டி.ஜே.எஸ் ஜார்ஜ்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
இடது
ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி என்று சுழற்சி முறையில் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதில்
கேரளா மிகவும் பிரபலமானது. அத்தகைய பாரம்பரியம் இந்த முறை உடையப் போகிறது.
வரவிருக்கும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று பினராயி விஜயன் பதவியில்
நீடிப்பார் என்று கணித்திருப்பவர்களுடன் நானும் இணைகின்றேன். பினராயி விஜயன் தொடர்ந்து
ஆட்சியதிகாரத்தை அனுபவிக்கப் போகின்ற முதல் கேரள முதல்வராகப் போகிறார்.
மாநிலத்திற்கு
அது மிகவும் நல்லது. இதுவரையிலும் பினராயி விஜயனைப் போன்று வேறெந்த முதல்வரும் இருந்திருக்கவில்லை. தொடக்கத்தில் இருந்ததைப் போன்று கம்யூனிஸ்ட் கட்சிக்கானவராக
மட்டுமானவராக இல்லாமல் இன்றைக்கு அவர் அனைத்து மக்களுக்குமான தலைவராக, நாட்டின்
சிறந்த முதல்வராக எளிதில் அடையாளம் காணப்படக் கூடியவராக இருக்கிறார். (தன்னுடைய மாநிலத்தில்
அடிப்படை சட்ட ஒழுங்கைக் கூட உறுதிப்படுத்த முடியாத மோசமான மனிதரான யோகி
ஆதித்யநாத்தை சிறந்த முதலமைச்சர் என்று குறிப்பிடுகின்ற சிரிப்பை வரவழைக்கின்ற சில
ஆய்வுகளும் இருக்கவே செய்கின்றன). பினராயி விஜயனிடம் உள்ள தனித்துவம் உலகத்தின்
கவனத்தை ஏற்கனவே ஈர்த்துள்ளது.
2016ஆம்
ஆண்டு முதல் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு சிறந்த நிர்வாகம் கொண்ட மாநில அரசு விருதுக்கு
பினராயி விஜயனின் கேரளாவையே ஆய்வு சிந்தனைக் களமான ‘பொது விவகார மையம்’ என்ற
அமைப்பு தேர்வு செய்தது. 2018ஆம் ஆண்டு ஐ.நா. நிலையான அபிவிருத்தி குறியீட்டில் கேரள
மாநிலம் முதலிடத்தைப் பிடித்தது. கேரளாவிடம் இருக்கின்ற சில தனித்துவமான அம்சங்கள்
மீது இந்த வகையான அங்கீகாரங்கள் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.
புலம்பெயர்ந்த
தொழிலாளர்களுக்குத் தரமான வீட்டுவசதியை வழங்கி வருகின்ற ‘உங்களுடைய வீடு’ திட்டம் அதற்கான
சிறந்த எடுத்துக்காட்டாகும். 165 நிறுவனங்களை ஈர்த்து 50,000 பேருக்கு வேலை
வழங்கியுள்ள ஐ.டி.பார்க் திட்டம் மற்றொரு எடுத்துக்காட்டாக இருக்கின்றது. கேரளாவில்
உள்ள அரசு பள்ளிகளில் இப்போது ஹைடெக் வகுப்பறைகள் இயங்கி வருகின்றன. சமூக மட்டத்தில்
பிராமணரல்லாதவர்கள், தலித்துகள் கோவில் பூசாரிகளாகப் பணியாற்றி வருவதைக் காண முடிகிறது. தனது கட்சியின் எல்லைகளுக்கு
அப்பாற்பட்டு பினராயி விஜயன் தனக்கான அபிமானிகளைக் கண்டு கொண்டிருப்பதில் ஆச்சரியப்பட
எதுவுமில்லை.
உள்துறை
அமைச்சர் அமித் ஷா எரிச்சல்
கொண்ட விமர்சகராக முன்நிற்கிறார். சமீபத்தில் கேரள மாநிலத்திற்கு
வருகை தந்திருந்த அவர் ‘வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் முதலமைச்சர்,
சட்டமன்ற சபாநாயகர், சில அமைச்சர்களுக்கு எதிராக அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்’
என்று உயர்நீதிமன்றத்தில் சுங்கத்துறை சார்பில் கூறப்பட்டிருப்பதாகச் சொல்லிதங்கம், டாலர் கடத்தல் வழக்குகளில் இடதுசாரி அரசாங்கத்திற்கு
சந்தேகத்திற்கிடமான தொடர்புகள் இருப்பதாகப் பேசியிருந்தார்.
அதிகாரம்
மிக்க உள்துறை அமைச்சரால் சுமத்தப்பட்ட அந்தக் குற்றச்சாட்டுக்களால் முதலமைச்சரை
மிரட்டி
அடக்க முடியவில்லை. மாநிலத்தில் அமித் ஷாவின்
பிரச்சாரத்தை ‘கேரளாவுக்கு நேர்ந்த அவமானம்’ என்று விவரித்த பினராயி விஜயன் தனது சார்பில்
சில கேள்விகளை முன்னிறுத்தினார். ‘அதிகாரிகளுக்கான பெட்டிகளில் தங்கத்தைக் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்ற முக்கிய
சதிகாரர்களில் ஒருவர் சங் பரிவாரைச் சேர்ந்த நபராக இருக்கிறாரே’ என்ற கேள்வியை அவர்
எழுப்பினார். அதனை வலியுறுத்தும் வகையில் ‘திருவனந்தபுரம் விமான நிலையம்
முற்றிலும் மத்திய அரசின் கீழ் வருவதுதானே? பாஜக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு தங்கக்
கடத்தல் நடைபெறுகின்ற மையமாக அந்த விமான நிலையம் மாறியது எப்படி என்று அமித் ஷாதான்
பதிலளிக்க வேண்டும்’ என்று மேலும் பல கேள்விகளை முன்வைத்தார்.
அதற்கு
எந்தவொரு பதிலும் அமித் ஷாவிடமிருந்து வரவில்லை. பினராயி விஜயன் முன்வைத்த
மேலும் சில உண்மையிலேயே சங்கடமான கேள்விகளுக்கு அவர்கள் யாருமே பதிலளிக்க முன்வரவில்லை.
‘தங்கக் கடத்தலுக்கு வசதியாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருக்கின்ற பல்வேறு
பதவிகளுக்கு சங்பரிவாரைச் சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே பணியில் நியமிக்கப்படவில்லையா? உங்களைச் சார்ந்த நபர்களை
நோக்கி குற்றச்சாட்டுகள் திரும்பிய போது அந்த விசாரணையின் திசை மாறவில்லையா? விசாரணையைத்
தடம் புரளச் செய்யும் வகையில் சுங்கத்துறை இணை ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஒரே
இரவில் இடமாற்றம் செய்யப்படவில்லையா? கடந்த எட்டு மாதங்களில் தங்கத்தை அனுப்பிய
நபரிடம் அதுகுறித்து விசாரணை எதுவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா?’ என்ற முதலமைச்சரின் கேள்விகளுக்கான
பதில்கள் எதுவுமே அவர்களிடமிருந்து வரவில்லை என்பதில் ஆச்சரியமடையாதவர்கள்
யாருமில்லை.
அவர்
மிகவும் வலுவான மனிதர் என்ற சித்திரம் அமித் ஷாவைப் பற்றி இருந்து வருகிறது. அவரது இலாகா மகத்தான அதிகாரத்தை அவருக்கு அளிக்கிறது.
அவருக்கு
ஆத்திரமூட்டுகின்ற வகையிலே நடந்து கொள்பவர்கள்
அதற்காக வருந்துவார்கள் என்ற எண்ணத்தை வலுப்படுத்துவதாகவே அவருடைய நடவடிக்கைகள் அனைத்தும்
இருக்கின்றன. அதனால்தான் அவருக்கு எதிராக யாரும்
சவால் விடுப்பதை அல்லது அவருடன் முரண்பட்டு எதிர்த்து நிற்க முயற்சிப்பதை நாம்
கேள்விப்பட்டிருக்கவில்லை. அதனால்தான் அடிக்கடி தேவைக்கும் அதிகமாகவே அமித் ஷா ஆக்ரோஷமாகக்
காட்சியளிக்கிறார். புல் நறுக்கும் இயந்திரம் தேவைப்படுகின்ற இடத்திலே அவர் ஜேசிபி
இயந்திரத்தைப் போன்று இருந்து வருகிறார்.
கேரள
மாநிலம் மற்ற மாநிலங்களைப் போல இல்லை என்பதையும், பினராயி விஜயனும் மற்ற மாநில முதலமைச்சர்களைப்
போன்றவர் இல்லை என்பதையும் அமித் ஷா அறிந்து கொண்டிருக்க வேண்டும். இந்த
அடிப்படைகளை அவர் முன்பே புரிந்து கொண்டிருப்பாரேயானால், திருவனந்தபுரத்தில் அந்த
அளவிற்கு மோசமாக அம்பலப்பட்டிருக்க மாட்டார். வலிமை மிக்க அமித் ஷா எந்த வகையிலும்
தன்னுடன் மோதுவதற்குப் பொருத்தமானவர் இல்லை என்பதைக் காட்ட பினராயி விஜயனுக்கு சில
வார்த்தைகள் மட்டுமே தேவைப்பட்டன. ‘ஆட்களைக் கடத்தியதற்காக நான் சிறையில்
அடைக்கப்பட்டிருக்கவில்லை... உங்களுடைய கலாச்சாரம் என்னுடைய கலாச்சாரம் அல்ல’
என்று தெரிவித்த வார்த்தைகளுக்குக் கூடுதலாக வேறு வார்த்தைகள் பினராயி விஜயனுக்குத்
தேவைப்படவில்லை.
அரசியல்
தலைவர்களுக்கு பினராயி விஜயன் மிகவும் பயனுள்ளவராக இருக்கிறார். கம்யூனிஸ்டான அவர்
வேறு எந்த மாநிலத்திலாவது இருந்திருந்தால் இந்தப் பிரச்சனைகளுக்குள் மூழ்கி இருப்பார்;
ஆனால் கேரளாவில் கம்யூனிசம் எதற்கும் அஞ்சாததால் அவர் பிழைத்திருக்கிறார். கம்யூனிசமே
சில மாற்றங்களை கேரளாவில் சந்தித்திருக்கிறது, விஜயன் அனைவருக்கும் மேலான கட்சித்
தலைவராக உருவெடுத்திருக்கிறார். தன்னுடைய மாநிலத்திற்கும், அதன் மக்களுக்கும்
உண்மையான, தெளிவான முன்னேற்றத்தை அவர் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.
ஒருகாலத்தில்
அவரது தலைமையை கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மட்டுமே அங்கீகரித்திருந்தனர். ஆனால் கேரளாவில் உள்ள அனைவரும் இப்போது அவரைப் பாராட்டி
வருகிறார்கள். தொடர்ந்து அவரைத் தாக்கி வருகிற காங்கிரஸ் தலைவர்கள் தங்களுடைய துணிச்சலால்
சிறிதளவும் அவருக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்பதை அறிந்து கொண்டிருக்கிறார்கள். பினராயி
விஜயன் அனைவரின் ஏற்பையும் வென்றெடுத்திருக்கிறார். நிச்சயம் அவர் கேரள மாநில
அரசின் தலைவராகத் தொடருவார்.
Comments