விவசாயிகளின் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு ஸ்பெயினில் சட்டம் திருத்தப்பட்டது… இந்தியாவில்?

 தேவிந்தர் சர்மா

உணவு மற்றும் வேளாண் நிபுணர்

ட்ரிப்யூன் இந்தியா




ஷான் டைவர் அயர்லாந்தில் உள்ள ஆட்டுப் பண்ணை ஒன்றின் மேலாளர். அவருடைய பண்ணையில் 240 ஆடுகள் இருக்கின்றன. கடந்த மாதம் அவர் 455 கிலோ அளவிற்கான கம்பளியை 67 யூரோவிற்கு விற்றிருந்தார். ‘இந்த 240 ஆடுகளிலும் கம்பளியை வெட்டி எடுப்பதற்கு மட்டும் 560 யூரோ செலவானது. இது தவறு. மிகமிகத் தவறு’ என்று அந்த விற்பனைக்கான ரசீதையும் இணைத்து அவர் மிகவும் கோபமாக ட்வீட் செய்திருந்தார். மகாராஷ்டிரா மாநில அகமதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரேயாஸ் அபாலே என்ற விவசாயி ஒருவரை நினைவூட்டுவதாக அவருடைய ட்வீட் இருந்தது. 2018 டிசம்பரில் ஒரு கிலோ ரூ.1 என்ற விலைக்கு 2,657 கிலோ வெங்காயத்தை ஸ்ரேயாஸ் விற்றிருந்தார். போக்குவரத்துச் செலவு, தொழிலாளர்களுக்கான சம்பளம், சந்தைக் கட்டணங்கள் என்று அனைத்தையும் சரிசெய்த பிறகு வீட்டிற்குத் திரும்பிச் செல்லும் போது அவரிடம் மிஞ்சியிருந்தது ரூ.6 மட்டுமே. சந்தைகள் விவசாயிகளுக்கு இழைக்கின்ற இத்தகைய கொடூரத்தின் மீது எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் அவர் அந்த ஆறு ரூபாயை பண அஞ்சல் வழியாக மாநில முதல்வருக்கு அனுப்பி வைத்திருந்தார்.   



இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த இரண்டு நிகழ்வுகளும் விதிவிலக்கானவை அல்ல.  தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக உலகெங்கிலும் உள்ள விவசாயிகள் போராடி வருகின்றனர். நியாயமற்ற விலைகள், தகிடுதத்த சந்தைகள் என்று பாதிக்கப்பட்டுள்ள இந்த விவசாயிகள் உணவு விநியோகச் சங்கிலி நிறுவனங்களால் இரக்கமற்ற சுரண்டலுக்கு ஆளாகியிருக்கின்றனர். ‘அமெரிக்க விவசாயிகளுக்கென்று இருந்து வந்த ஆதார விலையை கடந்த பல ஆண்டுகளாகவே அரசு கொள்கை வகுப்பாளர்கள் பலவீனப்படுத்தியுள்ளனர். அதன் விளைவாக ஒருபோதும் முடிவடையவே செய்யாத அதிக உற்பத்தி - குறைந்த விலை என்ற சுழற்சி உருவாகியுள்ளது. அது பல்லாயிரக்கணக்கான சிறு, நடுத்தர வேளாண் பண்ணைகளை வேளாண் வணிகத்திலிருந்து வெளியேற்றியிருக்கிறது’ என்று குறிப்பிட்டு அமெரிக்க தேசிய உழவர் சங்கமும் அதனை ஒப்புக் கொண்டிருக்கிறது. 

விவசாயிகளுக்கு நேரிட்ட விலை பற்றாக்குறையைச் சரி செய்வதற்காக 2015 மற்றும் 2017ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இருபது பெரிய நிறுவனங்கள் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 47500 கோடி டாலர் என்ற அளவிற்கு நேரடி வருமான ஆதரவை வழங்கியுள்ளதாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு குறிப்பிட்டுள்ளது. விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கான சரியான விலையை நிர்ணயிப்பதற்கான விநியோகம் - தேவை குறித்த அளவுகோல்கள் விவசாயிகளை ஒன்றுமில்லாதவர்களாக்கி தவிக்க விட்டிருப்பதற்கான தெளிவான குறிப்பானாகவே அது உள்ளது. 



உத்தரவாத விலையை வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பல நாடுகளில் விவசாயிகளின் போராட்டங்கள் பல ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருப்பதில் ஆச்சரியமடைய எதுவுமில்லை. பல மாதங்களாக நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்களுக்குப் பிறகு உலகளாவிய முன்முயற்சியின் முன்னோடியாக ஸ்பெயின் சமீபத்தில் உருவெடுத்திருக்கிறது. உற்பத்திச் செலவிற்கு குறைவான விலையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடைசெய்யும் சட்டத்தைக் கொண்டு வந்திருப்பதன் மூலம் ஸ்பெயின் புதிய இயல்பு நோக்கி நகர்ந்திருக்கிறது. இதுவே உலகின் அனைத்து இடங்களிலும் உள்ள விவசாயிகள் விரும்பிய நடவடிக்கையாகும். விவசாயிகளுக்கு நஷ்டத்தை விளைவிக்கும் வகையில் உணவை விற்பனை செய்கின்ற சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிப்பது என்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியானது உணவு வழங்கல் சங்கிலியை மீட்டமைப்பது மட்டுமல்லாமல், சிறிய அளவிலான விவசாயத்தை நிச்சயம் பலப்படுத்தவும் செய்யும்.

ஸ்பெயின் கொண்டு வந்திருக்கும் சட்டத் திருத்தத்தின் எதிரொலிகள் நிச்சயமாக கண்டங்களைத் தாண்டியும் உணரப்படும். ஏற்கனவே பிரான்சும், ஜெர்மனியும் உணவு வழங்கல் சங்கிலி நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளைக் களைவதற்கான சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன போதிலும் அவை போதுமானவையாக இருக்கவில்லை. பிரான்சில் தற்போதுள்ள சட்டத்தை திருத்தி இயற்றப்பட்டிருக்கும் 2018ஆம் ஆண்டு அவசரச் சட்டம் உண்மையான விலைக்குக் கீழே மறுவிற்பனை செய்வதைத் தடைசெய்யும் வகையில் சில்லறை உணவு விலையில் பத்து சதவீத அதிகரிப்புக்கு அனுமதித்திருக்கிறது. இருந்த போதிலும் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கவில்லை.

‘உணவு விநியோகச் சங்கிலியில் விலையைக் குறைப்பது’ என்ற செயல்பாட்டைத் தடுத்து நிறுத்துவதற்காக உற்பத்திச் செலவை உள்ளடக்கிய விலைக்கு உத்தரவாதம் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் - உலகெங்கிலும் உள்ள அரசியல் தலைமைகள் இதுகுறித்து திட்டவட்டமான முடிவுகளை மேற்கொள்ளாமல் தவிர்த்து விட்ட போதும் - அதனைச் சட்டப்பூர்வமாக்கிக் கொடுத்து உலக நாடுகளில் ஸ்பெயின் முன்னிலை எடுத்திருக்கிறது. இதுவரையிலும் விவசாயிகளைக் காவு கொடுத்து நுகர்வோர்களை (தொழில்துறையையும்) பாதுகாப்பதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால் பல ஆண்டுகளாக நுகர்வோர்களுக்கும், பெருநிறுவனங்களுக்கும் விவசாயிகள்தான் மானியம் வழங்கி வந்திருக்கின்றனர் எனலாம். இந்த நிலைமை அவசியம் மாற வேண்டும்.    



தற்போதுள்ள 2013ஆம் ஆண்டு உணவு விநியோகச் சங்கிலி சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்து பொருத்தமான சட்டத் திருத்தங்களை (புதிய 'ராயல் டிக்ரி-லா 5/2020' இன் கீழ்) பிப்ரவரி 27 முதல் ஸ்பெயின் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. வேளாண்மை, கால்நடைகள், மீன்வளம், வனம் சார்ந்த முதன்மை உற்பத்தியாளர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு இடையில் ஒப்புக் கொள்ளப்படும் விலையை விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் கணக்கில் கொண்டே உறுதி செய்ய வேண்டும் என்பதே அந்த சட்டத் திருத்தத்தின் நோக்கமாக இருக்கிறது.  ‘நடப்பில் உள்ள உற்பத்திச் செலவை’ கணக்கிடுவதற்கு ஸ்பானிஷ் நாட்டு சட்டமியற்றுபவர்கள் இந்திய அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்ளலாம்.

விதிமுறைகளை மீறுபவர்களுக்கு, அதாவது உற்பத்திச் செலவுக்குக் குறைவாக விற்பவர்களுக்கு 3,000 முதல் 1,00,000 யூரோ வரையில் கடுமையான அபராதங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. கடுமையாக மீறல் இருக்கும் போது பத்து லட்சம் யூரோ அளவிற்கு அந்த அபராதம் அதிகரிக்கக்கூடும். முன்னதாக பிரான்ஸ் 75,000 யூரோ அபராதத்தை அறிவித்துள்ளது.   

உற்பத்திச் செலவை விவசாயிகளுக்கு உறுதி செய்து தருவதன் மூலம் ஏற்படுகின்ற கூடுதல் செலவினங்களை விநியோகச் சங்கிலிகள் நுகர்வோரிடம் தள்ளி விடுமா என்ற கேள்விக்கு ஆக்ஸ்பாம் ஜெர்மனியின் மூத்த கொள்கை ஆலோசகரான மரிட்டா விகெர்தேல் சட்டத் திருத்தம் மிக அண்மையிலேயே  செயல்படுத்தப்படுத்தப்பட்டிருப்பதால் நுகர்வோர் விலைகள் மீதான அதன் தாக்கம் குறித்து இதுவரையிலும் எந்த பகுப்பாய்வும் செய்யப்படவில்லை என்கிறார். முன்னதாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்திய நேரத்தில் விவசாய, மீன்வள மற்றும் உணவுத்துறை அமைச்சர் லூயிஸ் பிளானஸ் ‘உணவுச் சங்கிலிக்கான பொறுப்பை அனைவரும் ஏற்றுக்கொண்டால்’ சில்லறை விலைகள் உயராமல் சாதாரண நிலையிலேயே இருக்கும் என்று ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். அதே துறையைச் சார்ந்த பிரெஞ்சு அமைச்சரான டிடியர் குய்லூம் உணவுப் பொருட்கள் விற்பனையின் மூலம் முப்பது முதல் நாற்பது சதவீதம் லாபத்தைப் பெறுகின்ற நடைமுறையை நிறுத்திடுமாறு சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஸ்பெயினின் இந்த புதிய சட்டம் இந்தியா மீதும் அதிக தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும். மத்திய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், எந்தவொரு வர்த்தகமும் குறைந்தபட்ச ஆதார விலைக்குக் குறைவாக இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் குறைந்தபட்ச ஆதார விலையானது விவசாயிகளின் சட்டப்பூர்வ உரிமையாக இருக்க வேண்டும் என்று தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்ற இந்திய விவசாயிகள் கோரி வருகின்றனர். உற்பத்திச் செலவை உள்ளடக்கிய குறைந்தபட்ச உறுதிப்படுத்தப்பட்ட விலையுடன் லாபத்தையும் உறுதி செய்து தருகின்ற குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கப்பட்டிருக்கின்ற (கோதுமை மற்றும் நெல்லுக்கு மட்டுமல்லாது) இருபத்தி மூன்று பயிர்கள் அனைத்திற்கும் கிடைக்க வேண்டும் என்பதே இதன் பொருளாக உள்ளது. ஸ்பெயினைப் போல குறைந்தபட்ச ஆதார விலையைச் சட்டப்பூர்வமாக்குவது என்பதற்கு ஒட்டுமொத்த வேளாண் உற்பத்தியையும் அரசே வாங்கிக் கொள்ள வேண்டும் என்று பொருளல்ல. விவசாயிகளுக்கான விலையை மட்டுமே அது உயர்த்தித் தருகிறது. விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்வது தனியார் வர்த்தகத்தின் கடமையுமாகும்.  

யதார்த்தமான உணவு விலைகளுடன் பண்ணை வருமானங்களை இணைக்காத போது, விவசாயம் லாபகரமான முயற்சியாக மாறும் என்று எதிர்பார்ப்பது பயனற்றதாகவே இருக்கும் என்பதை ஏற்கனவே உள்ள அனுபவம் காட்டுகிறது. தனியார் முதலீடுகள் விவசாயிகளுக்கு அதிக அளவிலான வருமானத்தைக் கொண்டு வரும் என்ற கூற்றும் இதுவரையிலும் செயல்படவில்லை. கட்டுப்பாடற்ற சந்தைகள் பண்ணை விலை அதிகமாவதை உறுதிப்படுத்தித் தரவில்லை. விவசாயம் எதிர்கொண்டிருக்கின்ற துயரங்களைச் சமாளிப்பதற்கும், பொருளாதார ரீதியாக சாத்தியமான முன்மொழிவாக விவசாயத்தை மாற்றுவதற்கும் ஸ்பெயினில் உள்ளதைப் போல குறைந்தபட்ச ஆதார விலைக்குக் குறைவாக நடைபெறுகின்ற எந்தவொரு வர்த்தகத்திற்கும் அபராதம் விதிக்கும் வகையிலான மாற்றத்தை இந்தியாவில் கொண்டு வருவதற்கு நீண்ட தூரம் நாம் பயணிக்க வேண்டியிருக்கும்.  


https://www.tribuneindia.com/news/comment/its-changed-for-spains-farmers-219714


Comments