நவீன இந்தியாவில் சாதிகளுக்கிடையிலான திருமணங்களின் மூலம் பிறக்கின்ற குழந்தைகளின் நிலைமை

  

ரோஹன் மனோஜ்


தி ஹிந்து


சாதிகளுக்கிடையே திருமணம் செய்து கொண்ட தம்பதிகள், அவர்களுக்கு முன் இருக்கின்ற சவால்களைப் பற்றி நாம் அடிக்கடி பேசி வருகிறோம். ஆனால் உண்மையில் சாதிகளுக்கிடையில் நடைபெறுகின்ற திருமணங்களின் மூலம் பிறக்கின்ற குழந்தைகளின் நிலைமை எவ்வாறு இருக்கிறது? அந்த குழந்தைகள் சாதி அமைப்பு, சட்டம், தங்களுக்கான அடையாளம் போன்றவற்றை எவ்வாறு கையாண்டு வருகிறார்கள்?



பட்டயங்கள் குறித்து ஆழமான விவாதங்கள் இருந்து வருகின்றன. ரதகாரர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கின்ற பொற்கொல்லர்கள், வெள்ளி வேலை செய்பவர்கள், தச்சர்கள், கற்தச்சர்கள், கொத்தனார்கள் என்று பலவிதமான கைவினைஞர்களின் சாதி நிலை குறித்து முடிவு செய்யுமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்ட போது, அது குறித்து சிந்தித்த கற்றறிந்தவர்கள் சபையினர் தங்களுடைய கவனத்தை தர்மசாஸ்திரங்கள் மீது செலுத்தி இறுதி முடிவுக்கு வந்தார்கள். அந்த விவகாரம் சிறிதளவு அரசியல் நெகிழ்வுத்தன்மையுடன்,  கற்பனையைத் தூவி எளிமையாக்கி கையாளப்பட்டிருக்கும் என்பதில்  சந்தேகமில்லை.   

பெரும்பாலும் அந்த கைவினைஞர்கள் உயர்சாதியைச் சார்ந்த தந்தைக்கும், தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த தாய்க்குமிடையே நடைபெற்ற அனுலோமா திருமணத்தின் மூலம் பிறந்தவர்கள் என்று பிராமணர்கள் தீர்மானிக்கின்றனர். அதற்கு மாறாக பெண் உயர்சாதியைச் சார்ந்தவர் என்றால் அந்த திருமணம் இழிவாக கருதத்தக்க பிரதிலோமா திருமணம் என்றறியப்பட்டது. சத்திரிய ஆணுக்கும் வைசியப் பெண்ணுக்கும் பிறந்த ஆண் மஹிஷ்ய ஆணாகவும், வைசிய ஆணுக்கும் சூத்திர பெண்ணுக்கும் பிறந்த பெண் கரணி பெண்ணாகவும் அறியப்படுவார்கள் என்று யக்ஞவாக்கியர் கூறுகிறார். ரதகாரர்களுக்கு புனித நூல் அணிந்து சில சடங்குகளைச் செய்கின்ற உரிமை இருந்தது என்று 1118ஆம் ஆண்டில் ராஜாஸ்ரயா-சதுர்வேதிமங்கலத்தின் பிராமண சபை தீர்ப்பளித்ததாக தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள உய்யகொண்டன் திருமலையில் உள்ள புகழ்பெற்ற கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  

ரதகாரர்களின் மூதாதையர்கள் இப்போது இருந்திருப்பார்கள் என்றால், அவர்களை சாதிகளுக்கிடையே பிறந்தவர்களாகவே நாம் அழைத்திருப்போம். இப்போது தொள்ளாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும், சாதிகளுக்கிடையிலான குழந்தைகளின் நிலைமை நீதிமன்றங்களுக்குச் செல்கின்ற வகையிலேயே இருந்து வருகின்றது. தன்னுடைய குழந்தைகளுக்கு உயர்சாதி நிலையை (அவரது முன்னாள் கணவரின்) விடுத்து தனது சொந்த சாதியை அடிப்படையாகக் கொண்டு பட்டியல் வகுப்பு சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்று கோரிய இந்திய விமானப்படை அதிகாரி ஒருவரின் மேல்முறையீட்டை 2000 செப்டம்பரில் தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது (ரூமி சவுத்ரி எதிர் வருவாய்த் துறை, தில்லி என்.சி.டி அரசு மற்றும் ஒருவர் வழக்கு). தங்கள் தாயின் சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பை அந்தக் குழந்தைகள் கொண்டிருந்தார்கள் என்பதற்கோ அல்லது தங்களுடைய பட்டியல் வகுப்பு வம்சாவளியின் காரணமாக எந்தவொரு கஷ்டத்தையும் அவர்கள் சந்தித்தார்கள் என்பதற்கோ எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று கருதிய தில்லி உயர்நீதிமன்றம் இயல்பாகவே அவர்களின் தந்தையின் சாதியே அவர்களுடைய குழந்தைகளுக்குமான சாதியாக இருக்கும் என்று தீர்ப்பளித்தது.    

அடிப்படைக் குழப்பம்

தன்னிடம் ‘நீங்கள் யார்?’ என்று கேட்கப்பட்டபோது, ​​‘கலப்பு சாதி’ என்று சொல்லி பதிலளித்த காலம் ஒன்று இருந்தது என்கிறார் திருவனந்தபுரத்தில் உள்ள உற்பத்தி நிறுவனத்தின் பொது மேலாளரான தன்யா (41). அவரது தாயார் தமிழ் பிராமணர், அவரது தந்தை நாயர். ‘நாங்கள் தாய் பக்க உறவினர்களுடன் நெருக்கமாக இருந்து வந்ததால், தாம்-பிரம் ஐயர் என்று என்னை நான் அடையாளம் காட்டிக் கொண்ட காலம் இருந்தது. ஆனாலும் அந்த அடிப்படைக் குழப்பம் இன்னும் நீடிக்கவே செய்கிறது’ என்கிறார்.   

சாதிகளுக்கிடையிலான குழந்தையாக இருப்பது எவ்வாறு இருக்கிறது? சாதிகளுக்கிடையே திருமணம் செய்து கொண்ட தம்பதிகள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவர்களுடைய குழந்தைகள் யாராக இருக்கிறார்கள்? அவர்கள் இந்த சாதி அமைப்பை எவ்வாறு கையாண்டு வருகிறார்கள்? அவர்கள் சட்டப்பூர்வமாக எங்கே நிற்கிறார்கள்? இதுகுறித்து வரலாறு, பாரம்பரியம், மதச் சட்டம் ஆகியவை என்ன சொல்கின்றன? இதை எவ்வாறு அவை பார்க்கின்றன?   

நவீன இந்தியாவில் உள்ள சட்டம் பொதுவாக தந்தையின் சாதிக்குச் சாதகமாகவே இருக்கிறது. 2011இல் வழங்கப்பட்ட தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பில் ‘இந்திய சமூகம் [ஒரு] ஆணாதிக்க சமுதாயமாகும், அதில் பிறக்கின்ற குழந்தை தனது தந்தையின் சாதியையே பெறுகிறது’ என்று குறிப்பட்டப்பட்டிருந்தது. ஆனால் உலகளவில் பார்க்கும் போது அந்த தீர்ப்பு அன்னியப்பட்டே இருந்தது. பட்டியல் வகுப்பு தாய், பட்டியல் வகுப்பில் இல்லாத தந்தை ஆகியோருக்குப் பிறக்கின்ற குழந்தைகள் பட்டியல் வகுப்பைச் சார்ந்தவர்கள் என்றே கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுவார்கள் என்று பீகார் அரசு கூறியிருந்தது. பெற்றோர்களில் எவராவது ஒருவர் பட்டியல் வகுப்புகளில் இருந்தாலும் அவர்களுடைய குழந்தைகளை பட்டியல் வகுப்பு அல்லது பட்டியல் பழங்குடியினர் என்று கொள்ளலாம் என்ற நடைமுறையை கேரளா பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வருகிறது. மெட்ராஸ் உயர்நீதிமன்றம் பட்டியல் வகுப்பு, பட்டியல் வகுப்பைச் சாராத பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளை இரண்டில் எந்தவொரு சமூகத்தைச் சார்ந்தவர்களாகவும் கொள்ளலாம் என்று 2009ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தீர்ப்பளித்தது.   

1990கள் மற்றும் 2000களின் முற்பகுதியில் வழங்கப்பட்ட தொடர்ச்சியான உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தந்தையின் சாதியைப் பயன்படுத்துவதில் தங்களுக்கிடையில் ஒற்றுமையைக் கொண்டிருந்தன. 2012ஆம் ஆண்டில் ரமேஷ்பாய் தபாய் நாயக்கா எதிர் குஜராத் மாநிலம் மற்றும் பிறர் வழக்கில் வழங்கப்பட்ட முக்கியமான தீர்ப்பில் தனது நிலைப்பாட்டிற்கு மேலும் நுணுக்கத்தை உச்சநீதிமன்றம் சேர்த்துக் கொண்டிருந்தது. அந்த வழக்கைத் தொடர்ந்த சத்திரிய தந்தை, பட்டியல் பழங்குடி தாய்க்கு பிறந்த ஒருவர் பட்டியல் பழங்குடி சான்றிதழை சரிபார்ப்புக் குழுவின் செயல்பாட்டால் தான் இழந்து விட்டதாகவும், அதன் விளைவாக தனக்கு ஒதுக்கப்பட்ட நியாய விலைக் கடையையும் இழந்து விட்டதாக முறையிட்டிருந்தார். குஜராத் உயர்நீதிமன்றம் அந்த சரிபார்ப்புக் குழுவின் முடிவை உறுதி செய்திருந்தது. ஆனால் உச்சநீதிமன்றம் தந்தையின் சாதிக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட ஒட்டுமொத்த கொள்கையைக் கடைப்பிடிப்பதற்கு மாறாக அந்தந்த வழக்கு தொடர்பான உண்மைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டிருந்த தன்னுடைய முந்தைய முடிவுகளுக்கு மாறான வேறுபட்ட பார்வையை எடுத்துக் கொண்டது. தாயின் சமூக உறுப்பினராக வளர்க்கப்பட்டிருந்தால், அந்த சமூகத்தைச் சார்ந்த கஷ்டங்களையும், அவமதிப்புகளையும் எதிர்கொண்டிருந்தால் தாயின் சாதியான பட்டியல் பழங்குடி என்பதை அந்தக் குழந்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நீதிபதி அஃப்தாப் ஆலம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.      

மாற்றத்தின் காற்று வீசுகிறது

‘அது மிகவும் முற்போக்கான தீர்ப்பு’ என்று வழக்கைத் தொடுத்தவருக்கு ஆதரவாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே கூறுகிறார். ‘ஒருவருடைய அடிபணிந்து போன அனுபவங்களையும், வரலாற்றையும் புரிந்து கொள்வது சட்டத்தை விளக்குவதற்கான முற்போக்கான வழி என்றே நான் கருதுகிறேன். ஆணாதிக்கம் கொண்ட ஹிந்து மாதிரிக்கு எதிரான முக்கிய காரணியாக அது இருக்கிறது’ என்று சாதி குறித்த ஆய்வாளரும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பணியில் இருப்பவருமான சூரஜ் யெங்டே ஏற்றுக் கொள்கிறார்.

நாயக்கா தீர்ப்பு புதிய தளத்தை அமைத்துக் கொடுத்தது. அந்த தீர்ப்பு சௌத்ரி மற்றும் பிற வழக்குகளிலும் முக்கியமானதாக இருந்தது. எடுத்துக்காட்டாக மும்பை உயர்நீதிமன்றம் 2019 ஏப்ரலில் ஒரு வழக்கை மறுபரிசீலனைக்காக சரிபார்ப்புக் குழுவிற்கு மீண்டும் அனுப்பி வைத்தது. தனது தந்தையின் பட்டியல் வகுப்பு அந்தஸ்தை விடுத்து தாயின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (ஓபிசி) அந்தஸ்தை மகள் கோருவதை அனுமதிக்கின்ற வழியை அது ஏற்படுத்திக் கொடுத்தது. நாயக்காவின் தீப்பை மேற்கோளிட்டுக் காட்டிய அந்த தீர்ப்பில் ‘தாய்வழி சமூகத்தை நமது சமூகம் ஏற்கவில்லை என்றாலும் இப்போது மாற்றத்திற்கான காற்று வீசுகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.      

மிக சமீபத்தில் பட்டியல் வகுப்பு தாய், அவரைப் பிரிந்து சென்றுவிட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு தந்தைக்கு பிறந்த ரோஹித் வெமுலாவின் சாதி குறித்த சர்ச்சை பெருத்த அலைகளை உண்டாக்கியது. வெமுலாவின் தலித் அடையாளம் 2016இல் அவரது தற்கொலைக்குப் பின்னர் அரசியல்மயமாக்கப்பட்டது. ‘நாங்கள் தலித்துகளைப் போலவே வாழ்ந்தோம். தலித் சமூகத்திலேயே வளர்ந்து வந்தோம். ஆமாம், என் தந்தை பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றாலும் நாங்கள் அறிந்த வரையில் எங்களுக்குத் தெரிந்தவை அனைத்தும் தலித் போல வாழ்ந்த அனுபவங்களிலிருந்து வந்தவையே’ என்று வெமுலாவின் சகோதரர் கூறியதாக அப்போது வெளியான செய்தியில் மேற்கோள் காட்டப்பட்டு இருந்தது. ஆனால் மத்திய அமைச்சர்கள் உட்பட பலரும் வெமுலா தலித் அல்ல என்றே கூறி வந்தனர். அதற்கென்று அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையமும் நாயக்கா தீர்ப்பை காற்றில் பறக்க விட்டுவிட்டு அதனை ஒப்புக் கொண்டிருந்தது.      



நாயக்கா தீர்ப்பால் வலுவான கொள்கை நிறுவப்பட்டு,  கடந்த பல ஆண்டுகளாக பெரும்பாலும் அது பின்பற்றப்பட்டு வந்தது. அது சரியானதுதானா என்ற கேள்விக்கு ‘அது நடுநிலை கொண்டிருக்கவில்லை. அது உள்ளுணர்வு சார்ந்ததாக இருக்கிறது. அதை எந்த அளவிற்கு சீர்திருத்த முடியும் என்ற கேள்வியும் இருக்கிறது’ என்று பதிலளிக்கிறார் ஹெக்டே. இதுகுறித்து அவர் என்ன பரிந்துரைப்பார் என்ற கேள்விக்கு ‘சில சந்தர்ப்பங்களில் முடிவை எடுக்க அந்தக் குழந்தையை அனுமதிக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். குறிப்பாக தன்னுடைய தந்தையிடமிருந்து, அவரது சாதியிலிருந்து அந்தக் குழந்தை முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் போது’ என்கிறார். இதற்கிடையில், அனுபவங்களைக் கவனத்தில் கொள்ளும் கொள்கையை யெங்டே பாராட்டுகிறார். ஆனால் அந்த அனுபவங்கள் நடைமுறையில் எவ்வாறு வரையறுக்கப்படும் என்பது குறித்து அவருக்குள் அச்சம் இருக்கிறது. ‘முற்றிலும் மோசமாக நடத்தப்பட்டிருக்காவிட்டால்,  பட்டியல் வகுப்பு அனுபவத்திற்கு ஆளாகவில்லை என்று அர்த்தமா? என்ற கேள்வியை எழுப்புகின்ற அவர் சௌத்ரி வழக்கு மிகவும் ஆபத்தான முன்னுதாரணமாக இருப்பதாகப் பார்க்கிறார்.     

தந்தைவழி பரம்பரை

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நீதிமன்றங்களிடம் எந்தவொரு குறிப்பிட்ட சட்டமும் இல்லை என்பதாலும், ஒதுக்கீடு செய்து தரப்பட்டிருக்கும் மக்களிடமிருந்து பெரும் எதிர்ப்பு இருக்கும் என்பதாலும் அது மாறுவதற்கான வாய்ப்பில்லை என்று கருதுகிற ஹெக்டே ‘தகுதியான குழுவை விரிவாக்கிக் கொள்ள யாரும் விரும்பவில்லை’ என்கிறார். சட்டம் அதை அடைகாத்து வைத்துக் கொள்ளக்கூடும் என்றும் அவர் பயப்படுகிறார்.   

தந்தையின் சாதிக்கு ஆதரவான நிலைப்பாடு சக்தி வாய்ந்ததாகும். அதன் விளைவுகள் மிகவும் தெளிவாக உள்ளன. இருபத்தி ஒன்பது வயதான அரவிந்த் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவர். அவரது தாய் ஈழவா (இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு), அவரது தந்தை பட்டியல் வகுப்பு. இரண்டாண்டுகளுக்கு முன்பு கேரளாவில் முதுகலை நுழைவுத் தேர்வுக்குப் பிறகு வெளியிடப்பட்ட தரவரிசையில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை. ‘சாதிகளுக்கிடையிலான திருமணத்தால் பிறந்த மாணவர்களைப் பொறுத்தவரை இதுபோன்று நடப்பது வழக்கம். எங்களுடைய தந்தை பட்டியல் வகுப்பைச் சார்ந்தவர்தான் என்பதை நாங்கள் நிரூபிக்க வேண்டும்’ என்று கூறிய அவர் ‘என் தாத்தா, பாட்டிகளின் பள்ளிச் சான்றிதழ்களைக் கூட அவர்கள் கேட்டார்கள்’ என்றார். அதிகாரிகள் உண்மையில் அவரது பாட்டியை நேரில் சென்று சந்திக்கவும் செய்தனர்.

தந்தையின் சாதி ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது? தனக்கான குறிப்பை அது சமூக நடைமுறையிலிருந்தே எடுத்துக் கொள்கிறது என்று கூறும் ஹெக்டே ‘தங்கள் பரம்பரையை, கோத்திரத்தை  தந்தை வழியிலேயே அனைவரும் கண்டறிகின்றனர்’ என்கிறார். சாதிகளுக்கிடையிலான சூழல்களிலும்கூட குறிப்பாக கிராமப்புற வட இந்தியாவில் உள்ள வலுவான ஆணாதிக்க விவசாய-ஆயர் சமூகங்களிடையே இதைக் காண முடிகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக ஜாட்களிடையே கடைப்பிடிக்கப்படுகின்ற கரேவா என்ற நடைமுறையைக் கூறலாம். அந்த சொல் பெரும்பாலும் ஒரு குலத்திற்குள் விதவை மறுமணம் செய்து கொள்வதைக் குறிக்கிறது என்றாலும் கடந்த காலங்களில் மற்ற சமூகங்களிலிருந்து மனைவிகளை அழைத்து வருவதையும் உள்ளடக்கியே இருக்கிறது. ‘ஜாட்களிடம் மிகவும் நெகிழ்வான திருமணங்கள் இருந்தன. அவர்கள் தலித் சாதிகள் உட்பட பிற சமூகங்கள், சாதிகளைச் சேர்ந்த பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டனர். அவர்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகள் அவர்களுடைய குலத்தின் பகுதியாகவே காணப்பட்டனர்’ என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியரும், ‘ஃபார்மிங் எ ஐடென்டிடி: எ சோஷியல் ஹிஸ்டரி ஆஃப் தி ஜாட்ஸ்’ என்ற நூலின் ஆசிரியருமான நோனிகா தத்தா கூறுகிறார். ரோர், அஹிர், குஜ்ஜார் போன்ற பிற சமூகங்களிலும் இதேபோன்ற நடைமுறைகள் இருந்தன என்று தத்தா கூறுகிறார்.   

1966ஆம் ஆண்டு எம்.சி. பிரதான் எழுதிய ‘தி பொலிட்டிக்கல் சிஸ்டம் ஆஃப் தி ஜாட்ஸ் ஆஃப் நார்த் இந்தியா’ என்ற புத்தகத்தில் ‘குழந்தையின் தாய்வழிக்கு மாறாக தந்தைவழி மீதே சமுதாயத்தின் அழுத்தம் உள்ளது. பல்வேறு வகையான திருமணங்களின் மூலம் குழந்தைகளின் சமூக அந்தஸ்தில் ஏற்படுகின்ற வேறுபாடுகளை அழிக்க அது பெரிதும் உதவுகிறது’ என்று எழுதியிருக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் சாதிய அடையாளங்கள் குறியிடப்பட்டதன் விளைவாக அத்தகைய நடைமுறைகள் இப்போது அரிதாகி விட்டன.  

கலப்பு சாதிக் குழந்தைகள்

கேரளாவில் உயர்சாதி ஆண்களான நம்பூதிரி பிராமணர்கள், தமிழ் பிராமணர்கள் மற்றும் சத்திரியர்களுக்கும் நாயர் பெண்களுக்கும் இடையே நடைபெறும்  சம்பந்தம் என்ற  ‘திருமணங்கள்’ ஆணாதிக்கத்திற்கு எதிர்மாதிரியாக இருக்கின்றன. பிராமணர்களின் கணக்கீட்டில் - அவர்களுடைய தொடுதல் அவர்களின் தந்தையை மாசுபடுத்தும் வகையில் இருப்பதால் - அவர்களுடைய சந்ததியினர் சூத்திரர்களாக இருக்கின்ற நாயர்களாகக் கருதப்பட்டனர். அந்த அமைப்பு இருபதாம் நூற்றாண்டிலும் தொடர்ந்தது. கேப்டன் லட்சுமி சாகல், மிருணாளினி சாராபாய், அவர்களுடைய இரு சகோதரர்களை உள்ளடக்கிய பிரபலமான குடும்பத்தை ஹெக்டே எடுத்துக்காட்டாகத் தருகிறார். இவர்கள் அனைவரும் சுப்பராம சுவாமிநாதன் என்ற தமிழ் பிராமணர், அவரது நாயர் மனைவியான அம்முக்குட்டியின் குழந்தைகள் ஆவர். தங்கள் திருமணத்தை சம்பந்தமாக மாற்றுவதைத் தவிர்ப்பதற்காக அவர்கள் லண்டனில் திருமணத்தைப் பதிவு செய்து கொண்டனர் என்றாலும் அவர்களுடைய குழந்தைகள் ஒருபோதும் சமூக ரீதியாக பிராமணர்களாகக் கருதப்படவில்லை. உணவருந்தும் வேளைகளில் இந்த கலப்பு சாதி’ குழந்தைகளை தன்னுடைய பிராமணக் குடும்பத்தினர் தரையில் உட்கார வைப்பதை தனது பாட்டி ஒரு நாள் கண்டதாக சாகலின் மகள் சுபாஷினி அலி எழுதியுள்ளார். 

வரலாற்று நடைமுறை மாறுபாடுகளுடன் இருப்பது இவற்றின் மூலம் தெளிவாகிறது. கோட்பாடும் அவ்வாறே செய்தது - தர்மசாஸ்திர மரபில் இருந்த பாரம்பரிய சட்டமியற்றுபவர்கள் சிலர் (தாய் உடனடியாக கீழே இருக்கின்ற வர்ணத்திலிருந்து வந்தவராக இருந்தால்) தந்தையின் சாதியை ஆதரித்தனர். மற்றவர்கள் தாயின் சாதியை ஆதரித்தனர். யக்ஞவாக்கியர் போன்ற சிலர் புதிய சாதிகளை உருவாக்கினர். மிகவும் மோசமான சட்டமியற்றுபவராக இருந்த மனு வர்ணங்களின் கலவையால் உருவாக்கப்பட்ட ஜாதிகளின் முழு வகைபிரிப்பை தனது நூலின் பத்தாம் அத்தியாயத்தில் முன்வைத்திருக்கிறார். ‘அனைத்து சாத்தியங்களையும் அவர் பயன்படுத்திக் கொள்கிறார்’ என்று கூறுகின்ற தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்றுத்துறை பேராசிரியரான கேசவன் வேலுதாத் எடுத்துக்காட்டாக ‘ஒரு சத்திரியர் மற்றும் ஒரு சூத்திரரின் மகள் உக்ரா என்று அழைக்கப்படுகிறார். அது சத்திரியர், சூத்திரர் இருவரையும் ஒத்ததாக பழக்கவழக்கங்களில் முரட்டுத்தனமாக, கொடூரத்தில் மகிழ்ச்சி அடைவதாக  இருக்கிறது’ என்கிறார். சூத்திர ஆணுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் பிறந்த குழந்தைக்கு, பிரதிலோமா திருமணங்களின் மூலம் வருகின்ற சந்ததியினருக்கு  ‘சண்டாளா-  ஆண்களில் மிகக் குறைவான’ என்று அவர் சிறப்பு விஷத்தை ஒதுக்குகிறார். ‘நிஷாதா ஆண் மற்றும் சூத்திரப் பெண்ணிற்குப் பிறந்த மகன் சாதியால் புல்காசாவாக மாறுகிறான், ஆனால் நிஷாதா பெண்ணிற்கும்  சூத்திரனுக்கும் பிறந்த மகன் சாதியால் குக்குட்டகா என்று அறிவிக்கப்படுகிறான்’ என்று பழைய மற்றும் புதிய சாதிகளை உள்ளடக்கிய இரண்டாம்-வரிசை கலவைகளைக்கூட அவர் தேடிக் கண்டடைகிறார்.

காலனித்துவ கால நீதிபதிகள் மனு மற்றும் யக்ஞவாக்கியரை அறிந்து வைத்திருந்தனர். நாது நாதராம் எதிர் சோட்டாலால் தஜிபாய் மேத்தா (1930)  வழக்கில் பம்பாய் உயர் நீதிமன்றம் மஹிஷ்யர்கள், கரணாக்கள் குறித்து உய்யக்கொண்டன் பட்டயங்களில் இருந்ததைப் போலவே விவாதித்தது. தர்மசாஸ்திரங்களின் பொருத்தப்பாடு என்னவாக இருந்தாலும், சாதிகளுக்கிடையேயான திருமணங்களில் சதையும், ரத்தமுமாகப் பிறக்கின்ற குழந்தைகள் தங்களுக்கான அடையாளங்களை எவ்வாறு பார்க்கிறார்கள்? அவர்கள் சாதி பிரச்சனைகளை எதிர்கொண்டார்களா அல்லது சாதியப் பாகுபாட்டை எதிர்கொண்டார்களா?   

தன்னைப் பொறுத்தவரை சாதி என்பது அலுவல்ரீதியான நோக்கங்களுக்காக சமூகத்தால் விதிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது என்று கூறுகின்ற அரவிந்த் ‘என்னிடம் சாதி அடையாளம் இருப்பதாக நான் பார்க்கவில்லை’ என்கிறார். மேலும் ‘நான் இரண்டு சாதிகளுக்கிடையே பிறந்தவன் என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது; பட்டியல் வகுப்பிற்கான ஒதுக்கீட்டிலேயே மருத்துவக் கல்லூரியில் நான் சேர்ந்தேன். நிச்சயமாக சாதியப் பாகுபாடு உள்ளது. இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மக்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்’ என்கிறார்.

ஒரு பக்கத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது

தன்னுடைய கலப்பு பாரம்பரியத்தின் காரணமாக தன்யா சில திருமண பேச்சுவார்த்தைகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார். ‘என்னுடைய தந்தை புனித நூல் அணியவில்லை; அவரால் எல்லா சடங்குகளையும் செய்ய முடியாது. கடுமையான பிராமணர்கள் சிலர் தங்கள் மகன்களுக்கு என்னைத் திருமணம் செய்து வைக்க  விரும்பவில்லை’ என்று அவர் கூறுகிறார். இப்போது தன்னுடைய  மகளுடைய தந்தை நாயர் என்பதால், அவர் அந்த பக்கம் சாய்ந்துள்ளார். ‘என்னுடைய மகளின் புரிதலுக்காக, எனக்கென்று ஒரு பக்கத்தை நான் தேர்ந்தெடுத்துக் கொள்வது முக்கியம் ஆகிறது’ என்கிறார்.   

டெல்லியில் குடியேறிய பெங்காலி குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் தொடர்பு தொழில்முறை நிபுணரான பர்ஷ்வதி (41) தனது வாழ்க்கையில் சாதியை உணர்ந்தவராக இருக்கவில்லை. அவருடைய தந்தை வைசிய வர்த்தக சமூகத்தைச் சேர்ந்தவர். அவரது தாயார் ஒரு கயஸ்தா. ‘பாகுபாடு குறித்த கேள்வி எதுவும் எழவில்லை. மக்கள் யாருக்கும் தெரியாது. என்னுடைய குடும்பத்தில் உள்ள அனைவருமே சாதிகளுக்கிடையில் பிறந்தவர்களே’ என்று சொல்லும்  அவர் உணவுப் பழக்கவழக்கங்களில் இருக்கின்ற மோதல் மட்டுமே தான் சந்திக்கக்கூடிய ஒரே பிரச்சனையாக இருக்கிறது என்கிறார்.

கபிலின் (அடையாளத்தை மறைப்பதற்காக பெயர் மாற்றப்பட்டுள்ளது) அனுபவங்களும் உணவை மையமாகக் கொண்டே, ஆனால் சற்றே குறைவான பிரச்சனைகளுடன் இருக்கின்றன. அசாமைச் சேர்ந்த முப்பத்திமூன்று  வயதான அந்த கலைஞர் பிராமண தந்தை, பட்டியல் வகுப்பு தாய்க்கு பிறந்தவர். தனது தந்தையின் பிராமணக் குடும்பப் பெயரை எடுத்து வைத்துக் கொண்டாலும், சாதிய பாகுபாட்டிற்கு உள்ளானவராகவே அவர் இருக்கிறார். ‘என் அம்மாவின் சாதி காரணமாக என்னுடைய அத்தை எங்கள் வீட்டிற்கு வரும் போது, அண்டை வீட்டிலேயே  சாப்பிடுகிறார்’ என்று கூறும் அவர், இளைஞனாக தான் ஒரு திருமணத்தின் போது உணவு பரிமாறிய போது, உயர்சாதி உறவினர்கள் பலரும் அதைச் சாப்பிடவில்லை என்பதை நினைவில் இன்னும் வைத்திருக்கிறார்.    



‘பல படிநிலைகள் உள்ளன; என்னை என்னால் வரையறுத்துக் கொள்ள முடியவில்லை’ என்று கூறுகின்ற அவர் ‘அவர்கள் நான் பிராமணர் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புவதால் எனது குடும்பத்தினருடன் நான் சண்டையிட வேண்டியுள்ளது. ஆனால் என்னை ஒரு தலித்தாகப் பார்ப்பதும் கடினமாகவே இருக்கிறது. நான் இங்கேயும் இல்லை, அங்கேயும் இல்லை’ என்கிறார்.    

மத நூல்கள், சட்டம் போன்று இதுகுறித்த தனிப்பட்டவர்களின் பதில்களும் வெவ்வேறாகவே இருக்கின்றன. ஆக சாதிகளுக்கிடையிலே இருப்பது தெளிவற்ற நிலையில் வாழ்வதாக, பெரும்பாலும் பொதுவான கற்பனையில் இல்லாததாகவே இருக்கிறது. இந்த கோணங்கள், மற்ற பிற கோணங்களிலும் அது தீவிரமான ஆய்வுகளுக்கு அழைப்பு விடுப்பதாகவே இருக்கிறது. தன் சொந்த அறிவுசார் கருவித்தொகுப்பும் தேவைப்படுகிறது. யெங்டே அதுகுறித்து ஆர்வத்துடன் உள்ளார் ‘தலைமுறைகளுக்கிடையிலான அதிர்ச்சி இருக்கலாம். அதுகுறித்து ஆய்வுகள் இல்லை’ என்று அவர் கூறுகிறார். 

நவீனகால நீதித்துறை நேர்மையோடு இருக்கின்றதா? அது சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய எந்தவொரு குடிமக்களின் முன்னேற்றத்துடனும் இசைந்து போவதாக உள்ளதா? இங்கிருக்கின்ற சாதியை அமெரிக்காவில் உள்ள இனத்துடன் ஒப்பிட்டால், கலப்பு சாதி மக்களின் அனுபவம் கலப்பின மக்களின் அனுபவத்துடன் எவ்வாறு ஒத்துப் போகின்றது? கறுப்பின ஆணும், வெள்ளை பெண்ணும் சம்பந்தப்பட்டிருக்கும்போது இனக்கலப்பு குறித்து உருவாகும் அச்சத்திற்கு இணையாக பிரதிலோமா இருக்கிறதா? பல கேள்விகள் எழுகின்றன. அவற்றிற்கான பதில்களை அளிக்க முயற்சிக்க வேண்டிய நேரமாக இது இருக்கின்றது. 

 

https://www.thehindu.com/society/what-does-it-mean-to-be-a-child-of-an-intercaste-union-in-modern-india/article33757476.ece

 

Comments