இந்திய அரசாங்கம் நேரத்தை வீணடித்ததால் ஏற்பட்டிருக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கோவிட் -19 நோயாளிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள்

 விஜய்தா லால்வானி, அருணாப் சைக்கியா

ஸ்க்ரோல் இணைய இதழ்


ரூ.200 கோடி செலவில் 150க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை நடத்துவதற்கான ஏலத்தை எடுப்பதற்கு எட்டு மாதங்கள் பிடித்தன. அதற்குப் பிறகு ஆறு மாதங்களான பிறகும் அந்த ஆலைகளில் பெரும்பாலானவை இன்னும் செயல்பாட்டிற்கு வரவே இல்லை.


ஏப்ரல் 16 அன்று இரவு எட்டு மணியளவில் வினய் ஸ்ரீவஸ்தவா தன்னுடைய தொலைபேசி அழைப்புகளை லக்னோவில் உள்ள எந்தவொரு மருத்துவமனையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று ட்வீட் செய்த போது அவருடைய ஆக்சிஜன் செறிவு நிலை மிகவும் ஆபத்தான அளவிலே இருந்தது. ரத்தத்தில் ஆக்சிஜன் செறிவு அளவு 94க்கு கீழே இருக்கின்ற நிலை கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் மோசமான நிலை என்று கருதப்படுகிற நிலையில்,  ஸ்ரீவஸ்தவா தனது ஆக்சிஜன் செறிவு நிலை அப்போது 52 என்றிருந்ததாக கூறினார். தனித்து இயங்கி வருகின்ற 65 வயதான அந்தப் பத்திரிகையாளரின் புகார் ட்விட்டரில் வைரலானது. மேலும் விவரங்களைக் கேட்டு அடுத்தநாள் பிற்பகலில் உத்தரபிரதேச முதல்வரின் ஊடக ஆலோசகர் அவருக்குப் பதிலளித்தார். அதற்குள்ளாக ஸ்ரீவஸ்தவாவின் ஆக்சிஜன் செறிவு 31 என்று குறைந்திருந்தது.  

சனிக்கிழமை மாலை 4.20 மணியளவில் ‘தந்தை இறந்துவிட்டார் - ஆம்புலன்ஸுக்காக அவர் காத்துக் கொண்டிருக்கிறார்’ என்று ஸ்ரீவஸ்தவாவின் மகன் ஹர்ஷித் ஸ்ரீவஸ்தவா ட்வீட் செய்திருந்தார். அவர் ஸ்க்ரோலிடம் ‘எங்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை’ என்று தொலைபேசி மூலம் கூறினார். ‘ஆக்சிஜன் சிலிண்டருக்காக ஒவ்வொரு எண்ணையும் நான் அழைத்தேன், ஆனால் அதை எடுக்க யாருமே இல்லை’ என்றார்.    

அவர்களுடைய வீட்டிலிருந்து சுமார் ஏழு கி.மீ தொலைவில் அமைந்துள்ள அரசால் நடத்தப்பட்டு வருகின்ற சியாமா பிரசாத் முகர்ஜி சிவில் மருத்துவமனை ஆக்சிஜன் உற்பத்தி ஆலைக்காக காத்துக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் வந்து எட்டு மாதங்களுக்குப் பிறகு கடந்த அக்டோபர் மாதத்தில் மருத்துவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யக்கூடிய வசதிகளைக் கொண்ட ஆலைகளை உருவாக்குவதற்கான டெண்டர்களை மத்திய அரசு வழங்கியிருந்தது. இந்தியா முழுவதும் அவ்வாறு டெண்டர் விடப்பட்டிருந்த 150 மாவட்ட மருத்துவமனைகளில் அதுவும் ஒன்றாக இருந்தது.

ஆனால் ஆறு மாதங்கள் கழிந்த பிறகும் இன்னும் அங்கே ஆக்சிஜன் ஆலை நிறுவப்படவில்லை. அந்த ஆலை அமைக்கப்பட்டிருந்தால், ஸ்ரீவஸ்தவா போன்ற லக்னோவாசிகளுக்கு கோவிட்-19இலிருந்து தப்பிப் பிழைக்க சிறந்த வாய்ப்பு கிடைத்திருக்கும். முப்பது லட்சம் மக்கள் வசித்து வருகின்ற்ர அந்த நகரத்தில் தற்போது 44,485 கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் பேர் உள்ளனர்.  

தனது தந்தை இறந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு அவரது கோவிட்-19 அறிக்கைக்காக காத்திருந்த ஹர்ஷித் ஸ்ரீவஸ்தவா ‘என் தந்தையைக் காப்பாற்றியிருக்க முடியும். இது முற்றிலும் அரசாங்கம் செய்த தவறு’ என்று குறிப்பிட்டார்.

அங்கிருந்து சுமார் 1,200 கி.மீ தூரத்தில் இருக்கின்ற குஜராத் நவ்சாரியில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை கிடைக்கவிருக்கின்ற மற்றுமொரு மாவட்ட மருத்துவமனை கடந்த சில நாட்களாகவே ஆக்சிஜன் தேவைப்படுகின்ற கோவிட்-19 நோயாளிகள் பலருக்கும் அனுமதியை மறுக்க வேண்டியிருந்தது. 

‘முழுமையான ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது’ என்று மாவட்டத்தில் 175 படுக்கைகளுடன் இருக்கின்ற எம்ஜிஜி பொது மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அவ்னிஷ் துபே கூறினார். அதிகாரப்பூர்வமாக மாவட்டத்தின் நோயாளிகளின் எண்ணிக்கை 500 என்ற அளவில் இருந்தபோதிலும் கடந்த வாரம் அங்கே ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரு தனியார் மருத்துவமனையில் ஐந்து கோவிட்-19 நோயாளிகள் இறந்து போயினர். பொது மருத்துவமனையில்  ஆக்சிஜன் ஆலை அமைக்கப்பட்டிருந்தால், குஜராத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாக இருக்கின்ற சூரத்தைச் சேர்ந்த நோயாளிகளுக்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்திலேயே நவ்சாரியிலிருந்து ஆக்சிஜனை அனுப்பி வைத்திருக்க முடியும். ஆனால் தற்போது அருகிலுள்ள மருத்துவமனைகள் தன்னைத் தொடர்பு கொள்ளும்போது துபே ‘இங்கே அவர்களை அனுப்பித்து வைத்து விட வேண்டாம்’ என்று சொல்ல வேண்டியிருக்கிறது. 


ரூ.200 கோடி மதிப்புள்ள டெண்டர்களை விட எட்டு மாதங்கள்

2020 மார்ச் 14 அன்று கொரோனா வைரஸ் தொற்றுநோயை ஒரு ‘பேரழிவு’ என்று இந்தியா அறிவித்தது. நாட்டின் சுகாதாரத் திறனை விரிவுபடுத்துவதற்கு நேரம் தேவை என்று வாதிட்ட அரசாங்கம் பத்து நாட்களுக்குப் பிறகு நூறு கோடிக்கும் அதிகமான மக்களை உலகிலேயே மிகக் கடுமையான பொதுமுடக்கத்தின் கீழ் அடைத்து வைத்தது.  

தொற்றுநோயின் ஆரம்பத்திலேயே வைரஸுக்கு எதிராக நடத்தப்படப் போகும் போரில் மிகவும் விலைமதிப்பற்ற பொருட்களில் ஒன்றாக ஆக்சிஜன் இருக்கும் என்பது தெளிவாகியது. ஆயினும்கூட புதிய ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளுக்கான ஏலத்தை விடுவதற்கு நரேந்திர மோடி அரசுக்கு எட்டு மாதங்கள் பிடித்தது. அக்டோபர் 21 அன்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனமான மத்திய மருத்துவ சேவைகள் கழகம் (சிஎம்எஸ்எஸ்) நாடு முழுவதும் பிரஷர் ஸ்விங் அட்ஸார்ப்ஷன் (பிஎஸ்ஏ) ஆக்சிஜன் ஆலைகளை 150 மாவட்ட மருத்துவமனைகளில் நிறுவுவதற்கான அழைப்பை விடுத்தது. இந்த பிஎஸ்ஏ தொழில்நுட்பம் வளிமண்டலத்தில் உள்ள வாயுக் கலவையிலிருந்து வாயுக்களைப் பிரித்தெடுத்து, குழாய் வழியாக மருத்துவமனை படுக்கைகளுக்கு நேரடியாக வழங்கக்கூடிய செறிவூட்டப்பட்ட ஆக்சிஜனை உருவாக்குகிறது. இந்த தொழில்நுட்பம் மருத்துவமனைகள் மற்ற இடங்களிலிருந்து அழுத்தப்பட்ட திரவ ஆக்சிஜனை வாங்க வேண்டிய அவசியத்தை தேவையற்றதாக்குகிறது.   

 

நிதிப் பற்றாக்குறையால் டெண்டர் செயல்முறையை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது என்பதற்கான  சாத்தியமில்லை: 162 ஆக்சிஜன் ஆலைகளுக்கான (12 ஆலைகள் பின்னர் சேர்க்கப்பட்டதாகத் தெரிகிறது) மதிப்பு வெறுமனே ரூ.120.58 கோடி மட்டுமே. அந்தப் பணம் பிரதமரின் குடிமக்களுக்கான உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் தருகின்ற பி.எம்-கேர்ஸ் நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தது. 2020 மார்ச் 27 அன்று உருவாக்கப்பட்ட பி.எம் கேர்ஸ் நான்கு நாட்களுக்குள்ளாகவே ரூ.3,000 கோடிக்கு மேல் நன்கொடைகளைப் பெற்றிருந்தது.

இப்போது ​​கோவிட் -19 தொற்றுநோயின் இரண்டாவது அலை நாடு முழுவதும் பரவியுள்ள நிலையில், பி.எம் கேர்ஸ் நிதியிலிருந்து மேலும் 100 ஆக்சிஜன் ஆலைகள் நிறுவப்படும் என்று மோடி அரசு வியாழக்கிழமை (ஏப்ரல் 15) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. அதில் ‘100 சதவீத ஆலைகளையும் விரைந்து முடிப்பதற்காக பணிகள் உன்னிப்பாகப் பரிசீலிக்கப்படுகின்றன’ என்று 2020ஆம் ஆண்டில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்ட 162 ஆக்சிஜன் ஆலைகளின் நிலை குறித்து கூறப்பட்டிருந்தது.

இந்த 162 ஆக்சிஜன் ஆலைகளின் நிலை குறித்து மத்திய மருத்துவ சேவைகள் கழகம் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு இந்த கட்டுரை வெளியிடப்பட்ட நேரம் வரையிலும் பதிலளிக்கப்படவில்லை. ஆனால் அதிகரித்து வரும் தாமதங்கள் குறித்து நிலவி வருகின்ற குழப்பம் ஸ்க்ரோல் நடத்திய தனிப்பட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்தது. புதிய ஆக்சிஜன் ஆலைகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட பதினான்கு மாநிலங்களில் இருக்கின்ற அறுபதிற்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை நாங்கள் தொடர்பு கொண்டோம். மருத்துவமனை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட நேர்காணலிலிருந்து மொத்தம் பதினோரு ஆலைகள் மட்டுமே நிறுவப்பட்டு அவற்றில் ஐந்து மட்டுமே செயல்பட்டு வருவது தெரிய வந்தது.

நடப்புத் தகவல்: இந்த கட்டுரை வெளியிடப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு பெரும்பாலான புதிய ஆக்சிஜன் ஆலைகள் செயல்படவில்லை என்பதை உறுதிப்படுத்துகின்ற வகையில்  சுகாதார அமைச்சகம் தொடர்ச்சியாக ட்வீட்களை வெளியிட்டது. ‘162 பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகளில், 33 நிறுவப்பட்டுள்ளன’ என்றும் ‘2021 ஏப்ரல் இறுதிக்குள் மேலும் 59 ஆலைகள் நிறுவப்படும். 2021 மே மாதத்திற்குள் 80 ஆலைகள் நிறுவப்படும்’ என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கை மொத்தம் 172 ஆலைகள் என்பதாக வருவதால் மே மாத இறுதிக்குள் நிறுவப்படும் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ள 80 ஆலைகள் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள  162 ஆலைகளில் பாதிக்கும் குறைவானவையாக இருக்கவே வாய்ப்புள்ளது.

தற்போது இந்தியாவில் சுமார் இருபது லட்சம் மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்களும் தொழில்துறை ஆக்சிஜன் உற்பத்தி அனைத்தையும் மருத்துவ நோக்கங்களுக்காகத் திருப்பி விடுகின்றன. மருத்துவ ஆக்சிஜனை 50,000 மெட்ரிக் டன் அளவிலே இறக்குமதி செய்யப் போவதாக வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 15) அரசாங்கம் தெரிவித்துள்ளது.  

புதிய ஆக்சிஜன் ஆலைகள் மாதத்திற்கு 4,500 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உருவாக்கிடும் திறன் கொண்டவை. தற்போது இரண்டாவது அலையில் ஏற்பட்டிருக்கும் தேவையை நிறைவேற்ற அது போதுமானதாக இருக்கவில்லை என்று நிரூபிக்கப்பட்டிருக்கும் என்றாலும் அந்த ஆலைகளிலிருந்து கிடைத்திருக்கக் கூடிய ஒவ்வொரு கூடுதல் அளவு ஆக்சிஜனும் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கும்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவான தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தின் முன்னாள் இயக்குனரான டி.சுந்தரராமன் ‘கோவிட் -19 இல்லாவிட்டாலும் இந்த ஆலைகள் அங்கே அமைக்கப்பட வேண்டும்’ என்று நம்மிடம் கூறினார். லட்சக்கணக்கான மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகின்ற மாவட்ட மருத்துவமனைகளில் குழாய் மூலம் அனுப்பப்படுகின்ற ஆக்சிஜன் இல்லாமல் இருப்பது போன்ற இந்திய சுகாதார அமைப்புகளில் உள்ள வெளிப்படையான இடைவெளிகளை நிரப்புவதற்கானதொரு நல்வாய்ப்பாக அது இருந்திருக்கும் என்ற  வாதத்தை அவரைப் போன்ற பொது சுகாதார வல்லுநர்கள் பலரும் முன்வைத்து வருகின்றனர்.


‘ஆக்சிஜன் இல்லாததால் துயரத்திற்கு மேல் துயரம் என்று நமக்கு துயரங்கள் அதிகரித்துக் கொண்டே உள்ளன’ என்று சுந்தரராமன் கூறினார். இதில் பாம்பு கடித்தல், மூளைக் காய்ச்சல், சாலை விபத்துக்கள் போன்றவற்றால் ஏற்படுகின்ற இறப்புகளும் அடங்கும்.  

சமீபத்திய டெண்டர்கள் காட்டுகின்றபடி வெறுமனே ரூ.200 கோடி என்ற மிகச் சிறிய அளவிலான செலவில் அந்த இடத்திலேயே ஆக்சிஜனைத் தயாரித்துக் கொள்கின்ற ஆலைகளின் மூலமாக குழாய் மூலம் அனுப்பப்படுகின்ற ஆக்சிஜன் 150க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு கிடைத்திருக்கும் என்றால்  இதுபோன்ற லட்சக்கணக்கான இறப்புகளை நம்மால் தவிர்த்திருக்க முடியும், ஆனால் இப்போது அந்த ஆலைகள் அமைக்கப்படாத நிலையில் கோவிட்-19 இந்த மரண பட்டியலில் உள்ளவர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறது.


மருத்துவமனைகளும், நிறுவனங்களும் கட்டணங்களை வசூலித்து வருகையில் ஆலைகளை அமைப்பதில் அதிகரித்து வருகின்ற தாமதங்கள்

போர்க்காலத்தைப் போன்று தொற்றுநோய்களின் போது உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டியுள்ள நிலையில் ஆக்சிஜன் ஆலைகளை நிறுவுவதில் ஏற்பட்டிருக்கும் இந்த தாமதத்தை என்னவென்று சொல்வது?

அசாம், பீகார், சத்தீஸ்கர், தில்லி, குஜராத், ஜார்க்கண்ட், கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள மருத்துவமனை அதிகாரிகளுடன் ஸ்க்ரோல் பேசியது. ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொண்ட நிறுவனங்களே இப்போது ஏற்பட்டிருக்கும் தாமதங்களுக்கான காரணம் என்று பெரும்பாலான அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.  

புதிய ஆக்சிஜன் ஆலைகளுக்கான டெண்டர் ஆவணத்தில் மருத்துவமனையில் உள்ள மொத்த படுக்கைகளின் எண்ணிக்கை, ஆலையின் திறன் ஆகிய தகவல்களுடன் மாவட்ட மருத்துவமனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் அதிக எண்ணிக்கையிலே மாறுபட்ட திறன் கொண்ட ஆலைகள் உத்தரபிரதேசத்தில் உள்ள பதினான்கு மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதையடுத்து மகாராஷ்டிராவில் பத்து மாவட்டங்களில் ஆலைகளும், தில்லிக்கு நிமிடத்திற்கு 7,700 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எட்டு ஆலைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

உத்தம் ஏர் ப்ராடக்ட்ஸ், ஏரோக்ஸ் டெக்னாலஜிஸ், ஆப்ஸ்டெம் டெக்னாலஜிஸ் என்று மூன்று நிறுவனங்களிடம் இந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன என்று மருத்துவமனைகளில் ஸ்க்ரோல் சந்தித்த மாவட்ட அதிகாரிகள் தகவல்களை அளித்தனர். அவர்கள் உத்தரப்பிரதேசத்திற்கென்று ஒதுக்கப்பட்ட பதினான்கு மருத்துவமனைகளில் ஒன்றில்கூட ஆக்சிஜன் ஆலை செயல்படுவதாகத் தெரிவிக்கவில்லை.

ஆலையை நிறுவிய பின்பு அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக ஒப்பந்தத்தைப் பெற்றுக் கொண்ட நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டிய லக்னோ சியாமா பிரசாத் முகர்ஜி சிவில் மருத்துவமனையில் இருந்த எஸ்.ஆர்.சிங் ‘ஆலையை நிறுவிய பிறகு அவர்கள் எதுவுமே செய்யவில்லை’ என்று கூறினார். ‘நாங்கள்தான் இப்போது குழாய்களை இணைத்து நாங்களாகவே அதைச் செயல்பட வைத்துக் கொண்டிருக்கிறோம்’ என்றார்.  

மீரட் எல்எல்ஆர்எம் மருத்துவக் கல்லூரியின் ஞானேந்திர குமார் ‘ஒரு தளத்தை நாங்கள் ஆலைக்காக ஒதுக்கி கொடுத்தோம். ஆனாலும் அதற்கான இயந்திரம் இன்னும் வந்து சேரவில்லை. நான் பல முறை போன் அந்த நிறுவனத்திற்கு செய்திருக்கிறேன். எந்தவொரு பதிலும் அவர்களிடமிருந்து கிடைக்கவில்லை’ என்றார்.  

இந்த இரண்டு நிகழ்வுகளிலும் ஆலையை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை தில்லியில் பதிவு அலுவலகத்தைக் கொண்ட ஆப்ஸ்டெம் டெக்னாலஜிஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது. குஜராத்தில் நவ்சாரியில் உள்ள எம்ஜிஜி பொது மருத்துவமனையிலும்கூட, ஆப்ஸ்டெம் நிறுவனமே ஒப்பந்தத்தை பெற்ற நிறுவனம் என்று அடையாளம் காட்டப்பட்டுள்ளது. ஆனாலும் அங்கேயும் அவர்கள் இதுவரையிலும் வரவே இல்லை. ‘நாங்கள் தொடர்ந்து அவர்களை அழைத்துக் கொண்டே இருக்கிறோம். திரும்ப அழைப்பதாக மட்டுமே அவர்கள் கூறிக் கொண்டே இருக்கிறார்கள்’ என்று கூறிய மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அவ்னிஷ் துபே ‘என்ன பிரச்சனை என்று எனக்குத் தெரியாது’ என்றார்.

அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் மூலம் அந்த நிறுவனத்தில் உள்ள எந்தவொரு அதிகாரியையும் ஸ்க்ரோலால் தொடர்பு கொள்ள முடியவில்லை. நிறுவனம் பதிலளிக்கும் போது இந்த கட்டுரை புதுப்பிக்கப்படும்.   

புதிய ஆக்சிஜன் ஆலைகளை நிறுவுவதற்கான உத்தரவுகளைப் பெற்றுக் கொண்ட மற்றொரு நிறுவனம் அவுரங்காபாத்தை தளமாகக் கொண்டு இயங்கி வருகின்ற ஏரோக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆகும். அந்த நிறுவனத்தின் நிறுவனரான சஞ்சய் ஜெய்ஸ்வால் தங்களுடைய நிறுவனம் அனைத்து நடைமுறைகளையும் முடித்துவிட்டதாக கூறினார். ஆனாலும் ஆக்சிஜனை உருவாக்குகின்ற ஆலைகளை படுக்கைகளுடன் இணைப்பதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மருத்துவமனைகள் இன்னும் ஏற்படுத்தித் தரவில்லை என்பதால் புதிய ஆலைகள் தாமதமாகி விட்டதாக அவர் கூறுகிறார்.

‘எங்கள் பக்கத்தில் இருந்து அறுபது பொறியாளர்கள் தீவிரமாக வேலை பார்த்தனர். கிட்டத்தட்ட வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டன’ என்று கூறிய ஜெய்ஸ்வால் ‘எங்களுக்குத் தேவையான செப்பு குழாய் இணைப்பு, மின்சாரம் போன்றவற்றை மாநிலங்கள்தான் வழங்க வேண்டும். அது எங்களுடைய கைகளில் இல்லை. அதை அவர்கள் எங்களுக்குத் தராவிட்டால் நாங்கள் இந்த அமைப்பைச் செயல்படுத்த முடியாது’ என்றார்.


ஆயினும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள்  தங்களிடம் அனைத்து உள்கட்டமைப்புகளும் தயாராக இருப்பதாகவே கூறுகின்றன. ‘அந்த நிறுவனத்திற்கு அந்த தளம் தயாராக உள்ளது என்று ஜனவரி 13 அன்று நான் ஒரு மெயில் அனுப்பினேன்’ என்று காந்திநகரின் GMERS மருத்துவக் கல்லூரி மற்றும் பொது மருத்துவமனையைச் சார்ந்த பெண் மருத்துவர் நியாதி லக்கானி கூறினார். ‘தொடர்ந்து பலமுறை நினைவுபடுத்திய போதிலும் அவர்களிடமிருந்து எனக்கு மீண்டும் பதில் கிடைக்கவில்லை. அதைச் செயல்பட வைப்பது எங்களுக்கு மிகவும் தேவைப்படுகிறது. ஆக்சிஜன் சிலிண்டர்களைக் கொண்டு எங்களால் இப்போதுள்ள தேவையைச் சமாளிக்க முடியவில்லை’ என்றார்.  

காந்திநகரில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்திருக்கின்ற தில்லியைச் சேர்ந்த உத்தம் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் மத்திய மருத்துவ சேவைகள் கழகத்தால் தடுப்புப்பட்டியலில் ஏப்ரல் 13 அன்று சேர்க்கப்பட்டதாக  ஸ்க்ரோல் கண்டறிந்தது. ஒப்பந்தத்தைப் பெற்ற பிறகு அந்த நிறுவனம் செலுத்தப்பட வேண்டிய பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்தவில்லை என்பதோடு ஒப்பந்தத்தை ஒப்புக் கொள்கின்ற கடிதங்களையும் சமர்ப்பிக்கவில்லை என்று ஸ்க்ரோல் கண்டறிந்த  மத்திய மருத்துவ சேவைகள் கழகத்தின் கடிதம் கூறுகிறது.

அந்த செய்தியை நாங்கள் லக்கானியிடம் தெரிவித்த போது ​​ ‘தடுப்புப்பட்டியலில் உத்தம் இருக்கும் என்றால் நான் எங்கிருந்து ஆக்சிஜனைப் பெறுவேன்?’ என்று விரக்தியுடன் அவர் கேள்வியெழுப்பினார்.  

அந்த நிறுவனத்தின் நிறுவனரான மணீஷ் கபூர் இந்த விஷயத்தில் கருத்து எதையும் தெரிவிக்க மறுத்து விட்டார். ‘ஏற்கனவே சிஎம்எஸ்எஸ்சின் கடிதம் உங்களிடம் இருப்பதால் அவர்களே உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க சிறந்த நபர்களாக இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். நாங்கள் விற்பனையாளர்கள் மட்டுமே. நாங்கள் அவர்களுக்கு அந்த டெண்டர்கள் தொடர்பான பல்வேறு தொழில்நுட்ப உள்ளீடுகளில் உதவியுள்ளோம்’ என்று கபூர் கூறினார்.

காலதாமதங்கள் அதிகரிக்கின்ற போது தொலைதூரத்தில் இருக்கின்ற சிறிய மருத்துவமனைகளே குறிப்பாகப் பாதிக்கப்படுகின்றன. அவற்றைப் பொறுத்தவரை ஆக்சிஜனை வழங்கி வருகின்ற அமைப்புகள் திணறும்போது ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்குவது மிகவும் கடினம். பணவசதி அதிகம் கொண்ட மிகப் பெரிய நிறுவனங்களுடன் இந்த சிறிய மருத்துவமனைகளால் வெறுமனே போட்டியிட முடியாது. அங்கேயே ஆக்சிஜனைத் தயாரித்து வழங்கக்கூடிய அமைப்பு இதுபோன்ற மருத்துவமனைகளில் இயங்கினால் கடுமையாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளைப் பராமரிப்பதற்கான வசதிகள் கிடைக்கும்.   


ஆதிவாசி மக்கள் அதிகம் வசித்து வருகின்ற மாவட்டமான தெலுங்கானாவின் பத்ராச்சலத்தில் உள்ள மருத்துவமனையில் உள்ள மருத்துவ கண்காணிப்பாளர் ‘ஆக்சிஜனை வெளியில் இருந்து வாங்கும் போது, அதற்காக நாங்கள் ஏராளமாகச் செலவழிக்கிறோம். ஆனால் ஆலை செயல்படத் துவங்கியதும் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு எடுத்துக் கொள்ளப் போவது வெறும் காற்று மட்டும்தான் என்பதால் எங்களுடைய இடத்தில் அதை உற்பத்தி செய்தால், எங்களுக்கான நிதிச்சுமை குறையும்’ என்கிறார்.

மரணச் சுழலுக்கு வழிவகுக்கும் பற்றாக்குறை

இரண்டாவது அலை மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம் என்று இந்திய மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் அந்த ஆபத்து வைரஸின் புதிய வகைகள் மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்துவதால் (இது குறித்து இன்னும் தெளிவான சான்றுகள் எதுவும் இல்லை) ஏற்படும் விளைவாக அல்லாமல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிக அளவிற்கு அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் அனுமதி பெறுவது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்பதாலேயே ஏற்படக்கூடும் என்கின்றனர். தேவையான ஆக்சிஜன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களுக்கும்கூட கிடைக்காமல் போகலாம். 

மருத்துவ ஆக்சிஜனின் பற்றாக்குறை தங்களை முன்கூட்டியே வகைப்படுத்தி - ஆக்சிஜன் தேவைப்படுகின்ற நோயாளிகளுக்கு இடையில் தேர்ந்தெடுத்து சிகிச்சை அளிக்க வேண்டிய -   கட்டாயத்திற்குள்ளாகியதாக குஜராத்தில் உள்ள மருத்துவர்கள் கூறினர். நோயாளிகளில் சிலருக்கு மட்டுமே அவர்களால் ஆக்சிஜன் வழங்க முடிந்தது.  

‘எங்களால் கடந்த முறை நிலைமையைச் சமாளிக்க முடிந்தது’ என்று கூறிய குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள சியூ. ஷா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர் ரூபம் குப்தா ‘ஆனால் இந்த ஆண்டு திடீரென்று செங்குத்தான உயர்வுடன் அடுத்த அலை வந்துள்ள இந்த நேரத்தில் எங்களால் முடிந்ததை மட்டுமே செய்து வருகிறோம்’ என்றார்.

அந்த மருத்துவமனையில் 700 படுக்கைகள் உள்ளன. வெள்ளிக்கிழமையன்று அவற்றில் கிட்டத்தட்ட 200 படுக்கைகள் கோவிட்-19 நோயாளிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட அவர்கள் அனைவருக்குமே ஆக்சிஜன் தேவைப்படுகிறது என்று குப்தா கூறினார். நூறு ஆக்சிஜன் சிலிண்டர்களை ஆயத்த நிலையில் இரண்டு தள்ளுவண்டிகளில் கொண்டுள்ள அந்த மருத்துவமனை சுற்றுப்புறத்தைப் பாதுக்காக்க தீயணைப்பு பொறியாளர்களைக் கொண்டிருக்கிறது. ‘ஆக்சிஜன் இங்கே மிகவும் அதிகமான ஓட்டத்தில் இருக்கிறது. ஒரு பேரழிவு ஏற்பட்டு விடுமோ என்று நாங்கள் அஞ்சிக் கொண்டிருக்கிறோம்’ என்று அவர் கூறினார்.

இப்போது மருத்துவர்கள் ‘உயர் ஓட்ட நாசி சிகிச்சை’ என்றழைக்கப்படும் புதிய சிகிச்சை முறையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த முறையில் ஒரு நோயாளிக்கு அதிக அளவு ஆக்சிஜன் தேவைப்படுவதாக இருக்கிறது. ‘அதிக ஓட்டத்தில் ஒரு நோயாளி ஒரு முறை சிகிச்சை பெற்றால் ஒரு நிமிடத்திற்கு 130 லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படும் என்பதால் அது இங்கு ஆக்சிஜன் கிடைக்கின்ற திறனை முழுமையாக உறிஞ்சி விடும் என்பதே இப்போதைய பிரச்சனையாக உள்ளது’ என்று குப்தா விளக்கினார். மேலும் ‘அதிக ஓட்டம் தேவைப்படுகின்ற  நோயாளி ஒருவருக்காக நாங்கள் நிமிடத்திற்கு 16 லிட்டர் வேகத்தில் ஆக்சிஜனில் தப்பிப் பிழைத்துக் கொண்டிருக்கும் ஐம்பது பேருக்கான நன்மைகளைச் சமப்படுத்த வேண்டியுள்ளது’ என்று அவர் கூறினார்.  

சில நேரங்களில் நிலைமை மோசமாகி விடுவதாகத் தோன்றியதால் புதிய ஆக்சிஜன் ஆலைகளுக்காகக் காத்திருக்கின்ற மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் பலரும் ஒப்பந்த நிறுவனங்களிடம் விசாரிப்பதை நிறுத்திக் கொண்டதாகக் கூறினர். 2020 செப்டம்பரில் தினசரி அதிகபட்சமாக ஒரு லட்சம் நோயாளிகள் என்ற எண்ணிக்கையை எட்டிய பிறகு இந்தியாவில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 2021 பிப்ரவரி வரையிலும் சீராகக் குறைந்தே வந்தது.

மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்ட மருத்துவமனையில் சிவில் சர்ஜனாக உள்ள சங்கமித்ரா கே.பூலே கூறுகையில் ‘நாங்கள் அப்போது கொஞ்சம் தீவிரமற்றே இயங்கி வந்தோம். ஆனால் இப்போது ஏப்ரல் மாதத்தில் விஷயங்கள் மிகவும் தீவிரமாகி விட்டன. மருத்துவமனையில் ஆக்சிஜன் ஆலையை நிறுவுவது இப்போது அதன் இறுதி கட்டத்தில் உள்ளது - தேவை அதிகரித்து வருவதன் விளைவாக. எங்களுடைய ஆக்சிஜன் தேவை இப்போது நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறது’ என்றார். மேலும் அவர் ‘எங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்கு ஆலை போதுமானதாக இல்லாவிட்டாலும், ஒன்றுமே இல்லாமல் இருப்பதை விட ஏதாவது இருப்பதே சிறந்தது’ என்றார்.   


வெற்று சிலிண்டர்களைக் கொண்டு இயங்குகிற மருத்துவமனைகள்

அதிக எண்ணிக்கையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளைக் கொண்ட பெரிய மருத்துவமனைகளின் தேவைகளை நிறைவேற்றி வைக்கும் அளவிற்கு ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் போதுமானவையாக இல்லை என்றாலும், அதிக தேவை உள்ள காலங்களில் ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள  பயனுள்ள கருவியாக அந்த ஆலைகள் இருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். நாடு முழுவதும் வணிக ஆக்ஸிஜனுக்கு கடுமையான பற்றாக்குறை இருக்கும் போது இதுபோன்று குறிப்பாக நிகழ்கிறது என்றனர். 

மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநிலங்களில் உள்ள பத்து உற்பத்தியாளர்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கி வருபவர்கள் கோவிட்-19 நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவை கடந்த ஆண்டு முதல் அலையின் போது இருந்ததை விட இரண்டாவது அலையில் மிகவும் அதிகமாக இருப்பதாக ஸ்க்ரோலிடம் கூறினர்.

மேற்கு இந்தியாவில் வாங்குபவர்களைக் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனமான ராய்காட் கார்பைட்ஸை நடத்தி வரும் சுனில் குப்தா ‘மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது’ என்று கூறினார். தொற்றுநோய்க்கு முன்பு குப்தாவின் நிறுவனம் பெரும்பாலும் தொழிற்சாலைகளுக்கே ஆக்சிஜனை வழங்கி வந்தது. ஆனால் இப்போது அவருடைய நிறுவனத்தின் முழு உற்பத்தியும் மருத்துவ பயன்பாட்டிற்காக மட்டுமே திருப்பி விடப்பட்டிருக்கிறது என்கிறார்.

யுனிவர்சல் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் சுபாஷிஷ் குஹா ராய், கர்நாடகாவிற்குள் அறுபது மெட்ரிக் டன் ஆக்சிஜனை பெங்களூரு, மைசூர் போன்ற நகரங்களுக்கு வழங்கி வருகின்ற தங்களுடைய நிறுவனம் அதனுடைய முழு திறனில் இயங்கி வருகிறது என்றார். ‘அதிக தேவை தொடர்ந்தால் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதே மிகவும் கடினமாகி விடும்’ என்று அவர் கூறினார்.

சிலிண்டரை வழங்கி வருபவர்களும் தங்களிடமிருந்த பங்குகள் விரைவில் தீர்ந்து விட்டதாகக் கூறினர். ‘கடந்த பதினைந்து நாட்களில் தேவை வழக்கமாக இருந்ததைவிட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது’ என்று குஜராத் சூரத்தில் உள்ள லக்ஷ்மி கேஸ் சப்ளையர்ஸ் நிறுவனத்தைச் சார்ந்த சிராக் வசானி கூறினார். வசானி சூரத்துக்குள் மட்டும் தினமும் குறைந்தது இருநூறு சிலிண்டர்களை வழங்கி வருகிறார். ‘கொரோனா வைரஸ் காரணமாக மட்டுமே இதுபோன்று நிகழ்ந்திருக்கிறது’ என்று அவர் கூறினார்.


லக்னோவில் உள்ள மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கி வருகின்ற ஒருவரை வியாழக்கிழமை ஸ்க்ரோல் தொடர்பு கொண்டபோது அவர் அழைப்புகளை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு நிமிடத்திற்குள் அவர் ‘சிலிண்டர்கள் விற்று தீர்ந்து விட்டன’ என்ற குறுஞ்செய்தியை அனுப்பி வைத்தார்.

லக்னோவில் ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கி வருகின்ற மற்றொருவரான கௌசல் கட்டியார் கடந்த வாரத்தில் தான் விற்ற சிலிண்டர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட முடியாது என்கிறார். ‘ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நோயாளி என்றிருந்தால், ஆக்சிஜன் சிலிண்டருக்கான தேவை என்னவாக இருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம்’ என்று கூறிய அவர் ‘நான் தொலைபேசி அழைப்புகளை எடுப்பதையே நிறுத்தி விட்டேன்’ என்கிறார். 

 

https://scroll.in/article/992537/india-is-running-out-of-oxygen-covid-19-patients-are-dying-because-the-government-wasted-time

 


Comments