நித்யானந்த் ஜெயராமன்
தி வயர் சயின்ஸ்
தூத்துக்குடியில் மூடி வைக்கப்பட்டுள்ள
தன்னுடைய ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை வளாகத்திலிருந்து நாளொன்றிற்கு 1,050 டன்
(டிபிடி) மருத்துவ ஆக்சிஜனை வழங்குவதாக வேதாந்தா நிறுவனம் வாக்குறுதி அளித்திருக்கிறது.
அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியுமென்றால் அங்கே தயாரிக்கப்படுவதாகக் கூறப்படும்
ஆக்சிஜனைக் கொண்டு தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தேவையான 650 டிபிடி அளவை நிறைவேற்றிக்
கொள்ளலாம். அத்துடன் மீதமுள்ளதை கேரளா, புதுச்சேரிக்கும் வழங்கலாம்.
ஸ்டெர்லைட் தயாரிக்கும் 1050 டிபிடி
ஆக்சிஜனை முழுவதுமாக மருத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு பல மாதங்கள்
தேவைப்படும் என்று தி வயர் சயின்ஸ் கலந்துரையாடிய நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதுவரையிலும் அந்த வளாகத்திற்குள் இருக்கும் ஆலையால் அறுபது முதல் நூறு டிபிடி
திரவ ஆக்சிஜனை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். சிலிண்டர்களில் அடைத்து வாயு
ஆக்சிஜனாக கொஞ்சம் கூடுதலாக வழங்க முடியும்.
மேலும் வேதாந்தா தயாரிக்கும் ஆக்சிஜன்
விலையுயர்ந்ததாக, வீண் செலவுகளைக் கொண்டதாக, தர்க்கரீதியாக எளிதில் கையாள முடியாததாகவே
இருக்கும் என்று அந்த நிபுணர்கள் கூறினர். ஆக்சிஜன் மட்டுமல்லாது அதற்கான
வளங்களும் பற்றாக்குறையாகவே உள்ளன. தொலைதூரத்தில் ஆக்சிஜன் கிடைக்க முடியாத
பகுதிகளில் எளிதில் பயன்படுத்திக் கொள்கின்ற வகையில் குறைந்த விலையில் ஆக்சிஜனைத்
தயாரிப்பதற்கான நீண்ட காலத்திற்கான உள்கட்டமைப்பை அந்தப் பணத்தைக் கொண்டு உருவாக்கிக்
கொள்ள முடியும் எனும் போது இவ்வாறு அதிக விலையுயர்ந்த ஆக்சிஜனை ஏன் வீணாக வேதாந்தா
நிறுவனம் உற்பத்தி செய்ய வேண்டும்?
மே 25 அன்று காலை வரையில் நாளொன்றிற்கு 21
டன் என்ற அளவில் மட்டுமே வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜனை வழங்கியுள்ளது. அந்த நிறுவனத்தால்
வாக்குறுதியளிக்கப்பட்ட 1050 டிபிடிக்கு மாறாக ஆக்சிஜன் உற்பத்தி
செய்யப்பட்டிருக்கும் இந்த ஒரு வாரத்தில் மொத்தம் 150 டன் ஆக்சிஜன் மட்டுமே
தயாரிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு டன் திரவ ஆக்சிஜனுக்கும்
(LOX), வேதாந்தா நிறுவனம் பத்து டன் வாயு ஆக்சிஜனை (GOX) உற்பத்தி செய்து வீணாக்க
வேண்டியுள்ளது. இந்த ஏழு நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 1,500 டன் வாயு ஆக்சிஜன்
வளிமண்டலத்திற்குள் செலுத்தப்பட்டு வீணடிக்கப்பட்டுள்ளது.
தற்போது வேதாந்தா நிறுவனம் இயக்கி வருகின்ற ஆக்சிஜன் ஆலை அதனுடைய மிகப் பெரிய தாமிர உருக்காலை வளாகத்தின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. பெரும்பாலும் எந்தவொரு உரிமமும் இல்லாமல் அவை சட்டவிரோதமாகவே கட்டப்பட்டிருக்கின்றன. ஆக்சிஜன் ஆலையிலிருந்து வாயு வடிவத்தில் பெறப்படுகின்ற ஒட்டுமொத்த ஆக்சிஜன் உற்பத்தியும் தொடர்ச்சியாக அவர்களுடைய உருக்கு உலையின் பயன்பாட்டிற்கே வழங்கப்படுகிறது.
‘தங்களுடைய 5-10% திறனை மட்டுமே திரவ ஆக்சிஜனாக ஆக்சிஜன் ஆலைகள் உற்பத்தி செய்வது வழக்கம். ஆலை மூடப்படும் போது அந்த திரவ ஆக்சிஜன் இருப்பில் வைத்துக் கொள்ளப்படும். ஆலை மீண்டும் திறக்கப்படும் போது அது ஆவியாக்கப்பட்டு உற்பத்தியைத் தொடர்வதற்காக வழங்கப்படும்’ என்று ஐ.ஐ.டி காரக்பூரில் கிரையோஜெனிக் பொறியியல் துறைப் பேராசிரியரான காஞ்சன் சௌத்ரி கூறுகிறார். மேலும் அவர் ‘ஆலையை வடிவமைக்கும் போதே திரவ ஆக்சிஜன் எந்த அளவில் தயாரிக்கப்பட வேண்டும் என்பதுவும் தீர்மானிக்கப்பட்டு விடும்’ என்று தெரிவித்தார்.
பெரும்பாலும் ஒரே அளவில்
நிலையான தயாரிப்பு
பெறக்கூடிய திரவ ஆக்சிஜனின் அளவு ஆலையின்
வடிவமைப்பிலேயே திட்டமிடப்பட்டிருப்பதால், தற்போதுள்ள அமைப்பை மாற்றியமைப்பதன் மூலமாக
மட்டுமே திரவ ஆக்சிஜனின் தயாரிப்பை அதிகரிக்க முடியும். தற்போதுள்ள 10:90 என்ற
விகிதத்திலிருந்து திரவ-வாயு ஆக்சிஜனின் விகிதத்தை மாற்றுவதற்கு கம்ப்ரசர்கள்,
டர்பைன்கள் போன்ற கூடுதல் உபகரணங்களை நிறுவி ஆலை முற்றிலுமாக மறுவடிவமைப்பு
செய்யப்பட வேண்டும். இந்த புதிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை நிறுவுவதற்கு
கூடுதல் காலமும், பணமும் செலவாகும்.
திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டு நாடு
முழுவதும் ஆக்சிஜனை அனுப்பப் போகின்ற வேதாந்தாவின் திறனானது பெரிய கொள்கலன்களில்
எளிதில் கொண்டு செல்லப்படுகிற அளவிற்கு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த வாயு ஆக்சிஜனையும் மருத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்த
முடியும் என்றாலும் பெரிய அளவிலே அதனை எடுத்துக் கொண்டு செல்ல முடியாது. உற்பத்தி
செய்யும் இடத்திலிருந்து குறுகிய தூரத்தில் அமைந்துள்ள பயன்பாட்டு இடத்திற்கு
குழாய் மூலம் அதனை எடுத்துச் செல்லலாம். பொதுவாக ஒரு மாவட்டத்திற்குள்ளே பயன்படுத்திக்
கொள்ளப்படுகின்ற வகையில் ஏழு கன மீட்டர் திறன் கொண்ட டி-வகை சிலிண்டர்களில் வாயு ஆக்சிஜன் அடைக்கப்படலாம். ஆனால் இந்த
முறையில் ஆக்சிஜனை எடுத்துச் செல்ல இறக்குமதி செய்யப்பட்ட வாயு அழுத்தத்தை 150
பார் என்ற அளவில் அதிகரிக்கும் திறன் கொண்ட உயர் அழுத்த கம்ப்ரசர்கள் தேவைப்படும்.
கிரையோஜெனிக் டேங்கர்கள் மூலமாக நிரப்புதல்
நிலையங்களுக்கு எடுத்துச் செல்வதற்கோ அல்லது அந்த இடத்திலேயே உள்ள கிரையோஜெனிக் சேமிப்பு
தொட்டிகளுக்குக் கொண்டு செல்வதற்கோ மருத்துவ ஆக்சிஜனை பெருமளவில் திரவ வடிவத்தில்
உற்பத்தி செய்வதே விரும்பத்தக்கதாக இருக்கும். நிரப்புதல் நிலையங்கள் திரவ வடிவில்
ஆக்சிஜனைச் சேமித்து, அதை பம்ப் செய்து, சிலிண்டர்களில் நிரப்புவதற்காக ஆவியாக்குகின்றன.
அந்த சிலிண்டர்கள் பின்னர் பயன்பாட்டு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
ஒரு டன் வாயு ஆக்சிஜனை நிரப்ப ஏழு கன மீட்டர் திறன் கொண்ட டி-வகை சிலிண்டர்கள்
சுமார் நூறு என்ற எண்ணிக்கையில் தேவைப்படும்.
மே 23 அன்று ஸ்டெர்லைட் ஆலை 29.06 டன் திரவ
ஆக்சிஜனையும் 299 டன் வாயு ஆக்சிஜனையும் உற்பத்தி செய்தது. ஒட்டுமொத்தமாக இந்த 299
டன் வாயு ஆக்சிஜன் முழுவதும் வளிமண்டலத்திற்குள் வெளியேற்றப்பட்டது. வாயு ஆக்சிஜன்
அனைத்தையும் சிலிண்டரில் அடைத்து பயன்படுத்திக் கொள்வது நல்லதொரு தேர்வாக இருக்க
முடியாது. ஏனெனில் ஒரு நாளில் தயாரான 299 டிபிடி வாயு ஆக்சிஜனை நிரப்ப ஏறத்தாழ முப்பதாயிரம்
சிலிண்டர்கள் தேவைப்படும். ஆக்சிஜனைக் கொண்டு செல்வதை நெறிப்படுத்த உதவுகின்ற
தன்னார்வ முயற்சியில் ஒரு பகுதியாகச் செயல்பட்டு வரும் ஒருவரால் தரப்பட்ட
நம்பத்தகுந்த புள்ளிவிவரங்கள் இந்த எண்ணிக்கையிலான (30000) சிலிண்டர்கள்
சென்னையில் அன்றாடம் தேவைப்படுகின்ற சிலிண்டர்களின் எண்ணிக்கையை விட இரு மடங்கு
அதிகமாகும் என்று காட்டுகின்றன. வேதாந்தா உறுதியளித்துள்ள மொத்த ஆக்சிஜன் அளவில்
உருவாகின்ற 900 டிபிடி வாயு ஆக்சிஜனை சிலிண்டர்களில் நிரப்புவது தொழில்நுட்ப
ரீதியாகச் சாத்தியம்தான் என்றாலும் அதற்காக ஒரு நாளைக்கு 90,000 சிலிண்டர்கள்
தேவைப்படும். இது தர்க்கரீதியாக நடக்க முடியாத காரியமாகவே இருக்கும்.
ஐ.ஐ.டி மெட்ராஸைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வேதிப்
பொறியியல் துறைப் பேராசிரியரான டி.சுவாமிநாதன் மற்றும் சௌத்ரி என்ற இரு
வல்லுநர்கள் ஸ்டெர்லைட் வளாகத்தில் நடைபெற்று வரும் ஆக்சிஜன் உற்பத்தியைப் பற்றி
கருத்து தெரிவித்தனர். நிதி ரீதியாகப் பார்த்தால் இந்த செயல்முறை செயல்படுத்த
முடியாததாக இருக்கிறது என்று அவர்கள் கூறினர். ‘இத்தகைய வீணான முயற்சியில் ஈடுபட வேதாந்தா
ஏன் விரும்பியது என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை’ என்று சுவாமிநாதன்
கூறினார்.
வேதாந்தாவிடம் ஏராளமாக பணம் இருக்கிறது.
கடந்த காலங்களில் சட்டப்பூர்வமாகத் தேவைப்படுகின்ற செலவுகளுக்காகக்கூட அந்த நிதியை
அவர்கள் பயன்படுத்தில்லை எனும் போது தன்னலம் கருதாமல் செயல்படுத்த வேண்டிய செயல்களுக்காக
எவ்வாறு அவர்கள் அந்த நிதியைப் பயன்படுத்துவார்கள் என்பது தெரியவில்லை.
2017 மார்ச் 21 அன்று ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்து வந்த முப்பத்தியொரு வயதான கார்த்தீபன் என்ற இளைஞர் சரிவர இணைக்கப்படாத கன்வேயர் பெல்ட்டால் உறிஞ்சப்பட்டப்பட்ட தன்னுடைய இடது கையை இழந்தார். ஒரு வயதே ஆன தன்னுடைய குழந்தையைப் பராமரிக்க வேண்டிய நிலையிலேயே அவர் தன்னுடைய எதிர்கால வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நூறு சதவீத உடற்குறைபாடு இருப்பதாக இயலாமை சான்றிதழை அவர் பெற்றார். வேதாந்தா நிறுவனம் விரும்பியிருந்தால் அப்போதே அவருக்கு இழப்பீட்டை வழங்கியிருக்க முடியும். ஆனால் இழப்பீட்டை வழங்கிட பதினெட்டு மாதங்களுக்கும் மேலாகி விட்டது. அதுவும் சர்வதேச அளவிலான பிரச்சாரம், தொழிற்சாலை வாயிலில் அந்த இளைஞன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்திற்குப் பிறகே அந்த இழப்பீடு வழங்கப்பட்டது.
பொதுசுகாதாரத்தில் அந்த நிறுவனத்திடம் இருக்கின்ற
ஆர்வமின்மையை அம்பலப்படுத்துகின்ற மற்றொரு நிகழ்வும் நடந்தது. 2005ஆம் ஆண்டில்
உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளுக்கான வசதிகளுடன் இலவச மருத்துவமனை ஒன்றை
அமைக்குமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேதாந்தா நிறுவனத்தை
அறிவுறுத்தியது. அதுபோன்ற வழிகாட்டுதல்கள் சட்டப்பூர்வமாகச் செயல்படுத்த
வேண்டியவையாகும். விருப்பப்பட்டால் செய்து கொள்வதல்ல. இந்த நிபந்தனைக்கு இணங்கத்
தவறியதற்காக விளக்கம் கேட்டு 2005 செப்டம்பரில் வாரியத்தால் அறிவிக்கை வழங்கப்பட்டது.
ஆயினும் இன்று வரையிலும் அந்த மருத்துவமனை கட்டப்படவில்லை.
விலை அதிகம், ஆற்றல்
அதிகம் தேவை
காற்றில் இருந்து ஆக்சிஜனைப் பிரித்தெடுத்து
அதை திரவமாக மாற்றுவது மிகவும் ஆற்றல் தேவைப்படுகின்ற செயல்முறையாகும். ஒரு
கனமீட்டர் அளவில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய
ஸ்டெர்லைட் ஆலைக்கு குறைந்தபட்சம் 0.9-1.0 கிலோவாட் (யூனிட்) மின்சாரம்
தேவைப்படும் என்று சௌத்ரி மதிப்பிடுகிறார். தயாரிக்கப்படும் ஆக்சிஜனில் பத்து
சதவீதம் திரவ ஆக்சிஜனாகவும், தொன்னூறு சதவீதம் வாயு ஆக்சிஜனாகவும் இருக்கும்.
உருக்காலை இப்போது த்டை செய்யப்பட்டு மூடி வைக்கப்பட்டுள்ளதால் ஸ்டெர்லைட்டில்
வாயு ஆக்சிஜனுக்கான பயன்பாடு இருக்கவில்லை. எனவே அந்த ஆலை பத்து கனமீட்டர்
ஆக்சிஜனை உற்பத்தி செய்ய பத்து யூனிட் மின்சாரத்தைச் செலவு செய்ய வேண்டும். அந்த
பத்து கனமீட்டர் ஆக்சிஜனில் ஒரு கனமீட்டர் திரவ ஆக்சிஜனாகவும், மீதம் உள்ளது
நிராகரிக்கப்படுகின்ற வாயு ஆக்சிஜனாகவும் இருக்கும். இதன் மூலம் ஒரு டி-வகை
சிலிண்டரை நிரப்புவதற்கு அந்த ஆலை குறைந்தபட்சம் 70 யூனிட் மின்சாரத்தைப்
பயன்படுத்த வேண்டியிருக்கும். இந்தக் கணக்கீட்டை விரிவுபடுத்தினால் ஒரு டன்
ஆக்சிஜனை உற்பத்தி செய்ய (அதாவது நூறு கிலோ திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்ய)
குறைந்தபட்சம் 700 யூனிட் மின்சாரம் தேவைப்படும். உண்மையில் இது மிகவும்
குறைந்தபட்ச மதிப்பீடாகும்.
2021 மே 25 அன்று காலை ஆறு மணி நிலவரப்படி
1,653.64 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்திருப்பதாக வேதாந்தா கூறுகிறது. அதில் 1,491
டன் வாயு ஆக்சிஜன் வீணாக்கப்பட்டு விட்டது. இன்றுவரை டேங்கர்களில் மருத்துவப்
பயன்பாட்டிற்காக அனுப்பப்பட்ட அளவு வீணான அளவில் பத்தில் ஒரு பங்கான 150.58 டன் மட்டுமே
ஆகும். இதுபோன்று செய்வது ஒரே ஒரு அறையை
குளிர்விப்பதற்காக முழு கட்டிடத்திலும் ஏசியை இயக்குவதைப் போன்ற செயலாகும்.
இவ்வாறு பயன்படுத்தக் கூடியதாக
கிடைத்திருக்கும் 150.58 டன் திரவ ஆக்சிஜனுக்காக ஆகியிருக்கும் மின்சார செலவு மட்டும்
சுமார் ரூ.80 லட்சம் ஆகும். அதாவது ஒரு சிலிண்டரில் பயன்படுத்தக்கூடிய
ஆக்சிஜனுக்கு சுமார் 500 ரூபாய் அளவில் மின்சாரம் செலவாகி இருக்கிறது. திரவ
ஆக்சிஜனை டேங்கர்களில் நிரப்புவதற்கான செலவு, போக்குவரத்துச் செலவு, பணியாளர்கள்
மற்றும் தொழிலாளர்களுக்கான சம்பளம், நுகர்பொருட்கள், நிரப்பு நிலையங்களில் பம்ப்
செய்வது, அவற்றைப் பராமரிப்பதற்கான செலவு என்று எதையும் சேர்க்காமலே இந்த மின்
செலவு மட்டுமே சென்னை நிரப்பு நிலையத்தில் விற்கப்படும் ஆக்சிஜனின் சில்லறை விலையை
விட இரு மடங்கு தொகை அளவிலே இருக்கிறது.
திரவ ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்த
இரண்டாவது ஆலையைக் கொண்டு வரப் போவதாக வேதாந்தா
நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு ஆலைகளும் முழுக் கொள்ளளவோடு
இயங்கினால், நூறு டன் ஆக்சிஜனைப் பிரிப்பதற்கான மின்சாரத்திற்கு மட்டும் ஒரு
நாளைக்கு ரூ.50 லட்சம் வரை செலவிட வேண்டியிருக்கும்.
ஆலையில் இருந்து பெறப்படும் ஆக்சிஜனை
இலவசமாக வழங்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் மிக அதிகமாக இருக்கின்ற இந்தச் செலவுகள் ஆக்சிஜனைப்
பயன்படுத்தும் இடங்களுக்கு அருகே அமைந்துள்ள சிறிய ஆலைகள் இன்னும் சிறப்பாக
இயக்கப்படுவதற்காகச் செலவழிக்கப்படலாம் என்றிருந்தால் இன்னும் சிறப்பாக
இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது. இந்த ஆலையின்
செயல்பாடு மின்சாரம், உயிர்காக்கும் வாயு ஆக்சிஜனை வெறுமனே வீணாக்குவதாகவே
இருக்கிறது.
வேதாந்தா ஏன் விருப்பப்பட்டு இவ்வளவு பெரிய
செலவைச் செய்கிறது என்ற மற்றொரு கேள்வி இங்கே எழுகிறது. காற்றை நச்சுப்படுத்தி ஆயிரக்கணக்கான மக்களை
மூச்சுத் திணறச் செய்து மூடப்பட்ட ஒரு நிறுவனத்தை ஆக்சிஜனை உற்பத்தி செய்ய
அழைத்திருப்பதில் உள்ள முரண்பாட்டை அறிந்து கொள்வது வேதாந்தாவின் உண்மையான நோக்கத்தை அறிந்து கொள்ள உதவும். தொற்றுநோய்க்
காலத்தில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முன்வந்திருக்கும் நிறுவனத்தைக் கேள்வி கேட்பது
ஒன்றும் கீழ்த்தரமானதாகவோ அல்லது இழிவானதாகவோ இருக்கப் போவதில்லை. அதிகாரத்தில்
இருப்பவர்கள் உண்மையில் வேதாந்தா காற்றில் வீசியெறிந்த விதிகளை அடையாளம் காண்பதற்கான
நிதானத்தைக் காட்டியிருந்தால் ஆக்சிஜன் நிலைமை அங்கே சிறப்பாகவே
கையாளப்பட்டிருக்கும்.
ஆக்சிஜனை வழங்க வேதாந்தா முன்வந்திருப்பது
வெற்று வாக்குறுதியாகவே இருக்கிறது. அதன் நோக்கம் தன்னுடைய ஆலையை மீண்டும்
பெறுவதற்கான நோக்கத்திலிருந்து பிரிக்க முடியாததாகவே இருக்கிறது.
இதுபோன்ற பேரழிவுகள் தீர்ப்புகளைத்
தெளிவற்றவையாக்கி, நேர்மையான விமர்சனங்களை முடக்கி, உணர்ச்சிகள் அறிவை மறைத்து தன்னியல்பான
எதிர்வினைகளைத் தூண்டுவதற்கே காரணமாகி விடுகின்றன.
நித்யானந்த் ஜெயராமன் சென்னையைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர்.
வேதாந்தாவிற்கு எதிரான தூத்துக்குடி பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கிறார்.







Comments