பொதுமுடக்கம் மட்டுமே இந்தக் கொடூரமான கொரோனா இரண்டாவது அலைக்கு எதிராகப் போராடுவதற்கு நம்மிடமிருக்கின்ற உத்தியாகும்

 அருண்குமார்

வயர் இணைய இதழ்


 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் கான்பூரில் உள்ள எல்எல்ஆர் மருத்துவமனைக்கு வெளியே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்காக  2021 ஏப்ரல் 24 சனிக்கிழமையன்று காத்திருக்கின்ற கோவிட் -19 நோயாளி. புகைப்படம்: பி.டி.ஐ.


தேசத்திற்கு ஆற்றிய தன்னுடைய சமீபத்திய உரையில் கோவிட்-19 தாக்கம் பற்றி  புயல் குறித்த சித்திரத்தைப் பயன்படுத்தியிருந்த பிரதமர் மோடி நோயாளிகளின் எண்ணிக்கை அச்சுறுத்தும் வகையிலே அதிகரித்திருப்பதால் இந்தியா மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒப்புக் கொண்டிருந்தார். நாடு முழுவதிலும் இருந்து மருத்துவமனை படுக்கைகள், ஆக்சிஜன் மற்றும் இன்னும் பல காரணங்களால் மக்கள் இறந்து போவது பற்றிய திகில் கதைகள் வந்து கொண்டே இருக்கின்றன - உண்மையில் தேசம் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறது. சுகாதார உள்கட்டமைப்பு முழுமையாகச் சரிந்து போய் விட்டது. இதுபோன்ற செய்திகள் சிறிய நகரங்கள், கிராமங்களைக் காட்டிலும் மருத்துவ ரீதியாக மிகச் சிறந்து விளங்குகின்ற மெட்ரோ நகரங்களிலிருந்து வருகின்றவையாக இருப்பதால், நாட்டின் உள்ளார்ந்த பகுதிகளில் நிலைமை எவ்வாறிருக்கும் என்பது நமது கற்பனைக்கு எட்டாததாகவே இருக்கிறது.  

திடீரென்று செயல்படும் அரசாங்கம்

நாட்டின் சில பகுதிகளில் மார்ச் மாத நடுவிலிருந்தே தொற்றுநோய் அதிகரித்துக் கொண்டிருந்த போதிலும் ஏப்ரல் மாதத்தில்தான் மத்திய அரசும், பல மாநில அரசுகளும் செயல்படத் தொடங்கின. சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு முக்கிய நகரங்களில் விதிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு பின்னர் பொதுமுடக்கமாக மாற்றி அமைக்கப்பட்டது.  ஆனாலும் அவை ஊரடங்கு என்றே அழைக்கப்பட்டன. பயணிகள் குறிப்பாக மகாகும்பமேளாவிலிருந்து திரும்பி வந்தவர்கள் மாநிலங்களுக்குள்ளும், நகரங்களுக்குள்ளும் நுழைய அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.    

தடுப்பூசி திட்டம் சரிவர நடக்கவில்லை என்பதை உணர்ந்து கொண்ட மத்திய அரசு இப்போது பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட முடிவு செய்துள்ளது. தடுப்பூசிகள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில் அதிக அளவு தடுப்பூசிகளுக்கான ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு முன்கூட்டியே பணத்தைச் செலுத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தங்களுடைய உற்பத்தியை அதிகரித்துக் கொள்ள முடியும். முன்னேறிய நாடுகளில் ஏற்கனவே ஒப்புதல் பெறப்பட்டிருக்கும் பிற தடுப்பூசிகளை அவசரகாலப் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதியைத் தரத் தயாராக இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கோவிட்-19 சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்ற ரெம்டெசிவிர் என்ற மருந்து குறைவான அலவிலேயே விநியோகத்தில் இருப்பதால், அதன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக ஆக்சிஜன் கிடைப்பதை அதிகரிக்கின்ற வகையில் மிகக்குறைவான அத்தியாவசிய நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுகின்ற ஆக்சிஜன் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை படுக்கைகள் கிடைப்பதை அதிகரிக்கின்ற வகையில் மருத்துவமனைகள் முற்றிலும் கோவிட்-19 மருத்துவமனைகளாக மாற்றப்படுகின்றன. ஹோட்டல்கள், விளையாட்டு அரங்கங்கள், திறந்த வெளிகள், பெரிய பணிமனைகள் போன்றவை மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இதுபோன்ற செயல்பாடுகளை  அதிகரித்திருப்பது தேவைக்கு குறைவானதாக, தாமதமான நடவடிக்கையாக இருக்கிறதா? தான் அக்கறை காட்டுவதை மக்களிடம் காட்டிக் கொள்வதற்காக மட்டுமே எடுக்கப்பட்ட எதிர்வினையாக அரசாங்கத்தின் இந்த உடனடி நடவடிக்கைகள் இருக்கின்றனவா? இதுபோன்ற நடவடிக்கைகளால் அவர்களால் அதிகரித்து வருகின்ற நோயைச் சரிசெய்ய முடியுமா?   

மார்ச் மாதத்திலிருந்தே இந்த நோய் அதிகரித்து வருவது தெளிவாகத் தெரிந்தது. பிப்ரவரி மாத நடுவில் புதிய நோயாளிகள் தினமும் 8,000 என்ற அளவிலே  இருந்தனர். அந்த எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதிக்குள் 23,000 ஆக அதிகரித்தது. மார்ச் 20 அன்று 44,000 ஆகவும், மார்ச் 30 அன்று 53,500 ஆகவும், ஏப்ரல் 10 அன்று 1,53,000 ஆகவும், ஏப்ரல் 20 அன்று 2,95,000 என்ற அளவிலும் அது அதிகரித்துக் கொண்டே சென்றது. மகாராஷ்டிராவிலும், வேறு சில மாநிலங்களிலும் தொடங்கிய தொற்று மிகவிரைவாக நாடு முழுவதிலும் பரவியது. இரண்டாவது அலை என்பது தவிர்க்க முடியாதது என்பதாகவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் அனுபவம் என்றிருந்த நிலையில், இங்கே  மார்ச் மாதத்திலேயே எச்சரிக்கை மணிகள் ஒலிக்க விடப்பட்டு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். அந்த நாடுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதற்குப் பதிலாக, முன்னேறிய நாடுகளை விட மிகவும் சிறப்பாக இந்த நோயை நிர்வகித்து வந்துள்ளோம் என்று மட்டுமே நாம் கூறி வந்திருக்கிறோம்.    

இரண்டு மாதங்களுக்கும் மேலாக நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் சோதனை மற்றும் தொடர்பு தடமறிதல் போன்ற செயல்பாடுகள் போதிய அளவிலே இருக்கவில்லை. ஆதலால் நோய்த்தொற்று பரவுவதை தடுத்து நிறுத்துவது கடினமாகிப் போனது. இப்போது சமூகப்பரவல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சில நாட்களாகவே புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருக்கின்றனர். அவர்களில் பலரும் ஹோலி பண்டிகைக்காக மார்ச் மாத இறுதியில் தங்களுடைய ஊர்களுக்குத் திரும்பிச் சென்றிருந்தனர். மற்றவர்கள் மகா கும்பமேளாவிற்காகச் சென்று திரும்பியுள்ளனர் அல்லது அங்கிருந்து திரும்பி வர உள்ளனர். இவர்கள் அனைவரையும் சோதித்து அவர்களைத் தனிமைப்படுத்துவது நம்முடைய திறனுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும்.  இதற்கிடையே சோதனை செய்து கொண்டதற்கான போலிச் சான்றிதழ்களும் கிடைக்கின்றன.   

சிறிய நகரங்கள், கிராமங்களில் நோய்வாய்ப்பட்டுள்ள ஏராளமானவர்களுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை என்ற தகவல்கள் இப்போது கிடைக்கின்றன. மருத்துவமனைகள், தகனம் செய்வது மற்றும் புதைப்பதற்கான இடங்கள் நிரம்பி வழிகின்றன. பெரிய நகரங்களால்கூட திடீரென்று அதிகரித்து வருகின்ற புதிய நோயாளிகளைச் சமாளிக்க முடியவில்லை. பலரும் ஆக்சிஜன், மருந்துகள் கிடைக்காததால் இறந்து கொண்டிருக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கவில்லை என்றாலும், அதிக அளவில்  பயன்படுத்தப்படுகின்ற ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நோய்ப்பரவலுக்கு வழி வகுக்கலாம் என்பதால் மகாகும்பமேளா நிறுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் தேர்தல் பேரணிகள் குறைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கடந்த இரண்டு மாதங்களில் மிகப் பெரிய அளவிலே சேதம் ஏற்பட்டு விட்டது. நாடு முழுவதும் பரவியுள்ள இந்த நோய் இன்னும் பல வாரங்களுக்குத் தொடர்ந்து பெருகும். நாம் கண்டிருக்கின்ற பல மரணங்கள் தடுத்திருக்கக் கூடியவையாகவே இருக்கின்றன.  

நமக்குள்ள வாய்ப்புகள்

கடந்த ஆண்டு ஏற்பட்ட முதல் அலையின் போது ஐந்து சதவீத நோயாளிகள் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதும், ஒரு சதவீதம் பேர் இறந்து போவதும் கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்களைக் கொண்டு பார்த்தால் பதினைந்து சதவீத நோயாளிகளுக்கு மருத்துவக் கவனிப்பு தேவைப்படலாம். எண்பது சதவீதம் பேர் நோய் அறிகுறியற்றவர்களாக இருப்பதால் நோய் பரவாமல் கவனமாக இருப்பதைத் தவிர அவர்களுக்கென்று சிறப்பு மருத்துவக் கவனிப்பு எதுவும் தேவைப்படாது. ஆனால் இந்த சதவீதங்கள் எதைக் குறிக்கின்றன என்பதே இப்போது நம்முன் இருக்கின்ற மிகப்பெரிய கேள்வியாகும். ஒரு லட்சம் நோயாளிகள் இருந்தால், அவர்களில் 20,000 பேருக்கு மருத்துவ உதவி தேவைப்படும். ஆனால் அதுவே பத்து லட்சம் பேர் நோயாளிகளாக இருக்கும் போது இரண்டு லட்சம் பேருக்கு பல்வேறு வகையான மருத்துவக் கவனிப்பு தேவைப்படும். இருக்கின்ற சுகாதார உள்கட்டமைப்பைக் கொண்டு இருபதாயிரம் பேரைச் சமாளிக்க முடியும் என்றாலும் நிச்சயம் இரண்டு லட்சம் பேரைச் சமாளிக்க முடியாது.

தற்போது நாளொன்றிற்கு சுமார் மூன்று லட்சம் புதிய நோயாளிகள் உருவாகின்றனர். மிகவிரைவில் இது ஐந்து லட்சமாக உயரக்கூடும் என்று கணித மாதிரிகளின் அடிப்படையில் சில வல்லுநர்கள் கணித்துள்ளனர். தற்போதைய போக்குகளை நீட்டித்துப் பார்க்கும் போது வீரியமுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை இருபது லட்சத்திலிருந்து விரைவில் ஐம்பது லட்சம் என்பதாக அதிகரிக்கக்கூடும் என்று கணிக்கப்படுகிறது. இவ்வாறு அதிகரிப்பது நமது சுகாதார அமைப்பின் பேரழிவிற்கே வழிவகுக்கும். ஒரு மாதத்திற்கு முன்பாகவே நாம் செயல்பட்டிருக்க வேண்டும்.   

இந்தியா இப்போது என்ன செய்ய வேண்டும்? நோய் பரவுவதை விரைவாகத் தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால் இந்த நோயைச் சுமந்து கொண்டிருந்தவர்கள் கடந்த பல மாதங்களில் ஏற்கனவே நாடு முழுவதும் பரவி, தொற்றுநோய்  விரைந்து அதிகரிப்பதற்கான வழியை வகுத்துக் கொடுத்திருக்கின்றனர். தொடர்பு தடமறிதல் நடவடிக்கைக்கு கோடிக்கணக்கான மக்களைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதால் அந்த நடவடிக்கை இப்போதைக்கு சாத்தியமற்றதாகவே இருக்கிறது.

சிகிச்சைக்கான மருந்து கிடைத்திருந்தால் அது நிச்சயம் உதவியிருக்கும் என்றாலும் அப்படி எதுவும் கிடைத்திருக்கவில்லை என்பதே உண்மை. சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு கூடுதல் காலம் தேவைப்படும். அதை மிகவிரைவாகச்  செய்து முடித்தாலும்கூட, பல பணிகளுக்குத் தேவையான மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறையுடன் இருப்பதால் - நோயாளிகளைக் கவனித்துக் கொள்வது, அலுவலக வேலைகளைச் செய்வது, மிகப் பெரிய அளவிலே மக்களுக்கு தடுப்பூசி போடுவது ஆகியவற்றிற்குத் தேவையான வசதிகளை யார் ஏற்படுத்தித் தருவது? மருத்துவப் பணியாளர்களில் பலரும் நோய்வாய்ப்பட்டுள்ளனர் அல்லது தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.  

எனவே நோயின் பரவலைக் குறைப்பதற்கும், அதன் பரவலைத் தடுத்து நிறுத்துவதற்கும் நம் முன்பாக தடுப்பூசிகள், பொதுமுடக்கம் என்று இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இப்போது உள்ளன. 

வீரியம் மிக்க புதிய வைரஸ் பிறழ்வுகள்

இந்த தொற்றுநோய் பிப்ரவரி நடுவிலிருந்து வேகமாகப் பரவி வருவதற்கான சரியான காரணம் அறியப்படவில்லை. 2020ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் முதல் மக்கள் நமது நாட்டிற்குள் நுழைவதைத் தடுத்து நிறுத்தினோம். அந்த நேரத்தில் வீரியமுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 100 என்ற அளவிலேயே இருந்தது. ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரியில் தினசரி உருவாகின்ற புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 10,000 என்று இருந்தது. 2020 நவம்பர் முதல் வெளிநாடுகளில் குறைந்தது மூன்று புதிய வீரிய வைரஸ் பிறழ்வுகள் பதிவாகியுள்ளன. போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால் இந்த வைரஸ் பிறழ்வுகள் இந்தியாவிற்குள்ளும் நுழைந்து விட்டன. நம்மிடம் போதுமான மரபணு சோதனை வசதிகள் இல்லாததால் இப்போது இந்தியாவில் அந்த வைரஸ் பிறழ்வுகள்தான் நோயைப் பரப்பி வருகின்றனவா என்பது பற்றி நம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள இயலவில்லை.  

கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற புதுதில்லியில் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் 2021 ஏப்ரல் 24 சனிக்கிழமையன்று ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டனர். 

புகைப்படம்: PTI / கமல் கிஷோர்

 

இரட்டைப் பிறழ்வு வைரஸ் எனப்படும் புதிய இந்திய வைரஸ் பிறழ்வு இந்தியாவில் பரவிக் கொண்டிருப்பதாக ஊகிக்கப்படுகிறது என்றாலும் போதுமான மரபணு சோதனைகள் எதுவும் இல்லாமல் அதைச் சொல்வது மிகவும் கடினம். ஆக நாம் எவ்வாறு நம்மைத் தயார்படுத்திக் கொள்வது?


வைரஸில் ஏற்பட்டுள்ள இந்தப் பிறழ்வுகள் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை முற்றிலும் பயனற்றவையாக மாற்றி விடக்கூடாது என்றும் தற்போதைய தடுப்பூசிகள் புதிய வைரஸ் வகைகளுக்கு எதிராகச் சிறிதளவு பாதுகாப்பை வழங்கும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அதனுடைய அறிக்கையில் இருக்கின்ற தயக்கம் புதிய வைரஸ் வகைகள் தற்போதைய தடுப்பூசிகள் உருவாக்கிடும் ஆன்டிபாடிகளைத் தவிர்த்து விடக்கூடும் என்ற சந்தேகத்தின் விளைவாக ஏற்பட்டதாகவே இருக்கின்றது. மேலும் பெரும்பாலான தடுப்பூசி போடப்பட்டாலும் மிகவும் லேசான வடிவத்தில் சிலருக்கு இந்த நோய் வரும் என்றே தடுப்பூசிகள் 60 முதல் 90% செயல்திறனைக் கொண்டவையாக இருக்கின்றன என்று கூறுவதன் உட்கருத்து இருக்கிறது. எனவே இப்போது கிடைக்கக்கூடிய தடுப்பூசிகளால் உருவாக்கப்படுகின்ற ஆன்டிபாடிகளை புதிய வைரஸ் வகைகள் தவிர்த்து விடும் என்பது உண்மையானால், இப்போது இருக்கின்ற தடுப்பூசிகளின் செயல்திறன் மேலும் குறையவே செய்யும்.   


மிகவும் தவறாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் தடுப்பூசி உத்தி

தடுப்பூசிகள் நோய்த்தொற்று பரவும் வேகத்தைக் குறைப்பதற்கான சிறந்த கருவியாகவே இருந்தாலும், அந்த தடுப்பூசிகளைப் போடுவதற்கான நமது வேகம் மிகவும் பரிதாபகரமான நிலையிலேயே இருந்து வருகிறது. ‘நோய்த்தொற்றின் வேகத்தைக் குறைப்பதற்கு மக்கள்தொகையில் குறைந்தது 70% பேர் நோயெதிர்ப்பு ஆற்றல் கொண்டவர்களாக இருக்க வேண்டும்’ என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக இணையதளம் கூறுகிறது. கடந்த ஆண்டு 60% மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மக்களிடையே `கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி’ இருக்கும் என்று கூறப்பட்டது. 60% என்ற குறைந்த எண்ணிக்கையை அடைவதை நோக்கி நாம் செல்வதானால், 84 கோடிப் பேருக்கு இரண்டு தடவை போட்டுக் கொள்ளும் அளவிற்கான தடுப்பூசி நமக்குத் தேவைப்படும். அதாவது 168 கோடி டோஸ் தடுப்பூசி நமக்குத் தேவைப்படும். இந்த அளவு தடுப்பூசி 12 மாதங்களுக்குள் போடப்பட வேண்டுமானால், ஒவ்வொரு மாதமும் 14 கோடி டோஸ் தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.  


ஒரு கோடி முன்களப் பணியாளர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களுக்கு பிப்ரவரி இறுதிக்குள் தடுப்பூசி போடுகின்ற இலக்குடன் நாம் தடுப்பூசி இயக்கத்தைத் தொடங்கினோம். அதற்கடுத்து 2021 ஜூலைக்குள் முதியவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் கொண்டவர்கள் என்று 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டியிருந்தது. ஆறு மாதங்களில் 31 கோடி பேருக்கு தடுப்பூசி என்ற எண்ணிக்கை வருகிறது. இந்த விகிதத்தில் 60% மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு பதினைந்து மாதங்கள் ஆகிவிடும். தடுப்பூசியால் பெறப்படுகின்ற நோயெதிர்ப்பு ஆற்றல் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பது நமக்குத் தெரியாது என்பதால், வைரஸ் பிறழ்வுகள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு பூஸ்டர் தேவைப்படும் என்பதையும் கணக்கில் கொண்டால் கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி என்ற ஒன்று நம்மிடையே தோன்றவே முடியாது.



மக்களிடையே இருக்கின்ற ‘தடுப்பூசி தயக்கத்தால்’ தடுப்பூசி இயக்கம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களைச் சுற்றி கொடிய வைரஸ் எதுவும் இல்லை என்று மக்களில் பலரும் நினைக்கிறார்கள் அல்லது தடுப்பூசி கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மக்களின் இதுபோன்ற எண்ணங்கள் தடுப்பூசி இயக்கத்தின் வேகத்தை குறைத்துள்ளன. முன்களப் பணியாளர்களில் பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வரவில்லை. அவ்வாறே இரண்டாம் கட்டத்திலும் தடுப்பூசி பெறவிருந்த பலரும் அதற்கு முன்வரவில்லை. எனவே முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசி இயக்கம் இரண்டுமே மிக மெதுவாகவே நடந்தன. மூன்று மாதங்களில் 12 கோடி பேருக்கு மட்டுமே குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி கிடைத்துள்ளது. இந்த விகிதத்தில் 60% மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு சுமார் மூன்றரை ஆண்டு காலம் ஆகும்.   

சுருக்கமாகச் சொல்வதென்றால் நாம் விரைவில் கூட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அடையப் போவதில்லை. அடுத்த சில மாதங்களுக்குள்ளும் நம்மால் அதை நிச்சயமாக அடைந்து விட முடியாது. ஆக இந்த தடுப்பூசிகள் நோய் பரவுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்தப் போவதில்லை. அவற்றை ஓர் இடைக்கால உத்தியாக மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.   

புதிய உத்தி: குழப்பத்தை ஏற்படுத்துகின்ற செய்முறை

தடுப்பூசிக்கான திட்டத்திற்கு போதுமான அளவு ஏற்பாடுகள் இல்லை என்று அரசாங்கத்தின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு, தடுப்பூசி அனைவருக்கும் போடப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அந்தக் கோரிக்கையை இப்போது அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. தடுப்பூசி போடுவதை தனியார் துறையினருக்கும் திறந்து விட்டுள்ளது. நிறுவனங்கள் பணத்தைச் செலுத்தி தங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

நோய் அதிகரிப்பைச் சமாளிக்கும் வகையில் செயல்படுத்தத்தக்க உத்தியாக இது இருக்குமா என்றால் உண்மையில் அவ்வாறு இருக்காது. திடீரென்று மக்கள் அனைவருக்கும் அல்லது 60% மக்களுக்கு தடுப்பூசி போட்டு விட முடியாது. ஒரு மாதத்தில் ஐந்து கோடி நபர்களுக்கு மட்டுமே நாம் தடுப்பூசி போட்டிருக்கிறோம். போதிய அளவிலான தடுப்பூசிகளோ, ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களில் 168 கோடி டோஸ் தடுப்பூசிகளைப் போடுவதற்கான வசதிகளோ நம்மிடம் இல்லை.    

தடுப்பூசிகள் மற்றும் அவற்றைப் போடுவதற்கான வசதிகளுக்கு பற்றாக்குறை இருந்து வரும் நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது என்ற நிலைப்பாடு குழப்பத்திற்கே வழிவகுக்கும். நிச்சயம் முன்னுரிமையுடனான ஒரு வரிசை இருக்க வேண்டும். அது போன்று முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்றால்  தற்போது ரெம்டெசிவிர், ஆக்சிஜன் ஆகியவற்றில் நடப்பதைப் போன்று தடுப்பூசியை கள்ளச் சந்தைப்படுத்துதலே நடந்தேறும். பணக்காரர்கள் மற்றும் அதிகாரம் மிக்கவர்கள் அதனைப் பெற்றுக் கொள்ளும் நிலையில் ஏழைகள், சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ளவர்களுக்கு எளிதில் கிடைக்காமல் போய் விடும். அதேபோல் கூடுதல் தடுப்பூசிகளை வாங்குவதை மாநிலங்களிடமே விட்டுவிடுவது அரசியலுக்கும், சச்சரவுக்குமே வழிவகுத்துக் கொடுக்கும். மாநிலங்கள் தங்களுக்குள் போட்டியிட்டு ஒன்றையொன்று விஞ்ச முயற்சிக்கும் என்பதால், அதன் மூலம்  விலை அதிகரிக்கும் ஆபத்தும் இருக்கின்றது (2020இல் அமெரிக்காவில் வென்டிலேட்டர்களுக்கு  நடந்ததைப் போல).   

பொதுமுடக்கம் மட்டுமே இப்போது நமக்கிருக்கின்ற வாய்ப்பாகும்

தடுப்பூசி இயக்கம் விரைந்து நடக்க வேண்டும் என்றாலும் அது ஒருபோதும் நோய்ப்பரவலை தடுத்து நிறுத்தப் போவதில்லை. நோய் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்லும். புதிய வைரஸ் பிறழ்வுகள் தோன்றுவது விஷயங்களை இன்னும் தாமதப்படுத்தக் கூடும். ஏற்கனவே திணறிக் கொண்டிருக்கின்ற சுகாதார உள்கட்டமைப்பு முழுமையாகத் தோல்வியடையும் போது இறப்புகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவே செய்யும்.  

மூன்று வாரங்களுக்கு முழுமையான பொதுமுடக்கம் என்பதே இப்போது நம்மிடம் இருக்கின்ற ஒரே வழியாகும். மூன்று வாரங்களுக்குப் பிறகு நோயாளிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கலாம். பொதுமுடக்கம் என்பது தொழிலாளர்கள் மீதான கடுமையான நடவடிக்கையாகும் என்றாலும் சரியாகச் செயல்படுத்தப்பட்டால் (இந்த கட்டுரை ஆசிரியர் கடந்த ஓராண்டாக பரிந்துரைத்து வரும் வகையில்) அது தொற்றுநோயின் பரவலை நிச்சயம் குறைத்து விடும்.

தங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு அஞ்சுகின்ற வணிகங்கள் பொதுமுடக்கத்தை எதிர்க்கின்றன. ஆனால் பொதுமுடக்கம் இல்லாமல் தடுப்பூசி மூலமாக தொற்றுநோயை எதிர்கொள்வது ஓர் இடைக்கால உத்தியாகவே இருக்கும். அதனால் ஏற்படப் போகின்ற நிலைகுலைவு சமூகத்தில் குழப்பத்தையே ஏற்படுத்தும். எப்படியோ வணிகம் இறுதியில் மூடப்பட வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் அதற்குப் பிறகு மிகவும் கடுமையான பொதுமுடக்கம் நமக்குத் தேவைப்படலாம். 2020ஆம் ஆண்டில் உருவான முதல் அலைகளின் போது பொதுமுடக்கத்தைக் கடைப்பிடித்ததில் இங்கிலாந்திடம்  இருந்த தாமதம் மிகவும் ஆபத்தாகவே அமைந்தது. மார்ச் மாதத்திலேயே நாம் செயல்பட்டிருந்தால், நிச்சயம் நம்மால் தற்போதைய ஆபத்தான சூழ்நிலையைத் தவிர்த்திருக்க முடியும்.  

மிகக் குறுகிய கால, இடைக்கால உத்திகளை முறையாக வரிசைப்படுத்த வேண்டும். குறுகிய காலத்திற்கான கடுமையான பொதுமுடக்கம் மிகவும் கடினமானதாகவே இருக்கும். ஆனாலும் அது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு வைரஸ் பரவுவதைக் குறைத்திட நிச்சயம் உதவும். ஏற்கனவே தடுமாறி வருகின்ற சுகாதார அமைப்பை வெற்றிகரமாகச் சமாளிக்கவும் அது உதவும். குதிரையைத் திறந்து விட்டுவிட்டு லாயத்தை அடைப்பதைப் போல அல்லாமல் பிரச்சனையைத் தீர்மானமாக எதிர்கொண்டு அரசாங்கம் மிகவும் சரியானதைச் செய்ய வேண்டும்.   


அருண்குமார் 2020ஆம் ஆண்டு பென்குயின் ரேண்டம் ஹவுஸ் பதிப்பித்துள்ள ‘இந்திய பொருளாதாரத்தின் மிகப் பெரிய நெருக்கடி: கொரோனா வைரஸின் தாக்கம் மற்றும் முன்னேறிச் செல்ல வேண்டிய பாதை’ என்ற நூலின் ஆசிரியர் ஆவார்.



https://thewire.in/government/to-fight-the-deadly-second-wave-a-lockdown-is-the-only-available-strategy

Comments