ஹரித்துவார் கும்பமேளா - திரிவேந்திர சிங் ராவத்தை உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி நீக்கியது ஏன்?

 ஸ்ரீஷ்டி ஜஸ்வால்

கேரவான் இதழ்



2019ஆம் ஆண்டு நடந்த கூட்டத்தில் எந்தவொரு சர்ச்சையும் இல்லாமல் மகாகும்பமேளா நடக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்திடம் கூறினார். இந்தியா முழுவதும் கோவிட்-19 தொற்றுநோய் அதிகரித்ததைத் தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்ட, அடையாள அளவிலான கும்பமேளாவை நடத்த முயன்ற மாநில முதல்வர் திரிவேந்திர சிங்குக்கும் அதனை ஏற்றுக் கொள்ளாத அகாராக்களுக்கும் இடையில் உராய்வு ஏற்பட்டது, இறுதியில் திரிவேந்திர சிங் ராவத் முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.   

பத்துக்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள், அகில பாரதிய அகார பரிஷத்தைச் சார்ந்த மஹந்துகள், ஹரித்துவார் மகாகும்பமேளாவுடன் தொடர்புடைய பல்வேறு அதிகாரிகளுடன் தொடர் நேர்காணல்கள் நடத்தப்பட்டன. மகாகும்பமேளாவை கட்டுப்பாடுடன் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்திய காரணத்திற்காகவே உத்தரகண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் 2021 மார்ச் மாதம் ஒரு நாளிரவில் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக அந்த நேர்காணல்களிலிருந்து தெரிய வருகிறது.


குறைந்தபட்ச கோவிட்-19 கட்டுப்பாடுகளுடன் மாபெரும் அளவிலே மகாகும்பமேளாவை மிகச் சிறப்பாக மாநில அரசு நடத்த வேண்டும் என்று ஏபிஏபி (அகில பாரதிய அகாரா பரிசத்), ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங், உத்தரகண்ட் மாநில அமைச்சர்கள் சிலர் விரும்பியதாகவும், மாநில முதல்வர் திரிவேந்திராவோ விழாவை அடையாள அளவிலே மட்டுமே நடத்திட வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் ஐந்து மஹந்துகளும், இரண்டு பாஜக தலைவர்களும் என்னிடம் உறுதிப்படுத்திக் கூறினர். ஹிந்துக்களின் திருவிழாவில் வழக்கமாகப் பின்பற்றப்படுகின்ற பன்னிரண்டு ஆண்டுகள் என்ற வழக்கமான சுழற்சியின்படி 2022ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய கும்பமேளாவை ஜோதிட விளக்கங்களின் அடிப்படையில் 2021ஆம் ஆண்டிலேயே நடத்த வேண்டும் என்று ஜோதிடர்களும், தாந்த்ரீகர்களும் கூறியிருந்ததும் மஹந்துகளுடனான அந்த உரையாடல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.    

கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் முழுமையான கும்பமேளாவை நடத்துவது என்ற முடிவில் அரசியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த காரணங்களுக்கு சமமான பங்கு இருந்தது என்று ஏறத்தாழ இருபதாண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவமுள்ள மூத்த பாஜக தலைவர் ஒருவர் என்னிடம் கூறினார். மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து திரிவேந்திராவை வெளியேற்ற வழிவகுத்த நிகழ்வுகளில் அந்த மூத்த தலைவரும் பங்கேற்றவராக இருந்தார். அடுத்த எட்டு மாதங்களில் உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தல்கள் நடக்கவிருப்பதால் கும்பமேளாவை நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டது என்று கூறிய அவர் தேர்தலுக்கு ஓராண்டிற்கு முன்பாக நட்பு வட்டாரத்தை எரிச்சலூட்டுவது எந்த விதத்திலும் அர்த்தமுள்ளதாக இருக்கப் போவதில்லை என்றார். நட்பு வட்டாரம் என்று போர்க்குணமிக்க சந்நியாசிகளான, ஹிந்தி பகுதியில் ஹிந்து சமூகங்கள் மீது பெருத்த செல்வாக்கைக் கொண்டிருக்கும் அகாராக்களையே அந்த மூத்த தலைவர் குறிப்பிட்டார். கும்பமேளாவைத் தள்ளி வைப்பதால் உத்தரப்பிரதேசத்தில் பெருமளவில் பின்பற்றப்படுபவர்களைக் கொண்ட அகாராக்களை வழிநடத்துகின்ற மஹந்துகளுக்கு மிகப் பெரிய ஆதரவு இழப்பு ஏற்படும். கும்பமேளாவின் ஒட்டுமொத்த வருவாய் ஆயிரக்கணக்கான கோடியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் அத்துடன் வருவாய் இழப்பும் அவர்களுக்கு ஏற்படும் என்று அவர் என்னிடம் விளக்கினார்.

மகாகும்பமேளா ஹிந்துக்களின் மதிப்புமிக்க திருவிழா என்பதால் முதலமைச்சரின் தயாரிப்பு பணிகளால் அகாராக்கள் எந்த விதத்திலும் வருத்தப்பட்டு விடக் கூடாது என்றும் எந்தவிதமான சர்ச்சையும் இல்லாமல் விழா நடக்க வேண்டும் என்றும் 2019ஆம் ஆண்டு நடந்ததொரு கூட்டத்தில் திரிவேந்திராவிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக பாஜகவின் அந்த மூத்த தலைவர் என்னிடம் தெரிவித்தார். கும்பமேளா நடத்துவது குறித்து முதல்வர் திரிவேந்திரா மற்றும் அகாராக்களுக்கு இடையில் ஏற்பட்ட உராய்வே முதல்வருக்கு எதிராக வேலை செய்தது என்று பாஜக தலைவர்கள், மஹந்துகளுடனான உரையாடல்களிலிருந்து தெரிய வந்தது. பாஜக, ஆர்எஸ்எஸ்சின் தேசிய தலைமைக்குப் பயந்து அவர்களில் பலரும் தங்களுடைய பெயரை வெளிப்படுத்திக் கொள்ள முடியாத நிலையிலேயே என்னிடம் பேசினர். மாநில முதலமைச்சர் கும்பமேளா தொடர்பான சர்ச்சையின் காரணமாகவே மாற்றப்பட்டாரா என்று உத்தரகண்ட் பாஜக செய்தித் தொடர்பாளரான முன்னா சிங் சவுகானிடம் கேட்ட போது, அவர் அதுபோன்ற கருத்திற்கு ஏதோவொரு வகையில் வாய்ப்பு இருந்திருக்கலாம், அகாராக்களிடமிருந்து புகார் வந்திருக்கலாம் என்று கூறினார்.    

ஜனவரி 14 அன்று தொடங்கி ஏப்ரல் 14 அன்று விழா முடியும் வரையில் மொத்தம் 91 லட்சம் யாத்ரீகர்கள் கங்கையில் புனித நீராட ஹரித்துவாருக்கு வந்திருந்ததாக கும்பமேளா படை என்ற அரசு அமைப்பு தெரிவித்துள்ளது. அவ்வாறு வந்திருந்தவர்களில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் குறைந்தபட்சம் அறுபது லட்சம் பேர் - அங்கே கூடியதாகக் கூறப்படுகிறது. கும்பமேளாவின் முக்கிய நிகழ்வான ஷாஹி ஸ்னான் எனப்படும் கங்கை நதியில் மூழ்கி எழுகின்ற சடங்கு மார்ச் 11 முதல் ஏப்ரல் 27 வரையிலான 48 நாள் காலப்பகுதியில் இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்றின் இரண்டாவது அலையில் கடுமையாக அதிகரித்துக் கொண்டிருந்த நோயாளிகளின் எண்ணிக்கைக்கு மத்தியில் நடைபெற்றது. அந்தச் சடங்கின் இறுதி நாளன்று இந்தியாவில் புதிய கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை 3,60,927 என்று பதிவாகியது. இரண்டாவது ஷாஹி ஸ்னான் நடந்த நாளான ஏப்ரல் 12 அன்று மட்டும் முப்பத்தைந்து லட்சம் பேர் அங்கே வந்திருந்தனர்.  

வல்லுநர்களும், ஊடகங்களும் கும்பமேளாவை அதிவேக தொற்று பரப்பி நிகழ்வு என்று விவரித்ததில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. முதலாவது ஷாஹி ஸ்னான் நாளான மார்ச் 11 அன்று உத்தரகண்ட் அறுபத்தி ஒன்பது தொற்று நோயாளிகளைப் பதிவு செய்திருந்தது. புதிய கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை ஏப்ரல் 27க்குள் 5,703 என்று அதிகரித்தது. மே 2 அன்றைய நிலவரப்படி இந்தியாவில் ஏற்பட்ட கோவிட்-19 இறப்புகளில் நாட்டின் மக்கள் தொகையில் 0.8 சதவிகிதத்தை மட்டுமே கொண்டிருக்கின்ற உத்தரகண்டில் மட்டும் 2.73 சதவிகிதம் இறப்பு ஏற்பட்டிருந்தது. மகாகும்பமேளாவிலிருந்து திரும்பியவர்கள் உத்தரகண்டில் நோய்த்தொற்று விகிதத்தை அதிகரித்தது மட்டுமல்லாமல், இந்தியாவின் குறுக்கு நெடுக்காக அனைத்து இடங்களிலும் அதைப் பரவலாகப் பரப்பவும் செய்திருந்தனர். 


நகரங்கள், கிராமப்புறங்கள் என்று அனைத்து இடங்களையும் அந்த நோய்ப்பரவல் தாக்கியது. கும்பமேளாவிலிருந்து மத்தியப்பிரதேசத்தில் உள்ள விதிஷா மாவட்டத்தில் உள்ள கியராஸ்பூர் நகரத்திற்குத் திரும்பிய அறுபத்தியொரு நபர்களில் அறுபது பேருக்கு - அதாவது 99 சதவீதம் பேருக்கு பரிசோதனையில் கோவிட் தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டது. ஒடிசா மாநில கட்டாக் நகரில் இந்த எண்ணிக்கை 43 சதவீதமாக இருந்தது. கும்பமேளாவிலிருந்து திரும்பியவர்களிடையே குறைந்தபட்சம் பதினோரு பேருக்கு தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டதாக அரசு பதிவில் இருந்தது. மகாகும்பமேளாவிலிருந்து திரும்பி வந்த ஒருவர் ஒடிசாவில் உள்ள சிறிய கிராமமான தாலாபூரில் நோய்வாய்ப்பட்டு இறந்த போது, ​​அவரது உடலைத் தகனம் செய்யக்கூட யாரும் முன்வரவில்லை. இது ஒருபுறமிருக்க தில்லி உள்ளிட்ட பல இந்திய மாநிலங்களில் கும்பமேளா தொடர்பான நோய்த்தொற்றுகள் குறித்த தரவு என்று எதுவும் இல்லை. எனவே அந்த மாநிலங்களில் எல்லாம் தொற்று நோய் மீதான கும்பமேளாவின் தாக்கத்தை அளவிட எந்த வழியும் இருக்கவில்லை.

முன்னர் ஆர்எஸ்எஸ் பிரச்சாராக இருந்தவரும், தற்போதைய முதல்வருமான தீரத் சிங் ராவத் கும்பமேளாவை அதிவேக தொற்று பரப்பி என்பதை ஏற்க மறுத்து விட்டார். விழாவின் நிர்வாகத்திற்குப் பொறுப்பான ஒருங்கிணைப்பு அதிகாரியாக இருந்த தீபக் ராவத்துடன் பேசிய போது அவரும் மகாகும்பமேளா கோவிட்-19இன் இரண்டாவது அலை எழுச்சிக்குப் பங்களித்தது என்பதை மறுத்தார்.   


அகில பாரதிய அகாரா பரிசத் என்ற ஏபிஏபி அமைப்பு நாட்டில் உள்ள அனைத்து முக்கிய அகாராக்களுக்கும் தலைமை தாங்கி வருகின்ற மிக உயர்ந்த அமைப்பாகும். ஹிந்து சாமியார்கள், சாதுக்கள் மற்றும் தந்திரிகளை உள்ளடக்கிய பதின்மூன்று அகாராக்களை அது தற்போது கொண்டுள்ளது. கின்னார் அகாரா அல்லது திருநங்கைகள் அகாரா இன்னும் ஏபிஏபியால் முழுமையாக அங்கீகரிக்கப்படவில்லை. ஜூனா அகாரா, நிர்வாணி அகாரா ஆகியவை அதிகாரம் நிறைந்த இரண்டு மிகப் பெரிய பிரிவுகளாகும். ஒவ்வொரு அகாராவும் மஹந்த் - தலைமை பூசாரி அல்லது ஆன்மீக ஆலோசகர் என்று தளர்வாக மொழிபெயர்க்கப்படுகிறது - ஒருவரால் வழிநடத்தப்படுகிறது. நிரஞ்சனி அகாராவைச் சேர்ந்த நரேந்திர கிரி என்பவர் ஏபிஏபியின் அத்யக்ஷ் ஆக அதாவது தலைவராக இருக்கிறார். அமைப்பின் மகாமந்திரியாக அதாவது பொதுச் செயலாளராக ஜூனா அகாராவின் ஹரி கிரி இருந்து வருகிறார். கும்பமேளாவை நடத்துவதற்காக மட்டுமே ஏபிஏபி நடைமுறைக்கு வந்தது என்று ‘சந்நியாசி விளையாட்டுக்கள்: சாதுக்கள், அகாராக்கள் மற்றும் ஹிந்து வாக்குகளை உருவாக்குதல்’ என்ற புத்தகத்தின் ஆசிரியரான திரேந்திர கே.ஜா குறிப்பிடுகிறார். கும்பமேளாவை எப்படி, எப்போது ஏற்பாடு செய்வது என்பது குறித்து அந்தந்த மாநில அரசாங்கங்களுடன் கலந்து பேசுவதற்கென்று அனைத்து அகாராக்களின் பிரதிநிதிகளும் இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ளனர்.      

2019ஆம் ஆண்டில் ஒரு கூட்டத்திற்கு தன்னுடைய தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக என்னிடம் கூறிய நரேந்திர கிரி அந்தக் கூட்டத்தில் அப்போது முதல்வராக இருந்த திரிவேந்திரா, பதின்மூன்று அகாராக்களிலிருந்து வந்திருந்த மஹந்துகள், கும்பமேளா அதிகாரி, ஹிந்து ஜோதிடர்கள் என்று பலரும் கலந்து கொண்டதாகத் தெரிவித்தார். அந்தக் கூட்டத்தில் ஹிந்து ஜோதிடத்தில் அறிவார்ந்தவர்கள் கொண்ட குழுவான ஜோதிஷ் வித்வானால் ஹிந்து புனித நாள்காட்டியான பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டிற்குப் பதிலாக 2021ஆம் ஆண்டிலேயே மகாகும்பமேளா நடைபெறும் என்று அப்போது முடிவு செய்யப்பட்டு மாநில அரசிடம் தெரிவிக்கப்பட்டதாக நரேந்திரா கூறினார். சில மாதங்களுக்குப் பிறகு 2020 ஜனவரியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளியை இந்தியா பதிவு செய்த சில நாட்களுக்குள்ளாக 2020 பிப்ரவரி 10 அன்று உத்தரகண்ட் அரசு ஷாஹி ஸ்னான்களுக்கான நாட்களை அறிவித்தது.   


கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கும்பமேளா குறித்து முந்நூறுக்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடந்திருப்பதாக மஹந்துகள் என்னிடம் கூறினார்கள். தொற்றுநோயின் ஆபத்துகளைப் பொருட்படுத்தாமல் 2020ஆம் ஆண்டின் முற்பகுதியில் இவ்வாறு நடைபெற்ற கூட்டங்களில் கும்பமேளாவிற்கான ஏற்பாடுகள் தொடர வேண்டும் என்று முன்மொழியப்பட்டது. கும்பமேளாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்படும் என்றும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் அவ்வப்போது அதைப் பார்த்துக் கொள்ளலாம் என்றும் அப்போது முடிவு செய்யப்பட்டதாக நரேந்திரா கூறினார். ஜூனா அகாராவின் செய்தித் தொடர்பாளரான நாராயண் கிரி கும்பமேளாவிற்கான தயாரிப்புகளுக்காக குறைந்தது ஐம்பது கூட்டங்களில் தான் கலந்து கொண்டதாகவும், கும்பமேளாவின் போது நடைபெறுகின்ற சந்தையை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சி மேற்கொள்வது அப்போது தனக்குத் தெளிவானது என்றும் கூறினார். மேலும் அவர் ‘சில விதர்மிகள் - தர்மத்தை நம்பாதவர்கள் கம்யூனிச மனப்பான்மை கொண்டவர்கள்… கோவிட்-19ஐ சாக்காக வைத்து கும்பமேளா சந்தையைத் தடுத்து நிறுத்த விரும்பினர்’ என்றார்.   

நாராயண் கிரி மேலும் கூறுகையில் ‘இறுதியில், கும்பமேளா நடக்குமா இல்லையா என்பது நிச்சயமற்றதாகி விட்டது. சந்தையைத் தவிர்க்க விரும்புவதையே உத்தரகண்ட் அரசாங்கத்தின் நோக்கங்கள் காட்டின’ என்றார். ஆறு அடி இடைவெளி, கட்டாய முகக்கவசம் போன்ற விதிகளை நாங்கள் பின்பற்ற வேண்டுமென்று மாநில அரசு விரும்பியதாக நாராயண் தெரிவித்தார். அதற்குப் பிறகு நிகழ்வை சற்றே குறைவான அளவிலே நடத்துவதைப் பற்றி பெரும்பாலான மஹந்துகள் சிந்திக்கத் தொடங்கினர். ஆனால் ‘எங்களுடைய மரபுகள், கலாச்சாரம் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும், வழக்கமான கும்பமேளா நடக்க  வேண்டும் என்பதில் மகாமந்திரி ஜி - ஜூனா அகாராவின் ஹரி கிரி உறுதியாக இருந்தார்’ என்று நாராயண் கூறினார்.   

அதைத் தொடர்ந்து 2020 டிசம்பரில் ஏபிஏபி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. உத்தரகண்ட் அரசின் நிலைப்பாட்டை அது கடுமையாக எதிர்த்தது. உத்தரகண்ட் அரசு ஒத்துழைக்காவிட்டால் தாங்களாகவே கும்பமேளாவிற்கான ஏற்பாடுகளை அகாராக்கள் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தது. ‘ஏற்பாடுகளைச் செய்து தருவது அரசின் கடமை’ என்ற செய்தியை நரேந்திராவை மேற்கோள் காட்டி 2020 டிசம்பரில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டது. ‘இதுவரையிலும் எந்தவொரு வேலையும் தொடங்கப்படவில்லை. அரசு நிர்வாகத்தின் அணுகுமுறையில் எங்களுக்கு மகிழ்ச்சியில்லை. ஆனாலும் உத்தரகண்ட் அரசு ஒத்துழைத்தாலும் இல்லாவிட்டாலும் 2010ஆம் ஆண்டு நடந்ததைப் போலவே 2021ஆம் ஆண்டிலும் மகா கும்பமேளா தெய்வீகமாக பிரமாண்டமாக இருக்கும்’ என்று நரேந்திரா கூறியிருந்தார்.   

நாராயண் ‘அதற்குப் பின்னர் 2020 டிசம்பர் மற்றும் 2021 ஜனவரியில் நடைபெற்ற கூட்டங்களில் கும்பமேளா அடையாள அளவிலேயே இருக்கும் என்று எங்களிடம் தெரிவிக்கப்பட்டது’ என்று கூறினார். கும்பமேளாவைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க  வேண்டும் என்று முதலமைச்சர் திரிவேந்திரா அவர்களிடம் வலியுறுத்தியதாக அந்த விவாதங்களின் போது உடனிருந்த அந்த மூத்த பாஜக தலைவர் என்னிடம் கூறினார். இந்திய சுகாதார அமைச்சகம் வழங்கிய நிலையான இயக்க நடைமுறைக்கு இணங்க கும்பமேளாவை குறிப்பிட்ட எண்ணிக்கையுடன் நடத்துவதற்கான உத்தரகண்ட் அரசாங்கத்தின் முன்முயற்சி குறித்து தங்களுக்கு எந்தவொரு ஆட்சேபணையும் இல்லை என்ற ஒப்புதலை அனைத்து அகாராக்களும் எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் கேட்டுக் கொண்டதாக என்று அந்த தலைவர் என்னிடம் கூறினார். கும்பமேளா வரலாற்றிலேயே முதன்முறையாக கோவிட்-19 பாதிப்பு இல்லை என்ற மருத்துவ சான்றிதழின் அடிப்படையில் பக்தர்களுக்கு நுழைவதற்கான அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என்றும் அப்போது முன்மொழியப்பட்டது. இருப்பினும் உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் ஆர்எஸ்எஸ், பாஜக மீது மிகப்பெரிய செல்வாக்கைச் செலுத்தி வருகின்ற அகாராக்களே இறுதியாக வெற்றி பெற்றனர். ‘கும்பமேளா சந்தையின் போது கொரோனா வைரஸ் விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்த முந்தைய முதல்வர் கும்பமேளா நடக்கவிருந்த நேரத்தில் மாற்றப்பட்டார்’ என்று நாராயண் கூறினார்.  


கோவிட்-19இன் இரண்டாவது அலை நாட்டைக் கைப்பற்றியிருந்த நிலையில் மார்ச் 11 அன்று கும்பமேளாவின் போது நடைபெற்ற முதல் ஷாஹி ஸ்னான் நிகழ்வில் ஹிந்து சாதுக்களும்  பக்தர்களும் கலந்து  கொண்டனர்.

 

முதல்வராக இருந்த திரிவேந்திரா உத்தரகண்ட் மாநிலத்தின் பௌரி கார்வால் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். நரேந்திர மோடியின் கீழ் நியமிக்கப்பட்ட உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இந்திய பாதுகாப்புத்துறை  தலைவரான பிபின் ராவத் ஆகியோரும் அதே மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். திரிவேந்திரா 1979 முதல் 2002ஆம் ஆண்டு வரை ஆர்எஸ்எஸ் உறுப்பினராக இருந்தார். உத்தரகண்ட் பிராந்திய ஆர்எஸ்எஸ் அமைப்புச் செயலாளராக இருந்து வந்த அவர் பின்னர் 2000ஆம் ஆண்டில் உத்தரகண்ட் மாநிலம் உருவான பிறகு மாநில அமைப்புச் செயலாளராகப் பதவி வகித்தார். 2000ஆம் ஆண்டில் உத்தரகண்ட் மாநிலத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மோடி அதுவரையிலும் தேர்தலில் போட்டியிடத் தயக்கம் காட்டி வந்த திரிவேந்திராவை டோயிவாலா தொகுதியில் இருந்து போட்டியிட ஊக்குவித்தார் என்று திரிவேந்திராவின் வாழ்க்கையை நன்கு அறிந்து வைத்திருக்கும் மூத்த ஆர்எஸ்எஸ் தலைவர்கள் என்னிடம் சொன்னார்கள். திரிவேந்திரா மீண்டும் அந்த தொகுதியை 2017ஆம் ஆண்டில் தன்வசம் தக்க வைத்துக் கொண்டார். தற்போதைய மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷாவிற்குத் துணையாக உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலிலும் திரிவேந்திரா பணியாற்றினார்.   

திரிவேந்திராவை வெளியேற்றுவது குறித்து மூன்று நாட்களாக உயர்மட்ட அரசியல் நாடகம் நடந்து வந்தது. 2021 மார்ச் 6 அன்று பாஜக தேசிய துணைத் தலைவரான ராமன் சிங், உத்தரகண்ட் மாநில பாஜக பொதுச்செயலாளரான துஷ்யந்த் சிங் கௌதம் ஆகியோர் டேராடூனுக்கு அறிவிக்கப்படாது வந்ததாக அந்த பாஜக மூத்த தலைவர் தெரிவித்தார். மாநில சட்டமன்றத்தின் பட்ஜெட் அமர்வு கைர்சைன் சட்டமன்ற இல்லத்தில் நடந்து கொண்டிருந்தபோது டேராடூனிலிருந்த அந்த மூத்த தலைவர்கள் திரிவேந்திராவை அவசர அவசரமாக வரவழைத்ததாக அவர் கூறினார். கைர்சைன் - டேராடூனுக்கு இடையே உள்ள 250 கிலோமீட்டர் தூரத்தை சாலை வழியாகக் கடந்து செல்ல குறைந்தது ஏழு மணிநேரம் ஆகும் என்ற போதிலும் திரிவேந்திரா டேராடூனுக்கு வரவழைக்கப்பட்டார். சட்டமன்றத்தைப் பாதியில் விட்டுவிட்டு சிறப்பு ஹெலிகாப்டர் ஒன்றில் அரை மணி நேரத்திற்குள் டேராடூனில் உள்ள தனது இல்லத்திற்கு திரிவேந்திரா சென்றடைந்தார் என்று அந்த நிகழ்ச்சியை நேரில் கண்ட பாஜக மூத்த தலைவர் கூறினார்.   

அங்கே நடந்த அரை மணி நேரக் கூட்டத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அவரைப் பார்க்க விரும்புவதாக திரிவேந்திரரிடம் சொல்லப்பட்டதாக அந்த பாஜக தலைவர் கூறினார். ’ராமன் சிங், துஷ்யந்த் கௌதம் ஆகியோருக்கு முதலமைச்சரின் இல்லத்தில் தேநீர் பரிமாறப்பட்ட போது பதட்டத்துடன் இருந்த ராவத்திடம் முதலமைச்சர் மாற்றம் இருப்பதாகத் தெளிவுபடுத்தப்பட்டதாகவும் அந்த தலைவர் என்னிடம் கூறினார்.


அடுத்த நாள் மாலையில் தில்லிக்கு வந்த திரிவேந்திரா ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவிற்கு இடையில் பாலமாக இருந்து வருகின்ற பாஜக தேசிய பொதுச் செயலாளரான நட்டா, பி.எல்.சந்தோஷ் ஆகியோரைச் சந்தித்தார். தில்லியில் உள்ள நட்டாவின் இல்லத்தில் நடந்தது அந்தச் சந்திப்பு என்றும் அப்போது நட்டாவும், சந்தோஷும் 2022ஆம் ஆண்டு வரவிருக்கும் தேர்தலுக்கு திரிவேந்திராவின் தலைமையில் பாஜக செல்லப் போவதில்லை என்று அவரிடம் தெரிவித்ததாக அந்த தலைவர் என்னிடம் கூறினார். அதாவது ராஜினாமா செய்யுமாறு அவருக்கு சமிக்ஞை தரப்பட்டது. அவருக்கு அடுத்ததாக யாரைக் கொண்டு வருவது என்பது பற்றி எந்த விவாதமும் அப்போது இருக்கவில்லை. திரிவேந்திராவைச் சந்திப்பதற்கு முன்பாக  அமித் ஷாவை நட்டா சந்தித்தார் என்று அந்த தலைவர் என்னிடம் கூறினார். நட்டா, சந்தோஷ் இருவருமே என்னுடைய அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களுக்குப் பதிலளிக்கவில்லை.    

மாநில முதல்வராக நான்கு ஆண்டுகள் நிறைவடைவதற்கு சில நாட்களுக்கு முன்பாக  மார்ச் 9 அன்று திரிவேந்திரா முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். திடீரென ராஜினாமா செய்ததன் காரணம் குறித்து கேள்வியெழுப்பிய செய்தியாளர்களிடம் ‘அது ஏன் என்று கண்டுபிடிக்க நீங்கள் தில்லிக்குத்தான் செல்ல வேண்டும்’ என்று அவர் கூறினார். 


அந்த நடவடிக்கைகளின் போது உடனிருந்து வந்த அந்த மூத்த பாஜக தலைவர் ‘அவர் பதவி விலகிய செய்தியை தேசிய நாளிதழ்கள் முதல் பக்கங்களுக்குக் கொண்டு சென்றன. பலரும் சாத்தியமான மாற்று முதல்வரைப் பற்றி எழுதியிருந்தனர். ஆனால் அவர்களில் யாருமே அவருக்கான சரியான மாற்றையோ அல்லது காரணங்களையோ சரியாகப் புரிந்து கொள்ளவில்லை’ என்று கூறினார். ‘ஒரு ராவத்தை மாற்றுவதற்கு வேறொரு ராவத்?’ என்று தி பிரிண்ட் இதழ் எழுதியிருந்தாலும் தீரத்தின் பெயரை அது குறிப்பிடவில்லை. தன்சிங் ராவத், அனில் பலூனி, அஜய் பட் ஆகியோர் முன்னணியில் இருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் அவர்களில் யாருமே முதல்வராக்கப்படவில்லை. இறுதியில் மகாசிவராத்திரி பண்டிகை நாளான மார்ச் 11 அன்று என்று முதல் ஷாஹி ஸ்னான் திட்டமிடப்பட்டிருந்த நாளுக்கு ஒரு நாள் முன்னதாக திரிவேந்திராவிற்குப் பதிலாக தீரத் சிங் ராவத் முதல்வராக நியமிக்கப்பட்டார்.  


மகாசிவராத்திரி ஸ்னான் மீது ஹெலிகாப்டரிலிருந்து கும்பத்தின் மீது ரோஜா இதழ்களைப் பொழிகின்ற நிகழ்வு குறித்ததாகவே புதிய முதலமைச்சராக மார்ச் 10 அன்று பதவியேற்றவுடன் தீரத் பிறப்பித்த முதல் உத்தரவு இருந்தது. எந்தவொரு கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைவரும் கும்பமேளாவிற்கு வரலாம் என்றும் கோவிட்-19, கும்பமேளா தொடர்பாக தனக்கு முன்பிருந்தவர் எடுத்த முடிவுகளை மாற்றியும் அன்றைய தினமே தீரத் அறிவிக்கவும் செய்தார். ‘கடவுள் மீதான நம்பிக்கை வைரஸ் மீதான பயத்தை வெல்லும் என்று நாங்கள் உறுதியாக நம்புவதால் கோவிட்-19 என்ற காரணத்தைச் சொல்லி யாரும் இங்கே தடுத்து நிறுத்தப்பட மாட்டார்கள்’ என்று தீரத் கூறினார்.     

ஏப்ரல் 12 அன்று திட்டமிடப்பட்டிருந்த இரண்டாவது ஸ்னானுக்கு சில நாட்கள் முன்னதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இரண்டு நாட்களுக்கு கும்பமேளாவிற்கு வருகை தந்தார். பாபா ராம்தேவ், மகாமண்டலேஷ்வர் கெலாஷ்நந்த் கிரி, மஹந்த் ரவீந்தர் பூரி, மகாமண்டலேஸ்வர் பால்கானந்த் கிரி, மஹந்த் நரேந்திர கிரி உள்ளிட்ட பல்வேறு மஹந்துகள் புதிய முதல்வரைப் புகழ்ந்து திரிவேந்திராவைத் தாக்கிப் பேசியதாக அப்போது செய்திகள் வெளியாகின. தீரத்துடன் பேசி ஏற்பாடுகளை மேம்படுத்துவதாக  மோகன் பகவத் மீண்டும் மீண்டும் அவர்களிடம் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. 

கும்பமேளா பற்றிய அனைத்து முக்கிய முடிவுகளும் ஒன்றிய அரசால்  நேரடியாக மேற்பார்வையிடப்படுவதாக ஏற்கனவே இரண்டு மகாகும்பமேளாக்களை மேற்பார்வையிட்டிருந்த உத்தரகண்ட் பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி என்னிடம் கூறினார். கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சகம் விழாவிற்கான நிதியை அளிக்கின்ற வேளையில், பிரதமர் அலுவலகம் விழா ஏற்பாடுகளை மேற்பார்வையிடுகிறது என்றார். அவர் கூறியதையே பாஜக மூத்த தலைவர்களும் வழிமொழிந்தனர். ‘கும்பமேளாவிற்குள் கோடிக்கணக்கான ரூபாய் பணம் பாய்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் மக்கள் அந்த விழாவிற்கு வருகிறார்கள். தேசிய பாதுகாப்பு குறித்த அபாயங்களும், படிமம் குறித்த காரணிகளும் இருக்கின்றன. மூத்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களும், பாஜக தலைவர்களும் நேரடியாக கும்பமேளா தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்’ என்று அந்த தலைவர்களில் ஒருவர் தெரிவித்தார்.   

கும்பமேளா குறித்த சர்ச்சையின் காரணமாக திரிவேந்திரா பதவி விலகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார் என்றும், கும்பமேளாவைப் பொறுத்தவரை சாமியார்கள் பிளவுபட்டிருந்தனர் என்றும் கருதுவது ஓரளவிற்குச் சரியானதே என்று பாஜக செய்தித் தொடர்பாளரான சௌகான் என்னிடம் கூறினார். நியாயமான கட்டுப்பாடுகளுடன் விழா நடத்தப்பட வேண்டும் என்பதில் சில சாதுக்கள் திருப்தி அடைந்திருந்ததாகக் கூறிய அவர் ஆனால் அவர்களில் இன்னும் சிலர் யாத்ரீகர்களை சுதந்திரமாக அனுமதிக்க வேண்டும் என்று கூறினர் என்றார். அவர்களில் சிலர் வெளியேறிய முதல்வருக்கு எதிராக தங்களுடைய வெறுப்பை வெளிப்படுத்தியிருக்கலாம் என்று கூறிய சௌகான் ‘கண்ணுக்குத் தெரிவதைத் தாண்டி நீங்கள் பார்க்க வேண்டும்’ என்று என்னைக் கேட்டுக் கொண்டார். ‘அரசியல் என்பது சுவரில் தெளிவாக எழுதப்பட்டதாக இருப்பதல்ல. அது வரிகளுக்கு இடையில் வாசிக்க வேண்டியதாக இருக்கிறது’ என்றும் அவர் என்னிடம் கூறினார். மேலும் கூறுகையில் ‘இது மத்திய தலைமையால் கூட்டாக கட்சிக்குள்ளாக எடுக்கப்பட்ட முடிவு. வெளியே சென்றிருப்பவர், பதவியில் இருப்பவர் என்று அவர்கள் இருவரும் அடிமட்டத்திலிருந்து எழுந்து வந்திருப்பவர்கள். இருவரும் ஆர்எஸ்எஸ் உடன் தொடர்புடையவர்கள். ஆனாலும் உள்ளூர் நிர்வாகத்தைப் பொறுத்தவரை மேற்கொள்ள வேண்டிய தனிப்பட்ட அணுகுமுறைகள் இப்போது மிகவும் முக்கியமானவையாக இருக்கின்றன. வேறொரு தலைவரைப் பொறுப்பேற்குமாறு கட்சி முடிவு செய்ததற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்’ என்று சௌகான் குறிப்பிட்டார்.  

கும்பமேளாவை முற்றிலும் மத நிகழ்வாக மட்டுமே கருதுவது தவறானது என்று என்னிடம் கூறிய அந்த பாஜக மூத்த தலைவர் கும்பமேளா என்பது மிகப்பெரிய வணிகமாகும் என்று குறிப்பிட்டார். ‘இதை பார்ப்பனர்கள், சாதுக்கள்,  தாந்த்ரீகர்களின் மதரீதியான ஒன்றுகூடல் என்று மட்டும் நீங்கள் தவறாக எண்ணி விடாதீர்கள். இது பல கோடி மதிப்புள்ள ஒரு சந்தை’ என்றார். பாஜக தலைவரும் உத்தரகண்ட் சுற்றுலாத்துறை அமைச்சருமான சத்பால் மகராஜ் மீது அதிக நம்பிக்கை கொண்டவராக இருக்கின்ற திகம்பர் நேகி ‘இந்த கும்பமேளாவில் ஒரு கோடி மக்கள் பங்கேற்று ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் மூவாயிரம் ரூபாய் செலவழிப்பதாகக் கொண்டாலும், அதன் பொருள் சாதாரண மதிப்பீடுகளிலேயே மூவாயிரம் கோடி ரூபாய் விற்றுமுதல் என்பதாக இருக்கும்’ என்று விளக்கினார். கும்பமேளாவில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது மிகப்பெரிய அளவிலே கோடிக்கணக்கான ரூபாய் பணத்தைக் கொண்டு வரும் யாத்ரீகர்களைக் குறைப்பதாகவே இருக்கும் என்று பாஜகவின் மூத்த தலைவரும் என்னிடம் கூறினார்.  

எழுத்தாளரான ஜா அதையே வழிமொழிந்தார். ‘கும்பமேளாவின் போது, ​​இந்த சாதுக்கள் நன்கொடை,  சடங்குகள் என்ற பெயரில் பல கோடி அளவில் பணத்தைச் சம்பாதிக்கிறார்கள். கும்பமேளா அனைத்து அகாராக்களுக்கும் பிரதான வருமானத்தைத் தருகின்ற நிகழ்வாக உள்ளது. பெரிய மஹந்துகள் மட்டுமல்ல, சின்ன  சாதுக்களும் கூட பந்தாரங்கள், சத்சங்கங்கள், பிரவச்சன்கள்,  பிரசாதங்கள் மூலம் கும்பமேளாவிலிருந்து பணம் சம்பாதிக்கிறார்கள்’ என்று அவர் கூறினார். பாஜக தலைவர் ‘அகாராக்கள் கும்பமேளாவிற்காக பன்னிரண்டு ஆண்டுகளுக்கு காத்திருக்கிறார்கள். தங்களுக்குச் சேர வேண்டிய வருவாயை அவர்கள் அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுத்து விட மாட்டார்கள்’ என்றார்.   


மார்ச் 21 அன்று வெளியான செய்தித்தாள்களில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் ஆகியோரின் படங்களுடன் வெளியான முழுப் பக்க விளம்பரங்கள் கும்பமேளாவில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களை அழைத்தன.

மத்திய அரசு ஒதுக்குகின்ற பல நூறு கோடி ரூபாய் மற்றும் பெருநிறுவனங்களின் பங்களிப்புகளுடன் யாத்ரீகர்கள் கொண்டு வருகின்ற பணமும் இருக்கிறது. மத்திய அரசு 2021ஆம் ஆண்டு கும்பமேளாவிற்கு சுமார் ரூ.700 கோடி ஒதுக்கியுள்ளதாக மேளாவின் அதிகாரியான தீபக் என்னிடம் தெரிவித்தார். உத்தரகண்ட் அரசியல் குறித்து பத்தாண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட பத்திரிகையாளரான சுதாகர் பட் மாநில அரசின் பங்களிப்புகளையும் சேர்த்து கும்பமேளாவிற்கான பட்ஜெட் ஆயிரம் கோடி ரூபாயை எளிதில் தாண்டும் என்று கூறுகிறார். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பெருநிறுவனங்கள் தங்களிடமுள்ள சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து பல கோடி ரூபாய் அளவிற்கான பங்களிப்பைச் செய்துள்ளன என்று பாஜக மூத்த தலைவர் தகவலளித்தார். கும்பமேளாவிற்கு பக்தர்களை வரவேற்று மார்ச் 21 அன்று மோடி, தீரத் ஆகியோரின் படங்களுடன் பல தேசிய நாளிதழ்களில் வெளியான முழுப் பக்க விளம்பரங்களில் விழாவில் கலந்து கொள்வது மிகவும் தூய்மையானது, பாதுகாப்பானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த நிகழ்வின் விளம்பரத்திற்காக சுமார் ரூ.15 கோடி வரை செலவிடப்பட்டதாக கும்பமேளாவை மேற்பார்வையிட்ட அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர்.

மகராஜ் உள்ளிட்ட மாநில அமைச்சர்கள் சிலரும் ஆர்எஸ்எஸ்சின் ஆதரவோடு முழுமையான கும்பமேளாவிற்கான பரப்புரையை மேற்கொள்வதில் முக்கிய பங்கு வகித்தனர் என்றும் அந்த பாஜக மூத்த தலைவர் கூறினார். உத்தரகண்ட் மாநிலத்தில் வலுவான செல்வாக்குடன் உள்ள மகராஜ் தன்னைத்தானே தெய்வீக மனிதராக அறிவித்துக் கொண்டவர்.  அவர் 142 கோடி ரூபாய் நிகர சொத்து மதிப்பு கொண்டவராக பணக்கார வேட்பாளர்களில் ஒருவராக 2017 சட்டமன்றத் தேர்தலின் போது இருந்தார் என்பது அவருடைய தேர்தல் பிரமாண பத்திரத்திலிருந்து தெரிய வருகிறது. சத்பால் மகராஜ் ஹரித்துவாரில் உள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் உடன் இணைந்து கும்பமேளாவிற்காக பரப்புரை செய்ததாக முணுமுணுப்புக்கள் இருந்தன. 2020ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் உத்தரகண்ட் மாநிலத்தில் பலர் தங்களுடைய சொத்துகளை இழந்து விட்டதாக பேச்சு இருந்தது. இந்தக் கும்பமேளா அவர்கள் தங்களுடைய சொத்துகளை மீண்டும் பெறுவதற்கான ஒரு வழியாகும்’ என்று அந்த பாஜக மூத்த தலைவர் தெரிவித்தார்.  

மகராஜுக்கும் திரிவேந்திராவுக்கும் இடையே உராய்வு இருந்ததாக பட் என்னிடம் கூறினார். 2014ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவிருந்த பொதுத்தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் சேருவதற்காக மகராஜ் காங்கிரஸை விட்டு 2014 மார்ச் மாதம் வெளியேறினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2016 மே மாதத்தில் ஒன்பது அதிருப்தி காங்கிரஸ் தலைவர்கள் 2017ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உத்தரகண்ட் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் இணைந்தனர். உத்தரகண்ட் பாஜகவிற்குள் இருந்த இந்த காங்கிரஸ் குழுவினர் திரிவேந்திராவிற்கு ஆதரவாக இல்லை என்று பட் மற்றும் பாஜக தலைவர்கள் பலரும் என்னிடம் கூறினார்கள். நேர்காணல்கள் வேண்டி வைக்கப்பட்ட எனது கோரிக்கைகளை ஏற்பதற்கு மகராஜ் மறுத்து விட்டார். இந்தக் கட்டுரை வெளியிடப்பட்ட நேரம் வரையிலும் மின்னஞ்சல் மூலம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்கவில்லை.


திரிவேந்திராவின் தலைமையில் மீண்டும் வெற்றியைப் பெறுவது உறுதியில்லை என்று உத்தரகண்ட் மாநில பாஜக மத்திய தலைமை கருதியதாலேயே அவர் நீக்கப்பட்டதாக திரிவேந்திரா பதவியிலிருந்து அகற்றப்பட்ட நேரத்தில் பல செய்தித்தாள்களும் குறிப்பிட்டிருந்தன. திரிவேந்திராவை வெளியேற்றுவதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறிய பட் ‘திரிவேந்திராவை நீக்கியது கட்டாயம் என்பதற்குப் பதிலாக அரசியல் கணக்கீடு என்றே நான் கருதுகிறேன். சவப்பெட்டியின் மீது அடிக்கப்பட்ட இறுதி ஆணியாக இந்த கும்பமேளா சர்ச்சை இருந்திருக்கலாம். ஆனாலும் ஆட்சிக்கு எதிராக மக்களிடமிருந்த மனப்பாங்கு,  எம்எல்ஏக்களின் ஆதரவை திரிவேந்திரா முழுமையாகப் பெற்றிராதது போன்று மற்ற காரணிகளும் பங்களித்தன’ என்றும் குறிப்பிட்டார்.

இந்த கருத்து குறித்து மாற்றுக் கருத்தைத் தெரிவித்த பாஜக மூத்த தலைவர் ‘உத்தரகண்ட் முதல்வரை மாற்றுவதற்கான முடிவு உத்தரப்பிரதேச மாநிலத்துடன் தொடர்புடையது. அது மிகவும் எளிதான அடிப்படைக் கணிதம். எழுபது இடங்களைக் கொண்ட உத்தரகண்ட் மாநிலத்தை விட 403 இடங்களைக் கொண்ட உத்தரப்பிரதேசமே பாஜகவிற்கு மிகவும் முக்கியமானது’ என்ற கூறினார். மேலும் கூறுகையில் ‘உத்தரப்பிரதேசத்தில் பாஜகவிற்கு மாபெரும் வெற்றி தேவைப்படுகின்ற நேரத்தில் உத்தரகண்டை விட உத்தரப்பிரதேசமே பாஜகவிற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்’ என்றார்.  

‘நம்பிக்கை வைரஸ் மீதான பயத்தை வெல்லும்’ என்று தீரத் சிங் ராவத் கூறிய இரண்டு நாட்களுக்குப் பிறகு மார்ச் 22 அன்று மறுநாள் மோடியையும் அமித்ஷாவையும் தில்லியில் அவர் சந்திக்கவிருந்த நிலையில் அவருக்கு கோவிட்-19 தொற்று இருப்பதாகப் பரிசோதனையிலிருந்து தெரிய வந்தது.


ஏப்ரல் 9 அன்று கும்பமேளாவைப் பார்வையிட்ட சில நாட்களிலேயே மோகன் பகவத்திற்கு தொற்று இருப்பதாக கோவிட் பரிசோதனையில் அறியப்பட்டதாக ஆர்எஸ்எஸ் அறிவித்தது. ஏபிஏபியின் தலைவரான நரேந்திரா தொற்று இருப்பதாக அறியப்பட்ட பின்னர் ஏப்ரல் 13 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நரேந்திராவுடன் தொடர்பிலிருந்த உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மறுநாள் தொற்று இருப்பதாக அறியப்பட்டார். ஏப்ரல் 15 அன்று நிர்வாணி அகாராவின் மகாமண்டலேஸ்வர் கபில் தேவ் தாஸ் ஹரித்துவாரில் கோவிட்-19 தொற்றால் ஏற்பட்ட சிக்கல்களால் இறந்து போனார். நேபாளத்தின் முன்னாள் அரச குடும்பத்தினர் கோமல் ராஜ்ய லட்சுமி தேவி, ஞானேந்திரா ஆகியோருக்கும் கும்பமேளாவிற்கு வருகை தந்த  பிறகு தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டது. விஸ்வ ஹிந்து பரிஷத்தின் நிர்வாகத் தலைவரான அலோக் குமாரும் அதேபோன்று தொற்றால் பாதிக்கப்பட்டார்.   

மார்ச் மாத இறுதியில் அதிகரித்து வருகின்ற நெருக்கடியைக் கவனத்தில் கொண்ட உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் நாளொன்றிற்கு ஐம்பதாயிரம் பரிசோதனைகளை நடத்த வேண்டுமென்று மாநில அரசுக்கு உத்தரவிட்டது. ஏப்ரல் 17 அன்று இரண்டாவது அலையின் பேரழிவுகரமான எண்ணிக்கை மற்றும் மகாகும்பமேளாவின் மீதான அதிகரித்து வந்த விமர்சனங்களுக்கிடையில் நான்கு ஷாஹி ஸ்னன்களில் ஏற்கனவே மூன்று நடந்து முடிந்த பிறகு பல்வேறு மஹந்துகளிடம் கடைசி நிகழ்வை அடையாள அளவிலே நடத்துமாறு பிரதமர் மோடி இறுதியாக வேண்டுகோள் விடுத்தார். விரைவிலேயே ஜூனா அகாரா  கும்பமேளாவிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது. ஆனாலும் பைராகிகள் என்று அழைக்கப்படும் நிரோஹி, நிர்வாணி, திகம்பர் அகாராக்கள் பிரதமரின் அந்த வேண்டுகோளை ஏற்க மறுத்து விட்டனர். இந்தக் கட்டத்தில் கூட மாநில அரசு கட்டுப்படுத்தப்பட்ட கூட்டத்தை அமல்படுத்திடவில்லை. ஏற்கனவே இருந்து வரும் சடங்குகளின்படி கடைசி ஷாஹி ஸ்னானின் போது பைராகி அகாராக்கள் கங்கையில் குளிப்பார்கள். ‘கும்பமேளாவை நிறுத்த ஜூனா அகாராவுக்கு எந்தவொரு உரிமையும் இல்லை. அவர்கள் அரசியல்வாதிகளை மகிழ்விப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று நிர்வாணி அகாராவைச் சேர்ந்த மஹந்த் தரம் தாஸ் சேனல் ஆஜ் தக் தொலைக்காட்சியிடம் கூறினார். ஏப்ரல் 27 அன்று நடந்த அந்த அடையாள கடைசி ஷாஹி ஸ்னானிலும் 25,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.  

கும்பமேளாவின் மீதான இந்த சர்ச்சை திட்டமிடப்படாத மற்றொரு விளைவையும் ஏற்படுத்தியது. ஏபிஏபியை உடைத்து அகில பாரதிய வைஷ்ணவ் அகாரா என்றழைக்கப்படும் புதிய பிரிவை பைராகி அகாராக்கள் உருவாக்கியுள்ளனர். கும்பமேளா மறுபடியும் வருகின்ற போது அதன் செயல்பாட்டில் இது எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. மதரீதியான உலகின் மிகப்பெரிய கூடுதல் என்று கும்பமேளா நம்பப்படுகிறது. ஹரித்துவார், பிரயாக்ராஜ், நாசிக், உஜ்ஜைன் ஆகிய நான்கு ஹிந்து புனித தளங்களும் தங்களுக்கான கும்பமேளாவை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தி வருகின்றன.  


இதற்கு முன்னர் ஹரித்துவார் கும்பமேளா 2010ஆம் ஆண்டு நடந்து முடிந்தது. மீண்டும் அதை 2022ஆம் ஆண்டில் நடத்துவதற்குப் பதிலாக, ஜோதிஷ் சாஸ்திரம் என்ற ஜோதிட அறிவியலின் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு முன்னதாகவே நடத்த வேண்டும் என்று ஏபிஏபி வலியுறுத்தியதாக மஹந்துகள் என்னிடம் கூறினர். ‘ஒரு சூரிய சுழற்சியில் குரு பன்னிரண்டு மாதங்கள் தங்கியிருக்கும். ஹரித்துவாரில் கும்பமேளாவை நடத்துவதற்கு குரு கும்ப ராசியிலும், சூரியன் மேஷ ராசியிலும் தங்கியிருக்க வேண்டும். அதற்கான சாத்தியம் 2022இல் இருக்கவில்லை. மாறாக 2021ஆம் ஆண்டில் மட்டுமே அவ்வாறு நடக்கவிருக்கிறது. ஏப்ரல் 10க்குப் பிறகு, கும்பத்தின் உள்ளமைவை விட்டு குரு வெளியேறி விடும்’ என்று நிர்வாணி அகாராவைச் சேர்ந்த மஹந்த் ரவீந்தர் பூரி விளக்கினார். நாட்களில் உள்ள இந்த இடைவெளிகள் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உருவாகின்ற கூடுதல் மாதத்தின் காரணமாகவே ஏற்படுகின்றன என்று ஜூனா அகாராவைச் சேர்ந்த நாராயண் கூறினார். மஹந்துகளில் ஒருவருக்கு நெருக்கமாக இருந்து வருகின்ற தந்திரி ஒருவர் ‘ஹிந்து புராணங்கள் கடவுள் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்ம வடிவத்தில் ஹிரண்யகஷ்யப் என்ற அரக்கனைக் கொல்வதற்காக ஒரு நாளில் கூடுதல் தருணங்கள் உருவாக்கப்பட்டதாகக் கூறுகின்றன. ஒட்டுமொத்தமாக அந்த தருணங்கள் கூடுதல் மாதமாக மாறும். அது பெரும்பாலும் ஃபாலே மாதம் அல்லது மலே மாதம் என்பதாக அழைக்கப்படுகிறது, கும்பமேளாவை முன்கூட்டியே நடத்த அதுவே வழிவகுத்தது’ என்கிறார்.


கும்பமேளா ஏன் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பதிலாக பதினோரு ஆண்டுகளிலேயே நடக்கிறது என்று கேள்வி எழுப்பிய சில நபர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்த கூட்டங்களில் இருந்ததாக நாராயண் என்னிடம் கூறினார். ‘இந்த விஷயத்தை சில அதிகாரிகள் மீண்டும் மீண்டும் கிளப்பினார்கள். பின்னர் ஹரி கிரி மகாராஜ் ஜி பஞ்சாங்கத்தை எடுத்து கடந்த ஆயிரம் ஆண்டுகளின் வரலாற்றை விளக்கிக் காட்டினார்’ என்று மேலும் அவர் கூறினார். பதினோராவது ஆண்டில் கும்பமேளா நடப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்பதை’ஒரு தாயின் கருப்பை அதற்கான நேரத்திலேயே முதிர்ச்சியடைகிறது. அதேபோன்று கும்பமேளாவும் அதற்கான நேரத்திலேயே நடைபெறும்’ என்று அவர் விளக்கினார். அதை உறுதிப்படுத்திய பூரி ‘மற்ற இடங்களில் கும்பமேளா வழக்கமாக பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே நடக்கிறது. ஹரித்துவார் கும்பமேளாவில் மட்டும்தான் இதுபோன்றதொரு முரண்பாட்டை எண்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்து நாம் கண்டிருக்கிறோம். கடைசியாக 1938ஆம் ஆண்டில் இதுபோன்று நடந்தது’ என்று விளக்கமளித்தார்.


ஆனால் வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்த முன்னாள் அமைச்சரான சாந்தகுமார் ‘நம்முடைய வேதங்களிலேயே ‘ஆபத் காலே, மரியாதா நாஸ்தி’ அதாவது வாழ்க்கை ஆபத்தில் இருக்கும்போது, ​​அனைத்து  விதிகளும் மீறப்படலாம் என்று எழுதப்பட்டிருக்கிறது’ என்று சொல்லி கும்பமேளாவை நடத்துவதற்கான தர்க்கத்தையே கேள்விக்குள்ளாக்கினார்.


ஒரே நாளில் விதிஷா மற்றும் கட்டாக்கில் முறையே 99 சதவிகிதம், 43 சதவிகிதம் என்று பதிவாகிய அதிக நோய்த்தொற்று பாதிப்புகள் அந்தப் பகுதிகளில் பரிசோதனைக்குள்ளான கும்பமேளாவிலிருந்து திரும்பியவர்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தன. அந்தப் பிராந்தியங்களில் கும்பமேளாவில் இருந்து திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கையை அது உறுதியாகப் பிரதிபலிக்கவில்லை. நாடு முழுவதிலும் உள்ள அந்த எண்ணிக்கை பற்றியும் குறைவான தகவல்களே உள்ளன. பேரழிவை ஏற்படுத்தியிருக்கும்  வைரஸின் அதிகரிப்பு இருக்கின்ற போதிலும் கண்களை மூடிக் கொண்டு சமரசமற்ற முறையில் நடத்தி முடிக்கப்பட்டிருக்கும் இந்தக் கும்பமேளா இந்தியாவில் கோவிட்-19இன் இரண்டாவது அலையின் பரவலை எந்த அளவிற்கு மோசமாக்கியிருக்கிறது என்பதற்கான அளவு மதிப்பீடு எதுவுமில்லை. 

https://caravanmagazine.in/politics/bjp-fired-ex-uttarkhand-chief-minister-trivendra-singh-rawat-restricting-kumbh-gatherings

Comments