ஆதிரா கோனிக்காரா
தி
கேரவான்
தற்கொலைக்குத் தூண்டியதாக இரண்டாண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்டிருந்த
வழக்கில், ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியரான அர்னாப் கோஸ்வாமியை நவம்பர்
4 அன்று மகாராஷ்டிரா காவல்துறை கைது செய்தது,
சுதந்திரமான பேச்சு மீது நடத்தப்பட்ட தாக்குதலா என்ற விவாதத்தைத் தூண்டியது. அந்த வழக்கில்
சம்பந்தப்பட்ட, கன்கார்ட் டிசைன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக
இயக்குநரான அன்வே நாயக், அந்த நிறுவன வாரியத்தின் உறுப்பினரான அவரது தாயார் குமுத்
நாயக் இருவரும் 2018 மே மாதம் தங்கள் வீட்டில் இறந்து கிடந்தனர். கோஸ்வாமி மற்றும்
இருவர் தங்களுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்தவில்லை என்றும், தங்களுடைய
மரணத்திற்கு அவர்களே பொறுப்பு என்றும் குற்றம் சாட்டிய தற்கொலைக் குறிப்பை அவர்கள்
விட்டுச் சென்றிருந்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை என்பதைக்
காரணம் காட்டி 2019ஆம் ஆண்டில் காவல்துறையினர் அந்த வழக்கை முடித்து வைத்த
போதிலும், நாயக் குடும்பத்தினர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. வழக்கை மீண்டும்
விசாரிக்க வேண்டும் என்று 2020 மே மாதம் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில்
தேஷ்முக் குற்றவியல் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டார். ரிபப்ளிக்
தொலைக்காட்சிக்கான வேலை ஒன்றில் பணிபுரிந்த போது கோஸ்வாமியுடன் தனது தந்தைக்கு ஏற்பட்ட
சோதனைகளையும், வழக்கைத் தொடர்ந்த போது தன்னுடைய குடும்பத்தினர் எதிர்கொண்ட அச்சுறுத்தல்களையும்
கட்டிடக் கலைஞரும், அன்வேயின் மகளுமான அட்னியா நாயக் கேரவானின் ஆதிரா கோனிக்காராவிற்கு
அளித்த நேர்காணலின் போது விவரித்தார்.
ஆதிரா கோனிக்காரா: ரிபப்ளிக்
தொலைக்காட்சியின் ஸ்டுடியோவில் பணிபுரியும் ஒப்பந்தத்தை கன்கார்ட் டிசைன்ஸ்
எப்போது பெற்றது? கோஸ்வாமியுடனான சர்ச்சை எவ்வாறு தொடங்கியது?
அட்னியா நாயக்: ரூ.6.4 கோடிக்கு மேலான வேலையைச் செய்வதற்கு
எங்களுக்கு பணி ஆணை 2016ஆம் ஆண்டில் கிடைத்தது. அந்த வேலை வெற்றிகரமாக முடித்து அவர்களிடம்
ஒப்படைக்கப்பட்டது. எல்லாம் சரியாகவே இருந்தன. கோஸ்வாமி, அவரது மனைவி, அங்கிருந்த
ஒவ்வொருவரின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றங்களைச் செய்யும்படி எனது தந்தை கட்டாயப்படுத்தப்பட்டார்.
கடைசி நிமிட மாற்றங்கள் சொல்லப்பட்டு, உடனடியாக அவற்றைச் செய்து முடிக்குமாறு எனது
தந்தையைக் கட்டாயப்படுத்தினர். ‘நீங்கள் என்ன செய்தாலும் உங்களுக்குப் பணம்
கிடைக்காது’ என்று என்னுடைய தந்தையிடம் கூறப்பட்டதால், அவர் மனஅழுத்தத்தில்
இருந்தார்.
ஆதிரா கோனிக்காரா: நிலுவைத் தொகையை
செலுத்த கோஸ்வாமி எப்போது மறுத்தார்?
அட்னியா நாயக்: எனது தந்தை உயிருடன் இருந்தபோது, அந்த திட்டத்திற்கான
வேலை நடந்து கொண்டிருந்த போது அது தொடங்கியது. ‘நான் அர்னாப். என்னால் என்ன செய்ய
முடியும் என்பதை நான் உங்களுக்குக் காட்டுவேன்’, ‘நீங்கள் மகாராஷ்டிரனாக இருப்பதாலேயே,
மகாராஷ்டிராவில் இருப்பதாலேயே, என்னை உங்களால் எதுவும் செய்ய முடியாது’ என்று கோஸ்வாமி
இது போன்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். காவல்துறையிடம் புகார் அளிக்கலாமா
எனப்து குறித்து என்று எங்கள் வீட்டில் விவாதித்தோம். ஆனால் மிகவும் பயந்து இருந்த
என் தந்தை ‘இல்லை, ‘உங்கள் தொழிலை அழித்து விடுவேன், உங்கள் மகளையும்’ என்று அவர்
ஏற்கனவே எனக்கு அச்சுறுத்தல்களைத் தந்து வருகிறார்’ என்றார். நான் ஒரு கட்டிடக்
கலைஞன். எனது தந்தைக்கு நான் உதவிகளைச் செய்து வந்து கொண்டிருந்தேன். அதே நேரத்தில்
எனது படிப்பு தொடர்பான உள்ளிருப்பு பயிற்சிக்கும் நான் வேலை செய்து
கொண்டிருந்தேன்.
ஆதிரா கோனிக்காரா: ஸ்டுடியோவுக்கான
திட்டத்தில் கோஸ்வாமி கோரிய கடைசி நிமிட மாற்றங்கள் என்ன?
அட்னியா நாயக்: நிறைய மாற்றங்களைச் செய்து தருமாறு கேட்டார்.
ஏதாவது அழகாக இருக்கவில்லை என்று கருதினால், அவர் வேறு ஏதாவது கேட்பார். எதையாவது
மாற்ற வேண்டுமானால், செலவு அதிகரிக்கும். அதற்குத் தேவையான ஆட்களிலும் மாற்றங்கள் செய்ய
வேண்டியிருக்கும். அது இரண்டு நாட்களில் நடக்காது.
ஆரம்பத்தில் இருந்தே அவரிடம் ஒரு திட்டம் இருந்து வந்தது.
பணம் கொடுக்க அவர் விரும்பவில்லை. உண்மையில்
பணத்தைச் செலுத்த நினைத்திருந்தால், நீண்ட காலத்திற்கு முன்பே அவர் அதைச் செய்திருப்பார்.
அதேசமயம், ஃபெரோஸ் ஷேக், நிதீஷ் சார்தா ஆகியோருடனும் என் தந்தையின் பிற வேலைகள் நடந்து
கொண்டிருந்தன. [ஐகாஸ்ட்எக்ஸ்/ஸ்கிமீடியாவைச் சேர்ந்த ஷேக், ஸ்மார்ட்வொர்க்கைச்
சேர்ந்த சார்தா ஆகியோர் முறையே நாயக்கிற்கு ரூ.4 கோடி, ரூ.55 லட்சம்
கடன்பட்டுள்ளனர் என்று தற்கொலைக் குறிப்பில் உள்ளது. கோஸ்வாமி கைது செய்யப்பட்டிருக்கின்ற
வழக்கில், அவர்கள் இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது]. அந்த தொகை [தற்கொலைக்
குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நாயக்கிற்கு கோஸ்வாமி செலுத்த வேண்டிய தொகை] ரூ.83
லட்சத்தை விட அதிகமாக இருந்தது. கதறிய என் தந்தை அதை குறைத்துக் கொண்டே வந்து, இறுதியில்
ரூ.83 லட்சம் என்றாக்கினார். யாராவது உங்களிடமிருந்து ரூ.25,000 வாங்கி அதைத் திருப்பித்
தரவில்லை என்றால், ரூ.25,000 இல்லையென்றாலும், குறைந்தபட்சம் ரூ.15,000 மட்டுமாவது
திருப்பித் தாருங்கள் என்று கூறுவீர்கள்தானே...
ஆதிரா கோனிக்காரா: அவர் பணத்தைத் தர
வேண்டும் என்பதற்காக உங்கள் பக்கத்திலிருந்து சமரசம் செய்து கொண்டே இருந்தீர்களா?
அட்னியா நாயக்: ஆம், அது 120 பிளஸில் [அதாவது ரூ.1.2
கோடிக்கு மேல்] இருந்து ரூ.83 லட்சமாக குறைக்கப்பட்டது. ஆனாலும் அவர் அதைத் தரவில்லை.
அது எவ்வளவு வெட்கக்கேடான செயல்?
ஆதிரா கோனிக்காரா: தரப்பட வேண்டிய தொகை
குறித்த இந்த வாதங்கள் எவ்வளவு காலத்திற்குத் தொடர்ந்தன?
அட்னியா நாயக்: அந்த வேலை 2016 டிசம்பரில் தொடங்கியது.
நாங்கள் அதை 2017 மார்ச் அல்லது ஏப்ரலில் முடித்து ஒப்படைத்தோம். 2017 ஏப்ரலுக்குப்
பிறகு, ஒரு வருடத்திற்கும் மேலாகவே நாங்கள் அந்தப் பணத்தைக் கேட்டு வருகிறோம். இன்னும்
அவர் பணத்தைத் தரவில்லை.
ஆதிரா கோனிக்காரா: அவரிடம் நிலுவைத்
தொகையைக் கேட்டு உங்கள் தந்தை அவருக்கு மின்னஞ்சல்களை அனுப்பியதாக செய்திகள் வெளியாகி
உள்ளதே?
அட்னியா நாயக்: ஆமாம். ‘தயவுசெய்து, இது என் வாழ்வா சாவா
பிரச்சனையாக இருக்கிறது’ என்று என் தந்தை அவரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார். தனது
மின்னஞ்சல்களில் ‘அது இப்போது என் குடும்பத்தையும் சென்றடைந்துள்ளது. எல்லோரும்
கவலைப்படுகிறார்கள். எல்லோரும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அது மிகவும்
மனச்சோர்வை ஏற்படுத்துவதாக இருக்கிறது’ என்று என்னுடைய தந்தை குறிப்பிட்டிருந்தார்.
எல்லா பக்கங்களிலும் சிக்கிக் கொண்டதாக உணர்ந்ததால், என்ன செய்வது என்று
எங்களுக்குத் தெரியவில்லை. குற்றம் சாட்டப்பட்ட அந்த மூன்று பேரிடமிருந்தும் ரூ.5.4
கோடியைப் பெற முடிந்திருந்தால், எங்கள் வணிகம் தொடர்ந்து நடைபெற்றிருக்கும்.
ஆதிரா கோனிக்காரா: உங்கள் தந்தை இறந்த
பிறகு, ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையை
(எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்திருந்தீர்கள். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய நீங்கள் அவர்களை
அணுகியபோது காவல்துறையின் பதில் என்னவாக இருந்தது?
அட்னியா நாயக்: முதலில் அவர்கள் அதை விரும்பவில்லை. ஏனென்றால்
அர்னாபின் பெயரைக் கண்டவுடனே அவர்கள் பயந்தார்கள். விசாரணை அதிகாரி சுரேஷ் வரடே ‘இதோ
பாருங்கள், இது உங்கள் வாழ்க்கையோடு தொடர்புடைய பிரச்சனை. மிகப் பெரிய ஆட்கள் இதில்
ஈடுபட்டுள்ளனர். அதைப் பற்றி நன்கு சிந்தியுங்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம் என்பதே
எனது ஆலோசனை’ என்று என்னையும் என் அம்மாவையும் மிரட்டினார். அவரிடம் வேண்டிக் கொண்ட
எனது உறவினர்கள் பின்னர் அவரிடம் கேள்வியெழுப்பினர். அதற்குப் பின்னர்தான் அவர்
எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய ஒப்புக் கொண்டார். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட பிறகும்,
குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் கைது செய்யப்படவில்லை. நான் எனது வாக்குமூலத்தை
அலிபாக்கில் வழங்கியிருந்தாலும், அர்னாப் தனது வாக்குமூலத்தை மும்பையில் உள்ள இணை
காவல்துறை ஆணையரின் அலுவலகத்தில் மராத்தியில் பதிவு செய்திருந்தார்.
பிணையில் வெளிவர இயாலாத வகையிலான புகார்களையும் நாங்கள் தாக்கல்
செய்திருந்ததால், எங்களுக்கு மரண அச்சுறுத்தல்கள் வந்தன. அவர்கள் எஃப்.ஐ.ஆரைப் பதிவு
செய்திருக்க வேண்டும். ஏன் அதை அவர்கள் செய்யவில்லை என்று எனக்குத் தெரியவில்லை.
ஆதிரா கோனிக்காரா: இவ்வாறான அச்சுறுத்தல்களை
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பெற்று வந்தீர்களா?
அட்னியா நாயக்: ஆம். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தொடர்ந்து
அச்சுறுத்தல்கள் இருந்து வந்தன. இது அர்னாபுக்கு எதிராக நாங்கள் வழக்கு தொடர்ந்ததால்
வந்தவை என்று எங்களுக்குத் தெரியும். ஆனாலும் எங்களை அச்சுறுத்தியவர்கள் யாரென்று நாங்கள்
அறிந்திருக்கவில்லை. எனது பக்கத்தில் இருந்து, என்னால் கொடுக்க முடிந்த அவர்களுடைய
தொலைபேசி எண், வாட்ஸ்ஆப்பில் வந்த அச்சுறுத்தல்கள், அழைப்புகள் போன்ற அனைத்து தகவல்களையும்
காவல்துறையினரிடம் நான் கொடுத்திருந்தேன். விசாரணையின் உண்மைத்தன்மை மீது கேள்விகளை
எழுப்புகின்ற விதத்தில் தனது முதல் வீடியோவை என்னுடைய அம்மா வெளியிடுவதற்கு முன்பே,
முர்பாத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களால் நான் தடுத்து நிறுத்தப்பட்டு, இந்த
விஷயத்தைப் பற்றி பேசக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டேன். அவர்கள் ‘நாங்கள்
உங்களைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறோம், நீங்கள் எங்கு ஓடுகிறீர்கள், மறைந்து கொள்கிறீர்கள்
என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்’ என்றார்கள். நாங்கள் எதுவும் செய்யாத போதே,
இந்த அளவிற்கு அழுத்தம் கொடுக்கப்படுவது நகைப்புக்குரியது. நாங்கள் இறந்துதான் போக வேண்டுமென்றால், குறைந்தபட்சம் அனைத்தையும்
பேசி விட்டு இறக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.
ஆதிரா கோனிக்காரா: ராய்காட்
காவல்துறையினர் எந்த அடிப்படையில் தங்களுடைய ஆரம்பகட்ட விசாரணையை நிறுத்திக் கொண்டனர்?
வழக்கை முடித்துக் கொண்டதற்கான அறிக்கையை அவர்கள் உங்களுக்குக் கொடுத்தார்களா?
அட்னியா நாயக்: அந்த அறிக்கையை இப்போது, 2020 மே மாதமே நாங்கள் பெற்றோம். அந்த வழக்கு முடிவடைந்ததாக
மே மாதம் வரை எங்களுக்குத் தெரியவே தெரியாது.
ஆதிரா கோனிக்காரா: அதனால்தான் நீங்கள்
மாநில உள்துறை அமைச்சரை அணுகினீர்களா?
அட்னியா நாயக்: இல்லை, அதற்கும் முன்பே. எங்களுடைய
கோரிக்கையை நாங்கள் பலருக்கும் மின்னஞ்சல் செய்திருந்தோம். நாங்கள் அமைச்சரை மட்டும்
குறிப்பாக அணுகவில்லை. எங்கள் வீட்டிற்கு வந்து எங்களைக் கொன்று விடப் போவதாக எங்களுக்குத்
தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்ததால், எங்கள் வாழ்க்கை ஆபத்தில் இருந்ததாலேயே நாங்கள்
அவரை அணுகினோம்.
ஆதிரா கோனிக்காரா: சி.ஐ.டி
விசாரணையின் நிலை எப்படி இருக்கிறது?
அட்னியா நாயக்: அந்த விசாரணைக்கு என்ன ஆனது என்று
நாங்கள் கேட்டோம். ஆனால் எங்களுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. மூவருக்கும்
தண்டனை வழங்கப்பட வேண்டும். அவர்கள் மட்டுமல்ல, அவர்களுக்கு உதவிய விசாரணை அதிகாரி
வரடே போன்றவர்களும் கைது செய்யப்பட வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.
ஆதிரா கோனிக்காரா: இந்த வழக்கை
விசாரிக்க மறுத்த காவல்துறை அதிகாரிகள் மீது தனி எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்வதற்குப்
பரிசீலித்துக் கொண்டிருக்கிறீர்களா?
அட்னியா நாயக்: ஆமாம், ஏன் செய்யக் கூடாது?
தேவைப்பட்டால், நிச்சயமாக நாங்கள் அதைச் செய்வோம்.
ஆதிரா கோனிக்காரா: குற்றம்
சாட்டப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இதுபோன்ற தற்கொலைக்கான
தூண்டுதல் குறித்த குற்றச்சாட்டு எளிதில் தண்டனைக்கு வழிவகுக்காது. விசாரணை எவ்வாறு
தொடரும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
அட்னியா நாயக்: குறைந்தபட்சம் இப்போதாவது மகாராஷ்டிரா
காவல்துறை எந்த அரசியல் அழுத்தமும் இல்லாமல் நியாயமான முறையில் விசாரித்து
எங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று நான் முழுமனதுடன் கேட்டுக்கொள்கிறேன். ஒரு
பொய்யை மறைப்பதற்கு, நீங்கள் பத்தாயிரம் முறை பொய் சொல்ல வேண்டும். உரத்த குரலில்
பேசுவதால், நீங்கள் உண்மையைச் சொல்கிறீர்கள் என்று அர்த்தமல்ல. எங்களுக்கு நடந்தது
உண்மை. தற்கொலைக் குறிப்பை எனது தந்தையே எழுதியுள்ளார். அதைப் பற்றி வேறுவிதமாகச்
சொல்வதற்கில்லை.
அரசியல் தொடர்பு எதுவும் இல்லை, இல்லையா? இது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு
எதிராக எங்களுடைய தனிப்பட்ட போர். இது ஒரு கிரிமினல் விஷயம். இதை பேச்சு
சுதந்திரத்துடன் தொடர்புபடுத்துவது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. அவர் விரும்புகின்ற
எந்தவொரு விஷயத்தையும் பேசுவதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது என்றால், குறைந்தபட்சம்
உண்மையில் என்ன நடந்தது, எங்களுடைய குடும்பம் என்னென்ன துன்புறுத்தல்களைச்
சந்தித்தது என்ற உண்மைகளைச் சொல்வதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. இப்போது அது எல்லோர்
முன்னிலையிலும் வந்துள்ளது. சாமானிய மக்கள் எவ்வாறெல்லாம் சித்திரவதை
செய்யப்படுகிறார்கள் என்பதை இந்திய மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள்
விரும்பினோம்.
இறுதியாகச் சொல்வதென்றால், அர்னாப் கோஸ்வாமி போன்ற மிகப்
பெரிய பேர்வழி, பெரிய அளவில் ஏதாவது செய்தால் அந்த விஷயம் அத்தோடு இழுத்து மூடப்படும்.
நாம் இன்று அமைதியாக இருந்தால், நாளை வேறு யாராவது ஒருவருக்கு இதுபோன்று நடக்கும்.
இந்த
நேர்காணல் சுருக்கப்பட்டது.









Comments