லைட்ஸ், கேமிரா, சாதி - அம்பேத்கரின் படம் பாலிவுட்டில் இடம் பெற சுதந்திரத்திற்குப் பிறகு முப்பத்தெட்டு ஆண்டுகளானது
ரவி ஷிண்டே
தி பிரிண்ட் இணைய இதழ்
‘பின்னணியில்
இருப்பவைதான் எல்லாம்… திரைப்படத்தின் பின்னணி அங்கே வாழும் மக்களின் கதையைத்
தெளிவாகச் சொல்கின்றது. ஒவ்வொரு பின்னணிக்கும் பின்னால் ஒரு கதை இருப்பதால் திரைப்படத்திற்கான
மகத்தான பங்களிப்பை அது அளிக்கிறது என்றே நான் நம்புகிறேன்’ என்று தமிழ் திரைப்பட
இயக்குனர் பா.ரஞ்சித் ஒரு முறை கூறியிருந்தார்.
பாலிவுட்டின்
சாதிய திரைப்படத் தயாரிப்பாளர்கள் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கரை பல ஆண்டுகளாக ‘தீண்டத்தகாதவர்’
போலவே நடத்தி வந்திருக்கின்றனர். அம்பேத்கர் திரைப்படத்தில் முன் தோன்றுவதைக்கூட
விடுங்கள். திரைப்படக் காட்சிகளின் பின்னணியில் இருந்தேகூட அவர் நீண்ட காலமாக விலக்கப்பட்டவராகவே
இருந்திருக்கிறார்.
எடுத்துக்காட்டாக
அம்பேத்கரின் கதாபாத்திரம் 1982ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் கிளாசிக் திரைப்படமான
காந்தியில் குறிப்பிடப்படவே இல்லை. அது மட்டுமல்லாமல் அந்த மூன்றரை மணி நேரப்
படத்தில் அம்பேத்கரைப் பற்றி கடந்து செல்கின்ற வகையிலான சிறுகுறிப்புகூட இருக்கவில்லை.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை, இந்தியாவின் முதலாவது சட்டம் மற்றும்
நீதித்துறை அமைச்சர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பெண்களுக்காக குரல்
கொடுத்தவர் என்று இந்திய வரலாற்றில் அம்பேத்கர் வகித்த பதவியைக் கொண்டு பார்க்கும்
போது அது உண்மையில் ஆச்சரியமளிப்பதாகவே இருந்தது.
எந்தவொரு
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நபரின் சுயசரிதைகளும் அவருடைய முக்கிய
எதிரிகளையும் சித்தரிக்கவே செய்திருக்கின்றன. தனது சமூக-அரசியல், மத
நிலைப்பாடுகளின் அடிப்படையில் தலித்துகளுக்கு தனி தொகுதிகளை வழங்குவது குறித்த
பிரச்சனையில் சாகும் வரையிலும் உண்ணாவிரதம் இருக்குமாறு செய்து காந்தியை தற்காப்பு
நிலைக்கு ஆளாக்கியவராக அம்பேத்கர் அறியப்பட்டிருந்தார்.
இயக்குனர்
ரிச்சர்ட் அட்டன்பரோவின் காந்தி திரைப்படம் ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்டதாக
இருந்தாலும், ஒரு வகையில் அந்தப் படம் நிஜ வாழ்க்கையில் தொண்ணூறுகள் வரை
அம்பேத்கரை இந்திய ஆளும் வர்க்கம் எவ்வாறு நடத்தியது என்பதற்கான சரியான
எடுத்துக்காட்டாகவே இருக்கிறது. சுதந்திரம்
அடைந்து நாற்பது ஆண்டுகள் கடந்த பிறகும் இந்திய பாராளுமன்றத்தின் மத்திய
மண்டபத்தில் அம்பேத்கரின் உருவப்படத்தால் இடம் பெற முடியவில்லை. இந்திய
அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் முக்கிய பாத்திரம் வகித்தவராக அம்பேத்கர் இருந்த
போதிலும். இந்திய திரைப்படங்களில் அவரது படம் தோன்றுவதற்கு நாடு சுதந்திரம் அடைந்து
கிட்டத்தட்ட முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிப் போனது. அவரையும், நாட்டிற்காக அவர்
ஆற்றிய பங்களிப்பையும் பள்ளி, கல்லூரி பாடப்புத்தகங்களும்கூட மறைத்திடவே செய்தன.
பெரும்பாலும் தொலைக்காட்சி, வானொலி அல்லது எந்தவொரு ஒலி-ஒளி தொடர்பான ஊடகங்களிலும்
நீண்ட காலத்திற்கு நம்மால் அவரைக் காண முடியவில்லை.
நவீன
இந்தியாவைக் கட்டமைத்த அம்பேத்கரின் மகத்தான பங்களிப்பு குறித்து இந்திய ஆளும்
வர்க்கத்தை உருவாக்கிய உயர்சாதியினர் தங்களுடைய கண்களை இறுக்க மூடிக் கொண்டனர். அது
இயல்பாகவே ஹிந்தி சினிமாவிலும் பிரதிபலித்தது.
மிகமிகக் குறைவான பிரதிநிதித்துவம்
சவர்ணா
தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்ட ஹிந்தி திரைப்படங்களில் ஆதிக்கம் செலுத்துகின்ற
பின்னணியாக மகாத்மா காந்தி, லோகமானிய திலக், ஜவஹர்லால் நேரு, லால் பகதூர்
சாஸ்திரி, சுபாஷ் சந்திர போஸ், சுவாமி விவேகானந்தர் போன்ற உயர்சாதி அல்லது சவர்ணா
பின்னணி கொண்டிருந்த அரசியல் தலைவர்களின் உருவப்படங்களே முக்கியமாக அமைந்திருந்தன.
தலித்துகளைப்
பற்றிய கதைகளைச் சொன்ன - மிகவும் அரிதாகவே இருந்த போதிலும் - பாலிவுட்
திரைப்படங்களிலும் அம்பேத்கரைக் காண முடியவில்லை. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக
பிமல் ராயின் சுஜாதா (1959) என்ற திரைப்படம் இருக்கிறது. அதில் பிராமண கதாநாயகன்
ஆதிர் சவுத்ரி (சுனில் தத்) ‘தீண்டத்தகாத’ பெண்ணான சுஜாதாவை (நூதன்)
காதலிக்கிறார். அம்பேத்கரைத் தவிர ரவீந்திரநாத் தாகூர், காந்தி, விவேகானந்தர்
ஆகியோரின் புகைப்படங்களை தன்னுடைய வீட்டில் வைத்திருக்கும் அளவிற்கு அந்த
திரைப்படத்தில் ‘தாராளவாதியாக’ ஆதிர் இருந்தார்.
சுஜாதா (1959) திரைப்படத்தில் சுனில் தத்
அறுபதுகளில்
பிராமணர் ஒருவர் அவர் முற்போக்கானவராக இருந்தாலும், தன்னுடைய வீட்டில்
அம்பேத்கரின் புகைப்படங்களை ஏன் வைத்திருக்க வேண்டும் என்று ஒருவர் வாதிடக்கூடும்.
அது உண்மையாகவும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக தபன் சின்ஹாவின் திரைப்படமான
ஜிந்தகி ஜிந்தகியை (1972) எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ‘தீண்டத்தகாத’
குடும்பத்தைச் சேர்ந்த மருத்துவராக சுனில் தத் நடித்திருக்கிறார். அந்த படத்தில்
ஒன்றல்ல, சாதிகளுக்கு இடையில் நடப்பதாக இரண்டு காதல் கதைகள் இருந்த போதிலும், அந்த
திரைப்படத்திலும் அம்பேத்கர் பின்னணியில் இருந்து முற்றிலும் விலக்கியே வைக்கப்பட்டிருந்தார்.
ஹிந்தி
சினிமாவின் முன்னணி கதாபாத்திரங்களின் வீடுகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தது
மட்டுமல்லாது, நீதிமன்ற அறைகள், காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்களின்
சுவர்களிலும் இடம்பெற முடியாதவராகவே அம்பேத்கர் இருந்தார்.
ஆனால்
அந்த தலைவரின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக இயக்குனர் ஜாபர் படேல் இயக்கிய திரைப்படம்
அந்த நிலைமையை மெதுவாக மாற்ற முயற்சித்தது. ஆங்கில-ஹிந்தி திரைப்படமாக
உருவாக்கப்பட்ட டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் (2000) என்ற திரைப்படத்தில் அம்பேத்கருடைய
வாழ்க்கை, கல்வி, அரசியல், தொழில் பயணம் குறித்த தெளிவான சித்திரத்தை ஜாபர் படேல் காட்டியிருந்தார்.
காந்தியுடன் நடந்த அம்பேத்கரின் அந்த புகழ்பெற்ற சண்டையை அவர் தன்னுடைய திரைப்படத்தில்
படேல் காட்டியிருந்தார். காந்தி, அம்பேத்கர் என்று அவர்கள் இருவரின் மாறுபட்ட
அரசியல் கருத்துக்களையும் அவர் அற்புதமாக வெளிப்படுத்தியிருந்தார். குறைவான
திரையிடுதல்கள் மற்றும் பல மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு தயாரிப்பாளர்கள்
விரும்பாதது என்ற நிலைமை இருந்த போதிலும் அந்த திரைப்படம் வெற்றி அடையவே செய்தது. படம்
முடிந்து வெளியாகி கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும்
தமிழ்நாட்டில் அந்தப் படம் பொதுமக்களுக்காக வெளியிடப்படவே இல்லை. அதை பெரிய அளவிலே
பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல அதிகாரிகள் அதிக அக்கறை காட்டவில்லை என்று கூறப்பட்டது.
மராத்தி
திரையுலகில் இயங்கி வந்த படேல் 1979ஆம் ஆண்டில் வெளியான தனது கிளாசிக் மராத்தி
அரசியல் திரைப்படமான சின்ஹாசனில் தொடங்கி தனது படங்களின் பின்னணியில் அம்பேத்கரின்
உருவப்படங்களைப் பயன்படுத்திய முதல் இயக்குனராக இருக்கிறார். அம்பேத்கரின்
வெளியிடப்படாத எழுத்துக்கள், உரைகளின் தொகுதிகளை சரத் பவார் தலைமையிலான
மகாராஷ்டிரா அரசாங்கம் அச்சிடத் தொடங்கியதும் அதே ஆண்டிலேயே எதேச்சையாக
நிகழ்ந்தது.
மராத்தி திரைப்படமான முக்தா (1995)
ஜாபர்
படேல் செய்ததைப் போல அம்பேத்கரைப் போன்ற ஒருவரின் சர்வவல்லமையைக் காட்டுகின்ற
வகையிலே திரைப்படத்தின் பின்னணியில் அம்பேத்கரை அவ்வளவு அற்புதமாக வேறு யாரும் பயன்படுத்தி
இருக்கவில்லை. ஸ்மிதா பாட்டீல் நடித்த அம்பார்த்தா (1982) என்ற படேலின் மராத்தி
திரைப்படத்தில் பாட்டீல் நடத்தி வந்த பெண்கள் ஆசிரமத்து அலுவலகச் சுவர்களில்
அம்பேத்கரின் மிகப் பெரிய உருவப்படம் இருந்தது. சாதிகளுக்கு இடையிலான காதல் கதையாக,
விருதைப் பெற்றிருந்த முக்தா (1994) எனும் படேலின் திரைப்படத்தின் பின்னணியில் அம்பேத்கர்
மீண்டும் தோன்றினார்.
எண்பதுகளின்
பகுஜன் சமாஜ் நிகழ்வுகள்
இருப்பினும் சில மராத்தி
படங்களைத் தவிர்த்து 1985 வரையிலும் அம்பேத்கரின் படங்களை தங்களுடைய திரைப்படங்களின்
பின்னணிக்குத் தகுதியானவையாக ஹிந்தி சினிமா உணர்ந்திருக்கவில்லை. அதுபோன்ற உணர்வு கன்ஷிராம்
தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) சக்திவாய்ந்த அரசியல் சக்தியாக குறிப்பாக
வட இந்தியாவில் தோன்றிய காலத்திலேயே உருவானது.
பகுஜன் சமாஜ் கட்சி 1995ஆம்
ஆண்டு வரையிலும்
முறையாக ஆட்சிக்கு வரவில்லை என்றாலும் சிறுநகரங்கள் மற்றும் நகரங்கள் என்று
ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அம்பேத்கரின் சிலைகள் அமைக்கப்பட்டதிலேயே பகுஜன் புதிய
அலைக்கான உறுதிப்பாடு வெளிப்பட்டது. தலித் ஷோஷித் சமாஜ் சங்கர்ஷ் சமிதி (DS4), எஸ்சி - எஸ்டி - ஓபிசி சிறுபான்மை
ஊழியர்களின் கூட்டமைப்பான பிற்படுத்தப்பட்ட
மற்றும் சிறுபான்மை சமூக ஊழியர்களின் கூட்டமைப்பு (BAMCEF) ஆகியவற்றில் கன்ஷிராம் ஓர்
அங்கமாக இருந்து வந்தார். அந்த அமைப்புகள் அனைத்துமே தங்களுடைய அலுவலகச்
சுவர்களில், அரசு கட்டிடங்களுக்குள் அம்பேத்கரின் உருவப்படங்களை ஏற்றி வைக்கின்ற
நடைமுறையைப் பின்பற்றி வந்தன.
பகுஜன் சமாஜ் கட்சியின் அலை அதிகரிக்கத் துவங்கியவுடன், ஹிந்தி சினிமாவிலும்
அம்பேத்கருக்கான அதிர்வுகள் மெதுவாக உருவாகத் தொடங்கின. 1985ஆம் ஆண்டு ராஜேஷ்
கண்ணா-ஸ்மிதா பாட்டீல் நடித்து வெளியான அகிர் கியோன்? என்ற திரைப்படம் பெரிய
பிரதான திரைப்படத்தில் அந்த அதிர்வு தோன்றியதற்கு முதல் சான்றாக இருந்தது. அந்தப்
படத்தில் அரசாங்கத்தால் நடத்தப்பட்டு வருகின்ற தூர்தர்ஷன் நெட்வொர்க்கில்
பணிபுரிகின்ற ஸ்மிதா பாட்டீல் நடித்த பிரியா என்ற கதாபாத்திரம் தனது அறையில்
அலுவலக நாற்காலிக்கு மேலே அம்பேத்கர் உருவப்படத்தை வைத்திருந்தது. பிறப்பால் பஞ்சாபியாக
இருந்த அந்த திரைப்படத்தின் இயக்குனரான ஜே.ஓம்பிரகாஷிடம் பஞ்சாபில் பிறந்த பகுஜன்
தலைவரான கன்ஷிராம், அவர் ஆற்றிய பணிகள் குறித்த அறிவு இருந்திருக்கும் என்றே நான்
கருதுகிறேன்.
அகிர் கியோன் (1985) திரைப்படத்தில் ராஜேஷ் கண்ணா
1989இல் ராஜீவ்காந்தி அரசாங்கம் வீழ்ச்சியடைந்த
பிறகு அடுத்து வந்த வி.பி.சிங் அரசாங்கம் அம்பேத்கர் என்ற முத்திரையைத்
துரிதப்படுத்தியது. இறுதியாக பாராளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் அம்பேத்கரின்
உருவப்படம் நிறுவப்பட்டது. 1991ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் என்ற
கவுரவத்துடனான பாரத ரத்னா விருதும் அம்பேத்கருக்கு வழங்கப்பட்டது.
அதற்குப் பிறகு 1992-93ஆம்
ஆண்டில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், தூர்தர்ஷன் சார்பில் அம்பேத்கரின்
வாழ்க்கை குறித்து ‘டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மீதான சிறப்பு திரைப்படம்’ என்ற தலைப்பிலே வாழ்க்கை
வரலாற்று ஹிந்தி தொடரை வெளியிடப்பட்டது.
பிரதான
திரைப்படங்களில் பிரதிநிதித்துவம்
அம்பேத்கரை பிரதானமான
திரைப்படங்களில் காட்டுவதற்கான செயல்முறை மிக மெதுவாகவே நடந்தது என்றாலும் இன்று ஹிந்தி
திரைப்படங்களில் அம்பேத்கரின் படம்
முன்பை விட அதிக அளவிலே காட்டப்படுகிறது.
இந்தியா சார்பில் 2017ஆம்
ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுக்குச் சென்ற ராஜ்குமார் ராவ் நடித்த நியூட்டன் என்ற திரைப்படத்து
கதாநாயகனின் வீட்டு சுவர்களில் அம்பேத்கர் இருப்பது முக்கியமாகக் காட்டப்படுகிறது.
அந்த திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான நியூட்டன் மறைமுகமாக தலித்தாகவே
சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.
நியூட்டனில் ராஜ்குமார் ராவ் (2017)
2017ஆம் ஆண்டு வெளியான
அக்ஷய் குமார் நடித்த ஜாலி எல்.எல்.பி2 திரைப்படத்தில் அம்பேத்கரின் உருவப்படம்
நீதிபதியின் அறையில் அவரது மேசைக்குப் பின்னால் காந்தியுடன் இணைந்து பல
காட்சிகளில் இருக்கின்றது.
ஜாலி எல்.எல்.பி 2 (2017)வில் சௌரப் சுக்லா
நியூட்டன் (2017), ஜாலி
எல்எல்பி 2 (2017), முக்காபாஸ் (2017), ஆர்ட்டிக்கிள் 15 (2019), நெட்ஃபிக்ஸ்
தொடரான சேக்ரட்
கேம்ஸ் (2018), ராத் அகெலி ஹை (2020) என்று தொடர்ந்து அம்பேத்கரின் படம் ஹிந்தி திரைப்படங்களில்
வழக்கமான நிகழ்வாக மாறியிருப்பதைக் காண்கிறோம்.
ஜீ என்டர்டெயின்மென்ட்
& டிவியில் வெளியான ‘ஏக் மஹாநாயக் - டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்’ தொலைக்காட்சி
சீரியல், ஸ்டார் பிரவா/ஹாட்ஸ்டாரில் வெளியான ‘டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்:
மகாமன்வாச்சி கவுரவ் கதா’ என்ற இருநூற்று
ஐம்பதுக்கும்
மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்ட மராத்தி சீரியல் போன்றவை சமீபத்திய ஆண்டுகளில்
மிகவும் பிரபலமாகி உள்ளன. பல மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு அவை ஒளிபரப்பப்பட்டுள்ளன.
இதற்கிடையில் மராத்தி
திரைப்பட இயக்குனரான நாகராஜ் மஞ்சுலே விருது பெற்ற ஃபான்ட்ரி (2013), சாய்ராத்
(2016) போன்ற சமகால சாதி இயங்கியல்
திரைப்படங்களின் மூலம் மிகவும் வெற்றிகரமாக ஜப்பார் படேலின் பாரம்பரியத்தை
முன்னெடுத்துச் சென்றிருக்கிறார். ஃபான்ட்ரியில் தலித் கதாபாத்திரமான ஜப்யா தனது
பள்ளிக்கு முன்னால் இறந்து போன பன்றியைச் சுமந்து செல்ல வேண்டிய காட்சியின்
பின்னணியில் அம்பேத்கரின் சுவரோவியத்தைக் கடந்து செல்வதுஇந்திய சினிமாவின் நெஞ்சத்தைத் தொடுகின்ற காட்சிகளில் ஒன்றாக அமைந்திருந்தது.
மராத்தி திரைப்படமான ஃபான்ட்ரி (2013)
சுவர்களை கேன்வாஸாக மிகச் செறிவாக தமிழ் திரைப்பட இயக்குனரான
பா.ரஞ்சித் பயன்படுத்துகிறார். அம்பேத்கரின் சிலை, பள்ளியின் சுவர்களில்
பொருத்தப்பட்டிருக்கும் சட்டகத்துடனான அம்பேத்கரின் புகைப்படம் இரண்டையும் ரஞ்சித்தின்
முதல் திரைப்படமான அட்டகத்தி (2012) கொண்டிருந்தது. கபாலி (2016), காலா (2018)
ஆகியவற்றில் ரஞ்சித் ஒரு படி மேலே சென்றிருந்தார். அம்பேத்கர், காந்தியை கபாலியில்
இணைத்துக் கொண்ட அவர், காலா திரைப்படத்தின் உரையாடலில் காவல்துறை அதிகாரி ஒருவர்
போராட்டத்தில் கலந்து கொண்டு தன்னை தலித் என வெளிப்படுத்தும்போது தலித் பகுஜன்
வாழ்த்தான 'ஜெய்பீம்' என்று கூறுவதை சேர்த்திருந்தார். இந்திய திரைப்படம் ஒன்றில் முதன்முறையாக
புத்த விகார் ஒன்று காலாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
காலாவில் ரஜனிகாந்த் (2018)
இன்னும்
அதிகம் மாற வேண்டும்
தலித் இயக்குனர்களால்
இயக்கப்படாத அல்லது சாதி அடையாளம், பாகுபாடு குறித்ததாக இல்லாத திரைப்படங்களில்
கூட இன்றைக்கு பி.ஆர்.அம்பேத்கரின் உருவப்படங்கள் திரைப்படங்களின் பின்னணியின் ஒரு
பகுதியாக - வீடுகள், காவல் நிலையங்கள் அல்லது நீதிமன்ற அறைகளின் சுவர்களில் இடம்
பிடித்து வருகின்றன. தேசத்தைக்
கட்டியெழுப்புவதில் அம்பேத்கருக்கு இருந்த பங்கு அதிக அளவில் ஏற்றுக் கொண்டிருப்பதையே
அது குறிப்பதாக இருக்கிறது.
காட்சி மற்றும்
பொதுமக்கள் கலாச்சாரத்தில் அம்பேத்கரின் எழுச்சியானது ஆரம்ப கட்டத்தில் பகுஜன்
சமாஜ் கட்சியின் எழுச்சியுடன் ஒத்துப் போயிருந்திருக்கலாம். ஆனால் இப்போது அது
வேறொரு நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக ஓபிசிகளும், முஸ்லீம்களும் இன்றைக்கு அம்பேத்கரைப் பின்தொடரத் தொடங்கியுள்ளதால்,
எந்தவொரு அரசியல் கட்சியாலும் அவரைப் புறக்கணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
ஷாஹீன் பாக் போராட்டத்தில் அம்பேத்கரின் படத்துடன் பெண்கள்
அம்பேத்கர் இப்போது வெறுமனே ‘தலித்’ உருவமாக மட்டும்
இருக்கவில்லை. அவர் இப்போது பகுஜன் உறுதிப்பாடு, பெண்கள் அதிகாரம், மாணவர்
இயக்கங்கள், மிக முக்கியமாக மனித உரிமைகள், ஜனநாயக விழுமியங்களின் சின்னமாக இருந்து
வருவது குடியுரிமை சட்டத் திருத்தங்களுக்கு எதிராக நாடு தழுவி நடைபெற்ற
போராட்டங்களின் போது அம்பேத்கரின் சுவரொட்டிகள், புகைப்படங்கள், எழுத்துக்கள்
பரவலாகப் பகிரப்பட்ட போது தெளிவாகக் காணப்பட்டது. புது தில்லியின் ஷாஹீன் பாக்
மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் நடைபெற்ற போராட்டங்களிலும் அவருடைய படங்கள் முக்கியமான
இடத்தைப் பிடித்தன. வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா போன்ற காந்தியர்கூட
பெங்களூர் டவுன் ஹாலுக்கு வெளியே அம்பேத்கரின் புகைப்படத்தை வைத்திருந்த போதே கைது
செய்யப்பட்டார்.
இயக்குனர் பா.ரஞ்சித் கூறியதைப் போல உரையாடல்கள் அல்லது இசை என்று எதுவுமில்லாமலே சமூக யதார்த்தங்களை தங்கள் வசம் கைப்பற்றிக் கொள்வதாக திரைப்படங்களில் வருகின்ற பின்னணிக் காட்சிகள் இருப்பதால், அவற்றிற்கென்று மிகப் பெரிய ஆற்றல் இருக்கிறது. காந்தியைக் காட்டும் போது அல்லது குறிப்பிடும் போது அது எவ்வாறு அதிகம் அர்த்தப்படுத்தப்படாமல் இருக்கிறதோ அதைப் போலவே தங்களுடைய திரைப்படங்களின் பின்னணியில் அம்பேத்கரை இடம்பெற வைக்கின்ற இயக்குநர்களும் அம்பேத்கருடைய அரசியல் சித்தாந்தத்தை வெளிப்படையாக ஆதரிக்காதவர்களாகக்கூட இருக்கக்கூடும். அந்த இயக்குநர்களால் அப்படி ஏதேனும் திரைப்படங்களில் காட்டப்பட்டிருந்தால், சமூக-அரசியல் யதார்த்தத்தைப் பற்றி அவர்கள் அதிகம் அறிந்திருக்கிறார்கள், தாங்கள் அறிந்திருப்பதை வெளிப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதையே அது காட்டுகிறது. காரணங்கள் எதுவாக இருந்தாலும் திரைகளிலும், நிஜ வாழ்க்கையிலும் இவ்வளவு காலம் அம்பேத்கரைப் புறக்கணித்து வந்த நாட்டில் பிரதான நீரோட்டத்தில் அனைவரும் எளிதில் உணரக் கூடிய வகையில் அம்பேத்கர் இன்றைக்கு தோன்றிக் கொண்டிருக்கிறார்.
அம்பேத்கரின் உருவப்படத்தைக் காட்டுவதற்கே இவ்வளவு காலம்
ஆகியிருக்கிறது என்றால், அந்த தலைவர் குறித்த மக்களின் புரிதலில் இருக்கின்ற மிகப்
பெரும் இடைவெளியைக் கற்பனை செய்து பாருங்கள். அவருடைய உருவப்படத்தை உங்களுடைய சுவர்கள்
ஏற்றுக் கொள்வதற்கு நீங்கள் முற்போக்கான மனநிலை கொண்டவராக இருக்க வேண்டும் என்ற
காரணம் இருந்து வருவதற்கு இன்னும் அவர் சமூக நீதி நாயகனாக அல்லது தீவிர பகுஜன்
தலைவராகக் கருதப்படுவதே காரணமாக இருக்கிறதே தவிர இந்திய குடியரசை நிறுவியவர் அவர் என்ற
காரணத்தால் அல்ல. மிகச் சாதாரண திரைப்பட தயாரிப்பாளர்களின் கதைக்களங்கள் மற்றும்
திரைக்கதைகளில் அவருடைய லட்சியங்கள் வருவதற்கும், பன்முகத்தன்மை கொண்ட நடிகர்கள்,
கதாபாத்திரங்கள், கதைக்களங்களில் அதிகமாக அவை தோன்றுவதற்கும் நீண்ட பெருமுயற்சி
தேவைப்படுகின்ற பயணம் தேவைப்படுவதாக இருக்கின்றது.
https://theprint.in/opinion/lights-camera-caste-an-ambedkar-photo-made-it-to-bollywood-after-38-yrs-of-independence/478068/


















Comments
நானும் ‘ஆளே வராவிட்டாலும்’ என் கடையில் blogல் தொடர்ந்து டீ ஆற்றிக் கொண்டுதான் இருக்கிறேன்.வாசிப்புகள் அத்தனை குறைந்து போய் விட்டது.
https://dharumi.blogspot.com/2021/03/1156.html