அஜாஸ் அஷ்ரப்
நியூஸ் க்ளிக்
நரேந்திர மோடி பகிரங்கமாக அழுதது 2004 ஆம்
ஆண்டு ஜனவரி 14 அன்று முதலாவதாகப் பதிவாகியது.
பிரதமராவதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நிகழ்வு நடந்த போது அவர் குஜராத்தின்
முதல்வராக இருந்தார். அவ்வாறு அவர் உணர்ச்சிவசப்பட்ட முதலிடமாக பூஜ் நகரில் உள்ள
ஜி.கே மருத்துவமனை இருந்தது.
2001ஆம் ஆண்டு குஜராத் பூகம்பத்தின் போது
சரிந்து போய் மீண்டும் கட்டப்பட்ட அந்த மருத்துவமனையைத் திறந்து வைப்பதற்காக பிரதமர்
அடல் பிஹாரி வாஜ்பாய் வந்திருந்தார். அந்த விழாவில் அவர் பேசுவதற்கு முன்பாக
அங்கிருந்த பார்வையாளர்களிடம் மோடி உரையாற்றினார். ‘நிலநடுக்கத்தின் தாக்கத்தை கட்ச்
மக்கள் எந்த அளவிற்குத் தாங்கிக் கொண்டார்கள் என்பதை நினைவு கூர்ந்த வேளையில் மோடி
ஒரு நிமிடம் கண்ணீர் வடித்தார்’ என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் குஜராத்
நிருபரான ரத்தீன் தாஸ் அப்போது எழுதினார்.
மோடியின் அந்த உணர்ச்சிகரமான தருணம் மிகச்
சமீபத்தில் மே 21 அன்று வாரணாசி தொகுதியில் மருத்துவர்கள் மற்றும் முன்னணி
ஊழியர்களுடன் நடந்த வீடியோ மாநாட்டின் போது நிகழ்ந்தது. கோவிட்-19ஆல் மக்களை இழந்து
நிற்கும் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கையில் அவர் பேச முடியாது மூச்சுத்
திணறினார். ஆனால் இந்த முறை அன்றைக்கு பூஜ் நகரில் நடந்ததைப் போல மோடியின்
கண்களில் இருந்து கண்ணீர் எதுவும் வெளிவரவில்லை.
பூஜ், வாரணாசி என்று இந்த இரண்டு
நிகழ்வுகளுக்கும் இடையில் அனைவரும் காணக்கூடிய வகையில் - உணர்வுகள் மூலம் தன்னைச்
சிறப்பாக முன்னிறுத்திக் கொள்கின்ற தருணங்களை விவரிப்பதற்காக ஊடகங்கள் பயன்படுத்தி
வருகின்ற வார்த்தைகளில் சொல்வதானால் - உணர்ச்சிவசப்பட்டவராக, கண்ணீர் ததும்புகின்ற
கண்களுடன், மூச்சுத்திணறலுடன் மோடி இருந்த நிகழ்வுகள் குறைந்தபட்சம் ஏழு என்ற எண்ணிக்கையில்
இருக்கின்றன. ஆயினும் இவ்வாறு பகிரங்கமாகக் கண்ணீர் வடித்த உலகின் முதல் தலைவராக
மோடி இருக்கவில்லை.
தலைவர்கள் ஏன்
அழுகிறார்கள்
யாராவது தன்னைப் புகழ்ந்து பேசுகின்ற பேச்சைக்
கேட்கும் போது அல்லது 1953இல் ராணி மேரியின் மரணத்தை அறிவித்த போது என்று
வின்ஸ்டன் சர்ச்சில் அடிக்கடி கண்ணீர் வடித்து விடுவார். தான் கலந்து கொண்ட இறுதிச்
சடங்கில் முதலில் சிரித்துக் கொண்டே வந்த முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தொலைக்காட்சிக் குழுவினரைப் பார்த்ததும்
கண்களைத் துடைத்துக் கொள்வதை நாம் காண முடிந்திருக்கிறது. இளவரசி டயானாவின்
மரணத்திற்குப் பிறகு பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் தனது ‘கண்ணீரை கஷ்டப்பட்டு நிறுத்திக்
கொண்டார்’. தன்னுடைய மனைவியை குடிகாரர், இனவெறி
கொண்டவர் என்று பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டதற்காக 1972ஆம்
ஆண்டில் எட்மண்ட் மஸ்கி அழுததைப் போன்று இதுவரையிலும் வேறு யாரும்
அழுததே இல்லை. அவரது அந்தக் கண்ணீர் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர்
தேர்தலில் வெல்வதற்கான அவரது வாய்ப்புகளை முறியடித்தது.
தங்கள் மீது கவனத்தையும், தங்களுக்கான ஆதரவையும்
குழந்தைகளைப் போலவே விரும்புகின்ற தலைவர்கள் பார்வையாளர்களிடம் அனுதாபம் கொண்ட
எதிர்வினையைத் தூண்டுவதற்காகவே அழுகின்றனர் என்று உளவியல் அறிஞர்கள்
கூறுகிறார்கள். அவர்களுடைய அழுகை எப்போதுமே ஏமாற்றுத் தந்திரமாக இருப்பதில்லை என்றாலும்
விமர்சகர்கள் ஏற்படுத்துகின்ற தீவிரமான தாக்கத்தைக் குறைக்க முனைவதாகவே அவர்கள்
விடுகின்ற கண்ணீர் பெரும்பாலும் இருக்கிறது.
அடிக்கடி கண் கலங்கும் தலைவர்கள்
பெரும்பாலும் போலியான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாகவே - பிளேருக்கு நடந்ததைப் போல
- கருதப்படுகிறார்கள். ‘கண்ணீரை உள்ளடக்கிக் கொண்டதை அவர் அரசியல் சமிக்ஞையாகவே செய்யத்
தொடங்கினார். மக்கள் அப்போதுதான் அதைச் சந்தேகிக்கத் தொடங்கினர். அவருடைய அந்தச் செயல்
மிகவும் திட்டமிட்டுச் செய்ததாகவே அவர்களுக்குத் தோன்றத் தொடங்கியது’ என்று நடத்தை
நிபுணர் ஜூடி ஜேம்ஸ் பிபிசியிடம் கூறினார். தலைவர்கள் உணர்வுரீதியாக
சிறுபிள்ளைத்தனமான செயல்கள் மூலமாக ஆதாயம்
பெறுவதாக உணரும் போது அவர்கள் அதைத் திட்டமிட்டு செய்கிறதாகவே பெரும்பாலும் கருதப்படுகிறது.
சராசரியாக வருடத்திற்கொரு முறை இதுபோன்று உணர்ச்சி
வயப்படும் காரியத்தை நிகழ்த்தி வருகின்ற மோடியை ‘அடிக்கடி அழுகிறவர்கள்’ என்ற
பிரிவிலேயே சேர்த்துக் கொள்ள வேண்டும். அவருடைய அழுகை நடந்த தருணங்கள் குறித்த
பகுப்பாய்வு தன்னுடைய குழந்தைப் பருவப் போராட்டங்கள், தாயார், பிரதமர் பதவிக்கு
தான் உயர்ந்தது, குஜராத் மாநிலம் மற்றும் அதன் மக்கள் என்று பேசுகின்ற போதெல்லாம்
அவரது கண்ணீர் நாளங்கள் அதிகமாக வேலை செய்வதாக எடுத்துக் காட்டுகின்றது.
மோடி அழுத போது
2014 மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில்
வெற்றியை நோக்கி பாரதிய ஜனதாவை அழைத்துச் சென்ற பின்னர் நாடாளுமன்றக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பிறகு மோடி இதுபோன்று
அழுதார். கட்சிக்கு மோடி உதவி செய்திருப்பதாக பாஜக தலைவர் எல்.கே.அத்வானி கூறியதற்கான
பதிலாகவே மோடியின் அந்த அழுகை இருந்தது. ‘…இந்தியா என் அம்மாவாக இருப்பதைப் போல
பாஜகவும் என்னுடைய அம்மா தான்… ஒரு தாய்க்கு ஒரு மகன் எப்படி உதவி செய்ய
முடியும்?’ என்று அப்போது மோடி கேள்வியெழுப்பினார். ஏழைச் சிறுவனாகிய தான் இந்த
இடத்தை அடைந்திருப்பதற்கான பெருமை பாஜகவையே சாரும் என்று அவர் கூறினார்.
ஒரு வருடம் கழித்து 2015 செப்டம்பரில் நடந்த
டவுன்ஹால் விவாதத்தில் மோடியுடன் ஃபேஸ்புக்கின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான
மார்க் ஜுக்கர்பெர்க் நடத்திய உரையாடலில் தாய், வறுமை போன்றவையே மீண்டும் மீண்டும்
வந்தன. மோடியின் குடும்பத்துப் பின்னணி குறித்து ஜுக்கர்பெர்க் கேட்ட போது ‘அம்மா…
90 வயதிற்கும் மேலாகிறது. ஆனாலும் தன்னுடைய எல்லா வேலைகளையும் தானே செய்து
கொள்கிறார்’ என்று கூறிய போது மோடியின் குரல் உடையத் தொடங்கியது. சற்றே
இடைநிறுத்தி, மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு தன்னை வளர்ப்பதற்காக தனது தாயார் அண்டை
வீட்டாரின் வீடுகளில் பாத்திரங்களைக் கழுவி வந்ததாக அவர் கூறினார்.
‘வீட்டு வேலை செய்பவராக மோடியின் தாய் வேலை
செய்து வந்தார் என்ற கூற்றிற்குச் சான்றாக இதுவரையிலும் எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை’
என்று ‘நரேந்திர மோடி: தி மேன், தி டைம்ஸ்’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் நிலஞ்சன்
முகோபாத்யாவை மேற்கோள் காட்டி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டிருந்ததைத் தவிர்த்துப்
பார்க்கும் போது அன்றைய நிகழ்வு உண்மையில் மனதைத் தொடுகின்ற, மறக்கமுடியாத
தருணமாகவே அமைந்தது.
2016 ஆகஸ்ட் மாதம் ஆன்மீக குருவும்,
போச்சசன்வானி அக்சர் சுவாமிநாராயண் சாந்தாவின் தலைவருமான பிரமுக் சுவாமியின்
மரணத்தின் போது உரையாற்றிய மோடி மீண்டும் கண்ணீருடன்
‘போராடினார்’. அவரும் பிரமுக் சுவாமியும் மிகவும் நெருக்கமானவர்கள் என்பதால் மோடி அவ்வாறு
உணர்ச்சிவசப்பட்டது புரிந்து கொள்ளத் தக்கதே என்று அப்போது கூறப்பட்டது. வறுமை
என்ற கருப்பொருள் மோடியின் அந்த இரங்கல் உரையிலும் தலைகாட்டியது. பிரமுக் சுவாமி தில்லியில்
உள்ள அக்சர்தாம் கோவில் அடிக்கல் நாட்டும் விழாவில் தான் கலந்து கொள்ள
வேண்டுமென்று விரும்பினார் என்று மோடி அப்போது பேசினார். ‘என்னுடைய பாக்கெட்டில்
பணம் எதுவும் இருக்காது என்ற நம்பிக்கையால் அந்தச் சடங்கின் போது பிரமுக் சுவாமியிடம்
நான் வழங்குவதற்காக கொஞ்சம் பணத்தை தனது சாமியார்களில் ஒருவர் மூலமாக எனக்கு
முதலிலேயே கொடுத்தனுப்பியிருந்தார்’ என்று மோடி கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு 2016 நவம்பரில்
கோவாவில் பிரதமர் மோடி ‘உணர்ச்சி பொங்க மூச்சுத் திணறினார்’. தன்னால் அறிவிக்கப்பட்ட
பணமதிப்பு நீக்க கொள்கையால் ஏற்பட்ட கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளுமாறு அவர் தேசத்திற்கு வேண்டுகோள் விடுத்தார். அவரது
வேண்டுகோள் தனிப்பட்ட முறையில் இருந்த விளக்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தன்னுடைய இளமைக் காலத்தில் தான் செய்த தியாகங்களைப் பற்றி பேசிய மோடி ‘நான் இங்கே
நாற்காலிக்காக (உயர் பதவி) இருக்கவில்லை. இந்த நாட்டுக்காக எனது வீடு, குடும்பம்
என்று அனைத்தையும் நான் விட்டுவிட்டேன்’ என்றார்.
பணமதிப்பு நீக்க கொள்கையால் ஏற்பட்டிருந்த
குழப்பங்களை முடிவிற்குக் கொண்டுவர தனக்கு ஐம்பது நாட்கள் அவகாசம் வழங்குமாறு சகோதர சகோதரிகளிடம் மோடி கேட்டுக்
கொண்டார். ‘எவ்வாறான அதிகாரங்களை’ எதிர்கொண்டிருக்கிறேன் என்பதை தான் நன்கு
அறிந்திருப்பதாகவும், அதனால் அவர்கள் அனைவரும் தனக்கு அவகாசம் தர வேண்டும் என்றும்
அவர் கேட்டுக் கொண்டார். ‘அவர்கள் என்னை உயிர் வாழ விடமாட்டார்கள் என்பது எனக்கு
நன்றாகத் தெரியும்’ என்று கூறிய மோடி ஊடக தலைப்புச் செய்திகளில் உடனடியாக இடம்
பெற்றார்.
மோடியின் அடுத்த வருடாந்திரச் சடங்கு 2017
டிசம்பரில் நிகழ்ந்தது. குஜராத் சட்டமன்றத் தேர்தலில் கடுமையான போராட்டத்திற்குப்
பிறகு கிடைத்த வெற்றியை நோக்கி பாஜகவை வழிநடத்திய பின்னர், தனது கட்சி எம்.பி.க்களிடம்
அவர் உரையாற்றினார். சொந்த மாநிலத்திலிருந்து பிரதமர் அலுவலகத்திற்குத் தான் சென்ற
பயணத்தை விவரித்த மோடி மூன்று முறை அழுததாக தி பிரிண்ட் இணையதளம் தெரிவித்தது.
பிரதமர் அலுவலகத்தைக் கைப்பற்ற முடிந்த தனது கட்சி முன்னோடிகளில் எவராலும் கடந்த
மூன்று ஆண்டுகளில் தான் பெற்றிருப்பதைப் போல தேர்தல் வெற்றிகளைப் பெற முடியவில்லை
என்பதையும் தனது பார்வையாளர்களிடம் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.
2018ஆம் ஆண்டில், தில்லியில் நடந்த தேசிய
காவல்துறை நினைவுச்சின்னத்தின் துவக்க விழாவின் போது மீண்டும் மோடியின் அந்த
உணர்ச்சிகரமான தருணம் வந்தது. காவல்துறையினரின் சேவைகளையும், தியாக உணர்வையும் விவரித்த
போது மோடிக்கு மூச்சுத் திணறியது. தனது உரையின் போது, தான் ஆட்சிக்கு வருவதற்கு
முன்பாக இருந்த எழுபது ஆண்டுகளில் ஏன் இவ்வாறான நினைவுச்சின்னம் கட்டி எழுப்பப்படவில்லை என்று
ஆச்சரியப்பட்டுப் பேசியிருந்தார்.
பகுதி உணர்வுப்பூர்வமாகவும், பகுதி போரிடும்
வகையிலும் இருக்கின்ற மோடியின் பேச்சு ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏவான அல்கா லம்பாவைத் தூண்டியது. ‘முன்பெல்லாம்
ஏன் நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒரு பெண்ணைப் போல
அழுகிறீர்கள்? என்று மக்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது ஏன் நீங்கள்
ஒவ்வொரு முறையும் மோடியைப் போல அழுகிறீர்கள்?? என்று மக்கள் கேட்கிறார்கள்’ என்று அவரை
ட்வீட் போட வைத்தது. விளைவாக சமூக ஊடகப் புயல் ஒன்றை லம்பா தூண்டி விட்டிருந்தார்.
தேசமே அழுத போது மோடி ஏன்
அழவில்லை?
2019ஆம் ஆண்டில், தனக்கென்றிருந்த புகழ்
மற்றும் பிரபலத்தின் புதிய சிகரங்களை மோடி எட்டினார். 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி
பெற்ற பிறகு அவருடைய அரசாங்கம் 370ஆவது சட்டப்பிரிவை நீக்கிய பின் காஷ்மீரிகளை வீடுகளுக்குள்
அடைத்து வைத்தது. அதற்குப் பின்னர்
குடியுரிமை சட்டத்திருத்தம் இயற்றப்பட்ட போது முஸ்லீம்களும், தாராளவாத
ஹிந்துக்களும் திகைப்புடனும், அச்சத்துடனும் வீதிகளில் இறங்கிப் போராடினர். 2020
மார்ச் மாதத்தில் நான்கு மணிநேர இடைவெளியில் தேசிய அளவிலான பொதுமுடக்கத்திற்கு உத்தரவிட்ட
போது, அதிர்ச்சியடைந்த ஒரு கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கால்நடையாகவே தங்கள்
வீட்டிற்கு விரைந்து செல்ல வேண்டியதாயிற்று. 2018ஆம் ஆண்டு பீமா-கோரேகான்
வன்முறையில் பங்கெடுத்ததாகக் கூறி அறிவுஜீவிகளான ஆனந்த் டெல்டும்ப்டே, கௌதம்
நவலகா, பாதிரியார் ஸ்டான் சுவாமி ஆகியோரைச் சிறையில் அடைத்ததைப் போலவே குடியுரிமை
சட்டத் திருத்தத்திற்கு எதிரான ஆர்வலர்களும் சிறைக்குள் தள்ளப்பட்டனர். பல
மாதங்கள் கழித்து மோடி அரசாங்கம் இயற்றிய மூன்று புதிய வேளாண் சட்டங்களால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் கோபமடைந்தனர்.
இவ்வாறு தேசத்தின் பெரும் பகுதி அழுது கொண்டிருந்த போதெல்லாம் மோடி அழுததை எவரொருவராலும் காண முடியவில்லை.
அடுத்து ஓர் அசாதாரண சூழ்நிலையில் - குலாம்
நபி ஆசாத்திற்கு வழியனுப்பி வைக்கின்ற நிகழ்வில்
உரையாற்றிய போது - மோடியின் அடுத்த உணர்ச்சிகரமான தருணம் நிகழ்ந்தது.
மாநிலங்களவையில் ஆசாத்தின் பதவிக்காலம் 2021 பிப்ரவரியில் முடிவிற்கு வந்தது.
ஈரமான கண்கள், பேச்சிற்கிடையே நீண்ட இடைநிறுத்தங்கள், ஒருதரம் தண்ணீரைப் பருகியது என்று
மோடியின் அசாத்தியமான நாடகமேடைக் கலை அன்றைக்கு அரங்கேறியது.
2006ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீர்
முதலமைச்சராக இருந்த ஆசாத் குஜராத்தி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்
குறித்து தனிப்பட்ட முறையில் தன்னிடம் தெரிவிப்பதற்காக அழைப்பு விடுத்ததே அவரை
அவ்வாறு தூண்டியிருந்தது. சில ஆய்வாளர்கள் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் அவர்
வெறுக்கவில்லை என்பதற்கான ஆதாரமாக மோடியின் பலவீனமான அந்த தருணம் இருந்ததாக விளக்கினர்.
மே 21 வரையிலும் பார்க்கும் போது தனது
குழந்தைப் பருவத்தை, அரசியல் போராட்டங்களை அல்லது குஜராத்தை நினைத்து மோடி அழாதது தேசிய
காவல்துறை நினைவுச்சின்ன விழாவில் அவர் உரையாற்றிய போது மட்டும்தான். இப்போது அந்த
விதிவிலக்குடன் வாரணாசியில் மருத்துவ பணியாளர்களுடன் அவர் பேசிய வீடியோ மாநாடும் சேர்ந்து
கொண்டுள்ளது. கோவிட்-19 தொற்றுநோயின் மீது மத்திய அரசு கொண்டிருக்கின்ற மிகமோசமான
நிர்வாகத்தின் காரணமாக ஒட்டுமொத்த நாடும் பாதிக்கப்பட்டிருப்பதால் தன்னுடைய
பிம்பம் மீது ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மோடியிடம் வலியை ஏற்படுத்தியிருக்கலாம்.
இருந்தபோதிலும் இந்த முறை வாரணாசி
குடிமக்களுடன் பேசியபோது அவருக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல் நிகழ்விற்கு பாஜகவிற்கு
ஆதரவாக இருக்கக்கூடிய செய்தித்தாள்களில் கூட முக்கியத்துவம் கிடைக்கவில்லை. நடத்தை
நிபுணர் ஜூடி ஜேம்ஸ் கூறுவதைப் போல தொடர்ச்சியாக அழுகின்ற தலைவர்களின் அறிவுசார் பக்கம் அவர்களின் பார்வையாளர்களிடம் மெதுவாகப்
பாதிப்பிற்குள்ளாவதை அந்தச் செய்தித்தாள்கள் உணர்ந்திருக்கலாம். குறிப்பாக ‘ஏதாவது
பெற வேண்டும்’ என்று கருதுகின்ற தலைவர்கள் தங்களுடைய நாடகத்தனத்தால் பார்வையாளர்கள்
முன்பு சுயநலம் மிக்கவர்களாகவே தோன்றுகிறார்கள்.
எந்தவொரு தலைவரையும் போல தன்னுடைய புகழ்
குறைவதை தான் காணக்கூடாது என்றே மோடியும் விரும்புகிறார். மோடியின் அழுகை குறித்த
இந்த சுருக்கமான வரலாறு பெரும்பாலும் அவரது கண்ணீர் தன்னைப் பற்றியதாகவே
இருக்கிறது என்பதையே காட்டுகிறது.
https://www.newsclick.in/how-many-times-has-Modi-cried







Comments