ரூபன் பானர்ஜி
அவுட்லுக்
இந்தியா
தந்தை இறந்து சுமார்
பத்து ஆண்டுகள் கழித்து கடந்த நவம்பரில் என் தாயையும் இழந்த நான் அனாதையானேன். ஆனாலும்
அனாதையாகி விட்டதால் ஏற்படுகின்ற உதவியேதுமற்ற உணர்வு பெரிதாக என்னிடம் ஒருபோதும் இருந்ததில்லை.
மீண்டும் கோவிட்-19 தாக்கிய பிறகு நம்மைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளும் பதற்றத்திலேயே
நம்மை வைத்திருக்கின்ற இந்த இரண்டாவது அலைக்கு மத்தியிலே இப்போது அந்த உணர்வு என்னிடம்
வந்து சேர்ந்திருக்கிறது. வீடுகளுக்குள் தொடர்ந்து
மரணம் அதிகரித்துக் கொண்டே இருப்பது நம்மை விரக்தியின் ஆழத்திற்குத் தள்ளியிருக்கின்ற
வேளையில் மிகக் குறைவான உதவிகளே நமக்குக் கிடைக்கின்றன. ஆக்சிஜனுக்கு மட்டுமே பற்றாக்குறை
இருக்கவில்லை. அதற்கு மாறாக உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவமனை படுக்கைகள் என்று
எவையும் போதுமான அளவில் இருக்கவில்லை. எதுவுமே கிட்டாத நிலைக்குள் தள்ளி விட்டு, விரக்தி
நம்மிடம் அதிகரித்திருப்பதற்கான காரணமாக தன்னுடைய பொறுப்பைக் கைகழுவி விட்டு நம்மைத்
தவிக்க விட்டிருக்கும் இந்த அரசாங்கம்தான் இருக்கிறது. இவையனைத்தையும் மீறி ஒருவேளை நம்மால் உயிருடன் இருக்க
முடியுமென்றால், நம்முடைய நல்ல நேரத்திற்கும், மிகவும் குறைவாக இருக்கின்ற வசதிகளைக்
கொண்டு பல உயிர்களைக் காப்பாற்றுவதற்காகப் போராடி வருகின்றவர்களுக்கும் மட்டுமே நாம்
நன்றி சொல்ல வேண்டும்.
என் மனைவி, மகளுடன் நானும்
அதிர்ஷ்டசாலியாகவே இருக்கிறேன். கோவிட் பாதிப்பு எங்களுக்கு ஏற்பட்ட போதிலும் மருத்துவ
உதவி கிடைக்காது தினமும் இறந்து போகின்ற பல்லாயிரக்கணக்கானோரைப் போல எங்களுடைய ஆக்சிஜன்
அளவு குறையவில்லை. எனவே நல்ல வேளையாக எங்களுக்கு மருத்துவமனை பராமரிப்பு தேவைப்படவில்லை.
ஒருவேளை அதுபோன்றதொரு தேவை ஏற்பட்டிருந்தால் அதிகாரத்தில் இருப்பவர்களின் முரட்டுத்தனம்,
திறமையின்மையால் இந்நேரம் நாங்கள் எங்கேயோ உள்ளதொரு தகன மையத்தைச் சென்றடைந்திருப்போம்.
தங்களால் தர முடியாத அனைத்தையும் நமக்குத் தருவதாக வாக்குறுதி அளித்த அவர்கள் இன்றைக்கு
மூச்சு விடுவதற்கே நம்மைக் கெஞ்ச வைத்திருக்கிறார்கள்.
இவ்வாறு மூச்சுத் திணறுகின்ற
நிலைமைக்கு எது நம்மை இட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ள நமக்கு எந்தவொரு ராக்கெட்
அறிவியலும் நிச்சயம் தேவைப்படாது. பெரிய நகரங்களில் மிகப் பழமையானவையாகவும், மற்ற நகரங்கள்,
கிராமங்களில் இல்லாததாக அல்லது வருத்தம் அடைய வைக்கும் நிலையில் இருக்கின்ற நமது மோசமான
பொது சுகாதார உள்கட்டமைப்பு இந்த நெருக்கடியின் போது முற்றிலும் போதாததாகவே இருந்திருக்கிறது.
அது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனாலும் தொடர்ந்து தற்பெருமை பேசி வந்திருக்கும்
இந்த அரசு நம் காலத்தின் மிகப் பெரும்பேரழிவிடம் சரணடைந்திருக்கின்ற வேகம் ஆச்சரியமளிப்பதாகவே
இருக்கிறது. தொடர்ந்து வெற்று வீறாப்புடன் பேசி வந்தாலும் இந்த அரசு எப்போதும் சந்தர்ப்பவாதத்துடனே
இருந்து வந்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராகத் தீப்பொறி பறக்கப் பேசினாலும் சக்தி படைத்த
சீனாவிற்கு எதிராக அது தன்னுடைய குரலை அடக்கியே இருந்து வந்திருக்கிறது. வெறியாட்டம்
போடுகின்ற இந்த தொற்றுநோய்க்கு எதிராக எதுவும் செய்யாமல் அமைதியில் அது உறைந்து போய்
விட்டது.
மிகவும் கடுமையாக, வலிமையாக,
திறமையுடன் இருக்கப் போவதாக உறுதியளித்து தொடர்ச்சியாக இரண்டு தேர்தல்களில் வெற்றி
பெற்று வந்திருக்கும் இந்த அரசின் செயல்பாடுகள் மிகவும் முக்கியமாகத் தேவைப்படுகின்ற
நேரத்தில் அதன் தலைமையில் இருப்பவர்களை நம்மால் காண முடியவில்லை. கடந்த காலங்களில்
உணவுத் தட்டுகளைத் தட்டச் சொல்லி, பட்டாசுகளை வெடிக்கச் செய்து நம்மையெல்லாம் அணிதிரட்டி
நமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டவர்கள் தற்போது விடுப்பிலே சென்று
விட்டனர். சில அமைச்சர்களும், உயர் ஆலோசகர்களும் எப்போதாவது எதையாவது உளறிக் கொட்டுகிறார்கள்.
எதுவொன்றையும் சாதித்திராத போது அதற்கான பெருமையை மட்டும் அவர்கள் தங்களுக்கு உரித்தாக்கிக்
கொள்ளும் வகையிலேயே அவர்களுடைய பேச்சுகள் இருக்கின்றன. அவற்றில் எந்தவிதமான உறுதிப்பாடோ
அல்லது நம்பகத்தன்மையோ இருப்பதில்லை. இந்தியாவில் தன்னுடைய இறுதியாட்டத்திற்காக தொற்றுநோய்
ஏற்கனவே நுழைந்து விட்ட நிலையில் அவர்கள் ‘நாம் வைரஸை வென்று விட்டோம், வைரஸுக்கு எதிரான
தடுப்பூசி இயக்கத்தில் இந்த உலகை வழிநடத்துவோம்’ என்று கூறவில்லையா? இன்றைக்கு நாம்
இருக்கும் நிலைமைக்குப் பொறுப்பானவர்களை இனிமேலும் நாம் ஏன் நம்ப வேண்டும்?
அவர்கள் சொல்லிய எதுவுமே உண்மையாக இருக்கவில்லை. தங்களுக்குள்ளாக தன்னிறைவை அவர்கள் வளர்த்துக் கொண்டதற்கான
அதிக விலையை இன்றைக்கு நாம் கொடுக்க வேண்டியிருப்பதால் அவர்களுடைய முதிர்ச்சியற்ற பேச்சுகள்
குற்றம் நிறைந்தவையாகவும் இருக்கின்றன. தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கு ஓராண்டு
கால அவகாகசத்தை இந்த தொற்றுநோய் அளித்திருந்த போதிலும் நாட்டின் உயர்தலைமை தன்னைப்
பிரச்சாரத்தில் நிலை நிறுத்திக் கொள்ளவே முயன்று கொண்டிருந்தது. அதே வேளையில் ஏராளமான
பத்திரிகைகள் அந்த தலைமையின் பிம்பம் மற்றும் பிராண்டை மேம்படுத்துவதிலேயே தங்களுடைய
பெரும்பகுதி இடத்தை வீணடித்துக் கொண்டிருந்தன. அந்த தலைமையின் ஆற்றலின் பெரும்பகுதி
தேர்தல்களில் வெற்றி பெறுவது, மதம் சார்ந்த அதிவேக வைரஸ் பரப்பி நிகழ்வுகளை ஒழுங்கமைப்பதை
நோக்கியே திசை திருப்பப்பட்டிருந்தது.
அரசின் மீது வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகள் மிகத் தெளிவாக இருந்த போதிலும், மிகச் சிறிய அளவிலான மனக்கவலை கூட இந்த அரசிடமிருந்து வெளிப்படவில்லை என்பது உண்மையில் துரதிர்ஷ்டவசமானதாகும். அவர்களால் அறிவிக்கப்பட்ட ஆக்சிஜன் ஆலைகள் துவங்கப்படவில்லை, தடுப்பூசிகளின் உற்பத்தி மற்றும் விநியோகம் சரி செய்யப்படவில்லை அல்லது அதிகரிக்கப்படவில்லை. கோவிட் குறித்த நிபுணர் குழுக் கூட்டங்களும் தேவையான நேரத்திலே நடத்தப்படவில்லை. அந்தக் குழுவிற்கென்று எந்தவொரு பொறுப்பும் நிர்ணயிக்கப்படவில்லை. தங்களுடைய பொறுப்புகளை நிறைவேற்றாத யாரும் குழுவிருந்து நீக்கப்படவில்லை. அவ்வாறான நிலையில் அவர்கள் வழக்கம் போல தொற்றுநோயை விட அரசியலுக்கே முன்னுரிமை அளித்து வருகின்றனர்.
மேற்குவங்க மாநிலத்தில் தேர்தலுக்குப் பிறகு நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் தொடர்பாக அரசியல்வாதிகள் போராட்டத்தில் இறங்கிய போது மத்தியிலிருந்து அணிகள் வங்காளத்திற்கு விரைந்தன. இந்தக் காலகட்டத்தில் அசாமில் முதலமைச்சர் பதவிக்கான நீண்ட அதிகாரப் போராட்டமும் நடந்தேறியிருக்கிறது.
ஆனால் இதுபோன்ற அர்ப்பணிப்பு கொடிய நோயான கோவிட்டை எதிர்கொள்ளும் போது மட்டும் அவர்களிடமிருந்து காணாமல் போய் விடுகிறது. அச்சத்தில் நாம் உறைந்து நிற்கின்ற நிலையில் இந்த தலைவர்கள் நமது கண்களில் படாமல் காணாமல் போயிருக்கின்றனர். பரந்து விரிந்த மார்புடன் உயர்ந்து நிற்பதாக தங்களைக் காட்டிக் கொண்டவர்கள் உண்மையான சோதனை என்று வரும்போது மிகவும் பலவீனமாக, சிறுத்து காணாமல் போய் விட்டிருக்கிறார்கள்.
https://magazine.outlookindia.com/story/india-news-twice-orphaned/304535
Comments