மோடி அரசின் ஆயுர்வேத 'அறுவைச்சிகிச்சை' குறித்த உத்தரவு நோய்வாய்ப்பட்ட இந்தியர்களைக் கொடூரமாக வெட்டுவதாகவே இருக்கிறது

 வாசுதேவன் முகுந்த்

தி வயர் இணைய இதழ்



கோவிட்-19 தொற்றுநோய்களின் போது ஆயுஷ் அமைச்சகம் ஒரு தொல்லையாகவே இருந்து வந்தது. சொல்லப் போனால் அது எப்போதுமே தொல்லையாகவே இருந்து வருகிறது. தொற்றுநோய் காலத்தில், எந்தவொரு அமைச்சகமும் கவனமாக களத்தில் இறங்கி மக்களிடமிருந்த பீதியை அகற்றி, நோயுற்றவர்களையும், நிச்சயமற்ற தன்மையால் குழப்பத்தில் இருந்தவர்களையும் வழிநடத்தியிருக்க முடியும் என்றாலும், ஆயுஷ் அமைச்சகம் அதற்கு நேர்மாறாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. உண்மையாகச் சொல்வதென்றால், இந்த நேரத்தில் அந்த அமைச்சகத்தின் முடிவுகள் அனைத்தும் மருத்துவத்தை கடைப்பிடிப்பதற்கான நிறுவப்பட்டுள்ள விதிகளிலிருந்து முற்றிலும் விலகியே இருக்கின்றன. சரியானவற்றை எதிர்த்துச் செயல்படுவது மட்டுமே அமைச்சகத்தின் ஒரே திட்டம் என்று ஆச்சரியப்படுவது நியாயமாகவே இருக்கும்.

முதலாவதாக, ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்பட்ட சோதிக்கப்படாத பொருட்களை உட்கொள்வதற்கான தவறான ஆலோசனை ஆயுஷ் அமைச்சகத்தால் வழங்கப்பட்டது. பண்டைய இந்தியர்கள் எல்லாவற்றையும் அறிந்திருந்தனர் என்பதாகவே அனுமானித்து வருகின்ற அந்த அமைச்சகம், முழுமையாகப் புரிந்திராத நோயை நம்மால் குணப்படுத்த முடியும் என்று 2020 நவம்பரிலும்கூட கூறியது. ஆயுர்வேத மருத்துவத்தைப் பயன்படுத்தி இளவரசர் சார்லஸ் கோவிட்-19இலிருந்து மீண்டுவிட்டார் என்ற சந்தேகத்திற்குரிய செய்திகள் வெளியாகின. புதிய கொரோனா வைரஸிடமிருந்து தப்பிக்க மூலிகை மருந்துகளைப் பயன்படுத்துவது குறித்து அமைச்சகத்தின் பரிந்துரைகளும் வெளியிடப்பட்டன. ஆனாலும் ஆயுஷ் அமைச்சருக்கு கோவிட்-19 வந்த போது, அவர் அலோபதி வழியில் சிகிச்சை பெறுவதையே தேர்வு செய்து கொண்டார்.



இதுபோன்ற நடவடிக்கைகள் ‘வீட்டு வைத்தியங்களுக்குச் சட்டபூர்வமான தன்மையைக் கொடுத்தன. கோவிட் -19 தொற்றுநோய் குறித்த குழப்பத்தை அவை மேலும் அதிகரித்தன. அதுமட்டுமல்லாது களத்தில் முன்னணியில் நின்று போராடிய தொழிலாளர்களின் வேலைகளையும் கடினமாக்கின’ என்று இந்தியா ஸ்பெண்ட் பத்திரிகைக்காக எழுதிய அனு பூயன் தெரிவித்தார்.  

இவ்வாறான தவறான செய்கைகளின் சமீபத்திய தாக்குதல் நவம்பர் 20 அன்று மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் வருகின்ற சட்டப்பூர்வமான அமைப்பான இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் (சிசிஐஎம்) சில ஆயுர்வேதப் படிப்புகளைப் பயில்கின்ற முதுநிலை மாணவர்கள் பல்வேறு அறுவைகள், நீர் வெளியேற்றம், நீக்கம் உள்ளிட்ட 58 அறுவைச்சிகிச்சை முறைகளை (முழு பட்டியல் இங்கே: https://www.ccimindia.org/latestupdate/223208-website.pdf) மேற்கொள்வதற்கான முறையான அங்கீகாரத்தை அளித்து அரசிதழில் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. 



அந்த அறிவிப்பு 2016ஆம் ஆண்டு இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் (முதுநிலை ஆயுர்வேதக் கல்வி) விதிமுறைகளைத் திருத்துவதாக இருந்தது. அந்த திருத்தத்தில், ‘தங்களுடைய படிப்பின் போது, ஷால்யா, ஷாலக்யா போன்றவற்றைப் பயில்கின்ற முதுநிலை மாணவர்கள் மேற்குறிப்பிட்ட அறுவைச்சிகிச்சை முறைகளில் விஷய ஞானத்தைப் பெறுவதற்கும், அவற்றை சுயாதீனமாகச் செய்வதற்கும் நடைமுறையில் பயிற்சி அளிக்கப்படுவார்கள். அதன் மூலம் முதுநிலைப் பட்டம் பெற்றதும், மேற்சொன்ன நடைமுறைகளை அவர்களால் சுயாதீனமாக மேற்கொள்ள முடியும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பல்வேறு அறுவைச் சிகிச்சை மற்றும் இணை அறுவை சிகிச்சை முறைகளை ‘ஷால்யா தந்திரத் துறை’ கையாண்டு வருவதாக தேசிய ஆயுர்வேத நிறுவனத்தின் இணையதளம் கூறுகிறது. ‘ஷாலக்யா தந்திரம்’ என்பது ஆயுர்வேதத்தில் உள்ள ஒரு பிரிவைக் குறிக்கிறது. கழுத்துப்பட்டை எலும்பிற்கு மேல் இருக்கின்ற காதுகள், மூக்கு, தொண்டை, கண்கள், பற்கள், தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நோய்களை அது குறிக்கிறது. அந்த தேசிய நிறுவனத்தில் பொது அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், அறுவைச்சிகிச்சைக்கான மாதிரிகள், கற்பித்தலுக்கான பொருட்கள் மற்றும் மாதிரிகள், ப்ரொஜெக்டர்கள், ஏறத்தாழ 1,000 புத்தகங்களைக் கொண்ட நூலகம் ஆகியவை இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தவறான நம்பகத்தன்மை

இதில் சிக்கல் தொழில்நுட்பம் குறித்ததாக இல்லை. இந்த சூழலில் நோய்வாய்ப்பட்ட ஒருவர்  தேவையான நன்கு சோதிக்கப்பட்ட, நல்ல தரமான மருத்துவ சேவையை நியாயமான, அறம் சார்ந்த முறையில் பெறுவதை உறுதி செய்வதற்கான பொறுப்பைக் குறிப்பதாக இருக்கின்ற ஒழுங்குமுறையிலே சிக்கல் இருக்கின்றது. கடந்த ஆறு ஆண்டுகளாக ஆயுஷ் அமைச்சகம் முன்னிறுத்திக் கொண்டிருக்கும் ஆயுர்வேதம் என்ற முத்திரை இவ்வாறு இருக்கவில்லை என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் சான்றாக உள்ளன. 

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியில் இருந்து வருகின்ற காலத்தில் நம்மிடையே உள்ள ஆயுர்வேதம் போலி அறிவியலால் ஆனது. ஆயுர்வேத மருத்துவர்கள் பல்வேறு வரலாற்று நூல்களில் உள்ள விளக்கங்கள் மற்றும் மருந்து குறிப்புகளையே பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பொதுவான, தரப்படுத்தப்பட்ட நூல்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்பதால், அவர்களின் கூற்றுகளில் இருக்கின்ற உண்மையைச் சரிபார்க்க எந்தவொரு வழியும் இருக்கவில்லை. தங்கள் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளதாக பல மருத்துவர்களும் கூறியுள்ளனர் என்றாலும் அது அர்த்தமற்ற வெற்று அறிக்கையாகவே இருக்கிறது. நான் விரும்பினால் எனது சொந்த பத்திரிகையில், எனது நண்பர்களை மதிப்பாய்வு செய்ய வைத்து என்னுடைய ஆய்வுக் கட்டுரைகளை என்னாலும் வெளியிட்டுக் கொள்ள முடியும். ஆய்வுகள் எங்கே வெளியாகின்றன, எந்த நிபந்தனைகளின் கீழ் அவை வெளியிடப்படுகின்றன என்பதே இங்கே முக்கியம்.

நடைமுறையில் உள்ள கல்வியியல் சூழல் குறித்து பெங்களூரில் உள்ள ஆயுர்வேத மருத்துவரான ஜி.எல்.கிருஷ்ணா தி வயர் சயின்ஸிற்காக இவ்வாறு எழுதியிருக்கிறார்: ‘அது மூடநம்பிக்கைகளை நியாயப்படுத்துகிறது, அறிவியல் மந்தநிலையை ஊக்குவிக்கின்றது. தற்போதைய ஆயுர்வேத பட்டப்படிப்பு பயிற்சியில் காலாவதியான நோய்க்குறியியல் கருத்துக்களே முக்கியமான பகுதியாக இருக்கின்றன. பல்கலைக்கழக அளவில், வயிற்றிலேயே தன் சிவப்பு நிறத்தை ரத்தம் பெறுகிறது. எலும்பு மஜ்ஜையில் விந்து தோன்றுகின்றது என்பது போன்ற பண்டைய மருத்துவ அனுமானங்கள் மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டு வருகின்றன! மிக சமீபத்திய முதுநிலை நுழைவுத் தேர்வுகளில்கூட இத்தகைய ‘உண்மைகள்’ குறித்து எந்தவித சந்தேகமுமின்றி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதுபோன்ற ‘அறிவியலை’ உருவாக்கித் தருகின்ற கட்டுரைகளையே ஆயுர்வேதப் பத்திரிகைகள் வெளியிட்டு வருகின்றன’.

ஆயுர்வேதத்தின் நம்பகத்தன்மையைச் சோதிப்பதற்கான வடிவமைக்கப்படாத முறைகளைப் பயன்படுத்துகின்ற ஆயுர்வேத ஆதரவாளர்கள், நவீன அறிவியல் என்று ஆயுர்வேதத்தின் மீதான நம்பகத்தன்மையை நிலைநாட்ட முயல்வதே இப்போது ஆயுர்வேதம் குறித்த கவலைகளைத் தூண்டுவதற்கான முக்கிய காரணமாக உள்ளது. ஆயுர்வேதம், ஹோமியோபதி போலி மருத்துவர்கள் பெரும்பாலும் தங்களுடைய சிகிச்சை முறைகள் ‘அறிவியல்பூர்வமானவை’ என்றும், அறிவியல் முறைகளையே அவை பின்பற்றி வருகின்றன என்றும் கூறுவதற்கான வாப்பைப் பெற்றிருக்கின்றனர். அறிவைப் பெறுவது, அதனை ஒழுங்கமைப்பது, சரிபார்ப்பது போன்றவற்றிற்கான முறைகள் இந்த மருத்துவ முறைகளில் முற்றிலும் வேறுபட்டவையாக இருப்பதால் அவற்றை அறிவியலால் சரிபார்க்க இயலாது.



எடுத்துக்காட்டாக மருந்துகளைப் பொறுத்தவரை, அசிடைல் சாலிசிலிக் அமிலத்தை (ஆஸ்பிரின்) உட்கொள்வதன் மூலம் பொதுமக்களில் பெரும் பகுதியினரிடம் மிதமான தலைவலியை சகிக்கக் கூடியதாக அது மாற்றி இருக்கும். ஆனால் ஆயுர்வேதம், ஹோமியோபதி ஆகிய இரண்டும் மருந்தை ‘தனிநபருக்கானதாக’வும் - அதாவது ஒவ்வொரு நபரின் தேவைக்கும், வாழ்க்கை முறைக்கும் தக்கவாறு தனிநபருக்கான சிகிச்சைகள் மற்றும் சிகிச்சை முறைகளைத் தயாரிப்பதை - உடனடித் தீர்வு இல்லாமலும் வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. பெரிய அளவிலான மருத்துவப் பரிசோதனைகள் மூலமாக அசிடைல் சாலிசிலிக் அமிலத்தின் செயல்திறனையும், பாதுகாப்பையும் சோதிப்பது எளிதாக இருக்கின்றது. ஆனால் பலவிதமான வாழ்க்கை முறை மாற்றங்கள், பிற மருந்து தயாரிப்புகளுடன் இணைந்து மட்டுமே எந்தவொரு ஆயுர்வேதம், ஹோமியோபதி மருந்தும்  செயல்படும் என்பதால், இதுபோன்ற சோதனைகள் அவற்றைப் பொறுத்தவரை பயனற்றவையாகவே இருக்கும்.



நியூஸ் லாண்டரி இதழில் டாக்டர் ஜம்மி நாகராஜ் ராவ் ‘குறிப்பிட்ட மூலிகை அல்லது தாவரத்திலிருந்து செயல்திறன்மிக்க மூலப்பொருளைப் பிரித்தெடுப்பது, முதலில் செல் மாதிரிகள், பின்னர் விலங்கு மாதிரிகள், இறுதியாக மனிதர்களிடம் நடத்தப்படுகின்ற சோதனைகள் என்று அதன் பண்புகளை ஆய்வு செய்து  பதிவு செய்து கொள்வதற்கான விரிவான செயல்முறை இதுவரையிலும் மேற்கொள்ளப்படவில்லை. அறிவியல்ரீதியான செயல்முறை மிகவும் வெற்றிகரமாகப் பின்பற்றப்படும் போது, அந்த ஆய்வில் கிடைக்கின்ற தீர்வு ஆயுர்வேதத் தயாரிப்பாக நிச்சயம் இருக்காது. அது புதியதொரு வேதிப்பொருளாகவே இருக்கும். அந்த நேரத்தில், அது பாரம்பரிய மருத்துவம் என்ற நிலையிலிருந்து பிரதான மருத்துவம் என்ற நிலைக்கு மாறியிருக்கும்’ என்று குறிப்பிட்டிருப்பதைக் காணும் போது, ஆயுர்வேதமும் அலோபதியும் ஒன்றுக்கொன்று உண்மையில் ஒப்பிட முடியாதவையாகவே இருக்கின்றன.

சரிபார்ப்புக்கான மாற்று முறைகளை உருவாக்குவதற்கான எந்தவொரு முயற்சிகளும் இல்லாமலேயே, அறிவியல் என்ற முத்திரைக்காக அவர்களிடம் எழுந்திருக்கும் தேவைகள், ஆயுர்வேதத்தின் மீதான நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதற்கான குறுக்குவழியை முயற்சிப்பதாக இருப்பதைத் தவிர வேறொன்றாக இருக்கவில்லை. மற்றபடி உண்மையில் அவர்களால் நம்பகத்தன்மையை ஏற்படுத்த முடியாது. இந்திய மருத்துவ சங்கமும் (ஐ.எம்.ஏ) இதை அங்கீகரித்திருக்கிறது. ‘இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும், தங்களுக்குச் சொந்தமான பண்டைய நூல்களிலிருந்து தங்களுக்கான அறுவைச்சிகிச்சை துறைகளை சிசிஐஎம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதுடன், நவீன மருத்துவத்தின் அறுவைச்சிகிச்சை பிரிவுகளை தங்களுடையவை என்று அவர்கள் கூறக்கூடாது’ என்றும் ஐ.எம்.ஏ கூறுவதாக பி.டி.ஐ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.  

உண்மையில், பல்வேறு தீர்வுகளை அடைவதற்கான மருந்துகள், நுட்பங்களுடன் அறுவைச்சிகிச்சை முறைகளும் நன்கு சோதிக்கப்பட்டுள்ளன என்பதால், அலோபதியின் அடிமூலக்கூறுகளுடன் ஆயுர்வேதக் கருத்துக்களை இவ்வாறு ஒட்டுவது பேரழிவையே ஏற்படுத்தும். மேற்குவங்க மருத்துவர்கள் மன்றத்தின் உறுப்பினர் டாக்டர் கௌசிக் சாக்கி தி ஹிந்து பத்திரிகையிடம் பின்வருமாறு கூறியுள்ளார்:  ‘அறுவைச்சிகிச்சைக்கு மயக்க மருந்து, நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்றவை தேவைப்படும். அந்தப் பொருட்கள் ஆயுர்வேதத்தில் இருக்கின்றனவா? தனக்கென்று சொந்த மயக்க மருந்து, நுண்ணுயிர் எதிர்ப்பிகளை ஆயுர்வேதம் உருவாக்கிக் கொள்ளும் என்றால், அதுகுறித்து எனக்கு எந்தப் பிரச்சனையுமில்லை. சிகிச்சை பெறுவதற்காக மக்கள் ஆயுர்வேத மருத்துவரை தேர்வு செய்வார்கள் என்றால், அதிலும் எனக்குப் பிரச்சனையில்லை. ஆனால் இந்த கலப்பு மருத்துவம் (கிராஸ்பதி அல்லது மிக்சோபதி) என்று அழைக்கப்படுகின்ற சிகிச்சைமுறைக்கு சட்டபூர்வமான அந்தஸ்தை வழங்க முடியாது’.





நவம்பர் 5 அன்று வெளியிடப்பட்ட இன்னொரு அறிக்கையில், இந்தியாவில் உள்ள பல மருத்துவ முறைகளை ஒருங்கிணைப்பதற்கான நிதி ஆயோக்கின் (என்ஐடிஐ) முயற்சிகளை ஐஎம்ஏ குறை கூறியிருந்தது. அந்த அறிக்கையில், ‘கிச்சடி மருத்துவ முறையை" உருவாக்குவது ‘போலி மருத்துவத்தை சட்டப்பூர்வமாக்குவது’, ‘எங்குமே இல்லாத வகையில் கலப்பு மருத்துவர்களை உருவாக்குவது’ மற்றும் சில சந்தர்ப்பங்களில் அலோபதி சிகிச்சையைத் தேர்வு செய்ய முடியாது செய்வது, மேலும் சில சந்தர்ப்பங்களில் ஆயுர்வேத சிகிச்சையை மட்டுமே தேர்வு செய்யும் நிலைக்குத் தள்ளுவது நோயாளிகளுக்கு இழப்பையே ஏற்படுத்தித் தரும்.

சுகாதார ஊழியர்களின் பற்றாக்குறை

மருத்துவர்கள், பிற சுகாதாரப் பணியாளர்களுக்கான பற்றாக்குறை இந்தியாவில் இருந்து வருகிறது. எளிய நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பரிந்துரைப்பது, சாதாரணமான நோய்களுக்குச் சிகிச்சையளிப்பது என்று தங்கள் சொந்த மருத்துவமுறைகளைக் கடைப்பிடித்து அடிப்படை சுகாதார சேவைகளை வழங்குவதற்காக, எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத கிராமப்புற மருத்துவர்களைப் பயிற்றுவிக்க இந்தியாவில் உள்ள சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முயற்சிப்பதாக பிரியங்கா புல்லா 2015இல் தெரிவித்திருந்தார்.

கிராமப்புற மருத்துவர்களுக்கு எந்தவொரு மருத்துவப் பயிற்சியும் இல்லாத நிலையில், பெரும்பாலும் இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இல்லாத இடங்களில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதால், அந்த யோசனையை ஐ.எம்.ஏ முழுமையாக எதிர்த்தது. ஆனாலும் மற்ற சிகிச்சைமுறை மருத்துவர்கள் அதனை ஆதரித்தனர். அரசின் பார்வையில் அதிக நியாயத்தன்மை கொண்டதாக இருப்பதற்கும், ஆதரவைப் பெறுவதற்கும் ஏதுவாக மறுபயிற்சித் திட்டத்தின் மூலம் பட்டம் பெறுகின்ற பட்டதாரிகள் தங்கள் பெயர்களில் இருந்து ‘டாக்டர்’ என்ற முன்னொட்டைக் கைவிட்டு, எச் மற்றும் எக்ஸ் அட்டவணை மருந்துகளைப் பரிந்துரைப்பதை நிறுத்த வேண்டும் என்று சொல்ல வேண்டிய தேவை அந்த திட்டத்திற்கு இருந்தது.

ஆயினும் சிசிஐஎம்மின் லட்சியம் அந்தக் காரணத்தைக்கூட தவிர்க்கவில்லை. இந்தியாவில் மருத்துவர்களின் பற்றாக்குறையானது, பொது அறுவைச்சிகிச்சை நிபுணர்கள் உட்பட சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறையிலும் பிரதிபலிக்கின்றது. மருத்துவப் பராமரிப்பின் தரத்தை தியாகம் செய்யாமல், மருத்துவர்-நோயாளி விகிதத்தை இந்தியா மேம்படுத்திக் கொள்வதற்கு ஆயுஷ் அமைச்சகம் மற்றும் சிசிஐஎம் ஆகிய அமைப்புகள் உதவுவதை விட, தங்கள் நகர்வுகளை ஆயுர்வேதம் மற்றும் பிற மருத்துவ முறைகளை பிரதான மருத்துவ முறைக்கு இழுப்பது குறித்த விரிவான விவரிப்புகளுடன் இணைப்பதையே அவை தங்களுடைய நோக்கமாகக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

அந்த மறுபயிற்சித் திட்டம் கிராமப்புற மருத்துவ பயிற்சியாளர்களைச் சோதனையிடும் அபாயத்தைக் குறைக்க முயற்சிக்கிறது. வெகுதொலைவில், கருத்தியல் அளவிலே மட்டுமே இருந்தாலும்கூட - நன்கு அறியப்பட்ட அமைப்பிற்குள் மக்களை ஒருங்கிணைப்பதையே அது இறுதி இலக்காகக் கொண்டுள்ளது. மறுபுறத்தில், பெரிய எண்ணிக்கையில் உள்ள இதுபோன்ற மருத்துவர்களை அலோபதி மருத்துவமனைகளில் உள்ள அறுவைச்சிகிச்சை வார்டுகளில் வேலைக்கு அமர்த்துவதோடு, சட்டரீதியாக பதிவுசெய்யப்பட்ட அல்லது வேறுவிதமாகச் செயல்பட்டு வருகின்ற ஆயுர்வேத மருத்துவர்களை,  அவர்கள் அறிந்திராத அறுவைச் சிகிச்சை முறைகளைச் செய்ய சட்டப்பூர்வமாக அனுமதிப்பதாகவே சிசிஐஎம் நடவடிக்கை இருக்கிறது.



நெறிமுறை கட்டுப்பாடுகள், வெவ்வேறு மருத்துவ முறைகளுக்கான நிலையான நெறிமுறைகள் (பல்வேறு நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட வேறுபட்ட முறைகளுக்குப் பதிலாக), தரம் மற்றும் பாதுகாப்பிற்கான உத்தரவாதங்கள், முறைப்படுத்தப்பட்ட அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு மற்றும் குறை தீர்க்கும் முறை என்று அலோபதி அறுவைச்சிகிச்சை பராமரிப்பைச் சுற்றியுள்ள சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளை ஈடுசெய்வதே, இந்தப் புதிய திருத்தம் எந்தவித இடையூறும் இல்லாமல் செயல்படக்கூடிய ஒரே வழியாக இருக்கிறது. மிகவும் பொருத்தமான சோதனை முறைகளை உருவாக்குதல், மூல நூல்களின் பொதுவான பட்டியலை உருவாக்குதல், மருத்துவமனை மற்றும் சுகாதாரம் வழங்குபவர்களுக்கான தர உறுதிச் சான்று வழங்கும் நிறுவனத்தின் (என்ஏபிஎச்) தரங்களை அமல்படுத்துதல், ‘மிக்சோபதி’ போன்றவற்றிலிருந்து விலகிச் செல்வது போன்றவையே அதையொட்டி முதலில் எடுத்து வைக்கின்ற சரியான முதல் அடியாக இருக்கும். ஆயினும், அனைவருக்கும் முன்பாகவே ‘பாரதம்’ அனைத்தையும் அறிந்திருப்பதாக (பொய்யாக) விளம்பரம் செய்வது அல்லது ஆயுர்வேதத்தை விரும்பவில்லையெனில், அது தேச விரோதம் என்று கூறுவதே இவர்களின் இப்போதைய குறிக்கோளாக இருக்கும் என்றால், இதுபோன்ற நடவடிக்கைகள் ஆயுஷ் அமைச்சகத்தால் மேற்கொள்ள முடியாதவையாகவே இருக்கும். இப்போது நாட்டிற்குத் தேவைப்படுவதற்கு முற்றிலும் நேர்மாறான ஒன்றைச் செய்வதிலேயே அது சென்று முடியும்.

https://thewire.in/the-sciences/modi-government-ayush-ministry-ayurvedic-surgery-order-misleading-pandemic

 

Comments