நமீதா பண்டாரே
ஸ்க்ரோல்
இணைய இதழ்
தன்னுடைய கூட்டில் அந்தப் பருந்து உட்கார்ந்திருப்பதைக் காணும்
வரையிலும் என்னைப் பொறுத்தவரை தில்லி தூசு துகள்கள், மூடுபனி ஆகியவற்றின் தவறான
கலவையுடன் சற்றே இருளடைந்து மிக மோசமான நிலையிலேயே இருந்தது. அன்றைய தினம் அந்தக்
கூட்டைத் தெளிவாகக் காண முடிந்ததற்கு சூரியன் நன்றாக வெளியே வந்திருந்தது காரணமாக
இருக்கலாம். யூகலிப்டஸ் மரத்தில் தங்கி தன்னுடைய கூட்டைப் பாதுகாத்துக்
கொண்டிருந்த அந்தப் பருந்து தனக்கு முந்தைய தலைமுறைப் பறவைகளைப் போன்றே தன்னுடைய
தலையை மட்டும் உயர்த்தி அங்குமிங்கும் அசைத்துக் கொண்டு கூட்டிற்குள் உட்கார்ந்திருந்தது.
தொற்றுநோய்க்கு எதிராக ஒழுங்கு நிறைந்த கட்டுப்பாட்டை
தனக்கான ஆயுதமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட சிங்கப்பூரில் முடங்கிக் கிடந்து உலகையே
அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த ஆண்டின் பெரும்பகுதியைக் கழித்த நான் சமீபத்தில்
தில்லிக்குத் திரும்பினேன். சிங்கப்பூரில் நகரம் சுத்தமாகவும், மிகவும் துல்லியமாக
தயாராகவும் இருந்தது. அன்றாடம் எனக்கென்று இருந்த சிறப்புரிமையை நான்
அறிந்திருந்தேன். எப்போதும் முகக்கவசங்கள் (ஓடும் போது விலக்கு
அளிக்கப்பட்டிருந்தது, நடைப்பயிற்சிக்கு இல்லை) தேவைப்பட்டன. அடிக் கணக்கிலே சமூக
இடைவெளி வரையறுக்கப்பட்டிருந்தது. ‘சர்க்யூட் பிரேக்கர்’ என்று அங்கே பொதுமுடக்கம்
மிகவும் துல்லியமாக அழைக்கப்பட்டது.
வீட்டிற்கு வருகின்ற விருந்தினர்களின் எண்ணிக்கை,
உணவகங்களில் மேஜைகளுக்கு இடையே உள்ள தூரம், நீங்கள் உட்காரக்கூடிய இடம்,
மருத்துவமனை காத்திருப்பு அறையில் நீங்கள் இருக்க முடியாத இடம் என்று
அனைத்திற்கும் அங்கே விதிகள் இருந்தன. தொடர்ந்து நகைப்பிற்கிடமாக வழங்கி வந்த
அறிவுரைகளுக்கிடையே அரசு தன்னிடமிருந்த திட்டத்திற்கான உறுதிமொழியை அளித்தது. தன்
குடிமக்களுடன் நியாயமான முறையில் வெளிப்படையாக இருக்கவும், அவர்களிடமிருந்து எந்தவொரு
விலகலையும் ஏற்படுத்திக் கொள்ளாது என்றும் அரசின் அந்த புதிய உறுதிமொழி இருந்தது. எவரொருவரும்
அதனைப் பின்தொடர வேண்டும் இல்லையென்றால் வெளியேற வேண்டும்.
தில்லியில் என்னுடைய குழந்தைகள் வயது வந்த பெண்களாக ஆனாலும்
குழந்தைகளாகவே இருந்தனர். வேலை பார்க்கும் இடமாக, வீடாக அல்லது என்னுடைய கூடு
அமைந்த இடமாக தில்லி இருந்தது. குழப்பம் நிறைந்த இடமாகவும் அது இருந்தது. நான் இப்போது
அந்த இடத்திற்கு திரும்பி இருக்கிறேன்.
தேய்ந்து வரும் ஜனநாயகம்
விவசாயிகளின் போராட்டம் என்ற சலசலப்பை பாராளுமன்றத்தில் எந்தவொரு
விவாதமுமின்றி நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் ஏற்படுத்தின. குடியரசு
தினத்தன்று அந்த மந்தமான, குளிர்காலைப் பொழுதில் வந்திருக்க வேண்டிய பிரதான
விருந்தினர் வரவில்லை: தனது நாட்டில் வைரஸின் புதிய திரிபு தோன்றியதால் வர இயலவில்லை
என்று போரிஸ் ஜான்சன் அறிவித்து விட்டார். ராணுவ அணிவகுப்பு, விறைத்த வணக்கங்கள்,
வலதுபுறம் விரைந்து தலையைத் திருப்புவது, அதைத் தொடர்ந்து நடைபெறும்
அலங்கரிக்கப்பட்ட கலாச்சார ஊர்திகள் என்று இவையனைத்தும் இப்போது நிலவி வருகின்ற
சூழலில் காலமுரணாகவே தோன்றின. சில விவசாயிகள் தில்லிக்கு வந்து சேர்ந்த போது
வன்முறை வெடித்தது. காவல்துறையினர் காயமடைந்தனர். யாரோ ஒருவர் செங்கோட்டையின் மீது
மதக் கொடியை ஏற்றி வைத்தார்.
அப்போது நடந்த கைகலப்பில் விவசாயி ஒருவர் சுட்டுக்
கொல்லப்பட்டதாக ட்வீட் செய்ததற்காக காவல்துறை மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல்வாதி
ஒருவர் என்று பலருக்கு எதிராக தேசத்துரோகம் புரிந்ததாக மிகவும் பழமையான 151
ஆண்டுகளுக்கு முந்தைய பிரிட்டிஷ் காலனித்துவ காலச் சட்டத்தைப் பயன்படுத்தி வழக்குகளைத்
தாக்கல் செய்தது. இந்த கொடூரத்திற்கு எதிரான எதிர்வினையாக இணையத் தொடர்பை அரசு துண்டித்தது.
அரசின் மீதான தாக்குதலாகக் கருதப்படுபவற்றை ட்விட்டர் இடைநீக்கம் செய்ய வேண்டும்
என்று அரசு கோரியது. மிகச் சுருக்கமாக இணங்கியது என்றாலும் பின்னர் ட்விட்டர் அவற்றை
மீட்டமைத்துக் கொடுத்தது. அரசுடனான அதன் சண்டை தொடர்கிறது. சில நாட்களுக்கு
முன்னர் இந்தியா எக்கானாமிஸ்ட் இண்டலிஜென்ஸ் யூனிட்டின் ஜனநாயகக் குறியீட்டில் இரண்டு
இடங்கள் பின்தங்கி ஐம்பத்தி மூன்றாவது இடத்திற்கு நகர்ந்து சென்றிருக்கிறது.
போராட்டக் களங்களில் ஆணிகள், முள்கம்பிகளுடன் கான்கிரீட்
தடைகளை அமைப்பதன் மூலம் காவல்துறையினர் இறுதிப் போருக்குத் தயாராகிக்
கொண்டிருக்கும் படங்கள் பனிப்போரின் நினைவுகளைத் தூண்டின.
தலைசிறந்த உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின்
நீதித்துறை குறித்த ‘பெயில்தான் ஜெயில் அல்ல’ என்ற கருத்து முறியடிக்கப்பட்டு
விட்டதாகத் தெரிகிறது. சிறுநீரகச் செயலிழப்புடன் சிறையில் அடைக்கப்பட்டவரின் ஜாமீன்
மனுவை விசாரித்த போது ‘சிறைக்குள் அவர் இறந்து போவார் என்றால், ஜாமீனில் வெளியே
வரும்போதுகூட இறந்து போகலாம். எல்லோரும் இறந்துதான் போகப் போகிறார்கள்’ என்று உச்சநீதிமன்ற
தலைமை நீதிபதி குறிப்பிட்டார். முன்னதாக பார்கின்சன் நோயுடன் சிறையில்
அடைக்கப்பட்ட எண்பத்தி மூன்று வயதான பாதிரியார் ஒருவரின் வழக்கறிஞர்களால் முன்வைக்கப்பட்ட
ஸ்ட்ரா, குடிப்பதற்கான கோப்பை ஆகியவற்றிற்கான கோரிக்கை நடைமுறைத் தாமதங்களால் மிகவும்
தாமதப்படுத்தப்பட்டது. உத்தரபிரதேச மாநிலத்தில் ஹத்ராஸில் தலித் பெண்ணை பாலியல்
பலாத்காரம் செய்து கொலை செய்த நிகழ்வு குறித்து செய்தி சேகரிக்கச் சென்று
கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்ட மற்றொரு பத்திரிகையாளர் மரணத் தறுவாயில் இருந்த தனது
தொண்ணூறு வயதான தாயைப் பார்க்கச் செல்ல ஜாமீன் கோரினார். தான் செய்யாத நகைச்சுவைக்காக கைது செய்யப்பட்ட
காமெடியன் ஒருவரை சிறையிலிருந்து
விடுவிப்பதை உறுதி செய்வதற்காக நள்ளிரவில்
உச்சநீதிமன்றத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வர வேண்டியிருந்தது.
இதற்கிடையில் பாரதிய ஜனதா ஆட்சி செய்து கொண்டிருக்கும்
மூன்று மாநிலங்கள் கலப்புத் திருமணத்தை தடை செய்கின்ற சட்டங்களைத் திறம்பட
இயற்றியுள்ளன. ஒருவேளை பெரும்பான்மையினரின் கருத்து காதல் திருமணங்களை - குறிப்பாக
அவை சாதி மற்றும் மத எல்லைகளை மீறும் போது - எதிர்ப்பதாக இருக்கிறது என்று கருதியோ
என்னவோ எதிர்க்கட்சிகள் விசித்திரமாக அமைதியாக இருந்து வருகின்றன.
நல்ல எதிர்கால துர்க்கற்பனைக் கதைகளைப் போலவே, இந்த
நிகழ்வும் காமிக்ஸிற்கான கூறுகளைக் கொண்டிருந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட
விவசாயிகள் மற்றும் காவல்துறையினரிடையே மோதல் ஏற்பட்ட போது தில்லியைச் சுற்றிய
பகுதிகளில் இணையத் தொடர்பை இந்தியா துண்டித்தது குறித்து சிஎன்என் செய்தியறிக்கை வெளியானது.
அது குறித்து பிப்ரவரி 2 அன்று நட்சத்திர பாப் பாடகரான ரிஹானா ட்வீட்
செய்திருந்தார். ‘நாம் ஏன் இதைப் பற்றி பேசவில்லை?’ என்ற கேள்வியை அவர் எழுப்பியிருந்தார்.
பத்து கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டிருக்கின்ற அந்த பாடகரின்
ட்வீட் தங்களை நேரடியாகத் தாக்கியதைப் போன்று அரசாங்கத்திற்குத் தோன்றியது. அண்மைக்
காலத்தில் முதன்முறையாக வெளிநாட்டவர் ஒருவர் தனிப்பட்ட முறையில் வெளியிட்ட கருத்து
அல்லது கேள்வி குறித்து அதிகாரப்பூர்வமாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்
கருத்து தெரிவிக்க முடிவு செய்தது.
அது முற்றிலும் அழித்தொழிக்கும் போரைப் போன்றே இருந்தது.
இந்தியாவின் இறையாண்மை மீது நடத்தப்படும் வெளிப்புற அச்சுறுத்தல்கள் என்று சினிமா,
கிரிக்கெட்டைச் சேர்ந்த இந்திய பிரபலங்கள் - அவர்களில் சிலர் இந்தியாவின் உண்மையான
மதம் குறித்து வாதிட்டனர் - விரைவாக அடுத்தடுத்து ஒரேமாதிரியான ட்வீட்களைப்
பதிவிட்டனர். இந்தியா ‘ஒரு தேசமாக ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என்று அவர்கள் வேண்டினர்.
இதற்கிடையில் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்த இளம் ஆர்வலர் கிரெட்டா
துன்பெர்க் பயன்படுத்திய கருவித்தொகுப்பு (டூல் கிட்) தொடர்பாக தில்லி காவல்துறை
முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது. 1975ஆம் ஆண்டு நெருக்கடிநிலை காலத்தின்
போது சிவில் உரிமைகள், அரசியலமைப்பு ஆகியவை இந்திராகாந்தியால் இடைநிறுத்தப்பட்ட
போது, வழக்கமாக
சொல்லப்பட்டு வருகின்ற கற்பனையான இன்ஸ்பெக்டர் க்ளோசோ, மோசமான ‘வெளிநாட்டுக்
கைகள்’ ஆகியவற்றிற்கு இடையிலிருந்த மிகவும் மோசமான இரக்கமற்ற பெரிய அண்ணன்
அணுகுமுறை ஊடுருவியது.
தொற்றுநோயுடனான போரில் உலகம் ஈடுபட்டிருந்த போது தனது
குடிமக்களுடனான போரில் இந்திய அரசு நேரடியாக ஈடுபட்டது. அந்தப் போரில் முதல் இலக்காக
பத்திரிகை சுதந்திரம் அல்லது கந்தலாகி மீந்து போயிருக்கின்ற பத்திரிகை சுதந்திரம்
இருந்தது. அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி அறிவிப்பாளர்கள் தங்கள்
பார்வையாளர்களை தேசியவாதம் நோக்கி கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கின்ற போது, போராட்டங்கள்
குறித்த செய்திகளைச் சேகரிக்கும் வேலையைச் செய்ததற்காக தங்களை விட்டுக் கொடுக்காத
பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆம்… என் கூட்டிற்கு மீண்டும் நான் பறந்து வந்த போது
தில்லி மிகவும் மோசமாக இருளடைந்து போயிருந்தது.
வாழ்க்கைப் பாதை
அந்த யூகலிப்டஸ் மரம் ஆண்டுதோறும் பருந்துகள் கூடு கட்டிக்
கொண்டிருந்த மரம் ஆகும். நிலத்தடி நீரைப் போன்று அந்த இனமும் இப்போது வெளியேறி
விட்டது. நான் வசித்து வந்த வீட்டிற்கு 2008ஆம் ஆண்டில் வந்த போது, அந்த மரத்தை வெட்டுவதற்கான அனுமதியைக் கோரினேன்.
சம்பந்தப்பட்ட அரசாங்கத் துறையைச் சேர்ந்த ஆய்வாளர் என்னிடமிருந்து ரூ.20,000 லஞ்சமாகக்
கேட்டார். லஞ்சம் தருவதற்கு நான் மறுத்ததால்,
அந்த மரம் வெட்டப்படாது அப்படியே இருந்தது. அதிகாலை வேளையில் அந்த மரத்திலிருந்து
பறவைகள் மகிழ்ச்சியுடன் பாடுவது அனைவரையும் மகிழ்வித்தது.
இரண்டு கோடைகாலங்களுக்கு முன்பு புற்றுநோயால் இறந்து
கொண்டிருந்த என் தாயின் சகோதரியை நான் கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது. அப்போது
ஒருநாள் வீசிய பருவகாலத்து தூசிப் புயலால் அந்த மரங்கள் ஊசலைப் போன்று ஆடின. யூகலிப்டஸ்
மரத்தின் உச்சி, அதன் பெரிய மேல் பகுதியுடன் கீழே விழுந்து மின்சாரக் கம்பிகளைத் துண்டித்தது. ஒட்டுமொத்த
தெருவும் இருளில் மூழ்கியது. மீண்டும் விளக்குகள் ஒளிர்ந்த போது, அந்தக் கூடும் கீழே விழுந்திருப்பதைக்
கண்டேன்.
மீண்டும் அந்த கூட்டை இப்போது அங்கே பார்த்த போது,
காரணம் அறியாத மகிழ்ச்சியால் என்னுடைய மனது நிரம்பியது. அந்தக் கூட்டிலிருந்து
முதன்முதலாகச் சிறகுகளை விரித்து வெளியேறுகின்ற தற்போதைய பறவைகளை நான் கவனித்து வருகின்ற
மொட்டை மாடியே தினந்தோறும் எனக்கான பொழுதுபோக்கும் களமாக அமைந்திருக்கிறது.
துணிகளைச் சலவை செய்யும் அன்றாட வழக்கத்தை நான் அங்கிருந்துதான் செய்து வருகிறேன்.
சுத்தம் செய்ய வேண்டிய துணிகளைத் தேர்ந்தெடுப்பது, அவற்றை வெயிலில் காயப் போடுவது
ஆகியவற்றை அன்றாடம் செய்வது ஏதோ தியானத்தில் நடப்பதைப் போன்று இருந்தது. என்னுடைய
நாளைக்குள் மிகவும் சாதாரணமாக, யூகிக்கக்கூடியதாக, ஒழுங்கான அமைவில் எந்தவொரு
சிந்தனையும் தேவையில்லாத அந்த அன்றாடச் சடங்கு நங்கூரமிட்டு அமர்ந்து விட்டது.
முன்பு எப்போதையும்விட இப்போது அதனைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சாத்தியம் தவிர்க்க முடியாததாக,
உடனடியானதாக, அவசியமானதாக எனக்குத் தோன்றியது.
தடுப்பூசி வந்துள்ளது. உண்மையில் பல தடுப்பூசிகள்
வந்திருக்கின்றன. இருந்தாலும் வைரஸ் பிறழ்வுகளை விட வேகமாக தடுப்பூசிகள் செலுத்தப்படுமா
என்பது இன்னும் அறியப்படவில்லை.
அரசின் வலிமைக்கெதிராக விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது.
ஆங்காங்கே எதிர்ப்புகள் தனித்து நிற்கின்றன. அவை நீடித்து இருக்குமா இல்லையா
என்பது போகப் போகத் தெரியும்.
கூடுகள் மீண்டும் தோன்றியிருப்பதில் உள்ள குறியீட்டைக்
கண்டுபிடிப்பது எளிதானது, இந்த நேரத்தில் அவ்வாறான குறியீடு ஏன் முக்கியமானது
என்பதைப் புரிந்து கொள்வதும் எளிதாகவே இருக்கிறது.
ஆண்டுதோறும் கூட்டை ஆக்கிரமிக்கின்ற சடங்கு காலநிலை
மாற்றத்தால் மாறுகின்ற பருவ காலங்களை நினைவூட்டுவதாகவே இருந்தது. வசந்த காலம்,
புதுப்பித்தல், பிறப்பு, வாழ்க்கை, வளர்ப்பது, பாதுகாப்பது என்று பருவகாலங்கள் முழுவதும்
அவை தொடர்ந்து ஒரே மாதிரியானவையாகவே இருக்கின்றன.
ஒன்று மற்றொன்றுக்குள்ளாக விரிவடைவந்து பருவகாலங்கள்
கடந்து செல்வது காலம் நம்மைக் கடந்து செல்வதைக் குறிக்கிறது. ஒருகாலத்தில் பொறுப்பற்ற,
ஆபத்துகளை எதிர்கொள்கின்ற யுவதியாக இருந்ததைப் போன்று நான் இப்போது என்னுடைய
ஏறக்குறைய ஐம்பத்தியெட்டாவது வயதில் இருக்கவில்லை. எனது உடற்பயிற்சிகளை நான் இப்போது
தவறாமல் செய்து வருகிறேன். என்னுடைய ரத்த சர்க்கரை அளவை நேர்த்தியாகக் கண்காணித்து
வருகிறேன். புகைபிடிப்பதை விட்டுவிட முயற்சித்தேன் (முற்றிலும் வெற்றிகரமாக இல்லையென்றாலும்).
இப்போது தலைமைப் பதவிகளில் இருக்கின்ற இளைய பத்திரிகையாளர்கள் என் பெயருடன்
‘ஜி’யைச் சேர்த்துக் கூறும் போது என்னைத் தனிமைப்படுத்துவதாகத் தோன்றுகிறது. என்னுடைய
பிறந்த நாள் நெருங்கிய வேளையில் ஒருவேளை அரசாங்க
வேலையில் நான் இருந்திருந்தால் இந்த ஆண்டு ஓய்வு பெற்றிருப்பேன் என்று உணர்ந்தேன்.
எனது நண்பரின் தாய் இப்போது எண்பதுகளின் பிற்பகுதியில்
இருப்பவர் ‘என்னை கண்ணாடியில் நான் யுவதியாக மட்டுமே பார்க்கிறேன்’ என்று என்னிடம்
கூறினார். என் முகத்தில் உள்ள கோடுகளை என்னால் கண்ணாடியில் பார்க்க முடிகிறது. என்னுடைய
அலங்காரம் என்னுடைய சாம்பல் நிற இழைகளை மறைக்க வழிவகுத்துத் தந்திருக்கின்றது
என்றாலும் அந்தக் கண்ணாடியில் தன்னுடைய அனைத்து சுதந்திரத்துக்காகவும் போராட
வேண்டிய இளம் பெண்ணையே இன்னும் நான் காண்கிறேன். அதிகாரப்பூர்வ மூத்த குடிமக்களில்
ஒருவள் ஆவதற்கு இரண்டு வருடங்கள் மட்டுமே இன்னும் இருக்கின்றன என்பது என்னைப் பொறுத்தவரை அதிர்ச்சியாகவே இருக்கிறது.
சமீபத்தில் பதிவிறக்கம் செய்து கொண்ட உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி பயன்பாடு
குறித்த செயலி எனது ‘உடற்தகுதி வயது ஐம்பத்தியிரண்டு’ என்று கூறிய போது எனக்குள் அபத்தமான மகிழ்ச்சி தோன்றியது. அது மிகவும்
முட்டாள்தமானது.
அந்தக் கூட்டின் குறியீடு என்ன? சிறந்த நாட்கள் காத்துக்
கொண்டிருக்கின்றன என்பதை நினைவூட்டுவதாக அது இருக்கலாம். அல்லது இனப்பெருக்கம்
மற்றும் உயிர்வாழ்வதற்காக தன்னை தீர்மானித்துக் கொண்ட ஓர் இனத்தின் உயிரியல்
செயல்பாடு என்பதைத் தவிர வேறொன்றாக இல்லாமலும் இருக்கலாம்.
அனைத்தையும் போல அதுவும் கடந்து செல்லும்.
Comments