யஷ்வந்த் சின்ஹா
என்டிடிவி
கோவிட்-19 குறித்து சர்வதேச அங்கீகாரம்
பெற்றிருப்பவரும், வெள்ளைமாளிகையின் ஆலோசகருமான டாக்டர் அந்தோனி ஃபாசி இந்த மாதத்தின்
தொடக்கத்தில் அமெரிக்க செனட் குழு ஒன்றிடம் பேசினார். ‘உண்மையில் தொற்றுநோயின் எழுச்சியைக்
கொண்டிருந்த தொற்றுநோய் முடிந்து விட்டது
என்ற தவறான அனுமானத்தை தனக்குள் உருவாக்கிக் கொண்டதுதான் இப்போது இந்தியா இத்தகைய
மோசமான நெருக்கடியில் இருப்பதற்கான காரணமாகும். இறுதியில் இப்போது என்ன நடந்திருக்கிறது?
அவர்கள் முன்கூட்டியே இயல்பு நிலையைத் திறந்து விட்டதால், இப்போது அனைவரும் நன்கு
அறிந்திருக்கின்ற மிகவும் அழிவுகரமான நோய்த் தொற்று மீண்டும் அங்கே
உருவாகியிருக்கிறது’ என்று அவர் அப்போது கூறினார். ‘ஒருபோதும் நிலைமையைக் குறைத்து
மதிப்பிடக் கூடாது என்பதே மிக முக்கியமானது’ என்று மேலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
டாக்டர் ஃபாசி நன்கு அளவிடப்பட்ட வார்த்தைகளாலேயே தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்திய அரசு அதுவரையிலும் என்ன செய்து கொண்டிருந்தது? ஜனவரி
நடுவில் கோவிட்டுக்கு எதிராகத் தடுப்பூசி இயக்கத்தை இந்தியா அறிமுகப்படுத்தியது.
ஜனவரி 22 அன்று பிரதமர் ‘உலகின் மிகப்பெரிய தேவையைக் கொண்டிருக்கின்ற நாம்
முற்றிலும் தற்சார்பு கொண்டவர்களாக இருக்கிறோம். அது மட்டுமல்லாது பல
நாடுகளுக்கும் இந்தியா தடுப்பூசிகளை அனுப்பி உதவியிருக்கிறது’ என்றார். அதற்குப்
பிறகு ஜனவரி 28 அன்று உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய மோடி தடுப்பூசிகளை மற்ற
நாடுகளுக்கு வழங்கி இந்தியா உதவிடும் என்றதோடு கோவிட்டை வென்றிருப்பதன் மூலம்
இந்தியா இந்த உலகையே காப்பாற்றியுள்ளது என்றும் குறிப்பிட்டார். மோடியின் தலைமை
'தொலைநோக்குடையது' என்று பிப்ரவரி 21 அன்று நடந்த கூட்டத்தில் பாஜக பொறுப்பாளர்கள்
விவரித்தனர். இந்திய அரசு ஐ.நா.வில் உள்ள தனது பிரதிநிதியிடம் சொந்த மக்களுக்கு
தடுப்பூசி போடுவது மட்டுமல்லாமல் எழுபது நாடுகளுக்கு தடுப்பூசிகளை நாங்கள்
ஏற்றுமதி செய்திருக்கிறோம் என்பதை உலகிற்குத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியது. சொந்த
மக்களுக்காகப் பயன்படுத்தியதை விட அதிகமான தடுப்பூசிகளை நாங்கள் மற்ற நாடுகளுக்கு
ஏற்றுமதி செய்துள்ளோம் என்றே அவர் உண்மையில் கூறியிருந்தார். நாமும் ‘உலகின்
மருந்தகமாக இந்தியா இருக்கிறது, நம்முடைய தன்னிறைவு குறித்து ஒருபோதும் சந்தேகம்
இருந்ததில்லை’ என்பதாகப் பெருமிதம் கொண்டோம்.
இப்போது தடுப்பூசி இயக்கம் முற்றிலுமாகச் சரிந்திருக்கிறது. தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டதை இந்திய மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இப்போது தங்களுடைய நிலைப்பாட்டிலிருந்து பின்னோக்கி வளைந்த அரசாங்கமும், பாஜக செய்தித் தொடர்பாளர்களும் ஏற்றுமதியின் பெரும்பகுதி உரிம ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்த அளவிற்கு ஏற்றுமதி செய்வதைத் தவிர நமக்கு வேறு வழியிருந்திருக்கவில்லை என்றும் கூறினர். இதுபோன்ற அவர்களுடைய கூற்றுகள் வழக்கமாக ‘பூ விழுந்தால் நான் வெல்வேன்; தலை விழுந்தால் நீ தோற்பாய்’ என்பதாக பாஜக மேற்கொள்கின்ற தந்திரங்களே ஆகும். தங்களுக்குத் தேவைப்படும் போது உலகிற்கே உதவி செய்த ‘உலக குரு’ (விஸ்வ குரு) என்ற பெருமையை தாங்களாகவே எடுத்துக் கொண்டவர்கள், அது நடக்காதபோது சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலான கடமைகளை மேற்கோள் காட்டி தப்புகிறார்கள்.
தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்த பிரதமரின் முடிவிற்கு எதிராகச் சுவரொட்டிகளை
ஒட்டியதற்காக தில்லியில் ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டிருப்பது அரசாங்கத்தைக்
கேள்வி கேட்பதற்காக இருக்கின்ற வெளியைக் குறைப்பதாகவே இருக்கிறது. தகுதியற்ற
பாராட்டுக்களை ஏற்றுக் கொண்டிருந்த பிரதமர். இப்போது கூறப்படுவதைப் போல சட்ட
ஒப்பந்தங்களின் காரணமாக ஏற்றுமதிகள் செய்ய வேண்டியுள்ளது என்று முதலிலேயே கூறினாரா?
பெருமை பேசுவதும், விரைந்து கொண்டாடுவதும் மோடியின் டிஎன்ஏவில் இருக்கின்ற
செயல்களாகும்.
இன்று கோவிட் நாடு முழுவதும் பொங்கி எழுந்திருக்கின்றது.
யோகியின் உத்தரபிரதேச மாநிலத்தில் நேரிடும் மரணத்தில்கூட கண்ணியத்தைக் காண முடியவில்லை;
இறந்த உடல்கள் கங்கையில் வீசப்பட்டு மிதக்கின்றன. பிரதமர் மற்றும் உள்துறை
அமைச்சரிடம் உள்ள திறன்களைப் போல யோகியின் புகழ்பெற்ற நிர்வாகத் திறனும் இதுபோன்று
இதற்கு முன்பாக ஒருபோதும் அம்பலப்பட்டு நின்றதில்லை. முகக்கவசம், உடல் ரீதியாக
இடைவெளியைக் கடைப்பிடிப்பது தவிர இந்த வைரஸுக்கு எதிரான மருந்தாக தடுப்பூசி
இருக்கிறது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். தனது புகைப்படத்தை தடுப்பூசி
சான்றிதழில் இணைத்துக் கொண்டதன் மூலம் தனக்கே உரித்தான தனித்துவமான பங்களிப்பை பிரதமர்
அதிலும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். பிரதமர் குறித்து மிகக் கவனமாக வளர்த்தெடுக்கப்பட்ட 56 இஞ்ச்
மார்பு கொண்டவர், மிக நேர்மையான மனிதர் என்ற பிம்பம் - தன்னிடம் 56 இஞ்ச் மார்பு
இருப்பதாக அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார் - இப்போது இந்த நெருக்கடியின் போது பொருளற்ற
வார்த்தைகளாக முழுமையாக அம்பலப்பட்டு நிற்கிறது.
பிரதமருக்கு இணையாக அவரைப் போன்று செயற்கையாக
முன்னிறுத்தப்பட்ட உள்துறை அமைச்சரும் இப்போது அம்பலப்படுத்தப்பட்டு நிற்கிறார்.
மேற்குவங்கத்தில் கட்சி அடைந்த பரிதாபகரமான தோல்விக்குப் பிறகு அவர் முழுமையாக அந்தக்
களத்திலிருந்து மறைந்து விட்டதாகவே தோன்றுகிறது. இன்றைக்கு அரசாங்கம் என்ற ஒன்றே
இல்லாத நாடாக இந்தியா இருக்கிறது என்ற உணர்வே பொதுவாக இருந்து வருகிறது. இன்னும்
அச்சத்தில் உழன்று கொண்டிருக்கின்ற இந்திய ஊடகங்கள் முடங்கிக் கிடக்கின்றன. ஆனால்
வெளிநாட்டு ஊடகங்கள் அவ்வாறில்லாமல் அரசாங்கத்தைத் தோலுரித்துக் காட்டிக்
கொண்டிருக்கின்றன. மிகவும் கவனமாக உருவாக்கப்பட்ட மோடியின் சர்வதேச பிம்பம்
இன்றைக்கு சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. வெளிநாட்டில் நமது நாட்டின் பிரதமர்
மீது நடத்தப்படும் தாக்குதலைக் காணும்போது இந்தியனாக நான் வெட்கப்படுகிறேன்.
மோடி சமூக ஊடகப் போரிலும் தோல்வியடைந்து வருவதாகவே
தோன்றுகிறது. முன்னதாக பிரதமரை விமர்சிக்கும் ட்வீட்களை நான் வெளியிட்ட போதெல்லாம்
இடது, வலது, மையமாக இருக்கின்ற 'பக்தர்கள்' என்னைத் தொடர்ந்து வசை பாடி வந்தனர்.
ஆனால் இப்போது அதுபோன்ற வசைகளைக் காட்டிலும் அதிகமான விருப்பங்களே பதிவிடப்படுகின்றன.
காற்று திசை மாறி வீசுகிறது. வாளை எடுத்தவர்கள் வாளாலேயே வீழ்வார்கள் என்றொரு
பழமொழி உண்டு. பொய்களை உண்மைகள் தோற்கடிக்கும் போது சமூக ஊடகங்களில் பொய்களால்
மட்டுமே வாழ்ந்து வந்தவர்களின் கதை முடிக்கப்படும் என்பதே இவர்களைப் பொறுத்த
வரையில் மிகவும் பொருத்தமான கூற்றாக இருக்கும்.
ஆனால் அவரைப் போன்றவர்கள் இங்கே வந்து செல்வார்கள்
என்பதால் என்னுடைய இப்போதைய கவலை பிரதமர் மோடி குறித்ததாக இருக்கவில்லை. எனது கவலை
முழுக்க முழுக்க இந்த நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் துயரம் குறித்ததாகவே
இருக்கிறது. அவற்றைத் தீர்ப்பதற்கான வழி என்ன? வலுவான பிரதமரின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட
அரசாங்கம் நம்மிடம் இருக்கிறது என்றாலும் இன்றைக்கு நாம் எதிர்பார்க்கும் எதையும்
நிறைவேற்றுபவராக பிரதமர் இருக்கவில்லை என்றே தெளிவாகத் தோன்றுகிறது.
துணிவுள்ள முதலமைச்சர் ஒருவர் ஒத்த எண்ணம்
கொண்ட முதலமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டி இந்த தொற்றுநோயை சமாளிப்பதற்கான
நடவடிக்கைகளை எடுக்கலாம். மாநில அரசுகள் தேவையான நிதிக்காக தங்கள் சொந்தக்
கருவூலத்திலிருந்து செலவிடுவதற்கு இந்திய அரசாங்கத்தை நம்பியிருக்கக் கூடாது. இந்த
சந்தர்ப்பத்தில் மாநிலங்களில் உள்ள அதிகார வர்க்கமும் சிறப்பாகச் செயல்பட
வேண்டும். இப்போது சமரசம் மற்றும் மனச்சோர்வுடன், தரம் தாழ்த்தப்பட்ட உணர்வுடன்
அதிகார வர்க்கம் இருந்து வருவதை நான் அறிவேன். ஆனால் மாநில அதிகாரிகள் தங்களுடைய
திறமையைக் காட்ட இதுவொரு வரலாற்று வாய்ப்பாகும். மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் பங்கைத் திறம்பட வகிப்பதை உறுதி செய்வதே இப்போதைய அவசியத் தேவையாக
இருக்கிறது. தங்கள் மாவட்டங்களில் உள்ள
விவகாரங்களுக்கு நேரடியாக அவர்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் தங்களுடைய
வளையத்திற்குள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் வைத்துக் கொள்ள
வேண்டும்.
இறுதியில்
உண்மை மற்றும் நேர்மையே இன்றைய காலகட்டத்தின் தேவைகளாக இருக்கின்றன. நாம் அவற்றை பொய்யுடன்
உறவாடி வருகின்ற இந்த அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்றாலும் இந்த
நாட்டையும் அதன் மக்களையும் காப்பாற்ற நம்மால் முடிந்த அனைத்தையும் நாம் அனைவரும் செய்திட
வேண்டும்.








Comments