மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு வழங்கப்பட்ட மெட்ரோலிங்க் சொகுசுப் பேருந்து

 சோனல் மாத்தரு, ஜோ ஸ்பெர்லிங், ஹான்ஸ் கோபர்ஸ்டீன்

கேரவான் இதழ்


சோனல் மாத்தரு கான்ஃப்ளூயன்ஸ் மீடியாவில் பணிபுரியும் பத்திரிகையாளர். தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையதளங்களுக்கு மிகவும் விரிவான கட்டுரைகளை வழங்கி வருகிறார்.

ஜோ ஸ்பெர்லிங் பல ஆண்டுகளாக ஜெர்மன் அரசு தொலைக்காட்சி அமைப்பான ZDFஇல் நிருபராகவும், புலனாய்வு பத்திரிகையாளராகவும் பணியாற்றி வருகிறார்.

ஹான்ஸ் கோபர்ஸ்டீன் விருது பெற்ற புலனாய்வு பத்திரிகையாளர் ஆவார். 1995 முதல் ZDFஇல் பணியாற்றி வருகிறார்.  


ஸ்வீடனைச் சார்ந்த ஸ்கேனியாஏபி என்ற மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் சொந்த உபயோகத்திற்கென்று சொகுசுப் பேருந்து ஒன்றை வழங்கியிருப்பதாக மார்ச் மாத ஆரம்பத்தில் ஸ்வீடன் தொலைக்காட்சி நிறுவனமான எஸ்விடி செய்தி ஒன்றை வெளியிட்ட போது அமைச்சர் உடனடியாக அதனை முழுமையாக மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஆனால் ஸ்கேனியாஏபி நிறுவனத்தின் உள்தணிக்கை ஆவணத்தில் உள்ள தகவல்கள் அமைச்சர் முழுமையாகப் பொய் சொல்கிறார் என்று காட்டுவதாகவே இருக்கின்றன. அந்த ஆவணம் ஸ்கேனியா நிறுவன அதிகாரிகள் மற்றும் அமைச்சர் நிதின் கட்கரியின் மகன்களான சாரங், நிகில் ஆகியோருக்கிடையிலான மின்னஞ்சல் தொடர்புகள், குறுஞ்செய்தி பரிமாற்றங்கள் ஆகியவற்றைப் பரிசீலித்தே தயாரிக்கப்பட்டுள்ளது. கட்கரி குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பெங்களூருவிலுள்ள ஸ்கேனியா அலுவலகத்திற்குச் சென்று அந்தப் பேருந்திற்குள்ளே கூடுதலாக வழங்கப்பட வேண்டிய குறிப்பிட்ட வசதிகள் குறித்து கூறியிருப்பது அவர்களுக்கிடையே நடைபெற்ற தகவல் தொடர்புகளிலிருந்து தெரிய வருகிறது. மேலும் அந்த ஆவணத்தில் பணம் தொடர்பான விவரங்களும் இருக்கின்றன. அதன் இறுதியில் ‘உண்மையில் அந்தப் பேருந்து திருவாளர்கள் நிதின் கட்கரி, சாரங் கட்கரி, நிகில் கட்கரி ஆகியோருக்கே சொந்தம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.      

2017 டிசம்பர் முதல் 2018 அக்டோபர் வரையிலும் நடத்தப்பட்ட விசாரணைகளின் இறுதியில் ‘மூத்த அரசு அதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்ட சொகுசுப் பேருந்து குறித்த குற்றச்சாட்டின் மீதான விசாரணை’ என்ற தலைப்பிலே ஸ்கேனியாஏபி நிறுவனத்தின் உள்தணிக்கை அறிக்கை தயாரானது. விசாரணை அதிகாரிகள் ஸ்கேனியா இந்தியா நிறுவன அதிகாரிகளின் தொலைபேசிகள், மின்னஞ்சல்கள், வன் தட்டுகள் ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகு அவற்றில் சாரங் மற்றும் நிகில் கட்கரியுடன் நடத்திய உரையாடல்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். அவர்கள் கண்டறிந்த தகவல்கள் கேபிஎம்ஜி ஸ்வீடனில் இருக்கின்ற தடவியல் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டன. அந்தப் பேரத்தின் ஒவ்வொரு நிலையிலும் சாரங், நிகில் ஆகியோருடன் ஸ்கேனியா இந்தியா நிறுவனத்தின் முன்னாள் விற்பனை இயக்குநரான சிவகுமார் விஸ்வம் நேரடியாகத்  தொடர்பில் இருந்து வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

அந்த விசாரணை பெங்களூரூவில் ஸ்கேனியா இந்தியா தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்ட 2015ஆம் ஆண்டிலிருந்து துவங்கி 2017 டிசம்பர் வரையிலும் உள்ள ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வந்த தகவல் தொடர்புகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் சாரங் கட்கரி  பெங்களூரூவில் உள்ள தொழிற்சாலைக்கு வந்திருந்து நேரடியாக அந்தப் பேருந்து குறித்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறார். அப்போது விஸ்வமுடன் சேர்ந்து மெட்ரோலிங்க் பேருந்துகளின் உள்பகுதிகளை மறுவடிவமைத்துக் கொடுத்த திலீப் சாப்ரியா டிசைன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் என்ற கார் வடிவமைப்பு நிறுவன அலுவலகத்திற்கும் சாரங் கட்கரி சென்றுள்ளார்.    


ஸ்கேனியா இந்தியா நிறுவன அதிகாரிகளுக்கிடையே இருந்து வந்த தகவல் தொடர்புகள் அமைச்சருக்கான பேருந்து தொடர்பான பேரம் அந்த நிறுவனத்தின் உயரதிகாரிகளுக்கிடையே நடைபெற்றிருப்பதைக் காட்டுகின்றன. ஸ்கேனியா ‘மெட்ரோலிங்க் ஃபார் மிஸ்டர் கட்கரி’ என்ற தலைப்புடன் இருந்த இந்திய உயர் அதிகாரிகளுக்கிடையிலான தகவல் தொடர்புகளிலிருந்து குறிப்பிட்ட அந்தப் பேருந்து ஸ்கேனியா மெட்ரோலிங்க் எச்டி என்று தெரிய வந்திருக்கிறது.  2016 டிசம்பர் மாதம் நாக்பூரில் நடைபெற்ற நிதின் கட்கரியின் மகள் திருமணத்திற்காக அந்தப் பேருந்து வழங்கப்பட்டதாக ஸ்வீடனில் உள்ள ஸ்கேனியா நிறுவன அலுவலகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஹென்ரிக் ஹென்ரிக்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.  

அந்தப் பேருந்தை வாங்கிய கர்நாடகத்தில் உள்ள ஸ்கேனியா இந்தியா நிறுவனத்தின் உள்ளூர் விற்பனை நிறுவனமான ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் பிரைவேட் லிமிட்டெட், அந்தப் பேருந்தை வாடகைக்கு எடுத்த நாக்பூரில் இயங்கி வருகின்ற சுதர்சன் ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிட்டெட் ஆகிய இரண்டு நிறுவனங்களையும் கட்கரி குடும்பத்தினரும், ஸ்கேனியா இந்தியா நிறுவனமும் பயன்படுத்திக் கொண்டதாக அந்த விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் இந்த பேரம்  தொடர்பாக நடைபெற்ற பணப்பரிமாற்றங்கள் குறித்த தகவல்களும் இருக்கின்றன. அந்த பணப்பரிமாற்றத்தில் பேருந்தை வாங்குவதற்காக ட்ரான்ஸ்ப்ரோ  மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ஸ்கேனியா இந்தியா நிறுவனத்தின் சகோதர நிறுவனமான போக்ஸ்வேகன் பைனான்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தால் வழங்கப்பட்ட கடன் தொகை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. போக்ஸ்வேகன் பைனான்ஸ். ஸ்கேனியா இந்தியா என்ற இரண்டு நிறுவனங்களும் ஜெர்மானிய வாகன உற்பத்தி நிறுவனமான போக்ஸ்வேகன்ஏஜி என்ற நிறுவனத்தின் ஆதரவு பெற்ற துணை நிறுவனங்களாகும். ட்ரான்ஸ்ப்ரோ  மோட்டார்ஸ், சுதர்சன் ஹாஸ்பிட்டாலிட்டி ஆகிய நிறுவனங்களுக்கிடையே செய்து கொள்ளப்பட்ட வாடகை ஒப்பந்தம் அந்த விசாரணை அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.  ஸ்கேனியா இந்தியா அதிகாரிகள் மெட்ரோலிங்க் பேருந்திற்காகத் தர வேண்டிய வாடகை பாக்கியைத் தரச் சொல்லி அந்தப் பேருந்தை வாடகைக்கு எடுத்துக் கொண்ட நிறுவனத்திடம் கேட்காமல் நேரடியாக கட்கரி சகோதரர்களிடம்  கேட்டுக் கொண்ட கடிதமும் அந்த அறிக்கையில்  இணைக்கப்பட்டிருக்கிறது.  

அந்தப் பேருந்து தொடர்பாக எந்தவொரு தனிநபருடனோ அல்லது நிறுவனத்துடனோ தனக்கு எந்தவொரு தொடர்பும் இருக்கவில்லை என்று நிதின் கட்கரி மறுத்தார். ஆனால் குறிப்பிட்ட அந்தப் பேருந்து நாக்பூரில் நிதின் கட்கரியுடன் தொடர்புடைய உள்ள ஓரிடத்தில் இருந்ததை இந்த மாத துவக்கத்தில் கேரவான் இதழில் வெளியாகி இருந்த கட்டுரை சுட்டிக் காட்டியிருந்தது. சுதர்சன் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் சாரங், நிகில் கட்கரியுடன் கட்டுப்பாட்டில் இருந்த நிறுவனங்களுடன் பிரிக்க முடியாத தொடர்பைக் கொண்டிருக்கிறது. சுதர்சன் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனத்திற்கு சாரங் இயக்குநராக இருக்கின்ற மானஸ் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ்&இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிட்டெட் நிறுவனம்  2016-17ஆம் ஆண்டில்  ஈடில்லாக் கடனை வழங்கியுள்ளது. மானஸ் அக்ரோ, நிகில் கட்கரி இயக்குநராக உள்ள சியன் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ்&இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிட்டெட் நிறுவனம் மற்றும் சுதர்சன் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் ஆகியவற்றிற்கிடையே மிக நெருக்கமான தொடர்புகள் இருந்து வந்திருப்பதை கேரவான் பத்திரிகையில் இதற்கு முன்பாக வெளியான கட்டுரை வெளிப்படுத்திக் காட்டியுள்ளது.    




பேருந்து பேரத்தில் கட்கரி குடும்பத்தினருக்கான தொடர்பு நிறுவனத்தின் உள்தணிக்கை அறிக்கையில் மிகவும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.  கட்கரிக்காவே அந்தப் பேருந்து வாங்கப்பட்டு, அவருடைய குடும்பத்தினரின் விருப்பத்திற்கேற்றவாறு அவர்களுடைய நேரடிப் பார்வையில், பண உதவியுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது தெளிவாகியுள்ளது. அந்த விசாரணை அறிக்கையில் போக்ஸ்வேகன் பைனான்ஸ்  நிறுவனம்  கடன் வழங்குவதற்கு முன்னதாக தொடர்புடைய நிறுவனங்கள் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ளாதது குறித்து ஸ்கேனியா நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.   

‘போக்ஸ்வேகன் பைனான்சியல் சர்வீஸஸ் அளித்த தகவல்களின்படி, ஸ்கேனியா இந்தியா நிறுவனத்திற்கான ஒப்பந்தங்களுக்கான ஒப்புதலைப் பெறுவதற்கான பரிசாக அந்தப் பேருந்து தற்போது அமைச்சராக இருக்கின்ற உயர் அரசியல்வாதி ஒருவருக்கு வழங்கப்பட்டது’ என்று அந்த அறிக்கை கூறுகிறது. அந்தப் பேருந்து தரப்பட்டதன் காரணமாக ஏதேனும் ஒப்பந்தத்திற்கான ஒப்புதல் வழங்கப்பட்டதா என்பது குறித்து அந்த அறிக்கை எதையும் குறிப்பிடவில்லை என்றாலும் ‘அந்தப் பேருந்து பணம் தொடர்பாக கிடைத்த பலன்களுக்காக திரு.நிதின் கட்கரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. பணப்பலன்கள் எந்த அளவிற்கு இருந்தன என்பதைப் பொறுத்தவரை அது சட்டரீதியாகத் தீர்மானிக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தது.


அந்த அறிக்கை பேருந்து தொடர்பாக நடைபெற்றிருந்த ஒழுங்கின்மை குறித்து பல கேள்விகளை எழுப்பியிருந்தது. எடுத்துக்காட்டாக பேருந்தைப் பெற்றுக் கொள்ளும் இந்த பேரத்திற்காக ட்ரான்ஸ்ப்ரோ  மோட்டார்ஸ், சுதர்சன் ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மெண்ட் போன்ற நிறுவனங்களை கட்கரி குடும்பத்தினர் ஏன் பயன்படுத்திக் கொண்டனர் என்ற கேள்வி அந்த அறிக்கையில் எழுப்பட்டிருந்தது. பாரதிய ஜனதா கட்சியில் மிகவும் அதிகாரம் மிக்கவராக இருந்த நிதின் கட்கரி நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். தான், தன்னுடைய மனைவி, ஹிந்து கூட்டுக் குடும்பம் இணைந்து ரூ.54,58,390 வருமானம், இருபத்தி நான்கு கோடி ரூபாய் அளவிலே சொத்துக்கள் இருப்பதாக 2019ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த வாக்குமூலத்தில் நிதின் கட்கரி குறிப்பிட்டிருந்தார். அந்தப் பேருந்து வாங்கப்பட்டிருந்த 2016-17 நிதியாண்டில் சாரங் கட்கரியின் தலைமையில் இருந்த மானஸ் அக்ரோ நிறுவனத்தின் நிகர லாபம் 9.64 கோடி ரூபாய் என்றும். நிகில் கட்கரியின் தலைமையில் இருந்த சியன் அக்ரோ நிறுவனத்தின் வருமானம் ரூ.112.80 கோடி என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.     

நிதின் கட்கரியின் மகள் கெட்கியின் திருமணத்திற்காக கட்கரி குடும்பத்தினருக்கு அந்தப் பேருந்து தேவையென்றால், அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு தங்களிடம் உள்ள அளவில்லாத செல்வத்தைக் கொண்டு தங்களுடைய கணக்கிலேயே ஏன் அதை அவர்கள் வாங்கியிருக்கக் கூடாது? அனைத்துப் பரிமாற்றங்களையும் அதிகாரப்பூர்வ ஆவணங்களிலிருந்து ஒதுக்கி வைத்து வைத்து விட்டு, பேருந்து தொடர்பான அனைத்து விஷயங்களிலும் அவர்கள் தங்களை ஏன் மிக நெருக்கமாக ஈடுபடுத்திக் கொண்டார்கள்?   

*

ஸ்கேனியாஏபி நிறுவனம் இந்தியாவில் 2011ஆம் ஆண்டு இந்திய துணை நிறுவனமாக தன்னை பெங்களூரூவில் அலுவலகத்தை அமைத்து நிறுவிக் கொண்டது. கனரக வாகனங்களுக்கான மிகப் பெரிய இந்தியச் சந்தை மீது கண் வைத்திருந்த அந்த நிறுவனம் 2015 மார்ச் மாதம் ரூ.300 கோடி ரூபாய் முதலீட்டில் பெங்களூரூவின் வெளிப்புறத்தில் நரசபுரா என்ற இடத்தில் தன்னுடைய தொழிற்சாலையை அமைத்துக் கொண்டது. அதற்குப் பிறகு தங்கள் பெங்களூரூ தொழிற்சாலையை மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் மிகப்பெரிய வெற்றியாக அந்த நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரான ஆண்டர்ஸ் க்ரண்ட்ஸ்ட்ரோமர் அறிவித்துக் கொண்ட வீடியோவைக் காண முடிகிறது.     

பெங்களூரூ தொழிற்சாலை நிறுவப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு கட்கரி குடும்பத்தினருக்கும், ஸ்கேனியா அதிகாரிகளுக்கும் இடையிலான முதல் தொடர்பு ஏற்பட்டது என்று ஜிஐஏ (குரூப் இண்டர்னல் ஆடிட் டீம்) என்று குறிப்பிடப்படுகின்ற குழுமத்தின் உள்தணிக்கை குழுவால் அந்த அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2015 ஜூன் 6 அன்று ‘எக்சிக்யூட்டிவ் 7 ஸ்டார் மெட்ரோலிங்க்’ என்ற தலைப்புடன் நிகில் கட்கரிக்கு ஸ்கேனியா இந்தியா நிறுவனத்தின் விற்பனை இயக்குநரான விஸ்வம் மின்னஞ்சலை  அனுப்பியிருந்தார். அந்த மின்னஞ்சலில்  7 ஸ்டார் ஸ்கேனியா மெட்ரோலிங்க் எக்சிக்யூட்டிவ் லக்சுரி கோச் புகைப்படங்களை இணைத்து, நிகிலுக்கு அதில் ஏதாவது குறிப்பிட்ட தேவைகள் அல்லது மாற்றங்கள் தேவைப்படுகின்றனவா என்று அவர் கேட்டிருந்தார்.   


ஸ்கேனியா அதிகாரிகளால் அனுப்பப்பட்ட, பெறப்பட்ட தகவல் தொடர்புகளை மட்டுமே ஜிஐஏ நம்பியிருந்ததால் அந்த குழுவின் அறிக்கையில் சில குறைபாடுகள் இருந்தன. அந்தப் பேருந்து தொடர்பாக ஆகஸ்ட் 2 அன்று புனேவில் சாரங்குடனான சந்திப்பு குறித்து ஜுலை 30 அன்று டிசி டிசைன் என்ற நிறுவன அதிகாரி ஒருவருக்கு ‘உங்களுடன் ஏற்கனவே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியவாறு ஸ்கேனியா பஸ் 14.5 எம் மீதான ஸ்கேனியா மெட்ரோலிங்க் கேம்பர் கோச் மறுவடிவமைப்பு தொடர்பாக விவாதிப்பதற்காக  நானும், திரு.சாரங் கட்கரியும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (2015 ஆகஸ்ட் 2) புனேவில் இருப்போம். தயவுசெய்து அந்த வரைவு வடிவமைப்பு, டிசைனை தயார்படுத்தி வைத்திருக்கவும்… காலை 11 மணிக்கு உங்களுடைய தொழிற்சாலையில் நாங்கள் உங்களைச் சந்திக்கிறோம்’ என்று எழுதிய விஸ்வம் அந்தப் பேருந்தின் வடிவமைப்பு குறித்த படத்தை அத்துடன் இணைத்திருந்தார்.  

அந்த ஆண்டு நவம்பர் மாதம் ஸ்கேனியா இந்தியா அலுவலகத்தில் அந்தப் பேருந்து குறித்த விவாதங்கள் முழுமூச்சுடன் நடந்து வந்தன. ஸ்கேனியாவின் விற்பனை உத்தி நிர்வாகியான சமய் குப்தா ‘மெட்ரோலிங்க் ஃபார் மிஸ்டர் கட்கரி’ என்ற தலைப்புடன் பேருந்து தயாரிப்பு இயக்குநரான கெல்முட் ஸ்வார்ட்ஜ், ஸ்கேனியா இந்தியாவின் தலைமை நிதியதிகாரியான உல்ஃப் ஃப்ரம்ஹோல்ஜ், விஸ்வம் உள்ளிட்ட பத்து பேருக்கு நவம்பர் 17 அன்று மின்னஞ்சலை அனுப்பியிருந்தார். கட்கரிக்காக ஒதுக்கப்பட்ட ஸ்கேனியா 14.5எம் மெட்ரோலிங்க் பேருந்தின் அடிச்சட்டகத்தின் எண் 1890275 என்று அந்த மின்னஞ்சலில் சமய் குப்தா குறிப்பிட்டிருந்தார். கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் கீழ் வருகின்ற அனைத்து நிறுவனங்கள் குறித்ததாக இருக்கின்ற CERSAI என்ற அரசு தரவுதளத்தில் கட்கரியின் வளாகத்தில் இருந்த அந்தப் பேருந்தின் கடன் குறித்த ஆவணங்கள் வெளிப்படையாக இருக்கின்றன. அதே அடிச்சட்டக எண்ணே அந்த ஆவணங்களிலும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

‘2015 டிசம்பர் மத்தியில் நல்ல தரமான பேருந்தைக் கொடுப்பதற்கு தேவைப்படுகின்ற நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்க வேண்டுகின்றேன்… 2015 டிசம்பர் மத்தியில் பேருந்து வேண்டும் என்று திரு,கட்கரி விரும்புகிறார்’ என்று குப்தா மேலும் குறிப்பிட்டிருந்தார். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு அனுப்பிய அடுத்த  மின்னஞ்சலில் ‘வெளியில் உள்ள  பேருந்து கட்டமைப்பு நிறுவனம் அல்லது நமது நிறுவனத்தில் உள்ள வசதிகளைக் கொண்டு மெட்ரோலிங்க் 14.5எம் பேருந்து ஷெல்லில் வேதி கழிவுக்கூடம், சமையலறை, இருக்கைகள் வடிவமைக்கப்பட வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கடுத்த நாள் ‘அமைச்சர் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் பேருந்தைத் தர வேண்டும் என்று விரும்புவதால் பேருந்து வடிவமைப்பவர்களுடன் இணைந்து தேவையான பொருத்துதல்களைச் செய்து முழுமையாக ஒழுங்கமைக்கப்பட்ட ஷெல்லிற்கான விலைச்சீட்டைத் தயாரிப்பது மிகவும் முக்கியமானது’ என்று அதே மின்னஞ்சல் தொடரில் விஸ்வம் வலியுறுத்தியிருந்தார். ஷெல் என்பது பேருந்தின் அடிச்சட்டகம் மற்றும் அதன் வெளிப்புறப் பகுதியைக் கொண்டது. மெட்ரோலிங்க் எச்டியின் ஷெல்லுடன், அதன் உள்புறத்திலும் ஏராளமான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று கட்கரி குடும்பத்தினர் விரும்பினர் என்று ஜிஐஏ ஆய்வு செய்த மின்னஞ்சல்களில் இருந்து தெரிய வருகிறது.    

பேருந்தின் அளவுகளை மாற்றியமைக்க முடியாது என்று ஸ்க்வார்ட்ஜ் தெரிவித்த போது, ‘இது நம்மைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானது’ என்று விஸ்வம் பதிலளித்திருந்தார். மேலும் ‘போக்குவரத்துத் துறை அமைச்சர் நமது பேருந்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார். தனது குடும்ப விழாவிற்காக அந்தப் பேருந்தை அமைச்சர் விரும்புவதால் டிசம்பர் மாத மத்தி என்பது மிகவும் முக்கியமான நாளாக உள்ளது’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ஆறு நிமிடங்களுக்குப் பிறகு வேறொரு ஸ்கேனியா அதிகாரி ‘இந்தப் பேருந்திற்காக அமைச்சர் காத்திருக்கிறார் என்றால் ஏன் இந்த ஆர்டரை நாம் இதுவரையிலும் பார்க்கவில்லை? இந்த ஆர்டர் இவ்வளவு நாளாக எங்கே இருந்தது?’ என்று பதில் கேள்வி எழுப்பியிருந்தார். அந்தப் பேருந்து வாடகைக்கு மட்டுமே, அவரிடமிருந்து ஆர்டர் எதுவும் வரவில்லை என்று தெளிவுறுத்திய விஸ்வம் ‘பேருந்தை தருவதில் ஏதேனும் பிரச்சனை இருப்பின் தயவுசெய்து தெரிவியுங்கள். கடந்த ஒரு மாத காலமாக இந்தப் பேருந்து குறித்து நாங்கள் விவாதித்து வந்திருக்கிறோம். உற்பத்திப்பொருள் மேலாண்மை (பிஎம்) கூட்டங்கள் அனைத்திலும் நாங்கள் இது குறித்து பேசியிருக்கிறோம்’ என்று சற்றே எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையிலும் அவரது பதில் இருந்தது.           


எட்டு நாட்களுக்குப் பிறகு நவம்பர் 26 அன்று ஸ்கேனியா இந்தியா தொழிற்சாலைக்கு சாரங் கட்கரி வந்தார். ‘கட்கரி மகன் வருகை’ என்ற தலைப்புடன் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் ‘நாளைய தினம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் மகன் சாரங் கட்கரி நமது தொழிற்சாலைக்கு வரவிருக்கிறார்’ என்றும், ஸ்கேனியா இந்தியாவின் நிர்வாக இயக்குநரைக் குறிப்பிட்டு ‘மதிய உணவு ஆண்டர்ஸுடன்’ என்றும் ‘அவர்களுக்கான பேருந்தைப் பார்வையிட’ என்று அந்த சந்திப்பிற்கான நிகழ்ச்சிநிரலையும் விஸ்வம் குறிப்பிட்டிருந்தார். அதற்குக் கீழே ‘ரிச்சர்டும், ஹெல்முட்டும் உதவ வேண்டும்’ என்று அப்போது ஸ்கேனியா இந்தியாவின் சேவை நடவடிக்கைகளுக்கான இயக்குநரான ரிச்சர்டு வார்டெமார்க் என்பவரையும் குறிப்பிட்டிருந்தார். வார்டெமார்க், ஸ்க்வார்ட்ஜ் ஆகியோருக்கும் அந்த மின்னஞ்சல் குறியிடப்பட்டிருந்தது.        

தங்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களுக்கு ஸ்க்வார்ட்ஜ், வார்டெமார்க் இருவரும் பதிலளிக்கவில்லை. குப்தாவின் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைப் பெறுவதற்காக லிங்கெடின், முகநூல் வழியாக அனுப்பப்பட்ட தகவல்களுக்கான பதிலை அவரிடமிருந்து பெற முடியவில்லை.

அவர்கள் விரும்பியவாறு டிசம்பர் மத்தியில் அந்தப் பேருந்தை வழங்க முடியவில்லை என்றாலும் அந்த பேருந்து ஷெல்லை கட்கரி குடும்பத்தினருக்காகத் தனியாக ஒதுக்கி வைத்து, அதன் பரிமாற்றத்திற்கான நிறுவனத்தைக் கண்டறிவதில் ஸ்கேனியா இந்தியா அலுவலகம் வெற்றி கண்டது. ஸ்கேனியா இந்தியா அலுவலகத்திற்கான சாரங்கின் வருகை குறித்து விஸ்வம் அனுப்பிய மின்னஞ்சலில் ‘மதிய உணவிற்கான நேரத்தை அவர் நம்முடன் பகிர்ந்து கொள்வார். பின்னர் அவருடன் நான் எக்ஸ்கான் வெனியூவிற்கு செல்வேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். எக்ஸ்கான் வெனியூ என்பது அந்த ஆண்டு நவம்பர் 25 முதல் 29 வரையிலும் பெங்களூரூ சர்வதேச கண்காட்சி மையத்தில் நடைபெற்ற எட்டாவது சர்வதேச கட்டுமான கருவிகள்&கட்டுமானத் தொழில்நுட்ப வர்த்தக கண்காட்சியைக் குறிப்பதாக இருந்தது. அந்த எக்ஸ்கான் 2015இல்தான் கட்கரி குடும்பத்தினருக்காக அந்தப் பேருந்தை வாங்கிய ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தை விஸ்வம் கண்டறிந்திருந்தார். 


ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனம் 2014 பிப்ரவரியில் தொடங்கப்பட்டது. 2015 அக்டோபர் 1 முதல் ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனத்தை ஸ்கேனியா இந்தியா நிறுவனம் தங்களுடைய பேருந்து விற்பனை முகவராக நியமனம் செய்ததாக ஸ்கேனியாஏபி நிறுவனத்தின் மற்றுமொரு உள்தணிக்கை அறிக்கை குறிப்பிடுகிறது. அதற்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஸ்கேனியா இந்தியா தொழிற்சாலைக்கு சாரங் கட்கரி வந்து சென்ற பிறகு நிகில் கட்கரியும், விஸ்வமும் 2015 எக்ஸ்கானுக்குச் சென்று அங்கே ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவன இயக்குநர்களில் ஒருவரான எம்.கே.லட்சுமிநாராயணைச் சந்தித்ததாக ஜிஐஏ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய மனிதர் ஒருவரின் பயன்பாட்டிற்காக ஒரு பேருந்தை ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனம் வாங்குவதற்கான வாய்ப்பு குறித்து தன்னை எக்ஸ்கான் வெனியூவில் சந்தித்து விஸ்வமும், நிகிலும் விவாதிக்க விரும்பியதாக ஜிஐஏவிடம் அந்த இயக்குநர் கூறியிருந்தார்.      


ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனம் உடனடியாக களத்தில் இறங்கியது. 2015 எக்ஸ்கான் சந்திப்பு நடந்து மூன்று நாட்கள் கழித்து நவம்பர் 30 அன்று ‘தயவுசெய்து ஒத்துழைத்து பேருந்து ஷெல் வாங்குவதற்கான கொள்முதல் ஆர்டரை வழங்க வேண்டுகிறேன்’ என்று லட்சுமிநாராயணுக்கு விஸ்வம் எழுதியிருந்தார். ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனத்திற்குத் தேவையான பணத்தை போக்ஸ்வேகன் பைனான்ஸ் நிறுவனம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை விஸ்வம் செய்திருப்பதாக அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘நான் ஷெல் மற்றும் உட்புற மாற்றங்களுக்குத் தேவையான பணத்திற்காக போக்ஸ்வேகன் பைனான்ஸ் சர்வீசஸ் நிறுவனத்துடன் பேசியிருப்பதும், அவர்கள் அதற்கு தயாராக இருப்பதுவும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்… நாங்கள் அதற்கான உத்தரவாதத்தை வழங்கி உங்களுக்கு உதவுவோம்’ என்று விஸ்வம் எழுதியிருந்தார். அதே மின்னஞ்சலில் போக்ஸ்வேகன் பைனான்ஸ் அதிகாரி ஒருவரையும் குறியிட்டு ‘எக்ஸ்கானின் போது நாம் ஏற்கனவே விவாதித்தவாறு அந்தப் பேருந்திற்காக எங்களுடைய பெங்களூரூ விற்பனையாளருக்கான நிதியுதவியை விரைந்து வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று கேட்டிருந்தார்.   

ஸ்கேனியா மெட்ரோலிங்க் எச்டி 410 ஐபி 62*4 14.50 பேருந்து ஷெல்லை 1.20 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கான ஆர்டரை ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனம் அன்றைய தினமே வழங்கியது. ஜிஐஏ அறிக்கையில் ‘ஸ்கேனியா இந்தியா நிறுவனத்தின் பொது பேரேட்டில் அந்த பரிமாற்றத்தின் மூலம் 400000 ரூபாய் நிகர லாபம் கிடைத்திருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த விசாரணை அறிக்கையில் ‘வாடிக்கையாளர் விலைச்சீட்டு ட்ரான்ஸ்ப்ரோ நிறுவனத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு பத்தரை மாதங்களுக்குப் பிறகு 2016 செப்டம்பர் 21 அன்று வாடிக்கையாளரின் விலைச்சீட்டிற்கான பணவரவு பதிவேற்றப்பட்டது’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.   

அந்த நிறுவனங்களுக்கிடையே வாடிக்கையாளர் விற்பனை ஒப்பந்தம் எதுவும் இருந்ததாக ஜிஐஏவால் கண்டறிய முடியவில்லை. அது இந்த பேருந்தைச் சுற்றியுள்ள பண விவகாரத்தில் இருக்கின்ற பல்வேறு ஒழுங்கீனங்களில் முதலாவதாக இருக்கிறது. டிசி டிசைன்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்ட விலைச்சீட்டிற்கான பணத்தைச் செலுத்துவது, ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனத்திற்கான கடனை வழங்குவது, ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ், சுதர்சன் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனங்களுக்கிடையிலான வாடகை ஒப்பந்தம் ஆகியவற்றில் கட்கரி குடும்பத்தினரின் பங்கை வெளிப்படுத்துவதாகவும் அது இருக்கின்றது. அதுவரையிலும் பேருந்து தொடர்பான தகவல்களை மட்டுமே பெற்று வந்த சாரங் கட்கரி பின்னர் விஸ்வத்திற்கு அனுப்பிய தகவல்களையும் அந்த தகவல் பரிமாற்றங்கள் உள்ளடக்கியிருந்தன. 

2015 டிசம்பர் 24 அன்று ஸ்கேனியா முன்மொழிவு 8 என்ற தலைப்புடன் சாரங்கின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அந்தப் பேருந்தின் இறுதி வரைபடத்தை விஸ்வம் அனுப்பி வைத்திருந்தார். அந்த வரைபடத்தில் ஆசூஸ் மீடியா ப்ளேயர், மூன்று 40 இஞ்ச் சோனி டிவி, ஒரு 29 இஞ்ச் சோனி டிவி, ஒரு கார்பன் டிவி, எலெக்ட்ரோலக்ஸ் ரெஃப்ரிஜிரேட்டர், ஐஎஃப்பி மைரோவேவ் அடுப்பு, கஃபே காஃபிடே காஃபிமேக்கர், ஆசூஸ் அல்லது சோனி ஆம்ப்ளிஃபயர், வாஷ்பேசின், கார்டுலெஸ் மைக், அழைப்புமணி, மொபைல் சார்ஜ் பாயிண்ட்கள், இன்வெர்ட்டர்கள், சிசிடிவி கேமராக்கள், வைஃபி சிஸ்டம், சமையலறை, ஆளுயர கண்ணாடியுடன் கூடிய ஆடை அலமாரி, வேதி கழிவறை என்று பேருந்திற்கான பல்வேறு இணைப்புகள் அந்தப் படத்தில் குறிக்கப்பட்டிருந்தன. சாரங்கிற்கு ‘உங்களுடைய ஒப்புதல் தேவை’ என்று விஸ்வம் எழுதியிருந்தார்.    




2015 டிசம்பர் 24 அன்று விஸ்வம் சாரங்கிற்கு அனுப்பியிருந்த வரைபடம்

உள்புற வடிவமைப்பிற்கான வேலைகள் திலீப் சாப்ரியா டிசைன் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்திற்கும், வெளிப்புற வேலைகள் எஸ்.எம்.கண்ணப்பா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டதாக ஜிஐஏ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2016 மார்ச் 5 அன்று பல்வேறு உள்புற வடிவமைப்பிற்கான தேர்வுகளைக் கொண்ட படங்களை மின்னஞ்சல் மூலமாக சாரங்கிற்கு அனுப்பி வைத்த விஸ்வம் ‘உங்களுடைய ஒப்புதல் தேவை’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார். சில நாட்கள் கழித்து  டிசி டிசைன்ஸ் நிறுவன அதிகாரி ஒருவரிடமிருந்து பெறப்பட்ட மின்னஞ்சலை விஸ்வம் சாரங்கிற்கு அனுப்பி வைத்தார்.

பேருந்திற்கான பணம் செலுத்துவது குறித்த பிரச்சனை 2016 ஜூனில் மையத்திற்கு வந்தது. ஸ்கேனியா இந்தியா அதிகாரி ஒருவர் ஜுன் 1 அன்று விஸ்வத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில் ‘திரு.ஆண்டர்ஸ் க்ரண்ட்ஸ்ட்ரோமரின் பரிந்துரை, வழிகாட்டுதலின் பேரில் நாக்பூரில் பயன்படுத்தப்படப் போகின்ற ஸ்கேனியா மெட்ரோலிங்க் எச்டி 14.5 எம் பேருந்து குறித்த ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்திற்கான விலைச்சீட்டை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். உள்வடிவமைப்பு, தள மாறுதல்கள், கழிவறை, சமையலறை ஆகியவற்றைப் பொருத்துவதற்காக கண்ணப்பா ஆட்டோமொபைல்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்திற்கு அந்தப் பேருந்து அனுப்பப்பட்டது’ என்று குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பிறகு மேலும் சில உள்வடிவமைப்பிற்காக அந்தப் பேருந்து டிசி டிசைன்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பப்படும் என்றும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கான பணம் மொத்தம் ரூ.22.19 லட்சம் என்றும், போக்ஸ்வேகன் பைனான்ஸ் நிறுவனத்தால் அந்தப் பணமும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.     

புனேவில் உள்ள டிசி டிசைன்ஸ் அலுவலகத்திற்கு அந்தப் பேருந்து கொண்டு செல்லப்பட்டது குறித்து அந்த வார இறுதியில் அந்த மின்னஞ்சல் தொடரில் ‘நாக்பூர் பேருந்து நகர்வு’ என்ற தலைப்பில் ஸ்கேனியா இந்தியா அதிகாரிகள் விவாதித்திருந்தனர். ஜுன் 7 அன்று தலைமை நிதியதிகாரியான ஃப்ரம்ஹோல்ஜ், க்ரண்ட்ஸ்ட்ரோமருக்குப் பிறகு தலைமை நிர்வாக அதிகாரியாக வந்த மைக்கேல் பெஞ்சி ஆகியோருக்கு ‘இது மிகவும் முக்கியமான பேரம்’ என்று குறிப்பிட்டு விஸ்வம் எழுதியிருந்தார்.  ‘இது மிக முக்கியமான ஒருவருக்கானதாக இருக்கப் போகிறது. மைக்கேல் பெஞ்சிக்கு அந்த விவரங்கள் தெரியும்’ என்று விஸ்வம் அதில் கூறியிருந்தார். அவர் ‘இந்த பரிவர்த்தனையை எளிதாக்குகின்ற வகையில் எங்களுடைய விற்பனையாளர் மூலம் அதனைக் கையாளுவது என்று எங்களுடைய கூட்டங்களில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட மறுவடிவமைக்கும் வேலைகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மைக்கேலும் நாங்களும் இதுகுறித்து விவாதித்திருக்கிறோம். இறுதிக்கட்ட வேலைகளுக்காக முன்னுரிமை அடிப்படையில் டிசி நிறுவனத்திற்கு அந்தப் பேருந்து கொண்டு செல்லப்பட வேண்டும்’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.     

அதற்கு ‘ட்ரான்ஸ்ப்ரோ நிறுவனத்திடமிருந்து பணம் எவ்வாறு தரப்படும் என்பதற்கான கால அவகாசம், நிலை குறித்து எனக்கு முழுமையாகத் தெரிவிக்கப்பட வேண்டும். பேருந்தை இடம் மாற்றுவதற்கு முன்பாக அந்த கால அவகாசம் குறித்த தகவலை எனக்கு அனுப்பி வையுங்கள்’ என்று ஃப்ரம்கோல்ஜ் பதிலளித்திருந்தார். ‘உள்புற மாற்றங்களை முடிக்க  டிசி டிசைன்ஸ் இரண்டு மாத காலம் எடுத்துக் கொள்ளும். பேருந்து தரப்படுவதற்கு தயாரானவுடன் மாற்றங்கள் உள்ளிட்ட செலவினங்களைச் சேர்த்து முழுத் தொகையையும் போக்ஸ்வேகன் பைனான்ஸ் விடுவிக்கும்’ என்று விஸ்வம் அவருக்குப் பதிலளித்திருந்தார். அதுவரையிலும் ட்ரான்ஸ்ப்ரோ நிறுவனத்திற்கு நமது முழு ஆதரவும் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் வைத்திருந்தார்.    

ஜுன் 9 அன்று ஸ்கேனியா அதிகாரி ஒருவர் பேருந்து நகர்விற்கான ஒப்புதலை அளித்தார். க்ரண்ட்ஸ்ட்ரோமர், ஃப்ரம்ஹோல்ஜ், பெஞ்சி ஆகியோர் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை.  

ஜுன் 16 அன்று விஸ்வம் ‘சார் நீங்கள் தனித்திருக்கும் போது என்னைக் கூப்பிடுங்கள்’ என்று சாரங் கட்கரிக்குத்  தகவல் அனுப்பி வைத்தார். இரண்டு நாட்கள் கழித்து டிசி டிசைன்ஸ் அதிகாரிக்கு ‘உங்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறேன். நீங்கள் என்னைத் திருப்பி அழைக்க முடியுமா, நாளை சாரங் புனேவிற்கு வர விரும்புகிறார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா’ என்று கேட்டு விஸ்வம் தகவல் அனுப்பினார். சிறிது நேரம் கழித்து விஸ்வம் ‘அந்த அதிகாரி இன்னும் பதிலளிக்கவில்லை’ என்று சாரங்கிற்கு தகவல் அனுப்பினார். அந்த தகவல் தொடர்பிலிருந்து புனேவில் உள்ள டிசி டிசைன்ஸ் அலுவலகத்திற்கு சாரங் வந்தாரா என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. அப்படி வந்திருப்பார் என்றால் அந்த பேருந்து தொடர்பாக குறைந்தபட்சம் அது அவருடைய இரண்டாவது வருகையாக இருந்திருக்கும்.          

அதற்குப் பிறகு பேருந்தின் நிலை குறித்து சாரங் விசாரிக்க ஆரம்பித்தார். ஜுலை 1 அன்று விஸ்வத்திற்கு வாட்ஸ்ஆப் மூலம் ‘சார் ஏதாவது முன்னேற்றம்???’ என்ற தகவலை அவர் அனுப்பி வைத்தார். அரை மணி நேரத்திற்குள் விஸ்வம் ‘சார்ஜி பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன’ என்று  பதில் அனுப்பினார். எட்டு நாட்களுக்குப் பிறகு டிசி டிசைன்ஸ் அதிகாரி ‘ஸ்கேனியா பேருந்தின் உள்வடிவமைப்பு குறித்த விலைப்புள்ளி இறுதிப்படுத்தப்படுகிறது’ என்று அதிகாரப்பூர்வமாக அந்தப் பேருந்தை வாங்கியிருக்கும் ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மின்னஞ்சலை அனுப்பாமல் நேரடியாக சாரங்கிற்கு மின்னஞ்சலை அனுப்பி வைத்தார். ‘அது இன்று காலை உங்களுடனும், திரு.சிவகுமாருடனும் நடந்த கலந்துரையாடலின்படி இறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தாதார். இறுதிப்படுத்தப்பட்டிருந்த அந்த விலைப்புள்ளி 2015 அக்டோபரில் இறுதிப்படுத்தப்பட்டதைவிட குறிப்பிடத்தக்க அளவில் மிகவும் குறைவாக இருந்தது. டிசி டிசைன்ஸ் அதிகாரி அனுப்பிய அந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டிருந்த விலைச்சீட்டில் மொத்த தொகைக்கான இடம் நிரப்பப்படாது விடப்பட்டிருந்தது என்றாலும் உள்புற ஓய்விடப் பகுதிக்கு 34.35 லட்சம் ரூபாய்; தோலால் ஆன இருக்கைக்கு 5.38 லட்சம் ரூபாய், கூடுதலாக திட்டமிடப்பட்டவைக்காக 27.74 லட்சம் ரூபாய் என்று மொத்தம் 67.47 லட்சம் ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சாரங்கிற்கு அனுப்பிய மின்னஞ்சலில் ‘இந்த விலையை விதிவிலக்காக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்’ என்று டிசி டிசைன்ஸ் அதிகாரி குறிப்பிட்டிருப்பது குறைக்கப்பட்ட விலை தொடர்பான குறிப்பாக ஒருவேளை இருக்கலாம்.   


இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள்ளாக சாரங் பெயரைக் குறிப்பிட்டு தனது மின்னஞ்சலில் ‘திரு.சாரங்கிடம் நீங்கள் விவாதித்து உங்களால் இறுதிப்படுத்தப்பட்டுள்ள ஆவணத்தில் உள்ள விவரக்குறிப்புகளைக் கொண்டு நீங்கள் தொடர்ந்து மேற்செல்லலாம். வேலைகளை ஆரம்பிக்கலாம்’ என்று பதிலளித்திருந்த விஸ்வம் ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனத்தைக் குறிப்பிட்டு ‘வாங்குபவரால்/இயக்குகின்ற நிறுவனத்தால் கொள்முதலுக்கான ஆர்டர் வழங்கப்படும்’ என்றும் குறிப்பிட்டிருந்தார். அதற்கேற்றவாறு நிதியுதவி ஏற்பாடு செய்யப்படும் என்று விஸ்வம் கூறியிருந்தார். ஜுலை 15 அன்று டிசி டிசைன்ஸ் நிறுவனத்தின் இறுதி விலைப்புள்ளிக்கான ஒப்புதலை லட்சுமிநாராயண்  மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்.     


ஜிஐஏ தன்னுடைய அறிக்கையில் ‘சாரங் கட்கரியின் வேண்டுகோள், ஒத்துழைப்பின் அடிப்படையிலே பேருந்தின் வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டது’ என்று டிசி டிசைன்ஸ், ஸ்கேனியா, சாரங் ஆகியோருக்கிடையிலான தகவல் தொடர்புகளிலிருந்து தெரிய வருவதாகப் பதிவு செய்திருந்தது. மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு டிசி டிசைன்ஸ் நிறுவனம் விளக்கம் அளிக்கவில்லை.       

2015 நவம்பர் 30 அன்று ஸ்கேனியா நிறுவனம் மெட்ரோலிங்க் எச்டி விற்பனைக்கான விலைச்சீட்டை ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனத்திடம் அளித்தது. ‘ட்ரான்ஸ்ப்ரோ நிறுவனத்திடம் வாடிக்கையாளர் விலைச்சீட்டு சமர்ப்பிக்கப்பட்டு பத்தரை மாதங்களுக்குப் பிறகு அந்த வாடிக்கையாளர் விலைச்சீட்டிற்கான பணம் 2016 செப்டம்பர் 21 அன்று செலுத்தப்பட்டது’ என்று உள்தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மெட்ரோலிங்கின் அனைத்து மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு அந்தப் பேருந்து டிசி டிசைன் பட்டறையில் உள்வடிவமைப்பு மாற்றத்திற்காக இருந்த நிலையில் போக்ஸ்வேகன் பைனான்ஸிடமிருந்து நிதியுதவியைப் பெற வேண்டிய நேரம் வந்தது. ஆகஸ்ட் 3 அன்று ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸிற்குத் தர வேண்டிய கடன் தொகைக்கான ஒப்புதல் கடிதத்தை போக்ஸ்வேகன் பைனான்ஸ் நிறுவனம் ஸ்கேனியா இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது. அந்த ஒப்புதல் கடிதத்தில் மெட்ரோலிங்க் பேருந்து ஷெல்லிற்காக 1.20 கோடி ரூபாய், பேருந்து வடிவமைப்பிற்காக கண்ணப்பா ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்திற்கு 22.19 லட்சம் ரூபாய், உள்வடிவமைப்பிற்காக டிசி டிசைன்ஸ் நிறுவனத்திற்கு 76.58 லட்சம் ரூபாய் என்று மூன்று வெவ்வேறு கடன்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. மொத்தக் கடன் தொகை ரூ.2.18 கோடி என்ற அளவிலே இருந்தது. போக்ஸ்வேகன் பைனான்ஸ் அனுப்பிய அந்த ஒப்புதல் கடிதத்தில், கடனைத் திரும்பச் செலுத்த ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனம் தவறும்பட்சத்தில் அதற்கான பொறுப்பை ஸ்கேனியா இந்தியா நிறுவனம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் ஒட்டுமொத்த கடன் காலம் முழுமைக்குமான 100% உத்தரவாதத்தை ஸ்கேனியா இந்தியா நிறுவனம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

ஸ்கேனியா பேருந்து தொடர்பாக வெளியான இதற்கு முந்தைய கட்டுரையில் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டிருந்த ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிதி தொடர்பான ஆவணங்களுடன் போக்ஸ்வேகன் பைனான்ஸ் நிறுவனத்துடனான ரூ.22.19 லட்சம் தொடர்பான கடன் ஒப்பந்தமும் இருந்தது. 2016 ஆகஸ்ட் 20 அன்று  போடப்பட்டிருந்த அந்த ஒப்பந்தத்தில்  இது ‘ஸ்கேனியா 14.5எம் பேருந்திற்கானது’ என்று கட்கரி குடும்பத்தினருக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த மெட்ரோலிங்க் எச்டிக்கான அடிச்சட்டகம் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கேரவான் கட்டுரையில் ஸ்கேனியா மெட்ரோலிங்கிற்கான கடன் தொகை மிகவும் குறைவாக இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஜிஐஏவால் பரிசீலிக்கப்பட்ட ஆவணங்கள் அந்த தொகையானது வழங்கப்பட்ட மூன்று கடன்களில் ஒன்று மட்டுமே என்பதைத் தெளிவுறுத்தியுள்ளன.   

கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் இணையதளத்தில் மற்ற இரண்டு கடன்கள் குறித்த ஆவணங்கள் பதிவேற்றப்படவில்லை என்பது அந்த இரண்டு கடன்களும் பதிவு செய்யப்படவில்லை என்பதையே காட்டுகின்றன. அனைத்து நிறுவனங்களும் தங்களுடைய கடன்கள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்துடன் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று 2013ஆம் ஆண்டு நிறுவனங்களுக்கான சட்டப் பிரிவு 77 குறிப்பிடுகிறது. ஆனால் ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸின் 2017 நிதியாண்டு அறிக்கையில் நடப்புக் கடன்கள் என்ற தலைப்பிலே - அதாவது அந்தக் குறிப்பிட்ட ஆண்டில் செலுத்தப்பட வேண்டிய கடன் என்பதாக - இந்த மூன்று கடன்களும் வெளியாகியுள்ளன. வெளியிடப்பட்டுள்ள இந்த மூன்று கடன்களும் போக்ஸ்வேகன் பைனான்ஸ் நிறுவனத்தின் ஒப்புதல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைகளுடன் ஒத்துப் போவதாக இருக்கின்றன.  

2016 செப்டம்பர் 19  அன்று ‘சார் ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா’ என்று சாரங் அனுப்பியிருந்த தகவலுக்கு விஸ்வம் ‘நிலுவையில் இருந்து வருகின்ற பணத்தைச் செலுத்துவதற்கான நடைமுறை இன்றைக்குள் முடிவடைந்து விடும்’ என்று பதிலனுப்பி இருந்தார். செப்டம்பர் 21 அன்று ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனம் ஸ்கேனியா இந்தியாவிற்கு 1.19 கோடி ரூபாய் பணத்தை - பேருந்து ஷெல்லிற்காகத் தரப்பட வேண்டிய 1.20 கோடி ரூபாயிலிருந்து 51000 ருபாய் குறைவாக - செலுத்தியதாக ஜிஐஏ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பணம் ஏன் இவ்வாறு குறைவாக வழங்கப்பட்டது என்பதற்கான விளக்கம் ஜிஐஏ அறிக்கையிலோ அல்லது அதில் உள்ள ஆவணங்களிலோ இருக்கவில்லை.   


இதுவரையிலும் மிகவும் சீராக எவ்வித தடங்கலுமின்றி பேருந்து தொடர்பான  பேரங்களும், பேச்சுவார்த்தைகளும் நடந்து வந்தன. உள்ள ஆவணங்களின்படி நடந்தவற்றைச் சுருக்கமாகச் சொல்வதென்றால், 2015 நவம்பரில் மெட்ரோலிங்க் பேருந்து ஷெல்லை ஸ்கேனியா இந்தியா நிறுவனம் ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு முறைப்படி விற்றது. பேருந்திற்கான கூடுதல் வடிவமைப்பு, உள்புற வேலைகள் அனைத்தும் 2016ஆம் ஆண்டு மத்தியில் மேற்கொள்ளப்பட்டன. பேருந்து தொடர்பான இந்த பேரத்தின் ஒட்டுமொத்த தொகைக்கான கடன் நிதியுதவியை 2016ஆகஸ்ட் மாதம் போக்ஸ்வேகன் பைனான்ஸ் நிறுவனம் வழங்கியது. அடுத்த மாதம் ஸ்கேனியா இந்தியா நிறுவனம் பேருந்திற்கான தொகையைப் பெற்றுக் கொண்டது. ஜிஐஏ அறிக்கை லட்சுமிநாராயணுடனான முதல் சந்திப்பில் நிகில் கட்கரி ஈடுபட்டிருப்பதையும், அதற்குப் பிறகு ஒவ்வொரு படிநிலையிலும் சாரங் கட்கரி முழுமையாக ஈடுபட்டிருப்பதையும் சுட்டிக் காட்டுகிறது.   

2016 நவம்பர் 11 அன்று நாக்பூரில் இயங்கி வருகின்ற வாடிக்கையாளர் ஒருவருடன் ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனம் அந்த மெட்ரோலிங்க் எச்டி பேருந்திற்கான மூன்றாண்டு கால வாடகை ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது குறித்து கடிதத் தொடர்புகளில் பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வாடிக்கையாளர் கட்கரி குடும்பத்தைச் சார்ந்தவர் இல்லை என்ற போதிலும், தங்குமிடம் மற்றும் உணவு சேவைகளை வழங்கி வருகின்ற சுதர்சன் ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மெண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் தொடர்புடையவாராக அவர் இருந்தார். ஆனால் ஜிஐஏவால் ஆய்வு செய்யப்பட்ட இந்த சொகுசுப் பேருந்து குறித்த பேச்சுவார்த்தைகளில் சுதர்சன் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனமோ அல்லது அதன் இயக்குநரான பிரியதர்சன் விவேக் பாண்டேவோ அதுவரையிலும் ஒருபோதும் இடம் பெற்றிருக்கவில்லை. ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் சார்பில் லட்சுமிநாராயணும், சாட்சியாக விஸ்வமும் கையொப்பமிட்டிருந்தனர்.    

இவ்வாறான நிலையில் ஜிஐஏவின் அறிக்கையில் முதன்முறையாக சுதர்சன் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் பேருந்தை வாடகைக்கு விடும் நிறுவனமாக இடம் பெறுகிறது. அந்தப் பேருந்து வாடகைக்கு மட்டுமே என்றும் நிதின் கட்கரியிடமிருந்து எந்தவொரு ஆர்டரும் இருக்காது என்றும் மிகத் தெளிவாக அந்தப் பேருந்து குறித்த திட்டம் பற்றி 2015 நவம்பர் முதல் நடந்து வருகின்ற ஸ்கேனியா இந்தியாவின் உள்மின்னஞ்சல் தொடரில் விஸ்வம் குறிப்பிட்டிருப்பதை ஜிஐஏ தன்னுடைய அறிக்கையுடன் இணைத்துள்ள தகவல் பரிமாற்றங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அந்த வாடகை ஒப்பந்தம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து கட்கரி குடும்பத்தினர், லட்சுமிநாராயண், விஸ்வம், பாண்டே ஆகியோரிடம் வெவ்வேறு வகையிலான புரிதல்கள் இருந்ததை அதற்குப் பிறகு நடந்த நிகழ்வுகள் காட்டின.     

*

அந்த சொகுசுப் பேருந்து தொடர்பான முதல் கலந்துரையாடல் ஸ்கேனியா நிறுவனம், கட்கரி குடும்பத்தினரிடையே நடைபெற்று ஒரு வாரத்திற்குள்ளாக 2015 ஜுன் 9 அன்று சுதர்சன் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் துவங்கப்பட்டது. கேரவான் இதழில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்ததைப் போல முறையே சாரங், நிகில் ஆகியோரின் தலைமையில் இருந்த மானஸ் அக்ரோ, சியன் அக்ரோ நிறுவனங்கள் சுதர்சன் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனத்துடன் மிகவும் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தன. கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களில் சுதர்சன் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. எதிர்மறையாக இருந்த நிறுவனத்தின் நிகரமதிப்பு 2020 நிதியாண்டில் மிகவும் குறைவாக, நிறுவனத்தின் சொத்துகளைவிட கடன்தொகை 10.48 லட்சம் ரூபாய் அதிகம் என்பதாக அந்த ஆவணங்களில் பதிவாகியுள்ளது. ஸ்கேனியா மெட்ரோலிங்க்கை வாங்குவதற்காக சுதர்சன் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனத்துடன் வாடகை ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்ட 2017 நிதியாண்டைத் தவிர்த்து மற்ற ஆண்டுகளில் தொடர்ந்து அது நட்டத்தையே அந்த நிறுவனம் சந்தித்து வந்துள்ளது. அப்போது சுதர்சன் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் சாரங் கட்கரி தலைமையில் இயங்கி வந்த மானஸ் அக்ரோ நிறுவனத்திடமிருந்து ரூ.35 லட்சத்தை பிணை எதுவுமற்ற கடன் தொகையாகப் பெற்றுக் கொண்டிருந்தது. இந்த கடன் தொகை ஏன் வழங்கப்பட்டது என்று தெரியவில்லை என்று கேரவான் இதழில் இதற்கு முன்பு வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அந்த கடன் தொகை வழங்கப்பட்டதற்கான விளக்கத்தை ஜிஐஏ அறிக்கையுடன் இருக்கின்ற தகவல்கள் அளிக்கின்றன.  

அந்த வாடகை ஒப்பந்தத்தில் சுதர்சன் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் ட்ரான்ஸ்ப்ரோ நிறுவனத்திற்கு திருப்பிச் செலுத்தப்படக்கூடிய வகையிலான வைப்புத்தொகை ரூ.1.20 கோடியும், மாதம் ஒன்றிற்கு வாடகைப் பணம் ரூ.20000 வீதம் ஆண்டு ஒன்றிற்கு ரூ.7.20 லட்சமும் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தங்களுடைய வணிக நிறுவனமாக கட்கரி குடும்பத்தினர் ட்ரான்ஸ்ப்ரோ மோட்டாரைத் தேர்ந்தெடுத்திருக்கவில்லை என்றால், இந்த அளவிற்கு மிகக் குறைவான வாடகைக்கு அந்தப் பேருந்தை எடுத்த அந்தச் செயல் மிக மோசமான வணிக நடவடிக்கையாகவே இருந்திருக்கும் என்று ஜிஐஏ அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தங்களுடைய பெயரை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத இரண்டு தனியார் போக்குவரத்து நிறுவனங்களிடம் இதுபோன்ற சொகுசுப் பேருந்து வாடகை ஒப்பந்தங்கள் குறித்து பேசினோம். வழக்கமாக இதுபோன்ற புதிய உயர்வகைப் பேருந்துகளுக்கான வாடகை என்பது மாதம் ஒன்றிற்கு லட்சக்கணக்கில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் இரண்டு கோடி அளவிற்கான விலை கொண்ட பேருந்திற்கு மாதம் ரூ.20000 வாடகைப் பணம் என்பதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறினார். சொகுசு காருக்கே இதை விட கூடுதலான வாடகையை நாங்கள் பெற்று வருகிறோம் என்று அவர் கூறினார். இருந்த போதிலும் இதுபோன்றதொரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு நிறைவேற்றப்பட்டது.          

சுதர்சன் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் தன்னுடைய கணக்குகளில் அந்தப் பேருந்தை ரூ.33.57 லட்சம் மதிப்பிலான உறுதியான சொத்து என்று முதன்முறையாக 2017ஆம் ஆண்டு நிதியறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த நிறுவனம் ட்ரான்ஸ்ப்ரோ நிறுவனத்திடமிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட பேருந்தை தன்னுடைய சொத்தாக எப்படி குறிப்பிட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதற்கான விளக்கங்களை கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகத்தின் ஆவணங்கள், ஜிஐஏ அறிக்கை மற்றும் அதனுடன் இருந்த இணைப்பு ஆவணங்கள் எதுவும் அளிக்கவில்லை. அந்த நிறுவனத்தின் நிதியறிக்கைகளில் ஒவ்வொரு ஆண்டும் அந்தச் சொத்தின் மதிப்பு ஏறக்குறைய பதினைந்து சதவீதம் அளவிற்கு குறைந்து கொண்டே வந்திருப்பதாகக் காட்டப்பட்டிருந்தது. 2018ஆம் ஆண்டு பற்று வரவு அறிக்கையில் ரூ.28.25 லட்சம் என்று குறிப்பிடப்பிட்டிருந்த சொத்து மதிப்பு 2019ஆம் ஆண்டில் ரூ.23.78 லட்சம் என்ற அளவிற்கு குறைந்திருந்தது. சுதர்சன் ஹாஸ்பிட்டாலிட்டி  நிறுவனம் இதுபோன்றதொரு கணக்கை எவ்வாறு எட்டியது என்பது தெளிவாகவில்லை.     

அனைத்து நிறுவனங்களும் தங்களுடைய நிதியறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்று 2013ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டம் குறிப்பிடுகிறது. தனித்து இயங்கி வருகின்ற தணிக்கையாளர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட சுதர்சன் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனத்தின் 2019ஆம் நிதியாண்டு அறிக்கையில், அந்த நிறுவனத்தின் மிக மோசமான  வணிகம் என்று அந்தப் பேருந்து குறித்த வணிகம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. பேருந்தின் தேய்மானத்தைக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கும் வேளையில் பேருந்திலிருந்து கிடைத்ததாக எந்தவொரு வருமானமும் காட்டப்படவில்லை என்று அந்த தணிக்கையாளர் சுட்டிக் காட்டியிருந்தார். ‘நிறுவனத்திற்கென்று பேருந்து இருப்பதைக் காட்டி அதற்கான தேய்மானம் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவரது அறிக்கையில், வருமானம் எதுவும் கணக்கில் கொண்டு வரப்படவில்லை’ என்று கூறப்பட்டிருந்தது. ‘நம்பகத்தன்மை, செல்லுபடியாகும் தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகின்ற வகையிலேயே அந்த வணிகம் இருக்கிறது. நிர்வாகம் அளித்த விளக்கம் திருப்திகரமானதாக இருக்கவில்லை’ என்று குறிப்பிட்ட அந்த வணிகம் குறித்து தணிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார்.   

தணிக்கையாளரின் அந்த அறிக்கையில் நிர்வாகம் அளித்த விளக்கம் குறித்து எதுவுமில்லை. சுதர்சன் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு ஸ்கேனியா பேருந்து பேரம், கட்கரி குடும்பத்தினருடன் அவர்களுக்கு இருக்கின்ற தொடர்பு குறித்த மிகவும் விரிவான கேள்வித் தொகுப்பை அனுப்பி வைத்தோம். அவர்களிடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை.    

லட்சுமிநாராயண் சுதர்சன் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனத்தின் மீது அதிக அக்கறை கொண்டிருப்பதாகத் தெரிவது ஸ்கேனியா இந்தியாவுடனான அவரது தொடர்புகள் குறித்து கேள்விகளை எழுப்புவதாகவே உள்ளது. 2017 ஏப்ரலில் விஸ்வத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில் மாத வாடகை தவிர்த்து 2016 நவம்பரிலிருந்து 2017 ஜனவரி வரை மூன்று மாதங்களுக்கு மாதம் ஒன்றிற்கு 40 லட்சம் ரூபாய் என்ற கணக்கில் 1.20 கோடி ரூபாய் வைப்புத்தொகையை சுதர்சன் ஹாஸ்பிட்டிலாட்டி நிறுவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவித்த லட்சுமிநாராயண் 2017 ஏப்ரல் வரையிலும் சுதர்சன் ஹாஸ்பிட்டாலாட்டி நிறுவனத்திடமிருந்து 60 லட்சம் ரூபாய் மட்டுமே பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த தொகையும்கூட பாண்டேவிடம் இல்லாமல், கட்கரி குடும்பத்தினரிடம் விஸ்வம் தொடர்ச்சியாக விடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலேயே பெறப்பட்டுள்ளது என்று ஜிஐஏவால் ஆய்வு செய்யப்பட்ட தகவல் தொடர்புகளிலிருந்து அறிய வருகிறது.        

ஜிஐஏ அறிக்கையில் ‘2016 நவம்பர் 24 அன்று ட்ரான்ஸ்ப்ரோ நிறுவனத்திற்கான நிதியை வழங்க திரு.சாரங் கட்கரி ஏற்பாடு செய்தார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக அடையாளம் காண முடியாத ஒருவரிடமிருந்து சாரங்கிற்கு வந்த தகவலில் ‘தயவுசெய்து முப்பது லட்சம் ரூபாய்க்கான ஏற்பாடுகளைச் செய்யவும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்த நாள் சாரங் ‘நாளைக்கு நூறு சதவீதம் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்’ என்று பதிலளித்திருந்தார். நவம்பர் 23 அன்றும் அந்த பணம் செலுத்தப்படவில்லை என்பதால், அந்த நபர் ‘சார் ட்ரான்ஸ்ப்ரோ கணக்கில் அந்தப் பணம் வரவில்லை. கடனுதவி அளிப்பவரிடமிருந்து பணம் வராததால் அவர் மிகவும் சிரமப்படுகிறார். தயவுசெய்து ஏற்பாடு செய்யவும்’ என்று மற்றுமொரு தகவலை அனுப்பியிருந்தார்.   


அந்த தகவல் போக்ஸ்வேகன் பைனான்ஸ் நிறுவனத்திற்கு கடனைச் செலுத்த வேண்டிய பொறுப்பு ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இருந்தது குறித்ததாக இருந்திருக்கலாம். தான் பெற்றிருந்த மூன்று கடன்களுக்காக நிறுவனத்திற்கு ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனம் மாத தவணையாக ரூ.2.04 லட்சம், ரூ.1.30 லட்சம், ரூ.37550 என்று மொத்தம் 3.71 லட்சம் ருபாயை போக்ஸ்வேகன் பைனான்ஸ் நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டும் என்று அந்த இரண்டு நிறுவனங்களுக்கிடையிலான கடன் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நபரால் மீண்டும் அனுப்பப்பட்ட தகவலுக்கான பலன் அடுத்த நாள் நவம்பர் 24 அன்று கிடைத்திருப்பது ‘சார் நன்றி. கடனுக்கான பணம் ட்ரான்ஸ்ப்ரோவால் பெறப்பட்டது’ என்று அவர் அனுப்பிய செய்தியிலிருந்து தெரிய வருகிறது. ஜிஐஏவால் சரிபார்க்கப்பட்ட ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் கணக்கில் நவம்பர் 23 அன்று - விஸ்வம், லட்சுமிநாராயண் ஆகியோருக்கிடையே ஏற்பட்ட புரிதலான நாற்பது லட்சம் என்றில்லாமல் - இருபத்தைந்து லட்சம் ரூபாய் மட்டுமே சுதர்சன் ஹாஸ்பிட்டாலிட்டி செலுத்தியிருப்பது தெரிய வருகிறது.    

ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாகக் கூறும் அளவிற்கு லட்சுமிநாராயணின் வருத்தம் அதிகரித்தது. டிசம்பர் 30 அன்று இரவு 10:47 மணிக்கு அவர் ‘நமது ஒப்பந்தத்தின்படி இரண்டாவது தவணையை நாளைக்குள் பாண்டே செலுத்தாவிட்டால் அறிவிப்பு ஒன்றை அனுப்பி அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நான் கருதுகிறேன். நான் அந்த பேருந்தை திரும்ப எடுத்துக் கொள்கிறேன். போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தை மீறுகின்ற செயலாக அது இருக்கும் என்றாலும் எந்த விளைவையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கின்றேன். எனது தொலைபேசி அழைப்பை அவர் ஏற்கவில்லை. நான் அனுப்பிய தகவலுக்கும் பதில் அளிக்கவில்லை. நான் இதை விளையாட்டாக கூறவில்லை என்பதை அவரிடம் கூறுங்கள். 2017 ஜனவரி 4 வரை நான் காத்திருப்பேன். அதற்குப் பிறகு சட்டரீதியாக இதனை நான் எதிர்கொள்வேன்’ என்று  விஸ்வத்திற்கு எழுதியிருந்தார்.   


‘அவர்களிடம் இதை கட்டாயம் சொல்கிறேன். சாரங்கிற்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டு எனக்கும் நகலை அனுப்புங்கள். சாரங், நிகிலிடமும் இதுகுறித்து நான் பேசுகிறேன். இது குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் இந்த மின்னஞ்சலை நான் சாரங்கிற்கு அனுப்பி வைக்கிறேன். இன்று காலை நாம் அவரை அழைத்துப் பேசலாம்’ என்று இரவு 11:59க்கு விஸ்வம் பதில் அனுப்பியிருந்தார்.  

அடுத்த நாள் காலையில் காலை 6.40 மணிக்கு கட்கரி சகோதரர்களுக்கு ‘மகிழ்ச்சியான , வளமான 2017 புத்தாண்டு வாழ்த்துகள்’ என்று விஸ்வம்  வாழ்த்து தெரிவித்தார். ஜனவரி 2 அன்று காலை 10.44 மணிக்கு விஸ்வம் ‘அன்புள்ள சார், பைனான்சியருக்கான மார்ஜின் தொகையில் தனது பணத்தையும் முதலீடு செய்திருப்பதால் பைனான்சியருக்கு வழங்கப்பட வேண்டிய தொகை குறித்து லட்சுமிநாராயண்  மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறார்.  அவரது கணக்கில் பணத்தை மாற்றுவதற்கு உங்கள் கனிவான உதவியைக் கோருகிறேன்’ என்று சாரங்கிற்கு தகவல் அனுப்பினார். அந்த மாதத்தில் அதற்குப் பிறகு நடந்த உரையாடல்கள் ஜிஐஏவால் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் லட்சுமிநாராயண் தனக்கு வர வேண்டிய அடுத்த தவணையை பிப்ரவரி 17 அன்றே - இந்த முறை அவரால் ரூ10 லட்சம் மட்டுமே - பெற முடிந்தது என்று பேரேட்டு கணக்கு காட்டுகிறது.

அதற்குப் பிறகு ஏப்ரலில் விஸ்வத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில், அந்த நேரத்தில் முழு வைப்புத் தொகையான ரூ.1.20 கோடி, நான்கு மாதங்களுக்கான வாடகைப் பணம் ரூ.80000 தனக்கு வந்திருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அதற்கு மாறாக அதுவரையிலும் ரூ.35 லட்சம் மட்டுமே அவர் பெற்றிருந்தார்.  

அடுத்த மாதமும் அதே கதையே தொடர்ந்தது. கட்கரி குடும்பத்தினர் இடையீடு செய்யாததால் விஸ்வம் மிகவும் ஏமாற்றமடைந்திருந்தார். 2017 மார்ச் 20 அன்று நிகிலுக்கு தகவலை அனுப்பி வைத்த அவர் வாடகை ஒப்பந்தத்தில் உள்ள விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த நகலையும் அனுப்பி வைத்திருந்தார். ‘சார் உங்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். லட்சுமிநாராயணுக்குத் தர வேண்டிய பணம் குறித்து தங்களுடைய கனிவான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். அவரது பைனான்சியர் கடனை மீட்டுப் பெறுவதற்கான அறிவிப்பை அனுப்பி வைத்திருப்பதால் அவர் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறார். தவணைக்கான பணத்தை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யவும்’ என்று விஸ்வம் எழுதியிருந்தார்.  


நான்கு நாட்கள் கழித்து ‘சார் உங்களுடைய உதவி தேவை. லட்சுமிநாராயணுக்கு பைனான்சியர் அறிவிப்பை அனுப்பி வைத்துள்ளார். நாளைக்கு பணத்தைச் செலுத்தி அவருக்கு உதவுங்கள்’ என்று மீண்டும் நிகிலுக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார்.  

‘அன்புள்ள சார், மிகத் தாழ்மையான வேண்டுகோள். ப்ளீஸ் சார், ப்ளீஸ் சார். பைனான்சியர் லட்சுமிநாராயணுக்கு சட்டரீதியான அறிவிப்பை அனுப்பி வைத்துள்ளார். இன்றைக்கு தயவுசெய்து பணத்தை அனுப்பி வைத்து அவருக்கு கனிவுடன் உதவி செய்யுங்கள். சார், இல்லையென்றால் நமக்கு உதவியதற்காக அவர் சிக்கலில் மாட்டிக் கொள்வார்’ என்று மார்ச் 28 அன்று சாரங், நிகில் ஆகியோருக்கு விஸ்வம் தகவல் அனுப்பி வைத்தார். மூன்று நாட்கள் கழித்து லட்சுமிநாராயணுக்கு ரூ.25 லட்சம் சுதர்சன் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் அனுப்பி வைத்தது. ‘சாரங், நிகில் ஆகியோர் பேருந்திற்காக அறுபது லட்சம் ரூபாய் ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதற்கான ஏற்பாட்டை செய்து கொடுத்தனர்’ என்று ஜிஐஏவின் இறுதி அறிக்கை குறிப்பிடுகிறது.

ஆனால் லட்சுமிநாராயண் அந்தக் கட்டத்தில் தன்னுடைய பொறுமையை முழுமையாக இழந்து விட்டார். சுதர்சன் ஹாஸ்பிட்டாலிட்டி தனது வாக்குறுதியை நிறைவேற்றாதது குறித்த விவரங்களுடன் ஏப்ரல் 10 அன்று இரவு அவர் விஸ்வத்திற்கு மின்னஞ்சலை அனுப்பியிருந்தார். அந்த மின்னஞ்சலில் ஐம்பது லட்சம் ரூபாய் உத்தரவாதம் தருவதாக உறுதியளித்திருந்ததையும், அந்த தொகையை விற்கப்பட்ட பேருந்திற்கான கூடுதல் கமிசன் தொகையாக 50000 ரூபாய் சேர்த்து தர வேண்டும் என்றும் விஸ்வம் குறிப்பிட்டிருந்தார். ‘ஸ்கேனியாவிடமிருந்து எதுவும் வரவில்லை’ என்று கூறி ஸ்கேனியா இந்தியா நிறுவனமும் தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறி விட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். லட்சுமிநாராயண் ‘அனைத்து நலன்களையும் கருத்தில் கொண்டு இந்த நாக்பூர் பேரம் ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு எவ்வாறு பலனளித்திருக்கிறது என்பது குறித்து என்னை நம்ப வையுங்கள். குறித்த நேரத்தில் பணம் செலுத்தப்பட்டிருந்தால் நாங்கள் இந்த கடிதத்தை எழுதியிருக்கவே மாட்டோம். உங்களுடைய கணக்கீடு வேறுமாதிரியாக இருக்கும் என்றால் அது குறித்து தயவுசெய்து என்னை நம்ப வையுங்கள். ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.   

லட்சுமிநாராயணின் மின்னஞ்சலைப் பெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக கடந்த மாத தொகையான 25 லட்சம் ரூபாயைத் தருவதற்கு தலையிட வேண்டுமென்று நிகிலுக்கு விஸ்வம் தகவல் அனுப்பியிருந்தார். ‘சார் தயவுசெய்து உதவி செய்யுங்கள். பேருந்திற்காக கடன் பெற்றிருப்பதால் லட்சுமிநாராயண் மிகுந்த பண நெருக்கடியில் இருக்கிறார்’ என்று விஸ்வம் திரும்ப ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். ஆனால் லட்சுமிநாராயணின் மின்னஞ்சலுக்கு வேறு தொனியில் ‘நீங்கள் செய்திருப்பவை அனைத்தும் முழு மனதுடன் செய்யப்பட்டவையாகும். எந்தவிதமான சந்தேகங்களுக்கும் எப்போது வேண்டுமென்றாலும் பதிலளிக்கப்படும். எந்த நிலையிலும் உங்களுக்கு சிரமம் ஏற்படாது என்றே நான் கருதுகிறேன்’ என்று விஸ்வம்  பதிலளித்திருந்தார்.   

ட்ராவல் டைம் கார் ரெண்டல் பிரைவேட் லிமிட்டெட் என்ற மற்றுமொரு நிறுவனத்திடமிருந்து ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனம் ஏப்ரல் 20 அன்று 12 லட்சம் ரூபாயும், ஏப்ரல் 24 அன்று மூன்று லட்சம் ரூபாயும் பெற்றுக் கொண்டது. பெங்களூரூவில் உள்ள ட்ரான்ஸ்ப்ரோ நிறுவனத்தைப் போல ட்ராவல் டைம் நிறுவனம் என்பது புனேவில் இருந்த ஸ்கேனியா பேருந்தின் முன்னாள் விற்பனையாளர் என்பது ஸ்கேனியாஏபி மேற்கொண்ட மற்றுமொரு உள்தணிக்கையிலிருந்து தெரிய வருகிறது. ‘லட்சுமிநாராயணைப் பொறுத்தவரை  செலுத்தப்பட்ட பணம் பேருந்திற்கான நிதியுதவி குறித்ததாக இருக்கிறது என்றாலும் ட்ரான்ஸ்ப்ரோ நிறுவனத்தின் கணக்கில் அது சேவைகளுக்காகச் செலுத்தப்பட்ட பணம் என்றே இருக்கிறது’ என்று ஜிஐஏவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘ட்ராவல் டைம் நிறுவனத்திடம் ட்ரான்ஸ்ப்ரோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பணம் குறித்து கேள்விகளை எழுப்பினோம். அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான விவேக் கல்கர் ‘தங்களுடைய தவறுகளில் ஸ்கேனியா நிறுவனம் எங்களுடைய பெயரை இழுத்து விட்டிருப்பது குறித்து நாங்கள் அதிர்ச்சியுற்றோம். நீங்கள் குறிப்பிட்டுள்ள எந்தவொரு அமைச்சருடன் எந்தவொரு தொடர்பும் எங்களுக்கு கிடையாது. அதுபோன்று எந்தவொரு பலனையும் நாங்கள் பெறவில்லை. எங்கள் பெயரைக் கெடுக்கும் வகையில் எங்கள் மீது சுமத்தப்படுகின்ற அவதூறான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நாங்கள் மறுக்கிறோம்’ என்று குறிப்பிட்டார். கார்ப்பரேட் விவாகார அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆவணங்கள் கல்கரின் இந்த கோபத்திற்கான விளக்கத்தைத் தருவதாக இருக்கின்றன. 

2017ஆம் ஆண்டு நிதியறிக்கையில் - மூன்று தவணைகளாக லட்சுமிநாராயணால் பெறப்பட்ட பணத்தைக் குறிப்பதாக உள்ள - அறுபது லட்சம் ரூபாய் சுதர்சன் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டதாக உள்ளது. அதேபோன்று ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2018ஆம் ஆண்டு நிதியறிக்கையில் சுதர்சன் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனத்திடமிருந்து வைப்புத் தொகையாக ரூ.75 லட்சம் பெறப்பட்டது என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. சுதர்சன் ஹாஸ்பிட்டிலாட்டி, டைம் ட்ராவல் நிறுவனங்களிடமிருந்து இணைந்து பெறப்பட்ட பணத்துடன் அது ஒத்துப் போகிறது. அவ்வாறு இருக்கும் போது, டைம் ட்ராவல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட பணம் சுதர்சன் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட வைப்புத் தொகையாக ஏன் பதிவு செய்யப்பட்டது?

லட்சுமிநாராயணின் கவலைகள் எவ்வாறு களையப்பட்டன என்று ஜிஐஏ அறிக்கை தெளிவுபடுத்தவில்லை என்றாலும் அவர் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்லவில்லை என்றே தோன்றுகிறது. லட்சுமிநாராயணுக்கு உதவுமாறு கட்கரி குடும்பத்தினரை மீண்டுமொரு முறை அணுக வேண்டிய கட்டாயம் விஸ்வத்திற்கு ஏற்பட்டது. 2017 டிசம்பர் 1 அன்று அவர் நிகிலுக்கு தகவல் அனுப்பினார். டிசம்பர் 15 வரை அனைத்து பணமும் செலுத்தப்பட்டு விட்டது என்று நிகில் அதற்கு பதிலனுப்பி இருந்தார். ஆனால் விஸ்வம் டிசம்பர் 26 அன்று மீண்டுமொரு முறை நிகிலுக்கு ‘விற்பனையாளர் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறார். போக்ஸ்வேகன் பைனான்ஸ் நிறுவனத்திற்குத் தர வேண்டிய மூன்று தவணைகள் இன்னும் செலுத்தப்படவில்லை. 2017 டிசம்பர் 15க்குள் பணம் அனைத்தையும் செலுத்த நீங்கள் கனிவுடன் ஏற்பாடு செய்ய வேண்டும். ட்ரான்ஸ்ப்ரோ மனரீதியாக, உடல்ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதால் சார் தயவுசெய்து இந்த விஷயத்தில் எனக்கு உதவுங்கள். சார் ப்ளீஸ் ப்ளீஸ் கனிவுடன் உதவி செய்யுங்கள்‘ என்று தகவல் அனுப்பினார்.    

இந்த வேண்டுகோள்கள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காக மாறியிருந்தன. 2017 நவம்பருக்குப் பிறகு எந்தவொரு தவணையையும் ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனம் செலுத்திடவில்லை. விளைவாக போக்ஸ்வேகன் பைனான்ஸ் நிறுவனம் அந்த கடன்களின் மீது ஸ்கேனியா இந்தியா நிறுவனம் அளித்திருந்த உத்தரவாதத்தின் பேரில் நடவடிக்கைகளை மேற்கொண்டது. கடன் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டவாறு ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனம் தவணைகளைச் செலுத்தவில்லை என்பதால் அதனை திரும்பச் செலுத்தப்படாத கடனாக வைத்திருப்பதாக போக்ஸ்வேகன் பைனான்ஸ் நிறுவனம் 2018 அக்டோபரில் ஸ்கேனியா இந்தியாவின் அதிகாரிக்கு எழுதியிருந்தது. போக்ஸ்வேகன் பைனான்ஸ் எழுதியிருந்த கடிதத்தில் ‘கடன் தொகையைத் திரும்பப் பெறுவதற்காக எடுத்துக் கொண்ட நீண்ட கால முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பதால் ஸ்கேனியா இந்தியா நிறுவனம் ரூ.22,195,991.55  - ஏறக்குறைய 2.21 கோடி ரூபாயைத் திரும்பச் செலுத்த வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. போக்ஸ்வேகன் பைனான்ஸ் நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய முழுத்தொகையையும் ஸ்கேனியா இந்தியா செலுத்தியதாக ஸ்கேனியாவின் பத்திரிகை மேலாளரும், அதன் மூத்த ஆலோசகருமான  ஹான்ஸ்-ஏகே டேனியல்சன் எங்களிடம் தெரிவித்தார். 

*

முறையே ஜெர்மனி மற்றும் இந்தியாவில் உள்ள ZDF மற்றும் கான்ஃப்ளூயன்ஸ் மீடியா ஆகிய அமைப்புகள் இணைந்து விசாரணை செய்து வெளியிட்ட எஸ்விடி அறிக்கைக்குப் பிறகு, கட்கரியின் சொந்த உபயோகத்திற்காக எந்தவொரு பேருந்தும் அனுப்பித் தரப்படவில்லை என்று ஸ்கேனியா செய்தி தொடர்பாளரைக் குறிப்பிட்டு செய்தியொன்றை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை வெளியிட்டது. ‘குறிப்பிட்ட அந்தப் பேருந்து 2016ஆம் ஆண்டு ஸ்கேனியா இந்தியா நிறுவனத்திடமிருந்து அந்த நிறுவனத்தின் தனியார் விற்பனையாளர் ஒருவரால் வாங்கப்பட்டு அவர்களுடைய வாடிக்கையாளர் ஒருவருக்கு (பேருந்து இயக்குகின்ற இந்திய நிறுவனம்) வழங்கப்பட்டது. பேருந்தின் தற்போதைய நிலைமை குறித்து என்னிடம் எந்தவொரு தகவலும் இல்லை’ என்று டேனியல்சன் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. கட்கரியின் மகன்களுடன் தொடர்புடைய எவரொருவருடனும்  (தனிநபர்/நிறுவனம்)  எந்தவொரு வணிக பேரமும் நடைபெறவில்லை என்று  டேனியல்சன் மறுத்ததாகவும் அந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.     

அந்த செய்தி இணையத்தில் வெளியான சில மணி நேரங்களுக்குள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை பெரும்பாலும் மேற்கோள் காட்டி எஸ்விடி அறிக்கையை மறுத்து நிதின் கட்கரியின் அலுவலகத்திலிருந்து மறுப்பு அறிக்கை ட்வீட் செய்யப்பட்டது. அவரது கூற்று குறித்து நாங்கள் டேனியல்சனிடம் கேள்வியெழுப்பினோம். தன்னுடைய அந்த நேரடி மேற்கோள் மிகவும் சரியானது என்று கூறிய அவர், ஆனால் டிரான்ஸ்ப்ரோவிலிருந்து பேருந்தை வாடகைக்கு எடுத்த பேருந்து நிறுவனம் அவருடைய நெருங்கிய உறவினரால் நடத்தப்படுவதை நீங்களும் நானும் நன்கு அறிவோம் என்பதால் இந்தியன் எக்ஸ்பிரஸின் விளக்கம் சற்றே தவறாக வழிநடத்துவதாகத் தோன்றுகிறது என்றார். ‘அமைச்சரின் மகன்களில் ஒருவர் பேருந்தை வாடகைக்கு எடுத்துள்ளார் என்ற எங்களால் நிறுவ முடிந்த உண்மையை இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள பதில் மறைக்க முயற்சிக்கிறது’ என்று கூறிய டேனியல்சன் ‘தன்னுடைய மகளின் திருமணத்தின் போது அந்தப் பேருந்தை அமைச்சர் தனது சொந்தப்  பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தியுள்ளார் என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் அந்த விருந்திற்கான போக்குவரத்தை கையாள்வதற்கென்று அமைச்சர் தனியாக பேருந்து நிறுவனம் ஒன்றை நியமித்திருந்தார் என்பதாக அவர்கள் தருகின்ற விளக்கம் இருக்கலாம்’ என்றார். அமைச்சர் அந்தப் பேருந்தைப் பரிசாகப் பெற்றார் என்பதை ஸ்கேனியாவால் நிரூபிக்க முடியவில்லை என்பதையும் டேனியல்சன் தெளிவுபடுத்தினார்.   


2017ஆம் ஆண்டு மத்திய போக்குவரத்து அமைச்சர் ஸ்வீடனுக்கு சென்ற போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஸ்கேனியா ஏபி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹென்ரிக் ஹென்ரிக்சன் (இடது) மற்றும் அவருக்கு அடுத்து தலைமை நிர்வாக அதிகாரியான கிறிஸ்டியன் லெவின் (வலது) ஆகியோருடன்

அமைச்சருக்கு பேருந்துடன் இருந்த தொடர்பு குறித்து ஸ்கேனியாவைச் சேர்ந்த டேனியல்சன் மட்டும் பேசவில்லை. 2021 பிப்ரவரி 26 அன்று எஸ்விடி அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பு, ஸ்கேனியாவின் தலைமை நிர்வாக அதிகாரியான ஹென்ரிக் ஹென்ரிக்சன் ஸ்வீடன் அரசு தொலைக்காட்சிக்கு அளித்த வீடியோ நேர்காணலில் உள்தணிக்கை முடிவுகளை மீண்டும் வலியுறுத்தியிருந்தார். ‘இது போன்றதொரு ஒப்பந்தம் ஒருபோதும் செய்யப்பட்டதில்லை’ என்று ஹென்ரிக்சன் கூறினார்.  ‘அந்த ஒப்பந்தத்தின் மூலம் நாங்கள் தனியார் விற்பனையாளர் ஒருவருக்கு அந்தப் பேருந்தை விற்றோம். அதற்குப் பின்னர் அவர்கள் இந்திய  அமைச்சருடன் தனிப்பட்ட, குடும்ப தொடர்புகள் கொண்டதொரு போக்குவரத்து நிறுவனத்திடம் விற்றனர்’ என்று கூறிய ஹென்ரிக்சன் தொடர்ந்து ‘எங்கள் அமைப்பு அதைக் கண்டறிந்து எச்சரிக்கை மணிகள் மூலம் எங்களுக்கு சமிக்ஞை அளித்திருக்க வேண்டும். ஆனால் இந்த பரிவர்த்தனை நடந்து முடிந்ததாக காட்டிக் கொள்ள விரும்பாத இந்தியாவின் மூத்த ஸ்கேனியா ஊழியர்களால் இந்த அமைப்பு புறக்கணிக்கப்பட்டதால் அவர்கள் அவ்வாறு செய்திடவில்லை’ என்றார்.

பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட ஸ்கேனியா இந்தியா நிறுவன அதிகாரிகளின் மீது குற்றம் சுமத்த முயன்ற ஹென்ரிக்சன் ‘அமைத்துக் கொண்ட எங்களுடைய விதிகளை அவர்கள் தவிர்த்தனர். முறையான ஆவணங்களைக் காணவில்லை. அது குறித்து எங்களிடம் தெரிவிப்பதை அவர்கள் தவிர்க்க முயன்றனர்’ என்று கூறினார். இந்த பரிவர்த்தனைகள் குறித்து அறிந்தவுடன் குற்றவாளிகளாகக் கருதப்படுபவர்களை வேலையிலிருந்து நிறுத்தி விட்டு, பெங்களூரூவிற்கு அருகில் நரசபுராவில் இருந்த தன்னுடைய பேருந்து உற்பத்திப் பிரிவை ஸ்வீடனில் உள்ள ஸ்கேனியாஏபி நிறுவனம் மூடிவிட்டது என்றார்.    

ஆனால் உண்மை சற்று வித்தியாசமாக இருப்பதாகத் தோன்றுகிறது. ஸ்கேனியா இந்தியாவின் நரசபுரா தொழிற்சாலை 2018 ஜூன் மாதம் மூடப்பட்டது, குறைந்த தேவை, மோசமான விற்பனையின் விளைவாக அந்தத் தொழிற்சாலை மூடப்பட்டதாக அந்தக் காலகட்டத்தில் வெளியான ஊடக அறிக்கைகள் இருந்தன. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் ‘பிரீமியம் பேருந்திற்கான தேவை இந்தியாவில் இல்லாததால், தனது பேருந்து உற்பத்தி வணிகத்தை ஸ்கேனியா நிறுவனம் மறுசீரமைத்து வருகிறது. எனவே நரசபுரா வளாகத்தில் உள்ள பேருந்து கூடுகளுக்கான உள்நாட்டு உற்பத்தியை மூட வேண்டிய கட்டாயத்தில் நிறுவனம் உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தங்களுடைய பெயர்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத - இந்தியாவில் ஏற்கனவே செயல்பட்டு வந்த ஸ்கேனியா பேருந்துகளுக்கான இரண்டு முன்னாள் முகவர்கள் பேருந்து விற்பனை மிகவும் மோசமாக இருந்ததாலேயே தொழிற்சாலை மூடப்பட்டதாக எங்களிடம் கூறினர்.   

தவறு செய்த அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை குறித்து ஹென்ரிக்சன் கூறியிருப்பவை குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஜிஐஏவின் கண்டுபிடிப்புகள் முடிவடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக 2018 மார்ச் மாதம் ஸ்கேனியா இந்தியா நிறுவனத்தின் முன்னாள் விற்பனை இயக்குனரான விஸ்வம் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறினார். விஸ்வத்தின் லிங்கெடின் சுயவிவரத்தில் ஸ்கேனியாவுடன் பேருந்து கோச்சுகளைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த எம்.ஜி குழுமத்தில் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியாக 2018 மார்ச் மாதம் அவர் சேர்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்குப் பின்னர் அவர் அங்கேயே பணியாற்றி வருகிறார். விஸ்வம் வேலையிலிருந்து நீக்கப்படவில்லை என்றும், மிகப் பெரிய பணத்தொகுப்புடன் அவர் ராஜினாமா செய்தார் என்றும் முன்னாள் ஸ்கேனியா ஊழியர்கள் இருவர் எங்களிடம் கூறினர்.

விஸ்வத்தை தொடர்பு கொள்ள நாங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டோம். அவர் எங்களை நேரில் சந்திக்க மறுத்துவிட்டார். தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே தான் ஸ்கேனியாவை விட்டு வெளியேறி விட்டதாகவும், அந்த விஷயம் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் கூறினார். பல முறை அனுப்பப்பட்ட விரிவான கேள்வித்தாள்களுக்கு அவர் பதிலளிக்கவே இல்லை.

பெங்களூருவில் நாங்கள் லட்சுமிநாராயணனைச் சந்தித்தோம். ஆனால் அவர் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார். அவர் எங்களிடம் கர்நாடகாவில் தனது வணிகத்தை நிறுத்தி விட்ட ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனம் தன்னுடைய தொழிற்சாலையை ஸ்கேனியாவிடம் ஒப்படைத்து விட்டதாக கூறினார். முந்தைய கட்டுரைக்காக இந்த மாத தொடக்கத்தில் பெங்களூரில் உள்ள ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸின் பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரிக்கு கேரவனின் நிருபர் சென்ற போது, ​​ஸ்கேனியா அலுவலகம் அந்த இடத்தில்தான் இருந்தது.   

நேர்காணலுக்கான அனுமதி கேட்டு விரிவான கேள்விகளுடன் அனுப்பப்பட்ட நான்கு மின்னஞ்சல்களுக்கு நிதின் கட்கரியும், சாலை போக்குவரத்து அமைச்சகத்தில் உள்ள அவரது தனிப்பட்ட செயலாளர்களும் பதிலளிக்கவில்லை. கடிதத்தை அமைச்சருக்கு அனுப்ப வேண்டுமென்று ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகினோம். ஆனால் அந்த வழியிலும் எங்களுக்கு எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. சாரங் கட்கரி, நிகில் கட்கரிக்கு அனுப்பப்பட்ட விரிவான கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படவில்லை. 

*

அந்தப் பேருந்து தற்போது எங்கே இருக்கிறது என்று தெளிவாகத் தெரியவில்லை. சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் வாகன் என்ற டிஜிட்டல் தரவுத்தளத்தின் மூலம் பெறக்கூடியதாக இருக்கின்ற பேருந்தின் பதிவு சான்றிதழில் அதன் உரிமையாளர் என்று ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ், சுதர்சன் ஹாஸ்பிட்டாலிட்டி ஆகிய நிறுவனங்கள் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திடம் தாக்கல் செய்துள்ள ஆவணங்களில் போக்ஸ்வேகன் பைனான்ஸ் நிறுவனம் அந்தப் பேருந்தைக் கையகப்படுத்திக் கொண்டதைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பேருந்து இனி அந்த நிறுவனத்தின் சொத்து அல்ல என்பதை 2020 நிதியாண்டிற்கான சுதர்சன் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்தின் பற்றுவரவு அறிக்கை குறிப்பிட்டுக் காட்டுகிறது. 2020 மார்ச் 31 உடன் முடிவடைந்த நிதியாண்டில் கடனைத் திருப்பிச் செலுத்த தவறியதால் நிதி நிறுவனத்தால் அந்தப் பேருந்து கையகப்படுத்தப்பட்டது என்று அந்த ஆண்டின் தணிக்கையாளர் அறிக்கை குறிப்பிடுகிறது. அதே ஆண்டு ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் தாக்கல் செய்திருந்த தணிக்கை அறிக்கையில் தனது வங்கி, நிதி நிறுவனம் ஆகியவற்றிற்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை நிறுவனம் திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டதால் போக்ஸ்வேகன் பைனான்ஸ் நிறுவனம் அந்தப் பேருந்தைக் கையகப்படுத்திக் கொண்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிதியறிக்கையில் போக்ஸ்வேகன் ஃபைனான்ஸிடம் பெற்றுக் கொண்ட மூன்று கடன்கள் குறித்த பதிவுகளுக்கு எதிராக ‘வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு கடன் தீர்த்துக் கொள்ளப்பட்டது’ என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.  

ஜெர்மனியை தளமாகக் கொண்ட போக்ஸ்வேகன் பைனான்சியல் சர்வீசஸ் ஏஜி நிறுவனத்தின் இந்தியப் பிரிவான போக்ஸ்வேகன் பைனான்ஸ் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் பேருந்தின் தற்போதைய இருப்பிடம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை. அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் அந்த பேரத்தில் கட்கரி குடும்பத்தினரின் பங்கு குறித்து தனக்குத் தெரியாது என்று தெரிவித்தார். அந்த நிறுவனம் 2019 மார்ச் மாதம் பேருந்தைக் கையகப்படுத்திக் கொண்டதாக கூறியிருந்த போதிலும், அது குறித்த கேள்விகளுடன் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டபோது ​​போக்ஸ்வேகன் பைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் பதிலளித்திடவில்லை.

மறுபுறத்தில் அந்தக் கேள்விக்கு கிட்டத்தட்ட முரண்பட்ட பதில்களை டேனியல்சன் வழங்கினார். மின்னஞ்சல் மூலம் அனுப்பிய பதிலில், சுதர்ஷன் ஹாஸ்பிட்டிலாட்டி, ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் தாக்கல் செய்திருந்த 2020 நிதியாண்டு நிதிநிலை அறிக்கைகளில் உறுதிப்படுத்தப்பட்டவாறு அந்தப் பேருந்து 2019ஆம் ஆண்டு அக்டோபரில் நிதி நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது என்று அவர் கூறியிருந்தார். 2019 மார்ச் மாதம் பேருந்து கையகப்படுத்தப்பட்டது என்ற கூற்று குறித்து விளக்கம் கோரிய  கேள்விகளுக்கு போக்ஸ்வேகன் பைனான்ஸ் நிறுவனம் பதிலளிக்கவில்லை.

மற்றொரு மின்னஞ்சலில் அவர் அந்தப் பேருந்தை டிரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனம் நாக்பூரைச் சேர்ந்த மற்றொரு தனியார் நிறுவனமான அயோத்தி காமர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் விற்றிருக்கலாம் அல்லது அந்த நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார். ‘அமைச்சருடன் தொடர்புடைய நிறுவனம்’ என்று கூறியிருந்த டேனியல்சன் அந்த தொடர்பு குறித்து விளக்குமாறு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களுக்கு பதிலேதும் அளிக்கவில்லை.


அந்தப் பேருந்து அயோத்தியா காமர்ஸ் நிறுவனத்திடம் விற்கப்பட்டிருப்பதை  போக்ஸ்வேகன் பைனான்ஸ் நிறுவனம் ஸ்கேனியாவுக்கு வழங்கிய ஆவணங்கள்  குறித்துக் காட்டுகின்றன என்றாலும் அதற்கான விற்பனை ஒப்பந்தம் எதுவும் இல்லை என்று டேனியல்சன் கூறினார். மேலும் போக்ஸ்வேகன் பைனான்ஸ் நிறுவனம் 2019 அக்டோபரில் பேருந்து விற்கப்பட்டதாக கூறியதால் அது குறித்து எதையும் ஜிஐஏ அறிக்கை குறிப்பிடப்பட்டிருக்காது என்று அவர் தெரிவித்தார். அதற்கான ஆதாரங்களை எங்களால் காண முடியவில்லை என்பதை அவர் வலியுறுத்திக் கூறினார். மற்றொரு மின்னஞ்சலில் டேனியல்சன் இன்னும் அந்தப் பேருந்தின் உரிமையாளராக ட்ரான்ஸ்ப்ரோ மோட்டார்ஸ் நிறுவனம் இருப்பதால், அந்தப் பேருந்தை அவர்களிடமிருந்து அயோத்தியா காமர்ஸ் நிறுவனம் வாடகைக்கு எடுத்திருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகின்றது என்று குறிப்பிட்டிருந்தார்.     

இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அயோத்தியா காமர்ஸ் நிறுவனம் பதிலளிக்கவில்லை.

இந்த கட்டுரையைத் தயாரிக்க 

ஸ்வீடன் அரசு தொலைக்காட்சியான எஸ்விடி உதவியது.

https://caravanmagazine.in/politics/scania-audit-exposes-key-role-gadkari-sons-luxury-bus-deal?fbclid=IwAR0beYgFz80Xeq79lPWL7N_NeryxXkgzRbg5ilXzjhLO5mJLclEqa-pfBr0


 


 

 

Comments