குறைந்தபட்ச ஆதார விலைக்கு குறைவாக நடந்த விற்பனைகளின் காரணமாக இரண்டு மாதங்களில் மட்டும் விவசாயிகளுக்கு ரூ.1,900 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது
கபீர் அகர்வால், தீரஜ் மிஸ்ரா
தி வயர் இணைய இதழ்
பாட்டியாலா நகரில் புதிய தானிய சந்தையில் முழு வீச்சில் நடைபெறும் நெல் கொள்முதல்
குறைந்தபட்ச
ஆதார விலை (எம்எஸ்பி) என்ற அரசாங்கத்தின் திட்டம் குறைந்தபட்ச கள விலையை
உருவாக்குவதற்கு சரியாக உதவியிருக்கும் என்றால், தங்கள் விளைபொருட்களை விற்பனை
செய்வதன் மூலம் 11 பெரிய விவசாய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் இன்னும் கூடுதலாக
1,900 கோடி ரூபாயைச் சம்பாதித்திருக்க முடிந்திருக்கும். நாடு முழுவதும் சுமார் 3,000 மொத்த விற்பனை
நிலையங்களிலிருந்து வெளைபொருட்களின் விலை மற்றும் வரத்து அளவுத் தரவை வழங்கி
வருகின்ற, அரசாங்கத்தின் விலை தகவல் அமைப்பாக விளங்குகின்ற ‘அக்மார்க்நெட்’ என்ற
இணையதளத்திலிருந்து பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தி வயரின்
பகுப்பாய்வு - கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் மட்டும் குறைந்தபட்ச ஆதார
விலைக்கு குறைவாக தங்களுடைய விளைபொருட்களை விற்க வேண்டியிருந்ததால் குறைந்தது
1,881 கோடி ரூபாய் அளவிற்கு விவசாயிகளுக்கு அவர்களுடைய வேளாண் பொருட்களுக்கான பணம்
மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றது.
மிகவும்
குறிப்பிடத்தக்க அளவில் மக்காச்சோள விற்பனையில் ‘இழப்புகள்’ ஏற்பட்டுள்ளன.
குறைந்தபட்ச ஆதார விலையான குவிண்டால் ரூ.1,850 என்பதற்குப் பதிலாக மக்காச்
சோளத்தின் விலைகள் ரூ.1,100 முதல் ரூ.1,550 வரை மட்டுமே இருந்ததால் அக்டோபர்
மற்றும் நவம்பர் மாதங்களில் விவசாயிகளுக்கு மறுக்கப்பட்ட மொத்த வருமானம் 485 கோடி
ரூபாய் ஆகும்.
நிலக்கடலையைப் பொறுத்தவரை, குறைந்தபட்ச ஆதார விலைக்கு குறைவாக நடைபெற்ற விற்பனையின் காரணமாக, விவசாயிகள் ரூ.333 கோடி அளவிற்கு இழந்துள்ளனர்.
நெல்லைப்
பொறுத்தவரையில், குறைந்தபட்ச ஆதார விலைக்கு குறைவாக உள்ள விற்பனை பஞ்சாப்,
ஹரியானாவைத் தவிர மற்ற முக்கியமான உற்பத்தி மாநிலங்களில் - மொத்த வருமான இழப்பு
ரூ.220 கோடி அளவிற்கு இருந்திருக்கிறது. சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், தெலுங்கானா
போன்ற பெரிய அளவிலே நெல் உற்பத்தி செய்கின்ற மாநிலங்களில் சராசரி விலைகள்
குறைந்தபட்ச ஆதார விலையை விட நெல் கொள்முதல் விலை 15% குறைவாகவே இருந்துள்ளன.
இந்த பகுப்பாய்விற்காக மாநில அளவில் பயிர்களின் சராசரி
மாத விலைகளும், அக்மார்க்நெட்டில் மாநில வாரியாக கிடைக்கின்ற பொருட்கள்
விற்கப்பட்ட அளவையும் பயன்படுத்தினோம். ஒவ்வொரு மாநிலத்திலும் மாதாந்திர சராசரி
விலைக்கும், குறைந்தபட்ச ஆதார விலைக்கும் இடையில் உள்ள வேறுபாடு ஒவ்வொரு
மாநிலத்திலும் விற்கப்படும் அளவுகளால் பெருக்கப்பட்டு ஒவ்வொரு மாநிலத்திலும்
ஒவ்வொரு பயிருக்கும் இழப்பு அல்லது லாப அளவு கணக்கீடு செய்யப்பட்டது.
குறைந்தபட்ச ஆதார விலைக்கு குறைவாக மேற்கொள்ளப்பட்ட
விற்பனையால் ஏற்பட்ட இழப்புகளின் துல்லியமான கணக்காக இருக்கும் வகையில், மொத்த
இழப்பின் அளவைக் கணக்கிடுவதற்கு, சராசரி விலைகள் குறைந்தபட்ச ஆதார விலைக்கு கீழே
இருந்த மாநிலங்களை, பயிர்களை மட்டுமே எங்களுடைய கவனத்தில் எடுத்துக் கொண்டோம்.
சில மாநிலங்களில் சில பயிர்களில் - முக்கியமாக பஞ்சாப்,
ஹரியானாவில் நெல் - இரண்டு மாத காலப்பகுதியில் ரூ.1,400 கோடி நிகர தோராய
இழப்பாகும். குறிப்பிட்ட பயிரின் விளைபொருட்களில் 95% அல்லது அதற்கு மேலாக
விற்கப்பட்ட மாநிலங்களை மட்டுமே நாங்கள் கருத்தில் கொண்டோம். அதன் விளைவாக, இழப்புகள் குறித்த எங்கள்
கணிப்பு சற்று குறைத்தே மதிப்பிடப்பட்டிருக்கலாம்.
இறுதியாக நாங்கள் பயன்படுத்திய தரவு அக்மார்க்நெட்
அமைப்பை நம்பியுள்ளது என்பதை நினைவில் கொள்வது அவசியம். இந்த தளம் மண்டிகளில்
நடைபெற்ற பரிவர்த்தனைகளுக்கான விலைகள் மற்றும் அளவுகளை வழங்குகிறது.
பரிவர்த்தனைகளில் கணிசமான பகுதி மண்டிக்கு வெளியேயும் நடைபெறுகிறது. விவசாயிகளைச் சென்றடைவதற்கு வணிகர்கள் செய்யும்
பரிவர்த்தனை செலவும் அதற்கான காரணியாக இருப்பதால், அங்கே விவசாயிகள் பெறும் விலை
இன்னும் குறைவாக இருக்கக்கூடும்.
2020 டிசம்பர் 2 அன்று சோனிபட்டில் குண்ட்லி எல்லையில்
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான ‘டெல்லி சாலோ’ எதிர்ப்பு அணிவகுப்பின் போது
பெருமளவில் கூடியிருந்த விவசாயிகள்
விற்பனை விலை
குறைந்தபட்ச ஆதார விலைக்கு கீழேயே உள்ளது
நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தின் முக்கிய
கோரிக்கைகளில் ஒன்றாக குறைந்தபட்ச ஆதார விலை சட்டப்பூர்வ உரிமையாக மாற்றப்பட
வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. குறைந்தபட்ச ஆதார விலை 23 பயிர்களுக்கு
அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் பெரும்பாலான பயிர்கள் பொதுவாக குறைந்தபட்ச
ஆதார விலைக்கும் குறைந்த விலையிலேயே விற்கப்பட்டு வருகின்றன. முக்கியமான இரண்டு
பயிர்கள் - நெல், கோதுமை - மட்டுமே குறைந்தபட்ச ஆதார விலை அல்லது அதற்கு கூடுதலாக
விற்கப்படுகின்றன. அதுவும் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் மட்டுமே அவ்வறு
இருக்கிறது. எனவே குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் நடத்தப்படவில்லை எனில் இந்த
இரு மாநிலங்களின் விவசாயிகளுக்கு அதிக இழப்பு நேரிடும்.
எங்களுடைய பகுப்பாய்வு ஏற்கனவே நன்கு அறியப்பட்டிருப்பதை
மேலும் வலுப்படுத்துவதாக இருக்கிறது. பெரும்பாலான
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்ற அறிவிப்பு பெரும்பாலும் காகிதத்தில்
மட்டுமே உள்ளது. எனவே ஹரியானா, பஞ்சாபில்
மிகச் சிறந்து விளங்குவதைப் போன்ற திறனுள்ள கொள்முதல் இல்லாத நிலையில் குறைந்தபட்ச
ஆதார விலைக்கு இணையான அல்லது அதற்கு கூடுதலான விலைகளை விவசாயிகளால் கோரிப் பெற
முடியாது.
எடுத்துக்காட்டாக கர்நாடகாவில் குறைந்தபட்ச ஆதார
விலையில் இருந்து கம்பின் சராசரி விலை அக்டோபரில் 45%, நவம்பரில் 42% என்ற அளவிலே
குறைவாகவே இருந்தது. மத்திய பிரதேசத்தில்
குறைந்தபட்ச ஆதார விலையில் இருந்து சோளத்தின் சராசரி விலை அக்டோபரில் 56%,
நவம்பரில் 33% என்று குறைவாக விற்கப்பட்டது.
மிகச் சிறிய அளவிலே கொள்முதல் செய்யப்பட்ட எள்ளின்
சராசரி மாநில அளவிலான விலைகள் குறைந்தபட்ச ஆதார விலையை விட அதிகமாக இருந்தன.
மகாராஷ்டிரா, கர்நாடகாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் குறைந்தபட்ச ஆதார விலையை
விட உளுந்தின் விலை 10% அதிகமாக இருந்தது. துவரையின் விலையும் நவம்பரில் உயரத்
தொடங்கியது. ஆனால் மகாராஷ்டிரா, கர்நாடகாவில் குவிண்டால் சுமார் 1,000 ரூபாய்
என்று கொள்முதல் பெரும்பகுதி நடக்கிற மத்திய பிரதேசத்தில் இருந்த குறைந்தபட்ச ஆதார
விலையை விட தொடர்ந்து குறைவாகவே இருந்தது.
இந்தப் பயிர்களைத் தவிர, பஞ்சாப், ஹரியானாவில் நெல்
மட்டுமே அக்டோபர், நவம்பர் மாதங்களில் குறைந்தபட்ச ஆதார விலையை விட சராசரி விலை
அதிகமாக (சுமார் 1% அதிகம்) விற்கப்பட்டது.
மாநில அளவில் மொத்த நிகர இழப்பு கர்நாடகாவில் ரூ.403
கோடியாக இருந்தது. மக்காச்சோளம், சோயாபீன்ஸ், நிலக்கடலை, பாசிப்பயறு, கம்பு,
பருத்தி, சோளம், கேழ்வரகு, நெல் ஆகியவற்றிற்கான விலைகள் இரண்டு மாதங்களிலும்
குறைந்தபட்ச ஆதார விலையை விட குறைவாகவே இருந்தன. இரண்டு மாதங்களிலும் துவரையின்
விலை குறைந்தபட்ச ஆதார விலையை விட அதிகமாக இருந்தபோதிலும், கர்நாடகா மிகச் சிறிய
அளவிலேயே துவரை கொள்முதல் செய்வதால், அங்கே கிடைத்த அந்த அதிக விலை ஒட்டுமொத்த
சூழ்நிலையைப் பெரிதாக மாற்றிடவில்லை.
மக்காச்சோளத்தில் கர்நாடகா முக்கிய பங்கு வகிக்கிறது.
அக்டோபர், நவம்பர் மாதங்களில் நாட்டில் அதிக அளவில் வரத்து வந்துள்ளது. ஆனாலும்
அக்டோபர் மாதத்தில் சராசரி விலை 21% குறைந்தபட்ச ஆதார விலைக்கு குறைவாகவும்,
நவம்பரில் 16 சதவிகிதம் குறைந்தபட்ச ஆதார
விலைக்கு குறைவாகவும் இருந்ததால் விவசாயிகளுக்கு ரூ.130 கோடி இழப்பு ஏற்பட்டது.
மாநிலத்தில் சோயாபீன்ஸ் விவசாயிகளும் பாதிக்கப்பட்டு 82 கோடி ரூபாய் இழப்பைச்
சந்தித்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் மக்காச்சோளம், பருத்தி, சோயாபீன்ஸ்,
துவரை, சோளம், நிலக்கடலை ஆகியவற்றின் சராசரி விலைகள் குறைந்தபட்ச ஆதார விலையை விட
மிகக் குறைவாகவே இருந்தன. இந்த ஆண்டு மக்காச்சோளத்தைப் பொறுத்தவரை - ஓரளவிற்கு
கோழிப்பண்ணைத் தொழிலின் அழிவு காரணமாக - நாடு முழுவதும் அதன் விலைகள்
பாதிக்கப்பட்டுள்ளன. அதன் விலைகள் முறையே அக்டோபர், நவம்பர் மாதங்களில்
குறைந்தபட்ச ஆதார விலைக்கு 39%, 29% என்று குறைவாகவே இருந்தன.
இந்த இரண்டு மாதங்களில் குஜராத்தில் நிலக்கடலை,
பருத்தியில் தலா ரூ.100 கோடிக்கு மேல் விவசாயிகள் இழப்பைச் சந்தித்துள்ளனர். இந்த
இரண்டு பயிர்களைப் பொறுத்தவரை நாட்டிலேயே இந்த மாநிலத்தில்தான் அதிக அளவில் வரத்து
வந்துள்ளது.
இரண்டு மாதக் காலப்பகுதியில் நிகர லாபம் பெற்ற மாநிலங்கள்
ஹரியானா, பஞ்சாப் மட்டுமே ஆகும். முன்பே குறிப்பிட்டதைப் போல இந்த இரண்டு
மாநிலங்களில் மட்டுமே நெல் கொள்முதல் போதுமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் திறனுடன்
இருக்கிறது. ஆயினும் பஞ்சாபில் கூட மக்காச்சோளம்,
பருத்தியை விற்பனை செய்யும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை குறைந்தபட்ச
ஆதார விலைக்கு குறைவாகவே விற்க வேண்டியிருந்தது.
https://thewire.in/agriculture/farmers-protest-msp-procurement-average-notional-losses-rs-1900-crore
Comments