பொதுசுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான நாடுகளின் உரிமைக்கு எதிராக நிற்கும் தனியார் மருந்து நிறுவனம்

 2021 ஏப்ரல் 22

ரஷ்ய அரசு மீது கிலியட் நிறுவனம் தொடர்ந்திருக்கும் வழக்கு

இந்த ஆண்டு ஜனவரியில் ரஷ்ய கூட்டமைப்பு ஜெனெரிக் மருந்துகளை மலிவு விலையில் வாங்க முடிகின்ற வகையில் ரெம்டெசிவிர் மருந்திற்கான கட்டாய உரிமத்தைச் செயல்படுத்தியது. அதன் மூலம் தனியார் நிறுவனங்களின் லாபத்திற்கு மாறாக பொது சுகாதாரத்தை முன்னிலைப்படுத்திய தீர்க்கமான நடவடிக்கையை அது மேற்கொண்டது. அந்த நடவடிக்கை ரஷ்யாவிற்கான நியாயமான உரிமையாக மட்டுமல்லாமல், உலக வர்த்தக அமைப்பில் (WTO) உறுப்பினர்களாக உள்ள அனைத்து நாடுகளின் உரிமையாகவும் இருக்கிறது. இந்த நடவடிக்கைக்கு எதிராக கிலியட் சயின்சஸ் என்ற தனியார் நிறுவனம்  ரஷ்ய உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளது.   

 


ரெம்டெசிவிர் மருந்து கோவிட்-19 சிகிச்சையில் நல்ல செயல்திறனைக் கொண்டுள்ளது என்பதை சில ஆய்வுகள் காட்டுகின்றன. அது பல நாடுகளிலும் பரிவின் அடிப்படையிலான பயன்பாட்டிற்கென்று கிடைத்து வருகிறது. கோவிட்-19 பிற சோதனைகளிலிருந்து (உலகளாவிய ஒற்றுமைக்கான சோதனை) நோய்த்தொற்றுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள  நோயாளிகளின் இறப்பு விகிதத்தில் சிறிதளவு பாதிப்பு அல்லது எந்தவொரு பாதிப்பையும் ரெம்டெசிவிர் ஏற்படுத்தாது என்று அறியப்பட்டிருக்கிறது. அந்த சோதனைகளின்  முடிவுகள் இந்த தளத்தில் காணக் கிடைக்கின்றன (https://pharmaceutical-journal.com/article/feature/everything-you-need-to-know-about-the-covid-19-therapy-trials).      

ரஷ்ய கூட்டமைப்பு வழங்கியுள்ள சுகாதாரம் தொடர்பான முதல் கட்டாய உரிமம் அந்த நாட்டில் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த நடவடிக்கை மக்கள் தங்களுக்குத் தேவையான சிறந்த சுகாதார சேவையைப் பெறுவதைத் தடுக்கின்ற வகையிலே ஏகபோக உரிமையாளர்களால் தன்னிச்சையாக நிர்ணயிக்கப்படும் அதிகப்படியான விலைகளை அரசாங்கங்கள் இனிமேல் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற முடிவு ரஷ்யாவிற்கு மட்டுமல்லாது அந்தப் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுக்குமான பாதையை அமைத்துக் கொடுத்திருக்கிறது.


கிலியட் நிறுவனம் தயாரித்திருக்கும் ரெம்டெசிவிர் மிக அதிக விலை கொண்டது. ஐந்து நாள் எடுத்துக் கொள்ளப்படும் ஒரு சிகிச்சைக்கான மருந்திற்கு கிலியட் நிறுவனம் 2,340 அமெரிக்க டாலர் வசூலிக்கிறது. ஜெனெரிக் நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகின்ற அதே மருந்தின் விலை ஒரு சிகிச்சைக்கு 229 முதல் 960 அமெரிக்க டாலர் வரை என்றிருக்கின்றன. 


2021 மே 27 அன்று முதலாவது நீதிமன்ற விசாரணையை நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘ரஷ்யப் பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கையை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். கட்டாய உரிமமானது டிரிப்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டிருப்பதாக இருப்பதோடு, பொது சுகாதார நலன்களுக்காக கட்டாய உரிமங்களைப் பயன்படுத்துவதைச் சட்டமாக்கிடும் வகையில் 2021 ஏப்ரல் 13 அன்று ரஷ்ய பாராளுமன்றம் வாக்களிக்கவும் செய்திருக்கிறது’ என்று கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் (EECA) சிகிச்சையை உறுதிப்படுத்துகின்ற  கூட்டணியின் பிராந்திய ஒருங்கிணைப்பாளரான டெனிஸ் கோட்லெவ்ஸ்கி  கூறுகிறார். ‘ரஷ்யாவை ஏமாற்ற முடியாது என்பதற்கான தெளிவான சமிக்ஞையை அனைத்து மருந்து நிறுவனங்களுக்கும் இந்த இரண்டு செயல்களும் இணைந்து அனுப்புகின்றன. மருந்து நிறுவனங்களின் விலை நிர்ணயம் செய்யும் கோரிக்கைகளுக்கு தலைவணங்குவது ஏற்றுக் கொள்ள முடியாதது. தன்னுடைய விலைகளை மிகைப்படுத்தியுள்ள கிலியட் நிறுவனம் சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டபோது - ​​தான் செய்தது தவறு என்பதை அறிந்திருந்தும் - இந்த வழக்கில் மீண்டும் போராட முடிவு செய்துள்ளது. இந்த முக்கியமான முன்னுதாரண நடவடிக்கையை சட்ட குழுக்களுக்கு பணத்தை அள்ளி வீசி நிறுத்தி வைத்து விடலாம் என்று அந்த நிறுவனம் நம்புகிறது. நிச்சயம் சிவில் சமூகம் இதை எதிர்த்துப் போராடும். பணம் தொடர்பாக கிலியட்டிடம் இருக்கின்ற மிகமோசமான வழிமுறைகள் நம்மிடம் இல்லை என்றாலும் நமது தரப்பில் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான சட்டமும், உரிமையும் இருக்கின்றன’ என்று கோட்லெவ்ஸ்கி கூறி முடித்திருக்கிறார்.  

ரஷ்ய கூட்டமைப்பின் சிவில் சட்டத்தின் 1360ஆவது பிரிவின் தற்போதைய பதிப்பு ‘முடிந்தவரை விரைவாக அறிவிப்பை வெளியிட்டு விகிதாசார இழப்பீட்டை செலுத்துவதன் மூலம் தற்காப்பு மற்றும் பாதுகாப்பு நலன்களுக்காக, காப்புரிமைதாரரின் அனுமதியின்றி அவருடைய கண்டுபிடிப்பை பயன்படுத்திக் கொள்வதற்கான அங்கீகாரத்தை அளிக்கும் உரிமை அரசாங்கத்திற்கு உண்டு’ என்று குறிப்பிடுகிறது. அது தற்போதைய காப்புரிமை அமைப்பு செயல்படாது என்றும் சொல்கிறது.   


கட்டாய உரிமத்திற்கு எதிராக வழக்குத் தொடர கிலியட் எடுத்திருக்கும் முடிவு தற்போதைய காப்புரிமை அமைப்பு செயல்படாது என்பதற்கான கூடுதல் சான்றாக உள்ளது. கட்டாய உரிமங்கள் என்பது ட்ரிப்ஸ் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டதொரு தளர்வாகும்.

கோவிட்-19 தடுப்பூசிகள், சிகிச்சைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகள் மீதான அறிவுசார் சொத்திற்கான (ஐபி) பாதுகாப்பைத் தள்ளுபடி செய்ய ஒப்புக் கொள்ளக் கூடாது என்பது மருந்து தொழில்துறையால் முன்வைக்கப்பட்ட வாதங்களில் ஒன்றாகும். ஏனெனில் கட்டாய உரிமம் போன்று தரப்பட்டிருக்கும் தளர்வு பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கு நாடுகளை ஏற்கனவே அனுமதிக்கின்றது.  

தற்போதுள்ள கட்டாய உரிமம் போன்ற ட்ரிப்ஸ் தளர்வுகள் நாடுகள் சார்ந்தவையாக இருக்கின்றன. அவை முன்னெப்போதுமில்லாத இந்த தொற்றுநோயை எதிர்கொள்ளப் போதுமானவையாக இருக்கவில்லை. கிலியட்டின் இந்த எதிர்ப்பு ஒருபுறத்தில் சமமான அணுகல், நல்ல பொது சுகாதார விளைவுகளை தாங்கள் ஆதரிப்பதாக காட்டிக் கொள்கின்ற மருந்து நிறுவனங்கள் மறுபுறத்தில் நாடுகள் தங்களுடைய உரிமைகளைப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுப்பதற்கான அனைத்தையும் செய்து வருவதையே காட்டுகிறது.

கிலியட் இந்த தொற்றுநோயிலிருந்து லாபம் பெற முயல்வது இது முதல் முறை அல்ல. 2020 மார்ச் மாதம்  தொற்றுநோயின் தொடக்கத்திலேயே அந்த நிறுவனம் ரெம்டெசிவிர் மீது அரிய வகை மருந்து நிலை வேண்டி விண்ணப்பித்தது.  ‘அரிய வகை’ நிலை பொதுவாக அரிய நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் மருந்துகளுக்கென்று ஒதுக்கப்படுகின்றது. கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை குறைவாக இருந்த அந்த நேரத்தில் கிலியட்டிற்கு அது சாத்தியமாக இருந்தது. நோயாளிகள் எண்ணிக்கை உயரும்; கோவிட்-19க்கான ‘சாத்தியமான’ சிகிச்சையாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த அந்த மருந்திற்கு விரைவிலேயே பெரும் தேவை ஏற்படப் போகிறது என்பதை கிலியட் - மற்றும் நம்மால் - எளிதில் கணிக்க முடிந்தது.


அந்த விஷயத்தில் கிலியட் வெற்றிகரமாக இருந்திருந்தால், அந்த நிறுவனத்திற்கு கிடைத்திருக்கும் அரிய வகை அந்தஸ்து ஏழு வருட சந்தை தனித்துவத்தை அதற்கு வழங்கி - ஜெனெரிக் போட்டியாளர்களைத் தடுத்திருக்கும். ஆனால் செயற்பாட்டாளர்களின் அழுத்தம், பொதுமக்களின் சீற்றம் காரணமாக அந்த நிறுவனம் தனது முடிவை விரைவாக விலக்கிக் கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் பல கோடிக்கணக்கான டாலர் வருவாயைக் கொண்டதொரு நிறுவனம் இந்த தொற்றுநோய்களின் போது கூட தன்னுடைய லாபத்தை பெருக்கிக் கொள்வதற்காக சட்டத்தில் இருக்கும் ஒட்டையைத் தீவிரமாகத் தேடுவதன் மூலம் தன்னிடம் உள்ள நேர்மைக் குறைபாட்டையே வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறது.

https://makemedicinesaffordable.org/gilead-sues-russia-private-company-challenges-a-countrys-right-to-protect-public-health/


Comments