சூத்திரர்களின் வரலாறும் அரசியல் மாற்றமும்

 காஞ்சா அய்லய்யா ஷெப்பர்ட்

இந்தியன் ரூமினேசன்ஸ்


ரிக் வேதம் மற்றும் இடைக்கால காலங்களுடன் ஒப்பிடுகின்ற போது சூத்திரர்களின் இன்றைய சமூக வகைப்பாட்டில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. விவசாயத் துறையில் ஆக்கிரமிப்பின் அடிப்படையில் அவர்கள் பல்வேறு சமூக வகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் பல தொழில்களை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். நெசவாளர், தச்சர், கொல்லர், குயவர், கள்ளிறக்குவோர், மீனவர், பழம் சேகரிப்பவர், செங்கல் தயாரிப்பாளர், முடிதிருத்துபவர், துணி துவைப்பவர் என்று பல கைவினைச் சமூகங்களாக அவர்கள் தொழிலின் அடிப்படையில்  வகைப்படுத்தப்பட்டனர். ஒவ்வொரு கிராமத்திலும் சூத்திரர்களுக்கு கீழே தலித்துகள் என்ற சமூக வகை உருவாக்கப்பட்டது. தோல் வேலை, கிராமத்தைச் சுத்தம் செய்தல் போன்ற பணிகளைச் செய்து வந்த அவர்கள் அனைத்து சாதி சமூகங்களாலும் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டனர்.   

காலப்போக்கில் சத்திரியர்கள், பிராமணர்கள், சில முஸ்லீம்களுடன் சூத்திரர்களில் ஒரு பகுதியினர் கிராம அளவிலே நில உரிமையாளர்களாகவும், நிலப்பிரபுத்துவ உரிமையாளர்களாகவும் உருவெடுத்தனர். பனியாக்கள் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் நடைபெறுகின்ற வணிகத்துடன் தொடர்புடையவர்களாக இருந்தனர். 1931ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மிகப் பெரிய மக்கள் தொகுதியை எளிதில் உருவாக்கிக் கொண்ட சூத்திரர்கள் 1947 வாக்கில் மக்கள்தொகையில் சுமார் 52 சதவீதம் என்ற அளவிலே இருந்தனர். அதே நேரத்தில் தலித்துகள் 18 சதவீதமாக இருந்தனர். மொத்த மக்கள்தொகையில் வைசியர்கள், சத்திரியர்கள், பிராமணர்கள் ஏழு சதவீதம் என்ற அளவிலே இருந்திருக்கலாம். மீதமுள்ளவர்கள் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஆதிவாசிகளாக இருந்தனர். இன்றளவிலும் தலித்துகளின் ஆதரவுடன் சூத்திரர்களிடமே பிரதான விவசாயப் பொருளாதாரம் இருந்து வருகிறது.

இன்றைக்கு சில மாநிலங்களில் கம்மா, ரெட்டி, மராட்டியர், ஜாட், யாதவர், குர்மி, லிங்காயத் போன்ற உயர்மட்ட சூத்திர சமூகங்கள் தங்களுக்கென்று பிராந்திய அரசியல் கட்சிகளை உருவாக்கிக் கொண்டுள்ளன. தெலுங்கு தேசம் கட்சி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, மதச்சார்பற்ற ஜனதா தளம், சமாஜ்வாதி, திராவிட முன்னேற்ற கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற  கழகம், ராஷ்ட்ரிய ஜனதா தள், தேசியவாத காங்கிரஸ் என்று பல கட்சிகள் அவற்றுள் அடங்கும். இவ்வாறு தோன்றிய பிராந்திய கட்சிகள் காலப்போக்கில் தேசிய கட்சிகளின் குறிப்பாக காங்கிரஸின் பிடியைப் பலவீனப்படுத்தின. அது 1990களில் மெதுவாக மாற்று தேசிய கட்சியாக பாஜகவின் எழுச்சிக்கு  வழிவகுத்துக் கொடுத்தது.     


ஜவஹர்லால் நேருவின் காலத்தில் சூத்திரர்கள் காங்கிரஸிற்குப் பக்கபலமாக இறங்கினர். 1970கள் வரையிலும் முதலாளித்துவர்களின் அதிகாரக் குவிப்பு பலவீனமாகவே இருந்து வந்ததால், கிராமங்களில் தாங்களே உண்மையான அதிகார மையங்கள் என்பதாக நிலப்பிரபுத்துவ சூத்திரர்கள் உணர்ந்தனர். 1990 வரையிலும் இந்தியப் பொருளாதாரம் விவசாயத்தைச் சார்ந்தே இருந்து வந்தது. கிராமங்கள் தொடங்கி மாவட்டம் வரையிலும் சூத்திர நில உரிமையாளர்களே பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். சில பகுதிகளில் மட்டுமே பிராமணர்கள், முஸ்லீம் நில உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடு இருந்தது. 1990கள் வரையிலும் முக்கியமான வர்க்க முரண்பாடு குத்தகைதாரர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கும், உயர் சாதி சூத்திரர்களாக இருந்து வந்த நில உரிமையாளர்களுக்கும் இடையிலேயே இருந்து வந்தது.   


இருப்பினும் மெதுவான ஆனால் நிச்சயமான மாற்றம் 1970களின் முற்பகுதியில் இருந்தே தொடங்கியிருந்தது. விவசாயப் பொருளாதாரத்தை தனியார் மற்றும் அரசு தொழில்துறை சார்ந்த இந்தியப் பொருளாதாரம் மெதுவாக முந்தியது. 1971 தேர்தலில் இந்திரா காந்தி கிராம வாக்காளர்களை நேரடியாக அணுகியதன் மூலம் சூத்திர நில உரிமையாளர்களுக்கு கிராமப்புறங்களில் இருந்து வந்த கட்டுப்பாட்டைக் குறைத்தார். தலித்துகளிடையே தனக்கான பெரும் ஆதரவை அவர் பெற்றிருந்தார். நில உரிமையாளர்கள் பீகாரில் உள்ள பெல்ச்சி, ஆந்திராவின் கரம்சேடு போன்ற இடங்களில் நடந்ததைப் போல இந்தியா முழுவதும் தலித் பகுதிகளைத் தாக்கி எரிப்பதன் மூலம் தங்கள் அதிகாரத்தைக் காட்டினர். நிலப்பிரபுத்துவ சூத்திர நில உரிமையாளர் நீலம் சஞ்சீவரெட்டியின் தலைமையில் இந்திரா காந்தியைப் பலவீனப்படுத்த நில உரிமையாளர்கள் முயன்றனர். சூத்திர நிலப்பிரபுத்துவ சிண்டிகேட் இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு சஞ்சீவரெட்டியைப் போட்டியிட வைத்தது. ஆனால் அப்போது வளர்ந்து வந்த தொழில்துறை வர்க்கத்தின் ஆதரவுடன் பிராமண சுயேட்சை வேட்பாளராக இருந்த, இறுதியில் அந்த தேர்தலில் வெற்றி பெற்ற வி.வி.கிரிக்கு ஆதரவளித்து இந்திரா காந்தி அந்த முயற்சிகளைத் தோற்கடித்தார்.    


இந்த செயல்பாட்டில் சூத்திரர் அல்லாத உயர் சாதியினர் (பிராமணர்கள், பனியா தொழிலதிபர்களில் ஒரு பிரிவினர்), தலித்துகள், ஆதிவாசிகள், முஸ்லீம்கள், பிற சிறுபான்மையினர் அடங்கிய கூட்டணியை இந்திரா காந்தி அமைத்தார். அதற்கும் கூடுதலாக மிகவும் வலுவான பெண் தலைவராக அவர் கருதப்பட்டதால், மிகப் பரந்த அளவிலான பெண்களின் ஆதரவையும் பெற்றவராக இருந்தார். கிராமங்களில் துர்கா அல்லது காளிதேவியுடன் அவர் பெரும்பாலும் ஒப்பிடப்பட்டார். சூத்திர நில உரிமையாளர்களை காங்கிரஸ் கட்சி ஓரம்கட்டத் தொடங்கியதால் சூத்திரர்களில் பெரும் பகுதியினர் ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த ஜனதா கட்சிக்கு மாறினர். 1977ஆம் ஆண்டு பெற்ற அந்த வெற்றி, அதற்குப் பின்னர் சூத்திர யாதவர் தலைவரான பிபி மண்டல் தலைமையில் மண்டல் ஆணையம் அமைக்கப்பட்டதைக் கண்டது.     

ஜனதா கட்சியுடன் ஒன்றிணைந்து அதனை மிகப்பெரிய கட்சியாக மாற்றிய ஜனசங்கம் சூத்திரர்களுடனான தொடர்பை அந்தக் காலகட்டத்தில் விரிவுபடுத்திக் கொண்டது. அப்போது இந்தியாவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) என்ற வகைப்பாடு இருக்கவில்லை. ஓபிசி இளம் தலைவர்களான சரத் யாதவ், முலாயம் சிங், லாலு பிரசாத் யாதவ் ஆகியோரின் அழுத்தத்தினால் ஜனதா கட்சியுடனான உறவை ஜனசங்கம் முறித்துக் கொண்ட பிறகு தன்னுடைய பெயரை அது பாரதிய ஜனதா என்று மாற்றிக் கொண்டது. தன்னை சூத்திரர்கள் சார்புள்ள கட்சி என்று காட்டிக் கொள்வதற்கான எந்தவொரு வாய்ப்பையும் அது பயன்படுத்திக் கொண்டது. அந்த நேரத்தில் சூத்திரர்களின் ஹிந்து கருத்தியல் பிணைப்பை வலுப்படுத்துவதற்கு சூத்திரர்களுக்குள்ளே இருந்த முஸ்லீம்-விரோத, தலித்-விரோத நிலப்பிரபுத்துவ கூட்டமைவு பாஜகவிற்கு உதவியது.


பிராமண-பனியாக்களின் ஆதிக்கத்தில் இருந்த அந்தக் கட்சி கிராம மட்டத்தில்  சூத்திர/ஓபிசி மக்களை மெதுவாக ஹிந்துமயமாக்கி காங்கிரஸை விட முற்போக்கான தோரணையை எடுத்துக் கொண்டது. ஓபிசி இடஒதுக்கீட்டை வி.பி.சிங் அரசாங்கம் அமல்படுத்திய பிறகு காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் அந்தக் கொள்கையை எதிர்ப்பது, ஆதரவளிப்பது என்ற நிலைகளுக்கு இடையிலே மிகவும் நுட்பமான தந்திரத்தை மேற்கொண்டன. ஆனாலும் பாஜக புத்திசாலித்தனமாக பாபர் மசூதி-ராமர் கோவில் பிரச்சனையை சூத்திரர்கள்/ஓபிசிகளை ஹிந்துமயப்படுத்துவதற்காகப் பயன்படுத்திக் கொண்டது. ஆயினும் காங்கிரஸைப் பலவீனப்படுத்திய நிலப்பிரபுத்துவ சார்பு சூத்திரர்களின் மாநில அளவிலான பிராந்திய கட்சிகளின் தோற்றம் 1999 வரையிலும் பாஜகவின் எழுச்சியையும் தடுத்து நிறுத்தியே வைத்திருந்தது.  


1980இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகும், தனது தேர்தல் கூட்டணியில் சூத்திரர்களை காங்கிரஸ் சேர்த்துக் கொள்ளவில்லை. அது சூத்திரர் அல்லாத உயர்சாதியினர், சிறுபான்மையினர், தலித்துகள், ஆதிவாசிகளின் கலவையாகவே தொடர்ந்தது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி இருவருமே மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளைச் செயல்படுத்த மறுத்து விட்டனர். வி.பி.சிங் ஆட்சியில் சூத்திரர்கள் தங்களுக்கான அதிகாரத்தைப் பெற்று மண்டல் ஆணைய அறிக்கையை நடைமுறைப்படுத்திக் கொண்டனர்.


இதற்கிடையில் வடக்கிலும் சூத்திர நில உரிமையாளர்கள் பல பிராந்தியக் கட்சிகளை உருவாக்கினர். அந்த கட்டத்தில் ராமஜன்மபூமி பிரச்சனையைச் சுற்றி கல்வியறிவில்லாத கீழ்மட்ட சூத்திர இளைஞர்களை ஆர்.எஸ்.எஸ்-பாஜக அணிதிரட்டியது. அவர்களுடைய தீவிர பிரச்சாரத்திற்குத் தேவையான உத்வேகத்தை பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வு அளித்தது. ’ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமும், சூத்திரர்கள்/ஓபிசிக்களின் மணிக்கட்டில் காவிக் கயிறு கட்டுவதன் மூலம் அவர்களுக்கு ஹிந்து அடையாளத்தைக் கொடுப்பதும் அவர்களுடைய திட்டத்தின் ஒரு பகுதியாகவே அமைந்தன. காங்கிரஸ்-முஸ்லீம் உறவை சூத்திரர்கள்/ஓபிசிகளின் நலன்களுக்கு எதிரான இலக்காக அவர்கள் சித்தரித்தனர். 1999வாக்கில், விஷயங்கள் அவர்களுக்குச் சாதகமாக மாறிவிட்டன. 2014ஆம் ஆண்டு அந்தப் போக்கு மேலும் துடிப்பு மிக்கதாக இருப்பதற்குச் சாட்சியாக பாஜக ஆட்சியதிகாரத்திற்கு உயர்ந்தது.


1969இல் வங்கிகளைத் தேசியமயமாக்கிய பிறகு இந்திய சந்தைப் பொருளாதாரத்தில் ஒரு மாற்றம் ஏற்படத் தொடங்கியது. இருப்பினும் வங்கி அமைப்பின் ஆதரவுடன் தனியார் துறையின் இணையான வளர்ச்சியானது சில இந்திய தொழிலதிபர்கள், வணிகர்களின் கைகளில் இந்திய மூலதனத்தைக் குவிக்கத் தொடங்கியது. தேர்தல் அரசியலில் அவர்கள் காங்கிரஸை ஆதரிக்கத் தொடங்கினர். தங்கள் சமூகத்திலிருந்து வந்த மகாத்மா காந்தியின் கட்சியாகவே இந்திய பனியாக்கள் காங்கிரஸைப் பார்த்தனர். இந்திரா காந்தியின் பெயர் அவரை மகாத்மா காந்தியுடன் இணைப்பதற்கான கூடுதல் காரணியாக அமைந்திருந்தது. இத்தகைய உணர்வோடு இருந்த பெரிய தொழில்துறை சார்ந்த பனியாக்கள்கூட ஜனசங்கத்தைக் காட்டிலும் காங்கிரஸையே ஆதரித்தனர். பலவீனமடைந்து வருகின்ற சூத்திர நில உரிமையாளர்களைப் புறக்கணித்து விட்டு, புதிதாகக் குவிந்து கிடந்த பனியா மூலதனத்தின் ஆதரவுடன் காங்கிரஸ் தேர்தல்களுக்குத் தேவையான நிதியை அளிக்கத் தொடங்கியது. சூத்திர நில உரிமையாளர்களை நிலச் சீர்திருத்தத் திட்டம் மேலும் பலவீனப்படுத்தியது. அதே நேரத்தில் வெளிநாட்டிலும் இந்தியப் பல்கலைக்கழகங்களிலும் பயின்ற பிராமண- பனியா அறிவுசார் வர்க்கம் காங்கிரஸுடன் அதிக நட்பு கொண்டதாக மாறியது. இடதுசாரி அறிவுஜீவுகளும்கூட காங்கிரஸுக்கு ஆதரவானவர்களாக மாறினர்.

இந்த அறிவுஜீவிகளின் மத்தியில் சூத்திரர் யாரும் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க உண்மையாக இருந்தது. அதன் விளைவாக இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சூத்திர உயரடுக்கினர் தங்களுடைய சொந்த பிராந்தியக் கட்சிகளின் தலைவர்களாக அல்லது காங்கிரஸ், பாஜக தலைவர்களாக பிராந்திய அரசியலுக்குள் மட்டுமே இருந்தனர். அவர்களில் ஒரு தலைவர் கூட ஆங்கிலக் கல்வியின் நவீன தரம், நுட்பம் கொண்டவர்களாக  இருக்கவில்லை. அதனால் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் மத்திய மட்டத்திலே பிராமண-பனியா தலைமை அதிகம் இடம் பெற்றது. கம்யூனிஸ்ட் கட்சிகள் புச்சலப்பள்ளி சுந்தரய்யா, சந்திர ராஜேஸ்வரராவ் போன்ற சூத்திர தலைவர்களைக் கொண்டிருந்தாலும், அவர்கள் ஒருபோதும் சாதி உணர்வு கொண்டவர்களாக இருக்கவில்லை. சாதி, வர்க்கப் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு தேசிய அளவிலான பிரச்சாரத்தை வழிநடத்தக் கூடிய அளவிற்கு சூத்திர/ஓபிசி இளம் தலைவர்களுக்கு அவர்கள் பயிற்சி அளித்து ஊக்குவிக்கவும் இல்லை. எனவே கம்யூனிஸ்ட் கட்சிகள் பிராமண சக்திகளின் பிடிக்குள் வந்தன. அந்த சக்திகள் பாஜக வளரத் தொடங்கியதும் பலவீனமடையத் தொடங்கின.    

மத்திய பல்கலைக்கழகங்கள், ஆங்கில ஊடகங்கள், நுண்ணியல்பான எழுத்து வெளிகளுக்குள் நுழையக்கூடிய அளவிற்கு மேம்பட்ட ஆங்கிலம் கற்ற அறிவுசார் வகுப்பை உருவாக்கிட சூத்திர/ஓபிசி சமூகங்கள் தவறி விட்டன என்பது சோகம். சூத்திரர்களின் ஒரு சிறிய பகுதியினர் விவசாய செல்வந்தர்களாக, நடுத்தர வர்க்கத்தின் இயல்புடையவர்களாக, பிராந்திய மொழியின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில உள்ளூர் அதிகாரத்தை தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டவர்களாக கட்டுப்படுத்தப்பட்டனர். மீதமுள்ளவர்கள் கீழ்நடுத்தர வர்க்க விவசாயத் தொழிலாளர்களாக அல்லது நகர்ப்புறத்து தொழிலாளர்களாக இருந்தனர். பிராந்திய அளவிலான சூத்திர/ஓபிசி பணக்காரர்கள்கூட தங்களுக்கென்று தேசிய அலவிலான அதிகார தளத்தை விரும்பவில்லை. உண்மையான அதிகாரத் தளம் அதிகாரத்துவ, அறிவுசார் வர்க்கத்தினரிடமே இருந்தது. அந்தத் துறைகளுக்குள்ளும் சூத்திரர்கள்/ஓபிசிக்களால் காலடி எடுத்து வைக்கவே முடியவில்லை.  

தேசிய அளவிலான அறிவுசார் ஆற்றலை வளர்ப்பதில் ஆன்மீக அறிவுஜீவிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அத்தகைய ஆன்மீக அறிவுசார் ஆற்றல் வரலாற்று ரீதியாகவே சூத்திரர்களிடையே இருக்கவில்லை. பிராமண, பனியா சாதியினரிடையே இருந்த ஆன்மீக அறிவுசார் ஆற்றல் ஆன்மீக நூல்களைச் சுற்றி தேசிய உரையாடலை உருவாக்கியது. நாடு முழுவதும் பிராமண-பனியா சாதி சமூகங்களுக்குள் - சத்திரியர்களிடமும்கூட - ராமாயணம், மகாபாரதம், குறிப்பாக பகவத் கீதை போன்ற பிராமண நூல்களை வாசிக்கின்ற கலாச்சாரத்தின் காரணமாக பொதுவான கலாச்சார குறியீடுகளைக் கொண்ட இழை கட்டப்பட்டது. கீதையை முன்னிறுத்திய அவர்கள் சூத்திரர் என்பதால் ஸ்ரீகிருஷ்ணரை முன்னிறுத்துவதில்லை. மாறாக பிராமண குருவின் கட்டுப்பாட்டில் இருந்த சத்திரியரான ராமரையே அவர்கள் எப்போதும் முன்னிறுத்தினர்.   

கிருஷ்ணரை முன்னிறுத்தும் வகையில் பிராமண ஆர்எஸ்எஸ் போன்றவர்களிடம் இருந்த உத்தி கூட சூத்திரர்களிடம் இருக்கவில்லை. தங்களுக்கு மத்தியில் முக்கியமான நூலறிவு பரவ அவர்கள் அனுமதிக்கவில்லை. வரலாற்று ரீதியாக உழுதல், உணவு உற்பத்தி போன்ற நடவடிக்கைகளிலேயே திருப்தி அடைந்திருந்த அவர்களால் ஆன்மீக உரை மீதான ஈடுபாடு, தத்துவ வளர்ச்சியின் முக்கியத்துவம் போன்றவற்றைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தங்களுடைய தலைமைகள் பிராமண பூசாரிகளின் கட்டுப்பாட்டிலும், தங்களுடைய பணப்பை பனியா வணிகர்களின் கட்டுப்பாட்டிலும் இருப்பதை அவர்களால் ஒருபோதும் புரிந்து கொள்ளவே முடியவில்லை. 1991 தாராளமயமாக்கலுக்குப் பிறகு இந்தியா முழுமையாக வளர்ந்த முதலாளித்துவ நாடாக மாறுகின்ற வரையிலும் தாங்களே இந்தியாவின் ஆட்சியாளர்கள் என்று அப்பாவித்தனமாக  அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். சூத்திரர்களை இப்போது எங்கும் காண முடியவில்லை. பிராமண-பனியாக்களின் சர்வவல்லமை கொண்ட அதிகாரத்தை எதிர்த்துப் போராடுவதற்கு அவர்களிடம் அறிவாற்றலோ, பண வலிமையோ இருக்கவில்லை. ஆன்மீகம், சமூகம், வணிகம், அரசியல் துறைகள் என்று நாட்டின் நரம்பு மையங்களை முழுமையாக பிராமண-பனியாக்களின் அறிவாற்றலே கட்டுப்படுத்தி வருகிறது.

ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளிலும் விவிலிய, குர்ஆனிய ஆன்மீக அறிவுசார் உரையாடல்களுடன் நீண்டகாலமாக ஈடுபட்டுள்ள குடும்பங்கள் அல்லது சமூகங்களிலிருந்தே சமூக, அரசியல் சிந்தனையாளர்கள், அரசியல் தலைவர்கள் தோன்றினர். அத்தகைய ஆன்மீக அறிவுசார் உரையாடல்கள் இங்கே பிராமணர்கள் என்ற ஒற்றைச் சமூகத்துடன் தொடர்புடையவையாகவே இருக்கின்றன. பின்னர் அது பனியாக்கள், சத்திரியர்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. ஆன்மீகத் தலைமையிலிருந்த சத்திரியரான யோகி ஆதித்யநாத் அரசியல் தலைமைக்கு வந்தார். மகாத்மா காந்தி, ராம் மனோகர் லோஹியா, நரேந்திர மோடி ஆகியோர் பனியா பின்னணி குடும்ப ஈடுபாடு, ஹிந்து மதத்தைப் பற்றிய ஆன்மீக அறிவு, குழந்தைப் பருவத்திலேயே நூல் வாசிப்பு கொண்டிருந்த சமூக கலாச்சாரத்துடன் வந்தவர்களாக இருந்தனர். இந்த ஆன்மீக, அரசியல் மூலதனம் அனைத்து பிராமணத் தலைவர்களிடமும் உள்ளது. இன்றளவிலும்கூட இந்த வளங்கள் சூத்திரர்கள்/ஓபிசிக்களிடம் காணப்படவில்லை.   

எடுத்துக்காட்டாக அரசியல், அதிகாரத்துவ அதிகார அமைப்புகளின் மூலம் தமிழ் மற்றும் பெங்காலி பிராமணர்கள் தேசிய அதிகார கட்டமைப்புகளுக்குள் நுழைந்தனர். குறிப்பிடத்தக்க வகையில் ஆங்கில ஊடகங்களுக்குள் நுழைந்த அவர்கள் தேசம் குறித்த வலுவான உணர்வைக் கொண்டிருக்கின்றனர். பிராந்திய அளவிலான உணர்வை மட்டுமே வலுவாக கொண்டிருப்பதால் சூத்திரர்கள்/ஓபிசிக்களிடம் அத்தகைய உணர்வு இருக்கவில்லை.  சூத்திரர்கள்/ஓபிசிகளிடம் இருக்கின்ற இந்த உள்ளூர்மயம் செல்வம் அதிகாரம் என்று தேசிய அளவிலே அனைத்தையும் கையாள்வதற்கான பெரும் வாய்ப்பை பிராமண-பனியா சமூகங்களுக்கு வழங்கியிருக்கிறது.   

இதற்கிடையில் தில்லியில் இடஒதுக்கீடு காரணமாக தலித்துகளில் ஒரு சிறிய பகுதியினர், இட ஒதுக்கீடு வகை சூத்திரர்கள் (ஓபிசி), ஆங்கிலம் படித்த முஸ்லீம்கள் என்று ஓரளவிற்கு காணப்படுகின்றனர். பிராந்தியக் கட்சிகளைத் தூக்கியெறிந்து விட்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தங்களுக்கு  ஏற்பட்டிருக்கும் பாதிப்பை சூத்திரர்களின் மேலடுக்கு உணரத் தொடங்கியது. மாநிலங்களை ஆண்டு வந்த சாதிகள் தேசிய மட்டத்தில் அதிகாரத்துவ, அறிவுசார், அரசியல் அதிகாரத்தில் தங்களுக்கான பங்கை இழந்து விட்டதாக அறிந்து கொண்டன. இடஒதுக்கீடு முறையில் தங்களையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்னிறுத்த தொடங்கினர். திட்டமிடப்பட்ட போராட்டங்களின் மூலம் மராட்டியர், பட்டேல், ஜாட், குஜ்ஜார் சாதியினர் தங்கள் மாநிலங்களுக்குள் சில இடஒதுக்கீடு இடங்களைப் பெற்றுக் கொண்டனர். 2019ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு சற்று முன்னதாக 2019ஆம் ஆண்டு அரசியலமைப்பு (103ஆவது திருத்தம்) சட்டம் மூலம் பாஜக அரசு இயற்றிய சட்டத்தின் மூலம், இதுவரையிலும் எந்தவொரு இடஒதுக்கீடு பலன்களையும் பெற்றிராத  திவிஜாக்கள், சூத்திர சாதிகள், சிறுபான்மையினரிடையே பொருளாதாரரீதியாகப் பலவீனமாக இருந்து வந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் கல்வியில் பத்து சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அந்த நடவடிக்கையின் விளைவாக நடுத்தர வர்க்கத்தினர், சூத்திரர் மற்றும் சூத்திரர் அல்லாத உயர்சாதி ஏழைகள் 2019 தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்தனர். ஹிந்துமயமாக்கப்பட்டிருந்த சூத்திரர்களும் பாஜகவுக்கு வாக்களித்தனர்.   


காஞ்சா அய்லய்யா ஷெப்பர்ட், கார்த்திக் ராஜா கருப்பசாமி ஆகியோரால் தொகுக்கப்பட்டு பெங்குயின் புக்ஸ் இந்தியா நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள ‘சூத்திரர்கள்: புதிய பாதைக்கான பார்வை’ என்ற தொகுப்பில்,காஞ்சா அய்லய்யா ஷெப்பர்ட் எழுதியுள்ள ‘சூத்திரர்களும் ஜனநாயக இந்தியாவும்’ என்ற கட்டுரையின் ஒரு பகுதி அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.

http://www.indianruminations.com/spotlight/evaluating-the-history-and-political-transformation-of-the-shudras/

 

Comments