அமெரிக்க சிறு வேளாண் பண்ணைகளை ‘பெரு விவசாயம்’ எவ்வாறு விழுங்கியது?

   டைம்ஸ் ஆஃப் இந்தியா




நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக தன்னுடைய விவசாயத் துறையை அமெரிக்கா பெருநிறுவனங்களுக்குத் திறந்து விட்டது. அதையே இப்போது செய்வதற்கு இந்தியா விரும்புகிறது. அங்கே அமெரிக்காவில் அந்த முடிவு எவ்வாறு முடிந்தது? அமெரிக்க விவசாயிகளின் நிலைமையை ஆவணப்படுத்துவதற்காக முன்னாள் ஐஐடி மாணவர், நாசா அறிவியலாளர், தேசிய விருது பெற்ற திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்று லாஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்டு இயங்கி வருகின்றவருமான பெடாபிரதா பெயின் கிராமப்புற அமெரிக்கா முழுவதும் ஏறத்தாழ பத்தாயிரம் கிலோமீட்டர் தூர சாலைப் பயணத்தை மேற்கொண்டார். தான் கண்டது குறித்து அவர் இவ்வாறு கூறுகிறார்:  



ஜனவரி மாதத்து காலையில் அமெரிக்காவின் மையப்பகுதி வழியாக பத்தாயிரம் கிலோமீட்டர் பயணத்தை நாங்கள் தொடங்கிய போது அங்கிருந்த சாலைகள் பனியால் மூடப்பட்டு, மிகவும் குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. சிரிஸ்டி அகர்வால், ராஜாஷிக் தாராஃப்டர் என்று பிஹெச்டி படிப்பைத் தொடர்ந்து வருகின்ற இரண்டு இளம் இயற்பியலாளர்கள், ருமேலா கங்கோபாத்யாய் என்ற நாடகக் கலைஞர் ஆகியோருடன் நானும் இணைந்து மிகச்சிறந்த ‘ட்ரம்ப் நாட்டின்’ கிராமப்புற அமெரிக்க விவசாயத்தின் நிலையைக் காண விரும்பினோம்.

இந்த தொற்றுநோய்க்கு இடையில், மிக மோசமான வானிலையில் படப்பிடிப்பை நடத்துவது மிகவும் கடுமையாகவே இருந்தது. ஆனால் விவசாயிகளிடமிருந்து - குடியரசுக் கட்சி அல்லது ஜனநாயகக் கட்சி, கருப்பு அல்லது வெள்ளை என்று - எங்களுக்கு கிடைத்த அந்த அன்பான வரவேற்பு அந்தக் கடுமையை இல்லாமல் செய்து விட்டது. இந்தியாவைப் போலவே அமெரிக்க வேளாண் நிலப்பரப்பிலும் சிறு விவசாயிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதை அறிந்த போது நாங்கள் உண்மையிலேயே ஆச்சரியப்பட்டு போனோம். ஒட்டுமொத்த பண்ணைகளில் தொன்னூறு சதவீதம் சிறு விவசாயிகளால் நடத்தப்படுவதாக இருந்தாலும், அவர்களால் சந்தை மதிப்பில் இருபத்தைந்து சதவீதம் என்ற அளவிற்கு மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றது. அதுவே அமெரிக்காவின் கிராமப்புற நெருக்கடி குறித்து எங்களுக்குக் கிடைத்த முதல் துப்பாக இருந்தது. சிறிய வேளாண் பண்ணைகளின் வருமானம் கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்து அபாய நிலையிலேயே இருந்து வருகிறது. விவசாயத்தின் மூலம் கிடைக்கின்ற இடைநிலை அமெரிக்க வருமானம் 2020ஆம் ஆண்டு  பிப்ரவரியில் 1,400 டாலராக இருந்தது. கோதுமைக்கான உற்பத்திச் செலவு கடந்த இருபதாண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ள நிலையில், வேளாண் பொருட்களின் பண்ணை விலையோ 1865 உள்நாட்டுப் போரின் போது இருந்த அளவிற்கே இருந்து வருவதாக விவசாயி ப்ரெண்ட் ப்ரூவர் எங்களிடம் கூறினார். அவர் கூறியது மிகவும் சரிதான்.   

சில்லறை விற்பனை விலையில் அமெரிக்க விவசாயிக்கு கிடைத்து வந்த பங்கு 1950களில் ஐம்பது சதவீதமாக இருந்தது இன்றைக்கு அது பதினைந்து சதவீதத்திற்கும் கீழே குறைந்து விட்டது. 1981ஆம் ஆண்டின் மந்தநிலையின் போது மற்ற நேரங்களைக் காட்டிலும் அதிகமாக உயர்ந்திருந்த கடன்தொகை இப்போது மிகவும் அதிகமாக 42500 கோடி டாலர்களைத் தொட்டிருக்கிறது,  கடனைச் செலுத்த தவறியவர்களின் விகிதம், திவால்நிலை அறிவித்தவர்களின் எண்ணிக்கை மட்டுமல்லாது தற்கொலை தடுப்பு தொலைபேசிகளுக்கான அழைப்புகளும் இப்போது பெருமளவில் அதிகரித்துள்ளன.. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் விகிதம் இன்றைக்கு தேசிய சராசரியை விட 4-5 மடங்கு அதிகமாக இருக்கின்றது. விளக்குகளை எல்லாம் அணைத்து விட்டு தன்னுடைய வெறுமையான சமையலறையில் கையில் ஏந்தப்பட்ட துப்பாக்கியுடன் தனியாக உட்கார்ந்து கொண்டு தற்கொலை ஹெல்ப்லைனை அழைத்த விவசாயி ஒருவரைப் பற்றி கேள்விப்பட்டிருந்தோம். பல ஆண்டுகளாக தனிப்பட்ட முறையில் தான் நன்கு அறிந்திருந்த விவசாயிகளின் கடன்கள், திவாலான விவசாயிகள் குறித்த தகவல்களை அளிக்குமாறு தனது நிர்வாகத்தால் கட்டாயப்படுத்தப்பட்ட உள்ளூர் வங்கி அதிகாரி தன்னைத்தானே கொன்றது பற்றியும் நாம் இந்தக் காலத்தில் கேள்விப்பட்டோம்.   

கிட்டத்தட்ட எண்பது சதவீத கிராமப்புற மாவட்டங்களில் மக்கள் தொகை சரிவைக் கண்டிருக்கிறது.  தனக்கு அருகிலுள்ள கைவிடப்பட வீடுகளை அயோவாவில் உள்ள தானிய விவசாயியான ஜார்ஜ் நெய்லர் எங்களிடம் காட்டினார். விவசாயம் குறைந்து கொண்டே வருவதால் விதை விற்பனை நிலையங்கள், தானியக் களஞ்சியங்கள், பழுதுபார்க்கும் கடைகள் போன்ற உள்ளூர் வணிகங்கள் மட்டுமல்லாமல் மருத்துவமனைகளும் காணாமல் போக ஆரம்பித்துள்ளன. இன்றைக்கு ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் கிராமப்புற மாவட்டங்களில் உள்ள சுமார் ஆயிரம் பள்ளிகள் மூடப்படுகின்றன. கிட்டத்தட்ட நாங்கள் பேசிய விவசாயிகள் அனைவருமே ரீகன் காலத்தில் விவசாயம் ‘திறந்து’ விடப்பட்டதால் ‘பெரு விவசாயங்கள்’ அதிகரித்தது என்று கூறினர். தங்களுடைய அவல நிலைக்கு இப்போது அமெரிக்க விவசாயத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற பிரம்மாண்டமான வேளாண் வணிக நிறுவனங்களே காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.  



ரொனால்ட் ரீகன் 1981ஆம் ஆண்டு அமெரிக்க அதிபரானார். அவர் தடையற்ற சந்தை, ‘டெரெக்’ எனப்படும் கட்டுப்பாடு நீக்கம் போன்றவற்றின் பாதுகாவலராக இருந்தார். அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம் போட்டிகள் நிறைந்த சந்தையை உருவாக்கி வேளாண் பொருளாதாரத்தை தனியாருக்குத் திறந்து விடுவது விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் பலனளிக்கும் என்று அவரால் அப்போது கூறப்பட்டது.    

உலகளாவிய மந்தநிலையின் போது குடும்ப பண்ணைகளுக்காக உருவாக்கப்பட்ட விலை ஆதரவு, தானிய-இருப்பு கடன்கள், ஒப்புநிலை விலை நிர்ணயம் (இந்தியாவில் உள்ள குறைந்தபட்ச ஆதார விலை போன்றது) போன்ற மந்தநிலை-கால வழிமுறைகளை நிர்வாகம் நீக்கிய போது உலகளாவிய பின்னடைவு ஏற்பட்டது. ஒரு காலையில் விவசாயிகள் எழுந்தபோது பண்ணை விலைகள் சரிந்திருந்தன, நிலத்தின் மதிப்புகள் குறைக்கப்பட்டு வட்டி விகிதங்கள் கடுமையாக உயர்ந்திருந்தன. அரசாங்கத்தின் ஆதரவு வெட்டப்பட்டதன் காரணமாக, இரண்டரை லட்சம் சிறு பண்ணைகள் மூடப்பட்டன. பத்து லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இடம் பெயர்ந்து சென்றனர். கிராமப்புற நிலப்பரப்பைப் போன்று வெறிச்சோடிய நகரங்கள் காணப்பட்டன.

நிலத்திற்கு என்ன நேர்ந்தது? நிலமற்ற விவசாயிகள் மிகவும் கடுமையான ஒப்பந்த வேளாண் விதிமுறைகளின் கீழ் உழைக்கத் தொடங்கியதால், நிலங்களை பெரு விவசாயம் தன்வசம் குவித்துக் கொண்டது. சந்தையைக் கட்டுப்படுத்தவும், பண்ணை விலையைக் குறைக்கவும், மிகவும் குறைந்த விலையில் உள்கட்டமைப்பு வசதிகளை வாங்கவும், சிறு பண்ணைகள் நீடித்து நிற்க முடியாத அளவிற்கு செலவுகளை உயர்த்தவும் ராட்சத பெருநிறுவனங்கள் தங்களுடைய நிதி செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டன.

தனது நாற்பத்தைந்து மாடுகளையும் அவற்றின் பெயர் கொண்டு அறிந்து வைத்திருந்த ஜிம் குட்மேன் என்பவர் நாற்பதாண்டுகளாகப் போராடிய பின்னர், இறுதியாக மாடுகளை விற்று விட்டு தன்னுடைய பால் பண்ணையை மூடினார். மற்றொரு பால் விவசாயியான ஜோயல் க்ரீனோ தன்னுடைய பண்ணையில் எஞ்சியிருப்பவற்றையாவது பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் தொழிற்சாலை ஒன்றில் பன்னிரண்டு மணி நேர ஷிப்டுகளில் இப்போது பணிபுரிந்து வருகிறார், நெய்லர் போன்றவர்கள் தங்கள் சிறிய தானிய பண்ணையைக் காப்பாற்ற கடுமையாக முயற்சி செய்கிறார்கள். பெரிய இயந்திர நிறுவனம் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த பங்கு விவசாயி ஒருவர் தவறி விட்டபோது விதைப்பு பருவத்தின் நடுவே அவரது டிராக்டரை தொலைவிலிருந்தே இயக்க முடியாதவாறு செய்தது.    



கால்நடை பண்ணையாளர்களைப் பொறுத்தவரை நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது. தன்னுடைய கடையை மூடுமாறு தன்னைக் கட்டாயப்படுத்துவதற்காக நிறுவனங்கள் எவ்வாறு ஒன்றிணைந்டு கொண்டன என்பதை மைக் காலிக்ரேட் என்ற பண்ணையாளர் எங்களிடம் விவரித்தார். மிகச்சில இறைச்சி பதப்படுத்தும் நிறுவனங்களே இப்போது கால்நடைகளை வைத்திருக்கின்றன. கோழி, மாட்டிறைச்சி, பன்றி வளர்க்கின்ற விவசாயிகள் ஏறக்குறைய அவர்களிடம் ஒப்பந்தத்தின் கீழ் விலங்குகளை வளர்த்து தருகின்ற பண்ணை அடிமைகளாகவே இருந்து வருகின்றனர். இந்த உணவு ராட்சதர்கள் மட்டுமே நகரத்தில் எஞ்சியிருப்பதால், அந்த விவசாயிகள் தங்களுடைய பேரம் பேசும் சக்தியையும் இழந்து நிற்கிறார்கள்.



பண்ணை முதல் முட்கரண்டி வரை, விதைகள் முதல் மளிகைக் கடைகள் வரை என்று அனைத்தையும் பெரு விவசாயம் கட்டுப்படுத்தி வருகின்ற அதே நேரத்தில் அமெரிக்க கோழி பண்ணையாளர்களில் கிட்டத்தட்ட எழுபத்தைந்து சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழேயே வாழ்ந்து வருகின்றனர். விதைகளுக்கான சந்தையில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு, எண்பது சதவீத ரசாயன உரங்கள், தானிய வர்த்தகம், பால் உற்பத்தி, இறைச்சி வழங்கல், கிட்டத்தட்ட 100% பண்ணை இயந்திரங்களை நான்கே நான்கு பெரிய நிறுவனங்கள் கட்டுப்படுத்தி வருகின்றன. இதற்கிடையில்  கடனைத் தள்ளுபடி செய்வது,  சந்தை வசதிகளை ஏற்படுத்தி தருவது, பயிர் காப்பீட்டு மானியங்களை வழங்குவது என்று பல வடிவங்களில் அரசாங்கப் பணம் பெருநிறுவனங்களுக்குப் பாய்ந்து செல்கிறது. அமெரிக்க அரசாங்கம் வழங்குகின்ற மானியமான 5000 கோடி டாலர்களில் எழுபது சதவீதத்திற்கும் அதிகமான பணம் வெறுமனே இருபது சதவீத பண்ணைகளுக்கு மட்டுமே சென்று சேர்கிறது.



மிசோரி பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஜான் ஈ இகெர்ட் கூறுகையில், ‘இவையெல்லாம்  அரசியல் ஆதரவு இல்லாமல் நடந்திருக்க முடியாது’ என்கிறார். அதிக செயல்திறன், நுகர்வோர் நலனுக்காக என்று சொல்லிய ரீகன் ஆற்றல் மிக்க ஏகபோகங்களின் எழுச்சிக்கு உதவினார். ரீகன் ‘அதிகாரத்தை ஓரிடத்தில் குவிப்பதற்கு நாங்கள் அனுமதிக்கப் போகிறோம். ஏனெனில் அதுவே மிகவும் செயல்திறன் கொண்டதாக இருக்கும்... விலையைக் குறைப்பதற்கு அவர்கள் (ஏகபோக சக்திகள்) இதைப் பயன்படுத்திக் கொள்வார்கள்’ என்றார்.   

ஏகபோக சக்திகள் உணவு விலையைக் குறைத்தனவா? அமெரிக்காவில் கடந்த நாற்பதாண்டுகளில் சராசரி உணவு விலைகள் இருநூறு சதவீதத்திற்கும் அதிகமாகவே அதிகரித்துள்ளன. அதே சமயம் கீழ்மட்டத்தில் இருக்கின்ற தொன்னூறு சதவீதத்தினரின் வருவாய் இருபத்தைந்து சதவீதத்திற்கும் குறைவாகவே அதிகரித்துள்ளது. அதிகரித்திருக்கின்ற கிராமப்புற வறுமை, குழந்தை பசி, உணவுப் பாதுகாப்பற்ற வீடுகள் பற்றி எங்களிடம் ‘குடும்ப பண்ணை நடவடிக்கை’ என்ற பிரச்சாரக் குழுவிற்குத் தலைமை தாங்கும் ஜோ மேக்ஸ்வெல் விளக்கினார். ஆற்றல்மிக்க தேசத்தில் இப்போது இவற்றைப் பற்றியெல்லாம் கேட்பது நீங்கள் எதிர்பார்க்காததாகவே இருக்கும். இன்றைக்கு கிராமப்புற அமெரிக்கா தான் கைவிடப்பட்டு விட்டதாகவே உணர்கிறது, அதன் கவுரவம் பறிக்கப்பட்டிருக்கிறது. வீட்டிற்குத் திரும்பிய போது, ​​ஒரு விஷயம் எங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது: அமெரிக்க விவசாயத்தைத் திறந்து விட்டது அனைத்து நோய்களையும் தீர்க்கின்ற சஞ்சீவி மருந்தாக இல்லாமல் குறைந்தபட்ச ஆதார விலை போன்ற ஒப்புநிலை திட்டங்களை நீக்குதல், ஒப்பந்த விவசாயத்தின் எழுச்சி போன்று பெரு விவசாயத்தில் ஈடுபட்டிருப்பவர்களைத் தவிர அனைவருக்கும் இழப்பை ஏற்படுத்துகின்ற முன்மொழிவாக மட்டுமே மாறியிருக்கிறது. 

 

https://timesofindia.indiatimes.com/world/us/how-big-ag-ate-up-americas-small-farms/articleshow/81384027.cms

 

Comments