மோடிஜி நீங்கள் பேச வேண்டும், உங்களுடைய திட்டத்தைக் கூற வேண்டும் - கொரோனா போராளி ஒருவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்
டாக்டர் அக்ஷய் பஹேதி
கதிரியக்கவியல் இணைப் பேராசிரியர்
ஸ்க்ரோல் இணைய இதழ்
2020ஆம் ஆண்டு ஏப்ரல் 5 அன்று கொரோனா வைரஸ் தொற்றுநோயை
எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய ஒற்றுமைக்காக பிரதமர் நரேந்திர மோடி விளக்கேற்றி
வைத்தார்
மூடநம்பிக்கை, மத நம்பிக்கைகள், தேசியவாதம் என்று இவை எதுவுமே வைரஸுக்கு எதிராகச் செயல்படவில்லை. எனவே இந்தமுறை தயவுசெய்து அறிவியலுடன் மட்டுமே உறவாடுங்கள்.
அன்புள்ள மோடிஜி,
ஒரு மருத்துவர் - கோவிட் போராளி என்றாலும் நான் ஒரு மிகச்
சாதாரண இந்தியக் குடிமகன். உங்கள் தலைமை மீது நம்பிக்கை கொண்டவர்களில் ஒருவராக
நானும் இருக்கிறேன். இந்த பாத்திரங்கள் அனைத்திலும் என்னை நான் உதவியற்றவனாகவே
உணர்கிறேன். இந்த நேரத்தில் நம் நாட்டுத் தலைவரின் வழிகாட்டுதல் மிகவும்
தேவைப்படுவதாக இருப்பதாலேயே இன்று நான் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
நான் மட்டுமே இவ்வாறு உணரவில்லை என்பது
எனக்கு நன்றாகத் தெரியும்.
எந்தவொரு அரசாங்கத்திடமும் கோவிட்-19 சுனாமியைத் தனித்து
எதிர்கொள்ளும் திறன் இல்லை என்பதை நான் புரிந்திருக்கிறேன். குடிமக்கள்
ஒவ்வொருவரும் தங்களுடைய பங்கையாற்றிட வேண்டியுள்ளது. குடிமக்கள் தங்கள்
வழியிலிருந்து விலகி துயரில் ஆழ்ந்திருப்பவர்களுக்கு, உதவி தேவைப்படுபவர்களுக்கு
உதவிடுவதற்காக தனித்துவமான வேலைகளைச் செய்து வருவதை நாம் காண்கின்றோம். ஆனாலும்
மோடிஜி இவையனைத்தும் அவநம்பிக்கையான காலகட்டத்தில் மிகுந்த வலியுடன்
மேற்கொள்ளப்படுகின்ற தனிப்பட்ட முயற்சிகளாகும். இதுபோன்ற காரியங்களால் ஒருங்கிணைந்த,
அறிவியல்ரீதியான முறையில் ஒன்றாகச் செய்து நம்மால் அடைய முடிவதை அடைந்திட
முடியாது. இந்த இடத்தில்தான் உங்களால் அனைத்து வித்தியாசங்களையும் ஏற்படுத்திக்
காட்ட முடியும் என்று நினைக்கிறேன்.
தற்போது உலகமே இந்தியாவிற்கு உதவிட முயற்சிகளை மேற்கொள்வதில்
ஒன்றுபட்டுள்ளது. ஆனால் இந்தியர்கள் இன்னும் பிளவுபட்டே இருக்கின்றனர். மிகப்பெரிய
எதிரியான கோவிட் வைரஸைத் தோற்கடிக்க இப்போது முயற்சிக்காமல் எனது வாட்ஸ்அப்
குழுக்கள் அனைத்தும் வேறு ஏதாவதொரு பிரச்சனை குறித்து சண்டையிட்டுக்
கொண்டிருக்கின்றன. நல்வாய்ப்பாக உலகிலேயே சிறந்த, மிகுந்த திறன் மிக்க
தகவல்தொடர்பாளர்களில் ஒருவரான உங்களை இந்தியா பெற்றிருக்கிறது. முதல்
பொதுமுடக்கத்தின்போது நீங்கள் வழக்கமாக ஆற்றிய தேசிய அளவிலான உரைகளை உங்களுடைய
ஆதரவாளர்கள் மட்டுமல்லாது எதிர்ப்பாளர்களும் மிகவும் கவனமாகக் கேட்டனர். மக்களிடம்
நேர்மறை ஆற்றலைக் கொண்டு வருவதற்கான சிறந்த ஆதாரமாக அவை இருந்தன. தங்களிடமுள்ள
அச்சம், கலக்கத்திற்கு எதிராக அனைத்து இந்தியர்களும் போராடுகின்ற வகையில் சரியான
தகவல்களையும் செய்திகளையும் அளித்து நமக்கான பொதுவான போராட்டத்தில் அனைவரையும்
ஒன்றிணைக்கும் வகையில் இப்போதும் நீங்கள் எங்களுக்கு
உதவிட வேண்டும்.
ஒவ்வொரு நாளும் மாலை முக்கிய நேரத்தில் தேசிய
தொலைக்காட்சியில் தோன்றி ஒவ்வொருவரிடமும் தயவுசெய்து பேசுங்கள். தற்போதைய
நெருக்கடியின் அளவைப் பற்றி அல்லது அரசாங்கம் இதுவரையிலும் என்ன செய்திருக்கிறது
என்பதைப் பற்றி பேசுவதற்காக தயவுசெய்து உங்களுடைய நேரத்தைச் செலவிட வேண்டாம். அனைவருமே
தங்களால் முடிந்தவரையிலான முயற்சிகளை மேற்கொண்டு வருவதை நாங்கள் நன்கு அறிந்தே
இருக்கிறோம். எனவே அதற்குப் பதிலாக நீங்கள் தீர்வுகளைப் பற்றி பேசுங்கள். ஒரு
நாடாக நாம் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி எங்களிடம் பேசுங்கள்.
மேலும் ஒரேயொரு கோரிக்கை. உண்மைகளாலும் அறிவியலாலும் மட்டுமே கோவிட்டைத் தோற்கடிக்க
முடியும் என்பதையே சர்வதேச அனுபவம் உணர்த்துகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மூடநம்பிக்கைகள், மத நம்பிக்கைகள், தேசியவாதம் என்று இவை எதுவும் வைரஸுக்கு எதிராகச்
செயல்படவில்லை. எனவே இந்த முறை தயவுசெய்து அறிவியலுடன் மட்டுமே உறவாடுங்கள்.
நேர்மையான இலக்குகளைக் கொண்ட செயல் திட்டத்தை
எங்களுக்குக் கொடுங்கள். போர்க்கால நடவடிக்கைகளுடன் அவற்றைச் செயல்படுத்துவதற்கு எங்களாலான
உதவிகளைச் செய்யுமாறு அனைவரையும் அறிவுறுத்துங்கள். ஆக்சிஜன், மருந்துகள்
பற்றாக்குறை உண்மையில் எப்போது சரிசெய்யப்படும் என்கிற நாளை எங்களுக்குத்
தெரிவியுங்கள். தங்களிடமுள்ள மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் அல்லது ஆக்சிஜன்
செறிவூட்டிகளை அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொடுக்கும்படி அவற்றைப் பதுக்கி வைத்துக்
கொண்டிருப்பவர்களைக் கேட்டுக் கொள்ளுங்கள். எப்போதாவது அவை தேவைப்படும் போது
அவர்கள் கவனித்துக் கொள்ளப்படுவார்கள் என்று அவர்களுக்கு உறுதியளியுங்கள். அடுத்து
சொல்லப் போவது வெறும் வேடிக்கையான ஆலோசனையல்ல. அவ்வாறு அவர்கள் ஏற்றுக் கொண்டதை
காட்டுத்தீ போல் பரவுவதற்கு ஏற்றவாறு செல்ஃபி எடுத்து இணையத்தில் இடுகையிடுமாறு பதுக்கல்காரர்களிடம்
கேட்டுக் கொள்ளுங்கள்.
மிகப் பெரிய தடுப்பூசி திட்டம்
நீங்கள் நாட்டிற்கு ஆற்றிய கடைசி உரையில் கோவிட்டிற்குப்
பொருத்தமான நடத்தையை உறுதிப்படுத்துவதை சமூகங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்ற
கோரிக்கையை விடுத்திருந்தீர்கள். இந்த முறை நீங்கள் அவர்களிடம் உணவு. முகக்கவசங்கள்,
ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுக்கான நிதியைச் சேகரிப்பதன் மூலமாக அல்லது அவற்றை வாங்க
முடியாதவர்களின் மருத்துவமனை பில்களுக்கு, சமீபத்தில் அனாதையாகி இருக்கின்ற
குழந்தைகளின் கல்விக்கான நிதியை வழங்குவதன் மூலம் நிவாரண முயற்சிகளில் இறங்கி தன்னார்வத்
தொண்டு செய்யுமாறு வேண்டுகோளை முன்வையுங்கள். அமெரிக்காவின் ஆபரேஷன் வார்ப் ஸ்பீடு
போன்றதொரு பெரிய தடுப்பூசி திட்டத்தை அறிவியுங்கள். இன்னும் மருத்துவ சோதனையின்
கீழ் இருந்து வருகின்ற மிகவும் திறமையான நோவாவாக்ஸுக்கு ஒப்புதல் கொடுங்கள் (அதை
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனமே தயாரிக்கிறது - அது கோவிஷீல்ட் போலவே
நமது ஆத்மநிர்பாருக்கான [தன்னம்பிக்கை] எடுத்துக்காட்டாகவும் இருக்கும்).
வரி செலுத்துவோரால் ஓரளவிற்கு நிதியளிக்கப்பட்டுள்ள
கோவாக்சினுக்கு அறிவுசார் சொத்துரிமை தள்ளுபடியை அறிவியுங்கள். உலகில் உள்ள
எவரொருவரும் அதைத் தயாரித்துக் கொள்ள அனுமதியுங்கள். தடுப்பூசி மைத்ரி அதாவது
தடுப்பூசி நட்பை நோக்கிய மற்றுமொரு சிறந்த படியாகவே அது அமையும். கடந்த முறை விஷயங்கள் மோசமான போது செய்ததைப் போல
இப்போது தில்லி மீது தனது கவனத்தைச்
செலுத்துமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கேட்டுக் கொள்ளுங்கள். மும்பை
மாதிரியைப் புகழ்ந்து உங்கள் பரந்த மனப்பான்மையைக் காட்டுங்கள். யாருக்கு
முன்னுரிமை தருவது, மருத்துவமனைகளில் அனுமதிப்பது என்பது போன்ற செயல்பாடுகளை மையப்படுத்துகின்ற
முயற்சிகளை மேற்கொண்டு மாற்றியமைத்துக் கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களையும்
கேட்டுக் கொள்ளுங்கள். மோடிஜி, உங்களுடைய உரையை விரக்தியிலிருந்து விடுபட்டு
மீண்டும் கட்டியெழுப்புவதாக, முன்னோக்கி நகரச் செய்வதாக மாற்றிக் கொள்ளுங்கள்.
மோடிஜி, கோவிட் உடன் சேர்ந்து வருகின்ற தவறான தகவல் என்கின்ற
தொற்றுநோய் அதனுடன் மிகப்பெரிய அளவிலே நட்புடன் இருக்கிறது. மூடநம்பிக்கைகளையும், கோவிட்-19ஐத்
தடுப்பது, குணப்படுத்துவதற்கான நிரூபிக்கப்படாத நுட்பங்களையும் ஊக்குவிப்பதற்கான
பொறுப்பை சமூக ஊடகங்களும், துரதிர்ஷ்டவசமாக அரசாங்கமும் ஒட்டுமொத்தமாக ஏற்றுக்
கொண்டிருக்கின்றன. நீங்கள் உண்மைகளை தேசிய தொலைக்காட்சி மூலமாக பொதுமக்களிடம் நேரடியாகப்
பேசினால் மட்டுமே நாமே உருவாக்கியிருக்கும் இந்த நீண்டகாலக் கட்டுக்கதைகள்
அனைத்தையும் உடைத்தெறிய முடியும்.
நமது அந்தோனி ஃபாசியை நீங்கள் அடையாளம் கண்டு கொண்டு
(இந்தியாவில் அவரைப் போன்ற பல மருத்துவர்கள், அறிவியலாளர்கள் நம்மிடம் ஏராளமாக உள்ளனர்)
உங்களுடன் தேசிய தொலைக்காட்சியில் அவரையும் இணைத்துக் கொள்ளுங்கள். அவருடன்
இணைந்து தடுப்பு, சிகிச்சை, தடுப்பூசி என்று கோவிட்டின் பல்வேறு அம்சங்களைப் பற்றி
மக்களிடம் நீங்கள் பேசலாம் (ஒவ்வொரு மாலையும் ஒவ்வொரு தலைப்பை எடுத்துக்
கொள்ளுங்கள்). நீங்கள் விரும்பினால் அதை ‘ஸ்வஸ்த் கி பாத்’ என்று அழைத்துக்
கொள்ளலாம்.
எங்கள் மருத்துவர்கள் மிகச் சிறந்தவர்கள் என்ற சுயபுராணத்தைப்
பாட வேண்டாம். அதற்குப் பதிலாக இந்த தடுப்பூசியை மாதவிடாயில் உள்ளவர்கள்,
நீரிழிவு, ரத்த அழுத்தம், ஒவ்வாமை உள்ளவர்களும் பாதுகாப்பாக எடுத்துக் கொள்ளலாம்
என்பதை மக்களுக்குச் சொல்வதற்கு அந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
பத்து விதமான மருந்துகள், பல ரத்த பரிசோதனைகள் அல்லது சி.டி ஸ்கேன்கள் என்று
எதுவும் தேவையில்லாமல் ஆறு நிமிட நடைக்குப் பிறகு அவர்களுடைய ஆக்சிஜன்
செறிவூட்டலைக் கண்காணித்து பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் வீட்டிலேயே கோவிட் -19
நோயாளிகளில் எண்பது சதவீதம் பேர் குணமடைகிறார்கள் என்று மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.
அறிவியல் உண்மைகளையும், செய்ய வேண்டிய, செய்யக் கூடாத செயல்பாடுகள் பற்றியும் அவர்களுக்குச்
சொல்லிக் கொடுங்கள். அதற்குப் பிறகு நீங்கள் மக்கள் நேர்மறையான செயல்பாடுடன்
தற்போதைய விரக்தியிலிருந்து வெளிவரத் தொடங்குவதைக் காண்பீர்கள்.
மோடிஜி, பல காலத்திற்கு முன்பு இந்திராதான் இந்தியா
என்றிருந்ததைப் போல இப்போது நீங்கள்தான் இந்தியாவின் முகமாக இருக்கிறீர்கள். ஆனால்
அனைவரையும் கூடுதலாகப் பீதியடையச் செய்கிற பொதுவில் வெளியில் தெரியாத முகமாக
நீங்கள் இருக்கிறீர்கள். நாங்கள் உங்களைப் பார்க்க வேண்டும், நீங்கள் பேசுவதைக்
கேட்க வேண்டும், உங்களிடம் உள்ள திட்டத்தை நாங்கள் உங்களிடமிருந்து கேட்க
வேண்டும், அதில் எங்களுக்கான பங்கு என்ன என்பதை நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் இப்போதுள்ள
சூழ்நிலையில் உண்மையான முன்னேற்றத்தை எப்போது நாங்கள் எதிர்பார்க்கலாம் என்பதை அறிந்து
கொள்ள வேண்டும். மோடிஜி நாங்கள் மேஜிக் நிகழப் போகின்றது என்று எதிர்பார்க்கவில்லை
என்றாலும் குறைந்தபட்சம் எங்களாலான சிறந்த ஒத்துழைப்பைக் கொடுப்போம். நீங்கள் பேச
வேண்டும் என்றும் உங்களைத் தேர்ந்தெடுத்ததற்கான பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொள்ள
வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம்.
https://scroll.in/article/994602/a-corona-warriors-letter-to-prime-minister-modi-we-need-you-to-speak-up-and-tell-us-your-plan
Comments