தவ்லீன் சிங்
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது ‘கான் மார்க்கெட்
கும்பல்’ என்று நரேந்திர மோடியால் தெரிவிக்கப்பட்ட ஏளனம் நிறைந்த கருத்து உங்களுடைய
நினைவில் இருக்கிறதா? தன்னை அந்தக் ‘கும்பல்’தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவர்
சொன்னது நினைவிருக்கிறதா? அவருக்கு கிடைக்கப் போகின்ற இரண்டாவது ஆட்சிக் காலஅவகாசத்தை
தேர்தல் முடிவுகள் சுட்டிக் காட்டியவுடன், அந்த பஜாரில் அவரது தொண்டர்கள் மூர்க்கத்தனத்துடன்
பாஜக கொடிகள் மற்றும் பதாகைகளை அசைத்துக் கொண்டு, அங்கிருந்த மிகச் சாதாரணமான
கடைக்காரர்களைப் பயமுறுத்தியது நினைவில் இருக்கிறதா? நல்லவேளை, அந்த வினோதமான முயற்சி
தொடர்ந்து செய்யப்படவில்லை. ஆனாலும் இப்போது நமது அரசியல் சொற்களஞ்சியத்தில்
நுழைந்துள்ள தன்னால் நிராகரிக்கப்பட்டவர்களைப் பற்றி ‘லூட்டியன்ஸ் முற்போக்கு
முட்டாள்கள்’ என்று ஒரு காலத்தில் மோடி கூறிய விளக்கத்தைப் போன்று, அவருடைய இந்தக் கருத்தும்
அவரது ஆதரவாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மோடி அடைந்த வெற்றியானது,
ஒருகாலத்தில் அரசியல் அதிகாரத்தின் அனைத்து விசைகளையும் கட்டுப்படுத்திய ஆங்கிலம்
பேசுகின்ற ஆளும் உயரடுக்கினரின் பழைய பேச்சுக்களை வலுவிழந்து போக வைத்தது
மட்டுமல்லாது, வேறு ஏதோவொன்றையும் செய்தது. பிரதமரைச் சுற்றி வெல்லமுடியாதவர் என்ற
வெளிச்சத்தை அது உருவாக்கியது. தான் விரும்பிய அனைத்தையும் செய்து முடிக்க முடியும்
என்று அவரை நம்ப வைப்பதாகவே பொதுத் தேர்தலில் அவர் பெற்ற அந்த இரண்டாவது வெற்றி
அமைந்தது. காஷ்மீருக்கென்று இருந்து வந்த சிறப்பு நிலையை மாற்றி அதை யூனியன்
பிரதேசம் என்ற அளவிற்குத் தரமிறக்க அவரால்
முடிந்திருக்கிறது; குடியுரிமைச் சட்டத்தை பாகுபாடு கொண்டதாக மாற்றித் திருத்த அவரால்
முடிந்திருக்கிறது; அதை தங்கள் குடியுரிமைக்கான அச்சுறுத்தலாகக் கருதிய முஸ்லீம்கள்
நகர வீதிகளிலும், பல்கலைக்கழக வளாகங்களிலும் எதிர்ப்புத் தெரிவித்தபோது, தனது
அமைச்சர்களைக் கொண்டு அவர்களை ஜிஹாதிகள், பாகிஸ்தானியர்கள் என்று அழைக்க வைத்து,
அவர்களுடைய எதிர்ப்புகளைத் கண்டு கொள்ளாமல் ஒதுக்கி வைக்க அவரால் முடிந்திருக்கிறது.
அவரால் பாராளுமன்ற மாளிகையை ‘ஜனநாயக அருங்காட்சியகமாக’
மாற்றி, அதன் மீது புதிய கட்டிடத்தை உருவாக்க முடியும்; மத்திய விஸ்டாவை மாற்றி இந்தியா
கேட் நிழலில் தனக்கென்று புதிய குடியிருப்பை உருவாக்கிக் கொள்ள முடியும்; நான்கு
மணிநேர அறிவிப்பில் இந்தியாவை முழுமையாக முடக்கி வைத்து, அதன் மூலம் கோடிக்கணக்கான
ஏழைகளான, மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடிமக்களுக்கு சொல்ல முடியாத துன்பத்தை
ஏற்படுத்திய கோவிட்-19ஐக் கையாள்வதில் தான் ஏற்படுத்திய மோசமான தவறிலிருந்து தப்பித்துக்
கொள்ள முடியும். அவரது தேர்தல் வெற்றி இதுபோன்ற நிலைமையை ஏற்படுத்தித் தந்துள்ளது.
இன்னும் சொல்லப் போனால், பீகார் மக்கள் பாஜகவிற்கு அளித்துள்ள வெற்றி அவரை மேலும்
தைரியப்படுத்தி இருப்பதாகவே தெரிகிறது. கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடந்த
நகராட்சித் தேர்தலில் பாஜகவிற்கு கிடைத்திருக்கும் வெற்றி, தான் வெல்லமுடியாதவர்
என்று அவரிடமுள்ள உணர்வை மேலும் அதிகரித்துத் தந்திருக்கிறது. இருந்த போதிலும், ஜனநாயகத்தில்
மக்களின் குரல்கள் வாக்குப் பெட்டிகள் வழியாக மட்டுமே கேட்கப்படுவதில்லை. பிரதமர் இதை
மறந்துவிட்டாரோ என்று ஜனநாயகம் இப்போது கவனிக்கத் தொடங்கியிருக்கிறது.
அந்தக் குரல் ஊடகங்கள் மூலமாக அவரால் கேட்கப்பட
வேண்டும். ஆனால், நான் ஏற்கனவே கூறி வந்திருப்பதைப் போல, இப்போதைய ஊடகங்கள்
அதிகாரத்திடம் உண்மையை பேசத் துணிவதாக இருக்கவில்லை. அதனால் பின்விளைவுகள் ஏற்படுகின்றன.
தொலைக்காட்சி நிருபர்கள் தில்லியின் வடக்கு எல்லையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளில்
விவசாயிகளைச் சந்திப்பதற்காகச் சென்ற போது, தாங்கள் ‘கோடி மீடியாவிடம்’ பேச விரும்பவில்லை என்று கூறி ஆத்திரமடைந்த சீக்கிய விவசாயிகள் அவர்களை
விரட்டி அடித்தனர். பாஜகவின் ஊடக
மேலாளர்கள் வலுச்சண்டை, வசைச் சொற்கள் ஆகியவற்றைக் கலந்து சமூக ஊடக தளங்களைக் கட்டுப்படுத்தி வருகின்றனர். பிரதமருக்கு எதிராக
அல்லது அவரது கொள்கைகளுக்கு எதிராக ட்வீட் செய்யத் துணிந்தவர்கள் மீது ‘துரோகிகள்’
என்ற முத்திரை குத்தப்படுகிறது. பெண்களாக இருந்தால், வாய்மொழியாக பாலியல்
துஷ்பிரயோகத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
தில்லி எல்லைகளில் ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்து வருகின்ற விவசாயிகளின் போராட்டம், ‘கான் சந்தை கும்பலுக்கு’ அப்பாற்பட்டவர்களாக மோடியின் விமர்சகர்கள் இருக்கிறார்கள் என்பதைச் சரியான நேரத்தில் மிகச் சரியாக நினைவூட்டுவதாக இருக்கிறது. பிரதமரான பின்னர் முதல்முறையாக பகிரங்கமாக அவர் தாக்கப்பட்டுள்ளார். போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை தில்லியில் 'கட்டமைக்கப்பட்ட' இடத்திற்கு நகர்த்தியவுடன், உள்துறை அமைச்சர் வழங்கிய அவர்களுடன் பேசுவதற்கான வாய்ப்பை ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்று பஞ்சாபி விவசாயிகளிடம் கேட்கப்பட்ட போது, அவர்கள் சொன்னது இதுதான்: ‘இனிமேலும் அவர்களை நாங்கள் நம்ப முடியாது என்கிற வகையில், மோடி, ஷா இருவரும் தங்களை பொய்யர்கள் என்று நிரூபித்துள்ளனர்’.
சட்டத்தில் உள்ளவாறு பார்த்தால், தங்கள் விளைபொருட்களை விற்க கூடுதல் தேர்வுகளை விவசாயிகளுக்கு அளிக்கின்ற வகையில் விவசாயச் சட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விவசாயிகள் ஏன் ஆத்திரப்படுகிறார்கள் என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒரு புரிதல் உள்ளது. விவசாயிகளின் ஆத்திரம் தகவல்தொடர்பு மோசமாக இருப்பதிலிருந்தே வருவதாக எனது புரிதல் இருக்கிறது. தில்லியின் மிக உயர்ந்த அதிகார மையங்களின் உச்சாணிக் கொம்புகளில் இருப்பவர்கள், ‘விவசாய சீர்திருத்தங்களை’ மேற்கொண்ட போது, அதில் விவசாயிகளைச் சேர்த்துக் கொள்ளவில்லை என்பது தெளிவு.
போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாபி விவசாயிகள் ஹரியானாவை
அடைந்தபோது, அவர்களைக் குற்றவாளிகளைப் போல நடத்தியதில் மிகப்பெரிய தவறு நிகழ்ந்தது.
விவசாயிகள் கடந்து செல்வதைத் தடுப்பதற்காக தண்ணீர் பீரங்கிகள், கண்ணீர்ப்புகைக்
குண்டுகள், முள்கம்பிச் சுவர், அதற்குப் பின்னால் நின்ற சிறிய காவல்துறைப் பட்டாளம்
ஆகியவை பயன்படுத்தப்பட்டன.
இதுபோன்று ஏன் நடந்தது என்று பாஜக ஆதரவாளரான நண்பர் ஒருவரிடம்
கேட்டபோது, ‘ஆரம்பத்தில்,
மிகப் பெரிய தன்னம்பிக்கை. பின்னர், தவறான மதிப்பீடு, போராட்டம் தூண்டி விடப்பட்டது
என்ற நம்பிக்கை, மேலும் தவறாகக் கையாண்டது’ என்று அவர் என்னிடம் கூறினார். களத்தில்
நிகழ்பவற்றிற்கு மோடி காது கொடுத்துக் கேட்க மாட்டார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள
எனக்கென்று எதுவும் தேவைப்பட்டால், அது இதுதான். இப்போது அவர் ‘மக்களிடமிருந்து’ முழுமையாகத்
தனிமைப்பட்டிருக்கிறார். விவசாயிகளுடைய வேதனையையும், கோபத்தையும் அல்லது தன்னுடைய கொள்கைகளின்
மீது அவர்களுக்கு இருக்கின்ற வெறுப்பையும் இனி அவரால் உணர முடியாது.
மாதத்திற்கு ஒரு முறை பரபரப்பானதொரு சொற்பொழிவு மூலமாக சாதாரண
இந்தியர்களுடன் அவர் கொண்டிருக்கும் தொடர்பானது வழக்கமாக கணத்தின் சிக்கலைப்
புறக்கணிக்கவே செய்கிறது. ‘கோடி’ பிரிவில் வருபவர்கள் மட்டுமே அவரை அணுக முடிவதால்,
ஊடகங்களிடம் இருந்து எந்தக் கருத்தும் அவருக்குக் கிடைப்பதில்லை. அவர் கூறுகின்ற அல்லது
செய்கின்ற எதையும் எதிர்க்கத் துணிந்த ஒருவர்கூட அவரது அமைச்சரவையில் இல்லை.
மேலும், இந்த ஆண்டில் அவரால் கொரோனா வைரஸ் காரணமாக அதிகம் வெளியேறவும்
முடியவில்லை. அவரது ஆழ்ந்த தனிமை ஜனநாயகத்திற்குத் தீங்கை விளைவிப்பது மட்டுமல்லாது,
வெல்லமுடியாதவர் என்ற தவறான உணர்வை அவருக்கு
அளிப்பதன் விளைவாக, தனிப்பட்ட முறையில் அவருக்கும் தீங்கையே விளைவிக்கிறது.
தங்கள் குரலைக் கேட்க வேண்டும் என்பதற்காக திறந்த வெளியில், சகித்துக்
கொள்ள முடியாத குளிர் இரவுகளில் தில்லியில் திரண்டிருக்கும் துணிச்சல் மிக்க இந்த விவசாயிகள்,
தான் வெல்லமுடியாதவர் அல்ல என்பதை பிரதமருக்கு நினைவுபடுத்திக் காட்ட வேண்டும். ஜனநாயகத்தில்,
எந்தவொரு அரசியல் தலைவரும் அவ்வாறு வெல்ல முடியாதவராக இருந்து விடக் கூடாது.
https://indianexpress.com/article/opinion/columns/narendra-modi-farmers-protest-tavleen-singh-7093214/?utm_source=Taboola_Recirculation&utm_medium=RC&utm_campaign=IE
Comments