சம்சுல் இஸ்லாம்
தில்லி பல்கலைக்கழக
முன்னாள் பேராசிரியர்
ஹிந்துத்துவா அறிவுஜீவிகள் குஜராத்தில் வந்திறங்கியதுமே தங்களுடைய
வினோதமான கோட்பாடுகளை வெளிக்கொணர்ந்து வைக்கும் வகையில் குஜராத்தில் விசேஷமான, வேடிக்கையான
ஏதோவொன்று நிச்சயம் இருக்க வேண்டும். சமீபத்தில் அந்தப் பட்டியலில் உச்சநீதிமன்ற நீதிபதி
ஏ.ஆர்.தவே இணைந்திருக்கிறார். 2014 ஆகஸ்ட் 2 அன்று அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில்
பம்பாய் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மோஹித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டதொரு
சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றிய தவே, ஒன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பகவத்
கீதை, மகாபாரதம் போன்றவை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறித்தினார். அந்த
இரண்டையும் பள்ளிகளில் அமல்படுத்துவதற்கான உத்தரவை இடுவதற்காக தான் ஒரு சர்வாதிகாரியாக
இருந்தால் நல்லது என்று அவர் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தார். ‘மதச்சார்பற்ற சிலர்...
மதச்சார்பற்றவர் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்… நான்
மட்டும் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்திருந்தால், ஒன்றாம் வகுப்பிலேயே கீதை, மகாபாரதத்தை
அறிமுகப்படுத்தியிருப்பேன். உங்களுடைய வாழ்க்கையை வாழ்வதற்கு கற்றுக் கொள்ளும் வழியாக
அதுதான் இருக்கும். எனவே நான் மதச்சார்பற்றவன் அல்லது நான் மதச்சார்பற்றவன் இல்லை என்று
யாராவது சொன்னால் நான் அதை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் ஏதாவது நல்லது நடக்க வேண்டும்
என்று இருந்தால், அவற்றை எங்கிருந்தாவது பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்று பேசினார்.
பள்ளிகளில் பாடத்திட்டமாக வைப்பதற்கான தகுதி அவற்றிற்கு இருக்கிறதா
அல்லது இல்லையா என்ற விவாதத்திற்குள் இப்போது செல்ல வேண்டியதில்லை. மேற்குறிப்பிடப்பட்ட
அவரது பேச்சில் உள்ள மேற்கோள்கள் நீதிபதியாக இந்தியாவின் ஜனநாயக-மதச்சார்பற்ற அரசியலமைப்பை
உறுதியாகக் கடைப்பிடிப்பேன்
என்று அவர் எடுத்திருந்த உறுதிமொழியை நேரடியாக மீறுவதாகவே இருக்கின்றன.
இந்த நாட்டின் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக உள்ள ஒருவர், சர்வாதிகாரியாக இருக்க விரும்புகிறேன்
என்று சொல்வது மட்டுமல்லாது, மதச்சார்பின்மையையும் இவ்வாறு எப்படி இழிவுபடுத்த முடியும்?
உச்சநீதிமன்றத்தில் பதவியிலிருக்கின்ற நீதிபதியின் இவ்வாறான எதேச்சதிகாரக் கருத்துக்களைக் கண்டு கொள்ளாமல் ஊமையாக, வெறுமனே பார்வையாளராக இந்திய
குடியரசுத் தலைவர் இருக்கலாமா?
மகாபாரதத்தின் மீது நீதிபதி தவே கொண்டிருக்கும் காதலைப் பொறுத்தவரை,
அவர் முதலில் ஹிந்து உரையாடல்களுக்குள்ளேயே மகாபாரதத்தின் வரலாற்றுத்தன்மை குறித்த
தீவிரமான சிக்கல்கள் இருந்து வருவதை அறிந்து கொள்ள வேண்டும். தீண்டத்தகாமை (ஏகலைவன்
விவகாரம்) சாதியவாதம், வன்முறை, இனவெறி ஆகியவை இந்த காவியங்களில் போதிக்கப்படுகின்றனவா
என்ற விவாதத்திற்குள் செல்லாமல், இந்த காவியங்களின் வரலாற்றுத்தன்மை குறித்து எழுப்பப்படுகின்ற
கேள்விகளை மட்டும் நாம் பார்க்கலாம். மகாபாரதத்தின் வரலாற்றுத் தன்மை குறித்த கேள்விகளை
மதச்சார்பற்ற வரலாற்றாசிரியர்கள் மட்டுமே எழுப்புவதில்லை, இந்திய கலாச்சார பாரம்பரியம்
குறித்த நூல் தொகுதிக்குப் பங்களிப்பு செய்திருக்கின்ற, விவேகானந்தரால் நிறுவப்பட்ட
(சனாதன ஹிந்து மதத்தின் மீதான நம்பிக்கையை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக கொண்டிருக்கின்ற)
ராமகிருஷ்ணா மிஷனில் இருக்கின்ற வரலாற்றாசிரியர்களும், அறிஞர்களும்கூட அத்தகைய கேள்விகளை
எழுப்பியுள்ளனர்.
சமஸ்கிருத காவியங்கள் குறித்த வல்லுநரும், மேற்குறிப்பிடப்பட்ட நூல் தொகுதிக்கு பங்களித்திருப்பவருமான ஏ.டி.புசல்கர் ‘தர்மம், நீதி
மற்றும் பிறவற்றை மகாபாரதத்தில் இணைத்துக் கொள்வதற்குக் காரணமாக இருந்த பார்கவர்கள்
ராமாயணத்திலும் பல அத்தியாயங்களைச் சேர்த்தனர். அவை இரண்டிலும் ஒரே மாதிரியாக இருக்கின்ற
பத்திகள், ஒரே மாதிரியான உருவகங்கள் எடுத்துக்காட்டுகின்ற ஒற்றுமை, அவற்றின் நடை, வெளிப்பாடு,
விளக்கத்தில் மட்டுமல்லாமல், அந்த இரண்டு காவியங்களுக்கிடையே உள்ள தொன்மம், தத்துவம் ஆகியவற்றிலும் நெருக்கமாக அமைந்திருக்கின்றது. ராமாயணமோ
மகாபாரதமோ கிரியா-சூத்திர காலத்தின் பிற்பகுதியில் காவியமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை,
அவை இரண்டும் தனித்தனியாக சுயாதீனமாக உருவாக்கப்படவுமில்லை. (மகாபாரதத்தில் உள்ள) உத்தரகாண்டம்
கங்கைச் சமவெளிகளின் பல கதைகளைக் கொண்டுள்ளது, அதற்குப் பின்னர் மகாபாரதத்தில் உள்ள நீதிபோதனைப் பகுதிகள் பொதுவாக கோசாலா, மகதாவிலேயே நடைபெறுவதாக உள்ளன; இந்த இரண்டு
காவியங்களின் பிற்காலத்து வளர்ச்சி ஒரே இடத்தில் வளர்ந்ததாகவே உள்ளது’ [டி. புசல்கர்,
இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் தொகுதியில் ‘ராமாயணம்: அதன் வரலாறு மற்றும் தன்மை’,
தொகுதி. 2, ராம கிருஷ்ணா மிஷன், கல்கத்தா, 1993, பக்கம் 29].
பொதுவாக ராமாயணம் மகாபாரதத்திற்கு முந்தையது என்றே நம்பப்படுகிறது.
ஆயினும் ‘ராமாயணம் மூலமா, அல்லது மகாபாரதம் மூலமா அல்லது இந்த இரண்டு காவியங்களும்
மூன்றாவது மூலத்திலிருந்து தனித்தனியாக கடன் வாங்கப்பட்டவையா என்ற கேள்விக்கு எந்தவொரு
திட்டவட்டமான பதிலையும் பெறுவதை, ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் விசித்திரமான தன்மையும்,
வளர்ச்சியும் தடுக்கின்றன’ என்று புசல்கர் வலியுறுத்துகிறார். [டி. புசல்கர், இந்தியாவின்
கலாச்சார பாரம்பரியம் தொகுதியில் ‘ராமாயணம்: அதன் வரலாறு மற்றும் தன்மை’, தொகுதி.
2, ராம கிருஷ்ணா மிஷன், கல்கத்தா, 1993, பக்கம் 30].
அதே நூல் தொகுதியில் மகாபாரதத்தின் தோற்றத்தின் மீது வெளிச்சத்தைப்
பாய்ச்சுகின்ற பாலி, சமஸ்கிருத இலக்கியங்கள் குறித்த மற்றொரு வல்லுநரான பி.எல்.வைத்யா
‘தற்போதைய உரையின் பெரும்பகுதி பல நூற்றாண்டுகளின் படைப்பாகவும், கி.பி.நான்காம் நூற்றாண்டிற்குப்
பிறகு சேர்த்தல் செய்யப்பட்டதாகவும் இருக்கின்றது’ [டி. புசல்கர், இந்தியாவின் கலாச்சார
பாரம்பரியம் தொகுதியில் ‘ராமாயணம்: அதன் வரலாறு மற்றும் தன்மை’, தொகுதி. 2, ராம கிருஷ்ணா
மிஷன், கல்கத்தா, 1993, பக்கம் 53] என்று ஒப்புக் கொள்கிறார். குறிப்பிட்ட நாளில் மகாபாரதத்தைத் தொகுத்ததற்கான
ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறுகின்ற பண்டைய இந்திய இலக்கியம் குறித்த வல்லுநரான
வின்டர்னிட்ஸுடன் உடன்படுகின்ற வைத்யா, ‘பாரதம் அல்லது மகாபாரதம் என்று குறிப்பிடப்படுகின்ற
காவியத்தின் வடிவம் வேத காலத்தில் இருந்திருக்கவில்லை. பௌத்த தேசத்தில் அது அதிகம்
அறிந்திருக்கப்படவில்லை’ என்றும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். ஆக கிமு நான்காம் நூற்றாண்டிலிருந்து
கிபி நான்காம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் அது இயற்றப்பட்டிருக்க வேண்டும்,
காவியம் வளர்ச்சியடைந்த பிற்கால கட்டங்களில் காணப்பட்ட பெரும் பகுதி, அவர்களுடைய இனம்
சார்ந்த சில முக்கிய உறுப்பினர்களின் மகத்துவத்தை பெரிதுபடுத்தும் நோக்கில் கூடுதலாகச்
சேர்க்கப்பட்ட கதைகளாலேயே ஏற்பட்டிருக்க வேண்டும்…’ [டி. புசல்கர், இந்தியாவின் கலாச்சார
பாரம்பரியம் தொகுதியில் ‘ராமாயணம்: அதன் வரலாறு மற்றும் தன்மை’, தொகுதி. 2, ராம கிருஷ்ணா
மிஷன், கல்கத்தா, 1993, பக்கம் 53-54].
மற்றொரு முக்கிய இந்திய
வரலாற்றாளரான ஆர்.என்.தண்டேகர், அதனுடைய பல பதிப்புகள், துணை பதிப்புகள் மூலமாகவே மகாபாரதத்தின்
பரவல் வகைப்படுத்தப்பட்டது என்று உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த நூற்றாண்டுகளின் போக்கில்
அதன் உருவாக்கத்திற்குப் பிறகு, வாய்வழி மரபாக ஒவ்வொரு புலவர் மூலமாக வெவ்வேறு வடிவங்களிலும்,
அளவுகளிலும் மகாபாரதத்தின் பிரமாண்டமான வளர்ச்சியும், பாகுபாடற்ற இணைவும் மக்களிடம்
ஒப்படைக்கப்பட்டன. எனவே, அதன் பகுதி உரை கறைபடிவதற்கு, விரிவாக்கத்திற்கு எதிராக அல்லது
தன்னிச்சையான திருத்தத்திற்கு, இயல்பாக்குதலுக்கு எதிரான சிறப்பு கவனம் செலுத்தப்படவில்லை.
ஆரம்ப கட்டங்களில் கூட, மகாபாரதத்தின் பாரம்பரிய உரை சீராக, ஒற்றைத் தன்மையுடன் இருக்கவில்லை.
மாறாக அப்போதே அது பலவகைப்பட்டதாக இருந்ததாகவே தெரிகிறது’ [எம்.ஆர்.யார்டியின் முன்னுரையில்
ஆர்.என். தண்டேகர், மகாபாரதம்: அதன் தோற்றமும் வளர்ச்சியும், பண்டார்கர் ஓரியண்டல்
ஆராய்ச்சி நிறுவனம், பூனா, 11986].
ஹிந்துத்துவா அறிவுஜீவிகளான
இந்திய வரலாற்று ஆய்வு மையத்தின் (ஐ.சி.எச்.ஆர்) தலைவர் யெல்லபிரகதா சுதர்சன்ராவ் மற்றும்
நீதிபதி ஏ.ஆர்.தவே போன்றவர்கள் இந்தியக் காவியங்கள் குறித்து சில அடிப்படை வாசிப்புகளைச்
செய்ய வேண்டும். மதச்சார்பின்மையை எதிர்த்துப் போராடுவது என்ற பெயரில் அந்தக் காவியங்களின்
வரலாற்றுத்தன்மை குறித்த உரையாடல்களை இந்த ஹிந்துத்துவா அறிவுஜீவிகள் அழித்து விடுவதற்கு
நாம் அனுமதிக்கக்கூடாது.
குஜராத்தில் இருக்கும்போது,
இதுபோன்ற அருமையான திட்டத்தை முன்வைத்த முதல் நபராக நீதிபதி ஏ.ஆர்.தவே இருக்கவில்லை.
இதே குஜராத்தில்தான் ஆர்.எஸ்.எஸ்சின் இரண்டாவது சர்சாங்சலக்கும், இன்றுவரை அந்த அமைப்பின்
மிக முக்கியமான கருத்தியலாளராக இருப்பவருமான எம்.எஸ். கோல்வல்கர், கேரள ஹிந்துக்களிடையே
கலப்பு இனப்பெருக்கம் இருந்தது என்ற மிகவும் அவமானகரமானதொரு கோட்பாட்டை முன்வைத்தார்.
1960 டிசம்பர் 17 அன்று குஜராத் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பள்ளி மாணவர்களிடம்
உரையாற்றுவதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார். அப்போது ஆற்றிய உரையில், இனம் குறித்த
கோட்பாட்டின் மீதான தனது உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில், கேரளாவில் கலப்பு இனப்பெருக்க
பிரச்சினையை அவர் தொட்டுப் பேசியிருந்தார். அப்போது அவர் ‘இன்றைக்கு கலப்பு இனப்பெருக்கம்
குறித்த சோதனைகள் விலங்குகள் மீது மட்டுமே செய்யப்படுகின்றன. இன்றைய நவீன அறிவியலாளர்கள்
என்று அழைக்கப்படுபவர்களிடம்கூட அவ்வாறான சோதனைகளை மனிதர்களிடம் செய்து பார்ப்பதற்கான
தைரியம் இருக்கவில்லை. இன்றைக்கு மனிதர்களுக்கிடையே கலப்பு இனப்பெருக்கம் காணப்பட்டால்,
அது அறிவியல் பரிசோதனைகளின் விளைவாக நடந்ததாக இருக்காது. அது சரீரத்தின் மீதான காமத்தின்
விளைவாக நடந்ததாகவே இருக்கும். நம் முன்னோர்கள் இந்த உலகத்தில் செய்து முடித்திருந்த
சோதனைகளை இப்போது நாம் பார்க்கலாம். கலப்பு இனப்பெருக்கம் செய்வதன் மூலம் மனித இனத்தை
மேம்படுத்துவதற்கான முயற்சியாக வடக்கில் இருந்த நம்பூதிரி பிராமணர்கள் கேரளாவில் குடியேறினர்,
நம்பூதிரி குடும்பத்தின் மூத்த மகன் கேரளாவின் வைசிய, சத்திரிய அல்லது சூத்திர சமூகத்து
மகளை மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும் என்றொரு விதி விதிக்கப்பட்டது. எந்தவொரு
வகுப்பையும் சார்ந்த திருமணமான பெண்ணின் முதல் குழந்தை நம்பூதிரி பிராமணர் மூலமே பிறக்க
வேண்டும். அதற்குப் பின்னரே அந்தப் பெண் தன் கணவன் மூலம் குழந்தைகளைப் பெற்றெடுக்க
முடியும் என்று இன்னுமொரு தைரியமான விதியும் இருந்தது. அந்த சோதனை இன்றைக்கு விபச்சாரம்
என்றே அழைக்கப்படும், ஆனால் அந்த சட்டம் முதல் குழந்தைக்கு மட்டுமே என்று இருந்ததால்
அதை அவ்வாறு கூற முடியாது’ என்று பேசியிருந்தார்
[எம். எஸ். கோல்வல்கர், ஆர்கனைசர், 1961 ஜனவரி 2, பக்கம் 5].
கோல்வால்கரின் மேற்கண்ட
கூற்று பல வகைகளில் மிகவும் கவலையளிப்பதாகவே இருக்கிறது. முதலாவதாக, இந்தியாவில் உயர்ந்த
இனம் என்ற ஒன்று இருப்பதையும், கலப்பு இனப்பெருக்கம் மூலம் மேம்படுத்தப்பட வேண்டிய
தாழ்ந்த இனம் என்ற ஒன்று இருந்ததையும் கோல்வல்கர் நம்பினார் என்பதையே அவரது அந்தக்
கருத்து நிரூபிக்கிறது.
இரண்டாவதாக, வடக்கில்
இருந்த பிராமணர்கள் (குறிப்பாக) நம்பூதிரி பிராமணர்கள் உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவர்கள்
என்ற அவரது நம்பிக்கை நம்மை கவலை கொள்ள வைக்கும் அம்சமாகும். இவ்வாறு தரம் கொண்டவர்களாக
இருந்ததன் காரணமாக, தாழ்ந்த ஹிந்து இனத்தை மேம்படுத்துவதற்காக நம்பூதிரி பிராமணர்கள்
வடக்கிலிருந்து கேரளாவிற்கு அனுப்பப்பட்டனர் என்று நம்பூதிரி பிராமணர்களைப் பற்றி கோல்வால்கரால்
கூறப்படுகின்ற விவரங்கள் நம்மில் பலருக்கு அதிர்ச்சியையே ஏற்படுத்தக்கூடும், ஆனால்
கோல்வல்கர் அவ்வாறுதான் நம்பினார். ஹிந்துக்களின் உலகளாவிய ஒற்றுமையை நிலைநிறுத்துவதாகக்
கூறிக் கொண்ட ஒருவர் இதுபோன்று வாதிட்டார் என்பது ஆச்சரியமூட்டுவதாகவே இருக்கிறது.
மூன்றாவதாக, கோல்வால்கர்
ஆணாதிக்க சிந்தனை கொண்டவராகவே இருந்தார். வடக்கிலிருந்து வருகின்ற உயர்ந்த இனத்தைச்
சேர்ந்த நம்பூதிரி பிராமண ஆண் மட்டுமே தெற்கில் உள்ள தாழ்ந்த மனித இனத்தை மேம்படுத்த
முடியும் என்று அவர் நம்பினார். அவரைப் பொறுத்தவரை கேரளாவின் ஹிந்துப் பெண்களின் கருப்பைகளுக்கு
எந்தவிதமான புனிதத்தன்மையும் இருக்கவில்லை. நம்பூதிரி பிராமணர்களுடன் உடலுறவு கொள்வதன்
மூலம் தங்களுடைய இனத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான பொருள்களாக மட்டுமே அவை இருந்தன.
கடந்த காலங்களில் ஆணாதிக்கத்தைச் செலுத்தி வந்த உயர்சாதி சமுதாயத்தில் புதிதாக திருமணமான
பிற சாதிகளைச் சேர்ந்த பெண்கள் உயர்சாதி ஆண்களுடன் தங்கியிருந்து தங்களுடைய முதல் இரவுகளைக்
கடத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர் என்கிற குற்றச்சாட்டை கோல்வல்கரின் அந்தப்
பேச்சு உண்மையில் உறுதிப்படுத்துவதாகவே இருந்தது.
இவ்வாறு இனவெறி நிரம்பிய,
பெண்களுக்கெதிரான, சமத்துவத்திற்கு எதிரான கருத்துக்களை கோல்வால்கர் படிப்பறிவற்ற அல்லது
மந்த புத்தி கொண்டவர்களின் கூட்டத்தில் பேசியிருக்கவில்லை. அதற்கு மாறாக குஜராத்தில்
உள்ள ஒரு மிகப் பெரிய பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களும், மாணவர்களும் அடங்கிய உன்னதமான
கூட்டத்திற்கு முன்பாக நீதிபதி தவே பேசியதைப் போலவே, கோல்வால்கரும் பேசியிருந்தார்.
கோல்வல்கர் ஆடிட்டோரியத்திற்கு வந்தபோது பள்ளியின் இயக்குநர் டாக்டர் பி.ஆர்.ஷெனாய்
அவரை வரவேற்றார். கோல்வால்கரின் அபத்தமான பாசிசக் கருத்துக்களுக்கு எதிரான எந்தவொரு
முணுமுணுப்பும் இருக்கவில்லை என்பதை அப்போது வெளியான பத்திரிகைச் செய்திகள் தெளிவுபடுத்துகின்றன.
அது குஜராத்தில் உயர்சாதி உரையாடல் பெறுகின்ற மரியாதையின் அளவைக் காட்டுவதோடு, ஹிந்துத்துவாவால்
அந்தப் பிராந்தியத்தில் ஏன் ஊடுருவ முடிந்துள்ளது என்பதையும் விளக்குகிறது.
கேரளத்துப் பெண்களையும், சமூகத்தையும் பகிரங்கமாக இழிவுபடுத்துகின்ற
இதுபோன்ற கருத்துக்களை ஆர்.எஸ்.எஸ் கொண்டிருந்தாலும், அதனால் கேரளாவில் தன்னுடைய செல்வாக்கை
சில பகுதிகளில் உருவாக்கிக் கொள்ள முடிந்திருப்பது ஆச்சரியமளிக்கவே செய்கிறது. குஜராத்,
ஒரிசாவிற்குப் பிறகு, கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தன்னை வலிமையாக்கி கொண்டிருப்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆர்எஸ்எஸ் கூறி வருகின்ற வழக்கமான பொய்கள், தன்னிடமுள்ள தீய நோக்கங்களை
மறைப்பதில் அதற்கென்று இருக்கின்ற நிபுணத்துவம் ஆகியவையே அதற்கான காரணங்களாக இருக்கின்றன.
இதுபோன்ற செயல்களை ஆர்.எஸ்.எஸ் எவ்வாறு செய்கிறது என்பதை, கோல்வால்கரின் மேற்கண்ட கருத்துக்களை
அது மறைக்க முயற்சித்த விதத்தின் மூலமாக நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
2004ஆம் ஆண்டில் கோல்வால்கரின் படைப்புகளைத் தொகுத்து ஹிந்தி மொழியில்
- ஸ்ரீ குருஜி சமக்ரா
என்ற தலைப்பில் 12 தொகுதிகளாக - வெளியிட்டபோது, கோல்வால்கரின் மேற்குறிப்பிட்ட மோசமான கருத்துக்கள் அவர்களால் தவிர்க்கப்பட்டன.
மேலே குறிப்பிடப்பட்ட தொடரின் 5ஆவது தொகுதி (எண் 10) கோல்வால்கரின் மேற்கண்ட உரையைக்
(பக்கங்கள் 28-32) கொண்டிருக்கிறது, அந்த உரையில் கோல்வால்கரின் கோட்பாடு குறித்த இரண்டு
பத்திகள் நீக்கப்பட்டுள்ளன. அந்த உரை வெளியான ஆர்கனைசர் பத்திரிகையின் பழைய நகல்களை
நூலகங்களிலிருந்து அவ்வாறு அகற்ற முடியவில்லை என்பது அவர்களின் துரதிர்ஷ்டம். எல்லோரையும்
தொடர்ந்து முட்டாளாக்க முடியும் என்று இன்னும் ஆர்எஸ்எஸ் நம்புவதாகத் தெரிகிறது! முஸ்லீம்கள்,
கிறிஸ்துவர்களைப் பற்றி மட்டுமல்லாது, ஹிந்துக்களைப் பற்றியும் இதுபோன்ற அருவருப்பான கருத்துக்களை வெளியிட்டிருப்பது
குறித்தும் கேரளாவில் உள்ள மக்கள் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களிடமிருந்து பதில்களைத் தேடிப்
பெற வேண்டிய நேரமாக இது இருக்கிறது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில், நாட்டில் தொழிற்சங்க இயக்கத்தை
வளர்ப்பதில் பெரும் பங்கைக் கொண்டிருந்த குஜராத் மாநிலம், இதுபோன்ற பாசிச, தேச விரோதக்
கருத்துக்களுக்கு எதிராக நாட்டின் பிற பகுதிகளுடன் இணைந்து தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவிக்க
வேண்டும்.
https://www.academia.edu/7863141/ACHCHE_VICHAAR_WISDOM_IN_GUJARAT_RSS_IDEOLOGUE_GOLWALKAR_TO_SUPREME_COURT_JUDGE_AR_DAVE
2014 ஆகஸ்ட்
04 அன்று வெளியான கட்டுரை
Comments