விவசாயிகளுக்கு எல்லோரும் அறிவுரை கூறுகிறார்கள், ஆனால் எங்கள் பேச்சைக் கேட்பதற்கு யாருமே தயாராக இல்லை: ஹன்னன் மொல்லா
புதிய சட்டங்களில் வெறுமனே ‘ஒப்பனை மாற்றங்களை’ விவசாயிகள் ஏற்க மாட்டார்கள் என்று வலியுறுத்துகின்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவரும், அகில இந்திய கிசான் சபாவின் பொதுச் செயலாளருமான ஹன்னன் மொல்லா. விவசாயிகளின் போராட்டத்தை பஞ்சாப் போராட்டம் என்று சித்தரிப்பதற்கான ‘திட்டமிடப்பட்ட’ முயற்சியை விமர்சித்த அவர் வர்த்தகர்கள், விவசாயிகள் இடையிலான உறவுகளை அரசாங்கம் ஒத்திசைவானதாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த அமர்வை உதவி இணை ஆசிரியரான மனோஜ் சி.ஜி நிர்வகித்தார்.
இந்தியன்
எக்ஸ்பிரஸ் செய்தி சேவை
ஹன்னன்
மொல்லா
மனோஜ்
சி.ஜி: விவசாயிகள் அமைப்புகள் இந்த
மூன்று புதிய விவசாய சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றே விரும்புகின்றன. உங்களால்
ஏற்றுக் கொள்ளத்தக்க வேறு வழிகள் எதுவும் உள்ளனவா?
நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் கடந்த ஆறு மாதங்களாக தங்கள்
பிரச்சனைகளை எழுப்பி வருகின்றனர். அவசரச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டபோது, விவசாயிகளிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை… கடந்த ஆறு
மாதங்களில் போராட்டம் தொடர்ந்து தன்னுடைய வேகத்தை அதிகரித்து வந்தது. அரசாங்கம்
தங்களுக்கு செவிசாய்க்கவில்லை என்பதை விவசாயிகள் இறுதியாக உணர்ந்தபோது, ஜனநாயக அமைப்பில் அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்?
அமைதியான போராட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்ய முடிவு செய்தோம்… தலைநகருக்கு வந்து
தங்களுடைய பிரச்சனைகள் குறித்து அரசாங்கத்திடம்
தெரிவிப்பது என்று விவசாயிகள் முடிவு செய்தனர். இந்த விவசாயச் சட்டங்களை ஒரு
சஞ்சீவி என்று அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால் இந்தச் சட்டங்களை விவசாயிகள்
ஒருபோதும் விரும்பவில்லை. எந்தவொரு விவசாய அமைப்பும் இதுபோன்ற சட்டங்களை இயற்றித்
தருமாறு கோரிக்கை வைத்திருக்கவில்லை.
மனோஜ்
சி.ஜி: இந்த சட்டங்களை அரசாங்கம் ரத்து செய்யாவிட்டால், அவற்றில் சில திருத்தங்களை
ஏற்பதற்கு நீங்கள் தயாரா?
சட்டங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்றே
நாங்கள் விரும்புகிறோம். சட்டங்களில் சில தவறுகள் இருந்தால், திருத்தங்களை
மேற்கொள்ளலாம். ஆனால் அனைத்து சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானவையாகவே
இருக்கின்றன. அதனால்தான் இங்கே வெறுமனே ஒப்பனை மாற்றங்கள் எந்த நோக்கத்திற்கும்
பயன்படாது என்று விவசாயிகள் கூறி வருகின்றோம்.
லிஜ்
மேத்யூ: நாட்டின் பிற பகுதிகளிலிருந்து இன்னும் அதிகமான விவசாயிகளை உங்கள்
போராட்டம் ஈர்க்குமா?
இதை பஞ்சாப் போராட்டம் என்று சித்தரிக்க அரசாங்கத்திடம்
திட்டமிட்ட முயற்சி உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, அவர்களுக்கு ஊடகங்களும் உதவுகின்றன.
ஆகஸ்ட் 9 அன்று, இந்த சட்டங்களுக்கு எதிராக ‘சிறை நிரப்பும்’ போராட்டம் இருந்தது.
25 மாநிலங்களில் 600 மாவட்டங்களில் இருந்து ஏறக்குறைய ஒரு கோடி விவசாயிகள்
வீதிகளில் இறங்கிப் போராடினர். ஹரியானா, பஞ்சாபிலிருந்து மட்டுமே விவசாயிகள் அப்போது
எதிர்ப்பு தெரிவித்தார்களா? இந்தப் போராட்டத்தில் பஞ்சாப் நிச்சயமாக முன்னணியில்
உள்ளது. ஆனால் பஞ்சாப் போராட்டம் இந்திய அளவிலான போராட்டத்தின் ஒரு பகுதியாகவே
இருக்கிறது.
விவசாயிகள் மிகவும் வலிமையானவர்கள், அவர்களிடம் பேரம்
பேசும் ஆற்றல் உள்ளது என்ற தவறான கருத்து இங்கே உள்ளது… அரசாங்கம் தவறான கருத்துக்களைக்
கொண்டு சட்டங்களை உருவாக்கியிருக்கிறது… விவசாயிகளுக்குத் தேவைப்படுகிற ஒழுங்குமுறை
பாதுகாப்பு, புதிதாக நிறைவேற்றப்பட்டிருக்கும் சட்டங்களில் காணவில்லை. இங்கே சுமார்
86 சதவீத விவசாயிகள் சிறு விவசாயிகள். இரண்டு ஏக்கருக்கும் குறைவாக நிலம்
வைத்திருப்பவர்கள். அதானிக்கள், அம்பானிகளின் தாக்குதலில் இருந்து இந்த ஆதரவற்ற
மக்களால் எவ்வாறு தப்பிக்க முடியும்?
விவசாயிகள் உற்பத்தியாளர்கள் மட்டுமே. நாங்கள் தொடர்ந்து
உற்பத்தியாளர்களாக இருப்பதற்கு எங்களுக்கு உதவுங்கள். வர்த்தகர்களாக மாறுமாறு
எங்களைக் கட்டாயப்படுத்த வேண்டாம்… தொற்றுநோய்க்குப் பிறகு, விவசாயத்தைத் தவிர
அனைத்து உற்பத்தித் துறைகளும் சரிந்துள்ளன. எந்தவொரு அரசாங்க உதவியோ அல்லது தொகுப்போ
இல்லாமல் விவசாயிகள் உயிர் தப்பியிருக்கின்றனர். நாங்கள் உயிர்வாழ அரசாங்கம் எங்களுக்கு
உதவ வேண்டும். அது எங்களை முற்ரிலுமாக அழித்து விடக் கூடாது.
ஹரிஷ்
தாமோதரன்: விவசாயிகள் சங்கங்கள் ஏன் குறைந்தபட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி)
சட்டப்பூர்வ உரிமையாக இருக்க வேண்டும் என்று கோருகின்றன? கட்டாயமாக குறைந்தபட்ச
ஆதார விலை வழங்க வேண்டும் என்றால், தனியார் வர்த்தகர்கள் வர்த்தகம் செய்ய மாட்டார்கள்.
அது விவசாயிகளுக்கு எவ்வாறு பயனளிப்பதாக இருக்கும்?
எல்லாமே ஏன் விவசாயிகளுக்கான இழப்பாக இருக்க வேண்டும்?
உங்களால் எதுவுமே இல்லாமல் உயிர் வாழ முடியும், ஆனால் உணவு இல்லையென்றால், நீங்கள்
நிச்சயம் இறந்து போவீர்கள். உணவை நாம் வேறு எந்த பொருளுடனாவது ஒப்பிட முடியுமா? நஷ்டத்தை மட்டுமே தருகின்ற முயற்சியாக விவசாயம் இப்போது
மாறிவிட்டது என்றாலும், அதையும் மீறி விவசாயிகளால் அதை விட்டுவிட முடியாது. ஏனெனில்
அது அவர்களின் வாழ்க்கை முறையாக உள்ளது. வர்த்தகர்களாக மாறும்படி எங்களை ஏன் கட்டாயப்படுத்துகிறீர்கள்?
நாங்கள் உறப்த்தி செய்பவர்களாக மட்டுமே இருப்போம்.
நான்கு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
பெருநிறுவனங்களிடமிருந்து உதவி பெறும் அறிவுஜீவிகளோ அல்லது பத்திரிகையாளர்களோ ஏன்
அதைப் பற்றி எதுவும் குறிப்பிடுவதில்லை?… எங்களுக்கு சில உத்தரவாதங்களும் பாதுகாப்பும்
தேவைப்படுகின்றன. பலவீனமாக இருப்பவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு
உள்ளது. இப்போதுஇந்தியாவில்
இருக்கின்ற அரசு, மக்கள்நல அரசாக இருக்கவில்லை. அது புதிய தாராளவாத அரசாக மாறி
வருகிறது. மக்கள் நலன்கள் படிப்படியாகப் புறக்கணிக்கப்படுகின்றன. ஆனால் மக்கள்நல
நடவடிக்கைகளையே நாங்கள் கோருகிறோம். மக்கள்நல நடவடிக்கைகள் இல்லாமல், எங்களால் உயிர்
வாழ முடியாது.
இதுவரையிலும் எத்தனை தொழிலதிபர்கள் அல்லது வர்த்தகர்கள்
தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் தற்கொலை செய்து கொண்டால், அதற்கான
காரணம் என்ன? பொருளாதாரத்தை மோசமாகக் கையாள்வதின் விளைவாகவே அது இருக்கும். ஆனால்
விவசாயிகளோ தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இல்லாத இயற்கைப் பேரழிவுகளாலேயே தோற்றுப்
போகிறார்கள். எந்தவொரு இழப்பீடும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. ஒரு தேசமாக,
நமக்கான உணவை வழங்கி வருகின்ற அன்ன தாதாக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை இந்திய
மக்களுக்கு இருக்கிறது.
ஆனந்த்
கோயங்கா: இன்று விவசாயத் தொழிலில் நீடித்திருப்பது மிகவும் கடினம். தன்னுடைய
நிலத்தை விற்று விட்டு, பெருநிறுவனம் ஒன்றில் வேலை செய்யத் திட்டமிட்டுள்ள
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த 22 வயதான ஒருவருக்கு உங்களுடைய ஆலோசனை என்னவாக
இருக்கும்?
தங்களுடைய தந்தையும், தாத்தாக்களும்
பாதிக்கப்பட்டிருப்பதால் விவசாயிகளுடைய மகன்கள் அல்லது மகள்கள் விவசாயத்தில் ஈடுபட
விரும்புவதில்லை. விவசாயம் என்பது நஷ்டத்தை மட்டுமே ஈட்டுகின்ற முயற்சியாக மாறி
வருகிறது. அவ்வாறான சூழ்நிலையில், அரசாங்கத்தின் கடமை என்னவாக இருக்க வேண்டும்?
லாபம் அனைத்தும் அதானி மற்றும் அம்பானிக்கு மட்டுமே என்றால், கோடிக்கணக்கான
விவசாயிகளுக்கு லாபம் என்ற ஒன்று கிடைக்கவே வேண்டாமா? அரசாங்கம் இந்த நிலைமையைச்
சீர்படுத்த முயன்றால், இளைஞர்களில் ஒரு
பகுதியினர் நிச்சயம் விவசாயத்தில் இருப்பார்கள். விவசாயிகளுக்கு எந்தவொரு உதவியையும்
அரசாங்கம் செய்யவில்லை. ஒப்பந்த விவசாயத்தில் மட்டுமே அவர்கள் ஆர்வம் காட்டி
வருகிறார்கள். நடைமுறையில் ஒப்பந்த விவசாயம் நாடு முழுவதும் இருந்து வருகின்ற நிலையில்,
குறைந்தபட்சம் அதன் மீது சில கட்டுப்பாடுகளாவது இருக்கின்றன. ஆனால் இப்போது இந்த
புதிய சட்டங்களின் காரணமாக ஒப்பந்த விவசாயம் முற்றிலும் கட்டுப்பாடுகளின்றி
சுதந்திரமாக விடப்படுகிறது. வலுவானவர்கள் நிச்சயம் விவசாயிகள் மீது ஆதிக்கம்
செலுத்துவார்கள். பயிர்களை வாங்கி, கடன்கள் மற்றும் விவசாயத்திற்குத் தேவையான
உள்ளீடுகளைக் கொடுக்கின்ற பணக்காரர்கள், படிப்படியாக விவசாயிகளின் நிலத்தின் மீது
தங்களுடைய செல்வாக்கைச் செலுத்துவார்கள் என்று நீங்கள் கருதவில்லையா?
ஆனந்த்
கோயங்கா: சுதந்திரத்திற்குப் பிறகு எந்தக் காலம் இந்திய விவசாயிகளுக்கு மிகச்
சிறந்த காலமாக இருந்திருக்கிறது?
விவசாயிகளுக்குச் சாதகமான சரியான கொள்கைகளை எந்தவொரு
அரசாங்கமும் இதுவரையிலும் செயல்படுத்தியதே இல்லை. விவசாயிகள் ஒரு நாளைக்கு 18 மணி
நேரம் வேலை செய்கிறார்கள். அவர்களின் ஒட்டுமொத்தக் குடும்பமும் இரவு பகலாக,
மழையிலும் குளிரிலும் வேலை செய்கின்றது. ஆனாலும் அவர்களுக்கு எந்தவொரு நன்மையும்
கிடைக்கவில்லை. அரசாங்கம் ஓரளவிற்காவது பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்ற
நிலையில், அவர்கள் விவசாயிகளின் பிரச்சனைகளைக் கேட்பதற்குத் தயாராகவே இல்லை.
மன்ராஜ்
கிரேவல் சர்மா: விவசாயம் நஷ்டத்தை மட்டுமே ஈட்டுகின்ற தொழிலாக மாறி வருகிறது. இந்த
நிலைமையை எவ்வாறு சீர்செய்ய முடியும்?
வாராக்கடன்களை உருவாக்கி, வங்கிகளையும் அரசாங்கத்தையும்
ஏமாற்றி நாட்டை கொள்ளையடிப்பவர்களுக்கு 6 - 7 லட்சம் கோடி ரூபாயை நாம் வழங்கி
வருகிறோம். விவசாயிகள் உயிர்வாழ்வதற்காக நாட்டின் கருவூலத்திலிருந்து ஒரு சிறுபகுதியை
ஏன் வழங்க முடியாது?… துரதிர்ஷ்டவசமாக, பெரும்பான்மையான விவசாயிகள் ஏழைகளாக
இருப்பதால், யாரும் அவர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஒரு காலகட்டத்தில், நடுத்தர
வர்க்கம் இந்த ஏழைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது. ஆனால் இப்போது புதிய தாராளமயக்
கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, ஒரு சிலருக்கு மட்டுமே மிகச் சிறந்த
வாழ்க்கையை நாம் தேடுபவர்களாகி இருக்கிறோம். அதன் மூலமாக மிகச் சாதாரண பொது
மக்களின் வாழ்க்கையை அழித்து வருகிறோம்.
மன்ராஜ்
கிரேவல் ஷர்மா: பஞ்சாபில், விவசாயிகள் விற்பனை செய்கின்ற எந்தவொரு விளைபொருளுக்கும்
2.5 சதவீத கமிஷன் பெற்று வருகின்ற ஆர்தியாக்கள் எனப்படுகின்ற கமிஷன் ஏஜெண்டுகளின்
மீதே விவசாயிகளின் முக்கிய புகார் இருந்து வருகிறது… புதிய சட்டங்கள் அதை மாற்றுவது
என்ற முன்மொழிவை வைக்கின்றன. அப்படியிருக்கும் போது இந்த புதிய சட்டங்கள்
விவசாயிகளுக்கு உதவும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?
ஏழைகளை நிரந்தரமாக படிப்பறிவற்றவர்களாக வைத்து, அவர்களைச்
சுரண்ட நாம் முயற்சிக்கிறோம். அவர்களுடைய உணர்வுநிலையை உயர்த்துவதில் நமக்கு
அக்கறை இருக்கவில்லை. விவசாயிகள் தங்களுடைய உரிமைகளை அறிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் தங்கள் உரிமைகளைக் கோரும்போது, அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.
ஒருமித்த கருத்து என்ற மிகவும் சாதகமான சொல் குறித்து அரசாங்கம் பேசி வருகிறது.
ஆனால் ஒருமித்த கருத்து என்பது என்ன? இந்த ஒருமித்த கருத்து என்பது ஜனநாயகரீதியாக
ஒருமித்ததா அல்லது பாசிச அடிப்படையில் ஒருமித்ததா? ஜனநாயகரீதியிலான ஒருமித்த
கருத்து என்பது அனைவருக்கும் செவிசாய்ப்பது. ஒவ்வொருவரின் கவலைகள், கருத்துகளைக்
கேட்டு, அவற்றை இணைத்து பின் ஒரு முடிவுக்கு வருவது. ‘நான் சொல்கிறேன் நீங்கள்
ஒப்புக்கொள்ள வேண்டும்’ என்பதை ஒருமித்த கருத்து என்று சொல்ல முடியாது. அது
பாசிசத்தின் அடிப்படையிலான ஒருமித்த கருத்தாகவே இருக்கும்.
நுஷாய்பா
இக்பால்: புதிய தாராளமயத் திட்டத்தைத் தொடரும் போது, நீங்கள் குறிப்பிட்டவாறு விவசாயிகளுக்கு
சந்தையில் அதிக பேரம் பேசும் ஆற்றலைத் தரும் வகையிலே சீர்திருத்தங்களின் தொகுப்பைச்
செயல்படுத்துவதற்கான வழி நம்மிடம் இருக்கிறதா?
விவசாயிகளிடம் சென்று, அவர்களுடன் கலந்தாலோசித்து,
அவர்களுடைய பிரச்சனைகளைக் கேட்க வேண்டும். அரசாங்கத்தின் பங்கேற்பு, சில
பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கொண்டு அந்தப் பிரச்சனைகளை எவ்வாறு தீர்க்கலாம்
என்பதைக் கண்டறிய வேண்டும். சீர்திருத்தம் என்றாலே அனைத்து சுமைகளும்
விவசாயிகளுக்கு, எல்லா நன்மைகளும் வணிகர்களுக்கு என்று அர்த்தமல்ல.
ஹரிகிஷன்
ஷர்மா: அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் உங்கள் எதிர்பார்ப்பு என்ன?
அரசாங்கத்தின் அணுகுமுறை சாதகமாக இல்லாததால், நாங்கள்
அதிகம் எதிர்பார்க்கவில்லை. பேச்சு வார்த்தைக் கூட்டங்களில் கூட நான் ‘இவை மிகவும்
நல்ல சட்டங்கள், மிகவும் நன்மை பயக்கும் என்று பிரதமர் ஏற்கனவே கூறியிருக்கிறார்.
அதற்குப் பிறகு உங்களால் என்ன செய்ய முடியும்? உங்களுக்கு அதிகாரம் இல்லை’ என்று அமைச்சரிடம்
கூறினேன். அவர்கள் நேரத்தை வீண் மட்டுமே செய்து வருகிறார்கள். லட்சக்கணக்கான
மக்கள் குளிரில் அமர்ந்திருக்கிறார்கள். மூன்று பேர் இறந்துள்ளனர்… பிரச்சனையை
உடனடியாகத் தீர்ப்பதற்கான மனிதாபிமான மனப்பான்மையைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக,
விவசாயிகளைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கம் பேசிக் கொண்டே, நேரத்தை
வீணடித்து வருகிறது.
சந்தீப்
சிங்: சிறு வணிகர்கள் இதற்கு முன்னால் விவசாயிகளை எவ்வாறு கொள்ளையடித்தார்கள்
என்பதை நீங்கள் குறிப்பிட்டீர்கள். இப்போது அதையே ஒரு சில பெருநிறுவனங்கள் செய்யப்
போகின்றன. இதில் விவசாயி எங்கே நிற்கிறார்? ஏனென்றால் முந்தைய நிலைமை உங்களால் மீட்டெடுக்கப்பட்டாலும்,
விவசாயிகள் இழப்புகளைத்தானே சந்திப்பார்கள்…
விவசாயிகளைப் பாதுகாக்கவும், சிறு வணிகர்களுக்கும்
விவசாயிகளுக்கும் இடையில் ஒத்திசைவான உறவை ஏற்படுத்தவும் நேர்மையான அரசாங்கத்தால் நடவடிக்கைகளை
மேற்கொள்ள முடியும்… நாட்டில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் தற்போதைய நிலைமையை
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களால் அதைப் புறக்கணிக்க முடியாது. இவ்வாறான
சூழலில் சிங்கப்பூரின் வழிகளை உங்களால் பின்பற்ற முடியாது. இந்தியா சிங்கப்பூர்
அல்ல. இந்திய யதார்த்தங்களை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளையே நீங்கள் கருத்தில்
கொள்ள வேண்டும்… விவசாயிகளுக்கும் வணிகர்களுக்கும் இடையில் இணக்கமான உறவை
உறுதிப்படுத்துகின்ற சீர்திருத்தங்கள் நமக்குத் தேவை. அதைப் பற்றி அரசாங்கம்
சிந்திக்க வேண்டும். விவசாயிகளை மனதில் வைத்து உங்கள் கொள்கைகளை உருவாக்கினால்,
அது நிச்சயம் நம்பகமான கொள்கையாக இருக்கும். ஆனால் விவசாய உற்பத்தி, வர்த்தகம்,
ஏற்றுமதி ஆகியவற்றைப் பற்றி மட்டுமே நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், உங்களுடைய
கொள்கைகள் வேறு திசையிலேயே இருக்கும். உற்பத்தி, நன்மை, ஏற்றுமதி, இறக்குமதி
போன்றவற்றை மனதில் வைத்தே அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் வகுக்கப்பட்ட அனைத்து
கொள்கைகளும் வந்திருக்கின்றன. கொள்கைகளின் மையத்தில் விவசாயிகளை வைத்திருக்க வேண்டும்,
சிறு பகுதியினருக்கு நன்மை செய்வதற்காக விவசாயிகள் மீது நடத்தப்படுகின்ற
பொருளாதாரச் சுரண்டலை நிறுத்த வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையாக உள்ளது.
ஆத்ரி
மித்ரா: மேற்கு வங்கத்தில் விவசாயிகளிடையே வலுவான அமைப்பை இடதுசாரிகள் கொண்டிருந்தனர்.
ஆனால் அந்த மாநிலத்தில் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த போராட்டம்
ஏன் எழவில்லை? அங்கிருப்பவர்கள் புதிய சட்டங்கள் தங்களுக்கு நன்மை பயக்கும் என்று நம்புவதாலா?
மேற்கு வங்கத்தில் விவசாயிகள் ஒன்றும் நல்ல நிலையில்
இல்லை. இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், 219 விவசாயிகள் அங்கே தற்கொலை
செய்து கொண்டிருக்கின்றனர்… நாங்கள் போராட்டங்களை நடத்தி விவசாயிகளை
அணிதிரட்டுகிறோம். ஒரு இயக்கத்தில் ஏற்ற தாழ்வுகள் நிச்சயம் இருக்கும்… நாட்டின்
பிற பகுதிகளைப் போலவே மேற்குவங்க விவசாயிகளுக்கும் நிலப் பிரச்சனைகள், உற்பத்திச்
செலவு, உள்ளீட்டுச் செலவு என்று ஏராளமான பிரச்சனைகள் உள்ளன.
ஆரம்பத்தில் சில சிக்கல்கள் இருந்தன… விவசாயிகள் என்பதை
மறந்து, திடீரென்று ஹிந்து, முஸ்லீம்களாக மக்கள் மாறியிருக்கிறார்கள். நீங்கள்
ஹிந்து அல்லது முஸ்லீமாக இருக்கலாம் என்றாலும், முதலில் ஒரு விவசாயி என்று அவர்களிடம்
சொன்னோம்… ஹிந்து அல்லது முஸ்லீமாக மாறும் போது, வகுப்புவாத சக்திகளின் கைகளில்
நீங்கள் கருவியாக மாறுகிறீர்கள் என்றோம். ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், வங்க விவசாயிகள் தவறாக வழிநடத்தப்பட்டு
வகுப்புவாதத்தால் பாதிக்கப்பட்டனர். அது நாட்டின் பிற பகுதிகளிலும் ஆதிக்கம்
செலுத்தி வருகிறது. ஆனால் இப்போது விஷயங்களை மெல்ல உணர்ந்து மீண்டும் அவர்கள்
போராட்டத்திற்கு வருகிறார்கள். போராட வேண்டுமானால், நாம் ஒற்றுமையாகப் போராட
வேண்டும் என்பதை வங்க விவசாயிகளும் உணர்ந்துள்ளனர். அவர்களுக்கு வேறு வழி எதுவுமில்லை.
மனோஜ்
சி ஜி: விவசாய சங்கங்கள் பெரும்பாலும் இடதுசாரிகளுடன் இணைந்தவை. அரசியல்
ஆதாயத்திற்காக இந்த போராட்டங்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்வதாக உங்களுடைய
விமர்சகர்கள் கூறுகிறார்கள்…
விவசாயிகளுடைய போராட்டங்களை எப்போதுமே தேர்தல்
போர்களுடன் ஒப்பிட முடியாது. தேர்தலுக்கென்று
வெவ்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன… இப்போது தேர்தல்களில் பணத்தின் ஆற்றல் முக்கிய பிரச்சனையாக
மாறியுள்ளது. பீகார் தேர்தல்களின் போது அரசாங்கத்திற்கு (பாஜக-ஜே.டி-யு அரசு)
எதிராக விவசாயிகள் வாக்களித்ததை நாம் கண்டோம்.
ஹரிஷ்
தாமோதரன்: இடதுசாரிகளின் தொழிற்சங்க அரசியல் தோல்வியுற்றிருக்கும் போது, அதன் விவசாயிகள்
அரசியல் வெற்றி அடைவதாகத் தெரிகிறது.
அவ்வாறு ஒப்பிட முடியாது. இதற்கு முன்னரும் விவசாயிகள்
அவதிப்பட்டு வந்தனர் என்றாலும் புதிய தாராளமயக் கொள்கைகளுக்குப் பிறகு, அவர்களுடைய
பிரச்சனைகள் நெருக்கடியின் வடிவத்தை எடுத்தன. இப்போது விவசாய நெருக்கடி உள்ளது. அவர்கள் பிரச்சனையை நாங்கள் எடுத்துக்
கொள்ள முயற்சிக்கிறோம், விவசாயிகளும் முன் வருகிறார்கள். உலகம் முழுவதும்
தொழிற்சங்க இயக்கங்கள் எவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன… புதிய தாராளமயக் கொள்கைகள்
எவ்வாறு தொழிலாளர்களின் உரிமைகளை அழித்திருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். அவ்வாறான
கொள்கைகள் தொழிற்சங்க இயக்கங்களை அழிக்கவே முயற்சிக்கின்றன. அது நமது நாட்டிலும் செயல்படுத்தப்படுகிறது.
70 ஆண்டுகளாக, தொழிலாளர்கள் போராடியதால் தொழிலாளர்
நலனுக்கான பல சட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால் பெருநிறுவனங்களின் நலனுக்காக
அதுபோன்ற 44 தொழிலாளர் நலச் சட்டங்கள் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளன… ஏழைகள்,
தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளைத் தாக்குவதில் அரசு அதிகாரம் நேரடியாக
ஈடுபட்டுள்ளது. இந்த இரண்டும் உற்பத்தி வர்க்கமாக இருக்கும் போது, மற்றவர்கள்
நுகர்வு வர்க்கமாக இருந்து வருகின்றனர்… ஏழைகள் துயரத்திற்குள்ளாகி இருக்கின்ற
போதிலும், அவர்கள் மீதான அனுதாபம் குறைந்து கொண்டே வருகிறது… கடைசி முயற்சியாக
நாங்கள் நீதித்துறையிடம் செல்கிறோம். கடந்த 5-10 ஆண்டுகளில், புதிய தாராளமயக்
கொள்கைகள், சுரண்டப்பட்ட மக்கள், ஏழைகள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு ஆதரவாக
வழங்கப்படுகின்ற தீர்ப்புகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதை உங்களால் காண
முடியும். புதிய தாராளமயக் கொள்கைகளுக்கு ஆதரவாக மனமாற்றம் செய்யப்படுகிறது. வளமான
வாழ்வு உடையவர்களின் மனதில் பெருநிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆனாலும்
தொழிலாளர்கள் இன்னும் போராடியே வருகிறார்கள். கடந்த வேலைநிறுத்தத்தில் இந்தியா
முழுவதிலும் இருந்து 26 கோடி தொழிலாளர்கள் பங்கேற்றனர். தாக்குதல்கள்
இருக்கும்போது, எதிர்வினையும்
உருவாகவே செய்யும். தொழிலாளர்கள் மிகவும் கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர்.
அரசு அதிகாரம், தேசிய அதிகாரம், ஊடகங்கள், அறிவுஜீவிகள் என்று அனைவருமே இந்த
உழைக்கும் மக்களுக்கு எதிரான அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். உயிர்
வாழ்வதற்காக அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக அவர்கள் போராடி வருகிறார்கள்.
மோனோஜித்
மஜும்தார்: ஆனால் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளும், உத்தரப்பிரதேசம் மற்றும்
பீகாரில் சோசலிஸ்ட் கட்சிகளும் ஏற்படுத்திய காலி அரசியல் இடத்தில்தான் நீங்கள்
பேசுகின்ற புதிய தாராளமயக் கொள்கைகளுக்கான இடம் உருவாகியுள்ளது…
முன்னதாக இடதுசாரி மற்றும் சோசலிசக் கட்சிகளுக்கு
வாய்ப்புகள் கிடைத்தபோது, அவர்களால் அவற்றை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள
முடியவில்லை. அவர்களுக்கென்று பலவீனங்கள் இருந்தன. தாங்கள் அடைந்ததை பலப்படுத்திக் கொண்டு, அதை மேலும்
எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். தவறுகளும் பலவீனங்களும்
காணப்பட்டன. நமது
பலவீனங்களைச் சரிசெய்து கொள்ள வேண்டும், இன்னும் நடைமுறைகளுக்கேற்றவாறு,
புறநிலைகளுக்கேற்றவாறு இருக்க வேண்டும் என்ற பார்வை நம்மிடையே இருக்கின்ற
புரிதலில் தேவைப்படுகிறது என்பதை நாங்கள் இப்போது புரிந்து கொண்டிருக்கிறோம். இடது
மற்றும் முற்போக்கு வட்டங்களில் அதுபோன்ற சிந்தனையே இப்போது வலுத்து வருகிறது.
நிருபமா
சுப்பிரமணியன்: விவசாயிகளின் போராட்டம் பெற்றிருக்கும் சர்வதேச அளவிலான கவனம்
உண்மையில் போராட்டத்தைப் பாதித்துள்ளதா? நாட்டின் பாதுகாப்பு குறித்த கேள்வியாக
அது மாறியுள்ளது. மக்கள் காலிஸ்தானியர்களைப் பற்றிப் பேசுகிறார்கள்…
நாட்டின் பாதுகாப்பு… அது அரசாங்கத்திடம் எப்போதும் தயாராக
இருக்கின்ற மருந்தாகவே உள்ளது. விவசாயிகள் தில்லிக்கு வரத் தொடங்கியபோது, அவர்களுக்கு
எதிரான போரை அரசாங்கம் அறிவித்தது. முதலில் ஹரியானாவைச் சுற்றி வளைத்த அவர்கள்
எல்லைகளை சீல் வைக்கிறோம் என்று சொன்னார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு, எந்தவொரு
மாநிலமாவது மற்ற மாநிலங்களுடனான தன்னுடைய எல்லைகளுக்கு சீல் வைப்பதை நீங்கள்
பார்த்திருக்கிறீர்களா? காலிஸ்தான் பிரச்சனையின் போது கூட, பஞ்சாப் எல்லைக்கு சீல்
வைக்கப்படவில்லை. எல்லையை சீல் வைத்த அரசாங்கம், இந்த குளிர் காலத்தில் விவசாயிகளை
தண்ணீர் பீரங்கிகளைக் கொண்டு தாக்கியது… எங்கள் பிரச்சனையை யாரும் புரிந்து
கொள்ளவே இல்லை. எல்லோரும் எங்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள். ஆனால் எங்கள் பேச்சை
கேட்க ஒருவரும் தயாராக இல்லை. ஆனாலும் போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு எந்த
வழியுமில்லை.
பார்த்தசாரதி
பிஸ்வாஸ்: மகாராஷ்டிராவில் உள்ள ஷேத்காரி சங்கடனா தற்போதைய போராட்டத்தை
ஆதரிக்கவில்லை. ஏபிஎம்சிகளை ஒழுங்குபடுத்துவதை அவர்கள் வரவேற்றிருக்கின்றனர்.
சந்தை வரி ரத்து செய்யப்பட்ட பின்னர், சந்தைக்கு வெளியே நடந்து வருகின்ற வர்த்தகத்தில்
வேளாண் பொருட்களுக்கான பல நிறுவனங்கள் கணிசமாகப் பணம் சம்பாதித்து வருகின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போராட்டங்களைப் போல அல்லாமல், இப்போது
நடந்துகொண்டிருக்கும் போராட்டத்திற்கு மகாராஷ்டிராவில் அடிப்படையான ஆதரவுகூட
இல்லை. இந்த போராட்டம் ஏன் நாட்டின் வடக்கு பகுதிகளோடு நின்றிருக்கிறது?
முன்பு போல இல்லாமல், விவசாயிகள் இப்போது நேரடியாகப்
பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நலன்கள் பாதிக்கப்பட்டு ஆபத்தில் உள்ளன. மிகவும்
குளிராக இருந்தபோதிலும், இந்த விதைப்பு பருவத்தின் தொடக்கத்தில், அனைத்தையும்
உதறித் தள்ளி விட்டு அவர்கள் ஏன் போராடுகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? எங்களை
அழிப்பதற்கு அரசாங்கம் இந்த தொற்றுநோயைப் பயன்படுத்திக் கொள்கிறது. விவசாயிகளுக்கான
ஆதரவு மகாராஷ்டிராவிலும் உள்ளது. இந்த புதிய சட்டங்கள் நாடு முழுவதும் உள்ள
விவசாயிகளை அழிக்கப் போகின்றன. இது விவசாயிகளுக்குக் கிடைத்திருக்கின்ற மரணதண்டனை.
இன்றைக்கு ஒரு பிரிவினர் தாக்கப்படுகிறார்கள். நாளை மற்றவர்களும் அதை
எதிர்கொள்வார்கள். படிப்படியாக, நாடு முழுவதும் போராட்டம் பரவி வருகிறது. இந்த
சட்டங்கள் பஞ்சாப், ஹரியானா அல்லது மகாராஷ்டிராவுக்கானவை மட்டுமல்ல. இவை
இந்தியாவிற்கானவை. இதனை பஞ்சாப் போராட்டம் என்று காட்டுவதற்கு அரசாங்கமும்,
ஊடகங்களும் எந்த அளவிற்கு முயன்றன என்பதை நான் குறிப்பிட்டேன், ஆனால் அது அவர்கள்
சொல்வதைப் போல இருக்கவில்லை. போராட்டம் நாடு முழுவதும் நடைபெறுகிறது. அதன் அளவு
மட்டுமே வேறுபட்டிருக்கிறது.
சுபாஜித்
ராய்: கடந்த காலங்களில் விவசாயிகளின் பிரச்சனைகளை உள்வாங்கிக் கொண்ட சில
தலைவர்களைப் பற்றி உங்களால் சொல்ல முடியுமா?
மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான பெனாய்
கிஷ்னா கோனார் அவ்வாறு இருந்தார். தெலுங்கானாவில் விவசாயிகள் கிளர்ச்சியை
வழிநடத்திய சுந்தரய்யா இருந்தார். மகாராஷ்டிராவில், கோதாவரி பருலேக்கர் விவசாயிகள்
மற்றும் பழங்குடி சமூகங்களின் பிரச்சனைகளை எடுத்துப் போராடினார்… கடந்த காலத்தில்
நாட்டில் எந்தவொரு அரசாங்கமும் விவசாயிகளுக்கு ஆதரவான கொள்கைகளை முழுமையாக
வகுத்திருக்கவில்லை. ஒப்புக்கு சிறிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சில நன்மைகள் அங்கும்
இங்கும் உள்ளன… ஆனால் ஒருபோதும் விவசாயிகள் விவசாயக் கொள்கைகளின் மையத்தில் இருந்ததே
இல்லை. அதுதான் எங்களுடைய புகார்.
மோனோஜித்
மஜும்தார்: இத்தனை ஆண்டுகளில், எந்த விவசாய அமைச்சரை அணுகுவதற்கும்,
தொடர்புகொள்வதற்கும் மிகவும் எளிமையானவராக நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்?
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவார்
விவசாயிகளின் பிரச்சனைகளின் மீது கொஞ்சம் அனுதாபம் கொண்டிருந்தார். எங்கள்
பிரச்சனைகளுடன் நாங்கள் அவரிடம் சென்றபோது, அவர் எங்களுக்குச் செவிமடுத்தார்... அதனால் சில சிறிய
மாற்றங்கள் நடந்துள்ளன என்றாலும், எங்கள் கோரிக்கை ஒட்டுமொத்த கொள்கைக்கானதாகவே
இருக்கிறது.
https://indianexpress.com/article/india/hannan-mollah-idea-exchange-farmer-protests-farm-laws-7094428/
Comments