ஸ்ரபானி சக்ரவர்த்தி
நியூஸ்க்ளிக் இணைய இதழ்
தேசத்திற்கு அவர் இன்னும் தேவைப்படுகின்ற நேரத்தில் வரலாற்றாசிரியர்
த்விஜேந்திர நாராயண் ஜா (1940-2021) அவர்களின் மறைவு குறித்த சோகமான செய்தி வந்திருக்கிறது.
ஹிந்து கடந்த காலத்துடன் இணைத்து பண்டைய இந்தியா குறித்து எழுப்பப்பட்டிருக்கின்ற கட்டுக்கதைகளை
அம்பலப்படுத்திய அவருடைய பணியால் நன்கு அறியப்பட்டுள்ள
ஜா 2021 பிப்ரவரி 4 அன்று தனது 81ஆவது வயதில் காலமானார்.
மக்களின் வரலாற்றாசிரியர், அறிவியல் மற்றும் மதச்சார்பற்ற வரலாற்று எழுத்தை தீவிரமாகக் கடைப்பிடித்தவராக ஜா இருந்து வந்தார். வரலாற்றாசிரியர் என்பவர் எப்போதும் உண்மைகளை மட்டுமே குறிப்பிடுவது போதாது, அவர் ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை ஜா வலியுறுத்தி வந்தார். சங்பரிவாரின் வகுப்புவாத, பெரும்பான்மைத்துவப் பிரச்சாரத்தை எதிர்த்துப் போராடுவதற்கே வரலாற்றாசிரியராக தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் அவர் செலவிட்டு வந்தார். அவரைப் பொறுத்தவரை கட்டுக்கதைகளை உடைப்பது, சர்ச்சையில் சிக்குவது போன்றவை ஒருபோதும் புதிதாக இருந்ததில்லை. தனக்கான தளத்திலேயே அவர் எப்போதும் உறுதியாக நின்றார்.
வரலாறு என்பது அவரைப் பொறுத்தவரை வெறுமனே கல்விசார்
ஒழுக்கமாக மட்டும் இருக்கவில்லை. நமது கடந்த காலத்தை காவிமயமாக்குவதற்கு எதிரான
பிரச்சாரமாகவும், கடந்த காலம் என்பது நிகழ்காலத்தை விவரிக்கும் கருவியாகவும் வரலாறை அவர் கருதி வந்தார். தனது தொழில்
வாழ்க்கையின் ஆரம்பத்தில், இந்திய துணைக் கண்டத்தின் கடந்த காலத்தை ‘பொற்காலம்’
என்று கூறுவது கட்டுக்கதை என்று ஜா கூறினார். அதுகுறித்து ‘பண்டைய இந்தியாவை தேசிய
வரலாற்றாசிரியர்கள் பெருமைப்படுத்துவது என்பது ஹிந்து இந்தியா என்று அவர்களுக்குத்
தோன்றியதை பெருமைப்படுத்துவதே ஆகும். எனவே அவர்களுடைய எழுத்துக்கள் ஒருவகையில் விவேகானந்தர்,
தயானந்த் மற்றும் பிறரின் புத்துயிர்ப்பு கருத்துக்களுடன் தொடர்புள்ளவையாக தோன்றுகின்றன.
1930கள், 1940களில் இவ்வாறான இணைப்பு மிகவும் தெளிவாக இருந்தது. தேசியவாத வரலாற்று
வரைவியல் ஹிந்து மறுமலர்ச்சியின் முக்கிய குருவான சாவர்க்கரின் கருத்துக்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் வகையில் இருந்தது’ என்று ஜா எழுதினார்.
ராமர் கோவில் பாபர் மசூதிக்கு அடியில் இருந்தது என்ற ராஷ்ட்ரிய
ஸ்வயம்சேவக் சங்கத்தின் கூற்றுக்கள், அதற்கு ஆதரவான பாரதிய ஜனதா கட்சியின்
பிரச்சாரம் குறித்து நாட்டு மக்கள் முன்பாக ஓர் அறிக்கையை முன்வைத்த வரலாற்றாசிரியர்கள்
குழுவில் அவரும் ஒருவராக இருந்தார். பொருள் கலாச்சாரம், பண்டையகால நூல்களின்
சான்றுகளின் அடிப்படையில் அந்த வரலாற்றாசிரியர்கள், தொல்பொருள் ஆய்வாளர்கள் தங்கள்
அறிக்கையை முன்வைத்தனர். நிபுணர்களை அரசு நம்ப வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி
வந்தனர். பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் ‘இந்த சர்ச்சை நம்பிக்கைக்கும், பகுத்தறிவுக்கும்
இடையிலான போர்’ என்று ஜா தன்னுடைய கருத்தை வெளியிட்டார்.
அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி
அரசாங்கம் மற்றும் சங்பரிவாரின் பல்வேறு அமைப்புகளின் கீழ் தீவிரமான இனவாத திட்டம் முன்னோக்கி நகர்த்தப்பட்ட
நேரத்தில் அவருடைய மிகவும் புகழ்பெற்ற குறிப்பிடத்தக்க படைப்பான ‘புனிதப் பசு
எனும் கட்டுக்கதை’ என்ற நூல் வெளியானது. அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் ‘பசுவை
வணங்குவது ஹிந்துக்களுக்கான இன அடையாளமாக மாற்றப்பட்டுள்ளது. வேதகால மற்றும் அதற்கடுத்து
வந்த பிராமணிய மற்றும் பிராமணியமல்லாத மரபுகளில் பசுக்கள் ஒருபோதும் புனிதமானவையாக
இருந்தவையல்ல என்பதையும், பெரும்பாலும் பழங்கால இந்தியாவில் பிற வகை இறைச்சிகளுடன்
பசுக்களின் இறைச்சியும் மிகவும் உயர்ந்த உணவுகளில் ஒன்றாக இருந்தது என்பதையும் ஏற்றுக்
கொள்ள தெளிவற்ற அடிப்படைவாத சக்திகள் கடுமையாக மறுக்கின்றன’ என்று ஜா எழுதினார். மனு
ஸ்மிருதி மற்றும் பிற தர்மசாஸ்திரங்களிலிருந்து மேற்கோள்களை எடுத்துக் காட்டி
மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு ஒருபோதும் தடை இருந்ததில்லை என்று ஜா தனது வாதங்களை
முன்வைத்தார்.
இந்த மூத்த வரலாற்றாசிரியர் வலதுசாரி சக்திகளின்
தொடர்ச்சியான தாக்குதல்களை எதிர்கொண்டு வந்தார். வாஜ்பாய் அரசாங்கத்தில் அமைச்சராக
இருந்த அருண்ஷோரி நாளந்தா பல்கலைக்கழகத்தில் இருந்த பௌத்த வளாகம் பிராமணிய மதத்தைப்
பின்பற்றுபவர்களால் அழிக்கப்பட்டதாகக் கூறுவடஹ்ன் மூலம் ஜா வரலாற்றைச் சிதைப்பதாகக்
குற்றம் சாட்டினார். இருப்பினும் அத்தகைய தாக்குதல்கள், விமர்சனங்களால் ஒருபோதும் அவரை
வீழ்த்த முடியவில்லை.
‘இயல்பு என்று சொல்லப்படுவதற்கு மாறாக: அடையாளங்கள்,
சகிப்பின்மை மற்றும் வரலாறு குறித்த குறிப்புகள்’ என்ற தனது கடைசி புத்தகத்தில் ‘பண்டைய
இந்தியாவில் பிராமணிய சகிப்பின்மை’, ‘பசு குறித்த புதிர்கள்’, ‘கடவுள்கள் என்ன
குடித்தார்கள்!’ என்பது போன்ற விஷயங்களைப் பற்றி அவர் விவாதித்திருந்தார். அந்த
தொகுப்பின் பெரும்பாலான கட்டுரைகள் ஹிந்துத்துவம் ஏற்றமடைந்து கொண்டிருந்த நேரத்தில்
எழுதப்பட்டவையாகும்.
தற்போதைய வலதுசாரி அரசியல் பரவலின் கீழ் ஜனநாயக
நெறிமுறைகள் மற்றும் மதச்சார்பற்ற கட்டுமானம் ஆகியவற்றின் மீது நமது நாடு பெரும்
தாக்குதலைக் எதிர்கொண்டிருக்கும் நிலையில் டி.என்.ஜா போன்ற வரலாற்றாசிரியர்களை நாம் இழந்து நிற்கிறோம்
என்றாலும் வரலாறு குறித்த அவரது தத்துவம் நிச்சயம் உறுதியாக வெற்றி பெறும்.
https://www.newsclick.in/d-n-jha-historian-who-stood-against-grain
Comments