அனுராக் மெஹ்ரா
ஸ்க்ரோல் இணைய இதழ்
மக்களுக்கு உண்மையிலேயே உதவுகின்ற சுகாதார
உள்கட்டமைப்பை உருவாக்குவதைக் காட்டிலும் இதுபோன்ற செயலிகளை உருவாக்குவது மிகவும்
எளிதாக இருக்கிறது.
இந்தியர்கள் அனைவருக்கும் அடையாள உணர்வைத் தரும் வகையில் பயோமெட்ரிக் தரவுகளுடன் இணைக்கப்பட்ட ஆதார் எண் முதலில் இருந்து வந்தது. அதற்கப்புறம் தங்களுக்கு அருகில் வைரஸ் எங்கேயாவது பதுங்கியிருக்கிறதா என்று இந்தியர்களுக்கு எடுத்துக் கூறுகின்ற துப்பறியும் செயலியான ஆரோக்கிய சேது வந்தது. இப்போது கோவிட்-19க்கு எதிராக இந்தியர்கள் தடுப்பூசிகளைப் பெறுவதற்கான ஒரே வழிமுறையாக கோவின் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வகையான டிஜிட்டல் தீர்வுகளின் விளைவாக
தொழில்நுட்பத்தை அணுக முடியாத ஏராளமான இந்தியர்கள் தங்களுக்கான உரிமைகளை இழந்து
வருகிறார்கள் என்பதற்கான ஏராளமான சான்றுகள் இருந்து வருகின்ற போதிலும், இதுபோன்ற செயலிகளே அனைத்து
சிக்கல்களையும் தீர்க்கும் என்ற நம்பிக்கை
கொண்டவர்களாகவே இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் இருந்து வருகிறார்கள்.
ஏப்ரல் 28 அன்று கோவின் போர்ட்டலில் தடுப்பூசி
இயக்கத்தின் மூன்றாம் கட்டத்திற்கான பதிவுகள் திறந்து வைக்கப்பட்ட சில
மணிநேரங்களுக்குப் பிறகு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
வெளியிட்ட ட்வீட் இதுபோன்ற கூற்றுகளின் வெற்றியைப் பறைசாற்றுவதாகவே இருந்தது. ‘நமது
உலகத் தரம் வாய்ந்த கோவின் இயங்குதளம் உலகின் #LargestVaccineDriveஇன்
மூன்றாம் கட்டத்திற்கான பயனாளர்களைப் பதிவு செய்வதை உறுதி செய்திருப்பதில்
மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று அந்த ட்வீட்டில் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
தடுப்பூசி இயக்கத்தின் மூன்றாம் கட்டம் 18-44
வயதுக்குட்பட்டவர்களுக்கானதாக இருந்தது. முந்தைய இரண்டு கட்டங்கள் அறுபது வயதிற்கு
மேற்பட்டவர்களுக்கும் (45 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுடன்), பின்னர்
எந்தவொரு நிபந்தனையின்றி 45 முதல் 60 வரையிலானவர்களுக்கும் என்று நடந்திருந்தது.
அதேபோன்ற பெருமையுடன் தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை
நிர்வாக அதிகாரியிடமிருந்தும் ட்வீட் ஒன்று வெளியாகி இருந்தது.
அமைப்பின் ‘உலகத்தரம் வாய்ந்த’ தரநிலைகள் மற்றும் பயனர்
ஈடுபாட்டின் உயர் விகிதம் குறித்ததாக இருந்த அவர்களின் உற்சாகம், கடுமையான
தடுப்பூசி பற்றாக்குறை இருக்கின்ற சூழலில் கோவின் இயங்குதளம் வெளியிடப்பட்டுள்ளது
என்ற உண்மையை மறைக்கிறது. போதுமான அளவில் தடுப்பூசிகள் தங்களுக்கு கிடைக்கவில்லை
என்பதால் தடுப்பூசி பிரச்சாரத்தை நிறுத்தி வைக்க வேண்டியிருப்பதாக ஒவ்வொரு நாளும்
மாநிலங்கள் புகார் அளித்து வருகின்ற சூழலே இருக்கின்றது.
குறைவான தடுப்பூசிகளே போடப்பட்டிருப்பது தடுப்பூசி
போட்டுக் கொள்வதற்கான நேர ஒதுக்கீடு குறைவாக இருந்திருப்பதையே காட்டுகின்றது. தடுப்பூசி
பெற்றுக் கொள்வதற்கான நேரத்தைப் பெறுவதற்காக அதிக எண்ணிக்கையில் கோவின் தளத்திற்குப்
பலரும் படையெடுத்தது கணினியைச் செயலிழக்க வழிவகுத்தது. தடுப்பூசி முன்பதிவுச்
செயல்பாட்டில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல அனுமதிக்கின்ற கடவுச்சொற்களை பயனர்கள்
பெறுவதில் தாமதம் ஏற்பட்டதோடு, பல சமயங்களில் கணினித் திரை அப்படியே உறைந்து போய் நின்றது.
தடுப்பூசி போடுவதற்கு ஒதுக்கப்படுகின்ற இடங்கள் சில நொடிகளிலேயே தீர்ந்து விடுவதன்
விளைவாக பயனர்கள் பலரும் தங்கள் ஆத்திரம்,
கிண்டல்
உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
தடுப்பூசி போடுவதற்கான நேரத்தை முன்பதிவு செய்வதற்கான
செயல்முறை மிக விரைவாகச் செயல்படும் விரல்களைக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே முதலில் கிடைக்கின்ற
போட்டியாக மாறிவிட்டது என்று பயனர்கள் புகார் கூறுகின்றனர். பல மாநிலங்கள்
குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடகா
போன்ற மாநிலங்கள் தங்கள் சொந்த இணைய தளங்கள் / செயலிகளைப் பயன்படுத்த அனுமதிக்க
வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
விலக்கி வைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட
தொழில்நுட்பம்
உண்மையில் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு தடுப்பூசி
போடுவதற்கான நேரம் ஒதுக்கப்படாது என்பதை உறுதி செய்வதாக கோவின் இயங்குதளம் இருக்கிறது
என்பதை இதுபோன்று அதிகாரப்பூர்வமாக அரசுத் தரப்பிலிருந்து உற்சாகத்துடன்
போடப்படுகின்ற பதிவுகள் மறைத்து வைக்கவே முயல்கின்றன.
18-44 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 33% முதல் 45% பேர் - ஏறத்தாழ இருபது கோடி முதல்
இருபத்தெட்டு கோடிப் பேர் - இணையத்தை அல்லது எந்தவொரு இணையவழியிலான தளங்களையும்
அணுக முடியாதவர்களாக அல்லது மற்ற தடைகளுடன் இருப்பவர்களாகவே உள்ளனர். கோவின் செயலி
பல மொழிகளில் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் அதில் பல இந்திய மொழிகளுக்கு இடம் இருக்கவில்லை.
தவிர கோவின் இணையதளம் ஆங்கிலத்தில் மட்டுமே இயங்கி வருகிறது. ஒருவரது இருப்பிடம்
(மோசமான இணைய இணைப்பு உள்ள பகுதிகள்), பாலினம் (பெரும்பாலும் இணைய பயன்பாடு
ஆண்களுக்கு ஆதரவாகவே இருக்கிறது) கல்வித் தகுதிகள் போன்ற பல காரணிகளாலும் இதுபோன்ற விலக்கு ஏற்படுகிறது.
நம் கண்களுக்கு முன்னே இந்த தடுப்பூசி ஏற்றத்தாழ்வு நிகழ்ந்து
கொண்டிருக்கிறது. தடுப்பூசி பெறுவதற்கான நேரத்தைப் பெறுவதற்காக நகரத்தில்
வசிப்பவர்கள் கிராமப்புறங்களுக்கு வாகனத்தில் செல்வதாக பல சம்பவங்கள் பெங்களூரு,
மும்பை,
நொய்டாவிலிருந்து
கிடைத்திருக்கும் இந்த அறிக்கைகளில் பதிவாகியுள்ளன. மேலே குறிப்பிட்ட காரணிகள் அனைத்தும்
இணைந்திருப்பதால் தடுப்பூசிக்கான நேரத்திற்கு அந்தப் பகுதிகளில் வசிப்பவர்களால் பதிவு
செய்து கொள்ளவே முடியவில்லை.
கிராமப்புறங்களுக்கு டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்காக
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வருகின்ற பொது சேவை
மையங்கள் கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக மூடப்பட்டிருப்பதால் அவற்றில் பல
மையங்கள் அதிகம் பயன்பாட்டில் இருக்கவில்லை. விளைவாக கோவின் மூலமாகச் செய்யப்பட்ட
மொத்த பதிவுகளில் சுமார் 0.1% பதிவுகள் மட்டுமே இந்த மையங்கள் மூலம்
செயல்படுத்தப்பட்டிருக்கின்றன.
மெத்த மேதாவிகளின் தாக்குதல்
தடுப்பூசி பற்றாக்குறையின் இந்த நிலைமையைச் சுட்டிக்
காட்டுவது ‘மெத்த மேதாவிகளின் தாக்குதல்’ என்று அழைக்கப்படுவதால் நிலைமை மேலும்
குழப்பமே அடைகிறது. கணினி குறியீட்டை எழுதத் தெரிந்தவர்கள் காலியாக உள்ள தடுப்பூசி இடங்களைத் தானாகக் கண்டு கொள்கின்ற
வகையிலான மென்பொருட்களை உருவாக்கிப் பயன்படுத்தி வருகின்றனர். அதன் மூலம்
பெறுகின்ற தகவல்களை தங்கள் குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு சமூக ஊடகங்கள்
(ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம்), செய்தி தளங்கள் (வாட்ஸ்ஆப், டெலிகிராம்,
மின்னஞ்சலிலும் கூட) மூலமாக அனுப்பி வைக்கின்றனர்.
தொழில்நுட்பத்துடன் உள்ள அவார்களுக்கு இருக்கின்ற இவ்வாறான
பரிச்சயம் சமமாக விநியோகிக்கப்பட வேண்டிய வாய்ப்புகளை கைப்பற்றிக் கொள்வதற்கான
ஆயுதமாகவே பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகள் முடிந்தவரையில் விரைவாகத்
தீர்த்து வைக்கப்பட வேண்டும்.
இறுதியாக இந்த கோவின் இயங்குதளம் மீது தனியுரிமை குறித்த
சந்தேகங்களும் இருக்கின்றன. எந்தவொரு தனியுரிமைக் கொள்கையையும் இந்த தளம் கொண்டிருக்கவில்லை
என்று குறிப்பிட்டிருப்பது தளத்தை இயக்குகின்ற நிறுவனம் கோட்பாட்டளவில் பயனர்
தரவுகளைப் பகிரலாம் அல்லது மூன்றாம் தரப்பினருக்கு விற்கலாம் என்றே பொருள்படுவதாக
இருக்கிறது.
இதைப்போன்ற அச்சங்களுக்குப் போதிய காரணங்கள் இருக்கின்றன.
‘வாகன்’ என்ற அரசாங்கத்தின் வாகனப் பதிவு தரவு தளத்திலிருந்து விரிவாக தரவுகள் பகிரப்பட்டுள்ளன. தனியார் நிறுவனத்திற்கும் அந்த தரவுகள் விற்கப்பட்டுள்ளன. நோக்கம் நிறைவேறிய பிறகு கோவின் தளத்தில் உள்ள தரவுகளை
நீக்கக் கோரும் வகையில் எந்தவிதமான ஏற்பாடுகளும் இல்லை என்பதால் அந்த தரவுகள் காலவரையற்று
தளத்தில் இருக்கக்கூடும்.
தனியுரிமையைப் பாதுகாக்கும் சட்டங்கள் எதுவும் இந்தியாவில்
இல்லை என்பதால், தரவுகளைப் பகிர்வது அல்லது விற்பனை செய்வது போன்ற எந்தவொரு புதிய
ஏற்பாடும் அதிகாரத்தில் உள்ளவர்களால் ஒரு நொடியில் உத்தரவின் மூலம்
அனுமதிக்கப்படலாம் என்பதே நிதர்சனமாக இருக்கிறது.
மக்கள்தொகையில் பெரும் பகுதியாக இணைய வசதிகள் இல்லாதிருக்கின்ற
பெரும்பான்மையோருக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வழங்கப்படும் எந்தவொரு
சேவையும் மறுக்கப்படுகிறது என்பதை அரசாங்கம்
ஏன் அங்கீகரிக்க மறுக்கின்றது?
இதுபோன்ற டிஜிட்டல் முயற்சிகளுக்குப் பின்னால் பல காரணிகள்
இருக்கின்றன. முதலாவதாக அரசியல் கட்சிகள் இணையத்தைப் பயன்படுத்துகின்ற குறிப்பாக
தங்களுடைய ஆளுகை குறித்த கருத்து மேலாண்மைக்கு முக்கியமான வாகனங்களாக இருக்கின்ற
சமூக ஊடகங்களையும், செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் செயலிகளையும் பயன்படுத்துகின்ற
சமூகப் பிரிவினர் மீதே அதிகம் அக்கறை காட்டுகின்றன.
இரண்டாவதாக இந்த டிஜிட்டல் நுட்பங்கள் தொழில்நுட்ப
முன்னேற்றம் குறித்தவையாக இருப்பதால் தொழில்நுட்ப ரீதியாக அவர்களுடைய தலைமையை
முன்னிறுத்துவதற்கு நன்கு பயனளிப்பவையாக இருக்கின்றன.
மூன்றாவதாக, இத்தகைய தொழில்நுட்ப தீர்வுவாதம் குடிமக்கள்
ஒவ்வொருவரைப் பற்றியும் குறிப்பாக அதிக வசதி படைத்தவர்களைப் பற்றிய தனிப்பட்ட
தரவுகளை சேகரிக்கும் பொதுவான போக்கிலிருந்தே உருவாவதாக இருக்கிறது.
‘தரவுகளைப் பணமாக்குதல்’, ‘தரவு அதிகாரமளித்தல்’,
‘சுகாதார தரவு அடுக்குகள்’ என்ற பேச்சு
பெரும்பாலும் பொது சுகாதார உள்கட்டமைப்பை (சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள்)
உருவாக்குவது போன்ற மிகவும் கடினமான பிரச்சனைகளிலிருந்து கவனத்தை அகற்றிக்
கொள்வதாகவே இருக்கிறது. உண்மையில் டிஜிட்டல் முயற்சிகள் மீது பொழியப்படுகின்ற பணம்,
வளங்கள், உற்சாகம் போன்றவற்றை பொதுசுகாதார உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காகச் செலவிடுவதே
சிறந்த தீர்வாக இருக்கும்.
என்ன செய்யலாம்?
இப்போதுள்ள சவால்களைச் சமாளிக்க இந்தியாவிற்கு தடுப்பூசிகளைப்
பெறுவதற்கான பெரிய அளவிலான இணையவழி அல்லாத (ஆஃப்லைன்) வழிமுறைகளே தேவைப்படுகின்றன.
உலகில் எந்த நாடும் - வசதியான நாடுகள் உள்ளிட்டு - இணையவழி வழிமுறைகளை மட்டுமே இதற்காகப்
பயன்படுத்தியிருக்கவில்லை. அமெரிக்கா, ஐக்கியப் பேரரசிலும் கூட தொலைபேசி அடிப்படையில் இயங்குகின்ற ஹெல்ப்லைன்கள், நேரடியான
பதிவுகள் மூலமாகவே இதுபோன்ற தடுப்பூசி
முன்பதிவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கான கோவின் பதிவிற்கான
வசதிகள் குறிப்பிட்ட இடத்தில் ஏற்படுத்தித் தரப்படும் என்ற இப்போதைய அறிவிப்பு
வரவேற்கத்தக்கதாக இருக்கிறது. வீடுகளுக்கே நேரடியாக வந்து தடுப்பூசிகள்
போடப்படுவதற்காக இந்தியா காத்திருக்கும் நிலையில், குறைந்தபட்சம் தடுப்பூசி
போடுவதற்கான பதிவுகளையாவது வீடு வீடாகச் சென்று செய்வது இதுபோன்ற டிஜிட்டல்
இடைவெளிகளை முறியடிப்பதில் மிகவும் பயனுள்ள உத்தியாக இருக்கும்.
இந்த தொற்று இந்தியாவில் சிறிய நகரங்கள், கிராமப்புறங்களுக்கு
செல்லும் போது இணையவழி அல்லாத திட்டங்களே முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும்.
தடுப்பூசி மீதான தயக்கத்தை எதிர்கொள்வதற்கும், தடுப்பூசிகளைப் பற்றி இந்தியர்கள்
கொண்டிருக்கும் அச்சங்களைத் தீர்ப்பதற்குமான தேவை இப்போது இருந்து வருகிறது. அவ்வாறான
நிலையில் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்வது, பொதுச்சேவை
அறிவிப்புகள், நாட்டுப்புறப் பாடல்கள் போன்ற பிரபலமான வடிவங்கள் இந்தியர்களைத்
தடுப்பூசி போடத் தூண்டுவதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
நீண்டகால தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின் மூலம் இந்தியா பெற்றிருக்கும் கற்றலை, அனுபவங்களைப் பயன்படுத்திக்
கொள்வதற்கான நேரமாக இந்த காலகட்டம் இருந்து வருகிறது. போலியோவை முழுமையாக அகற்றுவதில்
இந்தியாவின் வெற்றிக்கு நாடு முழுவதும் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட பிரச்சாரமே காரணமாக
இருந்தது. அனைத்து வகையிலான அணுகல்கள் மூலம் - குறிப்பாக நேரடியாகச் சென்று செய்து
கொள்ளப்படும் பதிவுகள் மூலமாகச் செயல்படுத்தப்படுகின்ற அனைவருக்குமான, இலவசமான,
விரைவான தடுப்பூசிகளே இப்போதைய சிறந்த தீர்வாக இருக்கும்.
இணையவழி பதிவிற்காக தங்களுடைய நண்பர்கள் அல்லது
குடும்பத்தினரின் உதவியை குடிமக்கள் நாடுவதன் மூலம் இணையவழி அணுகலில் உள்ள
சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என்பதாக இருந்து வரும் அதிகாரப்பூர்வ கருத்து
முற்றிலும் சிறுபிள்ளைத்தனமாகவே உள்ளது. இந்த நிலைமை தொடர்ந்தால் டிஜிட்டல்
வசதிகள் இல்லாத குடிமக்களை சமூகத்தின் பார்வையில் இருந்து அகற்றுகின்ற ‘மெய்மை நீக்கும்’
செயலியாகவே கோவின் செயலி மாறி விடும்.
அனுராக் மெஹ்ரா பம்பாய் ஐ.ஐ.டியில் பொறியியல் மற்றும் கொள்கையை கற்பித்து வருகிறார். தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் அரசியல் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்பை ஆராய்வதாக அவரது கொள்கை கவனம் உள்ளது.








Comments