அதின்ட்ரியோ சக்ரவர்த்தி
கௌன்டர்கரண்ட்ஸ் இணைய இதழ்
மனுசாஸ்திரம் இன்றைக்கு நடைமுறையில் இல்லை என்று கூறுபவர்கள் இருந்து வ்ருகின்ற நிலையில், இந்திய நீதித்துறை தன்னுடைய தீர்ப்புகளில் மனுசாஸ்திரத்தில் கூறப்பட்டிருப்பவற்றை எவ்வாறு தொடர்ந்து கையாண்டு வருகின்றது என்பதை விளக்குகின்ற கட்டுரை.
அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட 1950ஆம் ஆண்டு துவங்கி இன்று வரையிலான காலகட்டம் வரையிலும் இந்திய நீதித்துறை ஆபத்தான விளையாட்டு ஒன்றை விளையாடி வருகிறது. நீதிமன்றங்கள் தங்களுடைய தீர்ப்புகளை வழங்கும் போது மனுஸ்மிருதியைக் கூறுவது, மேற்கோள் காட்டுவது மட்டுமல்லாது அவற்றை தீர்ப்புகளிலும் குறிப்பிட்டும் வருகின்றன. SCC ஆன்லைன் மற்றும் indiankanoon.org என்ற இரண்டு இணையதளங்களிலும் குறிப்பிடப்படுவதைப் போல, 1950 மற்றும் 2019க்கு இடையிலான காலத்தில், மனுஸ்மிருதி உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல உயர்நீதிமன்றங்களால் மொத்தம் முப்பத்தியெட்டு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த தீர்ப்புகளில் இருபத்தாறு (கிட்டத்தட்ட 70%) தீர்ப்புகள், துணைக்கண்டம் முழுவதும் எழுந்த மோசமான ஹிந்துத்துவா எழுச்சியுடன் இணைந்த காலகட்டமான 2009-2019க்கு இடையில் வழங்கப்பட்டிருக்கின்றன. உச்சநீதிமன்றம் 1989 மற்றும் 2019க்கு இடைப்பட்ட காலத்தில் மனுஸ்மிருதியை மொத்தம் ஏழு முறை தன்னுடைய முடிவுகளை எடுப்பதற்காகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. பம்பாய், மெட்ராஸ், அலகாபாத் உயர்நீதிமன்றங்களும்கூட மனுஸ்மிருதியை பல தீர்ப்புகளில் குறிப்பிட்டிருக்கின்றன. இது தொடர்பாக இன்று வரையிலும் அனைத்து உயர்நீதிமன்றங்களிடையே கல்கத்தா உயர்நீதிமன்றம் மட்டுமே தொடர்ந்து விதிவிலக்காக இருந்து வருகிறது. மேற்கு வங்க மாநிலம் இன்றுவரையிலும் வெளிப்படையாக வலதுசாரி சாய்வைக் கொண்ட அரசியல் கட்சியால் ஆளப்படவில்லை என்பதை நாம் இங்கே மனதில் கொள்ள வேண்டும்.
1953-2014க்கு இடைப்பட்ட காலத்தில் மெட்ராஸ், கேரளா, கர்நாடகா, குஜராத் உயர்நீதிமன்றங்களால் ‘மனுஸ்மிருதி’ என்ற எழுத்தில் சிறு மாறுபாட்டைப் பயன்படுத்தி வழங்கப்பட்ட ஏழு தீர்ப்புகள் மேலே குறிப்பிடப்பட்ட தீர்ப்புகளில் சேர்க்கப்படவில்லை என்றாலும் மேலுள்ள பத்தியில் குறிப்பிடப்பட்ட போக்கை மாற்றுவதாக அவை இருக்கவில்லை. ஏனெனில் அந்த ஏழு தீர்ப்புகளில் நான்கு தீர்ப்புகள் இந்தப் புதிய நூற்றாண்டிலேயே வழங்கப்பட்டுள்ளன.
மனுஸ்மிருதியை 1989ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் முதன்முதலாகத் தன்னுடைய தீர்ப்பில் பயன்படுத்திக் கொண்டது. அதற்குப் பின்னர் 2019ஆம் ஆண்டு வரையிலும் ஏழு முறை மனுஸ்மிருதி உச்சநீதிமன்றத்தால் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டை நீதிமன்றங்கள் எவ்வாறு ஆரம்பித்து ஆடி
வருகின்றன என்பதை இப்போது காணலாம்:
1989 டிசம்பர் 22 அன்று, விமலாபாய் எதிர் ஹீராலால் குப்தா ((1990) 2 எஸ்.சி.சி 22) வழக்கில் உச்சநீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பை வழங்கியது. தங்கர் என்ற சாதியைச் சார்ந்த விமலா பாய் என்பவர் தனது மருமகனைத் தத்தெடுத்துக் கொண்டது வாரிசு தொடர்பான சிக்கல்களுக்கு வழிவகுத்துக் கொடுத்தது. அந்த தீர்ப்பில் ஹிந்து வாரிசுரிமைச் சட்டத்தில் உள்ள ‘பந்தாவா’ என்ற கருத்தைப் பகுப்பாய்வு செய்த உச்சநீதிமன்றம் தன்னுடைய வரலாற்றிலே முதன்முறையாக மனுஸ்மிருதியைக் குறிப்பிட்டது. ஆனாலும் விமலாபாயின் வாரிசுக்கு ஆதரவாகவே அந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
2008 ஆகஸ்ட் 06 அன்று, ராஜ்பீர் சிங் தலால் எதிர் சவுத்ரி தேவிலால் லால் பல்கலைக்கழகம், சிர்சா & மற்றவர்கள் (2008) 9 எஸ்.சி.சி 284 என்ற வழக்கில் ஜைமினியின் மீமாம்சா கொள்கைகள் (கி.மு.ஆறாம் நூற்றாண்டு) குறித்து விவாதித்த உச்சநீதிமன்றம் மீண்டும் மனுஸ்மிருதியைக் குறிப்பிட்டது. சட்டம் இல்லாத இடங்களில், சட்டம், ஒழுங்குமுறைகள் மூலம் தவிர்க்கப்பட்ட அல்லது வழங்கப்படாத சூழ்நிலையில் பொருந்தக்கூடியதாக இருக்கின்ற பொதுவான சட்டக் கொள்கைகளான மேக்ஸ்வெல்லின் இங்கிலாந்துச் சட்டங்களைவிட மீமாம்சா சாஸ்திரம் ‘மேன்மை’ கொண்டிருப்பதாக நிலைநிறுத்துகின்ற வகையில் நீதிபதிகள் அல்தாமாஸ் கபீர், மார்க்கண்டேய கட்ஜூ ஆகியோர் அந்த தீர்ப்பை வழங்கியிருந்தனர். துணைக்கண்டத்தில் உள்ள சமூகங்களை குறைந்தபட்சம் ஒரு நூற்றாண்டிற்காவது ரத்தம் சிந்தச் செய்ய வைத்திருக்கின்ற சாதியவாதக் கருத்து கொண்ட ஹிந்து சட்டத்தை உருவாக்கிய மற்றொருவரான சங்கராச்சாரியாரின் படைப்புகளை அவர்கள் தங்களுடைய தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர். சட்டம் இல்லாத இடங்கள் குறித்த துணைவகைகளைப் பற்றி மேக்ஸ்வெல் குறிப்பிடவில்லை என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்ட அதேசமயத்தில் ஹிந்து சட்டங்களுக்குச் சமமானவையாக ஆத்யதாரா, அனுசங்கா, அனுகர்ஷா, வாக்யாஷேஷா வடிவத்தில் மீமாம்சா சாஸ்திரத்தின் கொள்கைகள் இருப்பதாகக் கூறியதன் மூலம் மீமாம்சா சாஸ்திரத்தின் ‘மேன்மை’யை அந்த நீதிபதிகள் இருவரும் கண்டறிந்திருந்தனர்.
முக்கியமாக அந்தத் தீர்ப்பு தயாபாகாவில் ஜிமுத்வாஹனாவால் பயன்படுத்தப்பட்ட அனுசங்காவை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொண்டது. ஜிமுத்வாஹனாவால் மேற்கோள் காட்டப்பட்ட மனுவின் சுலோகத்தில், ‘பிரம்மா, தைவா, அர்ஷ, காந்தர்வ, பிரஜாபத்ய வடிவத்தில் திருமணம் செய்து கொண்ட பெண்களைப் பொறுத்தவரையில், குழந்தை எதுவுமில்லாமல் அவர்கள் இறந்து விட்டால் அவர்களுடைய சொத்து கணவனுக்குச் சென்று விடும். ஆனால் அசுர, ராட்சச, பைசாச என்றழைக்கப்படுகின்ற வடிவத்தில் அந்தச் சொத்து அவர்களுடைய திருமணத்தின் போது வழங்கப்பட்டதாக இருந்தால், அந்தப் பெண்களுடைய மரணத்திற்குப் பிறகு அந்தச் சொத்து பெற்றோரின் சொத்தாக மாறும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட மனுவின் சட்டத்தை விளக்குகின்ற போது, முதல் வாக்கியத்தில் உள்ள சொத்து என்ற வார்த்தை இரண்டாவது வாக்கியத்தில் இருப்பதைப் போல 'திருமணத்திற்குப் பிறகு அவளுக்குக் கொடுக்கப்பட்ட' என்ற சொற்றொடரால் வகைப்படுத்தப்படவில்லை என்றாலும், அனுசங்கா கொள்கைகளைப் பயன்படுத்தி முதல் வாக்கியத்தில் இருக்கின்ற 'சொத்து' என்ற வார்த்தையை திருமணத்திற்குப் பிறகு அவளுக்கு வழங்கப்பட்ட சொத்து என்பதாகப் பொருள் கொள்ள முடியும் என்று மீமாம்சா சாஸ்திரக் கொள்கையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை அனுசங்காவிற்கு ஜிமுத்வாஹனா ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். சட்டங்கள், ஆவணங்கள் குறித்த விளக்கத்திற்காக மீமாம்சா கோட்பாடுகளைப் பயன்படுத்துவதற்கான வழியை உருவாக்கிக் கொண்ட உச்சநீதிமன்றம், வழக்கின் மேல்முறையீட்டாளர் பஞ்சாபில் உள்ள பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியராக இருப்பதற்கான தகுதியைத் தீர்மானிப்பதற்கு அனுசங்காவின் மீமாம்சா கொள்கையையே இறுதியாகப் பயன்படுத்திக் கொண்டது. பொதுவான சட்டம் அமைதியாக இருக்கின்ற இடங்களில், சட்டபூர்வமான விளக்கங்களுக்காக மீமாம்சா சாஸ்திரத்தைப் பயன்படுத்துகின்ற வகையிலேயே அந்த தீர்ப்பு அமைந்திருந்தது. அந்த தீர்ப்பை வழங்குவதற்கு மீமாம்சா சாஸ்திரத்திற்கு ஆதரவாக மனுசாஸ்திரத்தையே பெரிதாக நம்பியதன் மூலம், அதுவரையிலும் வலதுசாரி அரசியல் புரிதலில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருந்ததில்லை என்று அறியப்பட்டிருந்த நீதிபதிகள் கபீர் மற்றும் கட்ஜூ ஆகியோர் யாருக்கும் புலப்படாத வகையில் தற்செயலாக வெள்ளப்பெருக்கைத் திறந்து விட்டனர் என்றே தோன்றுகிறது.
அடுத்த ஆண்டில் மனுஸ்மிருதி உயர்நீதிமன்றங்களில் நான்கு முறை குறிப்பிடப்பட்டது. விஜய் நாராயண் தத்தே & மற்றவர்கள் எதிர் மகாராஷ்டிரா மாநில அரசு & மற்றவர்கள் (2009) 9 எஸ்.சி.சி 92 வழக்கை விசாரித்த வேளையில், மீமாம்சா கொள்கைகளைப் பரிசீலித்த உச்சநீதிமன்றத்தால் மீண்டுமொரு முறை மீமாம்சா கொள்கைகள் மேக்ஸ்வெல்லின் பொதுவான சட்ட விளக்கத்தை விட மேன்மையாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டன. அதே போன்று தில்லி உயர்நீதிமன்றமும் இரண்டு முறை மறுபரிசீலனை செய்திருந்தது. மீமாம்சா கோட்பாடுகள் குறித்து விவாதித்த நரங் எதிர் நரங், 2009 எஸ்.சி.சி.ஆன்லைன் தில்லி 56, 2009 எஸ்.சி.சி.ஆன்லைன் தில்லி 4205 என்ற இரண்டு வழக்குகளிலும், கேரள உயர்நீதிமன்றத்தில் (வி.வி வர்கீஸ் எதிர் கேரள மாநில தேர்தல் ஆணையம் & மற்றவர்கள் 2009 எஸ்.சி.சி.ஆன்லைன் கேர் 2541) நடைபெற்ற மற்றொரு வழக்கிலும், குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்கள், மனைவிகள், குழந்தைகளைப் பராமரிப்பதற்கான கூட்டு மிதாக்சரா குடும்பத்தின் நிர்வாகிக்கு உள்ள சட்டபூர்வமான கடமை குறித்து மனுஸ்மிருதி அத்தியாயம் 9, பிரிவு 108இல் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளைகள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.
கடைசியாக குறிப்பிடப்பட்டுள்ள தீர்ப்பில், மனுஸ்மிருதியில்
குறிப்பிடப்பட்டுள்ள கிராம சபைகளை எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடுகையில் ‘விழுயங்களை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே
இந்திய ஜனநாயகத்தின் வரலாறு இருக்கின்றது’ என்று நிறுவிய கேரள உயர்நீதிமன்றத்தின்
இந்திய ஜனநாயகத்தின் வரலாற்றுத்தன்மை குறித்த விளக்கம் மிகவும் கவலையளிப்பதாக
இருக்கின்றது. வரலாற்றாசிரியர்களால் பெருமளவில் நிறுவப்பட்ட வரலாற்று
யதார்த்தத்தைப் பொறுத்தவரையில்,
(அ) அரசியலமைப்புச் சட்டம்தான் இந்திய ஜனநாயகத்தின்
செயல்பாடுகளைச் செயல்படுத்துகின்ற அதிகாரப்பூர்வ ஆவணமாக இருக்கிறதே தவிர, வேதங்களோ
அல்லது மனுஸ்மிருதியோ அவ்வாறாக இருக்கவில்லை.
(ஆ) வரலாற்றுரீதியாக வேத சமூகங்கள், வேதங்களால்
கட்டாயமாக்கப்பட்டுள்ள சமூகங்கள் (வேதசித்தா, அதாவது பிராமணியவாதத்தின் - இன்றைய
பேச்சில் பிராமணியம்) அடிப்படை இயல்பில் சாதியவாதம் கொண்டவையாக இருந்தன என்பதால்,
உண்மையில் 2009ஆம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றத் தீர்ப்பில் ஜனநாயகம் குறித்த
நீதித்துறையின் புரிதலில் வரலாற்றுத்தன்மை குறித்த குழப்பமான சாதி சார்ந்த சிதைவுகள்
இருப்பதே வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றங்களின் இந்த விளையாட்டு மிகவும் ஆபத்து நிறைந்ததாக இருக்கின்றது. உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் என்று அழைக்கப்படுகின்ற
தன்னை அதலபாதாளத்திற்குக் கொண்டு செல்லும் வகையிலே தன்னுடைய ஆட்சியமைப்பை
முழுமையாக மூழ்கடித்திருக்கின்ற ஹிந்துத்துவப் பாசிசத்தின் விளிம்பிலே இந்த
நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளின் இறுதியிலே இந்தியா சென்று நின்றது. விளைவாக ஜனநாயகத்தின்
தூண்கள் என்றழைக்கப்படுகின்ற மற்ற இரண்டு தூண்களுடன் சேர்ந்து நீதித்துறையும்
கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
2012ஆம் ஆண்டில், ஜி.எம். வெங்கடரெட்டி எதிர் இணை ஆணையர், கோலார் (2012 எஸ்.சி.சி ஆன்லைன் கர் 7533) வழக்கில் 1978ஆம் ஆண்டு கர்நாடக பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (குறிப்பிட்ட நிலங்களை மாற்றித் தருவதைத் தடை செய்தல்) சட்டத்தில் உள்ள ஆக்கிரமிப்பு உடைமை குறித்த தனது கருத்தைச் சரிபார்ப்பதற்காக மனுஸ்மிருதியின் குறிப்பிட்ட சுலோகத்தை நீதிபதி விக்ரம்ஜித் சென் பயன்படுத்தியிருந்தார். உயர்சாதியைச் சார்ந்த ஒருவர் நிலங்களை ஆக்கிரமிப்பு உடைமையாக வைத்துக் கொள்வதற்கான சட்ட உரிமைகளைச் செல்லாததாக்குவதையே மேற்கூறிய சட்டம் தன்னுடைய முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆயினும் நீதித்துறையால் பயன்படுத்தப்பட்ட அந்த சுலோகத்தின் உள்ளடக்கம் சட்டபூர்வமான விஷயத்தை மிகவும் சர்ச்சைக்குரிய பிரச்சனையாக்குவதற்கு மட்டுமே பயன்பட்டது.
‘உறுதிமொழி, எல்லை, குழந்தைகளின் சொத்து, (திறந்த)
வைப்புத் தொகை, மூடி வைக்கப்பட்ட வைப்புத் தொகை, பெண்கள், அரசரின் சொத்து, வேத
பண்டிதரின் செல்வம் ஆகியவை வேறு யாராலாவது ஆக்கிரமித்து அனுபவிப்பதன் மூலமாக இழக்கப்படுவதில்லை’ என்று மனுஸ்மிருதியின் எட்டாம் அத்தியாயத்தில் உள்ள சுலோகம்
கூறுகிறது. விளைவாக, பெண் ஒருவர் மீது உரிமை கொண்டிருந்த ஒருவர் ஆக்கிரமிப்பு
உடைமை காரணமாக, தனக்கான உரிமையை இழந்து விட மாட்டார் என்று பெண்ணை அடிமையாகக்
கருதுகின்ற சுலோகத்தை, சட்டபூர்வமான தன்மையாக நிறுவுவதற்காக 2012ஆம் ஆண்டில் இந்திய
உயர்நீதித்துறை பயன்படுத்தியது உறுதிப்பட்டுள்ளது.
பின்னர் 2014ஆம் ஆண்டில், முஸ்லீம் தனிநபர் சட்டத்தில் பராமரித்தல் தொடர்பாக எழுந்த பிரச்சனையில், மெஹ்ருன்னிசா எதிர் சையத் ஹபீப் 2014 எஸ்.சி.சி ஆன்லைன் கர் 11926 வழக்கில் தன்னுடைய தீர்ப்பை கர்நாடக உயர்நீதிமன்றம் பின்வருமாறு தொடங்கியிருந்தது: ‘இந்த தீர்ப்பை பெண்களின் பாதுகாப்பு குறித்து அடிக்கடி குறிப்பிடப்படுகிற, சாதி, இனம், நிறம், மதம் கடந்து மிகுந்த மரியாதையுடன் போற்றப்படுகிற மனுஸ்மிருதியில் இருக்கின்ற மிகப்பெரிய, உலகளாவிய வாசகத்தை மேற்கோள் காட்டித் தொடங்குவது நியாயமானது, பொருத்தமானது என்றே நான் கருதுகிறேன். ‘பிதா ரக்ஷாதி கௌமாரே, பார்த்தா ரக்ஷாதி யுவனே, புத்ரா ரக்ஷாதி வ்ருதாபியே, நா ஸ்த்ரீ ஸ்வதந்திரியம் அர்ஹதி’ (அசல் சமஸ்கிருதத்தில் உள்ளது), அதாவது ‘பெண்கள் தங்களுடைய குழந்தைப் பருவத்தில் தந்தையால் பாதுகாக்கப்படுகின்றனர். இளமையில் கணவர்கள் அவர்களைப் பாதுகாக்கின்றனர். வயதான காலத்தில் மகன்களால் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பெண்களின் வாழ்க்கையின் எந்தவொரு கட்டத்திலும் தனியாக, ஆதரவற்றவளாக அவர்களை விட்டு விடக்கூடாது. அவர்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆண்களின் பாதுகாப்பிற்குத் தகுதியானவர்கலாக அவர்கள் இருக்கிறார்கள்’ என்று இருக்கிறது.
இதுதான் அந்த தீர்ப்பின் பத்தி 1இன் முழு உள்ளடக்கமாக இருக்கின்றது. அந்த மேற்கோளைக் காட்டி முஸ்லீம் தனிநபர் சட்டம் குறித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது மிகுந்த முரண்பாடுடன் இருக்கின்றது. பெண்கள் மீதான ஆண்களின் அதிகாரத்தைத் தெளிவாக வலியுறுத்துகிற, ஆண்களிடமிருந்து பணம் தொடர்பான சுதந்திரத்தைப் பெறுவதற்கான பெண்களின் உரிமையை மறுக்க முற்படுகிற அந்த சுலோகத்தை மிகப்பெரிய, உலகளாவிய, சாதி, இனம், நிறம், மதம் கடந்து மிகுந்த மரியாதையுடன் போற்றப்படுகிற வாசகம் என்று அந்த நீதிபதி கண்டுபிடித்துள்ளார். அவ்வாறான மேற்கோளை முஸ்லீம் தனிநபர் சட்டத்தின் மீதான தீர்ப்பிற்கு அடிப்படையாகக் காட்டுவதில் எந்தவிதமான மனத்தடையும் அவருக்கு இருக்கவில்லை. அந்த சுலோகத்தைப் போற்றுவதற்கு நீதிபதி கண்டுபிடித்த நபர்கள் யார், அது எந்த நோக்கத்துடன் சொல்லப்பட்டது என்பது குறித்து நாம் எந்தவொரு விசாரணையும் செய்து விடக் கூடாது. நாம் அவர்கள் அல்ல என்பதை வேறு எதற்காகவாவது இல்லையென்றாலும், கண்ணியத்திற்காகவாது நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நீதிமன்றங்களில் இதுபோன்ற செயல்பாடுகள் 2014-15இல் நன்கு செயல்படுத்தப்பட்டு தெளிவாகி விட்டன. நீதிமன்றங்களில் இவ்வாறு சுலோகங்களின் உச்சரிப்புகள், விளக்கங்கள், உள்நோக்கங்கள், குறிக்கோள்கள் பயன்படுத்தப்படுவது மோசமான செயல் என்றாலும், அவை பயன்படுத்தப்படுகின்ற நோக்கம் உன்னதமாக இருக்கும் என்றால், எடுத்துக்காட்டாக மெஹ்ருன்னிசா எதிர் சையத் ஹபீப் வழக்கில் முஸ்லீம் தனிநபர் சட்டத்தின் கீழ் பராமரிக்கப்படுவதற்கான முஸ்லீம் பெண்களுக்கான உரிமை போன்ற விஷயங்களில் மனுஸ்மிருதியைப் பயன்படுத்துவதில் பிரச்சனையில்லை என்று ஆக்கப்பட்டு விட்டது. கடைசியாக குறிப்பிடப்பட்ட கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பு உண்மையில் மற்றொரு ஆபத்தான கதவைத் திறந்து விட்டது. அந்த தீர்ப்பு மனுஸ்மிருதியின் நோக்கத்தை ஹிந்து தனி நபர் சட்டங்களையும் மீறி, அதற்கு அப்பாலும் பொருந்தக்கூடியதாக விரிவுபடுத்திக் கொடுத்தது. ஹிந்து அல்லாத சிறுபான்மையினருக்கான தனிநபர் சட்டங்கள் மீது வழங்கப்பட்ட அந்த தீர்ப்பு மனுஸ்மிருதி கோட்பாடுகளும், சுலோகங்களும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மதச்சார்பற்றதாக இருக்கின்ற நீதித்துறையால் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கின்ற வகையில் இருந்து வரும் தடையை நீக்குவதாகவே இருந்தது.
அத்தகைய போக்கு மற்றும் செயல்பாடுகளின் தொடர்ச்சியாக, அதே ஆண்டில் மனுவில் உள்ள ஒரு சுலோகத்தை சத்தீஸ்கர் உயர்நீதிமன்றமும் மேற்கோள் காட்டியிருந்தது. திருமண உறவைத் மீளப் பெற்றுக் கொள்வதற்கான ஆணையைத் தனக்கு ஆதரவாகப் பெற்ற பிறகும், அந்த ஆணையை மனைவி பின்பற்ற மறுப்பதால், மனைவியின் பராமரிப்பிற்கான பணத்தைச் செலுத்த வேண்டிய கடமை கணவருக்கு உள்ளது என்ற சட்டபூர்வமான முடிவிற்கு வருவதற்கான முக்கியமான அடிப்படையாக மனுஸ்மிருதியில் உள்ள சுலோகம் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. ஜெய்ஸ்வால் எதிர் ஜெய்ஸ்வால் (2014 எஸ்.சி.சி ஆன்லைன் சி 63) வழக்கில் தீர்ப்பை வழங்கிட சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்திற்கு ஆணாதிக்க சிந்தனை கொண்ட மற்றொரு சுலோகம் பயன்பட்டது. அந்த சுலோகம் ‘கணவன், வியாபாரத்திற்காக வெளிநாடு செல்ல வேண்டியிருந்தால், வாழ்வாதாரத்திற்கான தேவைகளால் நல்லொழுக்கம் உள்ளவர்களும் துயரம் அடையக் கூடும் என்பதால், மனைவியைப் பராமரிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்த பிறகே அவன் புறப்பட வேண்டும்’ என்று சொல்கிறது. பெண்களின் பராமரிப்புக்கு ஆதரவாக ‘வாழ்வாதாரத்திற்கான தேவைகளால் நல்லொழுக்கமுள்ளவர்களும் துயரம் அடையக் கூடும்’ என்ற கருத்தை நீதித்துறை நியாயப்படுத்தி இருந்தது.
1910களில் சட்டத்தின் கொள்கைகளை விளக்குவதற்காக
மனுஸ்மிருதியை இந்திய நீதித்துறை பயன்படுத்திய போக்கு, குறிப்பாக ஹிந்து தனிநபர்
சட்டங்களின் அடிப்படையில் குடும்பம், சொத்து, பரம்பரை பற்றிய பிரச்சனைகளில்
முன்மாதிரிகளாக அமைந்தன. அதன் தொடர்ச்சியாகவே, 2016ஆம் ஆண்டில், மனுஸ்மிருதியின்
அடிப்படையில் தந்தை-மகன் கடமைகள் குறித்து கௌஹாத்தி உயர்நீதிமன்றம் மிகுந்த
ஆர்வத்துடன் விளக்கம் அளித்திருப்பதைக் காணலாம் (தாஸ் எதிர் தாஸ் 2016 எஸ்.சி.சி
ஆன்லைன் கௌ 7070). தத்தெடுப்பு குறித்த பிரச்சனையில் தந்தை-மகன் உறவின்
ஆன்மீகத்தன்மையை நிலைநாட்டுவதற்கு, உயிரியல்ரீதியான தந்தைக்கும் மகனுக்கும்
இடையில் இருக்கின்ற ஆன்மீக இயல்பு குறித்தும், அவ்வாறான ஆன்மீக இயல்பு எவ்வாறு தத்தெடுப்பின் மூலம் துண்டிக்கப்படுகிறது
என்பது பற்றியும் விளக்குகின்ற மனுவின் சட்டங்களை மிகுந்த ஆர்வத்துடன் நீதிமன்றம் குறிப்பிடுவதை,
அசாம் மற்றும் வடகிழக்கு உயர்நீதித்துறை அளித்த தீர்ப்பின் வழி நாம்
கேள்விப்படுகிறோம்.
இந்திய உயர்நீதித்துறைக்குள் எந்த அளவிற்கு மனுவாதமும்,
ஆன்மீகமும் ஊடுருவியுள்ளன என்பதைப் புரிந்து
கொள்வதற்கு, குறிப்பாக ஹிந்து சட்டத்தின் விளக்கம் குறித்த பிரச்சனையில்,
கடைசியாகக் குறிப்பிடப்பட்ட 2016ஆம் ஆண்டு கௌஹாத்தி உயர்நீதிமன்றத் தீர்ப்பின் 12,
13ஆவது பத்திகளில் உள்ள தொடர்புடைய பகுதிகளைப் பார்க்கலாம். ‘ஹிந்து
சட்டத்தில், வாரிசுரிமை ஆன்மீகப் பொறுப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. தனது தந்தையின்
கடன்களை அடைக்க வேண்டிய பொறுப்பு மகனுக்கு இருப்பதால், தந்தையின் சொத்துக்களை வாரிசாகப்
பெறுவதற்கு மகனுக்கு உரிமை இருக்கின்றது. கடன் பொறுப்பிலிருந்து தந்தையை விடுவிக்கின்ற
மகன், அதன் விளைவாக ‘பு’ என்றழைக்கப்படுகின்ற நரகத்திலிருந்து விடுபடுவதன் மூலம்,
தன்னுடைய ஆன்மீக வளர்ச்சியை வளர்த்துக் கொள்கிறான். ‘புத்ரா’ என்ற வார்த்தைக்கு மனுஸ்மிருதி
குறிப்பிடுகின்ற காரணம் இதுதான். கீழே குறிப்பிடப்பட்டுள்ள மனுஸ்மிருதியின்
அத்தியாயம் IX இன் 135ஆவது சுலோகத்தைப் பார்க்கலாம் ‘பு நாம்னோ நரகாச்ஸ்மாத்திராயே பிதாரம் சுத்தா, தஸ்மத்புத்ரா இதி புரோக்தா
ஸ்வேமேவா சுயம்வத்’. இந்த சுலோகத்தின்
பொருள் பின்வருமாறு இருக்கிறது: ‘பு என்று அழைக்கப்படுகின்ற நரகத்திலிருந்து
ஒருவரைக் காப்பாற்றுபவர் புத்ரா என்று அழைக்கப்படுகிறார். ஹிந்து ஒருவரின்
மரணத்திற்குப் பிறகு அவரது ஆன்மாவின் ரட்சிப்புக்காக ‘புத்ரா’ மட்டுமே தன்னுடைய
கடமையைச் செய்கிறார். அவ்வாறான சூழ்நிலைகளில், ஒரு தந்தைக்கு மட்டுமே ஒருவரால் தன்னுடைய
கடமையை நிறைவேற்ற முடியும். தத்தெடுப்பு நடைபெற்ற பிறகு வளர்ப்பு மகன் தன்னுடைய உயிரியல்
தந்தைக்கான கடமையை நிறைவேற்ற முடியாது. அதன் விளைவாக, குழந்தையை வேறு ஒருவருக்கு
தத்து கொடுத்த தருணத்திலே, உயிரியல் பெற்றோருடனான அனைத்து ஆன்மீக உறவுகளும்
முறித்துக் கொள்ளப்படுகின்றன. அதன் பிறகு மத நோக்கங்களுக்காக மட்டுமல்லாமல்,
வாரிசு தொடர்பான பிற வாழ்க்கை சம்பவங்களிலும் வளர்ப்புத் தந்தையே அவனுக்குத் தந்தையாகி
விடுகிறார்’
அந்த தீர்ப்பிலும்கூட முறையான அதிகாரம் கொண்டதாக மனுஸ்மிருதி சுலோகத்தை உயர்நீதிமன்றம் பயன்படுத்தி இருக்கின்றது. இங்கேதான் பிரச்சனை எழுகின்றது. சட்டத்திலும், வாழ்க்கையிலும் மதச்சார்பற்ற, சமமான அணுகுமுறையை ஆதரிக்கின்ற அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டிருக்கும் ஜனநாயக தேசத்தின் தனிநபர் சட்டத்தை (ஹிந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம், 1956) பகுப்பாய்வு செய்கின்ற அந்த தீர்ப்பு, முற்போக்கு நவீனத்துவத்தின் பகுத்தறிவாய்வின் பொருட்டு ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இல்லாத, பொதுவாக மனுஸ்மிருதி, ஹிந்து மதத்தின் அடிப்படையிலான சொர்க்கம், நரகம், ஆன்மீகம், ஆன்மா போன்ற கருத்துக்களை முன்வைத்திருந்தது. தனது மகனை வேறொருவர் தத்தெடுத்த பிறகு, உயிரியல் தந்தையை மகன் பராமரிக்க வேண்டியதில்லை என்று சொல்வதற்கு மனுஸ்மிருதியை அந்த தீர்ப்பு பயன்படுத்திக் கொண்டிருந்தது. அந்த தீர்ப்போ அல்லது மனுஸ்மிருதியோ உயிரியல் தந்தைக்கு அத்தகைய பராமரிப்பு தேவைப்படலாம் என்ற யதார்த்தத்தின் மீது எந்தவிதமான கவனத்தையும் செலுத்தவில்லை. மனுஸ்மிருதியின் அடிப்படையில், ஆன்மா, ஆன்மீகம், சொர்க்கம், நரகம் என்ற கருத்துக்களின் அடிப்படையில், குறிப்பாகச் சொல்வதென்றால் 2016ஆம் ஆண்டு தாஸ் எதிர் தாஸ் வழக்கின் கௌஹாத்தி உயர்நீதிமன்றத் தீர்ப்பு மனுஸ்மிருதியில் உள்ள அந்த சுலோகத்தை எடுத்துக் கொள்வதன் மூலம், அத்தகைய யதார்த்தத்தை, மனிதர்களின் உண்மையான தேவைகளை நிராகரிப்பதற்கு இந்திய உயர்நீதித்துறை மனுஸ்மிருதி ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதை நம்மால் தெளிவாகக் காண முடிகிறது.
நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அந்த தீர்ப்பு அசாம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய கௌஹாத்தி உயர்நீதிமன்றத்தின் பிராந்திய எல்லைக்குள் உள்ள பகுதிகளுக்கான சட்டமாகவே நிலைத்து இருக்கிறது. முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையில் பிற நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் அதைப் பயன்படுத்திக் கொள்வதற்கான வழியை அந்த தீர்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதனுடைய தாக்கம் பல இடங்களுக்கும் பரவுவதற்கு ஏற்றதாகி உள்ளது. அவ்வாறு ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்த தகவல்களை நான் சேகரித்திருக்கிறேன். அந்த தீர்ப்பின் உடனடித் தாக்கமாக, மனுஸ்மிருதி சுலோகங்களுடன், ஹிந்து மதத்தில் உள்ள சொர்க்கம், நரகம், ஆன்மா, ஆன்மீகம் போன்ற கருத்துக்களும் கூட ஹிந்து தனிநபர் சட்டம் குறித்த பகுப்பாய்விற்கான காரணிகளாகப் பயன்படுத்தப்படலாம். ஹிந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம், ஹிந்து தனிநபர் சட்டம் குறித்த பல சட்டங்களின்படி, பௌத்தம், சமணம், சீக்கியம் போன்ற மதங்களும் ஹிந்து மதத்திற்குள் அடங்குகின்றன. இந்த மதங்கள் அனைத்திலும் சொர்க்கம், நரகம், ஆன்மா, ஆன்மீகம் என்ற அந்த நான்கு கருத்துகள் குறித்த புரிதல் வேறுபாடுகளுடனே இருக்கின்றது. ஹிந்து தனிநபர் சட்டத்தை விளக்குவதற்கான கருவியாக மனுஸ்மிருதியைப் பயன்படுத்துகின்ற அந்த தீர்ப்பும், மற்ற பிற தீர்ப்புகளும் இந்தியாவின் பெரும்பான்மை மதத்தின் கொள்கையாக இருக்கின்ற மனுஸ்மிருதியை இங்கே சிறுபான்மை மதங்களாக இருக்கின்ற பௌத்தம், சமணம், சீக்கியம் போன்ற மதங்களின் மீது சுமத்துவதாக நீதிமன்றங்களுக்குத் தோன்றவே இல்லையா? அவ்வாறு இல்லையென்றால் பொருத்தமான இடங்களில் போதுமான கட்டுப்பாடுகளும், விதிவிலக்குகளும் வைக்கப்பட்டிருக்கின்றனவா? நீதித்துறை அறிவிப்புகளில் கிடைக்கின்ற சான்றுகள் அவ்வாறான கட்டுப்பாடுகள் எதுவும் இருப்பதைக் குறித்துக் காட்டவில்லை.
தத்தெடுப்பு, பராமரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தந்தை-மகன் உறவு குறித்து ஆராய்வதற்காக மனுஸ்மிருதியைப் பயன்படுத்திய தருணத்தில் கோத்திரம் என்ற மற்றொரு மோசமான கதவும் நீதிமன்றத்தால் திறந்து வைக்கப்பட்டது. கோத்திரம் என்பது சாதியவாதச் செயல்பாட்டின் வேரில் இருக்கின்றது. குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகளாக தெற்கு, தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தலித்-பகுஜன்-ஆதிவாசி மக்களின் வாழ்க்கையை பிராமணியவாதம் அழிப்பதற்கு அது உதவி வந்திருக்கிறது. கோத்திரம் தன்னுடைய சாராம்சத்தில், சாதி அமைப்பின் கட்டமைப்பை, வர்ணாசிரம தர்மத்தைக் கொண்டிருக்கின்ற செயல்பாடாகவே உள்ளது. ஹிந்து சட்டங்களின் அடிப்படையில் இந்திய நீதித்துறையால் கோத்திரம் குறித்து இதற்கு முன்னர் விவாதிக்கப்பட்டதே இல்லை என்று நாம் கொள்ளத் தேவையில்லை. 1915ஆம் ஆண்டிலேயே பாலகங்காதர திலகர் (பாலகங்காதர திலகர் எதிர் ஸ்ரீனிவாஸ் பண்டிட் ஏ.ஐ.ஆர் 1915, பிசி 7) சம்பந்தப்பட்ட தத்தெடுப்பு தொடர்பான வழக்கில் பிரிவி கவுன்சில் ‘சூத்திரர்களுக்கு எந்த கோத்திரமும் இல்லை’ என்று கூறியிருந்தது. இப்போது 2016ஆம் ஆண்டு கௌஹாத்தி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் தந்தை-மகன் உறவு ஆகியவற்றை விளக்குவதில் மனுஸ்மிருதியை இணைத்துக் கொண்டுள்ளதுதான் நீதிமன்றம் செய்திருக்கும் புதிய விஷயமாக இருக்கின்றது.
மதரீதியாக கோத்திரத்தின் அடிப்படையிலே, சொர்க்கம், நரகம், ஆன்மீகம், ஆன்மா போன்ற கருத்துக்களை பிராமணியவாதம் மிகஉறுதியாகப் பராமரிப்பதற்கான நியாயங்களைப் பயன்படுத்தி சாதி அடிப்படையிலான தந்தை-மகன் உறவைத் தீர்மானிப்பதையே மனுஸ்மிருதி தன்னுடைய செயல்பாடாகக் கொண்டிருக்கிறது.
கௌஹாத்தி தீர்ப்பு கோத்திரங்கள் குறித்த தனக்கான புரிதலில் மனுஸ்மிருதியை நீதித்துறை ஏற்றுக் கொள்வதை உறுதிப்படுத்துவதாக இருக்கவில்லையா என்று ஒருவர் ஆச்சரியமடையக்கூடும். அதைத் தவிர, வேறுவிதமாக எதுவும் அந்த தீர்ப்பில் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. அந்த முதல் கேள்விக்கு வெளிப்படையான இணைப்பாக எழுந்திருக்கும் இரண்டாவது கேள்வி பின்வருமாறு இருக்கின்றது. அதாவது, 2016ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட கௌஹாத்தி உயர்நீதிமன்றத்தின் தாஸ் எதிர் தாஸ் தீர்ப்பின் 18ஆவது பத்தியில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள சுலோகத்தின் மூலமாக சொர்க்கம், நரகம், ஆன்மா, ஆன்மீகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பகுத்தாய்வை ஏற்றுக் கொள்வதுடன், கோத்திரம் குறித்த புரிதலுக்காக ஹிந்து சட்டமாகச் செல்லுபடியாகின்ற நூலாக மனுஸ்மிருதியை நீதித்துறை உறுதிப்படுத்துவது என்பது சாதி முறையை நாட்டின் உயர்நீதித் துறை மறைமுகமாக ஏற்றுக் கொள்வதாகாதா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில், ஒரு செயல்பாட்டை (கோத்திரம்) ஏற்றுக் கொண்ட பிறகு, அந்த செயல்பாடு, அதாவது கோத்திரம் பல நூற்றாண்டுகளாக வடிவமைத்து ஆதரித்து வருகின்ற கட்டமைப்பை (சாதி அமைப்பு) ஒருவரால் எவ்வாறு புறக்கணிக்க முடியும்?
சாதியவாதத்தையும், அதன் தாக்கத்தையும் சட்டத்தின் மூலமாக ஒழிப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 14 முதல் 18 வரையிலான சட்டப்பிரிவுகள் முற்படுவதால், மனுஸ்மிருதிக்கான கதவுகள் இன்னும் அடைக்கப்பட்டே இருக்கின்றன. ஆனாலும் சமீப காலங்களில் மிகுந்த ஆர்வத்துடன் மனுஸ்மிருதியை மீண்டும் மீண்டும் இந்திய உயர்நீதித் துறை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் பின்கதவு ஒன்று நிச்சயமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மிகவும் நேர்மையாகச் சொல்வதானால், நீதித்துறையால் மனுஸ்மிருதிக்கும், அது கருத்தில் கொண்டிருக்கும் சாதி அடிப்படையிலான வேறுபாடுகளுக்கும் சட்டரீதியான ஒப்புதல் வழங்கப்பட்டது 2016ஆம் ஆண்டில் முதன்முதலாக நடந்ததாக இருக்கவில்லை. 1976ஆம் ஆண்டு வழங்கப்பட்ட, குஷ்மா எதிர் பல்தேவ் உள்ளிட்டோர் (1975 எஸ்.சி.சி ஆன்லைன் போ.ஆர் (உ.பி.) 53) வழக்கின் தீர்ப்பில் 8ஆவது பத்தியில், ஒருவருக்குப் பெயரிடுகின்ற பிரச்சனையில் (ஹிந்து சட்டத்தில் இருக்கின்ற நாமகரன்), ‘நாமகரன் விழாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகளை மனுஸ்மிருதி வகுத்துக் கொடுத்திருக்கிறது. அதற்கான அளவுகோல்களையும் குறிப்பிட்டிருக்கிறது. அதன்படியே பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்களுக்கு பெயர்கள் இடப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டு மனுஸ்மிருதியால் கட்டாயமாக்கப்பட்டுள்ள சாதி அடிப்படையிலான வேறுபாட்டிற்கு நீதித்துறை சார்ந்த வெளிப்படையான ஒப்புதலை உத்தரப்பிரதேச வருவாய் வாரியம் வழங்கியது. எனவே மனுஸ்மிருதியை, சாதி அடிப்படையிலான அதன் வேறுபாடுகளை ஹிந்து சட்டத்தின் அடித்தளக் கோட்பாடுகளாக இவ்வாறு சாதியவாதத்தை ஏற்றுக்கொள்வதற்கான பின்புற நுழைவுப் பாதை வழியாக மறைமுகமாக ஏற்றுக் கொள்வது, அவற்றை நீதித்துறை நியாயங்களின் அடிப்படையாக ஆக்குவது போன்றவை புதிய செயல்முறைகளாக இருக்கவில்லை. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றங்களின் பலத்த ஆதரவை அவை பெற்று வந்திருக்கின்றன.
உச்சநீதிமன்றத்தால் சமீபத்தில் சில கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டிருப்பது உண்மைதான். 2019 செப்டம்பர் 27 அன்று, ஜோசப் ஷைன் எதிர் யூனியன் ஆஃப் இந்தியா ((2019) 3 எஸ்.சி.சி 39 மற்றும் (2018 எஸ்.சி.சி ஆன்லைன் எஸ்சி 1676)) வழக்கில் கூடாஒழுக்கம் நியாயப்படுத்தப்பட்டது (குடும்பங்களில் அது தவறு என்று தக்கவைக்கப்பட்டிருந்தாக இருந்தாலும்). மறுநாள் இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் பிறர் ((2019) 11 எஸ்.சி.சி 1) தொடர்ந்த சபரிமலை கோவில் நுழைவு வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பில், மாதவிடாயுடன் உள்ள பெண்கள் சபரிமலைக் கோவிலுக்குள் நுழைவதைத் தடுக்கின்ற அறிவிப்பு சட்டவிரோதமானது, அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறப்பட்டது. இந்த இரண்டு தீர்ப்புகளிலும் ஆணாதிக்க நூலாக மனுஸ்மிருதி அடையாளம் காணப்பட்டு நீதிமன்றங்கள் மனுஸ்மிருதியிலிருந்து வேறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தன. குறைந்தபட்சம் நீதிமன்றத்தால் கூடாஒழுக்கம் மற்றும் மாதவிடாயுடன் உள்ள பெண்களின் கோவில் நுழைவு தொடர்பான வழக்குகளில் மனுஸ்மிருதியின் பொருத்தமற்ற தன்மை நிறுவப்பட்டது.
1953ஆம் ஆண்டிலேயே மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தால் இதேபோன்றதொரு கட்டுப்பாடு முன்வைக்கப்பட்டது. மனுஸ்மிருதி பற்றி குல்லூகப் பட்டர் எழுதிய கருத்துக்களின் அடிப்படையிலான கோல்ப்ரூக்கின் மொழிபெயர்ப்பில் உள்ள மனுஸ்மிருதியின் சுலோகங்கள் IX: 77-83, சூழ்நிலைகளைப் பொறுத்து சில கட்டளைகளை முன்வைத்து முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே கணவன் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதை ஏற்புடையதாக்கித் தருகின்றன. மறுமணம் செய்வதற்கான காரணங்களை அமைத்துத் தருகின்ற அந்த சுலோகங்கள், முதல் கணவருக்கு இரண்டாவது முறையாகத் திருமணம் நடைபெறும் போது, கணவனை விட்டு வெளியேறுகின்ற உரிமை முதல் மனைவிக்கு இல்லை என்றும் குறிப்பிடுகின்றன. ஒருவேளை முதல் மனைவி கணவனிடமிருந்து வெளியேற விரும்பினால், அவள் கட்டாயமாக அங்கேயே இருக்க வைக்கப்பட வேண்டும் என்று அந்த சுலோகங்கள் கட்டளையும் இடுகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டிலே ஹிந்து சட்டத்தை விளக்குவதற்கும், அதன் அடிப்படையில் நீதித்துறை முடிவுகளை எடுப்பதற்கும் முயன்ற காலனியர்கள், அதுபோன்ற கருத்தில் எந்தத் தவறும் இருப்பதாகக் காணவில்லை. அவர்கள் அவ்வாறு செய்கின்ற போது, ஹிந்து குடிமக்களில் அதிகாரம் பெற்ற பிரிவினரைக் கோபப்படுத்தாமல் இருப்பதற்கு, ஹிந்துக் கொள்கைகளின் மீது பகுத்தறிவுவாதத்தைத் திணிக்காமல் இருப்பதே சிறந்தது என்றே கருதினார்கள். அந்த பிரச்சனையில் தீர்ப்புகளை வழங்குவதற்கு அவர்கள் கோல்ப்ரூக்கின் புரிதலையே பெரிதும் நம்பினர். அதன் விளைவாக, பத்தொன்பதாம் நூற்றாண்டு, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி முழுவதும் காலனித்துவ இந்தியாவின் பல்வேறு உயர்நீதித்துறை அதிகாரிகள் மனுஸ்மிருதியின் மோசமான கட்டளைகளை ஆதரித்து வழங்கிய சங்கிலித் தொடரான தீர்ப்புகளை நம்மால் காண முடிகிறது. அது மட்டுமல்லாது, ஹிந்து தனிநபர் சட்டங்கள் குறித்து முல்லா (ஹிந்து சட்டத்தின் கோட்பாடுகள், 6ஆவது பதிப்பு. பக். 611), மித்தர் (துவாரகநாத் மித்தர் எழுதிய ஹிந்து சட்டத்தில் பெண்களின் நிலை, பக். 317) ஆகியோர் எழுதிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பாலின வன்முறையைப் புனிதப்படுத்தும் வகையில் இருக்கின்ற அவ்வாறான கொள்கைகளுக்கான மறைமுகமான ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.
1936க்குப் பிறகே நீதித்துறையின் போக்கில் சமத்துவமான, நவீன அணுகுமுறைகள் கொண்ட மாற்றத்தைக் கவனிக்க முடிந்தது. நாகேந்திரம்மா எதிர் ராமகோட்டய்யா (1953 எஸ்.சி.சி ஆன்லைன் மெட் 263) வழக்கில் மெட்ராஸ் உயர்நீதிமன்றம், நவீன இந்திய நீதித்துறையின் முடிவெடுக்கின்ற செயல்பாடுகளில் மனுஸ்மிருதியில் உள்ள மிகக்கொடூரமான விதிகள் செல்லாது என்று தீர்ப்பளித்தது. நீதித்துறை மனுஸ்மிருதியின் கொள்கைகள், விதிகள் தடையின்றி பயன்படுத்தப்படுவதை அவ்வாறு கட்டுப்படுத்தியது பாராட்டத்தக்கது என்றாலும், அதுபோன்ற மிகச் சில கட்டுப்பாடுகள் எப்போதாவது ஒருமுறையே நீதிமன்றங்களால் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தக் கட்டுரையில் விவாதிக்கப்பட்ட மூன்று தீர்ப்புகள் மற்றும் இதில் இருக்கின்ற சில பத்திகளைத் தவிர, இதுவரையிலும் இந்திய நீதித்துறை வேறு எதுவும் செய்திருப்பதாகக் காண முடியவில்லை.
துரதிர்ஷ்டவசமாக, 1953இல் அந்தப் பாராட்டத்தக்க முயற்சி
நடந்து மூன்று ஆண்டுகளிலேயே மார்டி எதிர் மார்டி வழக்கில் (1956 எஸ்.சி.சி
ஆன்லைன் மெட் 186) ‘மாமுனிவர்’ என்று மனுவை மெட்ராஸ் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டிருப்பதைக் காண முடிந்தது. இருந்தபோதிலும்,
மனுஸ்மிருதியில் உள்ள சில பகுதிகள் சமீபத்தில் இரண்டு முறை உச்சநீதிமன்றத்தால் வெளிப்படையாக
நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. பிராமணியவாதக் கொள்கைகளுடன் இன்றைக்கு இந்தியாவைச் சூழ்ந்திருக்கின்ற அரசியல்
இருந்தபோதிலும், மனுஸ்மிருதி மற்றும் பிராமணியவாத ஆதாரம் கொண்ட ஹிந்து சட்டத்தில்
இருக்கின்ற அநீதியான ஏற்பாடுகள் எதிர்வரும் காலங்களில் மறுக்கப்படும் என்ற
நம்பிக்கையின் ஒளிக்கீற்றை 2018ஆம் ஆண்டு செப்டம்பரில் நம்மால் கவனிக்க முடிந்தது.
தந்தை மற்றும் தாய்வழி குடும்பத்தினர் திருமணத்தின் போது
தங்கள் மகள்களுக்கு வழங்குகின்ற பரிசுகள், சில சந்தர்ப்பங்களில் முன்கூட்டியே
தருகின்ற பொருட்களை (கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சகுந்தலா என்ற சுஷ்மா விதாதாஸ்
மூலமாக ஜகந்நாத் கத்ரி & பிறர் எதிர்
மகாராஷ்டிர மாநில வருவாய் மற்றும் வனத்துறை மற்றும் பிறர் வழக்கில்
உச்சநீதிமன்றம் செய்ததைப் போல) சமூகரீதியான தயவாக நிறுவுவதற்காக மனுஸ்மிருதியைப்
போற்றுவது தொடர்ந்து வருகின்ற போக்காகவே இருக்கின்றது. அந்தப் போக்கு ஆபத்தானது
என்பது சொல்லாமலே தெரிகிறது. மனுஸ்மிருதி, கோத்திரங்களை ஏற்றுக் கொள்கிற. அதன்
மூலம் சாதி வேறுபாடுகளை ஏற்றுக் கொள்கின்ற மிகவும் மோசமான யதார்த்தத்திற்கு அருகே நீதித்துறை
நம்மைக் கொண்டு சேர்த்திருக்கிறது. புறக்கணிக்க இயலாத அளவிற்கு அதை
நோக்கிய குழப்பமான சாய்வு இருப்பது ஏற்கனவே பலமுறை கண்டறியப்பட்டுள்ளது.
ஏறத்தாழ நாற்பது முறை மனுஸ்மிருதியைப் போற்றியிருக்கின்ற இந்திய உயர்நீதித்துறை, மூன்று முறை மட்டுமே மனுஸ்மிருதியின் குறிப்பிட்ட சுலோகங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள குறிப்பிட்ட கருத்துக்களிலிருந்து தன்னை வேறுபடுத்திப் பார்க்க முயன்றிருக்கிறது அல்லது அவற்றிலிருந்து வேறுபட்டிருக்கிறது. மற்ற அனைத்து நிகழ்வுகளிலும், மேற்கோள் காட்டப்பட்ட அல்லது மேற்கோள் காட்டப்படாத, குறிப்பிடப்பட்ட அல்லது குறிப்பிடப்படாத சுலோகங்களைத் தொடர்ந்து நிலைநிறுத்தி, அத்தகைய சுலோகங்களின் அடிப்படையில் தன்னுடைய தீர்ப்புகளை வழங்கியிருப்பதன் மூலம் நீதிமன்றத்தின் அணுகுமுறை மிகவும் ஆபத்தானதாக மாறியிருக்கிறது. நீதிமன்றத்தின் இத்தகைய அணுகுமுறை சாதி, ஆணாதிக்கத்தை அடித்தளமாகk கொண்டிருக்கும் மிகமோசமான ஹிந்து நூல்களில் ஒன்றான மனுஸ்மிருதிக்கு சட்டரீதியான புனிதத்தையே வழங்கியிருக்கிறது.
அது மட்டுமல்லாமல், தன்னுடைய நோக்கத்தை ஹிந்து சட்டத்திற்கும் அப்பாற்பட்டதாக உயர்நீதித்துறை விரிவுபடுத்தி வருவதும் தெரிய வருகிறது. அது மெஹ்ருன்னிசா எதிர் சையத் ஹபீப் வழக்கில் 2014 கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பத்தி 1இல் மிகவும் தெளிவாகக் காணப்படுகிறது. தீர்ப்பின் ஒவ்வொரு வாக்கியத்திலும், ஒவ்வொரு வழக்கு குறித்தும், சுலோகங்களைத் தவிர வேறு எதுவுமிருக்கவில்லை. மனுஸ்மிருதியும், அதன் சுலோகங்களும் சட்டப்பூர்வமாகச் செல்லுபடியாகும்; குறிப்பாக அவை வேறுபட்டிருக்கவில்லை என்றால், அவற்றையே அடிப்படையாகக் கொண்டு தீர்ப்புகளை வழங்கலாம் என்ற சட்டபூர்வமான சூழ்நிலையை நிறுவுகின்ற பணியில் இந்திய உயர்நீதித்துறை இறங்கியுள்ளது. 1953ஆம் ஆண்டில் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ஒருமுறையும், 2018 செப்டம்பரில் உச்சநீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்புகளான சபரிமலை கோவில் நுழைவு, கூடாஒழுக்கம் குறித்த வழக்கு என்று இரண்டு முறையும் மனுஸ்மிருதியின் சுலோகங்கள் இதுவரையிலும் மூன்று முறை மட்டுமே வேறுபாடு கொண்டிருப்பவையாக நீதிமன்றங்களால் கண்டறியப்பட்டுள்ளன.
ஹிந்து குடும்பம், சொத்து, தனிநபர் சட்டங்களில் தயாபாகா அல்லது மிதாக்சராவின் கொள்கைகள் செல்லாதவை என்ற அபத்தமான கருத்துக்காகவோ அல்லது பொதுவான சட்டம் அமைதியாக இருக்கும் இடங்களில் நீதித்துறையால் விளக்கமளிக்க எடுத்துக் கொள்ளப்படும் மீமாம்சா கொள்கைகளைக் கைவிடுவதற்கு ஆதரவாகவோ நான் இங்கே வாதிடவில்லை. ஆனாலும் மிதாக்சரா அல்லது மீமாம்சா கொள்கைகளை விளக்குவதற்காக மனுஸ்மிருதியைப் பயன்படுத்திக் கொள்வது, அதன் பல்வேறு கொள்கைகளை, விதிகளை, சுலோகங்களை ஏற்றுக் கொள்வது ஒன்றும் ஆபத்து குறைவானதாக இருக்கவில்லை. அதுபோன்ற பயன்பாடுகள் நீதித்துறை மறைமுகமாக மனுஸ்மிருதிக்கு ஒப்புதலை வழங்குவதாகவே இருக்கும். சாதியவாதம் உண்மையில் மனுஸ்மிருதியின் அடிப்படைக் கட்டமைப்பாகவும், அதை அடிப்படையாகக் கொண்ட மோசமான மனுவாதமாகவும் இருப்பதால், மனுஸ்மிருதியை ஏற்றுக் கொள்ளும் ஒருவரால், அதன் உண்மையான சாதி அஸ்திவாரங்களை நிராகரிக்க முடியும் என்று வாதிடுவது அப்பாவித்தனமாகவே இருக்கும்.
சமத்துவம் உலகெங்கிலும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான பாதிப்பின் அறிகுறியாகவே இந்திய நீதித்துறையின் உயர்மட்டத்தில் மனுஸ்மிருதியை ஏற்றுக்கொள்வது, சரிபார்ப்பது என்று அதிகரித்து வருகின்ற இந்தப் போக்கு இருக்கிறது என்பதை உறுதியுடன் கூற முடியும். அந்த பாதிப்பு, அதன் அறிகுறிகள், ஆபத்துகள் குறித்து மிகுந்த விழிப்புணர்வுடன் நாம் இருக்க வேண்டும்.
https://countercurrents.org/2020/07/manusmriti-and-the-judiciary-a-dangerous-game/
Comments