ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பிரச்சனை உண்மையில் பன்மயச் சிந்தனை - பழிவாங்கும் உளவியல் ஆகியவற்றிற்கு இடையிலானதாகவே இருக்கிறது.
அவிஜித் பதக்
சமூகவியல்துறை பேராசிரியர்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
இந்தியன் எக்ஸ்பிரஸ்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருக்கும் போது,
ஜவஹர்லால் நேரு, சுவாமி விவேகானந்தர் சிலைகளைப் பார்த்து விட்டு, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்
மத்திய நூலகத்திற்குள் நுழைவதற்கான பொருள் என்னவாக இருக்கிறது என்ற கேள்வியை நான் எனக்குள்ளே
அடிக்கடி கேட்டுக் கொள்கின்றேன். இடது, வலது என்ற மேலாதிக்க கற்பனைகளுடன் மிகவும்
துருவமுனைக்கப்படுத்தப்பட்டிருக்கின்ற உலகில் நாம் இப்போது இருக்கிறோம். ஒடுக்கப்பட்ட
அம்பேத்கருடன் அல்லது மதச்சார்பற்ற நேருவுடன் ஹிந்து விவேகானந்தரால் இணைந்து வாழ
முடியாது என்று சிலர் அஞ்சிக் கொண்டிருக்கின்ற உலகத்திலே நாம் இப்போது வாழ்ந்து
வருகிறோம் என்பதால், எனக்குள் எழுந்த அந்தக் கேள்வி முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
நாட்டில் நிலவி வருகின்ற ஆதிக்க அரசியல் உரையாடல்களைப் பொறுத்தவரை, ஜவஹர்லால் நேரு
பல்கலைக்கழக வளாகத்தில் சுவாமி விவேகானந்தர் சிலையைத் திறப்பது என்பது ஓர் ஆரம்பம்
என்று சிலர் நினைக்கலாம்; அது இடது - அம்பேத்கரிய பல்கலைக்கழகத்தைச் சுத்திகரிப்பதற்கான
ஒரு படியாகவும், தம்முடைய தேசியவாத பேராவலுக்கு மிக நெருக்கமானதாகவும் இருப்பதாகவும்
அவர்கள் கருதலாம். இருப்பினும் இந்த வளாகத்துடன் அறிவார்ந்த, உணர்வுப்பூர்வமான
உறவைக் கொண்டிருக்கும் ஆசிரியராக, வளாகத்திற்குள் அலைந்து திரிபவன் என்ற முறையில்,
இடது, வலது என்று அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்ற உரையாடலுக்கு அப்பாற்பட்டு ஒரு
பல்கலைக்கழகத்திற்கென்று இருக்க வேண்டிய குறிக்கோள்கள் குறித்து நான் சிந்திக்க
முற்படுகிறேன்.
முக்கியமாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கென்று
இருக்கின்ற மூன்று தனித்துவமான அம்சங்களை ஒப்புக் கொள்வது மிகவும் அவசியம்.
முதலாவதாக, பேராசிரியர்கள், நாடு முழுவதிலிருந்தும் வந்து பயிலும் அறிவுக்
கூர்மையான மாணவர்களைக் கொண்டுள்ள இந்த பல்கலைக்கழகம், வாழ்வியல், சமூக அறிவியலில்
முக்கிய விவாதங்களை, நன்கு அறிந்த அல்லது புதிய கேள்விகளை எழுப்பக்கூடிய, அறிவின்
களத்திற்கு பங்களிப்பு செய்கின்ற விமர்சனப்பூர்வமான மனங்களை வளர்ப்பதிலே வெற்றியடைந்திருக்கிறது.
அன்டோனியோ கிராம்ஸ்கி, லூயி அல்தூசர், ராணாஜித் குஹா, எரிக் ஹாப்ஸ்பாம், ஜூடித்
பட்லர், மிஷேல் பூக்கோ போன்ற தீவிர சிந்தனையாளர்கள் பல தலைமுறை மாணவர்கள், ஆசிரியர்களின்
நனவை ஆக்கிரமித்ததில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.
இரண்டாவதாக, இங்கே அறிவின் பரவல், பரிவர்த்தனை போன்றவை
அரசியல் செயல்பாடுகளிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கவில்லை. நடைமுறை நிலை குறித்த உள்ளார்ந்த
சந்தேகம் மாணவர்களிடையே ஏன் ஆசிரியர்களிடையிலும்கூட, இருந்து வந்தது. நெருக்கடிநிலை
காலத்திற்கு எதிரான போராட்டம் அல்லது சமீபத்தில் குடியுரிமை சட்டத்
திருத்ததத்திற்கு எதிராக நடந்த போராட்டம் என்று எதுவாக இருந்தாலும் அந்த போராட்ங்களின்
முக்கிய தளமாகவும், விமர்சனக் குரல்களாக இடமாகவும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மாறியது.
அந்த விதத்தில் தனக்கான அரசியல்தன்மையை பல்கலைக்கழகம் பெற்றது.
மூன்றாவதாக, பாரம்பரிய / பழமைவாத சமுதாயத்தில் நடப்பதைப்
போலல்லாமல், சோதனைகள், வெளிப்படைத்தன்மை, புதிய சாத்தியக்கூறுகள் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் கலாச்சாரக்
களம் நிரம்பி வழிந்தது. போராட்டப் பாடல்கள் துவங்கி தீவிரமான நாடகம் வரை, முடிவற்ற
விவாதங்கள் துவங்கி பூலே, அம்பேத்கர், மார்க்ஸ், சே ஆகியோரின் கருத்துகளை வெளிப்படுத்துகின்ற
வண்ணமயமான சுவரொட்டிகள் வரை என்று மார்க்சியம், அம்பேத்கரியம், பெண்ணியம், பின்நவீனத்துவம்
ஆகியவை அங்கே எதிரொலிப்பதை எவரொருவராலும் கேட்க முடியும்.
பல்கலைக்கழகத்திற்குள் இருந்த இந்த அதிர்வுகள் நம்மை
வளப்படுத்தின. ஆய்வுப்பூர்வமான கற்பித்தல் முறை, வளமான சமூக-அரசியல் விவாதங்கள், உயர்தரத்திலான
அறிவார்ந்த நடவடிக்கைகளிலிருந்து கற்றுக் கொள்வதற்கு ஒருவர் இடதுசாரியாக இருக்க
வேண்டியதில்லை. இந்திய சிவில் துறையில் சேரத் தேர்வு செய்தவர்கள் உட்பட பல
மாணவர்களுக்கு வெறுமனே பட்டம் அல்லது சான்றிதழைப் பெறும் இடமாக இல்லாமல், இந்த
பல்கலைக்கழகம் அவர்களுடைய வாழ்க்கையை மாற்றிய அனுபவமாக இருந்துள்ளது.
இவ்வாறு கல்விசார் சிறப்பும், போராட்டக் கலாச்சாரமும்
இருந்த போதிலும், சில சிக்கல்களும் அங்கே இருந்தன என்று சொல்வது முற்றிலும் தவறாகாது.
தனித் தீவாக இருந்த இந்த பல்கலைக்கழகம் தன்னைச் சுற்றிலும் இருந்த இடங்களிலிருந்து
தனித்து பாதுகாக்கப்பட்டது. ஒருவித அறிவார்ந்த குறும்புத்தனத்தை உருவாக்கிக்
கொண்டதால் உள்ளூர் அறிவுஜீவிகள், பரந்த அறிவு மரபுகளுடன் தனக்கிருந்த தொடர்பை
இழந்தது. சில சமயங்களில் அதன் முற்போக்குத்தன்மை சகிப்புத்தன்மையற்றதாக அல்லது
உலகை வித்தியாசமாகப் பார்த்த அனைவருக்கும் சந்தேகம் ஏற்படும் வகையிலே இருப்பதானது.
எடுத்துக்காட்டாக காந்தி, தாகூர், அரவிந்தர் போன்றோரின்
கருத்துக்களுக்கு போதுமான முக்கியத்துவம் இங்கே கிடைக்கவில்லை என்று சொல்வதில் எந்தவொரு
தயக்கமும் எனக்கு இல்லை; பகவத் கீதை, உபநிடதங்கள் போன்ற நூல்களைப் பற்றிய எந்தவொரு
குறிப்பும் பெரும்பாலும் பிராமணியத் தன்மை கொண்டவை என்று கண்டிக்கப்பட்டன. வேறு
வார்த்தைகளில் கூறுவதானால், கவனித்துக் கேட்கும் கலையை நாங்கள் இழந்து
கொண்டிருந்தோம். இவ்வாறு அறுபட்டுப் போன தொடர்பு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உயரடுக்கினருக்கானது,
தேச விரோதிகளுக்கானது என்று பலரும் களங்கப்படுத்துவதற்கான வழியை வகுத்துக் கொடுத்தது.
நேர்மையான சுயபிரதிபலிப்பு பல்கலைக்கழகத்திற்குத் தேவைப்படுகிறது.
அதாவது இடது, வலது என்பதைத் தாண்டிப் போவதாக அது இருக்க வேண்டியுள்ளது. பன்மைத்துவ
உணர்வை வளர்த்தெடுப்பதற்கு, பிரதிபலிப்பு கற்பிதத்தின் ஒருங்கிணைந்த அங்கமாக இருக்கின்ற
கவனித்துக் கேட்கும் கலையை ஊக்குவிப்பதற்கு அது தேவைப்படுகிறது. அது ‘இடதுசாரிகள் இதுவரையிலும்
ஆதிக்கம் செலுத்தி வந்தீர்கள்; இது இப்போது எங்கள் முறை; நீங்கள் மார்க்ஸ், அம்பேத்கரைப்
பற்றி இதுவரையிலும் பேசி வந்திருக்கிறீர்கள்; நாங்கள் இப்போது சாவர்க்கர், கோல்வால்கரின்
புகழ் பாடுகிறோம்; நீங்கள் பாலின ஆய்வுகள், விவசாயிகள் போராட்டங்களை கொண்டாடினீர்கள்;
சமஸ்கிருதம், யோகா, ஆயுர்வேதத்தை நாங்கள் இப்போது அறிமுகப்படுத்துகிறோம்’ என்ற மோசமான
பழிவாங்குகின்ற விளையாட்டு நடைமுறையிலிருந்து அது அடிப்படையிலேயே வேறுபட்டது. உண்மையில், மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள்
என்ற முறையில் இந்த தீய சுழற்சியை உடைப்பதற்கான தைரியத்தைப் பெற்றுக் கொண்டால்
மட்டுமே பல்கலைக்கழகத்தை நம்மால் சீர்படுத்த முடியும். வெளிப்படைத் தன்மை,
அச்சமின்மையுடன் தொடர்ந்து கற்றுக் கொள்பவர்களாக, உரையாடல் மனப்பான்மை கொண்ட தேடல்
உள்ளவர்களாக, அலைந்து திரிபவர்களாக நம்மை நாமே காணவும் முடியும்.
இந்தச் சூழலில்தான் நான் இந்தக் கட்டுரையைத் தொடங்கிய
போது எழுப்பிய கேள்வி மீண்டும் உயிர்த்தெழுகிறது. நேருவின் சிலையைப் பார்க்கின்ற போது,
அவரது டிஸ்கவரி ஆஃப் இந்தியாவை நான் நினைவு கூர்கிறேன் - பழைய நாகரிகத்தின்
துடிப்பைப் புரிந்து கொள்ள முயன்ற நவீனத்துவவாதியான நேரு அதே நேரத்தில் கடந்த
காலத்தின் சுமையை எதிர்த்துப் போராடவும், புதிய தேசத்தை உருவாக்கவும் விரும்பினார்.
அது வேரூன்றிய போதிலும், உலகப் பொதுமையுடன் இருந்தது. சுவாமி விவேகானந்தரை அதற்குப்
பிறகு பார்க்கிறேன். சிகாகோ மத மாநாட்டில் அவர் ஆற்றிய அற்புதமான உரையை நான்
கேட்கத் தொடங்குகிறேன் - வேறுபாடுகளுக்கு மத்தியில் இருக்கின்ற அடிப்படை ஒற்றுமை
குறித்த உபநிடத செய்தி; மக்களுக்குச் சேவை செய்வதற்கான முனைப்பு மிகுந்த மதவாதமான ‘நடைமுறை
வேதாந்தா’ ஆகியவை குறித்த அவரது உணர்வுப்பூர்வமான வேண்டுகோளைக் காண்கிறேன்.
ஆம், விவேகானந்தர் போர்க்குணமிக்க ஹிந்து தேசியவாதத்திற்கான
வீரர் என்று கூறி என்னை முட்டாளாக்க முடியும் என்று நினைப்பவர்களைப் பார்த்து நான்
சிரிக்கிறேன். இறுதியாக அம்பேத்கர். கண்களைத் திறந்து, சாதியை அழிக்கும்
திட்டத்திற்கு எனது ஒப்புதலை அளிக்கிறேன். இத்தகைய பன்முகத் தரிசனங்களில் மாணவர்கள்,
ஆசிரியர்கள் ஈடுபடுவதற்கு ஊக்குவிப்பதோடு, அவர்கள் தத்துவ தெளிவற்று வாழ்வதற்கும்கூட
பல்கலைக்கழகம் ஒரு சிறந்த இடமாக இருக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன். எனவே லோகாயதா,
வேதாந்தா, ஃபிரான்ஸ் காஃப்கா, காளிதாசர், காந்தி, பூக்கோ என்று இவர்களை எந்தவித கூச்சமோ,
பதட்டமோ இல்லாமல், அல்லது போலிப் பகட்டு, காரணம் இல்லாமல் படிக்கின்ற மாணவர்களை நான்
கற்பனை செய்து பார்க்கின்றேன்.
அவ்வாறு இருப்பதற்கு சுதந்திரம் தேவை - மாணவர்கள், ஆசிரியர்களை
மதிக்கின்ற, அவர்களுடைய திறனை வெளிப்படுத்த அனுமதிக்கின்ற சூழல் தேவை. ஆனால் இவ்வாறான
லட்சியத்தை வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக, பழிவாங்கும் உளவியல் மூலம் பல்கலைக்கழகத்தின்
ஆன்மாவை முறையாகத் திட்டமிட்டு அழித்தொழிக்கும் செயல்முறை நிலவுவதையே நாம் இப்போது
காண்கிறோம்.
https://indianexpress.com/article/opinion/columns/the-choice-before-jnu-is-not-between-nehru-and-vivekananda-but-between-a-plurality-of-thought-and-the-psychology-of-revenge-7134412/





Comments
கே.ராஜு