ராஜீவ் பார்கவா
அரசியல் கோட்பாட்டாளர்
வளரும் சமூகங்கள் குறித்த ஆய்வு மையம், புதுதில்லி
டெக்கான்
ஹெரால்ட் பத்திரிகையில் அனைவரையும் சிலிர்க்க வைக்கின்ற செய்தி சில மாதங்களுக்கு
முன்பு வெளியாகி இருந்தது. 2017ஆம் ஆண்டில் பெங்களூரு நகர்ப்புற மாவட்டங்களில்
தலித்துகளுக்கு எதிரான 210 வன்முறை வழக்குகளும், அதன் கிராமப்புற மாவட்டங்களில்
106 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதைப் போன்று 2016 ஜூன் 2016 முதல் 2017
ஏப்ரல் 2017 வரையிலான காலகட்டத்தில் கேரளாவில் 883 வழக்குகள் பதிவாகி இருந்தன. 2007-2017
ஆண்டுகளுக்கிடையிலான பத்தாண்டு காலப்பகுதியில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் 66%
அதிகரித்திருப்பதான தகவல்களும் வெளியாகியுள்ளன.
மிகவும்
உறுதியான நிகழ்வுகளை ஆராயும்போது, அந்த புள்ளிவிவரங்களுக்குள் இருக்கின்ற பயங்கரம்
தெளிவாகிறது. கர்நாடகாவின் பத்ரா நதியில் நீச்சல் போட்ட தலித்துகள் சிலர் மீது, 200
பேர் கொண்ட கும்பல் ஒன்று 2019 ஏப்ரல் 12 அன்று தாக்குதலை மேற்கொண்டது. உயர்சாதியினருக்கு
மட்டுமே அந்த நதி சொந்தமானது என்று அந்த மக்கள் மீது தாக்குதலை நடத்தியவர்கள்
கூச்சலிட்ட போது, நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 15ஆவது பிரிவு அச்சிடப்பட்டுள்ள காகிதத்திற்கு
எந்தவொரு மதிப்பும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. பற்கள் எதுவுமின்றி, இயலாமையுடன்
எந்தவொரு பயனுமற்றதாகவே அந்தச் சட்டப் பிரிவு அப்போது இருந்தது.
சமூக
வன்முறையின் இத்தகைய மிருகத்தனமான தாக்குதல்கள், எந்த வகையான சிந்தனைகள் மக்களிடையே
இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன? குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள்
என்பதாலேயே அப்பாவி மக்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்களா? இதுபோன்ற பெரும்பாலான வன்முறைகள்
நிலம், ஊதியம், உரிமைகளின் அடிப்படையிலான பிரச்சனைகளைச் சுற்றியே நிகழ்வதால்,
வறுமை மற்றும் அதிகாரமின்மை போன்றவையே எளிய மக்கள் மீது நிகழ்த்தப்படுகின்ற வன்முறைகளுக்கு
காரணமாவையாகக் கருதப்படுகின்றன.
ஆனால் இத்தகைய
கொடுமைகளுக்குப் பின்னால் உள்ள பிரதான இயக்கத்தை - பிராமணியத்தை இதுபோன்ற
விளக்கங்கள் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவதால், அவை போதுமான ஆழத்திற்குச் செல்வதில்லை.
பிராமணியத்திற்கு எதிரான வலுவான இயக்கம் இல்லாமல், தலித் விடுதலை என்பது சாத்தியமே
இல்லை என்பதே பி.ஆர்.அம்பேத்கரின் கருத்தாக இருந்தது. அப்படி என்றால், இங்கே எதிர்க்கப்படுவது
என்னவாக இருக்கிறது? பிராமணியத்தின் முக்கிய அம்சங்கள் யாவை? என்ற கேள்விகளை நாம்
முன்வைக்க வேண்டிய தேவை எழுகிறது.
பிராமணிய எதிர்ப்பு ‘பிராமண எதிர்ப்பு’ அல்ல
‘பிராமணியத்தை’
எதிர்ப்பதை ‘பிராமண எதிர்ப்பு’ என்பதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. அவ்வாறு செய்வது
அனைத்து பிராமணர்களும் இந்த வன்முறைகளுக்குப் பொறுப்பு என்று சொல்வதாகி விடும். அலாவுதீன்
கில்ஜியின் ஆட்சியில் நடத்தப்பட்ட எந்தவொரு தவறுக்கும் முஸ்லீம்கள் அனைவரின் மீது,
ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு பிரிட்டிஷ் மக்கள் அனைவரின் மீது, அல்லது அப்பாவி
முஸ்லீம் ஒருவரைக் கொலை செய்ததற்காக ஹிந்துக்கள் அனைவரின் மீதும் குற்றம் சாட்டுவதைப்
போன்ற பெரும் மோசடியாகவே அது இருக்கும். கூட்டுப்
பொறுப்பு என்ற இந்த கருத்துக்கு நாம் ஒருபோதும் இரையாகி விடக் கூடாது. சாதிகளால்
பிளவுபட்டிருக்கின்ற சமூகத்தில், பிராமண சாதியைச் சேர்ந்த ஒருவர், பிராமணியத்தின்
அடிப்படை நெறிமுறையைப் பின்பற்றுபவராக இல்லாமல், அதிலிருந்து தார்மீகரீதியாக அவர் விலகியிருக்க
முடியும். மனுஸ்மிருதியை எரிப்பதன் மூலம் பிராமணியத்தை எதிர்ப்பது என்ற தீர்மானத்தை,
சித்பவன் பிராமணரான ஜி.எஸ்.சஹஸ்ரபுத்தேவுடன் இணைந்தே அம்பேத்கர் எடுத்திருந்தார்.
உண்மையில்
அம்பேத்கர் அதற்கும் மேலே முன்னேறியவராகவே இருந்தார். 1938இல் நடைபெற்ற மகா இந்திய
தீபகற்ப (G.I.P) ரயில்வேயின் தாழ்த்தப்பட்ட சாதித் தொழிலாளர்கள் மாநாட்டு உரையில்,
‘பிராமணியத்தை நாம் எதிர்கொள்ள வேண்டிய எதிரி என்று கூறும்போது, ஒரு சமூகமாக
பிராமணர்களின் அதிகாரம், சலுகை, நலன்களை நான் குறிக்கவில்லை’ என்று அம்பேத்கர் கூறினார்.
அந்த அடிப்படையில் பார்க்கும் போது, அவருடைய கூற்று முரணுடன் இருப்பதாகவே தோன்றுகிறது.
பிராமணியத்தால் ஒரு சமூகமாக பிராமணர்களின் அதிகாரம், சலுகை, நலன்களைப்
பாதுகாப்பதைத் தவிர, வேறு எவ்வாறு இருக்க முடியும்? அம்பேத்கரின் அந்த அறிக்கை உண்மையில்
அவ்வளவு குழப்பமானதல்ல.
நமது
வரலாற்றிலிருந்தே ஓர் எடுத்துக்காட்டை நாம் எடுத்துக் கொள்ளலாம். கிமு1500ஆம்
ஆண்டில் ரிக் வேத சமுதாயத்தில் இருந்த சடங்கு நிபுணத்துவம் கொண்ட சமூகம், சடங்குகள்
தொடர்பாக இருந்த தன்னிடம் அறிவை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குள்ளாக
கடத்தி வந்தது. அரசியல் ஆட்சியாளர்கள் அல்லது சாதாரண மக்கள் போன்றவர்கள் அந்த
அறிவைக் கொண்டவர்களாக இருக்கவில்லை என்பதால், அவர்கள் கொண்டிருந்த அறிவின்
காரணமாக, பிராமணச் சமூகத்திற்கென்று சில சலுகைகள் வழங்கப்பட்டன. பிற சமூக
உறுப்பினர்களின் ‘மத’ தேவைகளைப் பூர்த்தி செய்ததற்காக, அந்தக் குறிப்பிட்ட
சமூகத்திற்கு மற்றவர்களுக்குக் கொடுக்கப்படாத மரியாதையும்கூட வழங்கப்பட்டது.
அந்த
நடைமுறை சமூகத்தில் சமத்துவமின்மையை உருவாக்கியது. அதன் விளைவாக உருவான படிநிலை நெகிழ்வாக,
இடைநிகழ்வாக, மீளக்கூடியதாகவே இருந்தது. இவ்வாறு தற்செயலாக உருவாக்கப்பட்ட பிராமணர்களின்
மேன்மை சமூகத்தின் கட்டமைப்புடன் உள்ளார்ந்ததாகவோ அல்லது ஒருங்கிணைந்ததாகவோ இருக்கவில்லை
என்பதால், அது மற்றவர்கள் யாரையும் இழிவுபடுத்துவதாக இருக்கவில்லை. வேள்வியை மையமாகக்
கொண்ட இந்த வேத பிராமணியத்தை, அம்பேத்கர் வெறுத்து அழிக்க விரும்பிய
பிராமணியத்துடன் நாம் தொடர்புபடுத்திக் கொள்ளக் கூடாது. இதுபோன்ற சடங்கு செய்யும்
பிராமணர்களுக்கான முன்னுரிமையை பிராமணியத்துடன் இணைத்துப் பேசுவதற்கு நாம் மறுக்க
வேண்டும்.
ஆழ்ந்த பழமைவாத சித்தாந்தம்
அப்படியானால் பிராமணியம் என்றால் என்ன? அது கடந்த
காலத்தின் நினைவுகளையும், எதிர்காலத்தில் சமூகத்தின் பார்வையையும் குறிக்கின்ற சமூக
அரசியல் சித்தாந்தமாக உள்ளது. அதில் உயர்ந்த, ஆன்மீக சாம்ராஜ்யத்தின் பிரத்தியேகப்
பாதுகாவலர்களாக இருப்பது மட்டுமல்லாமல், இந்த உலகின் ஒவ்வொரு நடைமுறை சிக்கல்
குறித்தும் தங்களுடைய அறிவை வழங்குபவர்களாக மிக உயர்ந்த இடத்தையும் பிராமணர்கள் வகிக்கின்றனர்.
நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட சமூகம் என்றால் என்ன, நல்ல அரசு எவ்வாறு இயங்க வேண்டும்
என்பதற்கான உயர்ந்த அறிவை அவர்கள் கொண்டவர்களாக இருக்கிறார்கள். மிக முக்கியமாக,
சமுதாயத்தில் அவர்களுக்கென்று இருக்கின்ற உயர்ந்த நிலையும், அவர்களிடம் உள்ள உயர்ந்த
அறிவும் பிறப்பிலிருந்தே உருவாகின. இது
அவர்களை இயல்பாகவே மற்ற எல்லா மனிதர்களையும் விட உள்ளார்ந்து உயர்ந்தவர்களாக,
அவர்களை தனி இனமாக (சாதி) உருவாக்கி விடுகின்றது. இந்த உண்மையை எதனாலும்
எதிர்க்கவோ அல்லது மாற்றவோ முடியாது. எவரொருவராலும் பிராமணராக மாற முடியாது; அவ்வாறு
ஒருவரால் பிறக்க மட்டுமே முடியும்.
இந்த சித்தாந்தத்தில் அடுத்த ஜென்மத்தில் ஒருவர் வகிக்கப்
போகின்ற நிலையை அவரின் செயல்பாடுகள் தீர்மானிக்கக்கூடும் என்பது நிச்சயமாக இல்லை. பிராமணர்களுக்கு
மட்டுமல்லாது, மற்ற எந்தவொரு சாதிகளைப் பொறுத்த வரையிலும் இதுவே உண்மையாக உள்ளது. பிறக்கும்போதே
ஒவ்வொருவரின் சாதியும் எந்தவொரு மாற்றமுமில்லாமல் நிர்ணயிக்கப்படுகிறது. ஆதிசூத்திரர்களான
‘தீண்டத்தகாதவர்கள்’ பிறக்கும் போதே, மிகக் கீழான படிநிலையில் பிறக்கின்றனர். அவர்களால்
மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு நடவடிக்கையாலும் அந்த உண்மையை ஒருபோதும் மாற்றவே
முடியாது. ஆக படிநிலையை அவசியமானதாக, மாற்றவே முடியாததாக இந்த சமூக அரசியல்
சித்தாந்தம் ஆக்கி வைத்திருக்கிறது.
அந்த சித்தாந்தம் பின்பற்றுகின்ற படிநிலை சமூக ஒழுங்கு,
இயல்பான ஒழுங்கை ஒத்திருக்கிறது. எவரொருவரும் தன்னுடைய நிலையை இன்னொருவருடன்
பரிமாறிக் கொள்ளவோ அல்லது
மேல் நோக்கி அல்லது கீழ்நோக்கி தங்களை நகர்த்திக் கொள்ளவோ முடியாது. அவ்வாறு செய்வதற்கான
எந்தவொரு முயற்சியும் தார்மீக ரீதியாக தவறானதாகவே கொள்ளப்படும். ‘தலித்துகள் தங்கள்
இடத்திலேயே இருக்க வேண்டும். ஒருவேளை அவர்கள் மேலே செல்ல முயற்சிப்பார்கள்
என்றால், கீழேயே அவர்களை அழுத்தி வைக்க வேண்டும்’
என்றே அந்தப் பார்வை உள்ளது.
பிராமணியம் பழமைவாதத்தின் மிகச் சரியான வடிவமாக இருக்கின்றது.
முன்பிருந்த நிலைமையை நீட்டித்து வைத்துக் கொள்கின்ற சித்தாந்தமாக அது சிறந்து
விளங்குகிறது, தங்களுடைய சமூக அந்தஸ்து, அதிகாரம், சலுகை ஆகியவற்றை நிலைநிறுத்த
விரும்புகின்ற உயரடுக்கினருக்கு முற்றிலும் பொருத்தமானதாக அது இருக்கிறது. பிராமணியம்
இந்தியாவிலும் அதற்கு அப்பாலும் எல்லா இடங்களிலும் பரவுவதற்கும், அங்கெல்லாம்
நீடித்திருப்பதற்கும் இதுவே காரணமாக இருக்கிறது. மத-தத்துவரீதியான உங்களுடைய உலகப்
பார்வை எதுவாக வேண்டுமானலும் இருக்கட்டும். அதைப் பொருட்படுத்தாமல், நீங்கள் அதுபோன்ற
சலுகை பெற்ற உயரடுக்கினராக இருப்பீர்கள் என்றால், நீங்கள் அந்த சித்தாந்தத்தை
தவிர்க்கமுடியாத ஒன்று என்று காண்பவராகவே இருப்பீர்கள்.
எனவே இங்கே பிராமணிய பௌத்தர்கள் அல்லது சமணர்களும் இருக்கக்கூடும்.
இஸ்லாம் அல்லது கிறித்துவத்திற்கு மாறியவர்களும்கூட இந்த சமூக அரசியல்
சித்தாந்தத்தைத் தொடர்ந்து தழுவிக் கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள். முஸ்லீம்கள்,
கிறிஸ்துவர்கள் பலரும் தங்களுடைய நடைமுறை நோக்கங்களுக்காக, முஸ்லீம் அல்லது கிறிஸ்தவ தலித்துகளைத்
தொடர்ந்து தாழ்த்திக் கொண்டிருக்கின்ற பிராமணர்களாக அல்லது தாக்கூர்களாகவே இருந்து
வருகின்றனர்.
தற்போதுள்ள அதிகாரம், சலுகை, உயர் அந்தஸ்தை பிராமணியம் இயல்பாக்குகிறது.
மன்னர்கள் அதை விரும்புகிறார்கள். அதனால் பணக்கார வணிகர்கள், நில உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.
உண்மையில், ஆதிசூத்திரர்கள் மீதான அதிகாரத்தை அது அவர்களுக்கு அளிப்பதாக இருப்பதால்,
படிநிலை சமத்துவமின்மை நிலவுகின்ற இந்த அமைப்பில் உயர்ந்த இடத்தில் இருக்கும் சூத்திரர்களும்கூட
அதை ஏற்றுக் கொள்ளத் தயாராகவே உள்ளனர். சுருக்கமாகச் சொல்வதானால், தற்போதைய சமூக
நிலைப்பாட்டின்படி தங்களுக்கு கீழேயுள்ள அனைவரும் அவர்களுக்கு கட்டளையிடப்படும் பணியைச்
செய்ய வேண்டும், மேலும் அதிகமாக எதுவும் கேட்கக் கூடாது என்றிருப்பதால், மேலே உள்ள
அனைவருமே அந்த பிராமணியக் கருத்தால் கவர்ந்திழுக்கப்பட்டவர்களாக இருந்து வருகின்றனர்.
சாதி, மதம், பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், இந்த படிநிலை ஒழுங்கை ஒப்புக்
கொள்கின்ற, அதற்கான ஒப்புதலை வழங்குகின்ற அல்லது அதனை நியாயப்படுத்துகின்ற எவரொருவருமே
நிச்சயமாக ‘பிராமணியவாதி’யாகவே இருப்பார்.
அடிப்படையில் இந்த சித்தாந்தம் எந்தவொரு சமூக
இயக்கத்திற்கும் எதிரானதாக இருப்பதால், அது தனிப்பட்ட மனிதர்களின் சுதந்திரத்தைக்
கட்டுப்படுத்துகிறது; முழுக்க முழுக்க படிநிலையால் ஈர்க்கப்பட்டிருப்பதால், சமத்துவமற்று
இருப்பதால், மனிதர்களில் ஒரு குழுவை இன்னொரு குழுவிடமிருந்து பிரித்து வைப்பதால், அது
சகோதரத்துவம் குறித்ததாக இருக்கின்ற எந்தவொரு சிந்தனையுடனும் நெருக்கமாகப் பொருந்திப்
போகாது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற ஆன்மாவின் மறுப்பாக அம்பேத்கர் பிராமணியத்தை
வரையறுத்ததில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. அந்த சிந்தனையே பிராமணியத்தையும் இந்திய
அரசியலமைப்பையும் அடிப்படையில் ஒருவருக்கொருவர் எதிர்த்து நிற்க வைக்கிறது.
இந்திய அரசியலமைப்பின்
அடிப்படைக் கொள்கைகளை உண்மையாகக் கடைப்பிடிக்கும் எவரொவரும் தானாகவே
பிராமணியத்திற்கு எதிரானவராகவே இருப்பார். பிராமணியத்தைக் கடைப்பிடிக்கும் ஒருவரோ இந்திய
அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள விழுமியங்களைத் தழுவி ஏற்றுக் கொள்ள முடியாதவராகவே
இருப்பார்.
https://www.thehindu.com/opinion/op-ed/what-does-it-mean-to-oppose-brahmanism/article28658412.ece
Comments