற மக்கள் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய சிறிய அளவிலான உதவியையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தகன மைதானங்களாக பூங்காக்கள், கார் நிறுத்துமிடங்கள் மாற்றப்படுகின்றன. நமது வானில் நிறுத்தப்பட்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத பறக்கும் தட்டு நமது நுரையீரலில் இருந்து காற்றை உறிஞ்சுவதைப் போலத் தோன்றுகின்றது. அது நாம் இதுவரையிலும் அறிந்திராத ஒரு வகையான வான்வழித் தாக்குதலைப் போலவே இருக்கின்றது.     


இந்தியாவின் மோசமான புதிய பங்குச் சந்தையில் ஆக்சிஜன் புதியதொரு நாணயமாகி இருக்கிறது. மூத்த அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் போன்ற இந்தியாவின் உயரடுக்கினர் மருத்துவமனை படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கான வேண்டுகோளை ட்விட்டரில் முன்வைத்து வருகின்றனர். சிலிண்டர்களுக்கான கள்ளச்சந்தை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், மருந்துகள் கிடைப்பது மிகவும் கடினமாகி உள்ளது.  

வேறு சில விஷயங்களுக்கும் இதுபோன்று புதிய சந்தைகள் ஏற்பட்டுள்ளன. தடையற்ற சந்தையின் ஒருபுறத்தில் நீங்கள் மருத்துவமனை சவக்கிடங்கில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உங்கள் அன்புக்குரியவரை இறுதியாக ஒருமுறை எட்டிப் பார்த்துக் கொள்வதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. இறுதிப் பிரார்த்தனைகளைச் சொல்ல ஒப்புக் கொண்டு வருகின்றவருக்கு கூடுதல் கட்டணம் தர வேண்டியுள்ளது. அவநம்பிக்கையால் வாடிக் கொண்டிருக்கும் குடும்பங்களிடமிருந்து இணையவழி மருத்துவ ஆலோசனைகள் வழங்குகின்ற இரக்கமற்ற மருத்துவர்களால் பணம் பறிக்கப்படுகிறது. இன்னொருபுறத்தில் உங்கள் நிலத்தையும் வீட்டையும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக விற்று உங்களிடம் உள்ள கடைசி பணத்தையும் நீங்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது. உங்களை மருத்துவமனைகளுக்குள் அனுமதிப்பதற்கு முன்பாக அவர்களுக்குச் செலுத்த வேண்டிய  வைப்புத்தொகை உங்கள் குடும்பத்தை இரண்டு தலைமுறைகளுக்கு பின்னுக்குத் தள்ளி விடுவதாக இருக்கிறது.  

§

இவை எதுவுமே நிலவுகின்ற அதிர்ச்சியின் முழு ஆழத்தையோ, வரம்பையோ அல்லது ஏற்பட்டிருக்கும் குழப்பத்தையோ, இவையனைத்திற்கும் மேலாக மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவமதிப்பையோ வெளிப்படுத்துவதாக இல்லை. ‘டி’ என்ற என்னுடைய இளம் நண்பருக்கு ஏற்பட்ட அனுபவம் தில்லியில் மட்டும் ஆயிரக்கணக்கானோருக்கு நேர்ந்திருக்கும் கதைகளைப் போன்றதாகவே உள்ளது. தனது இருபது வயதுகளில் இருக்கும் ‘டி’, தில்லியின் புறநகரில் உள்ள காசியாபாத்தில் தனது பெற்றோரின் சிறிய பிளாட்டில் வசித்து வருகிறார். கோவிட்-19க்கான பரிசோதனையில் அவர்கள் மூவருக்குமே கோவிட்-19 தொற்று இருப்பதாக முடிவு வந்திருந்தது. அவருடைய தாயார் மிகவும் மோசமான நிலையில் இருந்தார். ஆனால் இந்த தொற்றின் ஆரம்பகட்டத்தில் அது நிகழ்ந்ததால், தன்னுடைய தாயாருக்காக மருத்துவமனை படுக்கையைக் கண்டுபிடிக்க முடிந்ததில் எனது நண்பர் மிகவும் அதிர்ஷ்டசாலியாகவே இருந்தார். கடுமையான மனஅழுத்தம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள அவரது தந்தை வன்முறையுடன் செயல்பட்டு தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளத் தொடங்கினார். தூங்குவதை நிறுத்தி விட்ட அவர் இருந்த இடத்திலேயே தன்னையறியாது மலம் கழித்தார். இணையவழியில் என் நண்பருக்கு உதவ முயன்ற அவருடைய மனநல மருத்துவரின் கணவர் அந்த சமயத்தில் கோவிட்-19ஆல் இறந்து போனார். அதனால் அந்த மருத்துவராலும் தொடர்ந்து ஆலோசனைகளை வழங்க முடியவில்லை. எனது நண்பரின் தந்தை கட்டாயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறார் என்று ஆலோசனை வழங்கிய அந்த மருத்துவர்,  ஆனால் கோவிட்-19 தொற்றுடன் இருப்பதாக கண்டறியப்பட்டிருப்பதால் அதற்கான வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தார். எனவே ஒவ்வொரு நாள் இரவும் எனது நண்பர் தொடர்ந்து விழித்திருந்து தன்னுடைய தந்தையைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவரைப் படுக்க வைத்து, ஒத்தடம் கொடுத்து உடலைச் சுத்தம் செய்து வந்தார். நண்பருடன் பேசிய ஒவ்வொரு முறையும் எனக்கு மூச்சுத் திணறுவதை நான் உணர்ந்தேன். ‘தந்தை இறந்துவிட்டார்’ என்ற செய்தி இறுதியாக நண்பரிடமிருந்து வந்து சேர்ந்தது. உண்மையில் அவரது தந்தை கோவிட்-19 தொற்றால் இறக்கவில்லை. எந்த உதவியுமற்று இருந்ததால் தூண்டப்பட்டிருந்த மனநல அழுத்தத்தால் ரத்த அழுத்தம் மிக அதிக அளவிலே அதிகரித்ததாலேயே அவர் உயிரிழந்தார்.     

நண்பரின் தந்தையின் உடலை இப்போது என்ன செய்வது? எனக்குத் தெரிந்த அனைவரையும் அழைத்த வேளையில் பிரபல சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தருடன் பணிபுரிந்து வருகின்ற அனிர்பன் பட்டாச்சார்யா பதிலளித்தார். 2016ஆம் ஆண்டு தனது பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த போராட்டத்தை ஏற்பாடு செய்ய உதவியதற்காக தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பட்டாச்சார்யா விசாரணையை எதிர்கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு ஏற்பட்ட கோவிட்-19இன் மோசமான தாக்குதலிலிருந்து முழுமையாக மீளாத மந்தர் 2019 டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட, முஸ்லீம்களுக்கு எதிராக அப்பட்டமான பாகுபாடு காட்டுவதாக இருந்த குடியுரிமை சட்டத் திருத்தம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவு (என்ஆர்சி) ஆகியவற்றிற்கு எதிராக மக்களை அணிதிரட்டிய போது  கைது செய்யப்பட்டார். மேலும் தான் நடத்தி வருகின்ற அனாதை இல்லங்களின் மூடல் போன்ற அச்சுறுத்தலுக்கு அவர் உள்ளாகியுள்ளார். அனைத்து வகையான அரசு நிர்வாகமும் சீர்குலைந்துள்ள நிலையில் மந்தர், பட்டாச்சார்யா ஆகியோர் மற்றும் பலரைப் போல ஹெல்ப்லைன், அவசரகால தொலைபேசி அழைப்புகளை ஏற்பது, ஆம்புலன்ஸ்களை ஒழுங்குபடுத்துதல், இறுதிச் சடங்குகளை ஒருங்கிணைத்தல், இறந்த உடல்களைக் கொண்டு செல்வது போன்ற செயல்பாடுகளுக்குள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். இந்த தன்னார்வலர்கள் செய்து கொண்டிருக்கும் வேலை அவர்களுக்கு பாதுகாப்பானது அல்ல.


தொற்றுநோயின் இந்த அலையில் வீழ்கின்ற இளைஞர்கள் மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகளை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த இளைஞர்கள் இறந்து போகும் வேளையில் நம்மிடையே இருக்கின்ற வயதானவர்கள் வாழ்வதற்கான விருப்பத்தை சற்றே இழந்து கொண்டிருக்கிறார்கள். எனது நண்பரின் தந்தை தகனம் செய்யப்பட்டார். நண்பரும் அவரது தாயாரும் குணமடைந்து வருகின்றனர்.

§

இறுதியில் இந்த விஷயங்களுக்கு விடிவு வரும். நிச்சயமாக அவை முடிவிற்கு வரும். ஆனால் அந்த நாளில் நம்மில் யார் பிழைத்திருக்கப் போகிறோம் என்று நமக்குத் தெரியாது. பணக்காரர்களால் எளிதாக மூச்சு விட முடியும். ஆனால் ஏழைகளால் அது முடியாது. இப்போதைக்கு நோய்வாய்ப்பட்ட, இறந்து போகும் நபர்களிடையில் நமது ஜனநாயகத்தின் எச்சம் சற்றே மிஞ்சியிருக்கின்றது. பணக்காரர்களும் பாரபட்சமில்லாமல் இந்த நோயால் வீழ்த்தப்பட்டுள்ளனர். மருத்துவமனைகள் ஆக்சிஜனைக் கேட்டு கெஞ்சிக் கொண்டிருக்கின்றன. சில மருத்துவமனைகள் நீங்களே உங்களுக்கான  ஆக்சிஜனை கொண்டு வாருங்கள் எனற திட்டத்தை தொடங்கியுள்ளன. ஏற்பட்டிருக்கும் ஆக்சிஜன் நெருக்கடி குறித்த குற்றச்சாட்டிலிருந்து தங்களைத் திசைதிருப்பிக் கொள்ள அரசியல் கட்சிகள் முயன்று கொண்டிருக்கின்றன. இந்த ஆக்சிஜன் நெருக்கடி மாநிலங்களுக்கிடையில் தீவிரமான, அசாதாரணமான சண்டைகளுக்கு வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது.  

ஏப்ரல் 22 அன்று இரவு தில்லியின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனைகளில் ஒன்றான சர் கங்கா ராம் மருத்துவமனையில் அதிக ஓட்டத்துடன் ஆக்சிஜனைப் பெற்றுக் கொண்டு மிகவும் மோசமான நிலையில் இருந்த இருபத்தைந்து கொரோனா வைரஸ் நோயாளிகள் இறந்து போயினர். அந்த மருத்துவமனை தனக்குத் தேவையான ஆக்சிஜனைப் பெற்றுக் கொள்வதற்காக அவசர உதவி கேட்டு பலமுறை அனுப்பிய தகவல்கள் கேட்பாரற்றுப் போயின. ‘ஆக்சிஜன் உதவி இல்லாததால் அவர்கள் இறந்து விட்டார்கள் என்று எங்களால் கூற முடியாது’ என்ற அறிக்கையுடன் அந்த மருத்துவமனை வாரியத்தின் தலைவர் அங்கே இறப்புகள் ஏற்பட்ட ஒரு நாள் கழித்து அதனைத் தெளிவுபடுத்த விரைந்தார். ஏப்ரல் 24 அன்று தில்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் என்ற மற்றுமொரு பெரிய மருத்துவமனையில் ஆக்சிஜன் விநியோகம் பாதிக்கப்பட்டு இருபத்தைந்து நோயாளிகள் இறந்து போயினர். அதே நாளில் தில்லி உயர்நீதிமன்றத்தில் இந்திய தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா ‘அழுகின்ற குழந்தையாக இருந்து கொண்டிருக்காமல் நாம் முயற்சிகளை மேற்கொள்வோம். ஆக்சிஜன் கிடைக்காமல் இதுவரையிலும் எவரொருவரும் நமது நாட்டில் இறந்து போகவில்லை என்ற நிலைமையை நாங்கள் உறுதி செய்திருக்கிறோம்’ என்று இந்திய அரசாங்கத்தின் சார்பாகக் கூறியிருந்தார்.      


யோகி ஆதித்யநாத் என்ற பெயரில் இருக்கின்ற உத்தரபிரதேசத்தின் காவி முதலமைச்சரான அஜய் மோகன் பிஷ்ட் தனது மாநிலத்தில் உள்ள எந்தவொரு மருத்துவமனையிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றும், வதந்திகளைப் பரப்புபவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பிணையின்றி கைது செய்யப்படுவார்கள் என்றும், அவர்களுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

யோகி ஆதித்யநாத் எதையும் விளையாட்டாகச் சொல்வதில்லை. ஹத்ராஸ் மாவட்டத்தில் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட தலித் சிறுமி குறித்து தகவல்களைப் பெறுவதற்காகச் கேரளாவைச் சேர்ந்த சித்திக் கப்பன் என்ற முஸ்லீம் பத்திரிகையாளரும், மற்ற இருவரும் உத்தரப்பிரதேசத்திற்குச் சென்றிருந்தனர். மாநில அரசால் கைது செய்யப்பட்டு அவர்கள் பல மாதங்களுக்குச் சிறையிலே அடைக்கப்பட்டனர். மதுராவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள படுக்கையுடன் ‘ஒரு மிருகத்தைப் போல’ தனது கணவர் சங்கிலியால் பிணைக்கப்பட்டுக் கிடப்பதாக இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அளித்த மனுவில் அவரது மனைவி தெரிவித்திருந்தார் (உத்தரப்பிரதேச அரசு தில்லியில் உள்ள மருத்துவமனைக்கு அவரை மாற்ற வேண்டுமென்று உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டது). எனவே நீங்கள் உத்தரப்பிரதேசத்தில் வசிப்பவர் என்றால் ‘தயவுசெய்து புகார் எதுவும் கொடுக்காமல் இறந்து போய் உங்களுக்கான உதவியை நீங்களே செய்து கொள்ளுங்கள்’ என்பதே உங்களுக்கான செய்தியாக இருக்கும்.   


புகார் அளிப்பவர்களுக்கு விடப்படுகின்ற இதுபோன்ற அச்சுறுத்தல்கள் உத்தரப்பிரதேசத்திற்கு மட்டுமே சொந்தமானவை அல்ல. மோடியும் அவரது பல அமைச்சர்களும் உறுப்பினர்களாக இருக்கின்ற, தனக்கென்று சொந்தமாக ஆயுதமேந்திய தொண்டர்களை வைத்திருக்கின்ற பாசிச ஹிந்து தேசியவாத அமைப்பான ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) செய்தித் தொடர்பாளர் இந்தியாவிற்கு எதிரான சக்திகள் ‘எதிர்மறை’, ‘அவநம்பிக்கை’ ஆகியவற்றை வளர்ப்பதற்கான எரிபொருளாக இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக் கொள்ளும் என்று எச்சரித்துள்ளார். மேலும் நேர்மறையான சூழ்நிலையை வளர்த்திட உதவுமாறு ஊடகங்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அரசாங்கத்தை விமர்சனம் செய்கின்ற ட்விட்டர் கணக்குகளைச் செயலிழக்கச் செய்வதன் மூலம் ட்விட்டர் நிர்வாகம் அவர்களுக்கு உதவியுள்ளது.  

நமக்கான ஆறுதலை எங்கே நாம் தேடுவது? அறிவியலிடமா? எத்தனை பேர் இறந்தனர்? எத்தனை பேர் குணமடைந்துள்ளனர்? எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்? நோய்த் தொற்றின் உச்சம் எப்போது வரும்? இதுபோன்ற எண்களுடன் நெருக்கமாக இருந்தா? புதிய நோயாளிகள் 323,144 பேர், இறப்புகள் 2,771 என்ற நிலைமை ஏப்ரல் 27 அன்று ஏற்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கை எப்படி தெரிய வந்தது என்பதைத் தெரிந்து கொள்வதைத் தவிர்த்து விட்டால் அதன் துல்லியம் ஓரளவு நம்பிக்கை அளிக்கும். தில்லியில்கூட பரிசோதனைகளை நடத்துவது மிகவும் கடினமாக உள்ளது. சிறிய நகரங்கள் மற்றும் நகரங்களில் உள்ள கல்லறைகள், தகன மைதானங்களில் கோவிட்-19 நெறிமுறைகளின்படி நடக்கின்ற இறுதிச்சடங்குகளின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட முப்பது மடங்கு அதிகமாக இறப்பு இருப்பதைக் குறிக்கிறது. அது எப்படி என்பதை பெருநகரங்களுக்கு வெளியே பணிபுரிகின்ற மருத்துவர்கள் உங்களுக்குச் சொல்லக் கூடும்.    

இந்த அளவிற்கு தில்லியே சீர்குலைந்திருக்கிறது என்றால், பீகாரில், உத்தரப்பிரதேசத்தில், மத்தியப்பிரதேசத்தில் உள்ள கிராமங்களில் என்ன நடக்கிறது என்பதை எந்த அளவிற்கு நாம் கற்பனை செய்து கொள்வது? 2020ஆம் ஆண்டு மோடியால் அறிவிக்கப்பட்ட தேசிய பொதுமுடக்கத்தால் அதிர்ச்சியடைந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நகரங்களில் இருந்து வைரஸைச் சுமந்துகொண்டு தங்கள் வீடுகளில் இருக்கும் குடும்பத்தை நோக்கிச் சென்றார்கள். அது நான்கு மணிநேர இடைவெளியில் அறிவிக்கப்பட்ட உலகின் மிகக் கடுமையான பொதுமுடக்கமாக இருந்தது. புலம் பெயர்ந்து சென்றிருந்த தொழிலாளர்களை வேலை, வாடகை செலுத்துவதற்கான பணம், உணவு, போக்குவரத்து என்று எதுவும் இல்லாத நகரங்களுக்குள் அது சிக்கித் தவிக்க வைத்தது. நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள கிராமங்களில் உள்ள தங்கள் வீடுகளுக்கு பலரும் நடந்தே செல்ல வேண்டியிருந்தது. செல்லும் வழியில் நூற்றுக்கணக்கானோர் இறந்தும் போயினர்.   


இப்போது தேசிய அளவிலான பொதுமுடக்கம் அறிவிக்கப்படவில்லை என்றாலும், ரயில்களும் பேருந்துகளும் இயங்கி போக்குவரத்து வசதி கிடைத்துக் கொண்டிருக்கும்போதே தொழிலாளர்கள் வெளியேறத் துவங்கி விட்டனர். பிரமாண்டமான நாட்டின் பொருளாதார இயந்திரத்தை உருவாக்கியிருந்தாலும், நெருக்கடி என்ற ஒன்று வரும்போது தங்களை ஒருபோதும் ​​இந்த அரசு நிர்வாகம் கண்டு கொள்வதிக்ல்லை என்பதை நன்கு அறிந்திருக்கும் இந்த தொழிலாளர்கள் இந்த முறை உடனடியாக வெளியேறி விட்டார்கள். இந்த ஆண்டு நடைபெற்றிருக்கும் வெளியேற்றம் சற்று மாறுபட்ட குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தங்கள் கிராமத்து வீடுகளுக்குள் நுழைவதற்கு முன்பு இந்த தொழிலாளர்கள் தங்கிக் கொள்வதற்கான தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் என்று எதுவும் இப்போது ஏற்படுத்தித் தரப்படவில்லை. நகரத்திலிருந்து வருகின்ற வைரஸிடமிருந்து கிராமப்புறங்களைப் பாதுகாக்க முயற்சிக்க வேண்டும் என்ற அற்ப பாசாங்கு கூட இப்போது அரசிடம் இருக்கவில்லை.

இந்தக் கிராமங்கள் அனைத்தும் வயிற்றுப்போக்கு, காசநோய் போன்று எளிதில் சிகிச்சையளிக்கக்கூடிய நோய்களால் இறந்து போகின்ற மக்களைக் கொண்டவை. பெரும்தொற்றான கோவிட்-19ஐ எவ்வாறு அவற்றால் சமாளிக்க முடியும்? கோவிட்-19க்கான பரிசோதனைகள் அவர்களுக்கு அங்கே கிடைக்குமா? கிராமங்களில் மருத்துவமனைகள் உள்ளனவா? ஆக்சிஜன் இருக்கிறதா? அதை விட அன்பு இருக்கிறதா? அன்பைக்கூட மறந்து விடுங்கள். அக்கறையாவது இருக்கிறதா? இல்லை. ஏனென்றால் இந்தியாவிற்கான பொதுவான இதயம் இருக்க வேண்டிய இடத்தில் கடுமையான அலட்சியத்தால் நிரப்பப்பட்ட இதய வடிவிலான துளை மட்டுமே இப்போது இருந்து கொண்டிருக்கிறது.    

§


இன்று அதிகாலை - ஏப்ரல் 28 அன்று எங்களுடைய நண்பர் பிரபுபாய் இறந்து விட்டார் என்ற செய்தி வந்தது. இறப்பதற்கு முன் அவரிடம் கோவிட்-19க்கான அறிகுறிகள் இருந்தது என்றாலும் பரிசோதனை அல்லது சிகிச்சை எதுவும் இல்லாமல் வீட்டிலேயே அவர் இறந்து போனதால், அவருடைய மரணம் நிச்சயம் அதிகாரப்பூர்வ கோவிட்-19 எண்ணிக்கையில் பதிவு செய்யப்படாது. நர்மதா பள்ளத்தாக்கில் அணை கட்டுவதை எதிர்த்து நடைபெற்ற எதிர்ப்பு இயக்கத்தில் மிகவும் உறுதியானவராக பிரபுபாய் இருந்து வந்தார். பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே அணை கட்டுபவர்கள் மற்றும் அதிகாரிகளின் குடியிருப்பிற்கான இடத்திற்காக தங்கள் நிலங்களை விட்டு தூக்கி எறியப்பட்ட உள்ளூர் பழங்குடி மக்களின் சொந்த ஊரான கெவாடியாவில் உள்ள அவருடைய வீட்டில் நான் பலமுறை தங்கியிருக்கிறேன். பிரபுபாய் போன்று குடிபெயர்க்கப்பட்டு இடம்பெயர்ந்த குடும்பங்கள் அந்த குடியிருப்பின் ஓரங்களில் வறியவர்களாக, நிலைகுலைந்து போனவர்களாக, ஒரு காலத்தில் தங்களுடைய நிலமாக இருந்த இடத்தில் அத்துமீறி தங்கியிருப்பவர்களாக இன்னமும் வசித்து வருகின்றனர்.  

கெவாடியாவில் மருத்துவமனை எதுவும் இல்லை. சுதந்திர போராட்ட வீரரும் இந்தியாவின் முதல் துணைப் பிரதமருமான சர்தார் வல்லபாய் பட்டேலின் தோற்றத்தில் கட்டப்பட்ட ஒற்றுமைக்கான சிலை மட்டுமே அங்கே உள்ளது. 182 மீட்டர் உயரத்தில் உலகின் மிக உயரமான சிலையாக இருக்கின்ற அதற்கு 42.2 கோடி டாலர் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. சர்தார் பட்டேல் சிலையின் மார்பு மட்டத்திலிருந்து நர்மதா அணையைப் பார்வையிடுவதற்காக அதிவேக லிஃப்ட் சுற்றுலாப் பயணிகளை கீழிருந்து அழைத்துச் செல்கிறது. முழுமையாக அழிக்கப்பட்டு அந்தப் பரந்த நீர்த்தேக்கத்தின் ஆழத்திற்குள் மூழ்கியிருக்கின்ற நதிப் பள்ளத்தாக்கு நாகரிகத்தை நிச்சயமாக உங்களால் பட்டேல் சிலையின் மார்பளவு உயரத்திலிருந்து காண முடியாது. அதுவரையிலும் உலகம் அறிந்திராத மிக நேர்த்தியான, அளவிட முடியாத போராட்டங்களில் ஒன்றை நடத்திய மக்களின் கதைகளை அங்கிருந்து உங்களால் கேட்க முடியாது. அந்தப் போராட்டம் ஒரு அணைக்கு எதிராக நடத்தப்பட்டதாக மட்டும் இருக்காமல் நாகரிகம், செழுமை, முன்னேற்றம் ஆகியவற்றால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் கருத்துக்களுக்கு எதிரானதாகவும் இருந்தது. அந்த சிலை மோடிக்கு மிகவும் பிடித்தமான திட்டமாக இருந்தது. 2018 அக்டோபரில் அவர் அதைத் திறந்து வைத்தார்.


பிரபுபாய் பற்றிய செய்தியை அனுப்பிய நண்பர் நர்மதா பள்ளத்தாக்கில் அணை எதிர்ப்பு ஆர்வலராக பல ஆண்டுகளைக் கழித்தவர். ‘இதை எழுதுகையில் என்னுடைய கைகள் நடுங்குகின்றன. கெவாடியா குடியிருப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிகவும் மோசமான நிலைமை நிலவுகிறது’ என்று அவர் எழுதியிருந்தார்.

அகமதாபாத்தில் 2020 பிப்ரவரியில் மோடி அளித்த ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்விற்குச் செல்லும் வழியில் டொனால்ட் ட்ரம்பின் கண்களிலிருந்து சேரிகளை மறைப்பதற்காகக் கட்டப்பட்ட சுவரைப் போன்றவையாகவே கோவிட்-19 குறித்த இந்தியாவின் வரைபடத்தை உருவாக்கித் தருகின்ற துல்லியமான எண்கள் இருக்கின்றன. இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று கருதப்படுகின்றதோ அப்படியான இந்தியாவாக இந்தியாவைப் பற்றிய படத்தை உங்களுக்கு தருவதாக அந்த எண்கள் இருக்கின்றனவே தவிர நிச்சயமாக அவை இன்றைக்கு இருந்து கொண்டிருக்கின்ற இந்தியா குறித்ததாக இருக்கவில்லை. ஹிந்துக்களாக வாக்களிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிற இந்தியாவில் மக்கள் கழித்துக் கட்டப்பட்டவர்களாகவே இறக்க வேண்டியுள்ளது.   

‘அழுகின்ற குழந்தையாக இருந்து கொண்டிருக்காமல் முயற்சிகளை மேற்கொள்வோம்’.


ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் 2020 ஏப்ரல் மாதத்திலேயே தெரிய ஆரம்பித்தது. அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட குழுவும் பின்னர் நவம்பர் மாதம் அதைத் தெரிவித்திருந்தது என்ற உண்மை மீது நீங்கள் கவனம் செலுத்திட முயற்சி செய்யாதீர்கள். தில்லியின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் கூட ஆக்சிஜனை உருவாக்கும் ஆலைகள் ஏன் அமைக்கப்படவில்லை என்று நீங்கள் ஆச்சரியப்படக் கூடாது. முழுமையாக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்ற பிரதமர் தேசிய நிவாரண நிதி என்ற அமைப்பு அண்மையில் அரசின்  பணம், உள்கட்டமைப்பைப் பயன்படுத்துகின்ற ஆனால் பொறுப்புணர்வு எதையும் ஏற்றுக் கொள்ளாமல் தனியார் அறக்கட்டளை போன்ற செயல்பாடுகளைச் செய்து வருகின்ற சந்தேகத்திற்கிடமான பி.எம்.கேர்ஸ் என்ற அமைப்பாக மாற்றியமைக்கப்பட்டது.  இப்போது திடீரென்று ஆக்சிஜன் நெருக்கடியைத் தீர்க்க வேண்டும் என்பதை நோக்கி பி.எம்.கேர்ஸ் நிதி ஏன் நகர்ந்திருக்கிறது என்று நீங்கள் ஆச்சரியப்படக் கூடாது. நமக்கான காற்று விநியோகத்தில் மோடிக்கென்று ஏதாவது பங்கு இருக்குமா?    

‘அழுகின்ற குழந்தையாக இருந்து கொண்டிருக்காமல் முயற்சிகளை மேற்கொள்வோம்’.


§

இன்னும் பல முக்கிய பிரச்சனைகள் மோடி அரசாங்கம் கவனத்தில் கொள்ள  வேண்டியவையாக இருந்தன என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜனநாயகத்திற்கான கடைசி இடங்களை அழித்தொழிப்பது, ஹிந்துக்கள் அல்லாத சிறுபான்மையினரைத் துன்புறுத்துவது, ஹிந்து தேசத்திற்கான அஸ்திவாரங்களைப் பலப்படுத்துவது என்ற தொடர் திட்டம் அவர்களிடம் இருந்து வருகின்றது. எடுத்துக்காட்டாக பல தலைமுறைகளாக அசாமில் வாழ்ந்து வந்த இருபது லட்சம் மக்களின் குடியுரிமையை திடீரெனப் பறித்து அவர்களை அடைத்து வைப்பதற்கான மிகப் பெரிய சிறை வளாகங்களை அவர்கள் அவசரமாகக் கட்ட வேண்டி வந்தது. (சுதந்திரமாக இயங்கி வருகின்ற நமது உச்சநீதிமன்றம் இந்த விஷயத்தில் அரசாங்கத்தின் பக்கம் கடுமையாகவும், வன்முறையாளர்கள் பக்கம் சாதகமாகவும் இறங்கியது).


வடகிழக்கு தில்லியில் தங்கள் சொந்த சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலையில் முதன்மைக் குற்றவாளிகளாக நூற்றுக்கணக்கான மாணவர்களும், ஆர்வலர்களும், முஸ்லீம் இளைஞர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் முஸ்லீமாக நீங்கள் இருப்பீர்கள் என்றால், உங்களைக் கொலை செய்வது ஒரு குற்றமாகும். அதற்கான தண்டனையை உங்களைச் சார்ந்தவர்களே அனுபவிக்கவும் வேண்டும்.  

பாஜகவின் மூத்த அரசியல்வாதிகள் கவனித்துக் கொண்டிருக்க ஹிந்து முரடர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட மசூதிக்குப் பதிலாக அயோத்தியில் புதிய ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. (இந்த விஷயத்தில் சுதந்திரமாக இயங்கி வருகின்ற நமது உச்சநீதிமன்றம் அரசாங்கம் மற்றும் வன்முறையாளர்கள் பக்கம் கடுமையாக இறங்கியது). விவசாயத்தை பெருநிறுவனமயமாக்கிட சர்ச்சைக்குரிய புதிய வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. போராடுவதற்காக வீதிகளுக்கு வந்த லட்சக்கணக்கான விவசாயிகள் தாக்கப்பட்டு அவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டு வீசப்பட்டது.


அடுத்து தன்னுடைய ஆடம்பரத்தை இழந்து கொண்டிருக்கின்ற புதுதில்லியின் ஏகாதிபத்திய மையத்தை  புதிதாக மாற்றியமைப்பதற்காக பல கோடிக்கணக்கிலான பணத்தைச் செலவு செய்யும் திட்டத்தை அவசரமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. புதிய ஹிந்து இந்திய அரசாங்கத்தை அவர்களால் எவ்வாறு பழைய கட்டிடங்களுக்குள் வைத்திருக்க முடியும்? தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு முழுமையான பொதுமுடக்கத்தில் தில்லி இருந்த போது, மிகவும் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்ட ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. தொழிலாளர்கள் அங்கே கொண்டு செல்லப்பட்டார்கள். கூடுதலாக தகனம் செய்யும் இடத்தையும் அந்த திட்டத்தில் சேர்த்து அவர்கள் மாற்றத்தைக் கொண்டு வரலாம்.    


ஒரு சிறிய நகரத்தில் ஒன்றுகூடி அங்கே கங்கையில் குளித்து ஆசிர்வதிக்கப்பட்ட, தூய்மைப்படுத்தப்பட்ட லட்சக்கணக்கான ஹிந்து யாத்ரீகர்கள் நாடு முழுவதும் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் போது தங்களுடன் வைரஸைக் கொண்டு சென்று பரப்புகின்ற வகையில் கும்பமேளா அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. புனித நீராடல் ‘குறியீடாக’ இருக்க வேண்டும் என்று மோடி மெதுவாக அறிவுறுத்தியிருந்தாலும், மிகவும் உற்சாகத்துடன் கும்பமேளா தொடர்ந்தது (‘கொரோனா ஜிஹாதிகள்’ என்று அழைத்து, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்தார்கள் என்ற குற்றத்தைச் சுமத்தி கடந்த ஆண்டு தப்லிகி ஜமாஅத் என்ற இஸ்லாமிய அமைப்பிற்கான மாநாட்டில் கலந்து கொண்டவர்களை நடத்தியதைப் போன்று ஊடகங்கள் இப்போது கும்பமேளாவில் கலந்து கொண்டவர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை நடத்திடவில்லை). ஒரு சதித்திட்டத்தின் நடுவில் மியான்மரில் இனப்படுகொலை நடத்திய ஆட்சியிடமிருந்து தப்பி வந்த இடத்திற்கே மீண்டும் அவசரமாக நாடு கடத்தப்பட வேண்டியிருந்த சில ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகளும் இந்தியாவில் இருந்தனர். (இந்த விஷயம் குறித்து மனு தாக்கல் செய்யப்பட்ட போது, சுதந்திரமாக இயங்கி வருகின்ற நமது உச்சநீதிமன்றம் மீண்டும் அரசாங்கத்தின் பார்வையுடன் ஒத்துப் போனது).  


ஆக நீங்கள் இந்த அரசாங்கம் பிஸியாக, மிக பிஸியாக, மிக மிக பிஸியாக இருக்கிறது என்று சொல்லக் கூடும். இதுபோன்ற அவசர நடவடிக்கைகள் அனைத்திற்கும் மேலாக மேற்குவங்க மாநிலத்தில் நடைபெறுகின்ற தேர்தலையும் அவர்கள் வெல்ல வேண்டியிருந்தது. தங்களுடைய கட்சியின் கொலைகாரப் பிரச்சாரத்தை மேற்கொள்ளவும், ஒவ்வொரு சிறிய நகரத்திலும், கிராமத்திலும் மனிதர்களுக்கு எதிராக மனிதர்களைத் தூண்டி விடவும் நமது உள்துறை அமைச்சரும், மோடியின் மனிதருமான அமித் ஷா தனது அமைச்சரவைக் கடமைகள் அனைத்தையும் அனேகமாக கைவிட்டுவிட்டு வங்கத்தின் மீது தொடர்ந்து பல மாதங்களாக கவனம் செலுத்த வேண்டியிருந்தது.


மேற்கு வங்கம் என்பது புவியியல் ரீதியாக சிறிய மாநிலம் என்பதால் அங்கே தேர்தலை ஒரே நாளில் நடத்தி  முடிந்திருக்கலாம். கடந்த காலங்களில் அவ்வாறு நடந்திருக்கின்றது. ஆனாலும் அந்த மாநிலம் தங்களுக்கு புதிய பிரதேசமாக இருப்பதால் வங்கத்தில் இல்லாத தனது கட்சி தனது உறுப்பினர்களை ஒரு தொகுதியிலிருந்து மற்றொரு தொகுதிக்கு மாற்றி வாக்குப் பதிவைக் கண்காணிப்பதற்கான கால அவகாசம் பாஜகவிற்கு தேவைப்பட்டது. எனவே தேர்தல் அட்டவணை ஒரு மாத காலத்தில் எட்டு கட்டங்களாகப் பிரித்து தயாரிக்கப்பட்டது.


ஏப்ரல் 29 அன்று கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்ததால், தேர்தல் அட்டவணையை மறுபரிசீலனை செய்யுமாறு மற்ற அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் மன்றாடின. அவர்களுடைய வேண்டுகோளை மறுத்த தேர்தல் ஆணையம் பாஜக தரப்பிற்கு மிகவும் ஆதரவாக இருந்ததால் தேர்தல் பிரச்சாரம் தொடர்ந்தது. வெற்றிக் களிப்புடன் முகக்கவசம் எதுவும் அணியாமல் இருந்த பாஜகவின் நட்சத்திர பிரச்சாரகரான பிரதமர் முகக்கவசம் அணிந்திராத கூட்டத்தினருடன் பேசியபோது இதற்கு முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் கூடியிருந்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வீடியோக்களை யார்தான் பார்த்திருக்க மாட்டார்கள்? ஏப்ரல் 17 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தினசரி தொற்றுநோய் பாதிப்பின் எண்ணிக்கை ஏற்கனவே இரண்டு லட்சத்திற்கும் கூடுதலாக அதிகரித்திருந்தது.

இப்போது ​​வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில் புதிதாக ​​‘வங்கப் பிறழ்வு’ என்று அழைக்கப்படப் போகின்ற புதிய மூன்று பிறழ்வு வைரஸுடன் வங்காளம் புதிய கொரோனா கொப்பரையாக மாறுவதற்குத் தயாராக உள்ளது.  மாநிலத் தலைநகரான கொல்கத்தாவில் பரிசோதனைக்குள்ளாகின்ற ஒவ்வொரு இரண்டாவது நபரும் பாதிக்கப்பட்டவர்களாக கோவிட் பரிசோதனையில் தெரிஅ வருவதாக செய்தித்தாள்களில் வெளியாகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன. வங்கத் தேர்தலில் வென்றால் இலவசத் தடுப்பூசிகள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வோம் என்று பாஜக அறிவித்துள்ளது. ஒருவேளை அது அவ்வாறு வெல்ல முடியவில்லையென்றால்…?  

‘அழுகின்ற குழந்தையாக இருந்து கொண்டிருக்காமல் முயற்சிகளை மேற்கொள்வோம்’.

§


தடுப்பூசிகளைப் பற்றி என்ன சொல்ல? அவை நிச்சயமாக நம்மைக் காப்பாற்றுமா? இந்தியா தடுப்பூசி அதிகார மையமாக இருக்கிறதில்லையா? உண்மையில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII), பாரத் பயோடெக் என்று இரண்டு தடுப்பூசி உற்பத்தியாளர்களை மட்டுமே இந்திய அரசாங்கம் முற்றிலுமாகச் சார்ந்துள்ளது. அந்த இரண்டு நிறுவனங்களும் உலகின் மிகவும் விலையுயர்ந்த இரண்டு தடுப்பூசிகளை உலகின் ஏழ்மையான மக்களுக்குத் தர அனுமதிக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளுக்கு சற்று உயர்ந்த விலையிலும், மாநில அரசுகளுக்கு சற்றே குறைந்த விலையிலும் தடுப்பூசியை விற்பனை செய்யப் போவதாக அந்த நிறுவனங்கள் இந்த வாரம் அறிவித்துள்ளன. இந்த தடுப்பூசி நிறுவனங்கள் மிக அதிகமான லாபத்தை ஈட்டப் போவதை மிகச் சாதாரண கணக்கீடுகளே காட்டுகின்றன.   

  

மோடியின் தலைமையின் கீழ், இந்தியப் பொருளாதாரம் வெறுமையடைந்து விட்டது. ஏற்கனவே ஆபத்துகள் நிறைந்த வாழ்க்கையை அனுபவித்து வந்திருக்கும் கோடிக்கணக்கான மக்கள் மேலும் மோசமான வறுமைக்குள்ளே தள்ளப்பட்டுள்ளனர். 2005ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது உருவாக்கப்பட்ட தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் (என்.ஆர்.இ.ஜி.ஏ) மூலம் கிடைக்கின்ற அற்ப வருமானத்தைக் கொண்டே மிகப்பெரும் எண்ணிக்கையிலான மக்கள் உயிர் வாழ்ந்து வருகின்றனர். தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக தங்களுடைய மாத வருமானத்தின் பெரும்பகுதியை பட்டினியின் விளிம்பில் இருக்கின்ற இத்தகைய குடும்பங்கள் செலவழிக்கும் என்று நிச்சயமாக எதிர்பார்க்க முடியாது. தடுப்பூசிகள் இலவசம், அடிப்படை உரிமை என்றிருக்கிற இங்கிலாந்தில் தங்களுடைய முறை வருவதற்கு முன்பாக தடுப்பூசி போட முயற்சிப்பவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து தண்டிக்கப்படலாம் என்ற நிலைமை இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தடுப்பூசி பிரச்சாரத்தின் முக்கிய உந்துதல் பெருநிறுவன லாபம் என்பதாக மட்டுமே இருப்பதாகத் தோன்றுகிறது.  

இந்த பெரும் பேரழிவு குறித்து மோடியுடன் பின்னிப் பிணைந்திருக்கின்ற நமது இந்திய தொலைக்காட்சி சேனல்களில் செய்திகள் வெளிவரும் போது அவையனைத்தும் ஒரே குரலில் பேசுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். அவை மீண்டும் மீண்டும் ‘அமைப்பு’ சரிந்து விட்டது, இந்த வைரஸ் இந்திய சுகாதாரப் பாதுகாப்பு ‘அமைப்பை’ மூழ்கடித்து விட்டது என்றே சொல்லி வருகின்றன.  

ஆனால் உண்மையில் இந்த அமைப்பு சரிந்து விடவில்லை. இங்கே ‘அமைப்பு’ என்ற ஒன்றே மிகவும் அரிதாக இருக்கிறது. ஏற்கனவே இருந்து வந்த சிறிய மருத்துவ உள்கட்டமைப்பை இந்த அரசாங்கமும், இதற்கு முந்தைய காங்கிரஸ் அரசாங்கமும் வேண்டுமென்றே அகற்றியுள்ளன. ஏறக்குறைய இல்லாததாகவே இருக்கின்ற பொது சுகாதார அமைப்பைக் கொண்டதொரு நாட்டை தொற்றுநோய் தாக்கும் போது இதுபோன்றுதான் நடக்கும். இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1.25% சுகாதாரத்திற்காகச் செலவிட்டு வருகிறது. இது உலகின் பெரும்பாலான நாடுகளில் இருப்பதை விட மிகமிகக் குறைவானது. ஏழை நாடுகளாகக் கருதப்படுகின்ற நாடுகளில்கூட இந்த தொகை சற்று கூடுதலாகவே இருக்கிறது. சுகாதாரம் தொடர்பான தகுதியைப் பெற்றிராத வேறு முக்கியமான விஷயங்களும் அதற்குள் நுழைக்கப்பட்டிருப்பதால் இவ்வாறு சுகாதாரத்திற்காகச் செலவழிக்கப்படுவதாகச் சொல்லப்படுகின்ற தொகையும்கூட சற்று அதிகரித்துக் கூறப்படுவதாகவே உள்ளது. சுகாதாரம் தொடர்பாக உண்மையாகச் செலவழிக்கப்படும் தொகை 0.34% என்ற அளவில்தான் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மோசமான ஏழை நாட்டிலே நகர்ப்புறங்களில் 78%, கிராமப்புறங்களில் 71% சுகாதார பராமரிப்பு வசதிகள் தனியார் துறையால் இப்போது கையாளப்பட்டு வருவதாக 2016ஆம் ஆண்டு லான்செட் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதில் இருக்கின்ற கூடுதல் சோகம் ஆகும். ஊழலில் பெருத்துள்ள நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள், ஊழல் நிரம்பிய பரிந்துரைகள், காப்பீட்டு நிறுவனங்களின் மோசடிகள் ஆகியவற்றிற்கிடையிலான தொடர்புகள் மூலமாக பொதுத்துறையில் இருக்கின்ற வளங்கள் முறைப்படியாக தனியார் துறைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.  

உடல்நலம் பேணல் என்பது மக்களின் அடிப்படை உரிமையாகும். பட்டினியால் வாடுகின்ற, நோய்வாய்ப்பட்ட, இறந்து கொண்டிருக்கின்ற பணம் இல்லாதவர்களின் தேவைகளை தனியார் துறை ஒருபோதும் நிறைவேற்றித் தரப் போவதில்லை. இந்த நிலையில் இந்தியாவின் சுகாதாரப் பாதுகாப்பை பெருமளவிற்குத் தனியார்மயமாக்குவது மிகப்பெரும் குற்றமாகும்.

உண்மையில் அமைப்பு சரிந்து விடவில்லை. அரசாங்கமே தோல்வியுற்றிருக்கிறது. குற்றவியல் சார்ந்து காட்டப்படுகின்ற அலட்சியத்திற்கு அப்பால் மனிதகுலத்திற்கு எதிராக நடத்தப்படுகின்ற முழுமையான குற்றத்திற்கே நாம் இப்போது சாட்சியாக இருந்து வருகிறோம். ஆகவே அரசாங்கம் தோல்வியுற்றுள்ளது என்று சொல்வதுகூட ஒருவேளை தவறான வார்த்தை பிரயோகமாக இருக்கலாம். வைரஸ் நிபுணர்கள் இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு ஐந்து லட்சத்திற்கும் கூடுதல் என்ற அளவிற்கு அதிகரிக்கும் என்று கணித்துள்ளனர். வரவிருக்கும் மாதங்களில் ஆயிரக்கணக்கானோர் இறந்து விடுவார்கள் என்றும் அவர்கள் கணித்துள்ளனர். பள்ளி வகுப்பறைகளில் எடுக்கப்படும் வருகைப்பதிவேட்டிற்கான அழைப்பைப் போன்று நானும் எனது நண்பர்களும் ஒருவருக்கொருவர் தினந்தோறும் அழைத்துக் கொள்வது என்று ஒப்புக் கொண்டிருக்கிறோம். ஒருவரையொருவர் மீண்டும் பார்த்துக் கொள்ள முடியுமா என்பது தெரியாமல் நாம் நேசிப்பவர்களிடம் கண்ணீருடன் நடுக்கத்துடன் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆரம்பித்ததை முடிக்கும் வரை வாழ்வோமா என்று தெரியாமல், என்னவிதமான திகில், இழிவு நமக்காகக் காத்திருக்கிறது என்பது தெரியாமல் எழுதிக் கொண்டிருக்கிறோம், வேலை செய்து கொண்டிருக்கிறோம். இவையனைத்தும் சேர்ந்து ஏற்படுத்துகின்ற அவமானமே நம்மை உடைந்து போகச் செய்கிறது.    

§


#ModiMustResign என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாகி உள்ளது. மண்டை ஓடுகள் மோடியின் தாடிக்குப் பின்னால் இருந்து வெளிக் காட்டிக் கொண்டிருப்பதாக, மோடி என்ற மீட்பர் சடலங்களின் பேரணியில் பேசிக் கொண்டிருப்பதாக சில மீம்ஸ்கள் மற்றும் படங்கள் காட்டுகின்றன. வாக்குகளை அறுவடை செய்வதற்காக மோடியும் அமித்ஷாவும் கழுகுகளாக அடிவானத்தில் சடலங்களைத் தேடிக் கொண்டிருப்பதாக அவற்றில் சில காட்டுகின்றன. ஆனால் அவை நடந்து கொண்டிருக்கும் கதையின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்கின்றன. மற்றொரு பகுதியாக உணர்வுகளற்றுப் போன, வெறுமை நிறைந்த கண்கள், வறட்டுப் புன்னகையுடனான அந்த மனிதர் கடந்த காலத்து கொடுங்கோலர்கள் பலரையும் போல மற்றவர்களிடம் எளிதில் உணர்ச்சி வசப்படுகின்ற உணர்வுகளைத் தூண்டுபவராக இருக்கிறார். அவரது தொற்று பலரிடமும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. எனவே அதுவே அவரை தனித்தும் தள்ளி வைக்கிறது. அவருக்கான மிகப்பெரிய வாக்கு தளத்தைக் கொண்டிருக்கின்ற வட இந்தியா வெறும் எண்ணிக்கையின் அளவால் நாட்டின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிப்பதாக இருக்கிறது. அவர் ஏற்படுத்துகின்ற வலி விசித்திரமான மகிழ்ச்சியாக மாறுவதாக இருக்கிறது.

‘தங்களால் ஒடுக்கப்படுபவர்களின் சகிப்புத்தன்மையாலேயே கொடுங்கோலர்களுக்கான எல்லைகள் நிர்ணயிக்கப்படுகின்றன’ என்று ஃபிரெட்ரிக் டக்ளஸ் இதை மிகச் சரியாகச் சொல்லியுள்ளார். எதையும் தாங்கிக் கொள்ளும் திறன் இந்தியாவில் அதிகம் இருப்பதாக நாம் பெருமை கொள்கிறோம். தியானம் செய்வதற்கும், நமக்குள்ளாகத் திரும்பிக் கொள்ளவும், கோபத்தை விரட்டுவதற்கும், சமத்துவமாக இருக்க இயலாமையை நியாயப்படுத்துவதற்கும் எந்த அளவிற்கு அழகாக நம்மை நாமே பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறோம். நமக்கு இழைக்கப்படுகின்ற அவமானத்தை எந்த அளவிற்கு மிகவும் சாந்தமாக நாம் ஏற்றுக் கொள்கிறோம்.    


2001ஆம் ஆண்டு குஜராத்தின் புதிய முதல்வராக அரசியலில் அறிமுகமான மோடி ​​2002 குஜராத் படுகொலை நடத்தப்பட்ட பின்னர் தனக்கான இடத்தை வெளிப்படையாக உறுதிப்படுத்திக் கொண்டார். வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு ரயிலில் உயிருடன் எரிக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட ஹிந்து யாத்ரீகர்களுக்காக பழிவாங்குகின்ற வகையில் ஒரு சில நாட்களிலே ஹிந்து கலவரக் கும்பல்கள் வெறுமனே நின்று பார்த்துக் கொண்டிருந்த குஜராத் காவல்துறையினர் முன்னிலையில் - சில சமயங்களில் அவர்களின் உதவியுடன் - கொலை, பாலியல் பலாத்காரம் செய்து ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை எரித்தனர். நடத்தப்பட்ட வன்முறைகள் தணிந்தவுடன், தனது கட்சியால் முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த மோடி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அழைப்பை முன்கூட்டியே விடுத்தார். ஹிந்து இதயங்களின் பேரரசர் (ஹிந்து ஹிருதே சாம்ராட்) என்று அவரைச் சித்தரித்த தேர்தல் பிரச்சாரம் மகத்தான வெற்றியை அவருக்குப் பெற்றுத் தந்தது. அதற்குப் பிறகு ஒரு தேர்தலில்கூட மோடி தோல்வியடையவில்லை. 


கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து, பாறைகளின் மீது குழந்தைகளின் தலைகளை அடித்து நொறுக்கி மக்களை தாங்கள் எவ்வாறெல்லாம்  கொன்றோம்  என்பதை குஜராத் படுகொலையில் ஈடுபட்ட பல கொலையாளிகள் பெருமையுடன் கூறியதை ஆஷிஷ் கேத்தன் என்ற பத்திரிகையாளர் பின்னர் கேமராவில் படம் பிடித்தார். அவர்கள் மோடி தங்களுடைய முதலமைச்சராக இருந்ததால் தாங்கள் செய்ததை மட்டுமே அப்போது தங்களால் செய்திருக்க முடியும் என்று கூறினர். அந்த ஒளிப்பதிவுகள் தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. மோடி அதிகாரத்தில் இருந்த போதே, கேத்தனின் ஆவணங்கள் நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்பட்டன. தடயவியல் ரீதியாக ஆய்வு செய்யப்பட்டன. பல சந்தர்ப்பங்களில் கேத்தன் நேரடியாகச் சாட்சியமளித்தார். காலப்போக்கில் கொலையாளிகள் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர், ஆனாலும் அவர்களில் பலர் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.


கேத்தன் ‘மறைமுக விசாரணை: ஹிந்துத்துவா இருளில் என்னுடைய பயணம்’ என்ற தன்னுடைய சமீபத்திய புத்தகத்தில் குஜராத் காவல்துறை, நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள், விசாரணைக் குழுக்கள் என்று அனைத்தும் மோடி முதலமைச்சராக இருந்த காலத்தில் ஒன்றிணைந்து சாட்சியங்களைக் கலைக்கவும், சாட்சிகளை மிரட்டவும், நீதிபதிகளை மாற்றவும் எவ்வாறு ஒன்றிணைந்து இயங்கின என்பதை விரிவாக விவரித்திருக்கிறார்.  

இவற்றையெல்லாம் முழுமையாக அறிந்திருந்த போதிலும், இந்தியாவின் பொது அறிவுஜீவிகள் என்று அழைக்கப்படுபவர்களில் பலர், முக்கிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் அவர்களிடமிருக்கின்ற ஊடக நிறுவனங்கள் மோடி பிரதமராவதற்கு வழி வகுக்கும் வகையில் கடுமையாக உழைத்தனர். தொடர்ந்து விமர்சனத்தை முன்வைத்து வந்த எங்களைப் போன்றவர்களை அவர்கள் அவமானப்படுத்தினர். ‘தொடர்ந்து முன்னேறு’ என்பதே அவர்களின் தாரக மந்திரமாக இருந்தது. இன்றும்கூட அவர்கள் மோடியின் சொற்பொழிவுத் திறமை, அவரது ‘கடின உழைப்பு’ ஆகியவற்றைப் பாராட்டி தங்களுடைய வார்த்தைகளில் உள்ள கடுமையைத் தணித்துக் கொள்கிறார்கள். எதிர்க்கட்சிகளில் உள்ள அரசியல்வாதிகளைக் கண்டனம் செய்வது, மோசமாக அவமானப்படுத்துவது போன்ற செயல்களை மிகவும் கடுமையாக அவர்கள் செய்து வருகின்றனர். வரப்போகின்ற கோவிட்-19 நெருக்கடி குறித்து தொடர்ந்து எச்சரித்து வந்த, இயன்றவரை அரசாங்கம் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பலமுறை அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்ட ஒரே அரசியல்வாதியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல்காந்திக்கென்று சிறப்பு அவதூறுகளை அவர்கள் ஒதுக்கி வைத்துக் கொண்டுள்ளனர். அனைத்து எதிர்க்கட்சிகளையும் அழிக்கும் வகையிலான ஆளும்கட்சி பிரச்சாரத்திற்கு உதவுவது ஜனநாயகத்தின் அழிவை நோக்கியதாகவே இருக்கும்.   

ஆக இப்போது நாம் அவர்களுடைய கூட்டு தயாரிப்பான நரகத்தில், ஜனநாயகத்தின் செயல்பாட்டிற்கு மிகவும் அவசியமான சுதந்திரமாக இயங்க வேண்டிய ஒவ்வொரு நிறுவனமும் சமரசம் செய்யப்பட்டு, வெற்றுத்தனமாக இருக்கின்ற நிலையில் கட்டுப்பாட்டிற்குள் அடங்காத வைரஸுடன் இருந்து வருகின்றோம்.

நெருக்கடியை உருவாக்கும் இயந்திரம் என்று நாம் அழைக்கின்ற இந்த அரசாங்கத்தில் அனைத்து முடிவுகளையும் புத்திசாலியாக இல்லாமல் மிகவும் ஆபத்தானவராக இருக்கின்ற ஒரு மனிதரே எடுப்பதாக இருப்பதால் இத்தகைய பெரும் பேரழிவிலிருந்து நிச்சயம் இந்த அரசாங்கத்தால் நம்மை வெளிக்கொண்டு வர இயலாது. இந்த வைரஸ் ஒரு சர்வதேச பிரச்சனையாக இருப்பதால் அதைச் சமாளிப்பதற்குத் தேவையான குறைந்தபட்ச தொற்றுநோய் கட்டுப்பாடு, நிர்வாகம் ஆகியவற்றின் அடிப்படையில் முடிவெடுக்கின்ற பொறுப்பு ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், உடல்நலம் மற்றும் பொதுக் கொள்கைகள் குறித்த நிபுணர்கள் அடங்கிய பாகுபாடற்ற அமைப்பின் கைகளுக்குச் செல்ல வேண்டும்.  

தான் இழைத்திருக்கும் குற்றங்களிலிருந்து விலகிக் கொள்வது மோடியைப் பொறுத்தவரை சாத்தியமான தீர்வாக இருக்குமா? தன்னுடைய கடின உழைப்பிலிருந்து அவர் விலகிக் கொள்ளலாம். வி.வி.ஐ.பி பயணத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கும் 56.4 கோடி டாலர் மதிப்பிலான போயிங் 777 ஏர் இந்தியா ஒன் விமானம் அவருக்காக இப்போது விமான ஓடுபாதையில் நின்று கொண்டிருக்கிறது. அவரும் அவரது ஆட்களும் வெளியேறி விடலாம். மீதமிருக்கின்ற நாம் அவர்கள் ஏற்படுத்தியுள்ள குழப்பத்தைச் சுத்தம் செய்ய நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.


இல்லை - இந்தியாவைத் தனிமைப்படுத்த முடியாது. நமக்கு உதவி தேவைப்படுகிறது.   

https://thewire.in/government/india-covid-19-government-crime-against-humanity

Comments