கலக்கத்தில் இருக்கும் ஆர்எஸ்எஸ், பாஜக - கோவிட் நெருக்கடி மீது அரசின் தவறான நிர்வாகம் தேர்தலில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்
என்டிடிவி
கோவிட்டின் மிகக் கடுமையான இரண்டாவது அலையால் ஏற்பட்டிருக்கும்
பேரழிவு குறித்து மக்களிடம் ஏற்பட்டிருக்கும் கோபம், அது பிரதமர் நரேந்திர மோடி
தலைமையிலான அரசாங்கத்தின் மீது ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் போன்றவை ஆளுகின்ற பாஜக,
அதன் கருத்தியல் வழிகாட்டியான ராஷ்டிரிய சுயம்சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) அணிகளிடம்
ஆழ்ந்த அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏழு ஆண்டுகளாக பிரதமர் மோடியின் ஆட்சி நடைபெற்று வருகின்ற நிலையில் இதுவரையிலும்
அதிகாரம் மிக்க ‘சங் பரிவாரை’ பொதுமக்களின் கருத்துகளோ அல்லது தேர்தல் முடிவுகளோ இதுபோன்று
ஒருபோதும் அச்சுறுத்தியிருப்பதாகத்
தெரியவில்லை.
நடுத்தர வர்க்கத்தினர் இந்த தொற்று நோயால் மிகவும் அதிகமாகப்
பாதிக்கப்பட்டுள்ளனர் - இப்போது கிராமங்களுக்கு குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார்
மாநிலங்களில் இந்த வைரஸ் பரவி வருகிறது. ஆளும்கட்சியின் முக்கியமான ஆதரவு தளத்தில்
இருக்கின்ற கிட்டத்தட்ட அனைவருமே இந்தக் கொடிய தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள
நிலையில், அரசாங்கம் இந்த கோவிட்
நெருக்கடியை சரிவரக் கையாளவில்லை என்று எழுந்துள்ள கருத்து
குறித்து பாஜக, ஆர்எஸ்எஸ் கலக்கம் அடைந்திருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.
தலைவர் ஒருவர் ‘ஒருவரை நீங்கள் இழந்தீர்கள் என்றால் அதனால்
ஏற்படுகின்ற துக்கமும் கோபமும் நீண்ட காலம் உங்களிடம் இருக்கும், அது எந்த
வடிவத்திலும் வெளிப்படுத்தப்படலாம்’ என்று என்டிடிவியிடம் கூறினார். இந்த
தொற்றுநோய் தேர்தல்களில் பாஜகவிற்கு பலவீனத்தை ஏற்படுத்தியிருப்பது குறித்து
தங்களுடைய அணிகளுக்குள் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்டுவதாகவே இது இருக்கிறது.
பிரதமர் மோடி மூன்றாவது முறையாகப் போட்டியிடுவதற்கான அடுத்த மக்களவைத்
தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில் அடுத்த ஆண்டு உத்தரபிரதேசம் போன்ற
மாநிலங்கள் தேர்தலைச் சந்திக்க உள்ளன. உத்தரப் பிரதேச மாநில பஞ்சாயத்து
தேர்தல்களின் முடிவுகள் ஏதேனும் அறிகுறிகளைக் காட்டுவதாக இருக்குமென்றால் பாஜக
கவலைப்படுவதற்கான காரணம் நிச்சயமாக இருக்கவே செய்கிறது.
ஆட்சியின் மீதான அதிருப்தி வெளிப்படையாகவே தெரிகிறது. தனது
தொகுதியான பரேலியில் ஆக்சிஜன் பற்றாக்குறை, கள்ளச்சந்தையில் மருத்துவ உபகரணங்கள் விற்கப்படுவது,
மருத்துவமனைகளில் கோவிட் நோயாளிகளை அனுமதிப்பதில் ஏற்படுகின்ற தாமதம் ஆகியவற்றைக்
குறிப்பிட்டு மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி
ஆதித்யநாத்திற்கு எழுதிய கடிதம் அதிவிரைவாகப் பரவியது.
அரசின் மீது ஏற்பட்டிருக்கும் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக அமைச்சரவையிலிருந்து சில
அமைச்சர்களை வெளியேற்றி புதிய முகங்களுக்கு வழிவகுக்கும் வகையிலே நடத்தப்படுகின்ற அமைச்சரவை மாற்றம் இப்போது தேவைப்படுகிறது என்ற வலுவான
நம்பிக்கை இருந்து வருவதாக தலைவர்கள் கூறுகிறார்கள். மோசமான சுகாதார
உள்கட்டமைப்பு, அரசாங்கத்தின் ஆயத்தமற்ற தன்மை ஆகியவற்றை இந்த கோவிட் நெருக்கடி அம்பலப்படுத்திக்
காட்டியுள்ளது என்பதையும் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.
சுகாதாரம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது என்றாலும் ஒன்றிய
அரசே கடந்த ஆண்டிலிருந்து கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வந்திருப்பதால்
அந்த வாதம் ஏற்றுக்
கொள்ளப்படுவதில்லை. ‘ஒன்றிய அரசின் மீது மக்கள் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளனர்.
அரசுத் தரப்பில் இருந்து தற்போதைய சூழ்நிலைக்கான நடவடிக்கைகள் இல்லாமலிருப்பது குறித்து
மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எங்கள் கைகளில் இருந்து அது நழுவிப் போய் விட்டது’
என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கோவிட் தொற்று நாட்டில் அதிவேகமாகப் பரவி வந்தம் நிலையில்
மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி செய்த தேர்தல்
பிரச்சாரம் தவறானதொரு செய்தியை மக்களிடம் கொண்டு சேர்த்திருப்பதாக
கட்சியின் மூத்த தலைவர்கள் அஞ்சுகின்றனர். மேற்கு வங்கத்தில் பாஜகவின் உயர்மட்டத்
தலைவர்கள் முகக்கவசங்கள் அணியாமல் பிரமாண்டமான பேரணிகளிலும், சாலையோரக்
கூட்டங்களிலும் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டது பொதுமக்களுடைய பாதுகாப்பிற்கு
அப்பாற்பட்டு அவர்களுடைய வாக்குகளுக்கே முன்னுரிமை அளிப்பதாக இருந்தது. இதுகுறித்து
உலகளாவிய ஊடகங்களில் ஏற்படுத்தப்பட்ட படிமம் இதைவிட மோசமாக இருந்திருக்கவே
முடியாது.
இந்த தலைவர்கள் அரசாங்கத்திற்குள் தகவல் தொடர்புகள் சரிவர
இல்லாதது குறித்தும் குற்றம் சாட்டுகின்றனர். ‘இதுவரையிலும் இரண்டாவது அலை பற்றி
ஒருபோதும் பேசிடாத முதன்மை அறிவியல் ஆலோசகரான கே.விஜயராகவன் மூன்றாவது அலை பற்றி இப்போது
எச்சரிக்கிறார்’ என்று தலைவர் ஒருவர் கடுமையாகச் சாடுகிறார்.
பாஜக இயங்கும் தன்மை களத்தில் கண்ணுக்குத் தெரியாததாகவே இருக்கும்;
அதன் தலைவர்களும் அவ்வாறே இருப்பார்கள் என்றொரு தீர்க்கமான பார்வை உள்ளது. கடந்த
ஆண்டு பொதுமுடக்கத்தின் போது உணவுப் பொட்டலங்களையும், பிற நிவாரணங்களையும் ஏற்படுத்திக்
கொடுத்த கட்சி அமைப்பு இந்த முறை அதுபோன்று மக்களுக்குத் தேவையான உதவிகளை
வழங்குவதைக் காண முடியவில்லை.
விதிகள், ஒழுங்குமுறைகளுக்குள் சிக்கிக்கொண்ட மிகவும் மோசமான
தடுப்பூசி இயக்கம் என்று தலைவர்களால் அழைக்கப்படுவதிலிருந்தே அரசாங்கத்தின் தவறான
நிர்வாகம் தெளிவாகத் தெரிகிறது. நேரம் இருக்கும்போதே தடுப்பூசி உற்பத்தி திறன்
அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அந்த தலைவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஆனால் அரசாங்கத்தில் உள்ளவர்கள் ஒன்றிய அரசு
மேற்கொண்டிருக்கும் கோவிட் எதிர்வினையை
மிகவும் ஆதரிக்கின்றனர். இரண்டாவது அலையின் அளவு குறித்த எச்சரிக்கையின்மையின்
காரணமாகவே இப்போதைய தவறான தயாரிப்பு பணிகள் இருந்தன என்று அவர்கள் கூறுகிறார்கள்.
‘இரண்டாவது அலைக்கு அரசாங்கம் தயாராக இல்லை என்பது உண்மைதான். ஆனாலும் இப்போது
அனைவரும் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்’ என்று அமைச்சர் ஒருவர் கூறினார்.
‘ஆக்சிஜன் விநியோகம் வலுப்படுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி
இயக்கம் தடையின்றிச் செல்லும். நமக்கு கிடைத்து வருகின்ற தடுப்பூசி அளவு
அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் அதிக அளவிலே தடுப்பூசிகளைப் பெறுவோம்’
என்று கூறிய அந்த அமைச்சர் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற முயற்சிகளை தனிப்பட்ட
முறையில் பிரதமர் கண்காணித்து வருவதாகவும் கூறினார்.
மேற்கு வங்கத் தேர்தல் பிரச்சாரத்தை தனது கவனத்திற்குக் கொண்டு
வந்தவுடனேயே பிரதமர் மோடி அதனைக் குறைத்துக்கொண்டார் என்றும் தொற்று பரவல் குறித்த
அச்சங்களை அதிகப்படுத்திய கங்கை நதிக்கரையில் நடத்தப்பட்ட மெகா கும்பமேளாவை
நிறுத்துமாறு மதத்தலைவர்களிடம் அவர் வற்புறுத்தினார் என்றும் அந்த தலைவர்கள்
கூறுகிறார்கள்.
‘மக்கள் கோபத்துடனும், வேதனையுடனும் உள்ளனர் என்பதைப் புரிந்து
கொண்டு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது. இதில்
பாஜக ஆளுகின்ற மாநிலங்கள் முன்னணியில் உள்ளன’ என்று அவர்கள் கூறுகிறார்கள்.
எடுத்துக்காட்டாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச மாநில அரசு பெரிய அளவிலே
தடமறிதல், பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு இயக்கத்தை கிராமங்களில்
தொடங்கியுள்ளது என்கின்றனர்.
நெருக்கடியான இந்த நேரத்தில் எதிர்க்கட்சி ஆட்சி செய்து
வருகின்ற மாநிலங்கள் அரசியல் விளையாட்டை மேற்கொள்வதாகவும், தாங்கள்
அடைந்திருக்கும் தோல்வியை ஒன்றிய அரசின் மீது அவை திணிக்கின்றன என்றும் அந்த
தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தில்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களையே அவர்கள்
குறிப்பிடுகிறார்கள்.
‘பொது சுகாதாரம் மாநில அரசு சார்ந்த விஷயமாக இருந்தபோதிலும்,
மிகப் பெரிய தொற்றுநோய்க்கு தேசிய அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் கணிசமான வளங்கள்
தேவைப்படுவதால் ஒன்றிய அரசு கோவிட் நிர்வாகத்தில் செயலில் இறங்கியது’ என்று
அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தி இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
https://www.ndtv.com/india-news/coronavirus-worry-within-bjp-rss-over-covid-handling-electoral-impact-sources-2438545








Comments