தடுப்பூசி பாஸ்போர்ட்டுகள் - தடம் மாறிப் போய் விடலாம்

   ஜே ஸ்டான்லி

மூத்த கொள்கை ஆய்வாளர்

அமெரிக்க சிவில் உரிமைக் கழகம்


தடுப்பூசி சான்றிதழ்களுக்கான எந்தவொரு திட்டமும் காகித அடிப்படையிலானதாக, பரவலாக்கப்பட்டதாக தனிமனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும்.


கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படுகின்ற அளவு விரைவுபடுத்தப்பட்டு வருவதால் தங்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளதை நிரூபிக்கும் வகையிலே மக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தரப்படுத்தப்பட்ட சான்றிதழ் அல்லது தடுப்பூசி பாஸ்போர்ட் போன்றவற்றைச் செயல்படுத்துவது குறித்து உலகெங்கிலும் உள்ள அரசுகள் பரிசீலிக்கத் தொடங்கியிருக்கின்றன. மார்ச் 28 அன்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து அத்தகைய கட்டமைப்பை உருவாக்குவதற்காக பிடென் நிர்வாகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற செய்தியை வெளியிட்டபோது இதுபோன்ற சிந்தனை அரசிடம் இருந்து வருவது உண்மை என்று நிரூபணம் ஆனது.    


அனைவருக்கும் தடுப்பூசி விநியோகம் என்பதே இப்போது நமது நாட்டிடம் இருக்க வேண்டிய மிகமுக்கியமான உந்துதலாக இருக்க வேண்டும். முடிந்தவரையிலும் அதிகமானவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு கூட்டு நோய் எதிர்ப்பு சக்தியை மக்கள் அடைகின்ற வகையிலே தடுப்பூசி விநியோகம் இருக்க வேண்டும். அவ்வாறு நம்மால் செய்து முடிக்க முடியுமென்றால், அதற்குப் பிறகு கோவிட் தொற்று பரவுகின்ற வகையில் அந்த நோயால் பாதிப்பிற்குள்ளானவர்கள் நமது சமூகங்களுக்குள் இருக்க மாட்டார்கள் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் கூறுகின்றனர். பெரும்பாலான மக்கள் - தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாதவர்களும்கூட - பெரும்பாலான நேரங்களில் இந்த நோயைப் பற்றி கவலைப்பட வேண்டியிருக்காது என்பதே அவர்கள் கூறுவதன் பொருளாகும்.      

அவ்வாறு நிகழ்ந்து, கோவிட் தொற்றானது மணல்வாரி அம்மை போன்ற மற்ற ஆபத்தான நோய்களைப் போல அவ்வப்போது சிறிய அளவிலே பரவுவதாக இருக்கும் நிலையில் கோவிட் பாஸ்போர்ட்டிற்கான தேவை மிகவும் அவசரமாகத் தேவைப்படுவதாக இருக்கப் போவதில்லை. யாரும் நம்மிடம் மணல்வாரி அம்மை தடுப்பூசிக்கான ஆதாரத்தை வழங்குமாறு நாம் செல்லும் அனைத்து இடங்களிலும் கோருவதில்லை. அத்தகைய சான்றுகள் தேவைப்படுகின்ற வரையறுக்கப்பட்ட மிகச்சில சூழ்நிலைகளைப் பொறுத்தவரை (பள்ளி சேர்க்கை, குறிப்பிட்ட சில மருத்துவப் பணிகள், சில வெளிநாட்டு பயணங்கள்) தற்போது நடைமுறையில் உள்ள காகித ஆவணங்கள் அடிப்படையிலான அமைப்பே இருந்து வருகிறது அந்த அமைப்பு சீரழிந்து போய், சரிசெய்ய வேண்டிய அவசியத்துடன் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் தடுப்பூசி பாஸ்போர்ட் என்ற அமைப்பை உருவாக்குவது மிகவும் கடினமான பணியாக இருக்கும் என்பதுவும் உண்மையே. தடுப்பூசி பாஸ்போர்ட்டுகள் குறித்த பல காரணிகள் தனிநபர் உரிமை மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆதரவாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டியவையாக இருக்கின்றன.      


தடுப்பூசி எடுத்துக் கொண்டதற்கான ஆதாரங்களை வழங்குகின்ற ஏற்கனவே இருந்து வருகின்ற தரப்படுத்தப்பட்ட அமைப்பிற்கும், டிஜிட்டல் முறைக்குமிடையே வித்தியாசம் இருக்கின்றது. தொலைபேசிகளில் உள்ள செயலிகள் மூலமாக - விமானத்தில் ஏறுவதற்கான சீட்டு முதல் இசைக் கச்சேரிக்கான டிக்கெட்டுகள், உடற்பயிற்சி நிலைய உறுப்பினர் உரிமை பெறுவது போன்ற நடைமுறைகள் வரையிலும் - சான்றாவணங்கள் அனைத்தையும் கொண்டு தனக்கு தடுப்பூசி போடப்பட்டதை ஒருவர் நிரூபிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் இருந்து வருகின்றன. அதுபோன்ற சந்தபப்ங்களில் நமக்குத் தேவைப்படுகின்ற டிஜிட்டல் சான்றிதழை உருவாக்குவதற்கான காலம்கடந்த நடைமுறை மேலும் மேலும் நம்மைப் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது. எனவே அது பலரையும் பாதிப்பதாக இருக்கிறது. இந்த டிஜிட்டல் சான்றிதழ்கள் பல புதிய சிக்கல்களை முன்வைக்கின்றன. மூன்று மிக முக்கியமான நிபந்தனைகளை நிறைவேற்றித் தராத தடுப்பூசி சான்றிதழ் முறையை நாம் அவசியம் எதிர்த்திட வேண்டும்.     


1. தடுப்பூசி சான்றிதழ் முழுக்க முழுக்க டிஜிட்டலாக மட்டுமே இருக்க கூடாது

வடிவமைப்பு அல்லது நடைமுறையால் முழுக்க முழுக்க டிஜிட்டல் வடிவமாக இருக்கின்ற அமைப்பு ஏற்கனவே இருந்து வருகின்ற சமத்துவமின்மையை மேல்ம் அதிகரிக்கும் என்பதால் அது வெற்றிகரமாகச் செயல்முறைப்படுத்திட முடியாததாகவே இருக்கும். மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலைமையில் இருக்கின்ற சமூகங்கள், குறைந்த வருமானம் உடையவர்கள், மாற்றுத் திறனாளிகள், வீடற்றவர்கள், அறுபத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்களில் நாற்பது  சதவீதத்துக்கும் அதிகமானோர் என்று பலரிடமும் ஸ்மார்ட்போன்கள் இருக்கவில்லை. எனவே தடுப்பூசி சான்றிதழை அளிக்கின்ற எந்தவொரு முறையும் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தாததாக அல்லது அதனைப் பயன்படுத்த விரும்பாதவர்களுக்கென்று காகிதங்கள் அடிப்படையிலான சான்றிதழைத் தருகின்ற விதத்திலேயே இருக்க வேண்டும். காகிதங்கள் அடிப்படையிலான சன்றிதழுக்கான விருப்பம் மிகவும் கடினமானதாகவோ, குறைபாடுகளைக் கொண்டதாகவோ இருந்திடக் கூடாது; வழங்கப்படுகின்ற தரப்படுத்தப்பட்ட சான்றிதழ் முக்கியமாக காகிதத்தின் அடிப்படையிலானதாகவும், விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் கூறுகளைக் கொண்டதாகவும் இருக்கலாம். ஆனால் அதற்கு நேர்மாறாக இருக்கக் கூடாது. நமது சுகாதார அமைப்பு ஏற்கனவே முழுமையாக ஏற்றத்தாழ்வுகளால் நிரம்பியிருக்கிறது; சமூகநலன்களைப் பெற்று வருபவர்களுக்கு அல்லது இந்த அமைப்பு குறித்து அஞ்சுவதற்கான காரணத்தைக் கொண்டுள்ள புலம்பெயர்ந்த சமூகங்கள், கறுப்பின சமூகங்கள் உள்ளிட்டு ஏற்கனவே அதிகப்படியான காவல்துறை அடக்குமுறை, கண்காணிப்புக்கு உட்பட்டவர்களுக்குத் தேவைப்படுகின்ற கூடுதலான சமூக நலன்களைக் கிடைக்காமல் செய்வதன் மூலம் இந்த டிஜிட்டல் முறை இருக்கின்ற நிலைமையை மேலும் மோசமாக்குவதை நாங்கள் விரும்பவில்லை. 

2. பரவலாக்கப்பட்ட, அனைவரும் அணுகும் வகையிலான வெளிப்படையான மூலநிரல் கொண்டதாக இருக்க வேண்டும்

டிஜிட்டல் அடையாளம் மற்றும் சான்றிதழ் அமைப்பிற்கான தேடல் தனித்த துறையாக மாறியுள்ளது. பலவிதமான கருத்துகள், தரநிலைகள், நம்முடைய தொலைபேசிகளில் உள்ள குறியாக்க (கிரிப்டோகிராஃபிக்) கோப்புகள் அல்லது டோக்கன்களைப் பயன்படுத்தி நமது வாழ்நாள் முழுவதும் நம்மைப் பற்றிய தகவல்களை நிரூபித்துக் கொள்ள அனுமதிக்கும் தயாரிப்புகளை ஏற்கனவே பல நிறுவனங்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கல்வியாளர்கள் உருவாக்கியுள்ளனர். டிஜிட்டல் பையில் தங்களுடைய கட்டுப்பாட்டிலே தங்களுடைய சான்றிதழ்கள், அடையாளத் தரவுகளை தனிநபர்கள் வைத்திருக்கின்ற வகையிலே பரவலாக்கப்பட்ட, வெளிப்படையான மூலநிரல் அணுகுமுறை மட்டுமே தடுப்பூசி சான்றிதழ் அமைப்பிற்கான எந்தவொரு டிஜிட்டல் கூறுகளுக்காகவும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இதுபோன்ற திட்டங்களுக்கு அதுவே சிறந்ததாக இருக்கும். டிஜிட்டல் தடுப்பூசி பாஸ்போர்ட்டை உருவாக்குவதில் இருக்கின்ற சிரமங்களைக் கருத்தில் கொண்டால், வெளிப்படைத்தன்மை, தனிநபர் உரிமை, பயனர் கட்டுப்பாட்டுக்கு உகந்ததாக இல்லாத கட்டமைப்பால் கட்டமைக்கப்படுகின்ற கோவிட் சான்றிதழ் முறையை நம்மீது சுமத்துவதற்கான அவசரத்தைக் காண முடியும். வயது சரிபார்ப்பு, உடல்நலம் குறித்த பதிவுகள், வேட்டையாடுவதற்கான உரிமங்கள், பொருட்களை வாங்குவதற்கான கணக்குகள், உறுப்பினர் பதிவு, இணையதள உள்நுழைவு என்று இவையனைத்திற்குமான சான்றுகளை பிற தரப்பினரே வழங்க வேண்டியதிருப்பதால் இந்த டிஜிட்டல் முறை நம்மை மோசமான நிலைமைக்குள்ளே தள்ளி அடைத்து வைத்து விடக்கூடும். 

3. கண்காணிப்பதற்கோ அல்லது புதிய தரவுத்தளங்களை உருவாக்கிடவோ அனுமதிக்கக் கூடாது

தடுப்பூசி சான்றிதழ் அமைப்பு முற்றிலும் பரவலாக்கப்பட்டு பயனரை மையமாகக் கொண்டதாக அமையாவிட்டால் தனிப்பட்ட தரவைச் சேகரிப்பதற்கான திறனை உருவாக்கிக் கொள்ளும். உங்கள் சான்றுகளில் ஒன்றை யாராவது ஒருவர் படிக்கும் போது ஏதேனும் பெரிய நிறுவனம் ஒன்றிற்கு உங்களைப் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டால், உங்களுடைய நடமாட்டங்களை, நீங்கள் பார்வையிடுகின்ற கடைகள், இசை நிகழ்ச்சிகள், போக்குவரத்து இடங்கள் போன்று உங்களிடமுள்ள பல ஆர்வங்களைக் கண்காணிப்பதற்கு அது அனுமதிப்பதாகி விடும். தனிநபர் உரிமைக்கான மிகவும் கடுமையான சட்டப் பாதுகாப்புகள் எதுவுமில்லாத நிலையில், இதுபோன்று எந்தவொரு தகவலும் வணிக நோக்கங்களுக்காக விற்கப்படலாம் அல்லது சட்டத்தைப் பயன்படுத்தி வேறொருவரிடம் பகிர்ந்து கொள்ளப்படலாம். நமது சுதந்திரங்கள் அனைத்தும் பாதிக்கப்படும் என்றாலும் புலம்பெயர்ந்த சமூகங்கள் உட்பட கறுப்பின சமூகங்கள் மனவுறுதி இழக்கச் செய்யும் விளைவையே அது அதிகம் ஏற்படுத்தும். ஏற்கனவே அந்தச் சமூகங்கள் அதிகப்படியான கண்காணிப்பில் இருந்து வருகின்றன. கண்காணிப்பு குறித்த இந்த அச்சம் மக்கள் பங்கேற்பிலிருந்து விலகுவதற்கே வழிவகுத்துக் கொடுக்கும். இதன் விளைவாக சில பொது இடங்களுக்குச் செல்வதற்கான அனுமதி மறுக்கப்படும் என்பதால் அவர்கள் மேலும் ஓரங்கட்டப்படுவார்கள். பொதுமக்களிடையே நம்பிக்கையை உருவாக்குகின்ற வகையிலே தனிநபர் உரிமைகளுக்கான பாதுகாப்புகள் இல்லாவிட்டால், மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதையே அது தடுத்து விடக்கூடும் என்பது இன்னும் மோசமான நிலையாகவே அமைந்து விடும்.      

இப்போது நாம் காணும் மூன்று முக்கியமான பிரச்சினைகளாக இவை இருக்கின்ற போதிலும் இன்னும் பூதாகரமானவை அதன் விவரங்களுக்குள் இருக்கின்றன. முன்மொழியப்பட்டுள்ள எந்தவொரு அமைப்பும் உன்னிப்பாக ஆராயப்பட வேண்டும். சில மருத்துவக் காரணங்கள் அல்லது தடுப்பூசி கிடைக்கவில்லை என்பது போன்ற காரணங்களால் தடுப்பூசிகளைப் பெற முடியாத நபர்களைக் கையாள்வது மற்றுமொரு பிரச்சனையாக இருக்கிறது. இவர்களைப் போன்றவர்களுக்கும், தடுப்பூசி போட்டுக் கொள்ள மாட்டோம் என்று முடிவு செய்து கொண்டவர்களுக்கும் இடையே இந்த அமைப்பால் வேறுபடுத்திப் பார்க்க முயலுமா? அப்படியானால் தாங்கள் மருத்துவரீதியாக முரணானவர்கள் என்ற சான்றிதழை எவ்வாறு அந்த மக்கள் பெறுவார்கள்? தங்களைப் பாதுகாக்கும் தடுப்பூசிகளை தனிப்பட்ட முறையில் பெற முடியாத சிலர் இருக்கிறார்கள் என்பது கூட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. சமூகத்திற்கு முழு பங்களிப்பு செய்வதிலிருந்து அவர்கள் வெளியேறி விடக்கூடாது.  

இந்த தடுப்பூசி பாஸ்போர்ட் அதிகப்படியான பயன்பாட்டை ஊக்குவிக்கும் என்றும் நாங்கள் கவலைப்படுகிறோம். உண்மையில் பாஸ்போர்ட் வடிவமைப்பைச் சுற்றியுள்ள சிக்கல்கள் தடுப்பூசிக்கான ஆதாரங்களை எங்கே, எப்போது வழங்க வேண்டும் என்ற கேள்விகளிலிருந்து வேறுபட்டு தனித்து இருக்கின்றன. தடுப்பூசிக்கான சான்றுகளைக் கேட்பது மற்றும் வழங்குவதை இந்த பாஸ்போர்ட் அமைப்பு மிகவும் எளிதாக்குவதால், ஒவ்வொரு இடத்திலும் சான்றிதழ்கள் கேட்கப்படும் போது அதுபோன்ற கோரிக்கைகளால் அந்த பாஸ்போர்ட் அதிகப்படியாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. தடுப்பூசிக்கான சான்றை மக்களிடம் கேட்க வேண்டிய சூழ்நிலைகளில் கோவிட்டின் அபாயத்தை விஞ்சுகின்ற வகையிலான சோதனைச்சாவடி சமூகமாக மாறி விடுவதை நாங்கள் விரும்பவில்லை. மேலும் அதுபோன்ற நிலைமைகள் சான்றிதழ்கள் இல்லாதவர்கள் தடுப்பூசிகளுக்கான அவசியங்கள் அதிகம் நியாயப்படுத்தப்பட்டிராத இடங்களில் கிடைக்கின்ற வசதிகளைப் பெறுவதை விலக்கி வைக்கும்.         


இதுபோன்ற கவலைகள் பலவற்றை பிடென் நிர்வாகம் அறிந்திருப்பதைக் கண்டு நாங்கள் மனம் மகிழ்கிறோம். வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் ஒருங்கிணைப்பாளர் ஜெஃப் ஜீயண்ட்ஸ் ‘இந்த பகுதியில் எந்தவொரு தீர்வும் எளிமையுடன், இலவசமாக வெளிப்படையான மூலநிரலுடன் இருப்பதாக, டிஜிட்டல் முறையில் மற்றும் காகித வடிவத்தில் மக்கள் அணுகக் கூடியதாக, ஆரம்பத்தில் இருந்தே மக்களின் தனிநபர் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இருக்க வேண்டும்’ என்று இந்த மாத தொடக்கத்தில் அறிவித்துள்ளார். தடுப்பூசிகள் குடியேற்ற நிலையைப் பொருட்படுத்தாமல் மக்கள் அனைவரும் பெற்றுக் கொள்ளும் வகையிலே இருக்க வேண்டும் என்றும் நிர்வாகம் பலமுறை கூறியுள்ளது. எனவே எந்தவொரு திட்டமிடப்படாத தடுப்பையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்று வெளியாகின்ற அறிக்கைகள் இங்குள்ள நிலைமை குறித்த விழிப்புணர்வுச் சிந்தனையையே காட்டுகின்றன.

சில சூழல்களில் தடுப்பூசி தேவை என்பதாக இருக்கின்ற ஆதாரத்தை நாங்கள் கொள்கையளவில் எதிர்க்கவில்லை. ஆனாலும் டிஜிட்டல் பாஸ்போர்ட் முறையை உருவாக்குவதில் உள்ள பெரும் சிரமம், வழியில் ஏற்படக்கூடிய சமரசங்கள் மற்றும் தோல்விகளைக் கருத்தில் கொண்டு ஏற்படுகின்ற பக்க விளைவுகள் மற்றும் அது ஏற்படுத்தக்கூடிய நீண்டகால விளைவுகள் குறித்து நாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடனே இருக்கிறோம். இது குறித்து ஏற்படுகின்ற முன்னேற்றங்களை நாங்கள் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்.

https://www.aclu.org/news/privacy-technology/theres-a-lot-that-can-go-wrong-with-vaccine-passports/

Comments