ஆதி இந்தியா - ஆடுகளும், பிராமணர்களும்

 காஞ்சா அய்லய்யா

எக்கனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி



ஆதி இந்தியர்கள்: நம்முடைய மூதாதையர் யார், அவர்கள் எங்கிருந்து வந்தனர் - டோனி ஜோசப், புதுதில்லி: ஜாகர்நாட், 2018; பக் 288, ரூ.699

முதன்முதலாக 2019ஆம் ஆண்டு ஜெய்ப்பூர் இலக்கிய விழாவிலும், அதற்கடுத்து 2020 ஜனவரியில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மாத்ருபூமி இலக்கிய விழாவிலும் டோனி ஜோசப்பை நான் சந்தித்தேன். ஆடுகள், எருமைகள், மாடுகள் போன்ற கால்நடைகளைப் பற்றிய புரிதல், ஆதி இந்தியாவில் இருந்த சாதி, இன உறவுகள், பிராமணியத்தின் இந்தியா குறித்த புரிதல் எந்த இடத்தில் தவறாகப் போய் அது விலங்கு எதிர்ப்பு பொருளாதாரமாக, வேளாண் எதிர் உற்பத்தி சார்ந்ததாக மாறியது என்பது குறித்த நீண்ட விவாதங்களை அவருடன் நான் மேற்கொண்டேன். தன்னிடமிருந்த புரிதல் தோன்றக் காரணமாக இருந்த தனது ஆர்வம் குறித்தும், தன்னுடைய புத்தகம் பற்றியும் அவர் பல விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அதற்குப் பின்னர் ஒரு வரி விடாமல் தீவிரமாக அவரது புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். அவரது புத்தகம் வேறெந்த வரலாற்றாசிரியர், உளவியலாளர், எழுத்தாளர்களுடைய எழுத்துக்களிலும் ஆதி இந்தியா குறித்து அதற்கு முன்னதாக ஆராயப்பட்டிராத பல புதிய பரிமாணங்களை எனக்கு காட்டியது.    


விலங்கு, தாவரங்கள், பறவை வளர்ப்பு, உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் இந்தியாவிற்கும் நடைபெற்ற மனிதர்களின் இடப்பெயர்வு ஆகியவற்றின் பொருளாதார, கலாச்சார பரிணாம வளர்ச்சி குறித்த கண்டுபிடிப்புகளின் பின்னணியில் இந்தியப் பொருளாதார, கலாச்சார பரிணாம வளர்ச்சி பற்றிய புதிய கண்ணோட்டத்தை அவருடைய புத்தகம் திறந்து காட்டியது. அவரது புத்தகத்தில் ‘முதல் விவசாயிகள்’ என்ற அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ஆரம்பகால இந்திய விவசாய முறையைப் பற்றி வாசித்த போது எனக்குள் முதன்முறையாக புதியதொரு பார்வை தோன்றியது. அந்த அத்தியாயத்தில் ‘கி.மு.7900ஆம் ஆண்டில் மத்திய ஜாக்ரோஸ் மலைப் பகுதியில் உருவான கஞ்ச் தாரே குடியேற்றத்தில் இருந்து ஆடுகளை வளர்த்ததற்கான முதல் சான்றுகள் கிடைத்தன’ (பக்கம் 78) என்று அவர் எழுதியுள்ளார்.     

இப்போதும் கூட புதர்கள் நிறைந்த மலைகள் - அந்த மலைகளைச் சுற்றிலும் ஆடுகள் எவ்வாறு நன்றாக வாழ்கின்றன என்பது குறித்த அறிவு இந்தியாவில் உள்ள மேய்ப்பர்களிடம் இருக்கிறது. ஆடுகள் எந்தவொரு புதிய சூழலுக்கும் தம்மைச் சரிசெய்து கொண்டு வாழக்கூடிய விலங்கு என்று சொல்லப்படுகிறது. ஆடுகள் மிகவும் புத்திசாலித்தனமாக தங்களுக்கு கிடைக்கின்ற தாவரங்களிலிருந்து தேவையான உணவைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன. தங்களுடைய உணவுக்காக ஆடுகள் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் தாவரங்கள், பிற்காலத்தில் நோய்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காக மனிதர்கள் பயன்படுத்திய பல மருந்துகளைக் கண்டறிந்து கொள்ள உதவின.   


மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு மிகவும் தேவையான பொருட்களாக ஆட்டுப் பால், இறைச்சி போன்றவை இருந்ததால், வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் பல அன்னிய நிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முதல் வளர்ப்பு விலங்காக ஆடுகள் இருந்ததில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. ஆரம்பகால வளர்ப்பு விலங்காக ஆடுகளைக் கண்டறிந்து கொண்ட அந்தச் செயல் வேட்டை - உணவு சேகரிப்பு வழக்கத்திலிருந்தும், குறுகிய ஆயுட்காலத்திலிருந்தும் மனிதர்களை வெளிக் கொண்டு வர உதவியது.   

ஆடுகளின் இறைச்சியும், பாலும் மனிதர்கள் உயிர்வாழ மிகவும் பொருத்தமானவையாக இருந்ததால், ஓரிடத்தே நிலைத்து வாழ்கின்ற மனிதர்களின் வாழ்க்கைக்கு ஆடுகள் மிகவும் பயனுள்ளதாகிப் போயின. ஆடுகள் மிக இயல்பாக மனிதர்களின் நிலையான உணவின் முதல் ஆதாரமாக மாறின. இன்றைக்கும் கூட ஆடு-செம்மறி பொருளாதாரம் உலகளாவிய உணவு, தோல், கம்பளி சார்ந்த பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கை வகித்து வருகின்றது. [இன்றும் இந்தியாவில் ஆடு-செம்மறி பொருளாதாரம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. கால்நடை மேய்ச்சலே வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் இருக்கின்ற இந்திய மேய்ச்சல் சமூகங்களின் மூதாதையர்களின் தொழிலாக இருந்தது. பிராமண மக்களுக்கும், பிராமணிய சித்தாந்தத்திற்கும் அந்த பெரிய சமூகத்தின் மீது மரியாதை எதுவும் இல்லாததால் பல்வேறு வகையான பாகுபாடுகளுக்கு அந்த மக்கள் ஆளாக நேர்ந்தது. பகவத்கீதையை அருளியவரான ஸ்ரீகிருஷ்ணர் கால்நடை மேய்ச்சலைச் செய்கின்ற யாதவ சமூகத்திலிருந்து வந்தவர் என்று கூறப்பட்டாலும், அந்த சமூகத்தினரை பிராமணியம் மரியாதையின்றியே நடத்துகிறது. வரலாற்று ரீதியாக சமஸ்கிருதக் கல்வியை அவர்களுக்குத் தர மறுத்து விட்டது. அந்த மக்கள் ஆங்கிலக் கல்வி, உலகளவில் கிடைக்கக்கூடிய மென்பொருள் அறிவு ஆகியவை கிடைக்காமல் மோசமான நிலையிலேயே இப்போதும் வைக்கப்பட்டுள்ளனர். ஆடுகளை ஆரம்பகால வளர்ப்பு விலங்காகக் கண்டறிந்தது அவர்களுக்கு புதிய நம்பிக்கையை உருவாக்கித் தருவதாக இருந்தது என்று டோனி ஜோசப் கூறுகின்றார். இப்போது ஆர்எஸ்எஸ் / பிஜேபி சித்தாந்தத்தில் எருமைக்கு மரியாதை இல்லாமல் இருப்பதைப் போல, முன்னர் பிராமண இலக்கியங்களில் ஆடுகளுக்கும் மரியாதைக்குரிய இடம் தரப்பட்டிருக்கவில்லை என்று அவர் எழுதியுள்ள இந்தப் புத்தகம் குறிப்பிடுகிறது. காஞ்சா அய்லய்யா ஷெப்பர்ட்(2018) ஐக் காண்க].    


ஜோசப் தன்னுடைய புத்தகத்தில் ஒரு காலத்தில் ஓரிடத்திலே மனிதர்களால் வளர்க்கப்பட்டு வந்த விலங்குகள் உலகெங்கிலும் தற்போதைய கண்டங்களில் மனித வாழ்விடங்கள் சாத்தியமாகியுள்ள பகுதிகளுக்கு புலம் பெயர்ந்து சென்ற மக்களுடன் எவ்வாறு எடுத்துச் செல்லப்பட்டன என்பது குறித்து விளக்கியுள்ளார். 

மேலும் ‘வீட்டு வளர்ப்பிற்காக ஒரே இனத்தைப் பழக்கப்படுத்துவதில் பல்வேறு நிகழ்வுகளைக் கொண்டிருந்த இறுதி பனிப்பாறைக் காலத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் ஆங்காங்கே தொடங்கிய தாவர, விலங்கு வீட்டு வளர்ப்புகளுக்கு வெவ்வேறு காலங்களில் இனப்பெருக்கம் நடைபெற்ற பகுதிகள் பங்களிப்பு செய்தன. அதற்குப் பின்னர் கி.மு 9500க்கும் கி.மு6500க்கும் இடைப்பட்ட - இளைய ட்ரையஸ் கால முடிவின் தொடக்கத்திலிருந்து ஹோலோசீன் தொடக்கம் வரை இருந்த - மூவாயிரம் ஆண்டு காலத்தில் வளமான பிறை (Fertile Crescent) பகுதி முழுவதிலும் தாவரங்கள், விலங்கு வளர்ப்பு பரவியிருந்ததை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது’ என்று அவர் குறிப்பிடுகிறார்.

மேலும் ‘அந்த மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே - தாவரங்களையும் விலங்குகளையும் வளர்ப்பதற்காகப் பழக்கப்படுத்தும் பணி இன்னும் நிறைவடையவில்லை என்றாலும் - அவற்றை மக்கள் தங்களுடன் எடுத்துக் கொண்டு புதிய இடங்களுக்குக் குடிபெயர்ந்ததை நம்மால் காண முடிகிறது. தாவரங்களும், விலங்குகளும் வளமான பிறை பகுதியில் இருந்த பல இடங்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டன - தெற்கு லெவண்டில் இருந்த ஆடுகள் அதற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன (பக்கம் 79)’ என்று அவர் கூறுகிறார். இந்திய துணைக் கண்டம் இந்த தெற்கு லெவண்டின் கீழ்தான் வருகிறது.  

ஆரியர்களின் இடப்பெயர்வு

மூன்றாவது மற்றும் கடைசியான பண்டைய மனித இடப்பெயர்வின் ஒரு பகுதியாக குதிரைகளை போர் விலங்காகவும், வெள்ளை மாடுகளை உணவிற்கான விலங்காவும் கொண்டு ஆரிய இடப்பெயர்வு நடந்தது என்று ரொமிலா தாப்பர் (2003), ஆர்.எஸ்.சர்மா (1999) உள்ளிட்ட வரலாற்றாசிரியர்களைக் காட்டிலும் மிக அதிகமான ஆதாரங்களுடன் ஜோசப் நிறுவியுள்ளார். ஆரிய பிராமணியத்தைப் பொறுத்தவரை குதிரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விலங்காக இருந்ததையும், ரிக்வேத சக்திகளுக்கு அது மிகவும் முக்கியமானதாக இருந்ததையும் ஜோசப் எழுதியுள்ள புத்தகம் நிறுவியுள்ளது. வேதப் பிராமணர்களைப் போன்று ஹரப்பன்கள் போர் ஆர்வலர்களாக இருக்கவில்லை என்பதால் குதிரைகளைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. அவர்களுடைய முக்கியமான உணவு விலங்காக ஆடுகள் இருந்த போதிலும் அவை பற்றி  ஒரேயொரு ரிக்வேத பாடலில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.      


சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறியவர்கள் இந்தியாவை அடைந்தபோது இந்திய ‘பீஸ்ஸா’ உருவாக்கப்பட்டது. கி.மு.7000க்குப் பிறகு ஜாக்ரோசியன் இடையர்கள் (மேய்ப்பர்கள்) பலுசிஸ்தானை அடைந்ததும், முதல் இந்தியர்களுடன் கலந்து பின்னர் ஹரப்பன் நாகரிகத்தை கட்டியெழுப்பியதும் அந்த பீஸ்ஸாவிற்கான சாஸ் தயாரிப்பு தொடங்கியது… அதற்குப் பின்னர் கி.மு 2000க்குப் பிறகு ஆரியர்கள் வந்தார்கள் (பக்கம் 203)’ என்று டோனி ஜோசப் கூறுகிறார்.  

ஆரியர்களுக்கு இந்திய ஹரப்பன் நாகரிகத்தைக் கட்டியெழுப்பியதில் எந்தப் பங்கும் இல்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. என்னுடைய பார்வையில், ஹரப்பா என்ற பெயரே ஆரியத்திற்கு முந்தையதாக, பிறப்பிடம் சார்ந்ததாக உள்ளது. இதுபோன்ற பெயர்கள் வேத-சமஸ்கிருத இலக்கியங்களில் காணப்படவில்லை என்றாலும் தென்னிந்திய இலக்கியங்களிலும், நிஜ வாழ்க்கையிலும் அப்பா, அய்யா போன்ற பெயர்கள் கர்நாடகாவிலும் தென்னிந்தியாவின் பிற இடங்களிலும் மிகவும் பொதுவானவையாக இருந்து வருகின்றன. மேற்கு சமவெளிகளைக் கடந்து தெற்கை நோக்கிய குடியேற்றம் முதலில் கர்நாடகாவை அடைந்தது என்று ஜோசப் கூறுகிறார். மேசியா, எரேமியா, ஏசாயா போன்ற பைபிளின் பழைய ஏற்பாட்டிலும் இதுபோன்ற பெயர்கள் பொதுவானவையாக இருக்கின்றன. ஆடுகளை நேர்மறையாக, மரியாதைக்குரிய விலங்குகளாகக் கையாண்டு கால்நடைகள் மற்றும் விவசாயப் பொருளாதாரத்தைச் சுற்றியதாகக் கட்டமைக்கப்பட்டுள்ள பைபிளின் பழைய ஏற்பாடு ரிக் வேதத்தை விட மிகவும் பழமையானதாகவே தோன்றுகிறது. ரிக் வேதத்தில் கூறிப்பிடப்படும் இந்திரனின் வாழ்க்கையில் உள்ளதைப் போன்று ஆபிரகாம்,  மோசேயின் வாழ்க்கையில் குதிரை அவ்வளவு முக்கியத்துவமான விலங்காக இருக்கவில்லை. விலங்குகளை மேய்ப்பவர்களை சூத்திரர்கள், மிலேச்சர்களாக கட்டமைத்த ரிக் வேதம் ஆன்மீக, சமூக பீடத்தில் பிராமணியத்தை உயரத்தில் வைத்தவுடனே விவசாய உற்பத்தி, விலங்கு வளர்ப்பு நடவடிக்கைகள் அனைத்திலிருந்தும் பிராமணர்கள் தங்களை ஒதுக்கி வைத்துக் கொண்டதாகவே தோன்றுகிறது. இன்று வரையிலும் அந்த செயல்முறை தொடர்கின்றது. இப்போது கூட ‘உற்பத்தி என்பது தீட்டு’ என்பதே அவர்களுடைய முக்கியமான் ஆன்மீகக் கோட்பாடாக இருந்து வருகிறது.   


மத்திய ஆசியாவிலிருந்து நடைபெற்ற ஆரிய குடியேற்றத்திற்குப் பிறகு பிராமணர்கள் ஒரு சமூகமாக உருவாக்கப்பட்டு,  பிராமணியம் ஒரு சித்தாந்தமாக வகுக்கப்பட்டது. ஹரப்பன்கள் நகர்ப்புற நாகரிகத்தை முதன்முதலாகக் கட்டமைத்தவர்களாக - முதல் நகரவாசிகள் என்று ஜோசப் அழைக்கும் வகையில் - இருந்த போதிலும், பிராமணர்களும், சமூக-ஆன்மீக, கலாச்சார சித்தாந்தமாக பிராமணியமும் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி இந்தியத் துணைக்கண்டத்தில் முதன்முதலாகக் குடியேறியவர்களை ஒருபோதும் சிறந்த நாகரிகக் கட்டமைப்பாளர்களாக கருதியதே இல்லை.    

இனவேறுபாடு என்ற ஒன்று இந்தியாவில் இருந்திருக்கவில்லை என்ற பி.ஆர்.அம்பேத்கரின் கோட்பாட்டை ஜோசப் ஏற்கவில்லை. ‘அவர் (அம்பேத்கர்) ஒருவேளை ஆழ்ந்து சென்றிருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது - பழங்குடியினரை மற்ற அனைவரிடமிருந்தும் வித்தியாசமானவர்கள் என்றே அவர் கருதினார். அவர்கள் சாதி படிவரிசையிலே எங்கிருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் அவர்களுடைய மரபணுக்கள் அனைவரிடமும் இயங்கி வருவதால் அந்தக் கருத்து சரியானதல்ல என்பதை இப்போது நாம் அறிகிறோம். ஆரிய குடியேற்றத்தை முற்றிலுமாக மறுத்ததிலும் அம்பேத்கர் தவறு செய்திருந்தார் என்றாலும் இன்று நம்மிடையே இருந்து வருகின்ற மரபணு தரவு அன்றைக்கு அவரிடம் இல்லாததால் அந்த தவறுக்காக அவர் மீது குற்றம் சுமத்த முடியாது (பக்கம் 213)’ என்று ஜோசப் சொல்கிறார்.   


ரிக்வேத உரையை சமஸ்கிருதத்தில் எழுதுவதில் தொடங்கிய இந்திய நாகரிகம் குறித்த புராணங்கள் இந்திய சாதி அமைப்பு மற்றும் பிராமண எதிர்மறையை நிறுவுகின்ற வகையில் நாகரிக எதிர்ப்பு வாதங்களைக் கட்டமைத்தன. ஆரிய சாதியவாதம் கட்டமைக்கப்பட்டு, விலங்கு பொருளாதாரத்தின் மீதான இகழ்ச்சி ஆன்மீக ரீதியாக மரியாதைக்குரியதாக மாறிய போது இந்திய வளர்ச்சி முறையானது உலகளாவிய நாகரிக வளர்ச்சி முறைகளிலிருந்து தனித்து விலகிச் சென்றது.

விலங்குகளும் படிநிலைகளும்

ரிக் வேதத்தை எழுதிய நேரத்தில் ஆடு, செம்மறி, எருமை, பசு சார்ந்த பொருளாதாரம் முழுமையாக விரிவடைந்து மேய்ச்சல் விவசாயத்தின் மையமாகியது. முதல் வளர்ப்பு ஆடு ஒட்டுமொத்த பிராமண இலக்கியத்திலும் மிகவும் முக்கியமான விலங்காகக் குறிப்பிடப்படவே இல்லை. விலங்கு பொருளாதார முன்னேற்றத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சூத்திரர்களாக கட்டமைக்கப்பட்டனர். அவர்கள் பிராமணக் கடவுள்களின் உலகில் மரியாதைக்குரிய அந்தஸ்தைப் பெறுவதற்குத் தகுதியற்றவர்கள் ஆனார்கள். ஆன்மீக ரீதியாக, சமூக ரீதியாக உயர்ந்த கலாச்சார மதிப்பை உலகளவில் ஆடு மற்றும் செம்மறி சார்ந்த பொருளாதாரம் பெற்றிருந்த நிலையில், இந்தியாவில் இருந்த நாகரிகக் கட்டமைப்பாளர்களை மிலேச்சர்கள் (அந்த காலத்தில் தீண்டத்தகாதவர்கள்) என்று பிராமண எழுத்தாளர்கள் கணித்தனர். இப்போது அந்த சமூகங்கள் கல்வி பெற அனுமதிக்கப்படவில்லை என்பதால் பின்தங்கிய சமூகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 

ரிக் வேதத்தை எழுதிய காலத்திலும், அதற்குப் பிறகும் ஏராளமான வன்முறைகளைப் பயன்படுத்தியதன் மூலம் விவசாய உற்பத்தியை எதிர்க்கும் கலாச்சாரத்தை விலங்கு வளர்ப்பிற்கு எதிராக இருந்த பிராமணர்கள் படிப்படியாக கட்டியெழுப்பினர். அதுபோன்ற செயல்பாடு இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்திருக்கும். உற்பத்திக்கு எதிரான தங்களுடைய நிலைப்பாட்டிற்கு எதிராக இருந்த சூத்திரர்களின் எதிர்ப்பு குதிரையின் ஆற்றலைப் பயன்படுத்தியும், சூத்திரர்களிடமிருந்த விலங்கு செல்வத்தை அழித்தும் பிராமணர்களால் அடக்கப்பட்டது. இன்று வரை அந்தப் போக்கு தொடர்ந்து வருகிறது.

1925ஆம் ஆண்டில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) உருவாக்கப்பட்ட பின்னர் மாடு அவர்களால் கோமாதா என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆடு, செம்மறி, எருமை போன்ற பொருளாதார விலங்குகளை விலங்கு மிலேச்சர்களாக, எந்தவொரு மரியாதைக்கும் தகுதியற்ற விலங்குகளாக பார்த்த பிராமணியம் இப்போது ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜனதா கட்சி வழியாக இயங்கி வருகிறது. இன்னும் அடிதடிக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடியவர்களாக சூத்திரர்கள் இருந்து வருகின்றனர். 2020ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ராமர் கோவில் அறக்கட்டளையில் அது மிகவும் தெளிவாகத் தெரிந்தது. அந்த அமைப்பில் உறுப்பினராக இருப்பதற்கு ஏற்றவராக எந்தவொரு சூத்திரரும் இருக்கவில்லை.   


விலங்கு பொருளாதார சூத்திரம் அறிந்த வல்லுநர்கள் எப்படி, ஏன் வரலாற்று ரீதியாக பிராமணர்களுக்கு அடிபணிந்தவர்கள் ஆகிப் போனார்கள் என்பது ஆச்சரியமளிப்பதாகவே இருக்கிறது. அதற்கான விடையை ஆன்மீகமும், அரச அதிகாரப்படி நிலையும் உயர்சாதியினரின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்து வருவதிலே காண முடிகிறது. வலுவான ஆரிய பரம்பரையைக் கொண்டவர்களாக, சூத்திரர்கள்/தலித்துகள்/ஆதிவாசிகள் வந்ததாக இப்போது கூறப்படுகின்ற ஆப்பிரிக்க புலம்பெயர் பரம்பரையிலிருந்து தோன்றாதவர்களாக பிராமணர்களும், சத்திரியர்களும் இருப்பதாகக் கருதப்படுகின்றனர். ஆனாலும் அனைத்து இனங்களும் ஒன்று கலந்து இப்போது ஒன்று சேர்ந்து விலங்கு பொருளாதாரத்தை உருவாக்குபவர்களை ஒடுக்குவதாக ஜோசப் கூறுகிறார்.  


தேசியவாத பிராமண-பனியா எழுத்தாளர்கள் அனைவரும் ஆரிய பாரம்பரியம் கொண்டவர்களாகவே இருந்துள்ளனர் (எந்தவொரு சத்திரிய எழுத்தாளரும் இந்தியாவில் தோன்றியிருக்கவில்லை). அதேசமயம் தன்னுடைய திராவிடப் (ஆப்பிரிக்காவிலிருந்து  வெளியே வந்த) பாரம்பரியத்தை பெருமையுடன் வலியுறுத்தியவராக முதல் நவீன சூத்திர எழுத்தாளரான ஜோதிராவ் பூலே இருந்தார். [அபர்ணா வைதிக் 2020ஐக் காண்க. வரலாற்றாசிரியரான வைதிக் தன்னுடைய தாத்தாவின் ஆரிய மார்வாடி பின்னணி குறித்து கூறுகிறார். மேலும் அவர் ஆரிய சமாஜின் பாரம்பரியத்தையும், மனிதர்களிடையிலான சமத்துவத்தை நம்பிய மகாத்மா பூலேவின் திராவிட, மகாபலி கலாச்சாரத்தையும் ஆராய்ந்துள்ளார்].  

புதிய பொதுவான மொழியான ஆங்கிலத்திலான கல்வி இந்தியாவில் அனைத்து பிரிவினரிடமும் பரவியுள்ளதால் பாதுகாப்பற்று இருந்து வருகின்ற பிராமணவாதம் அனைத்து வகையான எதிர்மறை விஷயங்களையும் செய்து வருகின்ற நேரத்தில் இந்த புத்தகம் வெளி வந்துள்ளது.  கோவில்கள் மற்றும் வலது, இடது, மையம் என்று அனைத்து சித்தாந்தங்களையும் கொண்ட அரசியல் கட்சிகள் என்று பிராமணியம் எங்கே இருந்தாலும், அதனை எதிர்த்துப் போராடும்போதுதான் ஆன்மீகம், சமூகம் மற்றும் பொருளாதார ரீதியிலான சமமான குடிமக்களாக தங்களால் மாற முடியும் என்பதை இந்திய சூத்திரர்கள்/பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உணர வேண்டும். நமது தேசத்தை,  பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் என்ன தவறு ஏற்பட்டது, இங்கிருந்து நாம் எவ்வாறு முன்னேறுவது என்பதை அறிந்து கொள்வதற்காக மாணவர்களும், பல்கலைக்கழகங்களிலும் அதற்கு வெளியிலும் உள்ள அறிஞர்களும், இந்திய அமைப்பிற்குள் இருக்கின்ற கொள்கை வகுப்பாளர்களும் ஜோசப் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தை அவசியம் வாசிக்க வேண்டும்.

References

Sharma, Ram Sharan (1999): Advent of the Aryans in India, New Delhi: Manohar Publications.

Shepherd, Kancha Ilaiah (2018): Buffalo Nationalism: A Critique of Spiritual Fascism,Sage.

Thapar, Romila (2003): The Penguin History of Early India: From the Origins to AD 1300, New Delhi: Penguin India.

Vaidik, Aparna (2020): My Son’s Inheritance: A Secret History of Lynching and Blood Justice in India, Aleph Book Company.

 

https://www.epw.in/journal/2021/11/book-reviews/early-india-goats-and-brahmins.html

Comments