டி.ஜே.எஸ்.ஜார்ஜ்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
இன்றைக்குப் பொதுவாழ்க்கையில்
மிகவும் பிரகாசமாக இருந்து வருபவர்களில் ஒருவராக தேஜஸ்வி சூர்யா இருக்கிறார். அவர்
மிகவும் இளமையானவர், படித்தவர், புத்திசாலி. நல்ல பேச்சாளர், பார்வையாளர்களை
எளிதில் கவரக் கூடியவர். தொழில்ரீதியாக ஒரு வழக்கறிஞர், பயிற்சி பெற்ற கர்நாடக
இசைக்கலைஞர். இவ்வாறான ஒரு மனிதர் வகுப்புவாதம் கொண்டு பாகுபாடுடன் செயல்படுகின்ற
போது ஒரு சோகம் என்று மட்டுமே நம்மால் அதனை விவரிக்க முடிகிறது. இந்த வகுப்புவாத
அரசியலுக்குள் கொரோனா, ஆக்சிஜன் ஆகியவற்றின் மீது கூட ஹிந்துத்துவப் பார்வையைக்
கொண்டிருப்பவராகவே தேஜஸ்வியின் சமீபத்திய சாகசம் அவரை அடையாளம் காட்டியிருக்கிறது.
முஸ்லீம்களுக்கு மருத்துவமனை படுக்கைகள் ஒதுக்கப்படுவதே அவரை மிகவும் கவலைக்குள்ளாக்கி வைத்திருக்கின்ற புதிய பிரச்சனையாக இருக்கின்றது. பெங்களூரு மாநகராட்சி தன்னிடமுள்ள சுகாதார வசதிகளின் விநியோகத்தைக் கையாளுகின்ற வகையிலே கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. ‘மருத்துவமனை படுக்கைகளுக்கான லஞ்ச ஊழலுக்கு வழிவகுத்த சில முகவர்களின் தொடர்பில் பிபிஎம்பி அதிகாரிகள் சிலரும், சில முன்னணி மருத்துவமனைகளும் இருக்கின்றன’ என்று தேஜஸ்வி சூர்யா குறை கூறினார்.
நம்முடைய வாழ்வில் நடக்கின்ற
ஒவ்வொரு செயலையும் ஊழல் தன்வசமாகக் கைப்பற்றி வைத்துக் கொண்டிருப்பதைக் கருத்தில்
கொண்டு பார்க்கும் போது அந்த இடத்தில் அவர் அதைச் சரியாகச் சொன்னதாகவே இருந்தது.
ஆனாலும் அந்த மோசடியின் பின்னணியில் முஸ்லீம் சதி ஒன்று இருப்பதாக அவர் தெரிவித்த போது
அந்த இடத்திலிருந்து அவர் மிகவும் விலகிச் சென்றிருந்தார். தனக்கு மிகவும் வசதியாக
இருக்கின்ற தரவுகளைக் கொண்டு அவர் நடைபெற்ற மோசடிக்கு பொறுப்பாக பதினேழு
அதிகாரிகள் மாநகராட்சியில் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் முஸ்லீம்களாக
இருப்பதாகவும் கூறினார். ஒரே சமூகத்தைச் சேர்ந்த பலர் ஏன் அந்தக் கட்டுப்பாட்டு
அறையில் நியமிக்கப்பட்டனர் என்ற கேள்வியை அவர் எழுப்பினார். அந்தக் கட்டுப்பாட்டு
அறையில் மொத்தம் 212 ஊழியர்கள் இருந்தனர். தனது வசதிக்காக அவர் அந்த 212 ஊழியர்களில்
பதினேழு பேரை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார்.
அந்தப் பிரச்சனையில் தெளிவான
பார்வையை வழங்கிட ‘மாற்று சட்ட அமைப்பு’ முன்வந்தது. அந்த அமைப்பின் செய்தித்
தொடர்பாளர் ‘வெறுப்பின் விதைகளை விதைக்க அரசியல்வாதிகள் சிலர் முயன்று
கொண்டிருக்கிறார்கள். நமக்கு வெறுப்பு தேவையில்லை. ஆக்சிஜனே தேவை என்கிற கருத்தில்
தாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்’ என்று தெரிவித்தார். அபர்ணா என்ற பெண் மிகச்
சாதாரணமாக ‘173 ஹிந்துக்கள் அங்கே இருந்ததாலேயே அந்தக் கட்டுப்பாட்டு அறை ஒரு
மடமாக மாறி விடவில்லை. அதே போல அந்த அறையை நிச்சயம் ஒரு மதரஸாவாக அந்த பதினேழு
முஸ்லீம்களாலும் மாற்றி விட முடியாது’ என்று கூறி வெறுப்பைப் பரப்பி வருபவர்களைத்
தலை குனிய வைத்தார்.
பெரும்பாலான குடிமக்களும் இதேபோன்றுதான் நினைக்கிறார்கள். பொதுமக்களை வகுப்புவாதத்திற்குள் தள்ளிட தேஜஸ்வி சூர்யா போன்றவர்களால் எடுக்கப்படுகின்ற முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்பதையே மக்களிடம் உள்ள இதுபோன்ற எண்ணம் காட்டுகிறது. ஒருபோதும் தேஜஸ்வி சூர்யா போன்றவர்களால் வெற்றி பெற முடியாது. வடக்கில் தனக்கென்று பெரிய ஆதரவு தளத்தைக் கொண்டிருக்கும் தனது அரசியல் சித்தாந்தத்தால் தென்னிந்தியாவில் ஏன் தனக்கான இடத்தைக் கண்டறிய முடியவில்லை என்று தென்னிந்தியரான தேஜஸ்வி சூர்யா தன்னைத்தானே அவசியம் கேட்டுக் கொள்ள வேண்டும்.
வடக்கு-தெற்கு பிளவு என்பது தற்போது
இருந்து வருவதாகத் தோன்றுகின்ற அரசியல் மோதலை விட குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. அது
மிக ஆழமான இன வேர்களைத் தன்னிடத்தே கொண்டிருப்பதாக உள்ளது. அதன் முக்கியத்துவம்
இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கவில்லை. புதியதொரு வெளிச்சத்தில் அதை
இப்போது காணும் சந்தர்ப்பத்தை தமிழ்நாட்டின் புதிய முதல்வர் மு.க.ஸ்டாலினின்
எழுச்சி வழங்கியிருக்கிறது. தனது ட்விட்டர் சுயவிவரத்தில் தன்னை ‘நான் திராவிட
இனத்தைச் சார்ந்தவன்’ என்று ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார். திமுகவின்
அடிப்படைத் தத்துவத்தை உருவாக்கிய சி.என்.அண்ணாதுரை தொன்மையான மரபுவழிச்
சிந்தனையாளராக இருந்தார். தில்லி அரசின் ஹிந்தி திணிப்புக் கொள்கையானது அந்தக் காலகட்டத்தில்
அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டிலிருந்து காணாமல் போவதற்கு வழிவகுத்துக்
கொடுக்க, தமிழ்நாட்டின் ஆட்சியதிகாரத்தில் அண்ணாதுரை அமர்ந்தார்.
தனது கொள்கையை தனக்கே உரிய
பாணியில் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்ற வகையில் அண்ணாதுரை முன்வைத்தார்.
பாராளுமன்றத்தில் அவருடைய முதல் உரையின் போது (1962) ‘ஐயா இந்தியாவின் ஒருபகுதியாக இப்போது இருக்கிற நாட்டிலிருந்து நான்
வந்திருக்கிறேன் என்பதை இங்கே கூறிக் கொள்கிறேன். ஆனாலும் அது
வேறுபட்ட இனம் என்றே நான் கருதுகிறேன். யாருடனும் அது விரோதமாக இருக்க வேண்டிய
அவசியம் இருக்கவில்லை. நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன். ஒரு திராவிடன் என்று என்னை
அழைத்துக் கொள்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன். அதன் பொருள் ஒரு வங்காளி அல்லது
மராட்டியர் அல்லது குஜராத்திக்கு எதிரானவன் நான் என்பதாக இருக்கவில்லை. ராபர்ட் பர்ன்ஸ் சொல்வதைப் போல, ‘மனிதன் எப்படியிருந்தாலும்
மனிதன் தான்’. இந்த
தேசத்திற்கு வழங்குவதற்காக உறுதியான, தனித்துவமான, வித்தியாசமான ஒன்று
திராவிடர்களிடம் இருக்கிறது என்று நான் கருதுவதாலேயே நான் என்னை திராவிட இனத்தைச்
சார்ந்தவன் என்று கூறிக் கொள்கிறேன். அதனால்தான் எங்களுக்கான சுயநிர்ணய உரிமையை நாங்கள் விரும்புகிறோம்’
என்று பேசியிருந்தார்.
ஒரு முதலமைச்சர் இப்போது ஸ்டாலின்
என்று அழைக்கப்படலாம். அவர் தன்னுடைய அமைச்சரவையில் ஒரு நேருவையும், ஒரு
காந்தியையும் கொண்டிருக்கலாம். ஆனாலும் அவர்கள் அனைவரும் பெருமை வாய்ந்த திராவிட
இனத்தைச் சார்ந்தவர்களாகவே இருப்பார்கள்.
தனக்குத் தேவையான இடத்தைக்
கோருகின்ற திராவிட இனத்தின் தர்க்கத்தைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு தேஜஸ்வி
சூர்யா புத்திசாலிதான் என்றாலும் அவரிடமிருக்கின்ற கருத்தியல் குருட்டுத்தன்மையே ‘தமிழ்
பிழைத்திருக்க வேண்டுமானால், ஹிந்துத்துவா வெல்ல வேண்டும்’ என்பதைப் போன்று
முட்டாள்தனமாக ஏதாவதொன்றை அவரைச் சொல்ல வைக்கிறது. உலகின் மிகவும் பழமையான,
இன்னும் வாழ்ந்து வருகின்ற மொழியாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் இருந்து
வருகிறது. தன்னுடைய வட இந்தியத்தன்மையின் காரணமாக ஹிந்துத்துவா தமிழ் நாட்டில் இன்னும்
அரசியல் ஆதாயத்தைப் பெற முடியாதிருக்கிறது.
அவர்களிடமுள்ள கருத்தியல் பார்வைக் குறைவே புரியாத விஷயங்களை அறிவார்ந்த மக்களைச் சொல்ல வைக்கிறது. எனவேதான் ‘மிகவும் மோசமான ஹிந்து எதிர்ப்பு சித்தாந்தத்தைப் பிரதிபலிக்கும் திமுக தமிழுக்கு எதிரானது’ என்கிறார் தேஜஸ்வி சூர்யா. என்னவொரு தலைகீழ்ப் பார்வை. தமிழுக்கு எதிரானது என்று திமுகவை எந்தவொரு தர்க்கத்தின் அடிப்படையிலும் சொல்வதற்கு உண்மையில் விபரீதமான தைரியம் ஒருவருக்குத் தேவைப்படும்.
ஆனாலும் தேஜஸ்வி சூர்யா அந்தக் கருத்தை விரிவாக்கும்போது பக்தர் ஒருவரின் நம்பிக்கையுடன் ‘மோடி தலைமையின் கீழ் இருக்கின்ற அரசாங்கத்தால் மட்டுமே தமிழ்நாட்டில் இளைஞர்களின் நலனுக்காகச் செயல்பட முடியும்’ என்று கூறி தனது ஆட்டத்தைத் தவற விட்டார். தங்களுக்கு எது நல்லது என்று புரியாதவர்களாக தமிழக இளைஞர்கள் இருப்பது உண்மையில் எவ்வளவு பரிதாபகரமானது? ஒருவேளை இவரைப் போன்ற பக்தர்கள் ஒன்று கூடி ‘தனது எஜமானரின் குரல்’ (ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் - HMV) என்ற பழைய இசைத்தட்டு பெட்டியின் முத்திரையப் புதுப்பித்துக் கொள்ள வேண்டியிருக்கலாம். தேஜஸ்வி சூர்யா ஒரு மிகச் சிறந்த கர்நாடக இசைக்கலைஞர் என்பதை நாம் இங்கே நினைவில் வைத்துக் கொள்ளலாம்.








Comments