டி ஜே எஸ் ஜார்ஜ்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
அன்றொரு
நாளில் நமது பிரதமர் பாராளுமன்றத்தில் அழுதார். ஆனாலும் அவர் துக்கத்தில்
இருந்ததாக அவரது முகம் காட்டவில்லை, அழுத போது அதற்கான உடல் அசைவுகள் அவரிடம்
இருக்கவில்லை. தான் அணிந்திருந்த கண்ணாடியின் கீழ் கட்டைவிரலை விரைவாக நுழைத்து,
ஒரு மடக்கு தண்ணீரைக் குடித்து அவர் காட்டிய அந்த அழுகை மிகவும் கண்ணியமான
அழுகையாகவே இருந்தது. ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஒருவர் மிகச்
சாதாரண உணர்ச்சிகளுக்கு அடிபணிந்து நின்ற அந்தக் காட்சி, தொலைக்காட்சியில் அதைப்
பார்த்தவர்களிடமிருந்து மிகப் பரவலான அனுதாபத்தை நிச்சயம் ஈர்த்திருக்கும்.
எது மோடியை அவ்வாறு அழவைத்தது? மக்கள் ஒருவேளை போராட்டத்தின் போது இறந்து போன
இருநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகளின்
மரணம் குறித்து அவர் வருத்தப்படுவதாக நினைத்திருக்கக் கூடும். அல்லது அரசிடம் இருந்த கருத்துகளுக்கு மாறான
கருத்துகளை வெளிப்படுத்திய ஒரே குற்றத்திற்காக சுதா பரத்வாஜ், ஸ்டான் சுவாமி போன்ற
பொறுப்புள்ள குடிமக்கள் இன்னும் சிறையில் வாடிக் கொண்டிருப்பது குறித்து
வருத்தப்பட்டதாக அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் நமது பிரதமர் இதுபோன்று சாதாரண
குடிமக்கள் சாத்தியம் என்று நினைத்த காரணங்களுக்காக கண்ணீர் நிரம்பிய கண்களுடன்
இருக்கவில்லை என்பதை நாம் பிறகு அறிந்து கொண்டோம்.
நாடாளுமன்றத்தில்
இருந்து குலாம் நபி ஆசாத் ஓய்வு பெறுவது குறித்தே அவர் அன்று அழுதார். அதற்காக
அழுவதில் எந்தவொரு அர்த்தமும் இருக்கவில்லை. எவரொருவரும் நாடாளுமன்றத்தில் இருந்து
ஓய்வு பெறுவது வழக்கமான ஒன்றாகும். மேலும் குலாம் நபி ஆசாத் பாஜககாரர் அல்ல.
காங்கிரஸ்காரரான அவர் மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும்போது பாஜகவின் மிக
முக்கியமான தலைவர் ஏன் இவ்வாறு அழ வேண்டும்?
மோடி அன்று அழுதது
நாடகம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் அது யாரை முட்டாளாக்குவதற்காக
நடத்தப்பட்டது? நிச்சயமாக குலாம் நபி ஆசாத் மகிழ்ச்சியடைந்திருப்பார். ‘சிலரை நாம் மேலோட்டமாகவும் சிலரை மிக
ஆழமாகவும் புரிந்து கொள்கிறோம். என்னை மிகவும் ஆழமாகப் புரிந்து கொண்டு பல
ஆண்டுகளாக என்னுடைய பணியைக் கவனித்து வந்தவர்கள் நேற்று உணர்ச்சிவசப்பட்டனர்.
அனைவருக்கும் நான் நன்றியுடையவனாக இருக்கிறேன்’ என்று அனைத்து அரசியல்வாதிகளையும்
போலவே அவர் பதிலளித்துப் பேசினார்.
ஆக
மோடிஜி ஆசாத்ஜியை ஆழமாகப் புரிந்து கொண்டார் என்பதால் உலகம் முழுவதும் இனி நன்றாகவே
இருக்கும். மோடியின் அந்த உணர்ச்சிபூர்வமான பிரியாவிடை குறித்து ‘கலைநயமிக்க
செயல்திறன்’ என்று கூறிய சசிதரூர் விவசாயிகளின் தலைவர் ராகேஷ் திகாயத் சமீபத்தில்
இதுபோன்று கண்ணீர் வடித்ததை நினைவு கூர்ந்தார். ‘திகாயத்தின் கண்ணீருக்குப்
பதிலளிக்கும் வகையில் தனக்கும் கண்ணீர் இருப்பதைக் காட்ட பிரதமர் முடிவு செய்தார்’
என்று மிகச்சிறந்த கருத்து ஒன்றை சசிதரூர் வெளியிட்டிருந்தார்.
வெளிப்படையாக
அழும் அரசியல் தலைவர்கள் தலைப்புச் செய்திகளை எப்போதும் ஈர்ப்பவர்களாக இருப்பார்கள்.
அதுவும் மக்கள் தொடர்பு கலையில் மிகுந்த தேர்ச்சி பெற்ற மோடியைப் பொறுத்தவரை அது
நிச்சயம் இன்னும் கூடுதல் கவனம் ஈர்ப்பதாகவே இருக்கும். கண்ணீர் எவ்வாறெல்லாம் வரலாற்றை
பாதித்திருக்கிறது என்பதை அவர் நன்கு அறிந்திருப்பார். வின்ஸ்டன் சர்ச்சில்
பாராளுமன்றத்தில் அழுதார் - ஒருமுறை அல்ல, எட்டாவது எட்வர்ட் அவரை ‘அழும் குழந்தை’ என்று அழைக்கும் வரை பல
முறை அழுதார்.
லதா
மங்கேஷ்கர் ‘ஆயே மேரே வதன் கே லோகோன்’ என்று 1963ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று
பாடியதைக் கேட்டு ஜவஹர்லால் நேருவின் கண்களில் கண்ணீர் தழும்பியது. அழுகையின்
மறுபக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய டொனால்ட் ட்ரம்ப் ஆண்கள் அழுவது
பலவீனத்தின் அடையாளம் என்று கூறினார். மோசமான ரியல் எஸ்டேட் வியாபாரத்தில்
கோடிக்கணக்கில் சம்பாதித்தவர் அவர் என்பதை நினைவில் கொள்க.
நாடகத்தனத்தின்
மீது கொண்ட காதலுக்குப் பெயர் பெற்றவர் மோடி. ‘அவர் விளம்பரத்தில் மட்டுமே
ஆர்வமுள்ள தன்னினைவாகவே இருக்கும் மனிதர்; அவருடைய நடவடிக்கைகள் அனைத்தும் அதை
மட்டுமே நோக்கமாகக் கொண்டவை’ என்று மோடியைப் பற்றிக் கூறும் போது பஞ்சாப் முதல்வர்
அமரீந்தர் சிங் தெரிவித்தார். விளம்பரக் கலையில் மோடி மிகுந்த தேர்ச்சி பெற்றவர்
என்பதை அவரை கடுமையாக விமர்சிப்பவர்கூட ஒப்புக் கொள்ளவே செய்வார்.
குறிப்பிட்ட
தருணத்தை எப்படி தன்வசமாக்கிக் கொள்வது, அதன் மீது தன் முத்திரையை எவ்வாறு
பதிப்பது என்பது அவருக்கு நன்கு தெரியும். இந்தியாவில் திறமையான எதிர்க்கட்சி
இல்லாததே பாஜகவின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை.
பாஜகவுக்கு சவால் விடும் நிலையில் காங்கிரஸ் இல்லை. ஏனெனில் சரியான மனநிலையில்
இருக்கும்போது மட்டுமே தேசியத் தலைவராக மாறுகின்ற ராகுல் காந்தியின் வெறும்
நீட்டிப்பாகவே காங்கிரஸ் இப்போது மாறியுள்ளது.
தனது
தொண்டர்கள் தளத்துடன் இருக்கும் பாஜக எங்கே? அவ்வப்போது வந்து செல்பவர்களை
தலைமையில் கொண்டிருக்கும் காங்கிரஸ் எங்கே? அவ்வப்போது வந்து செல்கின்ற தனது
தலைமைத்துவத்தின் எதிர்மறையான தாக்கத்தைக் காண ராகுல்காந்தியால் இயலவில்லை அல்லது
அதைக் காண அவர் விரும்பவில்லை. எதையும் அவர் இழக்கவில்லை என்றாலும் அவரது கட்சி
ஏராளமாக இழந்திருக்கிறது. உள்கட்சித் தேர்தலுக்கான அழைப்பு காங்கிரசில் சமீபத்தில்
மிகவும் வலுவாக எழுந்துள்ளது. அத்தகைய தேர்தலுக்கான கால அளவையும் அவர்கள்
அதிகாரப்பூர்வமாக நிர்ணயித்துள்ளனர். ஆனால் யாரும் அதுகுறித்து ஈர்க்கப்பட்டிருப்பதாகத்
தெரியவில்லை. தலைவர் பதவிக்கான வேட்பாளராக ராகுல்காந்தி இருப்பார் என்றால்,
மற்றொரு வேட்பாளர் அங்கே இருப்பாரா? அவருக்கு எதிராக பெயரளவிலே ஒரு வேட்பாளர்
நிறுத்தப்பட்டாலும் அந்தத் தேர்தல் எவ்வளவு நம்பகமானதாக இருக்கும்? உள்கட்சி
ஜனநாயகம் காங்கிரசில் இல்லை என்பது மட்டுமல்ல; காந்தி குடும்பத்தின் அதிகப்படியான
தாக்கத்தால் கட்சியில் அதற்கான சாத்தியமும் இருக்கவில்லை என்பதே உண்மை நிலையாக இருக்கிறது.
எதிர்வருகின்ற
காலங்களில் உடனடியாக இந்திய அரசியல் சூழ்நிலை மாறப்போவதில்லை. இரு கட்சி
அமைப்பாகவே அது தொடர்ந்து இருக்கும். தன்னுடைய உள்கட்டமைப்பிலும், தலைமையிலும்
வலுவாக ஒரு கட்சி இருக்கிறது. மற்றதொரு கட்சியோ தனக்கான அடையாளத்தை குறிப்பிட்ட
குடும்பத்தின் அடையாளமாக இழந்து நிற்கிறது. உண்மையில் பாஜக அதிர்ஷ்டசாலி. காங்கிரஸோ
துரதிர்ஷ்டம் கொண்டதாக இருக்கிறது. இந்தியாவின் நிலைமை? இந்தியாவும்
துரதிர்ஷ்டவசமான நிலையிலேயே இருக்கிறது. இப்போதைக்கு அதனால் அழ மட்டுமே முடியும்.
https://www.newindianexpress.com/opinions/columns/t-j-s-george/2021/feb/14/modi-cries-india-too-can-only-cry-2263667.html




Comments