ஜோகன்னா தீக்ஷா
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
அனிதாவின்
முதலாமாண்டு நினைவு தினத்தன்று (2018 செப்டம்பர் 1)
நியூ
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் எட்எக்ஸ் பகுதியில்
ஜோகன்னா
தீக்ஷாஎழுதி வெளியான கட்டுரை
கேமரா செக். மைக் செக். அவசரமாக வெண்ணெய் தடவிய
இரண்டு ரொட்டி துண்டுகள். செக்.
அரியலூரில் உள்ள குழுமூருக்குச் செல்லும் ஐந்து
மணி நேரப் பயணத்திற்கு நாங்கள் தயாராக இருந்தோம். சரியாக 261.1 கிலோமீட்டர். அந்த
கிராமம் செய்திகளில் அடிபட்டு ஒரு வருடம் ஓடி விட்டது. பதினேழு வயதான எஸ்.அனிதா தற்கொலை செய்து கொண்டு ஒரு வருடம் ஆகி
விட்டது. அவளைப் பற்றி நினைக்கின்ற போதெல்லாம், அவளுடைய முகம் மட்டும் இருக்கிற
படம் உடனடியாக என் நினைவில் தோன்றும். அவள் இறந்த போது தெருக்கள் அனைத்தும் அவளுடைய
பேனர்களாலும், அனைவரின் டைம்லைனும் அவளுடைய புகைப்படங்களாலும் நிறைந்து
போயிருந்தன.
2018 ஆகஸ்ட் 26 அதிகாலை 5.10 மணி
அந்த முகம் எளிதில் மறக்கக் கூடியது அல்ல.
நம்மால் எளிதில் மறக்க முடிகின்ற முகமும்
அல்ல. அந்த முகம் இன்னமும் என்னுடைய நினைவில் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதன்
காரணமாகவே அவள் விட்டுச் சென்றிருக்கும் நினைவுகளைத் தொடர்ந்து நான் இதை எழுத
முனைந்தேன்.
நேர்காணலுக்காக
அவளுடைய அண்ணன் எஸ்.மணிரத்னம் எங்களைச் சந்திக்க ஒப்புக் கொண்டிருந்தார், அதற்கான
நாளையும், நேரத்தையும் நாங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டோம். நாங்கள் அந்த
இடத்திற்கு மிக அருகில் வந்து சேர்ந்த போது மீண்டும் அவர்களுடைய இருப்பிடம்
இருக்கும் இடத் உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும், அங்கே சென்று சேர்வதற்கான
வழியைக் கேட்டறிவதற்காகவும் தொலைபேசியில் அவரை அழைத்தேன். அவர் ‘அனிதா என்று
சொன்னாலே எல்லோருக்கும் தெரியும்’ என்று கூறினார். அது ஒரு வகையில் என்னை அச்சுறுத்துவதாக
இருப்பதாகவே நான் நினைத்தேன். அனிதாவின் முதலாமாண்டு நினைவு நாளுக்கு இன்னும் ஒரு
சில நாட்கள் மட்டுமே இருந்தன. குழுமூரின் பசுமையான நிலப்பகுதிகளைச் சென்றடைந்த
வேளையில் நாங்கள் அங்கே பேனர்கள், சுவரொட்டிகளைத் தேடினோம். அப்படி எதுவும்
எங்களுடைய கண்களில் தென்படவில்லை.
அந்த
சிறிய நகரத்திற்குள் நுழைந்த நாங்கள் மெதுவாக நகர்ந்து கொண்டே மீண்டும்
மணிரத்னத்தை அழைத்தோம். இன்னும் சிறிது தொலைவு காரை ஓட்டி வர வேண்டும் என்று அவர்
கூறினார். என்னுடைய நண்பர் ‘தலித்துகளை
நகரத்திற்குள் வசிக்க அனுமதிக்க மாட்டார்கள். உமாராணி ஞாபகமிருக்கிறதா’ என்று
கேட்ட போது, ஒரு சில மாதங்களுக்கு முன்னர் நான் தயாரித்திருந்த கட்டுரைக்காக தலித்
கலைஞரான உமாராணி தங்களைக் கிராமத்திற்கு வெளியே எவ்வாறு மற்றவர்கள் ஒதுக்குப்புறத்திற்குத்
தள்ளி வைக்கின்றனர் என்பதை என்னிடம் பகிர்ந்து கொண்டது நினைவில் வந்து போனது.
பெரியாரின் பக்கத்தில்
அப்போது காலை பத்து மணி. அம்பேத்கர், பெரியார்
ஆகியோரின் புகைப்படத்துடன் சேர்ந்து அனிதாவின் படமும் இருக்கின்ற பெரிய விளம்பரப்
பலகையை நாங்கள் அங்கே கண்டோம். அனிதா திடல் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எங்களை அணுகிய மணி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் ‘முதலில் லைப்ரரிக்குப்
போகலாமா?’ என்று கேட்டார். குழப்பம் அடைந்த நான் எந்த லைப்ரரி என்று அவரிடம்
கேட்டேன். ‘அனிதாவிற்கு கட்டின லைப்ரரி’ என்று சொன்ன அவர் எங்களை அந்த
நூலகத்திற்கு வழிநடத்திச் சென்றார். இப்போதைக்கு அங்கே சென்று விட்டு, மனதளவில்
சரியான பிறகு விரிவாக அது குறித்த விவரங்களை பின்னர் தெரிந்து கொள்ளலாம் என்று
தீர்மானித்தோம். அந்தக் கட்டிடத்திற்கு வெளியே புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தது.
தாய்லாந்தில் இருந்து யாரோ ஒருவர் அந்த நூலகத்திற்காக அந்தச் சிலையை அனுப்பி வைத்திருப்பதாக
அனிதாவின் இன்னொரு அண்ணனான அருண்குமார் சொன்னார்.
அந்தக் கட்டிடத்தில் இன்னமும் வேலை நடந்து
கொண்டிருந்ததால் உண்மையில் அங்கே நூலகத்திற்கான எதுவும் இன்னும் அமைக்கப்படவில்லை.
ஆனாலும் அறையின் ஒரு மூலையில் அனிதா, பெரியார், மார்க்ஸ், அம்பேத்கர் என்று
நால்வரின் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. நான் சற்றே நின்று அனிதாவின் படத்தின் மீது
மட்டும் வெளியில் இருந்து வருகின்ற வெளிச்சம் எப்படி விழுகிறது என்று கவனித்தேன்.
அரியலூரில் உள்ள மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாக இருக்கும் வகையில் அந்த நூலகத்தைக்
கட்டுவதற்கு தாங்கள் திட்டமிட்டிருப்பதாக மணி சொன்னார். நான்கு கணினிகளைக் கொண்டு
பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
வருகின்ற செப்டம்பர் ஒன்றாம் நாள் அனிதாவின் முதலாமாண்டு நினைவு தினத்தன்று
அவர்கள் அதைத் திறந்து வைக்கப் போகிறார்கள்.
நூலகத்திற்கு பின்னர் திரும்பி வரலாம் என்று
மணியிடம் தெரிவித்த நான் வீட்டிற்குப் போகலாமா என்று கேட்டேன். நாங்கள் அவர்களுடைய
வீட்டிற்குச் சென்றோம். வீட்டிற்குச் செல்லும் பாதையில் அவரைத் தவற விட்ட போது ‘நண்பா, இங்கே’ என்று அவர் எங்களை அழைத்தார்.
அனிதா பிறந்து வளர்ந்து, பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்ட அந்த மிகச்சாதாரண
வீட்டிற்குள் நாங்கள் நுழைந்தோம். நுழைவாயிலில் அவளுடைய தாத்தா அமர்ந்திருந்தார்.
அவளுடைய அண்ணன் அருண்குமாரும் அங்கே இருந்தார். அங்கே உட்கார்ந்து மணியின்
முன்னால் மைக்கை வைத்து, கேமராவை நிலை நிறுத்தி அந்த உரையாடலை நாங்கள் துவங்கினோம்.
அனிதா பிறந்த 2000ஆம் ஆண்டு மார்ச் 5க்கு முன்பிருந்து தொடங்கி சொல்ல வேண்டும்
என்று நான் அவரிடம் கேட்டுக் கொண்டேன்.
‘பாப்பா பிறந்தபோது நான் ஐந்தாம் வகுப்பு
படித்துக் கொண்டிருந்தேன். உயர்நிலைப் பள்ளியில் நான் படிக்கும் போது
பள்ளிப் படிப்பை அவள் ஆரம்பித்ததும், உயர்நிலைப் பள்ளியில் அவள் இருந்த போது, நான்
கல்லூரியில் இருந்ததும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. கடைசியாக தங்கை
பிறந்தது குறித்து நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தோம்’ என்று மணி கூறினார்.
அவருடைய பெற்றோர் ஒரு பெண் குழந்தை
வேண்டுமென்று பல ஆண்டுகளாக ஏங்கிக் கொண்டிருந்தனர். அதற்காக அவர்கள் பல
கோவில்களுக்கும் சென்று வந்தனர். நான்கு மகன்கள் இருந்த போதும், வீடு காலியாக
இருப்பதைப் போன்ற வெறுமை இருந்ததால் அனிதா - வீட்டில் அவர்கள் அழைப்பதைப் போல
பாப்பா - பிறந்த வேளையானது ஏழ்மை நிறைந்த அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சி நிரம்பிய
அரிய தருணங்களில் ஒன்றானது. இன்றளவிற்கும் அந்த வறுமை கடுமையாக நீடிக்கிறது. ‘இன்றுவரையிலும்
நாங்கள் தினந்தோறும் ரேஷன் அரிசி மட்டுமே சாப்பிட்டு வருகிறோம். எங்கள் பெற்றோர்
முற்றிலும் படிக்காதவர்கள். தங்களுடைய பெயர்களை எழுதி அவர்களுக்கு கையெழுத்துப்
போடக்கூடத் தெரியாது’ என்று அவர் விளக்கினார்.
அனிதாவின் மரணத்தைத் தொடர்ந்து வெளியான அனைத்து
செய்திகளிலும் அவளிடமிருந்த அர்ப்பணிப்பு, படிப்பின் மீது அவளுக்கிருந்த ஆர்வம்
ஆகியவை பற்றியே விவரிக்கப்பட்டிருந்தன. ‘ஒரு முறை பாப்பா கையை உடைத்துக் கொண்ட போது,
அவளுடைய வகுப்பு ஆசிரியர் அவளை வீட்டிலேயே தங்கிக் கொள்ளுமாறு சொல்லியிருந்தார்.
ஆனாலும் ‘ஆசிரியர் கூறுவதை கேட்டுக் கொண்டிருப்பதைத் தவிர வேறு எதையும்
பள்ளிக்குச் சென்று செய்ய வேண்டிய தேவையில்லை என்பதால், வீட்டில் சும்மா
உட்கார்ந்திருப்பதைவிட பள்ளிக்குச் செல்வதே மிகச் சிறந்தது’ என்று என்னிடம் அவள்
கூறினாள். நாங்கள் முதல் தலைமுறை மாணவர்கள் என்பதால், எங்கள் பெற்றோர்கள்
வீட்டுப்பாடங்களை நாங்கள் செய்து முடித்து விட்டோமா அல்லது எங்களுடைய படிப்பு
எவ்வாறு இருக்கிறது என்பது போன்ற கேள்விகளை ஒருபோதும் கேட்டதே இல்லை என்றாலும்
அவள் மிகவும் தீவிரமாகப் படிக்கும் மாணவியாகவே இருந்தாள். பள்ளியில் சேர்ந்ததில்
இருந்தே வகுப்பில் முதலிடம் பெறுபவளாகவே அவள் இருந்து வந்தாள்’ என்று கூறினார்.
நீங்கள் மருத்துவர் ஆக விரும்புபவர் என்றால்
உங்களிடமிருந்து சிலவற்றை எதிர்பார்க்கலாம். அவளிடம் எம்பிபிஎஸ் இடத்தைப் பெற்று
விட வேண்டும் என்ற தணியாத ஆர்வம் இருந்தாலும் அவள் ஒருபோதும் அதுபோன்று நடந்து
கொண்டதே இல்லை என்று மணி கூறினார். இது வேண்டும் என்று பாப்பா ஒருபோதும் எங்களிடம்
கேட்டதே இல்லை. நாங்கள்தான் அவளிடம் எதுவும் வேண்டுமா என்று கேட்க
வேண்டியிருந்தது.
அவள் எப்போதும் மிகவும் பயந்த சுபாவத்துடன்
இருப்பவள். யாருடனும் பேசுவதில்லை. எங்களுடன் கூட... ஆனாலும் பள்ளிக்கூடம்
தொடர்பாக ஏதாவது செய்ய வேண்டுமென்றால் அவள் ஒருபோதும் சமரசம் செய்து கொள்வதே கிடையாது.
வீட்டிற்கு வந்த அடுத்த நிமிடம் அவள் அதை எங்களிடம் கேட்பாள். பள்ளிக் கட்டணம்
செலுத்துவதை ஒருபோதும் அவள் தாமதப்படுத்தியதே இல்லை. சரியான நேரத்தில் கட்டணத்தைச்
செலுத்துவதை எப்போதும் அவள் உறுதி செய்து கொள்வாள். எல்லா விதிகளையும் மிகத்
தீவிரமாக எடுத்துக் கொள்வாள். பூக்கள் வைக்கக் கூடாது அல்லது பொட்டு வைக்கக்
கூடாது என்று அவளிடம் பள்ளியில் சொல்வதாக வைத்துக் கொள்வோம், அந்த விதிமுறையை அவள்
மறுக்காமல் பின்பற்றுவாள். இங்கிருப்பவர்கள் எப்போதும் என் தந்தையிடம், என்ன ஒரு
புத்திசாலித்தனமான பெண், கீழ்ப்படிதலுள்ள பெண், அவளுக்கு பிரகாசமான எதிர்காலம்
இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்’ என்று என்னிடம் கூறிய மணியின்
உதடுகளில் தோன்றிய லேசான புன்னகை அடுத்த நொடியில் அவரிடமிருந்து மறைந்தது.
தனது தாய் குறித்து அவர் என்னிடம் பேசிய போது, தாய்க்கு
உடம்பு சரியில்லாத போது தேவையான மருத்துவ உதவி கிடைக்கவில்லை என்பதாலேயே அனிதா
தான் ஒரு டாக்டர் ஆக விரும்பினாள் என்று அனிதாவின் பள்ளி ஆசிரியர் சொன்னது தனக்கு
நினைவில் இருப்பதாக கூறினார். ‘ஆமாம், அது உண்மைதான், நாங்கள் சற்று முன்பே மருத்துவமனைக்கு
வந்திருந்தால் காப்பாற்றப்பட்டிருப்பார்’ என்று இறுதியாக நாங்கள்
மருத்துவமனைக்குச் சென்ற போது எங்களிடம் டாக்டர் சொன்னார் என்று கூறிய அவர் மேலும்
அமைதியாக ‘இப்போதும்கூட எங்களுக்குப் பக்கத்தில் எந்தவொரு மருத்துவமனையும் இல்லை’
என்று கூறினார்.
பகுத்தறிவு, சுயமரியாதை,
பெரியாரியம் கொண்டு வளர்க்கப்பட்டவள்
காலை 11 மணிக்கு சற்று முந்திய நேரம் என்றாலும்
அந்த வீடு இன்னும் இருட்டாகவே இருக்கிறது. என் நண்பர் கேமராவை சரிசெய்து
கொண்டிருந்த போது எனது கண்கள் மீண்டும் அந்த வீட்டைச் சுற்றிச் சுழன்றன. டாக்டர்
அனிதா என்று அவளுடைய பெயர் குறிப்பிடப்பட்ட மிகப் பெரிய படம் அங்கே இருந்ததை நான்
கவனித்தேன். வாழ்ந்த போது இல்லாவிட்டாலும், மரணத்திற்குப் பிறகு அவளுடைய குடும்பம்
அவளது ஆன்மாவை உயிரோடு வைக்க முயன்றிருந்தது. ‘அனிதா இரண்டாம் வகுப்பில் படித்துக்
கொண்டிருந்தபோது எங்கள் தாயார் இறந்து போனார், அப்போதிருந்தே நான்கு சகோதரர்கள்,
எங்கள் தந்தை, அனிதா ஆகியோரை எங்கள் பாட்டிதான் கவனித்துக் கொண்டார்’ என்று மணி
கூறினார். கோழிக்குஞ்சு மெதுவாக அறைக்குள் நுழைவதைப் போன்று எனது பார்வையை உள்ளே
செலுத்திய நான் இவ்வாறு ஆண்கள் நிறைந்த வீட்டில் வளர்ந்திருந்தால்
எவ்வாறிருந்திருக்கும் என்று எண்ணிய போது வியப்பில் ஆழ்ந்தேன்.
கேமரா இப்போது தயார்… நாங்கள் மீண்டும்
துவங்கினோம்.
அம்பேத்கர், பெரியாரின் கொள்கைகளைக்
கடைப்பிடித்து வருபவன் என்ற முறையில், என்னுடைய தங்கையும் அந்த கொள்கைகளைக்
கொண்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். அவளிடம் நாம் சாப்பிடும் ஒவ்வொரு
அரிசியிலும் அம்பேத்கர் இருப்பதாக நான் கூறுவேன். நாங்கள் அனைவருமே ஆண்களாக
இருப்பதால், வீட்டிலுள்ள ஒரே பெண்ணான அவள் ஒருபோதும் எந்த வகையிலும் பெண்' சார்ந்து
இருந்து வருகின்ற பொறுப்புகளோடு பிணைக்கப்பட்டு விடக்கூடாது என்று அந்த அண்ணன்
சொன்ன போது, இவ்வாறெல்லம் நடக்குமா என்று எண்ணி நாங்கள் ஆச்சரியமடைந்தோம். ‘சாப்பிட்டு
முடித்த பிறகு எங்களுடைய தட்டுகளைக் கழுவுவது அவளுடைய வேலை இல்லை என்பதை நான்
அவளிடம் அடிக்கடி கூறுவேன். நாங்களே எங்கள் தட்டுகளைக் கழுவினோம். வீட்டிற்குள்
நான் நுழையும் போது அவள் எழுந்து நிற்கக் கூடாது என்றும் நான் அவளிடம் சொல்லி
வந்தேன். யாரையும் விட தான் குறைவானவள் என்பதாக அவள் ஒருபோதும் நடந்து கொள்ளக்
கூடாது என்றும் அவளிடம் சொல்லியிருந்தேன்’ என்று மணி கூறினார்.
நகரங்களில் வசிக்கும் நாம் இன்னும் சானிட்டரி
பேட்களை பிளாஸ்டிக் கவர்களுக்குள் வைத்து மறைத்துக் கொள்கிறோம். ஆனால் அனிதாவிடம்
இளம் வயதிலேயே மாதவிடாய் குறித்து மணி பேசியிருக்கிறார். ‘அவளுக்குத் தேவையான
சானிட்டரி பேட்களை நான்தான் வாங்கி கொடுப்பேன். எந்தவொரு அண்ணனிடமும் தனக்குத்
தேவையான எதையும் கேட்பதற்கு ஒருபோதும் அவள் தயங்கக் கூடாது என்று அவளிடம்
சொல்லியிருக்கிறேன். காதல், ஈர்ப்பு போன்ற விஷயங்களைக் கூட நான் அவளிடம்
விவாதித்திருக்கிறேன். பத்தொன்பது வயதிற்குப் பிறகு அவள் விரும்பியதைச் செய்து
கொள்ளலாம் என்றும், பையன்களுடன் நட்பு கொள்ளத் தயங்கக் கூடாது என்றும் நான்
அவளிடம் சொல்வேன். ஏதாவது சந்தேகம் இருந்தால், அது என்னவாக இருந்தாலும் என்னிடம்
கேட்கும்படி நான் அவளிடம் சொல்வேன்’ என்று அவர் ஞாபகப்படுத்திக் கொண்டார்.
அனிதா இறந்தபோது சமூக ஊடகங்களில் வழக்கமான கிண்டல்கள் தொடங்கின.
‘தற்கொலை ஒரு வழி அல்ல’, ‘ஏழைப் பெண்ணுக்கு உளவியல் ஆலோசனை கிடைக்கவில்லை’, ‘பெற்றோர்கள்
அதிக அழுத்தம் கொடுத்தனர்’ என்று தற்கொலைக்கு பிந்தைய மனோபாவம் மக்களிடமிருந்து
வெளியானதை நான் நினைவு கூர்ந்தேன். அவளிடம் நீட் தேர்வு ஏற்படுத்தியிருந்த
தாக்கத்தை தவிர மற்ற அனைத்தையும் குறை கூற இந்த உலகம் தயாராக இருந்தது. நிச்சயமாக
தற்கொலை ஒருபோதும் சரியான வழி அல்ல. ஆனால் இங்கே ஒரு மாணவி தனது வாழ்க்கையில் மிக
முக்கியமானதாகக் கருதிய 1176/1200 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார். அரியலூர்
முழுமைக்குமாக கணிதம் மற்றும் இயற்பியலில் சதம் பெற்ற ஒரே ஒருவர் அவர் மட்டும்
தான். ஆனாலும் அவளுடைய சகோதரனுடன் உட்கார்ந்து, அந்த மதிப்பெண்கள் ஏன்
போதுமானவையாக இல்லை, அரசாங்கம் மருத்துவப் படிப்பிற்கான இடம் பெறுவதற்கு
அவளுக்குத் தகுதி இல்லை என்று நினைக்கும் அளவிற்கு அவளுடைய மதிப்பெண்கள் ஏன்
போதுமானவையாக இருக்கவில்லை என்பதைப் பற்றி நான் இப்போது பேச வேண்டியதாகி விட்டது.
தன்னால் முடிந்த அனைத்தையும், தன் வலிமைக்குள்
இருந்த அனைத்தையும் அனிதா செய்து வந்தாள். அவள் ஒருபோதும் குடும்பத்தினரின்
அழுத்தத்திற்கு ஆளானதேயில்லை. தேவையான அனைத்து ஆதரவும் அவளுக்குக் கிடைத்தது. தனது
வாழ்க்கையில் பெரியாரிய - அம்பேத்கரிய தாக்கங்களை அனிதா கொண்டிருந்தது மணி
சொன்னதிலிருந்து தெரிய வருகிறது. அவள் தோன்றிய சில வீடியோக்களில், இறுதியில்
எப்போதுமே ‘ஜெய்பீம்’ என்று அவள் சொல்லி வந்தது எனக்கு நன்றாக நினைவில்
இருக்கிறது. பெரும்பாலானவர்களைப் போல அவள் அதை ஒருவரின் தூண்டுதலால் சொல்கிறாளா
அல்லது தன் விருப்பப்படி சொல்கிறாளா என்று கூட நான் யோசித்ததுண்டு. தான் என்ன
சொல்கிறோம் என்பது பதினேழு வயதான அந்த அப்பாவிக் குழந்தைக்கு நன்றாகவே
தெரிந்துதான் இருந்திருக்கிறது என்பது இப்போது தெரிய வருகிறது.
பணத்தைப் போலவே மருத்துவப்
படிப்பும் அவளுக்கு எட்டாததாகிப் போனது
இந்த அண்ணன் படிப்பதற்காக வெளியூரில் இருந்த போது,
அவரும்
தங்கையும் அடிக்கடி கடிதம் எழுதிக் கொள்வார்கள். வேறு வகையில் அவளால் தன்னுடன் பேச
முடியாது என்பதால் கடிதம் எழுதுவதை அண்ணன் பரிந்துரைத்திருந்தார். அவர்கள் இருவரும்
தங்கள் கிராமத்தில் மாற்றத்தை எவ்வாறு கொண்டு வருவது என்பதைப் பற்றி அடிக்கடி
பேசிக் கொண்டார்கள். ‘அவளுடைய கல்விக் கட்டணத்தை எங்களால் செலுத்த முடியாமல்
போகலாம் என்று என் தந்தை சில சமயங்களில் கவலைப்படுவார். ஆனால் நம்மிடம் இருக்கின்ற
நிலத்தை எப்போது வேண்டுமானாலும் விற்க முடியும் என்றும் அவரிடம் கூறுவேன்.
கல்விதான் நமக்கு மிகவும் முக்கியம். அதற்குப் பிறகு எளிதாக சம்பாதித்து கடன்களை
அடைத்து விட முடியும் என்று சொல்வேன்’ என்றார்.
ஆனால் வெறுமனே பணம் குறித்த பிரச்சனையாக மட்டுமே
அது இருக்கவில்லை. தனது மகளை தனியாக இந்த
மோசமான உலகத்திற்குள் அனுப்புவது குறித்தும் சண்முகம் கவலைப்பட்டார். ‘வெளியுலகம்
குறித்த பார்வை அவளுக்குத் தேவை என்று அவரிடம் எப்போதும் கூறுவேன். அவளை அவர்
மிகவும் நேசித்தார். ஓர் அண்ணனாக, என்னுடைய தங்கையை இழந்ததால் நான் உணருகின்ற வலி
ஒருபோதும் என்னுடைய தந்தையின் வலிக்கு இணையாகாது’. அவள் பள்ளிக்குச் செல்லும்போது
நிறைய தின்பண்டங்களை அவளுடைய தந்தை எப்போதும் வாங்கிக் கொடுத்து அனுப்பி
வைப்பதால், ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவள் என்று தன்னை யாரும் நம்ப மறுப்பதாக
அனிதா என்னிடம் கூறுவாள் என்று மணி கூறினார்.
ஒருவருக்கான விருப்பங்கள் பெரும்பாலும்
பிறரிடமிருந்து பெறப்படுபவையாக அல்லது பரம்பரையாக வருவதாகச் சொல்லப்படுவதுண்டு.
அவள் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற மணியின் விருப்பமே அவள் மருத்துவம் படிக்க
விரும்பியதற்கான காரணமாக இருந்தது. தனது தங்கை தொலைதூரத்திற்குச் சென்று
விடுதியில் தங்கிப் படிக்க வேண்டுமென்று விரும்பியதால், அவர் அனிதாவை அங்கிருந்து
வேறு ஊருக்குச் செல்லுமாறு வற்புறுத்தி வந்தார். ‘இங்கே கிராமத்தில் இருக்கும்
எங்கள் பெண்கள் காலை ஐந்து மணிக்கு எழுந்து வயல்களுக்குச் சென்று ஆண்களுக்கு
முன்பாக தங்கள் காலைக்கடன்களை முடித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இங்கே
கழிப்பறைகள் கிடையாது. கழிப்பறை வசதிகள் அவளுக்கு கிடைக்கும் என்பதாலேயே அனிதா
விடுதியில் தங்கி படிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்’. தான் இப்போது தயாராகி
வருகின்ற ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு அனிதாவும் படிக்க வேண்டும் என்றும் மணி விரும்பினார்.
‘ஒரு டாக்டராக வேண்டுமென்றே அவள் விரும்பினாள் என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால்
நம்முடைய சமுதாயத்தில் யாராவது நன்றாகப் படித்தால், அவர் டாக்டராக வேண்டும் என்றே
அனைவரும் சொல்வது வழக்கம். நிச்சயமாக அவள் மக்களுக்குச் சேவை செய்ய விரும்பினாள்.
அதில் அவள் மிகவும் உறுதியாக இருந்தாள்’ என்று அவர் கூறினார்.
ஐ.ஏ.எஸ்
தயாரிப்பிற்கான ஏராளமான புத்தகங்களை அனிதாவிற்காக கொண்டு வந்து கொடுத்ததோடு,
அவளுக்காக வேறு பல படிப்புகளுக்கும் அவர் விண்ணப்பித்தார். ‘இந்த அமைப்பின் மீது
எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, எனவே நமக்கு முன்பிருக்கின்ற வாய்ப்புகளைத்
திறந்து வைத்திருப்பது நல்லது என்று நான் அவளிடம் சொன்னேன். மருத்துவத்தில் கூட
ஹோமியோபதி, சித்தா, பிற வாய்ப்புகள் நிறைய
உள்ளன என்று அவளிடம் சொன்னேன். அவள் தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு
கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கும் விண்ணப்பித்திருந்தாள். இப்போதைக்கு
இதில் சேர்ந்து கொண்டு பின்னர் மற்ற வாய்ப்புகளைப் பார்த்துக் கொள்ளலாம் என்றுகூட நான் அவளிடம் சொல்லியிருந்தேன்’
என்று மணி எங்களிடம் கூறினார்.
ஜிப்மர்
நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பித்திருந்த அவள், அந்தத் தேர்வு கணினி அடிப்படையிலான
தேர்வு என்பதை அறிந்த போது மிகவும் அதிர்ச்சியடைந்தாள். ‘சில நேரங்களில் அரசாங்கம்
நகரங்களில் உள்ள குழந்தைகள் மட்டுமே எதிர்காலத்திற்குத் தகுதியானவர்கள் என்று
கருதுகிறது. தனது வாழ்க்கையில் ஒரு முறைகூட அனிதா கணினியைத் தொட்டதே இல்லை. எனவே
நான் ஒரு நண்பரிடம் அவரது மடிக்கணினியைக் கொண்டு வருமாறு சொன்னேன். மவுஸ் என்றால்
என்ன, எப்படி இடது கிளிக் மற்றும் வலது கிளிக் வேலை செய்கிறது என்பது போன்ற
அடிப்படைகளை அவளுக்குச் செய்து காட்டினேன். ஆனால் கணினி மையத்திற்குச் சென்றபோது,
சிபியூவைப் பார்த்தே இராத அவளுக்கு அந்த கணினியை எவ்வாறு ஆன் செய்வது என்று கூடத்
தெரியவில்லை. இதுபோன்ற விஷயங்களை எல்லாம் யார் தீர்மானிக்கிறார்கள்?’ என்ற கேள்வியை
எழுப்பினார்.
அந்த
தேர்வு முடிவுகள் மோசமாக இருந்தபோது,
மணியிடம் அனிதா மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். ‘அது ஒரு பொருட்டல்ல என்றும்,
அனுபவம் கிடைக்கும் என்பதாலேயே இது போன்ற தேர்வுகளை எழுதும்படி நான் கேட்டுக்
கொண்டேன். இங்கே பாரு பாப்பா, நீ பெறும் மதிப்பெண்கள்தான் உன்னுடைய திறனைத்
தீர்மானிக்கின்றன. ஆனால் இதுவரை நீ கற்றுக் கொள்ளாதவை குறித்து உன்னைச் சோதிப்பது என்பது உன்னுடைய திறனைத்
தீர்மானிப்பதற்கு அல்ல’ என்று நான் அவளிடம் சொன்னேன்.
குறுகிய
வட்டாரத்திற்குள் இருந்த அவளது வளர்ப்பைக் கருத்தில் கொண்டு பார்த்தால், அவளுடைய
சிந்தனைச் செயல்முறைகள் இந்த அளவிற்குத் தெளிவாக இருந்தது ஆச்சரியமாகவே இருந்தது.
தேவைப்பட்டால் படிப்பிற்காக கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று மணி அனிதாவிடம் சொன்னபோது,
அதுபோன்று எதையும் செய்யக் கூடாது என்பதில் அனிதா பிடிவாதமாக இருந்தாள். ‘கடன்
வாங்கினால், அந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்குப் போதுமான பணம்
சம்பாதிப்பதில் நான் கவனம் செலுத்த வேண்டி வரும். அந்த மன அழுத்தம் இல்லாவிட்டால்
எதையும் எதிர்பார்க்காமலே நம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு என்னால் சேவை செய்ய
முடியும். அரசு கல்லூரியில் இடம் கிடைத்தால் மட்டுமே நான் படிப்பேன்’ என்று அவள்
தெளிவாகச் சொன்னாள். ‘பொதுத் தேர்வில் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.
கவலைப்பட வேண்டாம். ஒருவேளை எனக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைத்தால், அவர்கள்
நிச்சயம் அதைக் கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள்’ என்று அவள் உறுதியளித்திருந்தாள்.
இறுதியில்
நாம் அனைவருமே அவளுடைய மதிப்பெண்கள் பொருட்படுத்தப்படவே இல்லை என்பதைத் தெரிந்து கொண்டோம்.
அவளுடைய கோரிக்கையை உச்சநீதிமன்றம் சற்றும் பரிசீலிக்கவில்லை.
இது எப்படி சமமாகும்?
நீட்
தேர்வை ‘சிறந்த சமநிலைப்படுத்தி’ என்று கூறிய சிலர் அது அவசியம் தேவை என்றனர். அதைப்
பற்றி எண்ணிப் பார்க்கும் போது, கடந்த ஆண்டு நடந்த எம்பிபிஎஸ் கலந்தாலோசனையின்
போது சென்னையில் ஓமந்தூரார் அரசு தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு
வெளியே நின்ற அனைத்து வகையான ஆடம்பரமான கார்களும் என்னுடைய நினைவிற்கு வந்து
சென்றன. அது ஒருவகையில் சமநிலைப்படுத்தி இருந்தது. அங்கு வந்திருந்தவர்களில்
குறைந்தது பாதிப் பேராவது ஓராண்டு கூடுதலாகச் செலவழித்து, நீட் தேர்விற்குத்
தயாராகி அந்தத் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களாக இருந்தனர். அந்த வித்தியாசம் அங்கே
அப்பட்டமாகத் தெரிந்தது.
ஒடுக்கப்பட்டவர்களுக்கான
சுதந்திரம் கல்வியின் மூலமே கிடைக்கின்றது. ’என் தந்தை பாலையா’ என்ற புத்தகத்தின்
ஆசிரியர் தனது குடும்பம் பசியுடன்
படுக்கைக்கு சென்றாலும், மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கு படிப்பதற்காக
எழுந்திருப்பது குறித்து தன்னுடைய
புத்தகத்தில் விவரிக்கிறார்.
ஒரு
விதத்தில் அனிதாவும் அவரது குடும்பத்தினரும் அப்படிப்பட்டவர்கள்தான். ‘அவளுடைய
பன்னிரண்டாவது வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் நான் சென்னையில்
இருந்தேன். காலை ஒன்பது மணிக்கே இணையதள மையத்திற்குச் சென்று சேர்ந்தேன். நான்தான்
முதலில் அவளிடம் தேர்வு முடிவுகளைச் சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். தேர்வு
முடிவுகளை என்னிடமிருந்தே முதலில் அவள் கேட்க வேண்டும் என்பதற்காக காலை 10.01
மணிக்கு ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து அவளுக்கு அனுப்பி வைத்தேன். அவள் மிகவும் நன்றாகப்
படித்தது எனக்குத் தெரியும் என்றாலும், இந்த அளவிற்கு அவள் நன்றாகச் செய்வாள்
என்று நான் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய நண்பர்கள் என்னிடம் விருந்து
கேட்டார்கள். அவளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததும் விருந்து
தருகிறேன் என்று நான் அவர்களுக்கு உறுதியளித்திருந்தேன்’ என்று மணி கூறினார்.
நண்பர்களுக்குத்
தர வேண்டிய விருந்து ஒருபோதும் நிறைவேறவே இல்லை. அதற்கு மாறாக அனிதாவின் இறுதிச்
சடங்குதான் அங்கே நடந்தேறியது.
மாநிலத்தின் நீட் தேர்விற்கு எதிரான போராட்டத்திற்கான
முகம்
காலை
11.30 மணியளவில், எங்களிடையே நடைபெற்ற நீண்ட உரையாடலின் போது கேமராவை சீராகப் பிடித்துக் கொண்டிருந்த எனது நண்பரின் கை வலிக்கத் தொடங்கியது. நாங்கள்
இருவரும் மணி சொன்னதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்ததால், எவ்வளவு நேரம் ஆயிற்று
என்பதை தன்னால் உணர முடியவில்லை என்று அவர் கூறினார். அவர் என்ன சொன்னார் என்பது
எனக்குப் புரிந்தது.
இப்போது
வேறு கோணத்தில் மீண்டும் கேமரா உருளத் தொடங்கியது.
கடந்த
பத்தாண்டுகளாக இருந்து வந்ததைப் போலவே, அந்த ஆண்டும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு
முடிவுகளின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்தப்பட்டிருந்தால் இயற்பியல்
மற்றும் கணிதத்தில் 100, வேதியியலில் 199, உயிரியலில் 194 மதிப்பெண்கள், 200க்கு
196.75 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றிருந்த அனிதாவிற்கு மருத்துவப் படிற்கான இடம்
எளிதாகவே கிடைத்திருக்கும்.
எதிர்ப்பு
பெரும்பாலும் உறுதிப்பாட்டிலிருந்து வருவதாகவே தத்துவவியலாளர்கள் கூறுகிறார்கள்.
விரக்தியும் கூட அவ்வாறு வருவதாகவே இருக்கிறது.
தனது
படிப்பிற்கு அப்பாற்பட்டு அவள் ஒவ்வொரு போராட்டத்திலும் கலந்து கொண்டாள்.
நூற்றுக்கணக்கான கடிதங்களை எழுதினாள். உச்சநீதிமன்றத்திற்குச் சென்றாள். ‘தில்லியில்
உள்ள பல பிரமுகர்களுக்கும், தலைவர்களுக்கும், நீட் தேர்வு அகற்றப்பட வேண்டும்
என்று கேட்டுக் கொள்கின்ற ஏறத்தாழ 250 கடிதங்களை எழுதினாள். பொதுவாக இரண்டு அல்லது
மூன்று முறைக்கு மேல் ஏதாவது ஒன்றை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும் என்றால்,
அதன் மீது நமக்கு இருக்கும் ஆர்வத்தை நாம் இழந்து விடுவோம். அதன் மீது கவனம்
செலுத்த மாட்டோம். கையெழுத்து மோசமாகி விடும். ஆனால் அனிதாவின் கடிதங்களை நீங்கள்
பார்த்திருந்தால், அவை முதலிலிருந்து 250ஆவது கடிதம் வரை ஒரே மாதிரியாக இருக்கும்.
முகவரிகள் மட்டுமே மாறி இருக்கும். அந்த அளவிற்கு அவளிடம் அர்ப்பணிப்பு உணர்வு
இருந்தது’ என்று மணி நினைவு கூர்ந்தார்.
தில்லியில் விரக்தியான நம்பிக்கையுடன் காத்திருந்த
பன்னிரண்டு மணி நேரம்
மாணவர்களின்
அவல நிலையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வகையில் அனிதா டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்திற்குச் சென்றபோது, அவள்
இவ்வளவு தூரம் சென்று போராடியது குறித்து பெருமைப்படுவதாக எந்தவொரு செய்தித்தாளோ
அல்லது ஃபேஸ்புக் நிலைத்தகவலோ குறிப்பிடவில்லை. அவளுக்கு எப்படி பணம் கிடைத்தது?
அவர்களுடைய வறுமை பொய்யா? உண்மையிலேயே அவர்கள் ஏழைகளாக இருந்தால், எப்படி தில்லிக்குச்
செல்லும் துணிச்சல் அவர்களுக்கு வந்தது? இவ்வாறான சந்தேகங்களே உடனடி எதிர்வினையாக
இருந்தன. அப்போது நான் அந்த எதிர்வினைகள் அனைத்தும் மேட்டிமைத்தனம், சாதியவாதம்
ஆகியவற்றை கொண்டிருந்ததாகவே நினைத்தது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. தனது
சிறிய கிராமத்திலிருந்து ஒரு அடி கூட வெளியே எடுத்து வைத்திராத அந்த பதினேழு வயதான
சிறுமி, மிகுந்த தைரியத்துடன் முதன்முறையாக விமானத்தில் ஏறி, அரசாங்கத்தை
எதிர்கொள்ள உச்சநீதிமன்றத்திற்குச் சென்றிருந்தாள். அதைப் பற்றி சற்றும் கவலை
கொள்ளாதவர்களால் ‘அவளுக்கு எங்கிருந்து பணம் வந்தது?’ என்ற கேள்வியை மட்டுமே எழுப்பிக்
கொண்டிருக்க முடிந்தது. ‘உச்சநீதிமன்றத்தின் வாசலுக்குள் நுழைய இந்த ஏழைகளுக்கு
எப்படி இவ்வளவு தைரியம் வந்தது?’ என்பதாகவே அதனைப் புரிந்து கொள்ள முடிந்தது.
அந்த
கேள்விகளின் தாக்கம் மிகக்கடுமையாக இருந்தது. ‘அது எங்களை மிகவும் புண்படுத்தியது.
ஒரு செய்தித்தாள் நாங்கள் தில்லிக்கு 'ஜாலி பயணம்' போனதாகக் கூறியது.
செய்தித்தாள்களில் வெளியாகின்ற அனைத்து செய்திகளும் முற்றிலும் உண்மையானவை இல்லை
என்பதை நான் அறிந்திருக்கிறேன் என்றாலும், இதுபோன்றதொரு முழுக் கதையை உருவாக்கும்
தைரியம் அவர்களிடம் இருப்பதை உணர்ந்தபோது, அது எனக்குள் மிகுந்த கோபத்தை
ஏற்படுத்தியது. ஆனாலும் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை’ என்று அந்த அண்ணன்
குமுறினார்.
கடந்த
ஆண்டு இந்த சர்ச்சையின் போது நீட் எதிர்ப்பு போராட்டங்களில் முன்னணியில் இருந்த
செயற்பாட்டாளரான பிரின்ஸ் கஜேந்திர பாபுவுடன் நான் பேசினேன். அவர்களுடைய தில்லி பயணத்திற்கு
தான் நிதியளித்ததாக அவர் என்னிடம் கூறினார். நீட் காரணமாக நேரடியாகப்
பாதிக்கப்பட்ட மாணவர்கள் நீதிமன்றத்திடம் தங்களுக்கு நேர்ந்தவற்றைக் கூற வேண்டும்
என்று மாநில அரசு விரும்பியது. அந்த மாணவர்களின் துயரத்திற்கான முகமாக அனிதா
மாறினாள். ‘எல்லா ஆர்ப்பாட்டங்களுக்கும் அவளை
என்னுடன் நான் அழைத்துச் செல்வேன். உண்மையில் அது எதிர்த்துப் போராடுவதற்காக அல்ல.
அனிதாவிற்காகவும் அவளைப் போன்றவர்களுக்காகவும் போராடும் மக்களை அவள் பார்க்க
வேண்டும் என்பதற்காக நான் அவளை அங்கெல்லாம் அழைத்துச் செல்வேன். நாங்கள் அங்கே
போய் நின்று ஆர்ப்பாட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்போம். இவ்வாறானதொரு
ஆர்ப்பாட்டத்தின் போதுதான், அரியலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர்
எங்களுடன் பேசினார். அவர் அவளைப் பற்றி சொல்லுமாறு அனிதாவை கேட்டுக் கொண்டார்.
அப்படித்தான் நாங்கள் தலைவர்களுடன் உரையாட ஆரம்பித்தோம். பிரின்ஸ் சாரையும்
சந்தித்தோம்’ என்று மணி நினைவு கூர்ந்தார். மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்களையும்
ஆளும் கட்சி உறுப்பினர்களையும் கூட இந்த அண்ணன் - தங்கை ஜோடி சந்தித்தது.
அனிதா
அரசியல் தலைவர்களைச் சந்தித்தது மீண்டும் சர்ச்சையானது. அவள் மூளைச் சலவை
செய்யப்படுகிறாள் என்பது போன்ற விஷயங்களை இப்போது அவர்கள் சொல்லத் தொடங்கினர்.
வழக்கு
தில்லிக்குச் சென்றபோது, தமிழ்நாடு சுகாதார அமைச்சகத்திலிருந்து மணியை அழைத்து
அவரும் அவரது தங்கையும் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக முடியுமா என்று கேட்டனர். ‘நாங்கள்
அரியலூரில் இருக்கிறோம், எங்களால் அவ்வளவு தூரம் பயணித்து வர முடியாது என்று
அவர்களிடம் சொன்னேன். நீதிமன்றத்தில் பேச முடியாத நீங்கள் தெருக்களில் கத்துவதால்
என்ன பயன் என்று அவர்கள் பிரின்ஸ் சாரிடம் கேட்டார்கள். அவர்களைச்
சந்திக்காததற்காக பின்னர் யாரும் குற்றம் சாட்டி விடக் கூடாது என்று அவர்
எங்களிடம் கூறினார். எனவேதான் நாங்கள் அங்கே சென்றோம்’ என்று அந்த சகோதரர்
என்னிடம் கூறினார். கிராமத்திலிருந்து சென்னைக்குச் செல்வதற்கு நேரடியாகப்
பேருந்துகள் எதுவும் இல்லாததால், அந்த உடன்பிறப்புகள் ஊருக்கு மிக அருகே இருந்த
பேருந்து நிறுத்தத்திற்கு பைக்கில் சென்று பின்னர் அங்கிருந்து சென்னைக்கு பஸ்ஸில்
சென்றனர். விமான நிலையத்தில் இறங்கிய அவர்கள் சரியாக காலை ஒன்பது மணிக்கு
விமானத்தில் ஏறினார்கள். அன்று இரவு ஒன்பது மணிக்கே மீண்டும் சென்னைக்கு விமானத்தில்
திரும்பி வந்தனர்.
விமானத்தில்
அவர்கள் முதல் முறையாகச் சென்ற பயணமே அனிதாவின் கடைசிப் பயணமாகவும் ஆகிப் போனது. ‘முதல்
தடவை என்பது ஒரு முறை மட்டுமே நிகழும். அதை அனுபவிக்க முடியாதிருந்த எங்களுடைய
நிலைமையை நான் நினைத்துப் பார்த்தேன். தலைநகருக்குச் சென்றிருந்தாலும், அங்கே
எங்களால் அனிதாவிற்கு எதையும் காட்ட முடியவில்லை. இரண்டாவது முறையாக அவளை நிச்சயம்
அழைத்து வர வேண்டும் என்று எனக்குள் நானே உறுதி ஏற்றுக் கொண்டேன்’ என்று
மனச்சோர்வுடன் கூறினார். ஆனால் அது
ஒருபோதும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதியாகவே ஆகிப் போனது.
துண்டாடப்பட்ட கனவு
உச்சநீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பு
அவர்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்று தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் நினைக்கத்
தொடங்கினர். நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல அமைச்சர்களும் உத்தரவாதம்
அளித்திருந்தனர். ஒட்டுமொத்த மாநிலத்திலும் திடீரென்று நம்பிக்கை பிறந்தது. நீட்
போராட்டங்களின் முகமாக மாறியிருந்த அந்தச் சிறுமியின் குடும்பத்தினர் அந்த
நம்பிக்கையை உணராமல் இருந்திருப்பார்களா என்ன? ‘தில்லிக்குச் செல்லும் வரை, நான்
அவநம்பிக்கை கொண்டவனாகவே இருந்தேன். நம்பிக்கையுடன் இருக்க வேண்டாம் என்று அவளிடம்
சொல்லிக் கொண்டே இருந்தேன். அரசாங்கத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால்
நாங்கள் தில்லியில் இருந்து திரும்பி வந்த பின்னர், நாங்கள் சந்தித்த ஒவ்வொருவரும்
நாங்கள் வெற்றி பெறுவோம் என்றே எங்களிடம் உறுதியளித்தனர். அப்போதுதான் 'பாப்பா, நீ
டாக்டர் ஆயிடுவே' என்று நான் சொல்லத் துணிந்தேன். நான் அவளிடம் அப்படிச்
சொல்லியிருக்கக்கூடாது’ என்று அவர் தலையைத் தாழ்த்திக் கொண்டார்.
தீர்ப்பு வந்த வேளையில் அனிதா, மணி இருவரும்
அமர்ந்து செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தனது தங்கையை எவ்வாறு
எதிர்கொள்வது என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. ‘எனக்கு கோபம் வந்தது.
இருந்தாலும் அதை நான் அனிதாவிடம் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. எனவே அவளிடம் மற்ற
எல்லா வாய்ப்புகளைப் பற்றியும் பேச ஆரம்பித்தேன். சென்னையில் கால்நடை மருத்துவப்
படிப்பை படிக்கலாம் என்று நாங்கள் முடிவு செய்தோம். என் தந்தையையும் சமாதானப்படுத்தினேன்.
நாங்கள் அதைப் புரிந்து கொண்டோம், அவளும் அவ்வாறு புரிந்து கொண்டாள் என்றே நாங்கள்
நினைத்தோம்’ என்று அவர் அமைதியாக கூறினார்.
மணிக்கு தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டே
இருந்தன. நூலகத் திறப்பு விழா குறித்து மக்கள் விசாரித்த வண்ணம் இருந்தனர். எனவே
நாங்கள் சிறிது நேரம் எங்களுடைய உரையாடலை நிறுத்தி வைத்தோம். அவரது கடமைகளைச்
செய்ய விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறோமோ என்று மோசமாக உணர்ந்த வேளையில்,
என்னுடைய மன்னிப்பை புறந்தள்ளி விட்டு இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று அவர்
பணிவுடன் கேட்டார். இன்னும் அதிக நேரம் தேவை என்பது தெரிந்திருந்தாலும், இன்னும்
அரை மணி நேரம் தான் என்று நான் சொன்னேன்.
2017 செப்டம்பர் 1 அன்று
நீங்கள் எங்கே இருந்தீர்கள்?
‘இங்கேதான் இருந்தேன். அன்று நகரத்திற்குச்
சென்றிருந்தேன். போகும் போது அவள் நன்றாகத்தான் இருந்தாள்’ என்று மணி நினைவு கூர்ந்தார்.
இப்போது மதிய வேளை ஆகி விட்டது. ஒரு வருடம் முன்பு, அவர்களில் பெரும்பாலோர் அவளை
கடைசியாக உயிருடன் பார்த்த வேளை. ‘ சில வேலைகளுக்காக வெளியே சென்ற நான் மிகவும்
தாமதமாகத் திரும்பினேன். ஆனால் அது மிகவும் தாமதமானதாகி விட்டது’.
அனைத்து செய்தித்தாள்களும் கூறியது உண்மைதான்,
தனக்குள் சிந்திப்பவளாக, அமைதியானவளாகவே இருந்த அனிதா யாரிடமும் அவ்வளவாகப்
பேசுவதில்லை. அவர் பேசுகின்ற ஒரே நபர் செல்வி ரமேஷ் மட்டுமே. செல்வி அவர்களுக்குப்
பக்கத்து வீட்டில் வசித்து வருபவர். அனிதாவிடம் கடைசியாக பேசிய அவருடன் பேச
வேண்டும் என்று முடிவு செய்தேன். அவரைப் பற்றி கேட்டேன்.
நிறைமாத கர்ப்பிணியான செல்வி புன்னகையுடன்
உள்ளே வந்தார். அந்த சிறுநடையிலேயே அவருக்கு வியர்த்து இருந்தது. அவரிடம்
மன்னிப்பு கேட்டு விட்டு என் நண்பரிடம் ‘வேகமாக முடித்து விட வேண்டும், அவரைத்
துன்புறுத்தி விடக் கூடாது’ என்று சொன்னேன். செல்வி என்னிடம் ‘கவலைப்படாதேம்மா,
நான் நன்றாகவே இருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள்’ என்றார்.
அனிதாவிடம் இவ்வளவு பிரகாசமான, புத்திசாலித்தனமான பெண்ணாக இருக்கின்ற நீ ஏன் மற்ற குழந்தைகளுடன் பேசமாட்டேன் என்கிறாய் என்று அடிக்கடி கேட்பேன் என்று கூறிய செல்வி ‘அவள் தோளை உலுக்கிக் கொள்வாள். எப்போதுமே அவள் என்னுடன் மட்டுமே பேச விரும்பினாள். வீட்டிற்கு வந்து என்னுடைய குழந்தைகளுடன் விளையாடுவாள். என் மகளுக்கு தலைவாரி விட்ட பிறகு அவளுக்கும் நான் தலைவாரி விடுவேன்’ என்றார்.
துரதிர்ஷ்டவசமான அந்த நாளில், செல்வியுடன்தான் அனிதா இருந்திருந்தாள். செல்வியின் மகளும் உடல்நிலை சரியில்லாததால் வீட்டிலேதான் அன்றைக்கு இருந்தாள். அனிதா அன்று காலையில் செல்வியிடம் சென்று தன் அண்ணனுக்கு கீரை வாங்கி வருமாறு சொன்னாள். கீரை எனக்கு மிகவும் பிடித்த உணவு என்று மணி கூறுகிறார். ‘நான் கீரை வாங்கி வந்தேன். அவள் சமைக்க ஆரம்பித்தாள். ஏன் இவ்வளவு சீக்கிரமாகவே சமைக்கிறாய் என்றும், மாலையில் பாட்டி வந்து சமைக்கும் வரை ஏன் காத்திருக்க கூடாது என்றும் நான் அவளிடம் கேட்டேன். களைப்புடன் திரும்பி வரும் தன் அண்ணனுக்காக கீரை செய்து தயாராக வைத்திருக்க விரும்புவதாக அவள் சொன்னாள். சமைத்து முடித்த பிறகு, என்னுடைய வீட்டிற்கு வந்து குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென்று தேன் மிட்டாய் வாங்க பத்து ரூபாய் வேண்டும் என்று அவள் கேட்டாள். நான் பணம் கொடுத்தேன். அவள் வெளியே சென்று விட்டாள்’ என்று கூறிய செல்வி ‘அப்போதுதான் நான் அவளைக் கடைசியாகப் பார்த்தது’ என்றார்.
சிறிது நேரம் கழித்து அங்கே வந்த அருண்குமார்
தனது தங்கை எங்கே என்று செல்வியிடம் கேட்டார். அவள் கடைக்குச் சென்றிருப்பதாக
செல்வி கூறினார்.
சிறிது நேரம் சென்ற பிறகு அங்கே வந்த மணியும் அனிதா
எங்கே சென்றிருப்பாள் என்று யோசிக்க ஆரம்பித்தார். அவளுடைய செருப்பு வெளியில்
கிடக்கவில்லை என்பதால் அவள் திரும்பி வரவில்லை என்றே நான் கருதினேன் என்ற
செல்வியும் அந்த நேரத்தில் மிகவும் கவலையுடனே இருந்தார்.
அனிதா உள்ளே தூக்கில்
தொங்குவதை அவர்கள் கண்டனர்
அந்த நாளை நினைவுபடுத்துகையில் செல்வி உடைந்து
போய், ‘தில்லியில் இருந்து திரும்பிய பிறகு அவள் முன்பிருந்த மாதிரி இருக்கவில்லை.
முற்றிலும் மனம் உடைந்து போயிருந்தாள். பரவாயில்லை, வேறு ஏதாவது படிக்கலாம் என்று நான்
அவளிடம் சொல்லிக் கொண்டே இருந்தேன், இதுபோன்று நடக்கும் என்று சிறிய துப்பு
கிடைத்திருந்தால்கூட, நான் அவளை ஒருபோதும் தனியாக இருக்க விட்டிருக்க மாட்டேன்.
வீட்டை விட்டு அவள் வெளியே வருவதையும், உள்ளே செல்வதையும் எப்போதும் நான்
பார்த்துக் கொண்டிருப்பேன். ஆனால் அந்த குறிப்பிட்ட நாளில் நான் அவளைச் சரியாக
கவனிக்கவே இல்லை. கவனித்திருந்தால் அதைக் கண்டு பிடித்து அவளிடம் நிச்சயம்
கேட்டிருப்பேன். லேசான சோகம் அவள் முகத்தில் இருந்தால்கூட நான் அதை நிச்சயம்
கவனித்திருப்பேன். அவளை என்னுடனேயே தங்க வைத்திருப்பேன்’ என்று கூறிய செல்வி தன் கண்களில்
இருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.
மணி தலையைக் குனிந்து கொண்டே ‘யாரைக் குறை
சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை அரசாங்கத்தையா அல்லது வேறு யாரையுமா?...
அவளுடைய மரணம் இவ்வளவு பெரிய விஷயமாக மாறியதால், அவள் இறந்து போன அந்த துக்கத்தைக்
கூட என்னால் சரியாக உணர முடியவில்லை. சிலர் மிகவும் மோசமாக சிலவற்றையும்
சொன்னார்கள். அவள் இப்போது இங்கே இல்லை, ஆனால் நீட் தேர்வு இன்னும் இங்கே
இருக்கிறது. நீட் எங்களுக்குத் தேவையில்லை என்று கதறியவர்களை, தயவுசெய்து இங்கே
நீட் தேர்வை நடத்துங்கள் என்று இந்த ஆண்டு சொல்லும்படி அவர்கள் செய்து விட்டார்கள்’
என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு நீட் தேர்வின் போது நடந்த
குழப்பங்களை மணி குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த குழந்தைகளுக்கு
ராஜஸ்தானில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. முந்தைய ஆண்டைப் போலவே நீட் தேர்வு
இந்த ஆண்டும் கடைசி நிமிடம் வரை நிச்சயமற்றதாகவே இருந்தது. மன அழுத்தங்களுடன்
கடைசி நேரத்தில் அங்கும் இங்குமாக அலைந்த பெற்றோர் ஒருவர் இறந்து போனார். இந்த
ஆண்டும் பிரதிபா என்ற மற்றுமொரு அனிதா உருவானார்.
தலித்துகளை இன்னும் ஏன்
தடுத்து நிறுத்துகிறீர்கள்?
இது மணியின் மனதைப் புண்படுத்துவதாக இருந்தது.
‘நான் செல்வாக்கு மிக்கவன் அல்ல என்றாலும் தலித் குழந்தைகள் விரும்புவதைப்
படிப்பதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு என்பதை உறுதிப்படுத்துவதற்காக என்னால்
முடிந்ததைச் செய்ய விரும்புகிறேன். யார் என்ன சொன்னாலும், பல தலைமுறைகளாகக் கல்வி
பெற்று வருபவர்களுக்குச் சமமாக முதல் தலைமுறையாகக் கல்வி கற்பவர்கள் வருவது உண்மையில்
கடினமானது தான். அந்த நிலையை நாங்கள் அடைவதற்கு முன்பாகவே எங்கள் கல்வியைப்
பறித்துவிட அவர்கள் விரும்புகிறார்கள். நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே
உதவுவதாக கூறுகிற அரசாங்கம், மாணவர்களின் தகுதியை அவர்களிடமிருக்கும் ‘தரங்களின்’ அடிப்படையில்
மட்டுமே தீர்மானிக்க விரும்புகிறது. அரசு பள்ளிகளில் படிக்கின்ற பெரும்பாலான
குழந்தைகள் தலித்துகளாகவே இருக்கின்றனர். அரசுப் பள்ளிகள் மிகமோசமான நிலையிலேயே
இருப்பதன் பொருள் என்ன? சமுதாயத்தின் அந்த பகுதிக்கு தரமான கல்வியை நாம் தொடர்ந்து
மறுத்து வருகிறோம் என்பதா? சாதியம் தொடர்ந்து நிலவி வருவதையே அது குறிக்கிறது.
'எங்கள் இடத்திலேயே' எங்களை வைத்திருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள்’ என்று
கோபத்துடன் அவர் குரல் உயர்த்தினார். அம்பேத்கரைப் படிக்க செலவழித்த காலமும்,
இந்திய மாணவர் சங்கத்தில் (எஸ்எப்ஐ) செலவழித்த நேரமும் அவரிடம் நீடித்த தாக்கத்தை
ஏற்படுத்தியிருக்கின்றன.
எவ்வாறாயினும் அம்பேத்கர் சொன்னதைப் போன்று
நீதிமன்றம் இருக்கவில்லை. அந்த தீர்ப்பிற்குப் பின்னால் நிறைய அரசியல் இருப்பதை
நான் உணர்ந்தேன் என்று மணி அமைதியாக ஒப்புக் கொண்டார். ‘அவள் இறந்தபோது, கிட்டத்தட்ட
ஒவ்வொரு தெருவிலும் அவளுடைய பேனர் இருந்தது. இதற்கு முன்னால் இதேபோன்று ஏபிஜே.அப்துல்கலாம்
இறந்த போதும் நடந்ததாக மக்கள் பேசிக் கொண்டார்கள். எங்களுக்கு ஆதரவளித்த
அனைவருக்கும், வீதிகளில் இறங்கி போராடியவர்களுக்கும் நான் எப்போதும்
நன்றியுள்ளவனாகவே இருப்பேன். இப்போது அவள் இங்கே இல்லாததால், சிரிக்கும் போதுகூட
குற்ற உணர்ச்சி கொண்டவனாகவே நான் இருக்கிறேன். இறந்து போகும் வரை என்னால் அவள்
இல்லாததை மறக்க முடியாது. இப்போது என்னால் செய்ய முடிந்ததெல்லாம் அவளைக் கொன்ற
காரணங்களை எதிர்த்துப் போராடுவது மட்டும்தான். அண்ணனாக, பெரியாரியவாதியாக,
அம்பேத்காரியவாதியாக நான் தோல்வியடைந்து விட்டதாகவே உணர்கிறேன்’.
இனிமேல் அனிதாக்கள் இல்லை:
கிடைத்த நிதியை என்ன செய்கிறார்கள்
எங்கள் உரையாடல் அத்துடன் முடிவடைந்தது.
தொடர்பில் இருப்பதாக உறுதியளித்து மணி அங்கிருந்து வெளியேறினார். எங்களுடைய
சாமான்களை நாங்கள் கட்டத் தொடங்கிய வேளையில், வயதானவர் ஒருவர் வீட்டிற்குள்
நுழைந்தார். அவர்களுடைய வீட்டில் அந்த நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரர்களும்
இருந்ததால், அவரை அவர்களில் ஒருவர் என்றே நான் கருதி விட்டேன். அவர் எந்த சேனலைச்
சேர்ந்தவர்கள் என்று எங்களிடம் கேட்டார், நாங்கள் பதில் சொன்னோம். எங்கள் காலணிகளை
அணியும் போது ‘நீங்கள் என் மகனிடம் பேசினீர்களா?’ என்று கேட்டபோதுதான் அவர்
அனிதாவின் தந்தை என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம். அவர்கள் அன்றைக்கு அவர் இங்கே
இருக்க மாட்டார் என்று ஏற்கனவே எங்களிடம் தெரிவித்திருந்ததால், அவரை எங்களை அடையாளம்
கண்டு கொள்ள முடியவில்லை, உடனடியாக அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்.
எங்களிடம் பேச முடியுமா என்று அவரிடம் கேட்ட
போது, ‘இங்கே வேண்டாம், நூலகம் போய் பேசலாம்’ என்றார்.
நேரம் மதியம் 1.30 மணியைக் கடந்து விட்டது.
கேமராவில் பேட்டரி தீர்ந்து விட்டது. எனவே நாங்கள் தொலைபேசி கேமராவுக்கு மாறிக்
கொண்டோம்.
எங்களை அவர் வழிநடத்திச் சென்ற போது, வீடு மற்றும்
கிராமத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டே நான் அவரின் பின்னால் சென்றேன். எனக்கு
முன்னால் நடந்து செல்கிற அவரை படம் பிடித்தேன், ஒரு மனிதன், இயற்கை - அனிதாவைப்
படைத்த மூன்று படைப்பாளர்களில் இருவர். நாங்கள் உள்ளே செல்லும்போது,
நூலகத்திற்குள் அலைந்து திரிந்து கொண்டிருந்த நாய்க்குட்டிகளை அவர் வெளியே விரட்டினார்.
எவ்வாறு வேலை நடக்கிறது என்று தொழிலாளர்களிடம் விசாரித்த அவர் நாங்கள் பேசுவதற்கு
வசதியாக இடத்தைச் சுத்தப்படுத்தி தருமாறு கேட்டுக் கொண்டார்.
‘எங்களுக்கு
கிடைத்த அனைத்து பணத்தையும் கொண்டு இதைச் செய்திருக்கிறோம். ஒரு நூலகத்தைக்
கட்டியிருக்கிறோம். கடன்களை அடைப்பதற்கோ அல்லது நல்ல வீட்டைக் கட்டுவதற்கோ அந்தப்
பணத்தை பயன்படுத்தலாம் என்று என் மகன்களிடம் சொன்னேன். ஆனால் மணி அதை மறுத்து
விட்டான், அன்றாட வாழ்க்கைச் செலவிற்காக இந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொண்டு,
நீங்கள் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு தங்கைக்கு ஏதாவது செய்யலாம் என்றுகூட சொல்லிப்
பார்த்தேன். அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. நூலகம்தான் கட்ட வேண்டும் என்றார்கள்.
இப்போதுதான் அது ஏன் என்று எனக்குத் தெரிகிறது’ என்று சண்முகம் கூறினார்.
‘என் மகன் சொன்னது சரிதான், அவளுடைய சிலையை
வைக்க வேண்டும் என்று சிலர் பரிந்துரைத்த போதிலும், என் மகன் நூலகத்தைத் திறக்கவே
விரும்பினான். எங்களிடம் உள்ள நிலத்தை அதற்காகப் பயன்படுத்திக் கொண்டோம்.
எங்களுக்கு கிடைத்த பணத்தைக் கொண்டு கூடுதலாக கொஞ்சம் நிலம் வாங்கினோம். அனிதா
போன்று மற்றொருவர் இருக்கக் கூடாது. படிப்பதற்கான வாய்ப்பு குழந்தைகளுக்கு இருக்க
வேண்டும். அவர்கள் படிப்பதற்கு கணினிகள் இருக்க வேண்டும்’ என்று சொன்ன சண்முகம் தாங்கள்
நான்கு கணினிகளை வாங்கப் போவதாக கூறினார்.
அனிதா உயிருடன் இருந்தபோது வாழ்ந்த அதே
வீட்டிலேயே இன்னமும் வசித்து வருகிற அந்தக் குடும்பத்தினர் அதே ரேஷன்
அரிசியைத்தான் சாப்பிட்டு வருகிறார்கள், ‘என்னால் நிம்மதியாக தூங்கவோ அல்லது
நிம்மதியாக சாப்பிடவோ முடியவில்லை. நீங்கள் இங்கு வந்து அவளைப் பற்றி பேசச்
சொல்லும் போது, எங்களுடைய வருத்தம் கூடுகிறது. இந்த நேர்காணலை முடித்த பிறகு,
ரோட்டுக்குச் சென்ற அடுத்த நிமிடத்தில், நீங்கள் அவளை மறந்து விடுவீர்கள். ஆனால்
எங்களால் அவ்வாறு இருக்க முடியாது. எங்களுடைய துக்கம் நீடிக்கிறது. நான் இறந்து
கண்களை மூடும் நாள் வரை, நான் அவளைப் பற்றி நினைத்துக் கொண்டேதான் இருப்பேன்.
யாராலும் எதுவும் செய்ய முடியாது. நான் வாழுகின்ற வரையிலும் இந்த வலியைத் தாங்கிக்
கொள்ளத்தான் வேண்டும்’ என்று அந்த அன்றாடக் கூலி கூறினார்.
அவர் சொன்னது சரிதான். எங்களைப் பொறுத்தவரை இது
மற்றுமொரு கதையாகவே இருக்கும். அநேகமாக இதைப் படிக்கின்றவர்களுக்கும்கூட. ஆனால்
குழுமூரைப் பொறுத்தவரை, அனிதா என்றைக்கும் நிலைத்திருப்பார்.
சற்று முன்பு மணியுடன் பேசிக் கொண்டிருந்த
வேளையில் சகோதரனாக தன்னுடைய இழப்பை அவர் எவ்வாறு
உணர்கிறார் என்பதை அவர் கூறிய போது நான் அவரைச் சாந்தப்படுத்த விரும்பினேன்.
‘இந்த முடிவை ஏன் அவள் எடுத்தாள் என்று எனக்குத் தெரியவில்லை - இது ஒரு நொடியில்
எடுக்கப்பட்ட முடிவாக இருக்கலாம். அல்லது கிட்டத்தட்ட தான் கனவு கண்டதைப் பெறப்
போகும் தருணத்தில் கிடைத்த ஏமாற்றத்தின் விளைவாக இருக்கலாம். அவள் வெற்றி பெற்று
விடுவாள் என்றே நாங்கள் அனைவரும் நினைத்தோம். கடைசி நொடியில் இவையனைத்தும்
நொறுங்கி விழுந்த போது, அது அவளை இந்த முடிவிற்குத் தள்ளி இருக்கலாம்.
அது ஏன் நடந்தது என்று எனக்கு தெரியவே இல்லை’.
அவரது வேதனை அதிகரிக்கிறது. ‘டாக்டராவதைத் தவிர
வேறு எதையும் அவளால் கனவு காண முடியவில்லை. அவளால் ஒருவேளை அந்த ஏமாற்றத்தை
சரியாகக் கையாள முடியாது போயிருக்கலாம். ஒருவேளை முந்தைய ஆண்டு நீட் தேர்விற்கான
விலக்கு இருந்த போது அல்லது நீட் அறிமுகப்படுத்தப்பட்ட அடுத்த ஆண்டில் அவள் தேர்வு
எழுதியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்றெல்லாம் யோசிக்கும் சில நேரங்களில் நான்
ஆச்சரியப்படுகிறேன். அவள் ஒருவேளை தேர்விற்கான பயிற்சிக்குச் சென்றிருக்கலாம்
அல்லது வேறொரு பாடத்தைப் படிக்கட்டும் என்று நாங்கள் முடிவு செய்திருக்கலாம். அந்த
குறிப்பிட்ட ஆண்டில் அது நடந்ததுதான் எங்களுக்கு மோசமான நேரமாக ஆகி விட்டது’ என்று
சொல்லிவிட்டு அவர் சிந்தனைவயப்பட்டார்.
நாங்கள் வெளியேறத் தொடங்கிய போது, அந்த அண்ணன்
அவளுடைய புகைப்படத்திற்கு அருகில் ஒரு கிளாஸ் தேநீரும், ஒரு பிஸ்கட் பாக்கெட்டும்
வைத்திருப்பதை நான் கவனித்தேன். ‘என் அம்மாவிற்கும் இதே போன்று செய்வார்கள். எப்படியும்
இறுதியில் நாங்கள்தான் அதைச் சாப்பிடுவோம் என்பதால், நான் அதைக் கேலி செய்வேன்… ஆனால்
இந்த தேநீர் கிளாஸை எப்போதும் இங்கே வைத்திருக்க வேண்டும் என்பதை நான் இப்போது
நினைவில் வைத்து செய்து வருகிறேன். என்று அவர் மென்மையான குரலில் கூறினார்.
இதுதான் முடிவா?
மதியம் 2:15 மணி - மீதமுள்ள நேரத்தில் குழுமூரைப்
படம் பிடிக்க முயற்சித்தோம்.
வீட்டிலிருந்த அந்த அறைக்குள் எனது நண்பர்
நுழையும் போது, தேவையற்ற படங்களை எடுத்து பேட்டரியை விரைவாகக் காலியாக்கி விட
வேண்டாம் என்று சொல்லியிருந்தேன். அதனை உடனடியாக ஆமோதித்து தலையசைத்து உள்ளே சென்ற
அவர் வெளியே வந்த போது ‘இதைப் படம் எடுக்க வேண்டாம் என்று நீங்கள் சொல்வீர்களா?
இங்கே பாருங்கள்!’ என்றார்.
நான் வீட்டிற்குள்ளே நுழைந்தேன். என் நண்பர்
சொன்னது சரிதான். அங்கே நான் பார்த்தது உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. உள்ளே
முழுமையாக இருட்டாக இருந்தது. அங்கிருந்த அட்டைப்பெட்டியின் மீது கிடந்த
அம்பேத்கரின் உருவப்படத்தின் மீது ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த வெளிச்சம்
விழுந்திருந்தது. அதற்கு அடுத்தபடியாக பெரியாரின் படம் இருந்தது. அறையின் எஞ்சிய
பகுதிகள் முழுதும் புத்தகங்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. புத்தகங்கள்
மட்டுமே எங்கு பார்த்தாலும் இருந்தன. இன்னும் நிறைய புத்தகங்கள் இன்னுமொரு
அறையிலும் இருப்பதாக மணி எங்களிடம் கூறினார். அவை அனைத்துமே அந்த நூலகத்திற்காக
சேகரிக்கப்பட்ட புத்தகங்கள்.
அங்கே அனிதாவின் ஆன்மா நிறைந்திருந்தது.
உலகெங்கும் உள்ளவர்கள் படிக்கின்ற அனைத்தையும்
தனது கிராமத்தில் உள்ளவர்களும் படிக்க வேண்டும். மற்றவர்கள் காண்கின்ற கனவை
அவர்களும் கண்டு அதனை அடைய வேண்டும் என்பதை அனிதா உறுதி செய்து கொண்டிருந்தாள்.
ஒரு கட்டத்தில் மணி உச்சநீதிமன்றத்திற்குச் செல்வதற்கு இவ்வளவு தூரம் பயணிக்க
வேண்டும் என்பதே நீதி கிடைக்கும் வாய்ப்பு இல்லை என்று தனக்கு உணர்த்தியதாகக்
கூறியிருந்தார். நீதிமன்றத்தில் வைக்கப்படும் வாதங்கள், ஃபேஸ்புக்கில்
நடத்தப்படும் விவாதங்கள் போன்றவை அனைத்தும் நகரங்களில் நடக்கக்கூடும் என்றாலும் புரட்சி
என்பது நமது கிராமங்களில் இருந்தே தொடங்கும் என்றார்.
நானும் அதை உறுதியாக நம்புகிறேன்.
அம்பேத்கர், பெரியாரின் கொள்கைகளால் நிச்சயம் இந்த கிராமத்து மக்கள் வழிநடத்தப்படுவார்கள். இந்த உலகில் இருக்கின்ற அனிதாக்கள், பிரதிபாக்கள், ரோஹித் வெமுலாக்கள், சங்கர்கள், இளவரசன்களுக்கு அவர்கள் மரியாதை செலுத்துவார்கள். புரட்சி வரும். அப்போது மீண்டும் குழுமூர் செய்திகளில் வந்து நிற்கும்.
மார்ச் 5 இன்று அனிதாவின் பிறந்த நாள் (05-03-2000)














Comments